COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -8 : ஸ்ரீமத் பரசுராமனின் புனிதப் பயணம்
அத்தியாயம் 24
ஸ்ரீமத் பரசுராமர் இறந்து போன பெற்றோர்களை சந்தித்தல்
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
குரு வேத தர்மா,தனது சீடர் தீபக்கிற்கு தொடர்ந்து ஸ்ரீமத் தத்தரின் பெருமைகளைக் கூறலானார் ‘ஸ்ரீமத் பரசுராமர் மன உறுதியையும் பொறுமையும் கொண்டவர்; மனதில் தங்கியிருந்த துயரங்கள் அனைத்தையும் துறந்து விட்டு ஸ்ரீமத் தத்தரின் வழிகாட்டுதலின்படி தன் தாயாருக்கான ஈமச் சடங்குகளை நிறைவு செய்தார்||1||
முனிவர்களால் போற்றப்படுபவரும், சான்றோர்களாலும், துறவிகளாலும் வணங்கப்படுபவரும், யோகிகளுள் சிறந்தவர்களால் தியானிக்கப்படுபவருமான தெய்வமான ஸ்ரீமத் தத்தரே, அங்கு ஸ்ரீமத் பரசுராமரின் புரோகிதராக வீற்று இருந்து சடங்குகளை செய்ய உதவினார் ||2||
வேத, சாஸ்திர நியமங்களின்படி , முதலில் மண் குளியல் நடைபெற்றது; அடுத்து, இரு உள்ளங்கைகளையும் குவித்து வைத்து அதில் நீரை ஏந்தி வந்து நீர் அஞ்சலி செலுத்தப்பட்டது; அதன்பின், ‘பிண்டம்’ எனப்படும் அரிசி உருண்டைகள் படைக்கப்பட்டன; இவ்வாறு வேத சாஸ்திர நியமனங்களின்படி அனைத்துச் சடங்குகளும் முழுமையாக செய்து முடிக்கப்பட்டன ||3||
அனைத்துச் சடங்குகளையும் நிறைவு செய்த பிறகு, தெய்வமான ஸ்ரீமத் தத்தர் ஸ்ரீமத் பரசுராமரிடம் வினவினார் ‘உன் பெற்றோர்கள் எங்கு சென்றிருக்கிறார்கள் என்பது உனக்குத் தெரியுமா? இப்போது உன்னால் அவர்களுடன் உணர்வு பூர்வமாகத் தொடர்பு கொள்ள முடிகிறதா? ||4||
அதற்கு ஸ்ரீமத் பரசுராமர் இவ்வாறு பதிலளித்தார் ‘அவர்கள் இருவரும் தங்கள் பூத உடல்களைத் துறந்து விட்டனர்; இந்தச் சடங்குகளின் வாயிலாகவே அவர்கள் மேன்மைப்படுத்தப்பட்டுள்ளனர்; அவர்களின் உயர்விற்கு நீங்களே முதற் காரணமாகத் திகழ்கிறீர்கள்; நீங்களே அவர்களை உயர்ந்த ஆன்மீக நிலைகளுக்கு வழிகாட்டி அழைத்துச் சென்றுள்ளீர்கள்||5||
என் தாயாரும் ஞான நிலையிலான தந்தையும் பெருமைக்கு உரியவர்கள்; அவர்களுக்கு இறுதி சடங்குகளை நடத்தி வைக்கும் புரோகிதராக உங்களைப் பெறும் நற்பேறு வேறு யாருக்குக் கிடைக்கும்?; முக்தியை அடைவதற்கு இதை விடச் சிறந்த சிறப்பு வேறு என்ன இருக்க முடியும்? ||6||
தெய்வமான ஸ்ரீமத் தத்தர் அதற்கு இவ்வாறு பதிலளித்தார் ‘தவறான கண்ணோட்டம் (மாயை) எவ்வாறு ஒருவரை மயங்கச் செய்கிறது என்பதை நீ கவனித்தாயா?; கண் கூடாகத் தெரியும், எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களைச் சுட்டிக் காட்டி விளக்கும்போதுதான், ஒரு கருத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா? ||7||
நமது கண்ணுக்குப் புலனாகும் படைப்பைத் தோற்றுவித்தும், காத்தும், அழித்தும் வரும் அந்தத் தெய்வீகத் தம்பதியரான அன்னை கௌரியும், இறைவன் ஹரனும், இப்புவியில் ஒரு முனிவர் தம்பதியரின் வடிவில் அவதரித்தனர் ||8||
ஜகதம்பிகை என உலகெங்கும் போற்றப்படும் அந்தத் தெய்வீக அன்னை, வேறு யாருமல்ல; அவரே உமது புனித அன்னையான ரேணுகா தேவி ஆவார்; உயிரினங்களை துன்பத்திலிருந்து விடுவித்து, பாதுகாப்பான உயர்ந்த நிலைக்குக் கொண்டு அந்தப் பரமாத்மன் உமது தந்தையும் ஞான நிலை பெற்று இருந்த ஜமதக்னி முனிவரே ஆவார் ||9||
அவர்கள் இந்த பூமியில் பிறப்பு எடுத்து பல்வேறு வடிவங்களில் தர்மத்தை நிலை நாட்டினர்; பூமியில் தாம் செய்ய வேண்டி இருந்த கடமைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு , அவர்கள் மீண்டும் கண்ணுக்குப் புலப்படாத நிலையை அடைந்து விட்டனர் ||10||
அவர்கள் இங்கு பிறப்பெடுத்தார்களா இல்லையா? தங்கள் பூத உடலை இங்கு துறந்தார்களா இல்லையா? அவர்கள் விண்ணுலகை அடைந்தார்களா இல்லையா என்ற அனைத்துமே வெறும் வார்த்தைகளால் கூறப்படுவதுதானே அல்லாது வேறல்ல ||11||
எங்கும் நிறைந்திருக்கும் அந்தப் பரமாத்மன் எனும் தத்துவம், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதோ, வருவதோ இல்லை; அனைத்து பொருட்களிலும் ஊடுருவி உள்ள அந்தப் பரமாத்மன் எனும் தத்துவம் இப்போது இங்கு இருக்கிறதா இல்லையா? ||12||
‘நீ உண்மையாகவே விரும்பினால், அந்தத் தெய்வீகத் தம்பதியரை அவர்கள் இருக்கும் உண்மையான வடிவிலேயே தரிசிக்கும் வரத்தை நான் உமக்கு அருளுகிறேன்’ என்று கூறினார்; அதைக் கேட்ட ஸ்ரீமத் பரசுராமர் ‘தயவு செய்து, எனது புனிதமான பெற்றோரை நான் தரிசிக்கும் பாக்கியத்தை எனக்கு அருளுங்கள்’ என்று வேண்டினார் ||13||
அவர்கள் அவ்வாறு கூறிய மறுகணமே, அந்தத் தெய்வீக அன்னையையும், அவர் துணைவரான இறைவனையும் அந்த இருவரும் தரிசிக்கும் பேறு பெற்றனர்; அப்போது தெய்வமான ஸ்ரீமத் தத்தர், இராமனை நோக்கி, ‘பார் அங்கே அவர்கள் வீற்றிருக்கிறார்கள்’ என்று சுட்டிக் காட்டினார்||14||
பத்மாசனத்தில் (தாமரை நிலையில்) வீற்றிருப்பவரும், திருநீறு பூசியவரும், ஜடை முடியை முடிந்து வைத்திருப்பவரும், காண்பதற்குப் பரம சாந்த சொரூபியாகத் திகழ்பவருமான அவரே, ஜமதக்னி முனிவர் ஆவார்||15||
திரு கழுத்தில் புனிதமான ருத்ராட்ச மணிகள் அணிந்திருப்பவரும், ஜப மாலையை ‘கோமுகி’ எனும் பையில் இட்டு மூடியிருப்பவரும், தனது பார்வையை வடதிசை நோக்கிச் செலுத்தியிருப்பவருமான அவர், தனது அனைத்து உணர்வு நிலைகளையும் ஒருமுகப்படுத்தி, ஆழ்ந்த தியானத்தில் வீற்றிருக்கிறார்||16||
திரு காதுகளில் ருத்ராட்சக் குண்டலங்களை அணிந்திருப்பவரும், உடலில் எஞ்சியிருக்கும் பிற ஆபரணங்களையும் ருத்ராட்சங்களாலேயே அணிந்திருப்பவரும், உடலின் மேல் பாகத்தில் இலைகளையும் மரப்பட்டைகளையும் அணிந்திருப்பவரும், உடலின் கீழ் பாகத்தை விலங்குகளின் தோலால் மூடியிருப்பவருமான அவரே அந்த முனிவர் ஆவார்||17||
அவரது இடப்புறத்தில் அன்னை ரேணுகா அமர்ந்திருக்கிறாள்; அவள் தலை முதல் கால் வரை எப்படி அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள் என்று பார்; அவளது முகத்தை, பாயும் நதி போன்ற தெய்வீக ஒளியை சுற்றி இருந்து கொண்டு பிரகாசிப்பதை பார்; பக்தியுள்ள, அன்பு நிறைந்த ஒரு உதாரண மனைவியாக அமர்ந்துள்ள அவளுடைய மங்களகரமான அடையாளங்களைப் பார்’ ||18||
அவர்களைச் சுற்றியுள்ள நறுமணத்தின் காரணமாகவே, தேனீக்கள் அவர்களைச் சுற்றி ரீங்காரம் இட்டுக் கொண்டு திரிகின்றன; அவர்கள் ஒளிப் பிழம்புகளின் உருவம் போல் தோன்றுகிறார்கள்; அவர்கள் உள்ள இடத்தில் இருள் எவ்வாறு விலகுகின்றது என்பதையும் பார் ||19||
அவர்களின் நகங்கள் பிறை நிலாக்கள் போலவும், அவர்களின் பளபளப்பான பற்கள் மின்னும் வைரங்கள் போலவும் இருக்கின்றன; அந்த தெய்வீகத்தை இவ்வுலகின் பௌதீகப் பொருட்களுடன் எப்படி ஒப்பிட முடியும்? யார் தான் அப்படி தம்மை மாற்றிக் கொள்ள முயற்சிப்பார்கள்? ||20||
அன்னை ரேணுகாவின் புன்னகை தவழும் முகத்தைப் பார்; அவள் ஜமதக்னி முனிவரை எப்படி நோக்குகிறாள் என்று பார்; அந்த முனிவர் ஆனந்தத்தின் புகலிடம்;அவர் புண்ணியத்தின் உச்ச கட்ட உருவகம்’ என்று ஸ்ரீமத் தத்தர் கூறினார் ||21||
தன் பெற்றோர்களை பூமியில் அவர்கள் இருந்தபோது இருந்த உண்மையான ரூபத்தில் கண்ட ஸ்ரீமத் பரசுராமர் அவர்களை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்; அவர் பிரமிப்பால் முற்றிலும் வியப்பில் ஆழ்ந்து, அவர்களை அணைப்பதற்காக அவர்களை நோக்கி விரைந்தார் ||22||
அவர்கள் இருந்த இடத்திற்கு வந்து, அவர்களின் காலடியில் விழுந்து அவர்களது திருப்பாதங்களை உறுதியாகப் பற்றிக் கொண்டார்; பின்னர் ஒரு குழந்தையைப் போல அழத் தொடங்கினார்; உணர்ச்சியால் அவரது தொண்டை அடைத்தது; விரைவில் அவரது உணர்வு, தனது பௌதீக வடிவத்துடனான அனைத்து அடையாளத்தையும் கை விட்டது ||23||
அவர்களிடம் அவர் முறையிட்டார் ‘நீங்கள் இருவரும் என்னைத் தனியாக விட்டுவிட்டு, இப்போது வெளித்த தெரியாத உருவத்தில் காணப்படுகின்றீர்கள்; நீங்கள் இல்லாமல் நான் எப்படி தொடர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்க முடியும்||24||
கண்களில் இருந்து தரை தாரையாக அன்பு கலந்த கண்ணீரை சித்தியவாறே அவர் தரையில் புரளத் தொடங்கினார்; அவர் அவ்வாறு செய்து கொண்டிருந்தபோதே, அவருடைய பெற்றோர் மீண்டும் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்து போனார்கள்||25||
அவர்களை இனிமேல் காண இயலாது என்பதை உணர்ந்ததும், இராமபிரான் மீண்டும் ஆழ்ந்த துயரில் மூழ்கினார்; ஒரு பரம ஏழையிடம் உள்ள சிறிதளவு செல்வமும் களவு போய் விட்டால், எந்த விதமான வேதனை அவர்களை வாட்டுமோ அப்படிப்பட்ட துயர நிலையை ஸ்ரீமத் பரசுராமர் உணர்ந்தார்||26||
அவர் மனம் சோர்ந்து பொய் இருப்பதைக் கண்ட ஸ்ரீமத் தத்தர் அவரிடம் கூறினார் ‘ நீ ஏன் வீணாக உன் கற்பனைகளுக்குள் சிக்கித் தவிக்கிறாய்? ஏன் தேவையின்றிக் கவலைப் பட்டுத் துன்புறுகிறாய்? ஏன் மீண்டும் மீண்டும் இத்தகைய பெரும் பிழையைச் செய்கிறாய்? ||27||
என்னிடம் சொல், உண்மையில் உன் தாய் யார், உன் தந்தை யார்? அனைத்துப் பற்றுக்களையும், அதீத ஈடுபாடுகளையும் விலக்கி வைத்துக் கொண்டு உனக்குள் இருக்கும் அந்தத் தெய்வீக ஆத்மா வை ஆத்மார்த்தமாக உணர்வது மேலானது அல்லவா? ||28||
அதற்கு ஸ்ரீமத் பரசுராமர் பதிலளித்தார் ; தாங்கள் கூறும் அனைத்தையும் நான் முழுமையாகப் புரிந்து கொள்கிறேன்; அவற்றை ஏற்றுக் கொள்கிறேன்; ஆனாலும் என் தாயின் மீது பாசம் கொண்டுள்ள என்னால் எப்படி அந்த பிணைப்பை துறக்க முடியும் ? ||29||
அதற்கு ஈடாக இந்த முழுப் பிரபஞ்சத்தையே பரிசளித்தாலும் கூட, அவள் எனக்கு அளித்த தாய்ப் பாலுக்கு ஈடு செய்ய முடியுமா? ; அதை பற்றி நான் வேறு என்ன சொல்ல முடியும்? வேறு எந்த பொருளாவது அதற்கு இணையாக நிற்க முடியுமா?||30||
இவ்வாறு தன் துயரத்தை வெளிப்படுத்தியவாறே, ஸ்ரீமத் பரசுராமர் மௌனமாகத் தரையை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார்; அச்சமயத்தில் , பூமியின் அடுக்குகளைப் பிளந்து கொண்டு, அன்னை ரேணுகாவின் திருமுகம் மீண்டும் வெளிப்பட்டது ||31||
அன்னை, தன் மகனின் முகத்தில் வழிந்த மௌனக் கண்ணீரைத் துடைத்து விட்டார்; பின்னர், தன் இரு கரங்களாலும் அவருடைய முகத்தை ஏந்திப் பிடித்து, அவருடைய நெற்றியில் மென்மையாக முத்தமிட்டார்; அன்னையின் அந்த எளிய பாசச் செயல், வேறு எதனாலும் அளிக்க முடியாததொரு மன நிறைவை ஸ்ரீமத் பரசுராமருக்கு அளித்தது||32||
ஸ்ரீமத் தத்தர் கூறினார் ‘அன்னையையும் அவர் மகனையும் பாருங்கள்; அவர்களின் பாசப் பிணைப்பிற்கு முடிவே இல்லை; தங்கள் மீது அளவற்ற அன்பு செலுத்தும் பெற்றோரின் உண்மையான பாசத்தை மதிக்காதவர்கள், மனிதர்களிலேயே புழுக்களுக்கு ஒப்பான, இழிந்த பிறவிகள் ஆவார்கள் ||33||
இன்றும் கூட, இவ்வாறு வெளிப்பட்ட* அன்னை ரேணுகாவின் திருமுகம் பக்தர்களால் வழிபடப்பட்டு வருகிறது; அன்னையின் திருமுகத்தை தரிசித்தாலே போதும், துயரங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்றும், பேரின்பத்தை அடைவதற்கான வழிகள் திறக்கும் என்றும் கூறப்படுகிறது
{* இன்றும் கூட பல ஆலயங்களில் ரேணுகா தேவியின் முகம் மட்டும் பூமியில் இருந்து வெளிவந்த நிலையில் பூமியோடு காணப்படுகின்றது; அந்த ரேணுகாதேவியின் உருவத்தைத்தான் பக்தர்கள் வழிபடுகிறார்கள்} ||34||
ஆகவே, மாதப்பூர்* எனப்படும் புனிதத் தலத்திற்குச் செல்பவரும், அங்குள்ள ‘மாத்ரு தீர்த்தம்’* எனும் புனித நீரில் நீராடுபவரும், அன்னை ரேணுகா தேவியின் திருமுக தரிசனத்தை பெறுவதில் மூலம் , இவ்வுலகம் மற்றும் அவ்வுலகம் ஆகிய இரண்டையும் தூய்மைப்படுத்தும் ஆற்றலைப் பெறுகின்றனர்
{*மாதப்பூர் மாத்ரு தீர்த்தம் (Madhapur Mathur Theertha) என்பது ஒரு பழமையான மற்றும் புனிதமான தீர்த்த இடமாகும். இது தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அருகில், உளுந்தூர்பேட்டைக்கு அருகில் உள்ள மாதப்பூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள மாத்ருத்வ நாதஸ்வரன் (சிவன்) மற்றும் மாத்ருத்வ நாயகி அம்மன் கோவிலில் உள்ளது; இந்த தலம் தாய் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது; மாத்ரு தீர்த்தம்” என்பது தாயின் ஆத்ம சாந்திக்காகவோ அல்லது தாய் வழிபாட்டுடன் தொடர்புடைய புனித நீர்நிலைகளைக் குறிக்கும்; இத்தீர்த்தத்தில் நீராடி, தர்ப்பணம் கொடுப்பது தாய்க்குச் செய்யும் கடன் என நம்பப்படுகிறது } ||35||
தெய்வமான ஸ்ரீமத் தத்தர், இறைவன் ராமரிடம் இவ்வாறு கூறினார் ‘உமது சபதத்தை நிறைவேற்றுவதற்கான காலம் இதுவே; அறநெறி தவறிய அனைவரையும் நீ வெல்ல வேண்டும் ; எனது ஆசியால் அது நிச்சயம் நிறைவேறும் ||36||
அதன்பின்னர், பிருகு முனிவரின் வம்சத்தைச் சேர்ந்த ஸ்ரீமத் பரசுராமர், தெய்வமான ஸ்ரீமத் தத்தரை வணங்கினார்; அவர் அங்கிருந்த பிரணிதா நதியில் நீராடி, மீண்டும் ஒருமுறை பின் வருமாறு சபதம் எடுத்துக் கொண்டார்||37||
என் கையில் உள்ள கோடரியைக் கொண்டு, ஷத்ரிய குலத்தாரை நான் அழிப்பேன்; இரக்கமற்ற இதயம் கொண்ட அவர்கள் அனைவருக்கும், வரலாற்றில் நினைவு கூறத்தக்க ஒரு மரணத்தை நான் பரிசளிப்பேன்||38||
போர் புரிவதற்காக, அனைத்து மன்னர்களையும் குருக்ஷேத்திரம் எனும் புனிதப் போர்க் களத்திற்கு நான் அழைப்பேன்; எனது தெய்வீக ஆவேசத்தின் வல்லமையால் மட்டுமே, அவர்கள் அனைவரையும் நான் கொன்று சாம்பலாக்குவேன் ||39||
அதன் பின்னர் அங்கிருந்த சென்ற பரசுராமருடன் வில் வித்தையில் திறமை வாய்ந்தவர்கள் எவராயினும் சரி, அஸ்திரங்கள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் வல்லவர்கள் எவராயினும் சரி, அவர்கள் அனைவரும் அவருடன் போரிட்டு உயிரை இழந்தார்கள் ||40||
போர்க் குலத்தைச் சேர்ந்த கருவுற்ற பெண்கள், தெய்வமான ஸ்ரீமத் பரசுராமரின் சீற்றக் குரலைக் கேட்ட மாத்திரத்திலேயே, அச்சத்தின் காரணமாக அவர்களுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது ||41||
இவ்விதம், தொடர்ந்து இருபத்து ஒரு முறை மிகக் கடுமையான போரை நிகழ்த்தி, ஷத்ரிய வீரர்களின் அனைத்து வம்சாவளியினரையும் தெய்வமான ஸ்ரீமத் பரசுராமர் போரில் அழித்தொழித்தார் ||42||
இந்த அதர்ம மக்களை அழித்த பிறகு, பகவான் ஸ்ரீமத் பரசுராமர் அவர்களின் இரத்தத்தை ஐந்து குளங்களில் சேகரித்து வந்து, தான் முன்னரே செய்து கொண்ட சபதத்தின்படி, தன் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளித்தார் ||43||
அந்நேரம் முதல், ‘சியமந்தக-பஞ்சகம்’* என்ற பெயருடன், குருக்ஷேத்திரம் என்னும் புண்ணிய பூமி அறியப்படலாயிற்று; அதைக் கண்ணால் காண்பதாலேயே ஒருவன் ஆன்மீக உயர்வடைவான் என்று குரு வேத தர்மா உபதேசித்தார்
{* இது பகவான் பரசுராமர் ஷத்ரியர்களை அழித்த பிறகு, அவர்களின் இரத்தத்தால் ஐந்து பெரிய ஏரிகளை உருவாக்கிய இடமாகும்; இது தற்போதைய ஹரியானா மாநிலத்தின் குருக்ஷேத்ரா பகுதியில் அமைந்துள்ளது} ||44||
பின்னர், தனது சினத்தையெல்லாம் முற்றிலுமாய் ஒதுக்கி விட்டு, மனதிற்குள் அமைதியை நிலை நிறுத்திக் கொண்ட பகவான் ஸ்ரீமத் பரசுராமர் தனது போர்க் கருவிகள் அனைத்தையும் தூய்மைப்படுத்தி விட்டு, தெய்வமான தத்தாத்ரேயரிடம் சென்று அவரை ஆரத் தழுவிக் கொண்டார்||45||
அவரை மரியாதையுடன் தலை வணங்கி நமஸ்கரிக்க பின்னர் கூறினார் ‘ஆண்களது அருளாசிகளை கொண்ட ஆற்றலினாலேயே, என்னால் அந்த வீரர்களை அழிக்க முடிந்தது; இப்போது நான் மன அமைதியுடன் திகழ்கிறேன் ||46||
இந்தச் சினம் தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம்; ஆனால் அது, ஒருவன் எதைச் செய்ய வேண்டும், எதை விலக்க வேண்டும் என்பதை அறியாதவாறு கண்களை மறைத்து விடுகிறது; கண்களிருந்தும், எது மேன்மையானது எது இழிவானது என்று அறிந்து கொள்ள முடியாமல் போய் விட்டது; சினத்தின் விளைவு, புகழ்பெற்ற ஆரியர்களின் இயல்புக்கு எத்துணை மாறுபட்டதாக அமைந்திருக்கிறது என்பதைப் பாரும்||47||
ஒருவனைப் பழி வாங்குவதற்காக, நான் க்ஷத்திரிய குலத்தின் வேர்களையே அறுத்து விட்டேன்; ஆஹா, நான் எத்துணை முட்டாளாக நான் நடந்து கொண்டேன்; என்னைப் பழி தீர்த்துக் கொள்ள நான் கொண்ட சினம் வீணாகி விட்டதாகவே தோன்றுகிறது ||48||
சஹஸ்ரார்ஜுனனை அழித்த பிறகுதான், என் தந்தை என்னை அனைத்துப் புண்ணியத் தலங்களுக்கும் சென்று தரிசிக்குமாறு பணித்தார்; நானும் அதன்படியே செய்தேன்; ஆயினும், இப்படிப்பட்ட துயரமான செயலைச் செய்யும்போது, நான் அந்த அறிவுரையைச் சற்றும் பொருட்படுத்தவில்லை ||49||
நான் எத்தனை அரசர்களைக் கொன்று குவித்திருக்கிறேன்; நான் அளவற்ற பாவத்தைச் சம்பாதித்துக் கொண்டுள்ளேன்; இப்போது என் மனசாட்சி என்னை உள்ளுக்குள் உறுத்துகிறது; மீண்டும் நான் உமது திருவடிகளிலேயே அடைக்கலம் தேடி வருகிறேன்||50||
என்னை உங்களது பக்தனாக ஏற்றுக் கொண்டு, பாதுகாத்து, என்னைத் தூய்மைப்படுத்துவீராக, ஓ தெய்வமே’ என்று வேண்டிக் கொண்டவாறே, பகவான் ஸ்ரீமத் பரசுராமர் மிகுந்த மன வேதனையுடன் மீண்டும், மீண்டும் அந்தப் பரமாத்மனை வணங்கினார் ||51||
தெய்வமாக ஸ்ரீமத் தத்தர் கூறினார் ;அந்த அரசர்கள் அனைவரும் இழிவானவர்கள்; பூமியின் குப்பைகளாகத் திகழ்ந்த அவர்களை அழித்ததற்காக நீ ஏன் இப்போது வருந்துகிறாய்? உன்னை நீயே பாவச் சுமை தாங்கியவனாகக் கருதாதே; உன் இதயத்தில் மன வேதனைக்கு இடமளிக்காதே ||52||
நீ இந்த பூமியில் இருந்து தேவையற்ற சுமைகள் அனைத்தையும் நீக்கி விட்டாய்; இதன் மூலம் சான்றோர்களைப் பாதுகாத்தாய்; அறநெறி சார்ந்த சமயங்களை நிலை நாட்டினாய் ; ஆதலால், நீ இந்த விஷயத்தில் எந்த ஒரு பாபத்தையும் செய்யவில்லை என்பதை உறுதியாக நம்பு ||53||
ஒருவேளை உனது மனம் ஏதேனும் துயரத்திற்கு ஆளானால், நான் கூறுவதைக் கேள்; ஞான நிலையை அடைந்துள்ள பிரம்ம ரிஷிகள் அனைவரையும் அழைத்து, சாஸ்திர விதி முறைப்படி ஒரு வேத வேள்வியை நடத்து ||54||
அதன் விளைவாக நீ அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடுவாய்; தேவர்கள் அனைவரும், தகுதியுடையோரும் திருப்தியடைவார்கள்; அந்தணர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்; மேலும், இவ்வுலகெங்கும் உம்முடைய புகழ் பரவி ஒளிரும் ||55||
நீ நியாயமான போர்க் களத்தில், உன்னுடைய சொந்தத் திறமையின் துணையோடு ஷத்ரிய வீரர்களை வீழ்த்தினாய்; இவ்வுலகம் முழுவதையும் வென்றெடுத்தாய்; எங்கும் நற்பெயர் பெற்றவராகத் திகழ்கின்றாய்||56||
இப்போது, அந்த வேள்வியை நிறைவு செய்யும்போது, இவ்வுலகம் முழுவதையும், உன்னையும் சேர்த்து புனித அந்தணர்களுக்குத் தட்சிணையாக அளித்து விடுவீராக; கஸ்யப முனிவர் இவ்வுலகம் முழுவதையும் பெற்றுக் கொள்ளட்டும்; அதன் மூலம் நீ அடைய நினைக்கும் தூய்மை நிச்சயமாக உனக்கு கிடைக்கும்’||57||
இவ்வாறு அத்திரி முனிவரின் தெய்வீகப் புதல்வரான ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான் , ஸ்ரீமத் பரசுராமருக்கு அறிவுரை வழங்கினார்; அந்த அறிவுரையை முழு மனதுடன் ஸ்ரீமத் பரசுராமர் ஏற்றுக் கொண்டார்; பின்னர் அவர் முனிவர்கள் மற்றும் சான்றோர்கள் அனைவரையும் அழைத்தார்; முழு நம்பிக்கையுடன் அந்த வேத யாகத்தைத் தொடங்கினார்’ ||58||
மரீசி, அத்திரி ஆகியோரும்; அங்கீரஸ, கிரது, வசிஷ்டர் போன்ற பிற முனிவர்களும்; புலத்தியர், புலகர் ஆகிய முனிவர்கள் அனைவரும் அந்தப் பரம்பொருளுக்கே என்றும் பிரியமானவர்கள் ஆவர்; ஆகிய முனிவர்கள் அனைவரும் அந்த யாகத்திற்கு அழைக்கப்பட்டனர் ||59||
மேலும், வேதக் கல்வியில் சிறந்து விளங்கிய பரத்வாஜர், விசுவாமித்திரர், கஸ்யபர், வாம தேவர் ஆகிய முனிவர்களும்; அகத்தியர், கார்க்கியர், பிருகு மற்றும் அவரது புதல்வர்களும்; ஜபாலி, சுஹோத்திரர், கௌதமர் ஆகிய முனிவர்கள் அனைவரும் அந்த யாகத்திற்கு அழைக்கப்பட்டனர்’ ||60||
மேற்கூறிய சான்றோர்கள் அனைவரும் முதன்மையாக அழைக்கப்பட்டனர்; அவர்கள் தங்கள் சீடர்களுடனும், அந்த சீடர்களின் சீடர்களுடனும் அங்கு வருகை தந்தனர்; அந்த வேத யாகம் மங்களகளமாக துவங்கியது; அனைத்து இடங்களிலும் நம்பிக்கையும் பக்தியும் நிறைந்த ஓர் ஆன்மீகச் சூழல் பரவி நின்றது ||61||
இறைவன் ஸ்ரீமத் தத்தாத்ரேயரே அந்த யாகத்தின் தலைமை புரோகிதராக வீற்றிருந்து நடத்தினார்; நிலைமை இவ்வாறிருக்க, அங்கு என்ன குறை இருக்க முடியும்?; அனைத்தும் மிகச் சிறந்த, கண் கூடான சிறப்பம்சங்களுடன், இருக்க வேண்டிய முறைப்படியே அமைந்திருந்தன ||62||
திறம்படச் செய்யப்படும் செயல்கள் குறித்து, ‘ப்ரமாதாத் குர்வதாம் கர்ம’ (Pramada Kuratas Karma)* எனும் நன்கு அறியப்பட்ட ஒரு வேத வாக்கியம் உள்ளது; ஒரு குரு அல்லது ஆச்சார்யர், தாம் மேற்கொள்ளும் பணியை எவ்விதக் குறைகளுமின்றி முழுமையாக நிறைவு செய்பவராவார்
{* “ப்ரமாதாத் குர்வதாம் கர்ம” என்பது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் வரும் ஒரு ஸ்லோகத்தின் பகுதி; நம் அறியாமையினால் அல்லது கவனக் குறைவால் கர்மாக்களைச் செய்யும்போது, யாகம் போன்ற புண்ணிய காரியங்களில் ஏதேனும் குறைகள் (தவறுகள்) நேரிட்டால், பகவான் விஷ்ணுவின் நாமத்தைச் சொல்வதன் மூலம் அந்த யாகம் பூரணத்துவம் அடைகிறது என்பது பொருள்} ||63||
அந்த யாகத்தில் ஆவாஹனம் செய்யப்பட்ட தெய்வங்கள் அனைத்தும், படைக்கப்பட்ட அவிர்ப் பாகத்தைப் பெற்றுக் கொள்ள நேரில் எழுந்தருளின; மேலும், ‘இந்த யாகத்தைக் காணும் பேறு பெற்றதற்காக நம்மை நாமே பாராட்டிக் கொள்ள வேண்டும்.; இதில் கலந்து கொண்டது நமக்கு பெருமையே’ என்று கூறி, அவை மிகுந்த மனநிறைவுடன் திரும்பின ||64||
தினமும் அறுசுவை நிறைந்த, ஈடு இணையற்ற பன் முகத்தன்மை கொண்ட உணவு வகைகள் படைக்கப்பட்டு, இரு முறை பிறப்பு எடுத்ததாக கூறப்படும் குருமார்களின் பசி தீர்க்கப்பட்டது; ஸ்ரீமத் பரசுராமர் அவர்களுக்குச் செல்வங்களையும் ஆடைகளையும் பரிசளித்தார்; அந்தணப் பண்டிதர்களும் இதனால் மிகுந்த மனநிறைவு அடைந்தனர்||65||
சாஸ்திரங்களில் கூறப்பட்டிருந்த ‘சாதுர்ஹோத்ரம் (Cataphora)* என்று போற்றப்படும் வேதச் சடங்குகளை நிறைவு செய்த பிறகு, பிருகு முனிவரின் மரபில் வந்த ஸ்ரீமத் பரசுராமர், காசியப முனிவரின் பாதங்களைக் கழுவித் துலக்கி, பின்னர் மிகுந்த பக்தியுடனும் நம்பிக்கையுடனும் அவரை வழிபட்டார்.
{*சாதுர்ஹோத்ரம் (Cataphora) என்பது வேத யாகங்களில் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பான நால்வகை யாகக் கிரியைகளைக் குறிக்கும் சொல்லாகும்; யாகத்தை நடத்தும் ஹோதா (Hota), அத்வர்யு (Adhvaryu), உத்காதா (Udgata), மற்றும் பிரம்மா (Brahma) ஆகிய நால்வர் செய்யும் யாகக் கிரியைகள் ‘சாதுர்ஹோத்ரம்’ என அழைக்கப்படுகின்றன} ||66||
‘ஒரு தர்மச் செயலுக்குப் பொருத்தமான உறுதியுடன், தாம் போரில் வென்றெடுத்த நிலப்பரப்பு முழுவதையும் காசியப முனிவருக்கே தானமாக அளித்தார்; அதுமட்டுமின்றி, யாகங்கள் நிறைவு பெறும் வேளையில் வழங்கப்படும் ‘தட்சிணையாக, ரேணுகா தேவியின் வீரமைந்தரான ஸ்ரீமத் பரசுராமர், அளவற்ற செல்வங்களையும் விலை மதிப்பற்ற நவரத்தினங்களையும் பரிசளித்தார்||67||
மேலும் அவர் தங்கம், பொற்காசுகள் மற்றும் ஆடைகளைத் தானமாக அளித்து, யாகத்தின் தலைமைப் புரோகிதராக வீற்றிருந்த ஸ்ரீமத் தத்தபிரானை வழிபட்டார்; ஸ்ரீமத் தத்தரோ அந்தப் பரிசுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, அங்கிருந்த அந்தணக் குருமார்களுக்கே அவற்றை மீண்டும் தானமாக அளித்தார்||68||
தம் அடியவர்களின் உள்ளத்தில் எண்ணுபவற்றை நன்கு அறிந்தவரான ஸ்ரீமத் தத்தபிரானைப் பொறுத்தவரை, வேத மரபுகளைக் காப்பாற்றுவது மட்டுமே குறிக்கோள்; அதை விடுத்து ‘ஆச்சாரியர்’ (குரு) என்ற பட்டம் தனக்கு கிடைப்பதில் என்ன பயம் ஏற்பட உள்ளது என்றே எண்ணினார்; ஆகவே ஸ்ரீமத் பரசுராமரை நோக்கி ‘ எனக்கு நீ ஏன் அத்தனை செல்வங்களை வாரி வழங்க வேண்டும்? அவற்றினால் எனக்கென்ன பயன்?; புதிதாக மலர்ந்த மலர்களைப் போல தூய்மையாகத் திகழும் உமது மனம் ஒன்றே எனக்குப் போதுமானது’ என்று கூறினார் ||69||
அங்கிருந்த அனைவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்; அப்போது ஸ்ரீமத் தத்தபிரான் ஸ்ரீமத் பரசுராமரை நோக்கி ‘நீ இந்த மண்ணிற்குப் பெருமையைத் தேடித் தந்துள்ளாய்; நீ மேற் கொண்டிருக்கும் இந்த நற்செயல் அனைவராலும் போற்றப்படும்’என்று வாழ்த்தினார்||70||
வயதில் மிகவும் இளையவராக நீ திகழ்ந்த போதிலும், வெல்வதற்கு மிகவும் கடினமான வீரர்களை நீ போரில் வீழ்த்தி உள்ளாய்; அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நீ மகிழ்ச்சியை பரப்பி உள்ளாய்; மேலும், நீ மேற்கொண்ட இந்த வேத யாகமும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது’ ||71||
இந்த மண்ணில் நீ நிகழ்த்திய இத்தகைய அரிய செயல்களைப் போற்றிப் பாடும் எவரும், அனைத்துக் களங்கங்களிலிருந்தும் விடுதலை பெற்று தூய்மை அடைவர்; அளவற்ற நற்பேறுகளைக் கொண்ட நீ எவ்விதக் களங்கமும் இன்றித் திகழ்வது போலவே, அவர்களும் தூய்மை பெறுவர் ||72||
இந்த மண்ணில் வாழ்ந்த வேறு எவராலும், இவ்வளவு அதிகமான எண்ணிக்கையிலான ஷத்ரிய போர் வீரர்களை எதிர்த்து நிற்கவோ, அவர்களைச் சமாளிக்கவோ முடிந்திருக்காது; ஆனால் நீ ஒருவரே, உனது இணையற்ற வலிமையைக் கொண்டு, அந்த வஞ்சகர்களைத் தகுந்த முறையில் போரில் வீழ்த்தி உள்ளாய்||73||
இத்தகைய அரிய சாதனையை வேறு யாரால் தான் நிகழ்த்தியிருக்க முடியும்?; ஆகவே, நீ நாராயணப் பெருமானிடமிருந்து வேறானவர் அல்லர்; அதனாலேயே இப்படிப்பட்ட பெரிய போர் சாத்தியமாயிற்று; அதன் விளைவாகவே, இப்பூவுலகில் தீய மன்னர்கள் அனைவரும் அழித்தொழிக்கப்பட்டனர் ||74||
எனவே, ஓ இளம் வீரரே, போர்க்களத்தில் நீ வெளிப்படுத்திய வீரமானது பெரிதும் போற்றத்தக்கது; நீ உண்மையில் தாராள குணம் கொண்ட விஷ்ணுப் பெருமானின் மறு வடிவமே ஆவீர்; அதன் காரணமாகவே, இத்தகைய பிரம்மாண்டமான அழிவு நிகழ்வது சாத்தியமாயிற்று ||75||
அதற்கு ஸ்ரீமத் பரசுராமர் பதிலளித்தார் ‘இவற்றையெல்லாம் என்னால் மட்டும் எவ்வாறு சாதித்திருக்க முடியும்?; இவை அனைத்தும் தாங்கள் எனக்கு அளித்த அருளாசியின் விளைவே ஆகும்; தங்கள் கருணைக்குப் பாத்திரமான ஒருவரால் சாதிக்க முடியாதது என்று ஏதேனும் உண்டோ?; இப் பெரும் வெற்றியானது தங்கள் கருணையின் விளைவே அன்றி வேறில்லை ||76||
இவ்வாறு அவர்களுக்கிடையேயான உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது; முனிவர்களும் அந்தணர்களும் எழுப்பிய வாழ்த்துரைகளுக்கும் வெற்றி முழக்கங்களுக்கும் இடையே, அவர்கள் ஸ்ரீமத் பரசுராமரை நோக்கி, ‘ நீங்கள் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைத் தெய்வங்களாகிய நீங்களே அறிவீர்கள்’ என்று கூறினர் ||77||
தாங்கள் இருவரும் வெளிப்படையாகப் பார்ப்பதற்கு வெவ்வேறானவர்களாகத் தோன்றினாலும், தங்கள் இருவரின் உள்ளங்களும் தூய ஆன்மீக உணர்வில் ஒன்றிணைந்துள்ளன; இப்பூமியை மீண்டும் புனிதமாக்கும் நோக்கத்துடனேயே, இத்தகைய எளிமையான திருவிளையாடல் அரங்கேறியுள்ளது ||78||
அனைவரும் அந்த இரு தெய்வங்களையும் பணிந்து வணங்கினர்; பின்னர் விடை பெற்றுக் கொண்டு, அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பினர்; இத்தகைய பிரம்மாண்டமான திருவிளையாடலை, ஸ்ரீமத் பரசுராமப் பெருமான் பூமியை மீண்டும் புனிதமாக்கும் நோக்கத்துடனேயே நிகழ்த்திக் காட்டினார் ||79||
ஸ்ரீமத் தத்தாத்திரேயப் பெருமானுடன் நட்பு பூண்ட ஸ்ரீமத் பரசுராமர் அங்கேயே தங்கியிருக்க தீர்மானித்தார்; ஸ்ரீமத் பரசுராமர் செய்த பணிவிடைகளால் பெரிதும் மகிழ்ந்த ஸ்ரீமத் தத்தாத்திரேயப் பெருமான், அவருக்கு ஆன்மீக ஞானத்தை உபதேசிக்க திருவுள்ளம் கொண்டார்||80||
ஸ்ரீமத் பரசுராமர் தனது உண்மை வடிவத்தை உணர்ந்து கொள்ளும் பொருட்டு, ஸ்ரீமத் தத்தாத்திரேயப் பெருமான் அவருக்கு ‘திரிபுரா ரகசியம்’* எனும் நூலின் பெருமைகளை எடுத்துரைத்தார்; ஸ்ரீமத் பரசுராமரும் முழு ஈடுபாட்டுடன் அதனை கவனமாகக் கேட்டறிந்தார்; ஸ்ரீமத் தத்தாத்திரேயப் பெருமானின் இச்செயலானது, தன்னைச் சார்ந்தவர்களை மேன்மைப்படுத்துவதற்காகவே அமைந்திருந்தது ||81||
அந்த நூலானது எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்றால், அதைக் காது கொடுத்துக் கேட்ட மாத்திரத்திலேயே, அனைத்து விதமான அறியாமைகளும், தவறான கண்ணோட்டங்களும் அகன்று விடும்; ஒருவன் இறைத் தன்மையின் முழுமையை உணர்ந்து அனுபவிக்கும் பேறினைப் பெறுவான்; இதுவே உபநிடதங்களின் சாரமாகத் திகழும் ஒப்பற்ற ஞான அமுதமாகும் ||82||
ஸ்ரீமத் தத்தாத்திரேயப் பெருமான் ஸ்ரீமத் பரசுராமரை நோக்கி இவ்வாறு அறிவுறுத்தினார் ‘நீ எனக்கு உற்ற நண்பன் என்பதாக உணர்ந்து கொள்; இனி, உன் மனதிற்குள்ளேயே என்னை தியானித்துக் கொண்டு, உனக்கு விருப்பமான எந்தவொரு இடத்திற்கும் சென்று தவமியற்றுவாயாக ||83||
எனது ஆற்றலை நான் மீண்டும் உனக்கு அருளியுள்ளேன்; இந்தத் திவ்யப் பேரொளி, நான் மீண்டும் ஒரு ஷத்ரிய போர்வீர மன்னனாக அவதரிக்கும் காலம் வரை உன்னுடனேயே இருக்கும்; அக் காலத்தில், நீ இந்த ஒளியை என்னிடமே திரும்ப ஒப்படைத்து, ஒரு அந்தணனாகிய உனது சுய அடையாளத்தை மீண்டும் பெற்றுக் கொள்வாய் ||84||
வைவஸ்வதம்* என்று அழைக்கப்படும் இந்த மன்வந்தரக் காலம் முடிவடையும் வரை, வேத கால கணக்கின்படி அந்தக் காலம் வரும் வரையில் நீ மேற்குப் பெருங் கடலின் கரையில், உன்னை எவரும் காண முடியாத அளவிலான ஒரு பிராமணராக வசித்து வர வேண்டும்.
{* வைவஸ்வதம் (Vaivasvata) என்பது இந்து புராணங்களின்படி, தற்போது நடைபெற்று வரும் மன்வந்தரத்தின் (வைவஸ்வத மன்வந்தரம்) பெயராகும்.; இந்து சமய காலக் கணக்கின்படி, மனித குலத்தின் மூதாதையான ஒரு மனுவின் ஆட்சிக் காலமே மன்வந்தரம் (Manvantara) என்று அழைக்கப்படுகிறது. ஒரு மன்வந்தரமானது 71 மகா யுகங்களைக் (சதுர் யுகங்கள்) கொண்டது. இது மனிதர்களின் கணக்கின்படி சுமார் 30 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள் ஆகும் } ||85||
அதன்பின், சாவர்ணிக மன்வந்தரக் காலம் ஆட்சிக்கு வரும்போது, நீ ‘மகரிஷி’ என்னும் பட்டத்தைப் பெறுவாய்; பின்னர், மகா-கல்ப காலவரையறையின்படி விதிக்கப்பட்டுள்ளவாறு, இந்த முழு உலகமும் பிரளயத்தில் அழியும் வேளையில், நீ முக்திப் பெறுவாய்||86||
தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயர் உரைத்த அந்த புனிதமான வார்த்தைகளைக் தெய்வமான ஸ்ரீமத் பரசுராமர், அவற்றை மிகக் கூர்ந்து செவிமடுத்தார்; அதன்பின், ஸ்ரீமத் தத்தருக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற தமது விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றும் பொருட்டு, மேலும் சிறிது காலம் அங்கேயே தங்கியிருந்தார் ||87||
அடங்காத க்ஷத்திரியர்களை (போர் வீரர்களை) பூவுலகிலிருந்து இருபத்தியொரு முறை தொடர்ந்து வேரறுத்து ஒழித்தவர் அவர்; அளவிடற்கரிய வலிமை கொண்டவர் அவர் முன் இழிவான எண்ணம் கொண்டிருந்தவர்கள் நடு நடுங்கி நின்றார்கள் ||88||
அதே தெய்வமான ஸ்ரீமத் பரசுராமர், முதலில் தெற்குப் பெருங் கடலின் கரைக்குச் சென்று கடுந் தவம் இருக்கத் தொடங்கினார்; அப்போது, வறுமையில் வாடிய சில அந்தணர்கள் அவரைச் சந்திக்க நேர்ந்தபோது, அவர்கள் அவரிடம் தானம் வேண்டி நின்றனர் ||89||
அதற்கு தெய்வமான ஸ்ரீமத் பரசுராமர் அவர்களிடம் ‘என்னிடமிருந்த அனைத்தையும் நான் ஏற்கனவே, மிக நீண்ட காலத்திற்கு முன்பே, அந்தணர்களுக்குத் தானமாக அளித்து விட்டேன்; முனிவர் காசியப அவற்றை அன்புடன் ஏற்றுக் கொண்டார்; எனவே, இப்போது உங்களுக்கு அளிப்பதற்கு என்னிடம் சொந்தமாக ஏதுமில்லை’ என்று கூறினார்||90||
அதற்கு அந்த அந்தணர்கள் ‘நீர் வென்று கைப்பற்றிய நிலப்பரப்பு முழுவதையும் முனிவர் காசியபருக்குத் தானமாக அளித்து விட்டதாகக் கூறுகிறீர்; அப்படியிருக்க, இப்போது அதே நிலப் பரப்பில் நீர் மட்டும் ஏன் அமர்ந்திருக்கிறீர்?; நீர் ஏற்கனவே தானமாக அளித்து விட்ட ஒரு பொருளை, இப்போது நீர் மட்டும் தனியாக எப்படி அனுபவித்து வருகிறீர்கள்?’என்று திருப்பிக் கேட்டனர் ||91||
திருப்தியடையாத அந்த அந்தணர்கள் உரைத்த அத்தகைய வார்த்தைகளைக் கேட்ட தெய்வமான ஸ்ரீமத் பரசுராமர், உடனே ஒரு அம்பை எடுத்து எய்து, கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை வற்றச் செய்தார்; பின்னர், பொதுமக்களின் கண்களுக்குப் புலப்படாதவாறு தம்மை மறைத்துக் கொண்டு அங்கே சென்று தங்கினார்; அந்த இடமே இப்போது மேற்கு இந்தியாவில் ‘சிப்ளூன்’ (Chiplun)*என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
{*சிப்ளூன் (Chiplun) என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய நகரமாகும்; இது கொங்கண் பிராந்தியத்தில், வசிஷ்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலா மற்றும் வணிக மையமாகும்} ||92||
சுமார் 12 ‘கோஸ்’ (kos) அகலமும், 400 ‘கோஸ்’ நீளமும்* கொண்டதாக அமைந்திருந்த அந்த முழு நிலப்பரப்பும் இப்போது ‘கொங்கணம்’ (Konkan) என்று புகழ்பெற்று விளங்கும் அந்தப் பகுதியில் உள்ளது; தெய்வமான ஸ்ரீமத் பரசுராமரால், அவர் வசிப்பதற்காக உருவாக்கப்பட்டது {*ஒரு ‘கோஸ்’ என்பது சுமார் 3 முதல் 3.2 கிலோமீட்டர் தூரத்தைக் குறிக்கும்} ||93||
குரு வேத தர்மா மேலும் கூறினார் ‘எனினும், அந்த நிலப்பகுதியும் விரைவில் பிராமணர்களால் தனமாக கேட்கப்பட்டு , அவர்களுக்கே வழங்கப்பட்டது; அதன் பின்னர், இராமாயண இதிகாச நாயகனும், தசரத மன்னரின் திருமகனுமான ஸ்ரீமத் ராமர் அவதரித்தபோது, அவர் தனது திருமணத்திற்குப் பிறகு அயோத்திக்குத் திரும்புகையில், தான் இழந்து இருந்த தெய்வீக ஒளியை ஸ்ரீமத் தத்த பகவானால் மீண்டும் பெற்றுக் கொண்டார்||94||
அந்நாள் முதல், ஸ்ரீமத் பரசுராமர் சிப்ளூன் (Chiplun) என்னும் நகரில் மறைந்து வாழ்ந்து வருவதாகவும், அங்கு அவர் கடும் தவம் இயற்றி வருவதாகவும் கூறப்படுகிறது; மேலும், எதிர் காலத்தில் அவர் ஒரு மகத்தான, சிறந்த மகரிஷியாகப் புகழ் பெறுவார் என்றும் சொல்லப்படுகிறது ||95||
தேவி பார்வதி என்பவளே அன்னை ரேணுகாதேவி ஆவாள்; அவ்வாறு கூறுவதில் எவ்விதத் தவறும் இல்லை; ஒருமுறை, படைப்புக் கடவுளான பிரம்மதேவர் வேதங்களை மறந்ததாகக் கூறப்படுகிறது; இது முற்றிலும் விதியின் விளைவாகவே நிகழ்ந்தது ||96||
அப்போது பிரம்மதேவர் ஸ்ரீமத் தத்தாத்ரேயரை அணுகி, இவ்வாறு வேண்டினார் ‘சுவாமி, நான் ஏதோ ஒரு காரணத்தினால் வேத ஞானத்தை மறந்து விட்டேன்’; அதற்கு ஸ்ரீமத் தத்தர் ‘தூய்மையான அன்னை ரேணுகா தேவியை நினைத்துப் போற்றுவாயாக; அவ்வாறு செய்தால், நீ நினைவாற்றலில் இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்றுக் கொள்வாய்’ என்று பதிலளித்தார்’ ||97||
அதன்பின் பிரம்மதேவர், ‘ஏக்வீரா அன்னை’ என்றும் அழைக்கப்படும் அன்னை ரேணுகா தேவியை எண்ணித் தவம் புரிந்தார்; ஸ்ரீமத் தத்த பகவான் பிரம்மதேவனுக்கு அளித்த அருளால் மகிழ்வுற்ற அன்னை, அவருக்குக் காட்சியளித்தாள்; உடனே பிரம்மதேவர், தனக்குக் காட்சியளித்த அந்தத் தேவியின் திருவடிகளில் விழுந்து வணங்கினார் ||98||
அதன் பின்னர், பிரம்மதேவரின் தேவையை உணர்ந்த அன்னை, அவர் மறந்திருந்த வேத நூல்களைத் தனது தெய்வீகத் திருமேனியிலிருந்து வெளிப்படுத்தினாள்; பிரம்மதேவரும் அவற்றை நன்றியுணர்வுடன் ஏற்றுக் கொண்டு ‘இன்று நான் முழுமையாகத் திருப்தியடைந்தேன்; என்று கூறினார் ||99||
இத்தகையதுதான் அந்தத் தெய்வீக அன்னையின் பெருமை; ரேணு மன்னனின் பக்தியைக் கண்டதாலேயே, அவள் அவனுக்கு மகளாகப் பிறந்து, தூய்மையான அன்னை ரேணுகா தேவியாக திகழ்ந்தாள்; தெய்வீக மூர்த்திகள் அனைவரும், பக்தர்களின் தூய உணர்வுகளுக்குக் கட்டுப்படுபவர்கள் என்பது உண்மையே ||100||
இன்றும் கூட, அவள் இந்தியாவின் ‘மஹூர்கட்’ (Mahurgadh) என்னும் புண்ணியத் தலத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறாள்; தன்னை நாடி வரும் பக்தர்களை அவள் உயர்த்தி அருளுவதோடு, அவர்களின் துன்பங்களையும் துயரங்களையும் நீக்கி அருள்கிறாள்.
{*மகூர் (Mahur) அல்லது மகூர்கட், மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற புனித மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமாகும்; இது ரேணுகா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட, அஷ்டாதச சக்தி பீடங்களில் (18 சக்தி பீடங்கள்) ஒன்றான பழமையான கோயில் அமைந்துள்ள இடமாகும்; அடர்ந்த காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட, ஒரு குன்றின் மீது அமைந்துள்ள இந்த தலம் பக்தர்களுக்கு அமைதியான மற்றும் ஆன்மீக சூழலை வழங்குகிறது} ||101||
‘மகூர்கட் (Mahurgadh) எனும் இப்புனிதத் தலத்தில், அத்ரி முனிவர் மற்றும் அன்னை அனுசூயா ஆகியோரின் இருப்பிடமும், பகவான் ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் ஆசிரமமும் அமைந்துள்ளன; இவற்றைத் தரிசித்த மாத்திரத்திலேயே, ஒருவன் தான் தூய உள்ளம் பெற்று விரும்பியதை அடைந்து விடுகிறான்’ ||102||
மேலும், இங்குள்ள கிருஷ்ண-ஆமலக்கி (Krushna-Amalaka)* என்று அழைக்கப்படும் கரு நெல்லிக்காய் மரத்தைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர், நிச்சயமாகப் பெரும் புண்ணியம் செய்தவராவார்; அவர் தான் தேடிய ஆன்மீகத் தூய்மையை உறுதியாக அடைவார்.
{* கிருஷ்ண ஆமலக்கி (Krishna Amalaki) என்பது சிவப்பு நிற நெல்லிக்காயைக் குறிக்கும். இது ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் ஆன்மீக முக்கியத்துவத்திற்காகவும் அறியப்படுகிறது }||103||
அங்கு சென்றதும் முதலில் அன்னை ரேணுகா தேவியை தரிசிக்க வேண்டும்; பின்னர், முன்னரே குறிப்பிடப்பட்ட ‘மாத்ரு-தீர்த்தம்’ (Matru-teeth) எனும் இடத்தில், முறைப்படி பிண்டங்கள் (அன்ன உருண்டைகள்) சமர்ப்பிக்க வேண்டும்; இதன் விளைவாக, ஒருவரின் முன்னோர்கள் அனைவரும் நற்கதி அடைந்து, நிர்வாண நிலையை நோக்கிய பயணத்தில் முன்னேற்றம் காண்பார்கள்||104||
இங்கு சாந்திரிக முனிவர் (Chandrika)* தொடர்பான ஒரு நிகழ்வு குறிப்பிடப்படுகிறது: அவரது மறைந்த முன்னோர்கள் நரகத்தில் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு வந்தனர்; அவர்களின் அவல நிலையை உணர்ந்த அந்த முனிவர், புனிதமான ‘மாத்ரு-தீர்த்தம்’ எனும் இப் பகுதியில், உரிய சடங்குகளுடன் அவர்களுக்குப் பிண்டங்களைச் சமர்ப்பித்தார்
{*சாந்திரிக முனிவர்’அல்லது ‘சந்திரிகா முனிவர்’ (Chandrika/Chandrika Muni) என்ற பெயரில் புகழ்பெற்ற முனிவர் எவரும் இந்து புராணங்களிலோ அல்லது வரலாற்றுச் சான்றுகளிலோ பரவலாகக் குறிப்பிடப்படவில்லை} ||105||
அவர் பிண்டங்களைச் சமர்ப்பித்த அந்தத் தருணத்திலேயே, அவரது முன்னோர்கள் ஒவ்வொருவரும் முக்தி அடைந்தனர்; அத்தகைய மகத்தான ஆற்றலைக் கொண்டது இப் புனிதத் தலம்; இங்கு செய்யப்படும் நற் செயல்களுக்கான பலன், அடுத்த கணமே கை கூடிவிடுகிறது ||106||
பத்ம-தீர்த்தம் மற்றும் சர்வ-தீர்த்தம் என்று அழைக்கப்படும் மேலும் இரண்டு புனிதத் தலங்களும் இங்கு அமைந்துள்ளன; அவையும் சமமான புகழைப் பெற்றவை; ஒருமுறை, தன் மகளின் மீது காமம் கொண்ட சூரிய பகவான், இத் தலத்தில்தான் மீண்டும் தனது பழைய களங்கமற்ற தன்மையையும் தூய்மையையும் மீட்டெடுத்தார் என்று கூறப்படுகிறது ||107||
குரு வேத தர்மா தொடர்ந்து கூறினார் ‘இப்புனிதத் தலங்களில்தான், கடந்த காலத்தில் பகவான் ஸ்ரீமத் தத்தாத்ரேயர் தனது அன்புச் சீடரான சஹஸ்ரார்ஜுனனுக்கு யோக மார்க்கம் குறித்து உபதேசித்து, அவனையும் உயர்ந்த ஆன்மீகப் பேறு பெறச் செய்து, மேலுலகங்களுக்கு அனுப்பி வைத்தார் ||108||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் இருபத்து நான்காம் (24) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் இருபத்து நான்காம் (24) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 2489 = 2597
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -8, அத்தியாயம் -24 முடிவடைந்தது
அத்தியாயம் -25 தொடர்கின்றது