COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பகுதி 5: சமாதி நிலை
அத்தியாயம் 15
சமாதி நிலை; மன்னனுக்கு அறிவுரை
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
தெய்வமான ஸ்ரீமத் தத்தரிடம் இருந்து யோக மார்க்கத்தை பற்றிக் கேட்டறிந்த மன்னன் அர்ஜுனன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்; பின்னர், அவருக்கு உரிய மரியாதையுடன் வணக்கத்தைச் செலுத்தி விட்டு, தனது மீதி ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் தன் குருவிடம் கேட்டான் ||1||
‘ஓ மதிப்பிற்குரிய குருதேவா, எனக்கு அருள் புரியும் நோக்கில் தாங்கள் யோக மார்க்கத்தை விரிவாக விளக்கினீர்கள்; அவற்றைக் கேட்டு எனது உள்ளம் பெருமளவில் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது; ஆயினும், தங்களிடம் நான் கேட்க விரும்பும் மற்றொரு கேள்வியும் உள்ளது ||2||
யோக மார்க்கத்தின் மூலமாகவே ஒருவன் மெய் ஞானத்தை அடைய முடியும் என்றால், தாங்கள் விரிவாக எடுத்துரைத்த வேத நூல்களில் கூறப்பட்டுள்ள நீதி நெறி முறைகளை எதற்கு தெரிந்து கொள்ள வேண்டும்; குருவே நீங்கள்தான் எனது இந்த சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும்; மனதிற்குள் எழும் மனக் குழப்பங்களை போக்கிக் கொள்ள, நீங்கள் மட்டுமே எங்களுக்குள்ள ஒரே புகலிடமாக திகழ்கிறீர்கள்||3||
மன்னன் அர்ஜுனனின் அந்த கேள்வியைக் கேட்டதும், அத்ரி முனிவரின் திவ்யப் புதல்வரான ஸ்ரீமத் தத்தர் மகிழ்ச்சியுடன் பின்வருமாறு பதிலளித்தார் ‘அர்ஜுனா, உனது சந்தேகத்தை தாராளமாக கேள்; தான் எதைத் தேடுகிறோம், அதன் தன்மை என்ன என்பதை எல்லாம் ஒரு சாதகன் தெரிந்து கொள்ளவில்லை என்றால் வெறும் யோகப் பயிற்சியின் மூலமாக மட்டுமே அவனால் நிர்வாண நிலையை அடைய முடியாது ||4||
பிராணாயாமம் பயிற்சியின் ஒரு அங்கமான ஸ்வாசக் கட்டுப்பாட்டு வழிமுறை மூலம், ஒருவன் தன் மனதை முதலில் ஒரு முகப்படுத்தி நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்; அதன் பிறகு, அமைதியாக அமர்ந்து கொண்டு வேத நூல்களில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளை குறித்துத் தன் குரு வழங்கிய போதனைகளை, ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்||5||
வேத நூல்களில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளை குறித்து எவ்வித ஐயமுமின்றித் தெளிவாகப் புரிந்து கொண்ட பிறகு, பரமாத்மாவின் மீது தன் முழுமையான சிந்தனையை வைத்து தியானிக்க வேண்டும்; அவ்வாறு தியானிக்கும்போதே, மனதை சிதற விடாமல் ஒரே மையத்தில் குவித்து வைத்துக் கொண்டு, கவனத்துடனும் தியானிக்க வேண்டும் ||6||
தியானிப்பவர் (சாதகன்), தியானச் செயல்முறை மற்றும் தியானிக்கப்படும் பொருள் என்ற வேறுபாடுகள் மறையாமல், இரண்டற்ற பிரம்மத்தின் மீது நிலைத்திருக்கும் உயர்நிலை சமாதி ஆகும் ‘சவிகல்ப சமாதி’ என்று அழைக்கப்படுகிறது; அதாவது, மூன்றும் தொடர்ந்து நிலைத்திருக்கும் நிலையே சவிகல்ப சமாதி ஆகும்; அதன் பிறகு, அத்வைத (இரண்டற்ற) நிலையை உணர்வதற்குத் தடையாக இருக்கும் இம் மூன்றையும் முழுமையாகக் கைவிடும் நோக்கில் ஆழ்ந்த சிந்தனையை மேற்கொள்ள வேண்டும்; அவ்வாறு செய்வதன் மூலம், அந்தத் தனிப் பெரும் தெய்வ நிலையை (ஏகத்துவத்தை) அனுபவித்தறிய உதவும் அக எழுச்சியை ஒருவன் தன் உள்ளிருந்தே தூண்டிக் கொள்ள வேண்டும்||7||
பெயரும் உருவமும் கொண்ட அனைத்தும், நாம் தேடும் ‘ஏகத்துவத்தை’ (ஒற்றுமையை) உணர்வதற்குத் தடையாக அமையக்கூடும்; மாறாக, நிலையானதும், தூய்மையானதும், ஞான ஒளியால் பிரகாசிப்பதும் ஆகிய பரமாத்மனை தியானிப்பதே, ‘அத்வைத’ (இரண்டற்ற) ஒற்றுமையை உணர்வதற்கு வழி வகுப்பதாகும் ||8||
எதைச் செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை தியான நிலையின் மூலம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்; தெய்வத்திற்கு உரிய தன்மைகள் என்னென்ன என்பவற்றை வேத நூல்கள் எடுத்துக் காட்டுகின்றன; அவை அனைத்தையும் ஆழமாக சிந்தனை செய்து பார்ப்பதின் மூலம் ஒருவர் அச்சமற்ற நிலையை அடைகின்றார்||9||
மனிதப் புலன்களால் உணரப்படும் மணம், சுவை, வடிவம் அல்லது மனம் உருவாக்கும் எண்ணங்கள், சொற்கள் எதற்கும் கட்டுப்படாதது; பிறப்பு, இறப்பு, தேய்மானம் போன்ற எந்த மாற்றங்களும் இல்லாததால் அந்த பரம்பொருள் நித்தியமானது ; அச்சமற்றதும் எல்லையற்றதுமான அந்த இயல்பே அத்வைத வேதாந்தத்தின் மிக உயர்ந்த தத்துவ சாரமாகும்||10||
கண்களால் எளிதில் காண இயலாததும், இரத்த உறவுகள் மற்றும் வம்சாவளிகளுக்கு அப்பாற்பட்டதும், சாதாரணக் கண் மற்றும் செவிப் புலன்களுக்கு எட்டாததும், எவ்விதத் தீங்கிற்கும் உட்படாததும், நம்மைப் போல சாதாரண உடல் உறுப்புகளைக் கொண்டிராததுமான அந்த பரம்பொருளை அல்லது ஆத்மாவை வரையறுக்கப் பயன்படுத்தும் மிக உயர்ந்த தத்துவ முறைதான் ‘நேதி, நேதி’ (Neti, Neti – இதுவல்ல, அதுவல்ல) என்பதாகும்||11||
முற்றிலும் தனித் தன்மையிலானது, தூய்மையானது, நிலையானது, ஞானம் நிறைந்தது, உண்மை, அறிவு மற்றும் எல்லையற்ற தன்மையின் முழு வடிவமாகத் திகழ்வது என்ற அனைத்தையும் அடக்கிக் கொண்டுள்ள ஆத்மா வே ‘பரப்பிரம்மம்’ என்று அழைக்கப்படுகிறது; அது எவ்விதக் குறையுமற்றது; உடல் கூற்றுகளுக்கு அப்பாற்பட்டது; ஆயினும், அதுவே இந்த பிரபஞ்சம் முழுவதையும் இயக்கிக் கொண்டுள்ளது ||12||
வேத மற்றும் புராண நூல்கள் பரமாத்மனைப் பற்றி விவரிப்பதன் நோக்கம், நம் மனதை ஒரு முகப் படுத்துவதற்காகத்தான்; எனவே, தியானத்தில் ஈடுபடும்போது எதன் மீது கவனம் செலுத்த வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான வழி காட்டுதல்களாக வேத நூல்களின் நெறிமுறைகள் அமைந்துள்ளன; நதி எப்படி தடையின்றி கடலை நோக்கிப் பாய்கிறதோ, அதுபோல உங்கள் எண்ணங்கள் எப்போதும் அந்தப் பரமாத்மனை நோக்கியே இருக்க வேண்டும் ||13||
வேதக் கோட்பாடுகளைக் கற்றல் மற்றும் உள்வாங்குதல் என்பது ஒரு முறையான செயல் முறையாகும். இதில் ‘பாடத்தின் தெளிவு’ மற்றும் ‘தகுதியான மாணவர்’ ஆகிய இரு முக்கிய கூறுகள் பாரம்பரிய வழி முறைகளாக துணை நிற்கின்றன; பல நேரங்களில் வேத நூல்கள் நேரடிப் பொருளைத் தராமல், மறைமுகக் குறிப்புகள் மூலம் உண்மையை உணர்த்தும்; ஒருவன் தனது ஆழ்ந்த சிந்தனை மற்றும் தியானத்தின் மூலம் இந்த ஆன்மீகச் சாரத்தை தன் உள்ளத்தில் ஆழமாகப் பதித்துக் கொள்ள வேண்டும். ||14||
நீயாக இருப்பவனும், என் ஆத்மா வில் நான் உணரும் அந்தச் சாராம்சமும் என்னிலிருந்து வேறல்ல அதுவே, என்றும் ஆனந்த மயமான அத்வைத நிலைக்கு இருப்பிடமாய் விளங்கும் பரமாத்மன் என்றும் போற்றப்படுகிறது; இப் பிரபஞ்சம் முழுமைக்கும் அதிபதியாக விளங்கும் அந்த பரமாத்மனுடன் தன்னை இணைத்துக் கொள்ளக் கூடிய நிலையே மிக உயர்ந்த தத்துவச் சாரம் ஆகும்; ஆண் தன்மை கொண்டதாக கூறப்படும் ‘சிவன்’ எனப் பெரும்பாலும் அழைக்கப்படும் அந்தப் பரபிரும்மனில் இருந்து நான் வேறானவன் அல்ல||15||
ஒருவர் மேற் கூறிய முறையில் தியானிக்கும் போது, தியானிப்பவர் என்ற தன்னைப் பற்றிய உணர்வையும், தியானத்தின் செயல் முறையையும் இழக்கிறார்; மேலும், தமது முழுமையான மனதையும் தான் தியானிக்கும் பொருளின் வடிவத்தின் (Object of meditation) மீதே வைத்துக் கொண்டு, அந்த பொருளாகவே தன்னை மாற்றிக் கொண்டு விடுகின்றார்||16||
அந்த நிலை, யோக மரபுகளில் மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படும் நிர்விகல்ப சமாதி (Nirvikalpa Samadhi)* ஆகும்; இங்கு வேறுபாடுகள் மறைந்து, ஆத்ம ஞானம் மட்டுமே எஞ்சியிருக்கும், எனவே மும்மூர்த்தி தரிசனம் இங்கு இருப்பதில்லை; இது அறியாமை மற்றும் கற்பனையின் இருளை நீக்குகிறது; கர்ம வினைகள் அனைத்தும் எரிக்கப்படுவதால், துன்பங்கள் மற்றும் துரதிர்ஷ்டங்கள் நீங்குகின்றன; ஆழ்மனதில் உறங்கிக் கிடக்கும் ஆசைகளின் அடர்ந்த காடுகள், இந்த ஞான அக்கினியால் வேரோடு அழிக்கப்படுகின்றன.
{* நிர்விகல்ப சமாதி என்பது யோகக் கலையில் மனம் மற்றும் எண்ணங்கள் முற்றிலும் அடங்கி, அறிபவன் (ஜீவன்) மற்றும் அறியப்படும் பொருள் (பிரம்மம்) என்ற வேறுபாடின்றி, இறை நிலையான பிரம்மத்துடன் ஆத்மா இரண்டறக் கலக்கும் மிக உயர்ந்த தியான நிலையாகும்} ||17||
எங்கும் நிறைந்த, ஸ்வய ஒளி மிக்க, பிரகாசமான அந்த உணர்வில், ஒருவன் தெய்வீகத்தின் ஒளியை, காணும்போது எல்லைக்குட்பட்ட சிற்றறிவு, அந்த உணர்வில் கலக்கும்போது, அது எல்லையற்ற பேரின்பமாக உருமாறுகிறது ||18||
அத்தகைய ஞான உணர்வு உதயமாகும்போது, அந்த யோகி தன்னைப் பற்றியோ அல்லது தாம் எங்கு உள்ளோம் என்பதை பற்றியோ அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பார்; அவர் தன்னை அந்த நித்தியப் பேரறிவோடு ஒன்றானவராகவும், மாயையின் எந்த பிடியிலும் இல்லாதவராகவும், பரமாத்மனுடன் உறுதியாக இணைந்த நிலையில் உள்ளவராகவும் இருப்பதை உணர்வார் ||19||
தொடர் பயிற்சியின் மூலம், தான் தேடும் இலக்கோடு தன்னை ஒன்றிணைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட அந்த மனோ சக்தி, அறியாமையை அகற்றி, அசைவற்ற நித்தியப் பரமாத்மனோடு முழுமையாக ஒன்றி விடுகிறது; அது ஒருவனை அனைத்து விதமான புலன் சார்ந்த ஆசைகளிலிருந்தும், அவற்றின் செயல்பாடுகளிலிருந்தும் விலக்கி வைக்கிறது||20||
அறியாமையினால் தோன்றி, உள்ளுக்குள்ளேயே செயலற்று உறங்கிக் கொண்டிருக்கும், முளை விடாத சம்ஸ்கார வாசனைகளின் விதைகளும் அந்த நிலையில் விலகிச் சென்று விடும்; சத்-சித்-ஆனந்தமாகிய (இருப்பு-அறிவு-பேரின்பம்) முழு முதற் தன்மையையே தனது இயல்பாகக் கொண்டதும், சாஸ்திரங்களில் ‘பிரம்மம்’ என்று போற்றப்படுவதும், தூய்மையும், தனித்துவமும் வாய்ந்ததுமான, அந்தப் பரம்பொருள் மட்டுமே எஞ்சி நிற்கும் ||21||
ஸ்ரீமத் தத்தர் தொடர்ந்து கூறினார் ‘ அத்தகைய நிர்வாண நிலை கை கூடிய பிறகு, தூய அறிவு மயமான, அத்வைத (இரண்டற்ற) நிலை மட்டுமே எஞ்சி நிற்கும் என்று நீ நிச்சயம் நம்புவதை என்பதை நான் அறிவேன்; அந்த நிலையில் பரமாத்மனுடன் ஒன்றிணையும் நிலை முழுமை அடைகின்றது; அதன் விளைவாக, ஐம்புலன்கள் மூலமாக வெளிநோக்கிச் சிதறிக் கிடந்த மன ஆற்றல்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப் படுகின்றன; எண்ணங்கள், மனோ சக்திகள், தனி மனித உணர்வு (அகங்காரம்) அனைத்தும் அவனது மூலமாகிய ஆத்மாவிற்குள்ளேயே ஒடுங்கி அமைதி பெறுகின்றன ||22||
சேறும் சகதியும் நிறைந்த அசுத்தமான நீரில், நீரைத் தூய்மைப்படுத்தும் ஆற்றல் கொண்ட நசுக்கிய விதைகளை* போட்டதும் அதில் உள்ள இயற்கையான தாதுக்கள் நீரின் அசுத்தங்களை (தூசி, சேறு) ஒன்றாகத் திரட்டி அடியில் தங்கச் செய்கின்றன; இதனால் மேலே தெளிந்த நீர் கிடைக்கிறது; உலகியல் ஆசைகள் மற்றும் அறியாமை எனும் சேறு நிறைந்த மனதில், ஞானம் எனும் விதையை இடும் போது, தேவையற்ற எண்ணங்கள் விலகி மனம் தெளிவடையும்
{*இந்த உவமை தேற்றாங்கொட்டை (Strychnos potato rum) எனப்படும் விதையின் அல்லது படிகாரம் (Alum) என்பதின் செயல்பாட்டை விளக்குகிறது} ||23||
ஒரு மண் பானையோ அல்லது குடமோ உடைந்து போகும்போது, அந்த பானைக்குள் அடைபட்டிருந்த வெற்றிடம், பரந்த அந்தர வெளியோடு ஒன்றி விடுகிறது; அதே போலவே அறியாமை அதன் அனைத்து வேர்களோடும் முழுமையாக அகற்றப்படும்போது, ஒருவனது அனைத்து அடையாளங்களும், தன்மைகளும் அந்த ஒன்றிணைந்த நிலையில் கரைந்து மறைந்து விடுகின்றன||24||
பெரும்பாலான தவறான அடையாளப்படுத்தல்கள் அனைத்தும் அறியாமையின் விளைவுகளே ஆகும்; அந்த அறியாமையின் தாக்கத்தாலேயே உடலெடுத்துள்ள ஆத்மா , துன்பங்களை அனுபவிக்கிறது; அந்த அறியாமை எனும் திரை விலகும்போது, ஞானப் பேரொளி பிரகாசிக்கிறது; அப்போது அந்தச் ஜீவாத்மா, பரமாத்மாவோடு மீண்டும் ஒன்றிணைகிறது||25||
அர்ஜுனா, அறியாமை மற்றும் பொய்யான உலகியல் பற்றுக்களை மனம் மற்றும் புலன்கள் உணர்கின்றன என்றால், ஆத்மா அவற்றைக் கடந்து எவ்வாறு இருக்க முடியும் என்று நீ என்னைக் கேட்கலாம் ||26||
ஆத்மா (Self/Atman) என்பது புலன்கள் மற்றும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் கொண்ட அந்தக்கரணத்தாலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத, மிக நுட்பமான பேரொளி வடிவம்; எப்படி மற்ற அனைத்தையும் பார்க்கும் கண்களாலால் தன்னைத்தானே நேரடியாக பார்க்க முடியாதோ, அதுபோல ஆத்மா வை மனம் அறிய முடியாது; அத்தகைய ஆத்மா வைத் முழுமையாக அறிந்து விட்டதாக யாரால் தான் உறுதியாகக் கூற முடியும்? ||27||
உள்ளே இருக்கும் ஆத்மா , வழிகாட்டும் குரு, மற்றும் பிரபஞ்சத்தை இயக்கும் பரம்பொருள் ஆகிய மூன்றும் வெவ்வேறானவை அல்ல என்பதை உணர்ந்து கொள்; ஆயினும், அது அனைவராலும் அடைய முடியாத நிலையில் உள்ளது; அது, கண்ணால் காணும் இந்த உலகத்திலிருந்தும், இந்த உலகத்தைக் காணும் தனி மனிதனிடமிருந்தும் முற்றிலும் மாறுபட்டது; இந்தத் தத்துவமே அசைக்க முடியாத உண்மை ஆகும் என்பதை அறிந்து கொள் ||28||
ஆகவே, வேத சாஸ்திரங்கள் கூறும் ஒரு கருத்தை நன்றாக கவனி; நாம் நம்முடைய முகத்தை நேரடியாகக் காண இயலாது; அதைக் காண நமக்கு ஒரு கண்ணாடி தேவைப்படுகிறது; இந்த உண்மை அனைவருக்குமே நன்கு தெரிந்த ஒன்றாகும் ||29||
இப்போது ஒன்றை உணர்ந்து கொள்; அந்தக் கண்ணாடி என்பது ஒருவெளிப்புற ச் சாதனம் மட்டுமே; அது ஒரு உயிரற்ற பொருள் ஆகும்; அதனால் நமக்கு என்ன அறிவுரையை தர இயலும்?; ஆயினும், அந்தக் கண்ணாடியின் வாயிலாகவே நாம் நாம் யார் என்பதைப் பார்க்கிறோம் அல்லவா?; அதே நியதிதான் இங்கும் பொருந்துகிறது என்பதைப் புரிந்துகொள் ||30||
ஒருவேளை அந்தக் கண்ணாடி அழுக்காக இருந்தால், அதில் தெரியும் நம் முகமும் அழுக்காகவே தெரியும்; அதேபோல, அந்தக் கண்ணாடி உடைந்திருந்தால், அதில் தெரியும் நம் முகமும் உடைந்ததைப் போலவே காட்சியளிக்கும் ||31||
நாம் அழுக்கடைந்த கண்ணாடியைச் சுத்தம் செய்தால், அதில் தெரியும் நம் முகமும் தூய்மையாகவே காட்சியளிக்கும்; அதே போன்று, நம்முடைய அறிவாற்றல் தூய்மைப் படுத்தப் படும்போது மட்டுமே, அது தனக்குள்ளேயே நிலையாய் உள்ள, அதே அளவிலான தூய்மை வாய்ந்த அந்த ஆத்மாவுடன் தொடர்பு கொள்ள இயலும் ||32||
கண்ணாடியின் மீது படிந்திருக்கும் அழுக்கு மற்றும் தூசியைப் போலவே, நம்முடைய புத்தியும் விருப்பு-வெறுப்பு, பிடித்தது -பிடிக்காதது போன்ற மன தூசிகளினால் மூடப்பட்டிருக்கிறது; வேத சாஸ்திரங்கள் வழங்கும் ஞானம் நம் சிந்தனையில் உள்ள முரண்பாடுகளைக் களைந்து தூய்மைப் படுத்துகின்றது ; இந்தத் தூய்மை ஏற்படும்போதுதான், இன்ப-துன்பம் அல்லது வெற்றி-தோல்வி ஆகிய இரண்டையும் சமமாகப் பார்க்கும் சமத்துவ நிலை உண்டாகிறது ||33||
தூய்மைப்படுத்தப்பட்ட புத்தி அதாவது சுத்தமான அறிவாற்றல் எதை பிரதிபலிக்கிறதோ, அந்த உயிர் சக்தியே ஜீவாத்மா என்று அழைக்கப்படுகிறது; மேலும், புலன்கள் மற்றும் மனதின் ஒருங்கிணைப்பு மூலம் இந்த ஆத்மா வை அறிய இயலும்||34||
இரவு நேரத்தில் ஒரு குடத்தைத் தேடிக் கண்டு பிடிக்க, நமக்குக் கண்களும், ஒளியும் தேவைப்படுகின்றன அல்லவா? ஆனால், நாம் தேடுவது வெறும் விளக்கு ஒளியை மட்டுமே என்றால், அதைக் காண்பதற்கு நம்முடைய கண்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும்||35||
அது போலவே, ஒருவன் தன்னைத் தானே அறிந்து கொள்ள, அறிவின் ஆற்றல்களே போதுமானதாக இருக்க வேண்டும்; ஆத்மாவின் தூய அறிவு நிலையானது. அது உள்ளிருந்து வெளிப்பட்டு,வெளிப்புற உலகப் பொருட்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றலாக விரிவடையத் துவங்கும்; மேலும் இந்த அறிவு விரிவடையும் போது, அது தன்னுள்ளே மட்டும் சுருங்காமல், இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களிலும் ஊடுருவி நிற்கிறது||36||
ஆத்ம ஞானம் (தன்னை உணர்தல்) என்பது புலன்கள் மற்றும் மனம் சார்ந்த சாதாரண அறிவுப் பரிமாற்றங்களுக்கு அப்பாற்பட்டது ; அதை அறிவாற்றல் மூலம் மட்டுமே உணர முடியும் என்ற தத்துவத்தை உள்ளிருக்கும் ஆத்மாவும் ஏற்றுக் கொள்கிறது; ஆத்மா புலன் தொடர்புகளுக்கு அப்பால் நின்று, உடலையும் மனதையும் சாட்சியாக இருந்து கவனிப்பதாகும் என்று சாஸ்திரங்கள் வெளிப்படுத்துகின்றன ||37||
எரியும் ஒரு விளக்கைக் காண மற்றொரு விளக்கைப் பயன்படுத்துவது எப்படி மூடத்தனமானதோ, அதை போலவேதான், நம் அனைவரின் உள்ளே இருக்கும் ஒளி மயமான ஆத்மாவைக் காண வேறு வழி முறைகள் தேவையில்லை; ஏனென்றால், ஆத்மா என்பது தானே ஒளிரும் தன்மை கொண்டது, அது ஏற்கனவே நம்முள் இருக்கிறது; மனதை அமைதிப்படுத்தி, அறியாமையை விலக்கிக் கொண்டால் அதைக் காண முடியும் ||38||
நமக்குள்ளிருக்கும் ஆத்மா வுடன் தொடர்பு கொள்வதைத் தடுக்கும் ஒரே திரை சீலை அறியாமைதான்; அதை தூய்மையான அறிவாற்றல்களைக் கொண்டு விலக்க முடியும்; இதற்காகவே வேத புனித நூல்களைக் கேட்கவும் படிக்கவும் வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்; அதை விடுத்து வேறு மார்க்கம் கிடையாது ||39||
முன்னர் விவாதிக்கப்பட்டவாறே, நமது அனைத்து மன எண்ணங்களையும் ஒன்று படுத்தி , ஒரே நிலையில் இருந்தவாறு, தியானிக்கப்படும் பொருளின் வடிவத்தின் மீதே நிலைக்கும்போது அந்த நிலையில் தியானிப்பவர், தியானச் செயல்முறை மற்றும் தியானிக்கப்படும் பொருள் ஆகிய மூன்றும் மறைந்து விடுகின்றன; அதுவே சமாதி எனப்படும் நிலையாகும்; அதை அடைந்து விடும்போது பேரின்ப நிலையை அடைந்து விடலாம் ||40||
இவ்வுலகில் உள்ள எவையுமே தெய்வீகத்தில் இருந்து வேறானவை அல்ல, அனைத்தும் இறைவனின் வடிவமே ; எனவே, இயற்கையிலேயே எவ்வித வேறுபாடும் அங்கு இல்லை; எல்லாம் இறைவனின் வடிவமே என்ற உணர்வு (Oneness) ஒருவனிடம் ஆழமாக ஏற்பட்டு விட்டால், யுகங்கள் பல கடந்தாலும் கூட, அவனுக்கு பயம், பிறப்பு, இறப்பு, வீழ்ச்சி என்ற அச்சமே இருப்பதில்லை||41||
ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது ஒருவனது ஆத்மா அதன் மூலப் பிரும்மத்துடன் ஒன்றி விடுகிறது; அதை அறியாமை ஒரு மெல்லிய திரை மறைத்திருப்பதால், அந்த ஆனந்தத்தை நம்மால் விழிப்புடன் உணர முடிவதில்லை ; எனவே, விழிப்பு நிலையில் வெளி உலகைப் பற்றியும், கனவு நிலையில் உள்ளே சேமிக்கப்பட்ட வாசனைகளை (பதிவுகளை) பற்றியும் மனம் கற்பனை செய்கிறது; அறிவே மாயையின் ஒரு பகுதியாக மாறி, ஆத்மாவை உணர விடாமல் திசை திருப்புகிறது ||42||
சூரிய ஒளியில் வைக்கப்பட்ட ஒரு புல் தானாகவே தீப்பற்றி எரிவதில்லை; அது எரிய வேண்டுமெனில், ஒளியைப் பிரதிபலிக்கும் ஒரு மேல் பரப்போ அல்லது சூரியகாந்தக் கல் (Suryakant Mani) போன்ற ஒரு ரத்தினமோ தேவைப்படுகிறது; அவற்றின் துணையுடன், ஒருவன் தீயை உருவாக்க முடியும்; எளிய சொற்களில் கூறுவதானால், இயற்கையாகவே புல்லின் மீது விழும் சூரிய ஒளி ஒரு மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டு அந்த செயலை செய்ய வைக்கின்றது ||43||
அதே போலவே, இவ்வுலகில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து நாம் சேமித்து வைத்துள்ள பொதுவான அறிவானது, அறியாமைக்கு எதிரானதாக அமைவதில்ல; ஆனால் நான் பரமாத்மனிடம் இருந்து வேறானவன் அல்ல என்று எப்போது ஒருவன் உறுதியாக உணர்வானோ, அந்த உணர்வே அறியாமை எனும் திரையை எரித்து விடுவதற்கு தேவையான தீப்பொறியாக அமைகிறது||44||
யோகப் பாதையில் பயணிக்கும் உண்மையான சாதகர்கள் அனைவரும், தங்கள் முன்னேற்றத்தைக் குறிக்கும் பல்வேறு யோக சித்துக்களை (Yogic accomplishments) அனுபவ பூர்வமாக அறிகிறார்கள்; ஆனால் அத்தகைய சித்துக்களின் ஆற்றலால் ஈர்க்கப்படாமல் இருப்பவர்கள் மட்டுமே, ‘வாழும் போதே ஞானம் பெறும் ஆனந்தம்’ எனும் தங்கள் இறுதி இலக்கை நோக்கி மேலும் முன்னேறிச் செல்ல முடிகின்றது||45||
மஹிமா (Mahima)* போன்ற எட்டு வகைகளிலான யோகா சித்த வழிமுறைகள் உள்ளன; ஒருவனது அறிவுத்திறன் (Intellect) அந்த சித்துக்களின் ஆற்றலால் ஈர்க்கப்பட்டு, செல்வங்களையோ அல்லது புகழையோ அடைவதற்காகப் பயன்படுத்தப்படுமானால், அது அந்தச் சாதகனை அவனது இறுதி இலக்கான ஆத்ம விடுதலை என்பதில் இருந்து (Liberation) வெகு தொலைவிற்கு கொண்டு சென்று விடுகிறது
{*இது குறித்து பின்னர் விளக்கப்பட்டு உள்ளது} ||46||
‘யோக சாதனைகளைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் தற்காலிகமானவை, அவை அனைத்தும் காலத்தால் வரையறுக்கப்பட்டவை; ஆனால் ஆத்ம விடுதலை என்பதில் கிடைக்கும் ஆனந்தம் என்றென்றும் நிலைத்திருக்கும்; எனவே, ஆத்ம விடுதலைக்கான ஆன்மீக அறிவை, எவ்வித சந்தேகமும் இன்றித் தேடி உள் வாங்கிக் கொள்ள வேண்டும்||47||
இந்தப் பாதையில் செல்ல பயிற்சி செய்யும் போது நாம் சற்றே அயர்ந்து விட்டது போல உணர்ந்தால், நாம் மீண்டும் நமது தொய்வை விலக்கிக் கொண்டு அந்த பயிற்சியில் தீவீரமாக நம்மை இணைந்து கொள்ள வேண்டும்; பல்வேறு எண்ண அலைகளினாலும் புலன் ஆசைகளாலும் அவற்றின் தொடர்புகளாலும் மனம் அலைபாயும்; அவற்றை மீண்டும் அமைதிப்படுத்தி, நமது பயிற்சியில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்||48||
உறுதியான மன நிலையில் இருந்து கொண்டு, விடா முயற்சியுடன் பயிற்சி செய்யும்போது, காற்று வீசாத இடத்தில் வைக்கப்பட்ட எரியும் விளக்கைப் போல சாதகனை ஒரு அமைதியான சூழ்நிலையில் கொண்டு சென்று விடும்; அந்த நேரத்தில் அவனது அலை பாயும் மனமும், உணர்ச்சிகளும் அவனுடைய முழுமையான கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும்போது, தெய்வத்திடம் ஐக்கியமாக விரும்புபவர் இதற்கு முன் ஒரு போதும் தாம் அனுபவிக்காத மன நிறைவை பெறுகின்றார் ||49||
கர்ம பந்தங்கள், இதய முடிச்சுகள் (ஹ்ரிதய க்ரந்தி*), மற்றும் சந்தேகங்கள் நீங்கும்போது சாதகன் மாயையில் இருந்து விடுபடுகிறான்; இந்த நிலையில், சாதகன் மாயை எனும் திரையைக் கடந்து, பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு ஜீவன் முக்தனாக மாறுகிறான்.
{* ஹ்ரிதய க்ரந்தி (Hridaya Granthi) என்பது சமஸ்கிருத வார்த்தையாகும்; இதற்கு இதயத்தின் முடிச்சுகள் (Knots of the heart) என்று பொருள்; ஆன்மீகம் மற்றும் யோக சாஸ்திரங்களின்படி, இது நம் ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கும் அறியாமை, ஆசை மற்றும் அகந்தையின் அடையாளமாகக் கருதப்படுகிறது; இந்த முடிச்சுகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன; மூலாதார சக்கரத்துடன் தொடர்புடைய ப்ரம்ம க்ரந்தி (Brahma Granthi); இது உலகப் பற்று மற்றும் உயிர் வாழும் பயத்தைக் குறிக்கிறது; இரண்டாவது அனாஹத (இதய) சக்கரத்துடன் தொடர்புடைய விஷ்ணு க்ரந்தி (Vishnu Granthi); இது உணர்ச்சி பூர்வமான ஈடுபாடு மற்றும் தனிப்பட்ட பற்றுகளைக் குறிக்கிறது; மூன்றாவது ஆக்ஞா சக்கரத்துடன் தொடர்புடைய ருத்ர க்ரந்தி (Rudra Granthi); இது ஆன்மீக சக்திகள் மற்றும் அகந்தையின் மீதான கட்டுப்பாட்டைக் குறிக்கிறது}||50||
ஞானம் என்ற நெருப்பானது ஒருவர் சேர்த்து வைத்திருக்கும் கர்ம வினைகள் (சஞ்சித கர்மா) அனைத்தையும் சாம்பலாக்கி விடும்; ஞானத் தீ, சஞ்சித கர்மாவை அழித்தாலும், பிராரப்த கர்மா (இந்த உடலை உருவாக்கிய கர்ம வினை) இருக்கும் வரை அதை சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும்; உண்மையான யோகிகள் மனச்சோர்வுக்கு ஆளாவதில்லை; ஞான நிலை பேரானந்தத்தை தரும் என்பதை அவர்கள் அறிவார்கள்||51||
சில பாம்புகளும், இன்னொரு வகையிலான சர்பங்களும் எப்படி அவ்வப்போது தங்கள் தோலை உரித்துக் கொள்கின்றனவோ, அதை போலவேதான் தமது உடலை தற்பெருமைக்கான பொருளாக பார்க்காமல்,அவ்வப்போது எழும் கோபம், அகங்காரம், மற்றும் தற்பெருமைகளை வெளியேற்றிக் கொள்ள வேண்டும் ||52||
ஓ அர்ஜுனா, நீ கற்று அறிபவை எளிதாகும்வரை, எந்த விலை கொடுத்தாவது அதைத் தொடர வேண்டும் என்று உள்ளுக்குள் உறுதி கொள்ளும் வரை, நீ செவிடனையும், குருடனையும் போல இருக்க வேண்டும்; ஏனெனில், அப்போதுதான் செல்ல வேண்டிய பாதையே நமது மனதில் ஆழமாக பதிந்து விடும்||53||
இதன் பொருள் என்னவென்றால், ஒருவர் சமூகத்தோடு இணைந்து வாழ்ந்தாலும், முனிவர்களை போல பற்றற்ற தன்மையை வெளிப்படுத்தி , வெளி உலகத்திற்குத் தொடர்பில்லாதவர் போல நடித்துக் கொண்டிருந்தால், சமூகம் அவரைப் புரிந்து கொள்ளாமல், உலக வாழ்வில் பற்றில்லாதவர் அல்லது உலகுடன் தொடர்பற்றவர் என்று தவறாக முத்திரையிட்டு ஒதுக்கி வைத்து விடக்கூடும் ||54||
அமரும் போதும், நடக்கும் போதும், பிற வேலைகளைச் செய்யும் போதும் பார்வையை தோராயமாக 4 சாண் தூரத்திற்குள் – அதாவது ஒரு மனிதனின் தொழில் இருந்து உள்ளங்கை வரையிலான நீளத்திற்கு அப்பால் நிலை நிறுத்துவது; வெளியே பார்க்காமல், தன் உடல் செயல்களை கவனிப்பதன் மூலம், மனதை ஒரு முகப்படுத்தி வைப்பது போன்றவற்றை செய்யும் சாதகரை குருடனை பின்பற்றுபவர் என்று கூறப்படுவார்.
{இதன் விளக்கம் என்ன என்றால் அப்படிப்பட்டவரை குருடனை பின்பற்றுபவர் என்று அழைக்கப்படுவதில்லை; மாறாக, அவரை தன் மனதை அடக்கியவன் அல்லது விழிப்புணர்வுடன் நடப்பவன் என்று போற்றுவார்கள்} ||55||
வெளிச் சூழ்நிலைகள் எவ்வளவு சத்தமாகவோ அல்லது கவர்ச்சியாகவோ, நன்மை பயப்பதாகவோ, தீமை தருவதாகவோ எதுவாக இருந்தாலும் அந்த சப்தங்களை காதில் வாங்கி கொள்ளாமல் எவர் ஒருவர் மன ஒருமைப்பாட்டைச் சிறிதும் இழக்காமல் இருக்கிறாரோ, அத்தகைய சாதகர் செவித் திறன் என்று கூறப்படுவார்.
{இதன் விளக்கம் என்ன என்றால் அப்படிப்பட்டவரை செவிடன் என்று அழைக்கப்படுவதில்லை; மாறாக, அவரை தன் மனதை அடக்கியவன் அல்லது விழிப்புணர்வுடன் நடப்பவன் என்று போற்றுவார்கள்} ||56||
அனைவருக்கும் நன்மை அளிக்கும், நலம் விளைவிக்கும் உண்மைகளைச் சுருக்கமான ஆனால் வலிமையாக வெளிப்படுத்துபவர்களும்; தாம் உண்ணும் உணவை குறித்து பெருமையாகவோ அல்லது இழிவாகவோ குறை கூறாதவர்களையும் பேச்சுத் திறனை இழந்தவர்கள் என்று பெரியோர்களால் கருதப்படுகிறார்கள்.
{இதன் விளக்கம் என்ன என்றால் அப்படிப்பட்டவரை ஊமை என்று அழைக்கப்படுவதில்லை; மாறாக, அவரை தன் மனதை அடக்கியவன் அல்லது விழிப்புணர்வுடன் நடப்பவன் என்று போற்றுவார்கள்} ||57||
பயிற்சியின்போது தங்கள் கவனத்தைச் சிதற விடாமல் இருக்க, மிக அத்தியாவசியமான இயற்கை உபாதைகள் மற்றும் பிட்ஷை எடுப்பது போன்ற செயல்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது; மற்ற நேரங்களில் சாதகர்கள் கல்வியிலும், சிந்தனையிலும் தீவீரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்க வேண்டும்; தங்கள் இலக்குகளை நன்கு உணர்ந்த, அத்தகைய சாதகர்கள் ஊனமுற்றோர் என்று வர்ணிக்கப்படுகிறார்கள்||58||
ஒரு சாதகன், குழந்தைப் பருவம், இளமைப் பருவம், வாலிப பருவம் அல்லது முதியோர் போன்ற நிலையில் உள்ள எதிர் பாலினத்தவரால் சூழப்பட்டிருக்கும்போதும், அவர்கள் மீதான அவனது பார்வை சிறிதளவேனும் காமத்தோடு இல்லாமல், ஆண்பால் – பெண்பால் என்ற உடல் ரீதியான வேறுபாடுகளைக் கடந்து சம நிலையுடன் இருந்தால், அத்தகைய சாதகனைப் பெரியவர்கள் இரு பாலினத்தவர், அதாவது பேதம் அற்றவர் என்று கூறுவார்கள்||59||
எவன் ஒருவன் தன் புலன்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இருப்பாரோ, தமக்கு அறிவுறுத்தப்பட்ட வழி முறைகளின்படி யோகப் பாதையில் நடக்கின்றாரோ, தனக்குள் இருக்கும் ஆத்மா வைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் தனது குறிக்கோளில் உண்மையாகவும் உறுதியாகவும் இருக்கிறானோ, அவன் பிற மக்களோடு சமூகத்தில் வாழ்ந்தாலும், அவர் காட்டில் வாழும் முனிவருக்கு ஒப்பானவர் ||60||
ஓ அர்ஜுனா, நான் உனக்கு விவரித்த இந்த முழுமையும், அதன் அனைத்துப் பகுதிகளுடன் கூடிய யோகப் பாதை என்பதை அறிந்துகொள்; பட்டற்ற நிலையில் இருந்தவாறு எவர் ஒருவர் மரியாதையுடனும், பணிவுடன் உன்னை எவர் அணுகுவார்களோ அவர்கள் அனைவருக்கும் நீ இதைப் போதிக்கலாம்; அதன் மூலம் நீ அதை முழுமையாக அறிந்திருக்கிறாய் என்பதை உறுதி படுத்திக் கொள்ளலாம்||61||
என்னிடம் பக்தியுள்ளவன் என்று எந்த ஒருவன் கூறிக் கொள்வானோ அவன் மண் கட்டி, கற்கள் அல்லது தங்க நாணயங்கள் போன்ற எவற்றைக் கையாளும் போதும் சம நிலையுடன் இருப்பான்; தேவையற்ற வன்முறை மற்றும் பொய்களுக்கு அடி பணிவதை கை விட்டவனாகவும் இருப்பான்; அப்படிப்பட்டவனே எனக்கு பிரியமானவனாகவும் இருப்பான் ||62||
மன்னா, நீ நிச்சயமாக என்னிடம் பக்தி கொண்டவன் ஆகி விட்டாய்; உன்னுடைய உணர்வு பூர்வமான புலன்கள் அனைத்தும் என்னில் கலந்து விட்டன; நீ இனி உன் புலன் சார்ந்த விருப்பங்களை பற்றிப் புலம்புவதோ ஏங்குவதோ இல்லை; மேலும் உனக்குத் துணையாக யாரேனும் தேவை என்றோ, அல்லது பிறருடன் பழக வேண்டும் என்ற என்னமோ எழவில்லை ||63||
இத்தனை ஆண்டுகளில் நீ பல வேத யாகங்களைச் செய்தும், அவற்றில் பங்கேற்றும் உள்ளாய்; அதன் மூலம் உன் அகப் புலன்களைத் தூய்மைப்படுத்தியுள்ளாய்; அதனால்தான் நான் உன்னைத் தகுதியானவனாகக் கருதி, இந்த யோக வழிப் பாதையை உனக்கு காட்டியுள்ளேன்; இப்போது நீ கற்றுக் கொண்டதைப் பயிற்சி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது’; இவ்வாறு ஸ்ரீமத் தத்தர் கூறி முடித்தார் ||64||
தெய்வமான ஸ்ரீமத் தத்தரின் ஆசீர்வாதத்தையும், கட்டளையையும், அவருடைய பேச்சையும் கேட்டதும், அர்ஜுனன் உள்ளம் உருகி, மிகுந்த நன்றியுடனும் மரியாதையுடனும் இரு கைகளையும் கூப்பி, தான் தேடி வந்த அந்த தெய்வத்தை புகழத் தொடங்கினான் ||65||
ஓ இறைவா, என்னால் இயன்ற அளவிலான தூய உணர்வுகளுடனும் உமக்கு நான் தலை வணங்குகிறேன், உம்மை நோக்கி அமைந்துள்ள மங்களகரமான பாதையை நீங்கள் எனக்கு விரிவாக அறிவுறுத்தியுள்ளீர்.
{மராத்தி மொழியில் புகழ்பெற்ற அபங்கம் எனும் கவிதைப் பாடல் வடிவத்தில், மூலத்தில் இப்படியாக போற்றினான்; அபங்கம் (Abhang) என்பது மகாராஷ்டிர மாநிலத்தில் தோன்றிய, விட்டலன் (பாண்டுரங்கன்) மீது பாடப்படும் புகழ்பெற்ற பக்திப் பாடல்கள் ஆகும். ‘இடையீடு அற்ற பஜனைப் பாடல்கள்’ மற்றும் ‘மாசற்றது’ என்பது இதன் பொருளாகும்} ||66||
மயக்கும் கற்பனைகளுக்கும், இருண்ட அறியாமைக்கும் நான் அடிபணிந்திருந்த நிலை இனி இல்லை; இப்போது நான் எவ்விதத் துன்பங்களையும் அனுபவிப்பதில்லை; எனக்கு இப்போது புலப்படும் இந்தத் திவ்ய வடிவத்தோடு, என் முழு இருப்பும் ஒன்றிணைந்து விட்டது போலவே உணர்கிறேன்||67||
என் மனமாகிய வானில் ஞானச் சூரியன் உதித்துள்ளது; அது என் அக வெளியை முழுமையாக ஆட்கொண்டு, முன்னாளில் என்னை வாட்டி வந்திருந்த அனைத்து அக இருள்களையும் எரித்துச் சாம்பலாக்கி, என்னிடமிருந்து முற்றிலுமாக அகற்றி விட்டது||68||
ஓ தெய்வமே, உனது புனிதத் திருவடிகளைத் தரிசிக்கும் பேறு பெற்றதாலோ என்னவோ, நான் பேறும் மகிழ்சியுடன் இப்போது இருக்கின்றேன்; எனக்கு இனி எவ்வித வருத்தங்களோ, துயரங்களோ இல்லை; ஏன், இருமை உணர்வு (பேத புத்தி) கூட என்னிடம் எழவில்லை என்பதும் என்பதும் உனது பெருமையாலேயே நிகழ்ந்தவையாகும் ||69||
அறிவாற்றலை எனக்கு முற்றிலும் கொடுத்த இந்த நாளுக்கு இணை வேறு எந்த நாளுமே இல்லை; நீண்ட காலமாக நான் ஏங்கியிருந்தபடியே, உங்களை நேரில் தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ளது; என் உள்ளத்தில் ஒரு புதுமையான, ஆனந்தமயமான அன்பு உணர்வு பொங்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது||70||
எங்கள் அனைவருக்கும் தாயாகவும் தந்தையாகவும் இருப்பவன் நீயே; எங்கள் துயரங்கள் அனைத்தையும் தணித்தவனும் நீயே; எங்கள் பாவங்கள் அனைத்தையும் போக்கியவனும் நீயே; எங்கள் சீற்றத்தையும் வெறுப்பையும் எங்களிடமிருந்து அகற்றியவனும் நீயே ||71||
நான் கொண்டிருந்த அனைத்துத் தவறான எண்ணங்களில் இருந்தும் நம்பிக்கைகளில் இருந்தும் என்னை விடுவித்தவன் நீயே; இவ்வுலகம் மற்றும் மறுவுலகம் சார்ந்த அனைத்து ஆசைகளிலிருந்தும் என்னை விடுவித்தவனும் நீயே; உனது திவ்ய இருப்பிடத்தில் என்னை நிலை நிறுத்திக் கொண்டவனும் நீயேதான் ||72||
தெய்வமே , இப்படிப்பட்ட பேரானந்த நிலையை நீங்கள்தான் எனக்கு நிலையாக கொடுத்தவண்ணம் இருக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்; உங்கள் புனிதத் பாதங்களை எப்போதும் தரிசிக்கும் பேறு எனக்குக் கிட்ட வேண்டும்; தெய்வமே, கருணை கூர்ந்து இவற்றை நீங்கள் எனக்கு அருள வேண்டும் ||73||
எங்களைப் போன்ற சாதகர்களுக்கு, பாசமிகு பெற்றோரின் வடிவில் வந்து அருள்பவன் நீயே; எங்கள் குல தெய்வமாகவும், ஞானம் அருளும் குருவாகவும் திகழ்பவன் நீயே; எங்களுக்கு உற்ற நண்பனாகவும், அன்புச் சகோதரனாகவும், சிறந்த சுற்றத்தாராகவும் இருப்பவன் நீயே; தெய்வமே, உன்னைத் தவிர எங்களுக்கு வேறு எவரும் துணையில்லை||74||
தெய்வமே நீ உடலுக்கும் ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டவன்; ஆனாலும் அந்த உடலும் அதன் புலன்களும் இயங்குவதற்கு காரணமாக இருப்பவனும் நீயே; எங்கள் அறிவை யோக நெறி பாதையில் செலுத்தி வைத்து மேலே குறிப்பிடப்பட்ட உயரிய தத்துவங்களை அறிந்து கொள்ள வைத்தவரும் நீங்கள்தான் ||75||
என்னிடம் இனி வேறு எந்த விருப்பங்களும் எஞ்சியிருக்கவில்லை; ஒருவர் வாழ்க்கையில் அடையக் கூடிய மிக உயர்ந்த செல்வத்தை எனக்கு கொடுத்து விட்டீர்கள்; ஆகையால், நான் முழு மனநிறைவு அடைந்து விட்டேன்; இனி எவ்விதக் காரணமோ அல்லது நோக்கமோ இன்றி நான் ஏன் இங்குமங்கும் அலைந்து திரிய வேண்டும்?||76||
தெய்வமே, பக்தி ஒன்றின் மூலமே உம்மை அறிந்து கொள்ள இயலும் என்பது புரிகின்றது; அதற்குத் தேவை, உம்முடைய திருப்பாதங்களை நோக்கித் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் பாதையில் பயணிப்பது ஆகும்; என்னுடைய நற்செயல்களின் பயனாகவே, எனக்குப் பூரண ஞானத்தை நீங்கள் அருளினீர்கள்; இனி அற்பமான ஆசைகளை தேடி நான் ஓட மாட்டேன் ||77||
தெய்வமே, நூல் இழைகள் ஆடையாகப் பின்னிப் பிணைந்திருப்பது போல, அதே போன்று இந்த பிரபஞ்சமும் உங்களோடு ஒன்றிணைந்து உள்ளது; அந்தத் திவ்ய வடிவத்தையே இன்று எனக்கு வெளிப்படுத்திக் காட்டினீர்கள் ; அதனால் என் மனம் முழுமையான அமைதி அடைந்துள்ளது ||78||
காலமற்ற காலமாக நிலைத்திருக்கும் இவ்வுலக வாழ்வு எனும் விருட்சத்தின் கிளைகளில், இரண்டு பறவைகள் வீற்றிருக்கின்றன; ஒன்று, உடலெடுத்த தனி ஆத்மா ; மற்றொன்று, தெய்வமே அது நீங்களேயாகும்; அந்தத் தனி ஆத்மா வானது, தன் கர்ம வினைகளின் விளைவுகளால் ஏற்படும் பந்தங்களை அனுபவிக்கிறது; ஆனால் நீங்களோ அனைத்திற்கும் மாறாத சாட்சியாக இருந்தவண்ணம் காணப்படுகின்றீர்கள்||79||
ஒரு உடலாக வடிவெடுத்த ஆத்மா , தான் செய்த நற்செயல்களின் பலன்களைத் தான் அடைய வேண்டும் என்று விரும்பிக் கொண்டே இருக்கும்; அந்த ஆசை அதற்கு இருக்கும்வரை அது ஜனன மரண சுழற்சியில் இருந்து மீள முடியாமல் இருக்கும்; அதுமட்டுமின்றி, அனைவருக்குள்ளும் அந்தர்யாமியாக வீற்றிருக்கும் உம்முடைய இந்தத் திவ்ய வடிவமும், அதன் ஆசை தொடர்ந்து கொண்டிருக்கும்வரை அவர்களால் பார்க்கவே முடியாத நிலையில் இருக்கும் ||80||
உன்னிடம் பரிபூரணமான பக்தி கொண்டவர்கள், புண்ணிய பாவ செயல்களின் விளைவுகளை எதிர்பார்த்து காத்திருப்பது இல்லை ; அத்தகையவர்கள் தங்களின் மீதான அபார பற்றினால், தங்கள் அக ஆற்றல்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள தேவையற்ற உலக ஆசைகளை துறந்து விடுவார்கள் ||81||
அதன்பிறகு அவர்கள் உங்களது ஆசிகளை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்; மேலும் பக்தி மார்க்கங்களில் தம்மை இணைத்துக் கொள்வார்கள்; கருணை கொண்ட தெய்வமே நீங்களும் அவர்களை அப்போது கருணையுடன் பார்க்கின்றீர்கள், இதை நான் முழுமையாக பார்க்கின்றேன்; அதே போன்ற அருளையும் நான் உங்களிடம் இருந்து அடைந்திருக்கிறேன் ||82||
மனம் அற்ப ஆசைகளை விடுத்து தூய்மையடையும் போது, அது இயல்பாகவே தெய்வீகத்தின் மீதும், இறைவனின் நாமத்தின் மீதும் அன்பு கொள்ளத் தொடங்குகிறது; நீயே உண்மையானவன் (சத்தியம்) மற்றும் உயர்ந்த இருப்பிடம்; நீயே உயர்ந்த செல்வம், நீயே அனைத்திலும் நிறைந்திருக்கும் உயர்ந்த உண்மையாக திகழ்கின்றாய்||83||
செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துவிட்டேன், அடைய வேண்டிய அனைத்தையும் அடைந்து விட்டேன், காண வேண்டிய அனைத்தையும் கண்டு விட்டேன், இப்போது என் மனம் உமது புனித பாதங்களில் அமைதியடைகிறது||84||
உண்மைதான், உம்மை எளிதில் அணுக முடியாது என்பதாக வேத புனித நூல்கள் கூறுகின்றன; உங்களை நாடி உங்களிடம் செல்லத் தேவையான பாதையை எளிதாக்கிய ஞானிகளுக்குப் புகழ் உரியதாகட்டும்; உங்களது முழு மகிமையையும் நான் யாருடன் ஒப்பிட முடியும்? உமது ஆத்மாவாலும், உமது இயல்பாலும், நீங்கள் நீங்களாகவே தனித் தன்மையுடன் இருக்கின்றீர்கள்; எவரையும் உங்களோடு ஒப்பிட முடியாது’ ||85||
இவ்வாறு அர்ஜுனன் தான் தேடி வந்த தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயரைப் புகழ்ந்தான்; அவனது எளிமையான வார்த்தைகளால் ஸ்ரீமத் தத்தரும் மனம் மகிழ்ந்து, அவனிடம் கூறினார் ‘அர்ஜுனா நீ சோம்பலுக்கு அடி பணியாமல், நான் விவரித்த இந்த யோகப் பாதை முழுவதையும் கேட்டிருக்கிறாய்||86||
அங்கே ஒரு குகை தெரிகின்றது பார்; அதற்குள் சென்று, அங்கே அசையாமல் அமர்ந்து யோக ஆசனங்களையும் மற்ற வழிமுறைகளையும் பயிற்சி செய்; முயற்சியை கைவிடாமல் அந்த யோக வழிப் பாதையில் பாதையில் தொடர்ந்து செல்||87||
உனது உடல், தலை, கழுத்து மற்றும் முதுகை நேராக வைத்துக் கொண்டு அமர்ந்து கொள்; உனது பார்வையை உள்ளிருக்கும் உனது ஆத்மாவோடு ஒன்றிணைய வைத்துக் கொள்; மனதை முழுமையாக ஒருமுகப்படுத்தி இந்தப் பயிற்சியில் ஈடுபடு; உன்னை வாட்டும், கிளர்ச்சியூட்டும் அல்லது உன் கவனத்தைச் சிதறடிக்கும் அனைத்தையும் வென்றிடு ||88||
நீ கற்ற இந்த யோக வழி மார்க்கத்தின் அனைத்துப் படிகளிலும் பயிற்சி செய்ய வேண்டும்; நீ உன் இலக்கை அடைந்து விட்டதாகவும், உன்னில் இல்லாதவற்றிலிருந்து பிரிந்து விட்டதாகவும் நீ உணரும்போது, விழித்தெழுந்து வந்து நீ அனுபவித்ததை என்னிடம் விவரமாகக் கூறு ||89||
உடனே கிளம்பிச் செல்; மனதிலும் உள்ளுக்குள்ளும் அச்சமோ கவலையோ கொள்ளாதே; உடனடியாக இங்கிருந்து கிளம்பிச் அந்தக் குகைக்குள் நுழை’, என்று அவனுக்குக் கட்டளையிட்ட தெய்வம், அவன் தலை மீது தன் கையை வைத்து அவனை ஆசீர்வதித்தார்; அதன் மூலம் அவன் உண்மையாகத் தேடி அலைந்த உண்மையை உணர்வுபூர்வமாக அறியும்படி அவனிடம் கூறினார்||90||
மன்னன் தலை முதல் கால் வரை பரவசமடைந்தான்; தன் குருவை வணங்கி, அனைத்து அறிவுரைகளையும் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு, சற்றும் தயக்கமின்றி குகைக்குள் சென்று முழு மனதுடன் அங்கே அமர்ந்தான்||91||
முதலில் ஒரு வசதியான யோக ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, பிராணாயாமம் எனும் ஸ்வாசப் பயிற்சியைத் தொடங்கினான்; உள்ளிழுக்கும் பிராண மற்றும் அபான ஸ்வாசங்களின் ஓட்டத்தைச் சமன் செய்யும் திறனை உடல் மற்றும் மனதின் மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றான் ||92||
அதன் பிறகு வலிமையான குண்டலினி எனும் ஆற்றல் விழித்தெழுந்தது; விழித்தெழுந்த குண்டலினி, மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா ஆகிய ஆறு சக்கரங்களையும் கடந்து மேலே சென்றது; மைய சூட்சும சுஷும்னா நரம்பிற்கான வாசல் திறந்தது; அது நேராக தலை உச்சி அல்லது சஹஸ்ரார சக்கரத்தை நோக்கிச் சென்றது||93||
மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகள் அவர் பக்தி தியான நிலையில் இருந்தார், பின்னர் மீண்டும் தன்னையும் தன் சுற்றுப்வெளிப்புற ங்களையும் உணர்ந்தார்; தான் தேடியதை அனுபவித்த பிறகு அவர் மீண்டும் அந்த செயல் முறையைத் தொடங்கினார்; இந்த முறை பன்னிரண்டு நாட்கள் தொடர்ச்சியாக எந்த விதமான தடங்கலும் இன்றி இருந்தார்||94||
மீண்டும் அவர் தனது உடலையும் வெளிப்புற சூழலையும் உணர்ந்தார்; மூன்று மாதங்கள் சமாதி நிலையில் இருக்கும் பயிற்சியை மீண்டும் தொடங்கினார்; அதன் பிறகு அவர் தன்னை உணர்ந்தபோது, தனது அன்புக்குரிய குருவைச் சென்று சந்திக்க வேண்டும் என்ற தீவிர விருப்பத்தை உணர்ந்தார்||95||
அவர் வந்து ஸ்ரீமத் தத்தரை வணங்கினார்; விடா முயற்சியுடன் தான் போதனை செய்த யோகக் கலையை தொடர்ந்து கொண்டு இருந்தவ மன்னனை அன்புடன் தழுவிக் கொண்டு கேட்டார் ‘இத்தனை நாட்களில் உனக்கு என்ன நடந்தது; அனைத்தையும் என்னிடம் விரிவாக கூறு’||96||
ஏறக்குறைய நான்கு மாதங்களாக, நான் அறிவுறுத்தியபடி நீ குகையில் தங்கியிருக்கிறாய்; அந்த நேரத்தில் உனக்கு என்னென்ன அனுபவங்கள் கிடைத்தன என்பவற்றை உன்னால் முடிந்தவரை விரிவாக சொல்||97||
அதற்கு அர்ஜுனன் மரியாதையுடன் பதிலளித்தான் ‘தெய்வமே, என் அனுபவங்களை நான் எவ்வாறு பகிர்ந்து கொள்வது?; நான் என்னை உணராதபோது, தியான முறையையோ அல்லது தியானிக்கப்பட்டதையோ அறியாதிருந்தபோது, உணர்வுப் பூர்வமான ஒன்றிணைப்பு மட்டுமே எஞ்சியிருந்த போது, நான் எதை விவரிக்க முடியும்? ||98||
நான் ஆழ்ந்த ஓய்வு நிலையில் இருந்ததை உணர்ந்தேன்; இப்போது அது எனக்கு நினைவூட்டப்படும்போது, அந்த உணர்வின் மீது என் கவனம் குவிய, என் உணர்வுப் பூர்வமான புலன்கள் என்னை இவ்வாறு கூறத் தூண்டுகின்றன; இப்போதுதான் அது அது எத்தகைய உணர்வை அளித்தது என்பதை எண்ணிப் பார்க்கின்றேன்; ஆனால் அப்போது என் புத்தி உணர்வுப் பூர்வமாக நான் தேடிய தெய்வீகத்தின் மீது மட்டுமே மூழ்கியிருந்தது ||99||
விழிப்பு, கனவு அல்லது உறக்க நிலை எதுவும் இல்லை; பதற்றமான புலன்களால் ஏற்படும் எந்தக் கலக்கமோ அல்லது சலனமோ இல்லை; பக்திப் பூர்வமான, மனம் சிந்தனையற்ற விழிப்புணர்வு நிலையில் இருந்தது ||100||
கடந்த காலங்களில் வருத்தங்கள் மற்றும் துயரங்களின் மூட்டையாக இருந்த அதே மனம்தான், அதன் மூலத்தை (ஆத்மாவை) உணர்ந்து, அந்த நிலையின் மிக உயர்ந்த நிலையான பேரின்பத்தை அடைந்தது ; அங்கு நிறைந்திருந்த அளவற்ற பரவசத்தினால், மற்ற அனைத்து சிற்றின்ப எண்ணங்களையும், உலகியல் விருப்பங்களையும் இழந்து விட்டது ||101||
அந்தப் பேரின்பத்தை எப்படி விவரிக்க இயலும், என் குருவே, நீங்கள்தான் அதை என்னவென்று அழைப்பது என்பதைக் கூற வேண்டும்; அந்தப் பேரானந்தத்தை சித்தரிக்க என்னிடம் சொற்களே இல்லை; என் உணர்வுகள் அனைத்தையும் ஒன்று திரட்டி நான் இதை கூறுகின்றேன்||102||
தெய்வமே, அதுவே உங்களது உண்மையான வடிவம்; நீங்களே என்றும் நிலைத்திருக்கும் சத்தியம், ஞானம் மற்றும் ஆனந்தத்தின் உருவம்; அந்தப் பேரின்பத்தை அனுபவிக்காதவன், பாவங்களாலும் மனக் கலக்கங்களாலும் தொடர்ந்து அலைக் கழிக்கப்படுகிறான்; உங்களை இவ்வாறு தரிசிக்கும்போது, உங்களதுவெளிப்புற த் தோற்றமும் அதே போன்ற தெய்வீக வடிவமே என்பதை நான் உணர்கிறேன் ||103||
அந்த பேரின்ப நிலையை விட்டுவிட்டு, என் மனம் இனி வேறு எங்கு அலைந்து திரிய முடியும்?; எனக்கு இனி எந்த அரசாட்சியும் வேண்டாம்; அரசுக் கருவூலங்களும் தேவையில்லை; என் உள்ளே உறையும் ஆத்மா வில் நான் முழுமையாகத் திருப்தி அடைந்து விட்டேன்||104||
என் அரசாட்சியை நான் இப்போது துறக்க நேர்ந்தாலும் நான் துயரப்பட மாட்டேன் ; இன்னும் சில ஆண்டுகள் அதை ஆள நேர்ந்தாலும் நான் மகிழ்ந்து போக மாட்டேன்; என் மனம் அறிய வேண்டியதை ஐயமற அறிந்து கொண்டு விட்டது; இப்போது அது உங்கள் தெய்வீகத் திருவுருவத்தையே பேராவலுடன் பற்றிக் கொண்டுள்ளது ||105||
எங்கும் நிறைந்திருப்பவனே, அனைத்தையும் உள்ளடக்கிய பரமாத்மனே; உங்களது தெய்வீகத் தன்மை, சத்துவம் (தூய்மை), ராஜசம் (செயல்பாடு), மற்றும் தாமசம் (மந்தம்) ஆகிய முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டது; அதே வேளையில், நான் இப்போது தரிசிக்கும் தெய்வமான நற்குணங்களை கொண்டதாகவே விளங்குகிறது ||106||
இந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்ளும் தகுதியை எனக்கு அளித்தவன் நீயே; என் கரங்களைப் பரிவுடன் பற்றிக் கொண்டவனும் நீயே; உங்களது அமுதமயமான கருணையினால் என் ஆத்ம தாகம் தணிந்தது, அதை தந்தவரும் நீங்களே; எனக்கு இனியும் பிறப்பு -இறப்பு இல்லாத நிலையை தந்தவரும் நீங்கள்தான் ||107||
அப்படிப்பட்ட சத்தியமான சொற்களை உரைத்தபின், அர்ஜுனன் தன் அன்பிற்குரிய தெய்வத்தின் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். மிகுந்த பக்தியுடன் தன் அன்பிற்குரிய தெய்வத்தின் திருவடிகளைப் பற்றிக் கொண்ட அவன், அங்கேயே அந்த ஆத்ம ஆனந்தத்தில் ஒன்றிப்போய் நிலைத்திருந்தான்||108||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் பதினைந்தாம் (15) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் பதினைந்தாம் (15) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 1515 = 1623
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
..….இதோடு பாகம் -5, அத்தியாயம் -15 முடிவடைந்தது
அத்தியாயம் -16 தொடர்கின்றது