COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பகுதி 5 : சமாதி நிலை
அத்தியாயம் 16
எஞ்சிய கர்மவினைப் பயனை அனுபவிக்க மன்னர் அனுப்பப்படல்
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
‘குரு வேத தர்மா தொடர்ந்து கூறினார் ‘ஓ தீபக், உலகிற்கு அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுபவரும், எவருடைய அருளால் ஊமையரும் பேச்சுத் திறமை பெறுகிறார்களோ, அவரே சத்-சித்-ஆனந்தத்தின் (உண்மை, உணர்வு, பேரின்பம்) வடிவமான தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயர் ஆவார் ||1||
தெய்வமே அவருக்கு பிரியமான அர்ஜுனனுக்கு அறிவுரை கூறி, யோக சித்தியை அருளினார்; வரலாற்றின் இந்த வியக்கத் தக்க நிகழ்வை யார் எளிதில் நம்புவார்கள்? ஆயினும், தெய்வத்தின் புனித நாமத்தை உச்சரிப்பது நம்மை உலகப் பற்றுக்களிலிருந்து விடுவிக்க வல்லது என்பது உண்மையே||2||
யோகக் காலையில் நன்கு தேர்ச்சி பெற்று விட்ட அர்ஜுனனின் புகழுரைகளையும் சொற்களையும் பொறுமையுடன் செவி கொடுத்துக் கேட்ட கேட்ட ஸ்ரீமத் தத்தாத்ரேயர், அவனிடம் கேட்டார் ‘இப்போது சொல், உன் மனம் மேலும் எதை விரும்புகிறது?’ ||3||
அதற்கு அர்ஜுனன் தன் குருவிற்கு ஆழ்ந்த மரியாதையுடன் பதிலளித்தான் ‘நீங்கள் என்னை எதைச் செய்யும்படி கட்டளையிட்டாலும், நான் அதைச் செய்வேன்; நீங்கள் விரும்பும் அதே விதத்தில் நான் நடந்து கொள்வேன்; இப்போது என் மனதில் வேறு எந்த எண்ணமும் இல்லை ||4||
உங்கள் வழிகாட்டுதலின்படி நான் அந்தக் குகையில் என் தவத்தைத் தொடங்கினேன்; அங்கே அமர்ந்து தியானிப்பதை நான் மிகவும் விரும்பினேன்; இப்போதும் அவ்வாறே செய்ய என்னால் இயலும்; அதே போலவேதான் உங்களை தரிசிப்பதிலும் நான் அதே அளவிலான மன நிறைவை பெறுகிறேன்; உங்கள் அருகில் அமர்ந்திருப்பதை நினைத்தாலே என் உள்ளம் மகிழ்ச்சியால் பூரிக்கிறது’ ||5||
அதைக் கேட்ட ஸ்ரீமத் தத்தர் பதிலளித்தார் ‘ஓ அர்ஜுனா, இன்று உனது சந்தியா வந்தன வழிபாட்டை நிறைவு செய்; அதன் பிறகு இங்கேயே உணவு அருந்து; நாளை மீண்டும் அந்தக் குகைக்குச் சென்று, சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்திருப்பாயாக’ ||6||
‘உமது விருப்பப்படியே ஆகட்டும், தெய்வமே’ என்று அர்ஜுனன் பதிலளித்த பின்னர் அவன் தன் வழிபாட்டை நிறைவு செய்தான்; தன் குருவால் அருளப்பட்ட உணவை உண்டதன் மூலம் அவன் பெரும் நன்மையைப் பெற்றான்; அந்த நாளின் எஞ்சிய நேரத்தை, தன் குருநாதருக்குச் சேவை செய்வதிலேயே அவன் கழித்தான் ||7||
மறுநாள் காலையில் எழுந்ததும், தனது தினசரி சடங்குகளை செய்து முடித்த பின், அவர் ஸ்ரீமத் தத்த பகவானின் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு , குகையை சென்று அடைந்து மீண்டும் தனது யோக நிலையை தொடர்ந்தான்||8||
முதலில் அவன் தனது மனதை அமைதிப்படுத்தினார்; மத்திய சுஷும்னா நரம்பு வழியாக தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னரே பழகியிருந்ததால், அதன் மூலம் அவர் தனது பிராண வாயுக்களை தலையில் உள்ள பிரக்மா உச்சப் புள்ளிக்கு செலுத்த முடிந்தது; மேலும் தெய்வத்துடனான உணர்வுப் பூர்வமான ஒன்றிணைப்பு பேரின்பத்தில் இருந்தார் ||9||
அவர் மூன்று மாதங்கள் அதே போன்ற சமாதி நிலையில் இருந்தார்; மீண்டும் தன்னையும் தனது சுற்றுப்வெளிப்புற ங்களையும் உணர்ந்து விழித்தெழுந்தார்; பின்னர் மீண்டும் யோகா நிலைக்கு சென்று அப்படியே ஆறு மாதங்கள் பேரின்ப பக்தி தியான நிலையில் இருந்தார் ||10||
அந்த நிலையிலிருந்து விழித்தெழுந்த பிறகு, அவர் தனது பயிற்சியை மீண்டும் தொடங்கினார்; இந்த முறை ஒரு வருடம் தெய்வீகத்தில் மூழ்கியிருந்தார்; ஸ்ரீமத் தத்த பகவானே அவரைக் கண்காணிக்க குகைக்குச் சென்று ‘அவன் தானாகவே சுற்றுப்புறத்தை உணரத் தொடங்கவில்லை’ என மனதில் கூறிக் கொண்டார் ||11||
ஆகையால், மீதமுள்ள கர்ம வினைப் பயனை முடிக்க நான் அவனை எழுப்ப வேண்டும் என்று எண்ணியவாறு தனது சீடனின் தலையில் தனது கரத்தை வைத்து, ஆசிர்வாதம் செய்து, படிப்படியாக உயர்ந்த நிலையிலிருந்து அவன் மீண்டும் தன நிலைக்கு வர உதவினார்; இதற்கு தெய்வத்தின் சார்பிலும் சிறிதளவு உழைப்பு தேவைப்பட்டது||12||
அர்ஜுனன் பெரும் முயற்சிக்குப் பின்னரே தான், தனது உடல் என்ற உணர்வைப் பெற்றான் என்றாலும், அவனது ஐம்புலன்களும் இப்போது அவற்றின் மூலப் பொருளுடன் (இறைவனுடன்) ஒன்றிணைவதில் ஆழ்ந்திருந்தன; அதனால், உலகப் பொருட்களை நாடி அலைவதற்குப் பதிலாக, அதே புலன்கள் இப்போது அவனை அவனுக்குள்ளேயே இருக்கும் ஆத்மா வை நோக்கித் திருப்பின||13||
அவனது உட்புற புலன் உணர்வுகளும் உலகை நோக்கி விழித்தெழ மறுத்தன; அர்ஜுனன் இத்தகைய ஆழ்ந்த அகப் போராட்டத்திற்கு உள்ளாகியிருப்பதை உணர்ந்த ஸ்ரீமத் தத்தர், அர்ஜுனனின் உடல், மூச்சு, புலன்கள் மற்றும் அகக் கருவிகள் ஆகியவற்றை மீண்டும் வெளி உலகிற்கு கொண்டு வர முடிவு செய்தார்||14||
மெல்ல மெல்ல அர்ஜுனன் தனது உடல் உறுப்புகளை அசைக்கத் தொடங்கினான்; அப்போதுதான் தனது உடல் என்ற கூட்டுக்குள் தான் இருப்பதை அவன் உணர்ந்தான்; அவன் தனது கண்களை மென்மையாகத் திறந்தபோது, உடனடியாக தெய்வத்தின் புனித பாதங்களை தரிசித்தான்||15||
இப்போது வரை தான் ஒன்றிணைந்து அனுபவித்த அந்த மூலப் பொருளையே இப்போது வெளியிலும் தரிசித்த அர்ஜுனன், மீண்டும் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தான்; கடந்த பன்னிரண்டு மாதங்களாகத் தான் அனுபவித்த அந்தப் பேரின்பத்தை மீண்டும் நினைவு கூற முயன்றவாறு, தனது கண்களையும் அகப் பார்வையையும் படிப்படியாகத் தான் பெற்ற அந்தத் தெய்வீக அனுபவத்தின் மீது ஒருமுகப்படுத்தினான்||16||
இனிப்புப் பண்டத்தின் மீதோ அல்லது வெல்லத்தின் மீதோ ஈக்கள் மொய்த்துக் கொண்டே இருப்பதை போல, அர்ஜுனனின் பார்வையும் தெய்வத்தின் திருப்பி பாதங்கள் மீதே பதிந்திருந்தது; அவனது அன்பிற்குரிய அந்தத் திருப் பாதங்கள் மீதான பார்வையில் இருந்து விலக அவனது கண்கள் மறுத்தன ||17||
ஒரு கற்புக்கரசி, அவளது கணவனே தன்னை விலகிச் செல்லுமாறு கூறினாலும், அவனை நிரந்தரமாக விட்டு விலகிச் செல்லாமல், அவன் மீது தான் கொண்ட அன்பின் காரணமாக அவனுக்கு அருகிலேயே இருந்தவாறு அவனுக்கு சேவை செய்து கொண்டிருந்ததை போல அர்ஜுனனின் நிலை இருந்தது ||18||
தெய்வமான ஸ்ரீமத் தத்தர் அவனை வெளி உலகிற்குத் திரும்பி வருமாறு படிப்படியாக முயன்ற போதிலும், அவனது பார்வை எளிதில் அவர் பாதங்களை விட்டு விலக மறுத்தது. எனவே, இறைவன் அர்ஜுனனின் கையைப் பற்றிக்கொண்டு, தனது தெய்வீக சன்னதியில் தனக்கு அருகிலேயே அவன் அமர்ந்து உள்ள நிலையை அவனுக்கு உணர்த்தினார் ||19||
அப்போது தெய்வமான ஸ்ரீமத் தத்தர் இவ்வாறு கூறினார் ‘நீ என்னுடைய பக்தன்; உலகியல் ரீதியாக நீ செய்ய வேண்டியதோ, அடைய வேண்டியதோ, காண வேண்டியதோ அல்லது அனுபவிக்க வேண்டியதோ இனி ஏதுமில்லை; நீ மன நிறைவான பூரணத்துவத்தின் உச்சத்தை அடைந்து விட்டாய்; எள்ளளவும் ஐயமின்றி நான் கூறும் இதுவே முழுமையான உண்மை என்பதை அறிந்து கொள் ||20||
இப்பொழுது நீ உன் தலை நகருக்குத் திரும்பிச் செல்; உனக்கு விசுவாசமாக உள்ள குடி மக்களையும் ஏனைய மக்களையும் பேணிப் பாதுகாப்பது உனது கடமை ஆகும்; செயலின் மீது பற்று கொள்ளாமல், உன்னிடம் எதிர் பார்க்கப்படும் கடமைகளைச் செவ்வனே ஆற்றுவாயாக; மேலும், உன்னால் இயன்ற முழுமையான பக்தியுடன் என் புகழைப் பாடுவாயாக’||21||
இவ்வாறு தெய்வம் கட்டளை இட்டதைக் கேட்ட அர்ஜுனன் சற்றுத் தயங்கி நின்றவாறு இவ்வாறு கூறினான்; ‘தெய்வமே இப்பொழுது மீண்டும் எனது தலை நகருக்குச் செல்ல வேண்டும் என்று எதற்காக வற்புறுத்துகின்றீர்கள்; இந்த ஆழ்ந்த அமைதியில், பேசுவதற்கு வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை; நான் இங்கேயே, உங்கள் திருவடிகளில், பக்திப் பெருக்கோடு கூடிய அமைதியுடன் அமர்ந்திருக்க என்னை அனுமதிக்க வேண்டும்||22||
அதற்கு அவனை சமாதானப்படுத்தும் விதமாக தெய்வமான ஸ்ரீமத் தத்தர் இவ்வாறு கூறினார் ‘ஓ அர்ஜுனா, என் விருப்பத்தை நீ ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்; உளமார நீ என்னுடன் முழுமையாக இணைந்து இருந்தாலும் ஞான நிலையை அடைந்தவன் வெளி உலகில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நீ ஏன் ஒரு உதாரணமாக இருக்கக் கூடாது?’ ||23||
நீ சற்று முன் கூறியது போல, இவ்வுலகில் நீ செய்ய வேண்டிய கடமைகள் ஏதும் எஞ்சியிருக்கவில்லை என்றாலும், பிறருக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்வதே மரபாகும். ஏனெனில், ஒருவன் ‘ஜீவன்முக்தன்’ (வாழும் போதே ஞானம் பெற்றவன்) எனும் நிலையில் இருந்தாலும், அவனது நன்னடத்தையே சத்தியத்தைப் பிரதிபலிப்பதாகவும், ஆன்மீக மேன்மையை உண்மையாக அடைய துடிப்பவர்களுக்கும் வழிகாட்டுவதாகவும் அமைகிறது||24||
இந்த வாழ்க்கை முறையே நித்திய தர்மத்தின் ஒரு முக்கிய பாதையாகும்; இதை ஒரு போதும் கை விடக் கூடாது; ஒவ்வொருவரும் தன் தர்மத்திற்கு ஏற்ப செயல்படவும் நடந்து கொள்ளவும் வேண்டும்; அவ்வாறு செய்யும்போது, அவனது வாழ்வே பிறருக்கு ஒரு வழிகாட்டியாக திகழும்||25||
இம் முறையில்தான் ஒருவன் பிறரை நல் வழிப்படுத்த முடியும்; மாறாக, திறமையும் சாதனைகளையும் படைத்தவர்கள் நல் வழியிலிருந்து விலகிச் சென்றால், சமூகத்தில் தீய நடத்தைகளே பெருகும்; அது அழிவையே குறிக்கோளாக கொண்ட, இழிவான மக்கள் கூட்டத்தை அதிகரிக்க வழி வகுக்கும்||26||
மக்கள் அதை முழுமையாக புரிந்து கொள்ளும்வரை வஞ்சகம் செழித்தோங்கும்; சமூகத்தை ஏமாற்றும் வழிமுறைகள் பெருகும்; நன்மைக்கும், மேன்மைக்கும் எதிரான அனைத்து வழிமுறைகளும் உன் குடி மக்களிடையே விரைவில் தலை காட்டத் தொடங்கும்; அத்தகைய இழிவான நிலை சீரழிந்த சமூகத்தின் புதிய அடையாளமாக அமையும் ||27||
நீ ஒரு கிருஹஸ்தனாக இருக்கிறாய்; உன் வாழ்வின் இந்த கட்டத்தில் உன்னிடம் மக்கள் எதிர்பார்க்கும் கடமைகளை நீ கை விடுவது உனக்குப் பொருத்தமானதல்ல; எனவே, நீ செய்யும் செயல்களின் மீதோ அல்லது அதன் விளைவின் மீதோ பற்று கொள்ளாமல், வேத புனித நூல்களில் கூறப்பட்டுள்ள அனைத்துக் கடமைகளையும் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் ||28||
உண்மையான ஆத்ம விடுதலையை அடைந்தவர் எவருமே அதன் பின் வேறு ஏதன் மீதும் பற்று கொள்வதோ அல்லது எதனாலும் பிணைக்கப்பட்டு இருப்பதோ இல்லை; அத்தகைய ஞான நிலையை அடைந்து விட்டவர்களை வழி பிழன்று செல்ல வைக்க எதுவுமே கிடையாது ||29||
ஒருவேளை ஒரு நாள் சூரியனே குளிர்ந்த ஒளியை வீசினாலும், அல்லது நிலவு வெப்ப நிலையை தந்தாலும், அத்தனை ஏன் நெருப்பின் ஜுவாலைகள் வானத்தை நோக்கிச் செல்வதற்குப் பதிலாகக் கீழ் நோக்கி பாய்ந்து எரிந்தாலும் கூட வாழும் பொழுதே முக்தி நிலையை அடைந்து விட்ட எவரும், அவற்றைக் கண்டு வியப்போ அச்சமோ கொள்ள மாட்டார்கள்||30||
எப்படி ஒழுக்கம் தவறிய ஒரு பெண்ணை, தங்கள் துணையுடன் வாழும் நற்பண்புமிக்க இல்லறத்தார்கள் விரும்புவதோ அல்லது ஏற்பதோ இல்லையோ அதே போன்றுதான் ஜீவன் முக்தர்களையும் (உயிருடன் இருக்கும்போதே ஞானோதயம் பெற்றவர்) திசை திருப்பக் கூடிய வழி முறைகள் எதுவுமே இவ்வுலகத்திலோ அல்லது இச்சமூகத்திலோ கிடையாது||31||
ஒருவர் நான் இன்னார், இது என்னுடையது என்று கூறிக் கொண்டால், அது அடித்தளம் இல்லாத வேர்கள் அற்ற மரங்களை போன்றதாகும் என்பதை ஞான நிலையில் உள்ளவன் உணர்ந்து கொள்வான்; அதே போலவேதான் தாங்கள் மட்டுமே தெய்வத்திற்கு உரியவர்கள் என்று கருதிக் கொள்பவர்கள் நிலையும் சமூகத்தில் உள்ள அனைவரும் ஏற்றுக் கொள்வது இல்லை ||32||
முழுமையாக ஞான நிலை பெற்றவர்களின் தத்துவம் அதுவாகவே இருக்க வேண்டும் ‘இங்கே ‘இருப்பு’ (Is) என்பதும், அதனுடனான உறவு மட்டுமே உள்ளது; இங்கே ‘நான்’, ‘நீ’, அல்லது ‘எனக்கும் அவர்களுக்கும் இடையிலான வேறுபாடு’ என்பதைக் குறித்த பேச்சிற்கே இடமில்லை; இத்தகைய மன நிலையுடனேயே நீ வாழ்ந்து கொண்டு , இப் பிறவியை உனக்கு அளித்த—இன்னும் எஞ்சியுள்ள—விதிப் பயனை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும்||33||
சமூகத்தினர் தாம் தலைவர்களாகப் போற்றும், தாம் பெரிதும் விரும்பும் நபர்களையே பெரும்பாலும் பின்பற்றுவதைக் காண்கிறோம்; எனவே, நீ ஒரு சிறந்த முன் மாதிரியாகத் திகழ்ந்தால், பிறரும் உன்னை பின்பற்றுவது உறுதி; மக்கள் தங்கள் சொந்த நடத்தையைச் செம்மைப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, தெய்வ பக்தி மிக்க சான்றோர்களின் வாழ்க்கையை உற்று நோக்கிப் பார்க்கின்றார்கள் ||34||
பிறருடன் அளவுக்கு அதிகமான தொடர்புகளை வைத்துக் கொள்வதைத் தந்திரமாகத் தவிர்ப்பவர்களை போலவும், பிறர் துணையின்றித் தாங்களே தனித்து விளையாட முடிந்த குழந்தையைப் போலவும் இருந்து கொண்டு ஒருவன் முக்குணங்களின் பிடிப்பிலிருந்தும், பிறரிடம் குற்றம் காணும் மனப்பான்மையிலிருந்தும் விடுபட்டு வாழ்ந்து கொண்டும், தனது அன்றாட வாழ்வில் தர்மத்தை (கடமையை) முறையாகப் பின்பற்றி நடந்து வந்தாலும் , அத்தகைய வாழ்வில் என்ன குறை இருக்க முடியும்? ||35||
எவன் ஒருவன் தன் ஆத்மா வை முழுமையாக உணர்ந்துள்ளானோ, அந்த நிலையிலேயே இருந்து கொண்டு மகிழ்ச்சியுடன் இருப்பானோ, எந்த ஒன்றுமே அந்த ஆத்மாவிலிருந்து வேறானவை அல்ல என்பதை உணர்ந்து இருப்பானோ, அத்தகையவனுக்கு கட்டாயமாகச் செய்து முடிக்க வேண்டிய கடமைகள் என்று எதுவும் இருக்காது; இந்த உயர்ந்த தத்துவத்தை அனைவரும் நன்கு அறிந்துள்ளார்கள் ||36||
ஆத்ம உணர்வு பெற்ற ஞானிகள் பல நற் செயல்களைச் செய்தாலும், அதன் பயனாக அவர்கள் உயர்வான மேல் லோகங்களுக்குச் சென்று காலம் கழிக்க வேண்டியதில்லை; அதே சமயம், தற்செயலாக அவர்கள் மூலம் ஏதேனும் ஒரு தீய செயல் நிகழ்ந்து விட்டாலும், அதன் விளைவாக அவர்கள் நரக லோகங்களில் அனுபவிக்க வேண்டிய சித்திரவதைகளை எதிர் கொள்ள வேண்டியதில்லை ||37||
ஆயினும், ஒருவன் நன்மை பயக்கும் பாதையிலேயே பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது; எனவே, சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கடமைகளையும் தவறாமல் செய்ய வேண்டும்; அதே வேளையில், மனதின் தெளிவு குலையாமல், சம நிலையிலேயே இருக்க வேண்டும் என்ற அசைக்க முடியாத உறுதியுடன் செயல்பட வேண்டும்; சமூகத்தின் நடுவே வாழ்ந்து கொண்டு இருந்தாலும், அதன் மீது பற்று கொள்ளாமல் விலகியே இருக்க வேண்டும் ||38||
இந்தக் காரணங்களினாலேயே, அர்ஜுனா, நீ உன் தலை நகருக்குத் திரும்பிச் செல்ல வேண்டும்; உன் குடிமக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்; வேதங்களில் கூறப்பட்டுள்ள யாகங்களைச் செய்து, அனைத்துத் தேவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும்; உன் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து, அவர்களுக்கும் மன நிறைவை அளிக்க வேண்டும் ||39||
நிலம், தங்கம், பசுக்கள், ஆடைகள், அணிகலன்கள் மற்றும் தேர் போன்றவற்றை தாராளமாக பரிசளி; திருமணப் பருவத்திலுள்ள கன்னியருக்குப் பொருத்தமான மணாளர்களைத் தேர்ந்தெடுத்துத் திருமணங்களை நடத்தி வை; இதன் மூலம் கற்றறிந்த சான்றோர்களின் நன் மதிப்பையும் திருப்தியையும் பெறு; மேலும், கண் பார்வையற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோர் பராமரிப்பில் தனிப்பட்ட கவனம் செலுத்து||40||
மேலும், அவ்வப்போது இங்கு வந்து என்னைத் தரிசிப்பதை மறந்து விடாதே; இங்கு வந்து என்னைக் தரிசிப்பது உனது ஆத்மத் தேடலுக்கு உண்மையான நிறைவைத் தரும்; உன் அரசாங்கக் கடமைகளை நிறைவேற்றுவதில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு கணத்திலும், என்னையே நினைவில் கொள்ள முயல வேண்டும்||41||
நீ என்னை ஒரு போதும் மறக்க மாட்டாய் என்பதை உறுதியாக அறிந்து கொள்; நீ அனுபவித்த இந்தத் தெய்வீகத்தை ஒரு போதும் மறக்க மாட்டாய் என்பதை உறுதியாக தெரிந்து கொள்; இந்த சத்தியத்தில் உறுதியாக நிலைத்து இருக்க வேண்டும்; எவ்வித அச்சமுமின்றி, வெளி உலகிற்குப் பொருத்தமான, ஒரு மன்னருக்குரிய கண்ணியமான நடத்தையை மேற் கொள்வாயாக ||42||
எல்லாச் செயல்களிலும் ஏதோ ஒரு குறைபாடோ அல்லது களங்கமோ கலந்திருக்கத்தான் செய்யும்; அவற்றின் விளைவுகள் நற்செயல்களாகவோ அல்லது அவ்வளவு சிறந்தவையாக இல்லாமலோ இருக்கலாம். ஆயினும், அவற்றின் கர்ம பலன்களை இப்பொழுதோ அல்லது எதிர் காலத்தில் எக் காலத்திலோ கூட நீ அனுபவிக்க வேண்டியதில்லை||43||
இப்படியாக ‘ஜீவன் முக்தி’ (உயிருடன் இருக்கும்போதே பெறும் விடுதலை) எனும் நிலையில் நீ வாழ்ந்து காட்ட வேண்டும்; பற்றற்ற நிலையில் இருந்து கொண்டு, மீதம் உள்ள விதிகளையும் வாழ்க்கையையும் கடந்து செல்வாயாக; உனது அழியும் உடலை நீ துறந்த பிறகு, ‘விதேக முக்தி’ (உடல் நீங்கிய பின் பெறும் விடுதலை) எனும் பேரின்ப நிலையை அடைவாய்; நான் கூறும் இவை சத்தியமான வார்த்தைகள்’||44||
தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயர் கூறிய வார்த்தைகளை கேட்ட அர்ஜுனன், மிகுந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தான்; அவன் தன் போற்றுதலுக்கு உரிய தெய்வத்தை வணங்கி ‘ தெய்வமே, நீங்கள் எனக்கு அருளிய போதனைகளின்படியே அனைத்தையும் நான் முழுமையாகச் செய்து கொண்டு ராஜ்யத்தில் செயல்படுவேன்’ என்று கூறினான்||45||
ஸ்ரீமத் தத்தரின் கட்டளையை ஏற்றுக் கொண்ட அர்ஜுனன், அவருடைய திருப் பாதங்களை இறுகப் பற்றிக் கொண்டான்; அவன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் இறைவனின் திருப் பாதங்களை துடைத்துச் சுத்தம் செய்தது; தன் அகத்திலும்வெளிப்புற த்திலும் உணர்ந்த அந்தப் ஆனந்தத்தை அவனால் அடக்கிக் கொள்ளவே முடியவில்லை; அந்த ஆனந்தத்தை அடக்க அவன் எவ்வாறு முயன்றாலும் அவனால் அதை அடக்க முடியவில்லை ||46||
ஸ்ரீமத் தத்தர் மீது அவன் வைத்து இருந்த அன்பினாலும், ஆழ்ந்த நன்றியுணர்வினாலும் கண்களில் இருந்து வழிந்தோடிக் கொண்டிருந்த கண்ணீரை அவனால் அடக்கி நிறுத்த முடியவில்லை; அவன் தான் ஒரு மனிதன் என்று உணரும் நிலையிலேயே இல்லை; தெய்வமான ஸ்ரீமத் தத்தரை நோக்கி ‘ ஐயனே, இப்போது நான் இந்தத் திருப் பாதங்களில் இருந்தும், இந்த ஆனந்தமயமான சூழ்நிலையில் இருந்தும் எப்படி பிரிய போகின்றேன் என்பது தெரியவில்லை; எனக்கு இது ஒன்று மட்டுமே ஆறாத துயரத்தைக் கொடுத்தவாறு இருக்கும்’ என்று கூறினான்||47||
மீண்டும் தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயர் தன் பக்தனை தேற்றும் விதமாக கூறினார் ‘அர்ஜுனா, எனது வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு, இப்போது நீ உனது தலை நகருக்கு திரும்பிச் செல்; எனது தெய்வீகத்தையும், என் திருப்பி பாதங்களையும் நீ தியானிக்கும்போதே, அவை உன் அக உணர்வுகளிலிருந்து ஒருபோதும் விலகியோ, மறைந்தோ போகாது’ என்று ஆறுதலாக கூறினார் ||48||
இவ்வாறெல்லாம் ஆறுதலாக கூறிய பின்னர், ஸ்ரீமத் தத்தர் அவனை ஆரத் தழுவி அன்புடன் விடை கொடுத்து அனுப்பினார்; மன்னன் அர்ஜுனனும் தனக்குள் இருந்த தெய்வத்தை தியானித்தவாறே, தன் தலை நகருக்குத் திரும்பினான் ||49||
தமது மன்னன் அர்ஜுனன் தலை நகருக்குள் நுழைந்ததைக் கண்டதும், மக்களும் அவனது அரசப் பணியாளர்களும் மங்களகரமான அனைத்தையும் கொண்டு சென்று அவனை வரவேற்றார்கள்; நகரம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு, நன்கு அலங்கரிக்கப்பட்டு, சாலை எங்கும் நறுமண நீர் தெளிக்கப்பட்டது; மக்களின் பெரும் ஆரவார மத்தியில் அவன் தன் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்||50||
சந்தனம் கலந்த நீர் எங்கும் தெளிக்கப்பட்டு, அந்தச் சூழலை நறுமணமும் கவர்ச்சியும் மிக்கதாக மாற்றியது; இசைக் குழுவினர் பல்வேறு இசைக் கருவிகளை கொண்டு பாடல்களை பாட, கற்றறிந்த பிராமணர்கள் தமது மன்னனை பல்வேறு தோத்திரங்களை பாடி ஆசிர்வதித்தார்கள் ||51||
நடனக் கலைஞர்கள் தத்தம் திறமைகளைக் காட்டி ஆடினர்; பாணர்கள் மன்னனின் புகழைப் பாடினர்;அவனைக் கண்டதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்த அவனது குடிமக்கள் வெற்றி முழக்கங்களையும் வாழ்த்துக்களையும் எழுப்பி அவனை வரவேற்றனர் ||52||
இறை நம்பிக்கை மிக்க பெண்கள் சிறந்த ஆடைகளை அணிந்து கொண்டு , தத்தமது வீடுகளின் கூரை மீது ஏறி நின்று கொண்டு, மன்னனை அழைத்து வந்திருந்த ஊர்வலத்தினர் மீது பொரி போன்ற மங்களகரமான பொருட்களை வீசி எறிந்தார்கள்; மன்னனின் பெருமைகளையும் பாடல்களாக பாடி மன்னனை கௌரவித்தார்கள்||53||
நகர் முழுவதும் முத்துக்களால் ஆன தோரணங்கள் கட்டினார்கள்; அரச சின்னங்கள் கொண்ட கொடிகள் கட்டப்பட்டன; பலத்த காற்றில் அவை அசைந்தாடிக் கொண்டிருக்க, நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு தெருவும், பாதையும், நெடுஞ் சாலையும் குடிமக்களின் உற்சாகத்தையும் மன நிறைவையும் வெளிப்படுத்தின||54||
தங்கத்திலான ஒரு தட்டில் வைக்கப்பட்டு இருந்த, இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒரு எரியும் விளக்கை ஏந்தி வந்திருந்த அழகிய கன்னிமார்கள் அதைக் கொண்டு அரசனை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்; மன்னன் அர்ஜுனனின் முகத்தில் வெளிப்பட்ட ஒளி மயமான அழகைக் கண்டதும், நீண்ட காலமாக எதிர்பார்த்த சந்திப்பு இறுதியாக நிகழ்ந்தது போல் இருந்தது||55||
அர்ஜுனனின் ராணிகள் மொத்தம் பதினாறாயிரம் பேர் அந்த எரியும் விளக்கை ஏந்தி வந்தனர்; சடங்கின் முறைப்படி அந்த விளக்குடன் அந்த மன்னனை சுற்றி வந்தார்கள்; தாம் கொண்டு வந்திருந்த இரத்தினங்களை அவரது ஊழியர்கள் மீது வீசினர் ||56||
அந்த ரத்தினங்களை பெற்றுக் கொண்ட பலரும் செல்வந்தர்கள் ஆனார்கள்; இவ்வாறு ஆடம்பரத்துடனும் கம்பீரத்துடனும் வரவேற்கப்பட்ட மன்னன் அர்ஜுனன் தன் அரண்மனையை அடைந்தான் ||57||
அதன் பிறகு மன்னனின் ஊர்வலத்தில் வந்த அனைவரையும் அமரச் செய்து ஆடைகளையும், ஆபரணங்களையும் பரிசாகக் கொடுத்தார்கள்; மன்னன் ஒவ்வொருவரையும் வாழ்த்தினார், மேலும் அங்கிருந்த கூட்டத்தினரின் தகுதியானவர்களை அழைத்து பாராட்டினார்; அதன் பிறகு அனைவருக்கும் விடை கொடுத்து அனுப்பினார் ||58||
ஏழு புகழ் பெற்ற தீவுகளைக் கொண்ட முழு பூமியும், அவரது சவாலற்ற பேரரசின் பரந்த ராஜ்ஜியமாக இருந்தது; ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் கட்டளைகளுக்கு ஏற்ப கடமைகளை செய்தவாறு ராஜ்யத்தை தானே வெற்றிகரமாக நிர்வாகித்தார் ||59||
அவர் பல்வேறு வடிவங்களை எடுக்கும் நுட்பமான திறனைக் கொண்டிருந்தார் என்பதினால் அதை பயன்படுத்தி அவர் ராஜ்யத்தின் பல இடங்களுக்கும் பயணம் செய்து, தனது ராஜ்ஜியத்தில் என்ன நடக்கிறது என்பதை நேரடியாக கண்காணித்து வந்தார்; அவர் சந்தித்த மக்களிடமும் விசாரணைகள் மேற்கொண்டார் ||60||
அவர் தடை இல்லாமல் அனைத்து இடங்களுக்கும் சென்று கொண்டு இருந்தார்; அவரது பயணங்கள் காற்றின் வேகத்துடன் ஒப்பிடப்பட்டன; அவரது கால்கள் சோர்வடையாமல் அனைத்து இடங்களையும் சென்றடைந்தன ||61||
தமது ஆத்மாவை உணர்ந்திருந்த மன்னன் அர்ஜுனன், பத்தாயிரம் வேத யாகங்களை நடத்த ஏற்பாடு செய்தார்; அனைத்து அர்ச்சகர்களும் சாஸ்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாகவும் ஞானிகளாகவும் இருந்தனர்; அவர் அந்தச் யாகங்களின் பலன்கள் அனைத்தையுமே அத்ரி முனிவரின் தெய்வீக மகனுக்கு அர்ப்பணித்தார் ||62||
பீடம் தங்கத்தால் செய்யப்பட்டு இருந்தது; பந்தலும் சுற்றியுள்ள கட்டமைப்புகள் தங்க முலாம் பூசப்பட்டிருந்தன; பல தெய்வங்கள் அத்தகைய யாகங்களில் நேரில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர்; இந்த நிகழ்வுகள் அனைத்துமே மிகுந்த ஆடம்பரத்துடன் நடைபெற்றன||63||
தத்தமது துணைவியர்களுடன், கண்களை பறிக்கும் தேவலோக ஆபரணங்களை அணிந்து கொண்டு, தத்தமது தேவ வாகனங்களில் வந்திறங்கிய தேவலோகத்தினர், மன்னன் அர்ஜுனனை கௌரவிக்கும் வகையில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்||64||
தேவ கன்னியர்கள் நடனமாடினர்; கந்தர்வ இசைக் கலைஞர்கள் தாளத்தோடு பாடினர்; கற்றறிந்த பிராமணர்கள் வேத நூல்களை ஓதினர், திருமணமான மகிழ்ச்சியான பெண்கள் அர்ஜுனனின் புகழை மன நிறைவுடன் பாடினர்||65||
தெய்வங்கள் கேட்ட அனைத்தும் பீடத்தில் சமர்ப்பிக்கப்பட்டன; யாகங்களில் கலந்து கொண்டு சடங்கை வெற்றிகரமாக செய்து கொடுத்த அனைத்து பிராமணர்களும் கற்றறிந்தவர்களாக இருந்தனர்; எந்தவொரு செயலையும் தவற விடாமல் அவர்கள் சடங்கை முறையாகச் செய்தனர்; அர்ஜுனன் வேத யாகங்களை இவ்வாறு நல்ல முறையில் செய்தான் ||66||
பிராமணர்களுக்கு நிலமும் தங்கமும், பணமும் உணவும் தானமாக தரப்பட்டன; திருமணம் செய்து கொள்ள விரும்பியவர்கள் நல்ல ஜோடிகளாக திருமணம் செய்து வைக்கப்பட்டார்கள்; இதன் விளைவாக கற்றறிந்த சமூகம் பெரும் மகிழ்ச்சி அடைந்தது, ஒவ்வொரு சடங்கின் முடிவிலும் இனிப்பு பதார்த்தங்கள் வழங்கப்பட்டன, சிறப்பான உணவு வகைகள் வழங்கப்பட்டன||67||
நிகழ்வு முடிந்த பிறகு பிராமணர்கள் தாங்கள் விரும்பியதை தட்ஷணையாக எடுத்துக் கொள்ள அரச கருவூலங்கள் திறந்து வைக்கப்பட்டன; ஆயினும் கருவூலம் ஒருபோதும் காலியாகவோ அல்லது பற்றாக் குறையாகவோ காணப்படவில்லை; அந்த நிகழ்வு புரோகிதர்களின் நேர்மையையும் மன்னன் அர்ஜுனனின் யோக சக்தியையும் வெளிப்படுத்தியது ||68||
பெருமளவு பால் சுரந்த பசுக்கள் அவற்றின் கன்றுகளோடு தானம் அளிக்கப்பட்டன; அந்த பசுக்களின் தலையில் இருந்த கொம்புகள் வெள்ளியினால் செய்யப்பட்ட கவசத்தை அணிந்திருந்தன; செழுமையாக அலங்கரிக்கப்பட்ட அந்த பசுக்கள் , தூய அந்தணர்களுக்கு வழங்கப்பட்டன ||69||
ஒரு மா வீர மன்னருக்குரிய தர்மத்திற்கு ஏற்ப அர்ஜுனன் தன் அரசை ஆட்சி செய்தான்; அவனது நாட்டில் எவரும் அகால மரணமடையவில்லை; எவ்விதமான பயங்கரமான இயற்கை சீற்றங்களும் ஏற்படவில்லை; பஞ்சம் என்பதே நாட்டில் காணப்படாமல் இருந்தது ||70||
மழைப் பொழிவு அதிகமாக இருந்தது; பருவத்திற்கு ஏற்றவாறு தானியங்கள் சிறந்த வளர்ச்சியுடன் காணப்பட்டன; மக்கள் நேர்மையாக இருந்தார்கள்; அத்தகைய ஒரு அரசனைப் பெற்றதற்கு நன்றியுடனும் இருந்தனர்; ஆட்சியாளர் மீதான அவர்களின் மதிப்பு பாரபட்சமற்றதாகவும் நீடித்ததாகவும் இருந்தது’ ||71||
அவனது ராஜ்ஜியத்தில் எந்தப் பெண்ணும் மலடியாய்க் காணப்படவில்லை; பூத்துக் குலுங்காத மரங்களோ கொடிகளோ கூட இல்லை, ஒவ்வொன்றும் அதன் சொந்த மலர்களையும் பழங்களையும் தாங்கி நின்றன; மன்னன் அர்ஜுனன் ஆண்ட நாட்டில் ஒரு விதவை கூட காணப்படவில்லை; கொள்ளையர்கள் அல்லது திருடர்கள் பற்றிய பயம் என்ற எண்ணமே இல்லை’ ||72||
‘பிளேக் நோய் எங்கும் பரவவில்லை அல்லது எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை; யாரும் தீய செயல்களில் ஈடுபடவில்லை; பக்தி மற்றும் தர்ம நெறி முறைகளும் கடல் அலை போல எழுந்தவண்ணம் இருந்தது; மன்னன் கார்த்தவீரிய அர்ஜுனனின் ஆட்சி மக்களால் போற்றப்பட்டது ||73||
வாள், சக்கரம், வில் மற்றும் அம்பு ஆகியவற்றை ஏந்திக் கொண்டு, பல வடிவங்களை எடுத்து, தான் விரும்பிய இடங்களுக்கு மன்னன் அர்ஜுனன் செல்வான்; அவன் ஏழு தீவுகளையும் விழிப்புடன் கண்காணித்தபடி இருந்தான் ||74||
அவர் விரும்பிய இடத்திற்கெல்லாம் செல்ல அவரது தேருக்கு (Chariot) அதிகாரம் இருந்தது; அவர் பூமியின் அனைத்து இடங்களிலும் சுற்றித் திரிவார்; அந்த வாகனத்தில் ஏறும் போது அவர் கம்பீரமாகத் தோன்றினார், மேலும் தனது ராஜ்ஜியத்தை தானே நேரடியாக ஆய்வு செய்து கொண்டு இருந்தார் ||75||
எங்கேயாவது திருட்டு நடந்தால் அவரே நேரடியாக அங்கு சென்று ராஜாங்கத்தினர் பிடித்து வைத்துள்ள குற்றவாளியைத் தண்டிப்பார்; குற்றவாளி குற்றத்தில் ஈடுபட்டு உள்ளான் எனக் கண்டறியப்பட்டால் அவன் கடுமையாக தண்டிக்கப்படுவான்; அரிதாக நீதிமான் என்று அழைக்கப்பட்ட அரசன் மரண தண்டனை கூட சிலருக்கு வழங்கினான்||76||
கீழ்த்தரமானவர்கள் திருந்தி வாழ வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு கல்வி அறிவு தரப்பட்டது; பண்பாடுடையவர்கள் பாதுகாக்கப் பட்டனர்; தம்மோடு பேசும் மக்களின் மன நிலை என்ன என்பதை அறிந்திடும் ஆற்றல் அவருக்கு இருந்தது; அதனால் அவர்களுடைய உண்மையான நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை ||77||
நிரபராதிகள் ஒருபோதும் தண்டிக்கப்படவில்லை; குற்றவாளிகள் கூட சாஸ்திர நெறி முறைகளின் அடிப்படையிலேயே தான் தண்டிக்கப் பட்டனர்; அவர் கோபத்திற்கு ஒருபோதும் அடி பணியவில்லை; தவறு செய்யாத எவரையும் அடிக்கவில்லை; பற்றற்ற நிலையில் இருந்ததினால் அவர் உள்ளத்தில் என்றும் சிவபெருமானுடன் (ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் இன்னொரு முகம்) இணைந்து இருந்தார் ||78||
எவர் மீதாவது எந்த வகையிலான அவதூறுகளைக் கூறி அவனது மனதில் விஷம் கலக்க முயன்றாலும், அவன் அதற்கு செவி சாய்த்தது இல்லை; அவன் மீதே குற்றத்தைச் சுமத்த முயன்றாலும் அதை அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்; வஞ்சகர்களினால் அந்த மன்னனை தங்கள் சூழ்ச்சி வலையில் சிக்க வைக்க முடியவில்லை ||79||
தகுதியுடையோரை அவர் பெருமளவில் மதித்தார்; ஞானம் வாய்ந்த அந்தண ஆசிரியர்களைப் பகிரங்கமாகப் போற்றி வணங்கினார்; அந்த ஆசிரியர்களைப் பூமியில் வாழும் தெய்வங்களாகவே கருதிக் கௌரவித்தார்; மேலும் அவர்களுக்கு நிறைய செல்வங்களையும் ஆடைகளையும் பரிசளித்தார்||80||
இத்தகைய சிறப்புகளை பெற்று இருந்த மன்னன் அர்ஜுனன் ஒரு ‘ஜீவன்முக்தன்’ (வாழும் போதே ஞானம் பெற்றவர்) எனும் நிலையில் நின்றவாறு ஆட்சி செய்தார்; ஆழ்ந்த பற்றற்ற நிலையுடன் இருந்தவாறு தன் அரியணையை அலங்கரித்தார்; ஐம்புல இச்சைகளுக்கு ஒரு போதும் அடி பணியவில்லை; அவரது மனம் எப்போதும் தெய்வமான ஸ்ரீமத் தத்தரிடம் ஒன்றியிருந்தது ||81||
ஒரு நாள் அவர் வெளியே உலாவிக் கொண்டிருந்தபோது, கர்கோடகன் எனும் தெய்வ நாகத்தின் புதல்வர்கள் சிலர் தீய செயல்களில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார்; உடனே அவர் விரைந்து சென்று அவர்களைத் தடுக்க முயன்றார்||82||
இறுதியில் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு பெரிய போர் மூண்டது; அர்ஜுனனின் அம்புகளால் அந்தத் தெய்வ நாகப் புதல்வர்கள் அனைவரும் காயமுற்றனர்; அது மட்டும் அல்லாமல் அவர்கள் சிறை பிடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டனர்; அவர்களின் செழிப்பான ராஜ்ஜியம் இனி அவர்களுக்கே சொந்தமில்லாததாயிற்று ||83||
பின்னர் அர்ஜுனன், நர்மதைக் கரையில் ஒரு புதிய நகரை நிர்மாணித்த பின்னர் ஆயிரக்கணக்கான தனது மனைவிகளுடன் அங்கு சென்றான்; ஆயிரக்கணக்கான தன் மனைவிகள் சூழ புனித நர்மதை நதியின் நீரில் இறங்கி மகிழ்ந்து விளையாடினர்||84||
பின்னர் அவர் தன் ஆயிரம் கரங்களைப் பயன்படுத்தி, நர்மதை நதியின் குறுக்கே அவற்றை வைத்துக் கொண்டு ஒரு அணைபோல நீரை தடுத்து நிறுத்த, அதன் விளைவாக, நதியின் நீர் ஓட்டம் மேற்கிலிருந்து கிழக்காகத் திசை மாறிப் பாய்ந்தது; அவரோ தொடர்ந்து தன் நீர் விளையாட்டுகளை ரசித்து மகிழ்ந்தார் ||85||
அன்று அர்ஜுனனின் திருமேனியை, கழுத்திலிருந்து பாதம் வரை நீண்டிருந்த ஓர் அழகிய மாலை அலங்கரித்தது; தன் மனைவியர் தன்னைச் சுற்றி வட்டமிட்டு நிற்க, அவர் அவர்களுடன் இணைந்து தொடர்ந்து களித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்||86||
அந்தப் பகுதியின் வழியாகத் தங்கள் விமானங்களில் பறந்து சென்ற தேவர்கள், அர்ஜுனனின் அந்த நதி நீர் விளையாட்டைக் கண்டு வியந்து நின்றனர்; பல தேவ மாதர்களின் ஆடைகள் தாமாகவே நழுவி நதியில் விழுந்தன; அர்ஜுனன் தன் மனைவியருடன் களித்து விளையாடுவதைக் கண்ட தேவ கன்னியர், தங்களை மறந்து மெய் மறந்து நின்றனர் ||87||
நர்மதை நதி தேவியின் கணவனான மேற்குப் பெருங் கடலும் (நர்மதையின் நீர் இறுதியில் கடலில் கலக்கிறது), அர்ஜுன மன்னனின் அந்த நதி நீர் விளையாட்டைக் கண்டது; ஆத்திரத்தினால் சற்றே தன் நிலை மறந்த சிந்தனையுடன், அது தன் சீற்றத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது||88||
திடீரென்று மன்னன் அர்ஜுனன் மற்றும் அவருடன் இருந்தவர்களும் மீது, பிரம்மாண்டமான அலைகள் வந்து மோதியதை அவர் உணர்ந்தார்; அமைதியாக இருந்த நீரில் திடீரென ஏற்பட்ட அந்தப் பெரும் தாக்குதலைக் கண்ட அர்ஜுனன் ‘என்ன நடக்கிறது?’ என்று வியந்தவாறே தனக்குள் சிரித்துக் கொண்டார் ||89||
மேற்குக் கடல் அதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தில் தன்னையும் தன் குழுவினரையும் அநாகரிகமாகத் தாக்கத் தொடங்கி உள்ளது என்பதை புரிந்து கொண்டான்; எனவே அர்ஜுனன் அவனுக்கு இருந்த நீரை மடக்கும் வலிமையான சக்தியினால் அதைக் கட்டுப்படுத்தத் தொடங்கினான்; அதனால் அப்பகுதியில் பல இடங்களில் அதன் நீரை அமைதியாக்கினான் ||90||
அதன்பிறகு மன்னன் அர்ஜுனன், தனது ஆயிரம் கைகளை உயர்த்தி, அந்த நீருக்கு ஒரே நேரத்தில் ஒரு அடியைக் கொடுத்தான், பின்னர் அந்தக் கடலில் பலமாக மூழ்கினான் ||91||
தான் அடக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதைக் கண்டதும், கடல் விரைவாகத் தப்பியது; இருப்பினும் அந்தப் போரில் பல கடல் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் இறந்தன, மேலும் பாதாள உலகங்கள் கூட அச்சத்தால் சற்று நடுங்கின||92||
மன்னன் அர்ஜுனனை அமைதிப்படுத்த மேற்குக் கடல் மனித உருவம் எடுத்து, ஒரு அழகான தட்டில் விலை மதிப்பற்ற ஆபரணங்களுடன் அவனைச் சந்திக்க வந்தது; பின்னர் அது மன்னனுக்கு உரிய மரியாதையைச் செலுத்தி, தனக்கும் தன் கடலுக்குள் உள்ள உயிர்களுக்கும் பாதுகாப்பைக் கோரியது||93||
தன்னிடம் தஞ்சம் அடைபவர்கள் அனைவரையும் பாதுகாப்பது தனது கடமை என்று மன்னன் அர்ஜுனன் எப்போதும் கடைப்பிடித்த ஒரு சபதமாகும்; இது உலகம் முழுவதும் இருந்த நேர்மையான மன்னர்களின் ஒரு நடை முறையாகும். நீதிமான்களுக்கு ஏற்றவாறு, அர்ஜுனனும் அந்த விருந்தினரை மன்னித்து, அவர் நாடிய பாதுகாப்பை வழங்கினான்||94||
உள்ளுக்குள்ளேயே ஏற்கனவே விழிப்புணர்வுடன் கூடிய அத்வைத நிலையில் (பேதமற்ற நிலையில்) திளைத்திருந்த அர்ஜுனன், ஒருபோதும் தனது புலன் இச்சைகளை நாடியதில்லை; அப்படியிருக்க, பெண்களின் சஹவாசம் அவனை எவ்விதம் பாதிக்க முடியும்?; ஆனாலும் விதியே அவனை இங்கும் அங்கும் இழுத்துச் சென்றதே தவிர, அர்ஜுனன் எப்போதோ வெறும் உடல் சார்ந்த அடையாளத்தைக் கடந்து உயர்ந்த நிலையை அடைந்திருந்தான் ||95||
அவனது நிலை எப்படி இருந்தது என்றால் ஆண்டு முழுவதும் நீரால் நிரம்பி வழியும் ஒரு பெருங் கடலைப் போன்றது; ஆறுகள் வந்து தன்னுடன் கலக்க வேண்டும் என்ற ஆசை கடலுக்கு எப்போதுமே இருந்தது இல்லை; ஆயினும், ஆறுகள் வந்து கடலில் கலப்பதை அந்த கடல் ஒருபோதும் தடுப்பதில்லை; ஏனெனில், அதுவும் விதியின் மற்றொரு வடிவமே என்பதை அது நன்கு உணர்ந்திருக்கிறது||96||
அதைப் போலவே, உயிருடன் இருக்கும்போதே முக்தியை அடைந்தவர்கள் சிற்றின்ப ஆசைகளிலிருந்து விடுபட்டவர்களாவர்; அவர்கள் அனுபவிக்கும் நிகழ்வுகள் அனைத்தும் விதியினாலேயே அவர்களுக்கு வந்து சேர்கின்றன; அந்த நிகழ்வுகளில் புலன் இச்சைகளின் ஈடுபாடுகள் இருந்திருந்தாலும், உண்மையான விடுதலையை உணர்ந்தவர்கள் ஒரு போதும் அவற்றினால் சலனமடைவதில்லை; அவர்களின் பற்றற்ற நிலை எப்போதும் மாறாமல் நிலைத்திருக்கும் ||97||
அவர்கள் ஒரு கல்லைப் போல அசைவற்று செயலற்று இருக்க வேண்டும் என்று சிலர் கூறுவதுண்டு; ஆனால், உண்மையான ஞான விடுதலை பெற்றவர்களின் வாழ்க்கை நடை முறையில் அது ஒரு பகுதியல்ல; உண்மையான விடுதலை எத்தகையது என்பதை அறியாதவர்களே அவ்வாறு கூறுகின்றனர்; வேதங்களின் தத்துவங்களை அவர்கள் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்||98||
அளவற்ற வேத சாஸ்திர ஞானம் என்பது ஒரு உண்மையான ஆன்மீக சாதகனிடம் முழுமையாக இருக்கும்போது, அறியாமை மற்றும் அதன் விளைவுகள் அனைத்தும் அவர்களிடம் இருந்து முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன; அதுவே வேத புனித நூல்களின் முதன்மையான நெறியாகும்||99||
விடுதலையை அடைந்த துறவிகள் எவ்விதத்திலாவது தங்கள் ஞானத்தை இழந்தார்கள் என்பதற்கு வரலாற்றில் எவ்விதச் சான்றும் கிடையாது; சுய-உணர்தலும் (Self-Realization), அதன் விளைவாக ஏற்படும் ஆன்மீக நிலையும், வெளிப் பார்வைக்கு முரண்படுவது போலத் தோன்றும்வெளிப்புற ச் செயல்கள் எத்தனை இருந்தாலும், அவை உண்மையாக இருக்க முடியாது; அவர்களது ஆத்ம ஞான நிலை மாறாமல் அப்படியே நிலைத்திருக்கின்றன||100||
ஆன்மீக ஞானத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளவர்கள் கூட விதியால் நியாய பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட நிகழ்வுகளை அழித்துக் கொள்ள முடியாது; அத்தகைய ஞானத்தின் முதன்மையான நோக்கம் என்னவென்றால், ஒரு சாதகனின் உண்மையான சுய வடிவத்தை மறைத்து நிற்கும் திரைகளை விலக்கி, அவற்றைச் அழிப்பதே ஆகும் ||101||
ஆகவே, ஆத்ம ஞானத்தை அடைந்து விட்டவர்கள், இறைவாகத்தின் தன்மையை நன்கு உணர்ந்தவர்களாக, சமூகத்தில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள்; தற்போதைய பிறவிக்குக் காரணமாக அமைந்த ஊழ் வினை பலன்களை அனுபவிப்பதற்காகவும், பிறர் தம்மை பின்பற்றுவதற்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்வதற்காகவுமே அவர்கள் அவ்வாறு வாழ்கின்றனர்; அன்றாட வாழ்க்கையில் அவர்களுக்கு தமது பலவிதமான ஆசைகளை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், அதனால் அவர்கள் எவ்விதமான மன உளைச்சலுக்கோ அல்லது குற்றவுணர்விற்கோ ஆளாவதில்லை ||102||
அறியாமையில் வாழ்பவர்களுக்கும் ஞானிகளுக்கும் தங்கள் உடலைப் பராமரிக்க உண்ண வேண்டியிருந்தாலும், அவர்களை வேறுபடுத்திக் காட்டுவது எது?; அதைப் பற்றி வேதங்கள் என்ன சொல்கின்றன என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்||103||
ஞானிகள் எப்போதும் உள்ளிருக்கும் ஆத்மா வை உணர்ந்து அதில் நிலைத்திருக்கிறார்கள்; விதியால் நிர்ணயிக்கப்பட்ட புலன் தொடர்பை அவர்கள் கனவுகளைப் போலக் கருதுகிறார்கள்; அதனால் அவர்களின் உள்ளம் தூய நிலை பாதிக்கப்படாமல் இருக்கிறது; ஆத்மா அல்லாத அனைத்தின் மீதான அவர்களின் பற்றின்மை மாறாமல் அப்படியேதான் இருக்கும்||104||
அவர்களின் புலன் இச்சை தொடர்புகளின் போது, அவர்கள் மீண்டும் தங்கள் உடலுடன் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு, தாங்கள் விரைவில் இறந்து விடுவோம் என்று உணர்ந்தாலும் அவர்கள் உணர்வு பூர்வமாக பெற்று இருந்த ஞானம் பாதிக்கப்படாமல் அப்படியேதான் இருக்கும்; புலன்களுடன் அடிமையாவது அவர்களுக்கு ஊழ்வினை பலனால் ஏற்படுகின்றது; அது தற்காலிகமானது; அதனால் அவர்கள் உள்ளம் களங்கப்படுவது இல்லை ||105|| ‘
விருப்பு வெறுப்பு அல்லது அன்பு ஆகியவற்றால் ஏற்படும் உந்துதலுக்கு அடிபணிவது போன்றவை அறியாமையால் கட்டுப்பட்டு உள்ளதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்; ஆன்மீக ஞானத்தால் எல்லா அறியாமையும் தானாகவே துரத்தப்பட்டு விட்டபோது , அத்தகைய சுதந்திரமான உயிர்களுக்கு எப்படி துக்கமோ மன வருத்தமோ ஏற்பட முடியும்? ||106||
இன்னும் மாயையில் சிக்கியிருப்பவர்கள் இந்த சாராம்சத்தை அறியாதவர்களாக இருக்கிறார்கள்; அவர்களின் வாழ்க்கை, அன்பு அல்லது வெறுப்பின் காரணமாக இங்குமங்கும் தள்ளப்படுவதற்கும், துக்கம், சோகம் மற்றும் அச்சங்களுக்குத் தொடர்ந்து அடி பணிவதற்கும் எடுத்துக் காட்டுகளாகும்; அதனால் அவர்கள் துக்கத்தாலும் துன்பங்களிலும் வருந்துகிறார்கள்||107||
செயல்களைப் பொறுத்தவரை, ஞானிகளுக்கும் ஞானமற்றவர்களுக்கும் உள்ள சிறப்பு என்னவென்றால், ஞானிகளின் செயல்கள் சில சமயங்களில் பிரகாசமாக அல்லது இருட்டாகவே தோன்றினாலும், தனக்கு விதிக்கப்பட்டதை அனுபவித்த அர்ஜுனனைப் போல, அவர்கள் உள்ளுக்குள் பற்றற்றவர்களாகவும் சமநிலையுடன் இருக்கிறார்கள்||108||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் பதினாறாவது(16) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் பதினாறாவது (16) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108+1623=1731
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
.…..இதோடு பாகம் -5, அத்தியாயம் -16 முடிவடைந்தது
பாகம் -6, அத்தியாயம் -17 தொடர்கின்றது