COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் –3
 முனிவர்களின் அறிவுரை

 

அத்தியாயம்-8
குரு பிருஹஸ்பதி-இந்திரன் உரையாடல்

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

குரு வேத தர்மா தனது சீடன் தீபக்கிற்குத் தொடர்ந்து உபதேசம் செய்து வந்தார் ‘ ஸ்ரீமத் தத்தரும் பிற யோகிகளும், முனிவர்களும் அர்ஜுனனின் வேண்டுகோளை கேட்டவண்ணம் இருந்தார்கள்; அவன் கூற வேண்டிய அனைத்தையும் கூறிய பின்னர் ஸ்ரீமத் தத்தர் அவனைத் தேற்றினார் ‘பொறுமையாக இருந்தவாறு மனதை திடமாக வைத்துக் கொள்’ ||1||

தொடர்ந்து இறைவன் அர்ஜுனனுக்கு கூறலானார் ‘அர்ஜுனா, இப்போது உன்னிடம் தூய்மையின் பண்பான சத்துவ குணம் மேலோங்கி நிற்கிறது; இதுவே தெய்வீகப் பண்புகளுக்கெல்லாம் உயர்ந்த நிலையாக கருதப்படுகிறது; பிறக்கும் ஒவ்வொன்றும் விதியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டே பிறப்பு எடுக்கின்றன; அதனால்தான் ஒவ்வொருவரும் அவரவருக்கு விதிக்கப்பட்டுள்ள இடங்களில் சென்று பிறப்பை எடுக்கின்றார்கள்; நீயும் உனக்கு கிடைத்த வரங்களின் அடிப்படையில் பேரானந்த வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ந்திருக்கிறாய் ||2||

நீ என்னை உயர்ந்த நிலையிலான பக்தியுடன் சேவித்து வந்ததினால்தான், இப்போது உன் உள்ளத்திற்குள் ‘வைராக்கியம்’ (பற்றின்மை) என்பது பிரகாசிக்கத் தொடங்கியுள்ளது; இதன் விளைவாக, உயிருடன் உள்ளபோதே முக்தி அடையும் அந்த வர்ணிக்க இயலாத பேரின்பத்தை, நீ வெகு விரைவில் அனுபவபூர்வமாக கண்டு களிப்பாய் ||3||

ஒருவன் தன் உள்ளே மறைந்துள்ள ஆத்மா வை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்; அதை அறிந்து கொள்வதெப்படி என்றால், அதற்கு சாஸ்திரங்களை (வேத நூல்களை) வழி காட்டிகளாக வைத்துக் கொள்ள வேண்டும்; சாஸ்திரங்களில் காணப்படும் வார்த்தைகளை சரிவர புரிந்து கொள்ளவில்லை என்றால் அவை சில நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்; ஆகவேதான் ஒரே மன நிலையில் இருந்தவாறு அனைத்திலும் வியாபித்திருக்கும் அந்த ஏகத்துவம் எனும் தனித்துவமான உண்மையை தேட வேண்டும்; இருமை உணர்வுகளையும் பேதங்களையும் மனதில் இருந்து முற்றிலுமாக விலக்கி விட்டு, அந்த ‘ஏகத்துவத்தை’ (ஒரே உண்மையை) மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் ||4||

அனைத்து சாஸ்திரங்கள் மற்றும் புனித நூல்களின் சாராம்சங்கள் அனைத்தும் ஒன்றையே கூறுகின்றன; அவற்றைதான் நான் இப்போது உனக்குச் சுருக்கமாக எடுத்துரைக்கப் போகிறேன்; கவனத்துடன் கேள்; ஒருமுறை, ஸ்வர்க லோகத்தின் அதிபதியாக நியமிக்கப்பட்ட இந்திரன் மாபெரும் ஞானியும், மேன்மை வாய்ந்தவருமான தனது குருவான பிருஹஸ்பதியை சந்திக்கச் சென்றான்||5||

தொலை தூரத்திலிருந்தே தனது குருவைக் கண்டதும், தன் குருவின் மீது கொண்டிருந்த மரியாதையினாலும் பக்தியினாலும், இந்திரன் தனது தேரிலிருந்து கீழே இறங்கி பணிவுடனும் அவரை நோக்கி நடந்து சென்றான்; பின்னர், தன் உள்ளம் முழுவதிலும் நிறைந்திருந்த ஆழ்ந்த பக்தியுடனும் மரியாதையுடனும் அந்த குருவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்||6||

அவரை வரவேற்ற குரு அவரை அமருமாறு கூறினார்; அவர் எதிரியில் அமர்ந்து கொண்ட இந்திரன், அங்கிருந்த பிரகஸ்பதியின் சீடர்கள் அவரவர் பாடங்களில் முழுமையாக கவனத்தை செலுத்தித் படித்துக் கொண்டு இருந்ததைக் கண்டார்; இந்திரன் அங்கு வந்ததையோ அல்லது அவர்களது குரு அவரை அமரச் சொன்னதையே சற்றும் கவனிக்காமல், தமது சிந்தனைகளை சிதற விடாமல் அவரவர் பாடங்களில் மனதை வைத்துக் கொண்டு படித்தவாறு இருந்ததை கவனித்தார்||7||

அவர்களில் சிலர் லோகாயதா* எனும் சாஸ்திரத்தையும், வேறு சிலர் வாத்சாயன முனிவரின் காம சாஸ்திரம் அல்லது காதல் சூத்திரங்களையும், இன்னும் சிலர் கட்டிடக் கலை மற்றும் சிற்ப சாஸ்திரம் ஆகியவற்றையும் படித்துக் கொண்டிருந்தனர்; மேலும் சிலர் மற்றவர்கள் பௌத்த நூல்களை படித்தபடி இருக்க, மற்றவர்கள் நியாயக் கோட்பாடு நூலை படித்தவாறு இருந்தார்கள்
{*லோகாயதம் என்பது இந்தியாவில் தோன்றிய ஒரு தொன்மையான பொருள் முதல்வாத (Materialism) தத்துவக் கொள்கையாகும். இது கண்முன்னே தோன்றும் உலகியல் உண்மைகள், அறிவியல்பூர்வமான நேரடி அனுபவம் (Pratyaksha) மற்றும் இந்த உடலையும், அதன் இன்பங்களையும் மட்டுமே உண்மையானதாகக் கருதுகிறது} ||8||

அவர்கள் படித்துக் கொண்டிருந்த பல்வேறு தரப்பட்ட நூல்களை கவனித்த இந்திரன் தனது குரு பிரகஸ்பதியிடம் கேட்டார் ‘குருவே, தயவு செய்து எனக்கு இதை விளக்குவீர்களா?; எதற்காக நீங்கள் உங்களுடைய சீடர்களுக்கு பல தரப்பட்ட பாடங்களைக் கற்பிக்கிறீர்கள்?; ஆத்ம விடுதலைக்கு வழி வகுக்காமல் மேலும் உலக பந்தத்தில் ஈடுபட வைக்கும் இப்படிப்பட்ட நூல்களை படிக்க இத்தனை முயற்சியை எதற்காக எடுக்க வேண்டும்?’ என்று வினவினான் ||9||

ஒவ்வொருவரும் கடந்த பிறவிகளிலிருந்து சில பதிவுகளை தம்மோடு எடுத்துக் கொண்டு வந்து புதுப் பிறவி எடுக்கின்றார்கள்; அந்த பதிவுகள் அவரவற்கேற்ற பொருத்தமான சூழ்நிலைகளில், உணவு மற்றும் பாலுறவு கொள்வது போன்றவற்றில் ஈடுபடுகையில் தன்னால் வெளிப்படும் எனும்போது, அதற்கும் மேலாக அவர்களுக்கு காதலின் சூத்திரங்கள் எதற்காக இப்போது கற்பிக்கப்படுகின்றன?; அது அவர்களை நரகத்தின் படு குழிகளுக்குள் தள்ளி விடாதா? ||10||

எப்படியிருந்தாலும், அவர்கள் அனைவரும் எப்படி உயிர் வாழ்வது மற்றும் இனப் பெருக்கம் செய்வது என்பதை முற்றிலும் அறிவார்கள்; இப்போதோ காமத்தை தூண்டும் வசந்த காலம் வந்து விட்டது; ஆகவே இந்த கால நேரத்தில் இந்த வேதத்தைப் படிப்பது அவர்களின் காம உணர்வுகளை மேலும் தூண்டி விடாதா?; அது அவர்களுடைய ஆன்மீக நீதியான பாதைகளிலிருந்து விலகிச் செல்ல வைக்காதா ||11||

அவற்றை படிப்பதின் மூலம் அவர்கள் தமது புலன் உணர்ச்சிகளை அதிகப்படுத்துவார்கள் என்பது தெரிந்தும் அவற்றை அதிகரித்துக் கொள்ள நீங்கள் ஏன் ஒரு தூண்டு கோலாக உள்ளீர்கள்?; நீங்கள் வேண்டுமென்றே குருடர்களை ஆழமான இருண்ட கிணற்றுக்குள் தள்ளுவது போல் தெரிகிறது||12||

இந்திரனின் சந்தேகங்களைக் கேட்ட குரு பிருஹஸ்பதி அவருக்கு பதிலளித்தார் ‘ஆசையின் வேர்கள் ஆழமானவை; சாஸ்திரங்கள் ஓருவர் விரும்புவதைப் பெறுவது எப்படி என்பதை போதிக்கின்றன; அவற்றில் காணப்படும் சிறப்பான விஷயங்களை மட்டும் பாருங்கள், ஊகங்களுக்கு அடி பணியாதீர்கள் ||13||

எந்தவொரு வேத, புனித நூலும் நேர்மையான வழியில் செல்பவர்களின் இலக்கை தடுப்பது இல்லை; பொதுவாகப் பார்த்தால் அனைத்து புனித நூல்களின் சாராம்சங்கள் ஒன்றேதான்; நான் இங்கு எனது மாணாக்கர்களுக்கு ஏழு பாடங்களைத்தான் கற்பிக்கின்றேன்; அவற்றை நான் இப்போது உங்களுக்கு விவரிக்கிறேன்; அவை உங்கள் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும்; கவனமாகக் கேட்டு, எல்லா சந்தேகங்களில் இருந்தும் விடுபடுங்கள்’ என்று கூறிய பின்னர் அவற்றை விவரிக்கலானார் ||14||

‘கபில்யா என்ற நகரத்தில் சில்ப காலையில் வல்லுநரான விதிஞ்ஜயா என்ற ஒரு சிற்பி வாழ்ந்து வந்தார்; அவர் கட்டிடக் கலை தொடர்பான வாஸ்து சாஸ்திரம்* என்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்; தனது துறையில் புத்திசாலியாகவும் திறமைசாலியாகவும் கருதப்பட்டவர்
{* வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra) என்பது பண்டைய இந்தியக் கட்டிடக் கலை மற்றும் வடிவமைப்பு அறிவியல் ஆகும். இது பஞ்ச பூதங்களின் (நிலம், நீர், நெருப்பு, காற்று, விண்வெளி) சக்தியைப் பயன்படுத்தி, இயற்கை மற்றும் பிரபஞ்ச ஆற்றலுடன் இணக்கமான சூழலை உருவாக்கி, வீட்டில் வசிப்பவர்களுக்கு ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது }||15||

‘நிலங்களைத் தூய்மைப்படுத்தவும், அதற்காக வாங்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் கணக்குகளை நன்கு பராமரிக்கவும் கற்று அறிந்திருந்தார்; மனை சாஸ்திரத்தில் பூமி, நீர், காற்று, ஒளி மற்றும் ஆகாயம் தொடர்பான அசுத்தங்களை அகற்றுவதற்கான தீர்வுகளையும் அவர் அறிந்திருந்தார்; வேத, புனித நூல்களில் விதிக்கப்பட்டபடியே அவர் கட்டிடங்களை துல்லியமாகக் கட்டினார் என்பதினால் அந்த இருப்பிடங்கள் அனைத்தும் அவற்றின் உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியின் ஆதாரமாக அமைந்து இருந்தன||16||

அப்படி அவர் கட்டிய வீடுகள் அனைத்திலும், அவற்றின் உரிமையாளர்களால் நடத்தப்பட்ட பல்வேறு சடங்குகள், பண்டிகைகள் மற்றும் யாகங்கள் போன்றவை எந்த குறைபாடுகளும் இல்லாமல் நல்ல முறையில் நடந்து வந்தன; மேலும் அங்கு வசித்தவர்கள் ஒரு போதும் உடல் உபாதைகளால் பாதிக்கப்படவில்லை||17||

மனை கட்ட எத்தனை செலவு ஆனாலும் சரி, தாம் கட்டும் வீடுகளை அவரே கட்டித் தர வேண்டும் என விரும்பிய மக்கள் அவரை நாடிச் சென்றார்கள்; ஏன் எனில் அவரால் வடிவமைத்து கட்டித் தரப்பட்ட வீடுகள் மகிழ்ச்சி நிறம்பியவைகளாகவும், அங்கு நடைபெற்ற சடங்குகள் மற்றும் பண்டிகைகள் மங்களகரமாக நடந்தேறி வந்தன என்றும் அனைவரும் நம்பியதே காரணம் ஆகும்||18||

இதனால் விதிஞ்ஜயா கட்டிடக் காலையில் தனக்கென ஒரு நல்ல இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார்; அதன் மூலம் அவரால் நல்ல அளவில் செல்வத்தையும் சேர்க்க முடிந்தது; தன்னை நாடி வந்த வாடிக்கையாளர்களை அவர் பொய் சொல்லி ஏமாற்றவில்லை, நேர்மையாக சம்பாதித்தார் என்பதினால் அவருடன் பழகிய அனைவரும் அவரை நல்லவராகவும், உன்னதமானவராகவும் பார்த்தார்கள் ||19||

அவர் வடிவமைத்து கட்டித் தந்த வீடுகளின் சொந்தக்காரர்கள் ஒரு போதும் மன நிம்மதியை இழக்கவில்லை; அவர் கட்டிய வீடுகள் அனைத்துமே மனை சாஸ்திர வழிகாட்டுதல்களின்படி கட்டப்பட்டு வந்ததினால், அதில் வசித்து வந்தவர்கள் எந்த விதத்திலுமான விபத்துக்களினால் பாதிக்கப்படாமலும், தற்கொலைகள் போன்ற தீய. அகால மரணங்களை அடையாமலும் இருந்தார்கள் ||20||

இறுதியில் அந்த கட்டிடக் கலைஞர் மரணமடைந்து விண்ணுலகம் சென்றார்; அங்கு சென்றவர் அவர் செய்த புண்ணியங்களின் விளைவாக விண்ணுலக இன்பங்களை அனுபவித்த பின்னர் பூமியில் ஒரு நல்ல அரசனாகவும் மறு பிறவி எடுத்தார் ||21||

ஒரு அரசனாக அவர் எடுத்த பிறவியிலும் அரச மாளிகைகளையும், ஆலயங்களையும், பக்தர்களுக்கான தர்ம சாலை, விருந்தினர் இல்லங்கள் போன்றவற்றையும் கட்டினார்; மேலும், தன் மக்களுக்காகத் தோட்டங்கள், கிணறுகள், ஏரிகள் மற்றும் படிக் கிணறுகளை கட்டினார்; இப்படியாக அந்த பிறவியிலும் அவர் செய்து வந்திருந்த புண்ணியங்களினால் அவர் அமைதியாக மரணமடைந்தார்||22||

மீண்டும் அவர் செய்த புண்ணியங்களின் விளைவினால் விண்ணுலகிற்கு திரும்பிச் சென்று அங்கே மீண்டும் விண்ணுலக இன்பங்களை அனுபவித்த பிறகு, பூமியில் ஒரு பிறப்பை எடுத்தார். அந்த பிறப்பில் ஒரு உயர்குடி பிராமணக் குடும்பத்தில் பிறந்தார் ||23||

நடப்பவை அனைத்தும் எதனால் நடைபெறுகின்றது என்பது விளங்காத ஒரு மர்ம முடிச்சாகவே இருக்கும்; 84 லட்ச உயிரினங்களில் மானிடப் பிறவியைப் பெறுவது அரிது என்பார்கள்; அப்படி பிறப்பு எடுப்பவர்கள் அனைத்து புலன்களும் நிலையற்றவை மற்றும் அலைபாயும் தன்மை கொண்டவை என்றும், அவை அனைத்தையும் அடக்கி ஆள்வது தகுதியுள்ளவர்களுக்கு கூட ஒரு சவாலாக இருக்கும் என்பார்கள்||24||

குறிப்பாக அந்தண குருமார்கள் தத்தமது நெறி முறைகளை நன்கு அறிந்து கொள்ளவும், தங்கள் துறைகளில் அறிஞர்களாகத் திகழவும், தெய்வீக மற்றும் புனிதத் தன்மையைப் பேணவும், கூடுதல் முயற்சி எடுக்க வேண்டி இருக்கும்; அது நிகழ்ந்தால், அது நிச்சயமாக கடந்த காலத்தின் பெரும் புண்ணியத்தின் பலனாகும்’ ||25||

உதாரணமாக ஒருவர் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்து, சூரிய பகவானுக்கு ஒரு பசுவை தானம் செய்யவோ அல்லது பரிசளிக்கவோ முடிந்த அளவிலான வசதி பெற்றிருந்தால், அவர் செய்யும் அந்த புண்ணியத்தின் தன்மை அவரது முழு சமூகத்தையும் உயர்த்தும் அளவில் இருக்கும் என்பது சாஸ்திரங்களின் நம்பிக்கை ஆகும் ||26||

இப்படியாக தன் சிற்பக் கலையில் தேர்ச்சி பெற்ற அந்த சிற்பி, கட்டிடக் கலைஞ்சர்கள் ஒரு அரசனாகப் பிறந்து நீதியுள்ளவராக வாழ்ந்த பின் மரணம் அடைந்து, மீண்டும் போற்றத் தக்க ஒரு பிறப்பை, அதாவது ஒரு உயர்குடி பிராமணக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார்||27||

கருத்தரித்த காலத்திலிருந்தே, குழந்தை பெரியவனாகும்வரை செய்ய வேண்டிய 16 சடங்குகள்* துவக்கி வைக்கப்பட்டு அவருக்கான விதிமுறைப்படி செய்யப்பட்டன; அதனால் அவரது தாய் கருவுற்றிருந்தபோது அவருக்கு எந்தச் சிக்கல்களும் ஏற்படவில்லை; நல்ல தேதியில் பிறப்பு எடுத்தார்
{*16 சடங்குகள்: – கர்பதானம், பும்ஸவனம், சீமந்தம், ஜாத கர்ம, நாமக்கர்ணம், நிஷ்க்ரமணம், அன்னப் பிரசன்னம், சூட கர்ணம், கர்ணவேதனம், வித்யாரம்பம், உபநயனம், ப்ரைஸ்ரார்தம், ருது சுத்தி, சமர்த்தனம், விவாஹம், அந்த்யேஷ்டி} ||28||

அதன் பிறகு அவனது தந்தை ஜாத கர்ம* சடங்கைச் செய்தார்; அதில் வெகுமதிகளை வழங்கி, அந்தணர்களைக் கொண்டு மதச் சடங்குகளை செய்தார்; அதன் பிறகு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது; அவனது ஜாதகத்தின்படியும் குருமார்கள் வழிகாட்டுதலின்படியும் அவன் தேவஷர்மா என்று அழைக்கப்பட்டான்.
{* ஜாதகர்மா (Jatakarma) என்பது இந்து சமயத்தில் குழந்தை பிறந்தவுடன் செய்யப்படும் முதல் மற்றும் மிக முக்கியமான சம்ஸ்காரங்களில் (சடங்குகள்) ஒன்றாகும். குழந்தை பிறந்தவுடன், தொப்புள் கொடி துண்டிக்கப்படுவதற்கு முன்பு அல்லது அதற்குச் சற்றுப் பின், குழந்தையின் நலம், நீண்ட ஆயுள் மற்றும் அறிவாற்றலை வேண்டி இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. இது பொதுவாகப் பிறந்த 5, 7 அல்லது 11-வது நாட்களில் நடத்தப்படுகிறது}||29||

அவன் அமைதியான மற்றும் அழகான தோற்றம் கொண்டவனாக இருந்தான்; அனைவரிடமும் நல்ல முறையில் பழகி வந்தான்; அண்டை, அயலார் மற்றும் நண்பர்கள் என அனைவருமே அவன் மீது அன்புடன் இருந்தனர்; இளம் வயதில் அவனோடு விளையாடிக் கொண்டிருந்தது அவர்களுக்கு பரஸ்பர மகிழ்ச்சியை அளித்தது’ ||30||

தக்க நேரத்தில், தலை முடியை அர்ப்பணிக்கும் மொட்டை அடிக்கும் சடங்கு நடைபெற்றது; அதைத் தொடர்ந்து உபநயனமும் செய்யப்பட, வேத நூல்களைப் கற்றறியும் வயதை எட்டியவன் பள்ளிக்கு செல்லத் தொடங்கினான்; விளையாட்டில் குறைந்த நேரத்தையும் படிப்பில் அதிக நேரத்தையும் செலவிட்டபடி இருக்கலானான் ||31||

விரைவில் சந்தியா* வழிபாட்டிலும், அக்னி தெய்வத்திற்கான அபிஷேகத்திலும் தேர்ச்சி பெற்றார்; அவர் தனது குருவுக்கும் ஆர்வத்துடன் சேவை செய்தார், நீதி, நேர்மையுடன் இருந்தவாறு நேரத்தை செலவிட்டவர், கடுமையான பிரும்மச்சரியத்தையும் கடைபிடித்தார்; இயல்பாகவே தாராள மனப்பான்மை கொண்டவராக இருந்ததினால் அனைவராலும் விரும்பப் பட்டார்.
{*இந்து சமயத்தில், காலை மற்றும் மாலை வேளைகளில் சூரியனை நோக்கிச் செய்யப்படும் ஒரு சிறப்பு வழிபாடாகும்} ||32||

அவர் சம்ஹிதைகளையும்*, வேத மந்திரங்களையும், ஆறு வேதாங்க நூல்களையும் வரிசையாகக் கற்றறிந்தார்; தனக்கு கற்பிக்கப்பட்ட அனைத்தையும் முறையாக புரிந்து கொள்ளும் ஆற்றலையும் பெற்றிருந்தார்; அவர் ஒரு போதும் எவருடைய தூண்டுகோலினாலும் கூட தவறான மார்கத்தில் செல்லவில்லை; அவர் கல்வி அறிவை பெற்று அதன் மூலம் வெற்றிகரமாக நல்ல அனுபவங்களையும் பெற்றார்
{*சம்ஹிதைகள் (ஆங்கிலம்: Samhita) ஒரு வகை இந்து சமய நூல்கள் ஆகும். சம்ஹிதைகளை மந்திரங்கள் என்றும் கூறுவர். குறிப்பிட்ட தேவதைகளுக்கான மந்திரங்கள், வழிபாட்டு முறைகள், வேள்விகளுக்கான சூத்திரங்கள், ஆகியவற்றைக் கொண்ட தொகுப்பாகும். வேள்விக் காலங்களில் இவை முழுமையாக பயன்பட்டன }||33||

இப்படியாக படிப்படியாக வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து முடிவாக சிறந்த வேத பண்டிதராக மாறினார்; வேத பண்டிதர் என்ற அந்தஸ்தை பெற்றவர் தனது குருவிற்கு முறைப்படி குரு தட்ஷணை அளித்து அவரை கௌரவித்தார்; அவரது வளர்ச்சியும், அவரிடம் இருந்த முதிர்ச்சியும் அனைவராலும் போற்றப்பட்டது ||34||

அவர் அழகும், புத்திசாலித்தனமும், சிறந்த குணத்தையும் கொண்டவர் என்பதினால் அவருக்கு தக்க நேரத்தில் ஒரு பிராமணப் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது; இப்படியாக தனது வாழ்க்கையின் இரண்டாம் கட்டமான நீதியும், நேர்மையும் கொண்ட குடும்பஸ்தர் என்ற நிலைக்கு உயர்ந்தார் ||35||

வேத புராண அறிவாற்றலில் நிபுணத்துவம் கொண்டவராக இருந்த அவர் தினமும் கடைபிடிக்க வேண்டிய ஐந்து யாகங்களைச்* செய்து வந்தார். அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்னவெனில், ஜெப மாலையை உருட்டியபடி தெய்வ நாமத்தை உச்சரித்தல் ஆகும்; அந்த சடங்கை முறைப்படி செய்தால் அப்பாவித்தனம் விலகுமாம், அறிவு கூர்மையாகுமாம்
{*குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் தினமும் கடைபிடிக்க வேண்டிய பஞ்சமகா யக்ஞங்கள் எனப்படும் ஐந்து யாகங்கள் முறையான வாழ்விற்கும், நற்பலன்களைப் பெறுவதற்கும் அவசியம் ஆகும். அவை: பிரம்ம யக்ஞம் (வேதப் பயிற்சி), தேவ யக்ஞம் (தெய்வ வழிபாடு), பிதுர் யக்ஞம் (முன்னோர் வழிபாடு), பூத யக்ஞம் (உயிரினங்களுக்கு உதவுதல்), மற்றும் மனுஷ்ய யக்ஞம் (விருந்தினரை உபசரித்தல்) போன்றவை ஆகும்} ||36||

தக்க நேரத்தில் குளித்து விட்டு தூய்மைப்படுத்திக் கொண்ட பின்னர் அந்தந்த நேரத்திற்கான சந்தியா வந்தன நியமத்தை செய்தபடியும், ஜெப மாலையை உருட்டி வண்ணம் தெய்வ நாமத்தைக் கூறிக் கொண்டும், பிற நேரங்களில் புண்ணிய நூல்களை படித்துக் கொண்டு இருந்தவாறும் தனது காலத்தை கழித்தார்; தன்னால் இயன்றவரை தனது குருவிற்கு சேவை செய்து வந்தது மட்டும் இல்லாமல் தெய்வத்திற்கான சேவையையும் செய்து வந்தார் ||37||

சமூகத்தில் நல்ல அந்தஸ்து பெற்றவராக இருந்தாலும் அவர் அதனால் கர்வம் அடையவில்லை, அதற்கான எந்த பிரதி பலன்களையும் எதிர்பார்க்கவில்லை; வீட்டிலும் அவர் எதன் மீதும், அதிக அளவிலான பற்று கொண்டு இருக்கவில்லை, ஒதுங்கியும் இல்லாமல், ஒரு குடும்பத்திற்கு தாம் செய்ய வேண்டிய கடமைகளை அந்தந்த நேரத்தில் செய்தபடி இருந்தார்||38||

சிறப்பு வேத யாகங்களைச் செய்வதற்கு தம்மை அழைத்தபோது அங்கு செல்வதை தவிர்த்தது இல்லை; அவற்றை அலட்ஷியப்படுத்தவும் இல்லை; பல யாகங்களை தலைமை ஏற்று அவற்றை செய்து கொடுத்தார்; அதில் பங்கேற்ற அந்தணர்களுக்கு தாராளமாக பரிசுகளையும் வழங்கினார்; தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு தேவையான வருமானத்தையும் அவற்றின் மூலம் ஈட்டினார்’ ||39||

ஒருவர் தனது நித்ய கடமைகளை முறைப்படி செய்து கொண்டு தெய்வ பணிகளிலும் தூய்மையான உணர்வுடன் ஈடுபடும்போது பெருமளவிலான புண்ணியங்களை பெறுவார்கள்; ஆகவே அந்த நிலையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு விடுபவர்கள்; பிறருக்காக செய்யப்படும் புரோகிதங்களில் இருந்து விலகி விடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்; இல்லை எனில் அவர்கள் சேகரித்த புண்ணியங்கள் அவர்களை விட்டு விலகத் துவங்கி விடுமாம் ||40||

தேவ ஷர்மா இறைவனிடம் தனக்கிருந்த பக்தி பெருகியதை உணர்ந்தபோது, பிறருக்கு வேதம் கற்பிப்பதையும், வேள்விகள் நடத்துவதையும் கை விட்டார்; புலனின்ப உணர்வுகளை தன்னுள் இருந்து முற்றிலும் நீக்கிக் கொண்டார்; பிட்ஷை பெற்று உண்பதையே தனது வாழ்வாதாரமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். ||41||

அலைபாயும் மன ஆற்றல்களையும் புலன்களையும் கட்டுப்படுத்தி வைத்தல், தவம், தூய்மை, எளிமை, வாய்மை, பிறரை மன்னிக்கும் மனப்பான்மை, தாம் பெற்று இருந்த ஆன்மீகக் கடலில் மனதார மூழ்கி இருத்தல், தெய்வீகத்தில் மேலும், மேலும் அதிக நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுதல், இறுதியில் ஆத்ம கானத்தை அடைதல் போன்றவைகளே உண்மையான பிராமணர்களது வாழ்க்கை முறைகளாக இருக்க வேண்டும்||42||

எப்போது ஒருவர் தன்னுடைய புலன் ஆசைகளையும், கோபதாபங்கள், பேராசை, பொறாமை, பிறர் மீதான மோகம், தான், தனது என்ற எண்ணங்கள், தற்பெருமை கொள்ளுதல் போன்ற உணர்வுகளை முற்றிலும் தனக்குள் அடக்கிக் கொள்வார்களோ, அப்போதுதான் அவை அனைத்தும் பலன்களைத் தரத் துவங்கும், அவனுக்கும் உலகின் மீதான பற்றுகள் அனைத்தும் நீங்கும்; ‘நான்’ மற்றும் ‘எனது’ எனும் இருமை நிலையை பலவீனப்படுத்துவதன் மூலம் பற்றுகள் வெல்லப் பட்டால், அந்த பிராமணர் நிச்சயமாக அத்வைதத்தை உணர்வுபூர்வமாக அனுபவிக்கும் பாதையில் சென்று விடுவார்||43||

இவ்வாறு தன்னை தானே முற்றிலும் அடக்கிக் கொள்ளத் துவங்கியதினால் தேவ ஷர்மனின் மனம் தூய்மை அடைந்தது; அவர் எப்போதுமே தெய்வீக சொற்பொழிவுகளைக் கேட்க ஆவலாக இருந்தார்; ஒரு கட்டத்தில் வயதான அவர் துறவிகளின் வன வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க ஆசை கொண்டது; அதன் மூலம் இல்லற வாழ்க்கைக்கு ஒரு மகிழ்ச்சியான முடிவைக் கொண்டு வரவும் மனம் எண்ணியது ||44||

இப்படியான அந்த மூன்றாவது கட்டத்தில்தான் அந்த நிலைக்கு செல்ல முடிவெடுப்பவர், வெப்பம் மற்றும் குளிர் போன்ற இயற்கையின் மாறுதல்களை முற்றிலும் எளிதாக எதிர் கொள்ளும் மனப் பக்குவத்தை அடைய முடியும்; அப்போது அவர்களுக்கு எத்தகைய குளிரும், வெப்பமும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை; அதற்கான முதல் நிபந்தனை உறுதியான தியான நிலையில் அமர்ந்து கொள்வதுதான் ஆகும்; அதை முழுமையாக அறிந்து கொண்ட தேவ ஷர்மா, ஸ்ரீமத் ஹரியை மனதார தியானிக்கத் தொடங்கினார்; அது முதல் அவருக்கு தனது வாழ்வாதாரத்தை பராமரித்துக் கொல்வதைக் குறித்தோ அல்லது தான் சேமித்து வைத்திருந்த செல்வத்தை என்ன செய்வது என்பதைக் குறித்தோ கவலைப்படவில்லை||45||

இப்படியாக மூன்றாவது கட்டத்தை எளிதாகவும் வெற்றிகரமாகவும் கடைப்பிடித்து அனைத்து விரதங்களையும் கடைபிடிக்கத் துவங்கியதும், தனது குருவிடமிருந்து பெற்ற தீட்ஷையை மனதில் வேண்டி தியானித்து, முழுமையான துறவறம் எனும் நான்காவது நிலையை எட்டினார்; அந்த நிலையை எட்டியவுடன் அவரால் தனது பெரும்பாலான நேரத்தை தெய்வீகத்தில் மூழ்கி இருக்க முடிந்தது||46||

அவருக்கு கிடைத்த அனைத்து உபதேசங்களையும் சரிவர புரிந்து கொண்டதினால் அவருடைய எல்லா சந்தேகங்களும் விலகி இருந்தன; உள்ளார்த்மாவுடன் செய்து வந்திருந்த தியானத்தால் எதைக் குறித்தும் மனதில் மனதில் தேவை அற்ற சந்தேகங்கள் எழவில்லை; அவர் செல்ல வேண்டிய பாதை அவருக்கு தெளிவாக தெரிந்தது; மனமும் இதயமும் அமைதியினால் நிறைந்து இருந்தன||47||

யோகப் பாதையில் முன்னேறிச் சென்றபோது அதற்கு தடையாக அல்லது இடையூறாக இருந்த அனைத்தும் தானாகவே விலகத் துவங்கின; அதற்கு முன்னர் மனதில் இருந்த தடுமாற்றங்களும் மறைந்து போயின; அவரது அறிவாற்றல் தூய்மை அடைந்தது; மெல்ல மெல்ல ஆன்மீக ஞான யோக மார்கத்தில் முழுமையான வெற்றி பெற்றார்||48||

சரியான வழி முறையிலான வேத உபதேசங்கள், பற்றின்மை, எந்த விதமான எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் இல்லாத நிலை என அனைத்தும் எவரிடம் முழுமையாக நிறைந்து உள்ளனவோ, அப்படிப்பட்ட பக்தி மிக்க அறிஞ்சர்களுக்கு முக்தி கூட ஒரு பணிப் பெண் போல செயல்படத் துவங்கும் என்பார்கள் ; அந்த கூற்றின் உண்மைத் தன்மையில் எவ்வித ஐயமும் இல்லை||49||

இப்படியாக உயிருடன் இருந்தபோதே முக்தி நிலையை (ஜீவன் முக்தி) எட்டி இருந்த அந்தணர் தேவ ஷர்மா, தெய்வத்திடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்; ஆகவே எஞ்சிய தனது வாழ் நாட்களை, எவ்விதப் பற்றுதலும் இன்றி கழிக்க அவர் தீர்மானித்தார்; அவை அனைத்தையும் கடைபிடித்தபடி வாழ்ந்து கொண்டிருந்தவர் இறுதியில், உடலைத் துறந்த பின் விதேக முக்தி*எனும் முக்தி நிலையை அடைந்து மரணத்தை எய்தினார்
{* விதேக முக்தி என்பது, ஞானம் பெற்ற ஒருவர் தன் உடலைத் துறந்த பிறகு, மறுபிறவி இல்லாமல் நிரந்தரமாகப் பிரம்மத்தில் ஐக்கியமாகும் நிலையாகும்; அந்த நிலைக்கு சென்று விட்டால் ஜனன மரண சுழற்சியிலிருந்து முழுமையாக விடுபடுகின்றனர்} ||50||

சாஸ்திர விதிமுறைகள் என்பது தன் இச்சையாக செயல்பட்டு வந்திருந்த சீடனை நெறி முறைப்படுத்தி சரியான பாதையில் செல்ல வழி காட்டும் தன்மை கொண்டவை; சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள தெய்வங்களின் அறிவுரைகள் மனதிற்கு ஏற்புடையவைகளாக இல்லாமல் இருந்தாலும், ஆன்மீக ரீதியாக விளக்கப்பட்டுள்ளவைகளை ஒதுக்கித் தள்ளாமல் அவற்றின் மீது நம்பிக்கை வைத்துக் கொண்டிருப்பவன் இறுதியில் மிக உயர்ந்த ஆன்மீக நிலைக்கு செல்கின்றான்||51||

சிற்பக் கலை மற்றும் கட்டிடக் கலை குறித்த வேத நூல்களுக்கு மதிப்பளித்து அதில் கூறப்பட்டு இருந்தவற்றை தனது தொழிலில் சரியான முறையில் கடைப்பிடித்து வந்திருந்ததின் மூலம் விதிஞ்ஜயா எனும் அந்தத் திறமையான கட்டிடக் கலைஞன் தான் பிறப்பு எடுத்த அடுத்தடுத்த ஜென்மங்களில் உயர்ந்த ஆன்மீக நிலைக்கு படிப்படியாக முன்னேறிச் சென்று கொண்டிருந்தாலும், இறுதியில் அவன் மேன்மையான யோகிகளுக்கு இணையான அதே உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தான்||52||

இது ஒரு உதாரணம் மட்டுமே; இப்போது உங்கள் ஐயங்களைத் தெளிவு படுத்தும் வகையில், மற்றொரு உதாரணத்தை நான் உங்களுக்கு எடுத்துரைக்கப் போகிறேன்’ என்று குரு பிருகஸ்பதி தேவேந்திரனுக்கு தொடர்ந்து உபதேசம் செய்து வந்தார் என்று அந்த கதையை கூறிய ஸ்ரீமத் தத்தர், மேலே தான் கூற உள்ளவற்றை முழு கவனத்துடன் கேட்குமாறு அர்ஜுனனுக்கு அறிவுரை கொடுத்தார் ||53||

ஸ்ரீமத் தத்தர் அர்ஜுனனுக்கு அடுத்த கதையை கூறலானார் ‘நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள மகிஷ்மதி எனும் தலை நகரில், இசைக் கலை மற்றும் இசைக் கருவிகளை இசைப்பதில் தேர்ச்சி பெற்ற, திறமை மிக்க ஓர் அந்தணர் வாழ்ந்து வந்தார்’ ||54||

அழகிய தோற்றம் கொண்டவனது கவிதை திறனும் மேன்மையானதாக இருந்தது; இசை வல்லுனராக இருந்தவன், வாத்சாயன முனிவரின் ‘காம சூத்திர’ (காதல் தத்துவ) நூலிலும் சிறந்த புலமை பெற்றிருந்தான்; அத்தகைய திறமைசாலியானவன் , தனக்கு ஏற்ற ஒரு பெண் துணையைத் தேடி அலைந்து கொண்டிருந்தான்||55||

இறுதியில், தாமரை மலரின் நறுமணமும், கற்பொழுக்கம் மிக்கவளுமான ஒரு பெண்ணைக் கண்டறியும் வேட்கையுடன், அவன் அரண்மனையை நோக்கிச் சென்றான். அரண்மனைக்குள் நுழைய அவனுக்கு அனுமதி கிடைத்த பின்னர் மன்னனை சந்தித்தவன் அவரை வணங்கி மரியாதை செலுத்தினான் ||56||

தன்னிடம் வந்த அந்தணரைப் பார்த்து மன்னன் ‘அந்தணரே, இங்கு வருமளவுக்கு உங்களுக்கு என்ன அவசரம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கூறினால் உதவுகிறேன்’ என்று கேட்டார்; அதற்கு அந்த அந்தணர் ‘சாஸ்திர நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கணங்களுக்கு பொருந்தக் கூடிய குண நலன்களைக் கொண்ட ஒரு மனைவியை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்; அதற்கு நீங்கள் உதவ வேண்டும்’ என்றார் ||57||

புகழ்பெற்ற முனிவர் அருளிய ‘காம சாஸ்திர’ நூலில் நான் ஒரு நிபுணனாகப் பெரிதும் மதிக்கப்படுகிறேன்; மேலும், உடலின் அங்க அடையாளங்களைக் கொண்டு பலன் கூறும் ‘சாமத்திரிகா சாத்திர’ நூலிலும் எனக்கு நல்ல புலமை உண்டு; நான் குறிப்பிட்ட அந்தப் வேத நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளவாறு, தூய்மையும் நற்பண்புகளும் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு பெண்ணை நான் கண்டால், அவளையே நான் மணந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்’ என்றார் ||58||

அவன் கூறியவற்றைக் கேட்ட மன்னர், அந்த அந்தணரின் கல்விப் புலமையை மெச்சிப் பாராட்டிய பின்னர், அழகிய கண்களைக் கொண்ட தன் மகளை அவனுக்குக் அறிமுகப் படுத்தினார்; அந்தப் பெண்ணின் கண்கள், அவளைக் காண்போர் மனதில் மோகத்தை எழுப்பி, பலரையும் நிலை தடுமாறச் செய்து வீழ்ச்சியடையச் செய்யும் அளவிலான கவர்ச்சியுடன் இருந்தது ||59||

அந்த அந்தணனும்,சாத்திர நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள அத்தனை நற்குணங்களும் அந்த இளவரசியிடம் முழுமையாக அமைந்திருப்பதைக் கண்டு வியந்து போனான்; அவளைக் கண்டதும் அவன் மனதில் கடும் காதல் வேட்கை எழுந்தது; எனினும், தான் இருக்கும் இடத்தின் சூழலை உணர்ந்து கொண்ட அவன், உடனடியாகத் தன் உணர்வுகளைக் கட்டுப் படுத்திக் கொண்டு, தன முன் வந்து நின்ற அந்தப் பெண்ணின் கண்களை உற்று நோக்கினான்||60||

அந்த அந்தணரின் முகத்தைப் பார்த்த அந்தப் பெண்ணும், அவன் அழகில் மயங்கி அவனைப் பார்த்தபடி இருந்தாள்; அந்த இரு ஜோடிகளை நோக்கிய மன்னர், அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் பொருத்தமான ஜோடியாக இருப்பார்கள் என்பதை உணர்ந்தார்; தன் மகளுக்கு ஏற்ற ஒரு நல்ல வரன் கிடைத்ததை எண்ணி அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் ||61||

மன்னர் தனக்குள் சிந்தனை செய்தார் ‘இந்த அந்தணனே என் மகளுக்கு மிகவும் பொருத்தமான மணமகனாக இருப்பான் என்று எண்ணுகின்றேன்; இவன் நல்ல அறிவாற்றல் பெற்றவனாகவும், நன்னடத்தை கொண்டவனாகவும் தெரிகிறான்; எனக்குப் பிறகு இந்த அரசை நிர்வாகிக்க எவரும் இல்லை; எனவே, இந்த அந்தணனிடம் என் மகளை மணந்து கொண்டு இங்கேயே எனது மருமகனாக தங்கி இருக்க வேண்டும் என்று கேட்கலாம்’||62||

இதற்கிடையில், அந்த அந்தணனும் இளவரசியை உற்று நோக்கிய பிறகு, அவள் வேத சாஸ்திர புத்தகங்களில் பரிந்துரைக்கப் பட்டவாறு இருப்பதை அறிந்து கொண்டு அவள் மீது ஆசை கொண்டான்; அதே போல இளவரசியும், தனக்குத் தகுந்த துணையைத் தேடிக் கண்டறிந்த பிறகு, வேறு என்ன செய்திருக்க முடியும்?; ஆனாலும் அவள் தன் உள்ளுணர்வுகளை வெளிப்படையாகக் காட்டவில்லை||63||

அரசனும் பெருந் தன்மையுடன் மேலும் தொடர்ந்து நினைத்த வண்ணம் இருந்தான் ‘ஒருவேளை இந்த பிராமணன் ஏழையாக இருந்தால், அவர்களின் திருமணப் பரிசாக எனது ராஜ்ஜியத்தில் பாதியை அவனுக்கு அளிப்பேன்’; இப்படியாகவெல்லாம் மனதிற்குள் எண்ணிக் கொண்டு திருமண ஏற்பாடுகளுக்கு ஒரு சுப தினத்தைக் கண்டறிய அவன் விரைவாக ஜோதிடர்களை அழைத்தான்||64||

அந்த விதி வசமான நாளில், அரசன் இளவரசியை அந்த அந்தணனுக்கு திருமணம் செய்து கொடுத்ததுடன், தனது ராஜ்ஜியத்தில் பாதியையும் அவர்களின் திருமணப் பரிசாக அளித்தான்; அந்தக் கொண்டாட்டம் பதினாறு நாட்கள் முழு அரச கம்பீரத்துடன் தொடர்ந்தது; மேலும் அந்த பிராமணன் அவர்களின் மருமகனாக அங்கேயே தங்க ஒப்புக் கொண்டான்||65||

புராணங்களில் வரும் சகோரப் பறவை எனப்படும் சக்ரவாகப் பறவைகளைப் போல, அவர்களின் பரஸ்பர அன்பும் பாசமும் நாளுக்கு நாள் வளர்ந்து, அவர்கள் ஒருவரோடு ஒருவர் தங்கள் திருமணப் பேரின்பத்தில் ஒன்றிணைந்தனர் ||66||

மனம் மற்றும் பேச்சின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்று கூறப்படும் ஆனந்த நிலை என்பது சூட்சும உடலைக் கடந்த பிறகும் முழுமையாக ஆண் பெண்ணை ஆட்கொள்ளும்; மணமகன் மற்றும் மணமகள்களுக்கு இடையே எழும், ஆத்மாவின் பரிபூரண வடிவமாக விளங்கும் அந்த ஆனந்தம், உண்மையில் எல்லையற்றது மற்றும் ஒவ்வொரு நாளும் புதுப் பொலிவோடு இருக்கும் ||67||

ஒரு மனிதனின் ஆனந்தத்தின் அளவை ஒரு அலகாகக் (யூனிட்) என்று கருதினால், அதைத் தொடர்ந்து நூறு, நூறாக உயர்த்திக் கொண்டு, பல்வேறு பித்ருக்கள், தேவர்கள் மற்றும் தெய்வங்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தை ஓரளவு அறிந்து கொள்ள முடியும்; ஆனால் அவை அனைத்தையும் விட மேலும் நூறு மடங்கு அதிகமானது ஆத்மாவின் உணர்வு பூர்வமான அனுபவத்தின் ஆனந்தம் என்பார்கள் ||68||

சாஸ்திரம் கூறுவது போல், காமக் கலையை முழுமையாக அறிந்து கொண்டு அதில் தேர்ச்சி பெற முயற்சி செய்யும் ஒருவரால் மட்டுமே தாம்பத்தியத்தில் முழுமையான ஆனந்தத்தைப் பெற முடியும்; அந்த நிலையில்தான் அவனால் தெய்வீகத்தின் முத்திரைகளையும் அவற்றின் சிறப்பான தன்மைகளையும், உண்மையான இயல்புகளையும் அறிந்து கொள்ள முடியும்; அவற்றை அறிந்து கொள்ளும்போது பேரின்ப நிலையை அனுபவிக்க முடியும்||69||

அதேபோல், அத்தகைய வல்லுநர்கள் ஒரு சாதாரணப் பெண்ணுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், அப்படிப்பட்ட நிலையிலான பெண்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி மிகவும் குறைவாக இருப்பதைக் காண்பார்கள்; அதைத் தொடர்ந்து ஏழ்மை நிலையினால் அவர்களுக்கு விரைவில் துக்கமும் எழும் என்பதால் சாதாரணத் தம்பதியினர் தாம்பத்தியத்தில் அடையும் தற்காலிக மகிழ்ச்சி நிலையை, பூரண ஆனந்த நிலையோடு எப்படி ஒப்பிட முடியும்? ||70||

வேத நூலை அரைகுறை மனதுடன் படித்து விட்டு தீராத சந்தேகங்களை உள்ளத்தில் சுமந்து கொண்டு, பொறாமையும், எதிர் மறையான போட்டி மனப்பான்மையும் கொண்டவர்களாக இருப்பவர்கள், வேத நூலின் சாரத்தைப் முழுமையாக புரிந்து கொண்ட அறிஞர்கள் பெறும் அளவிலான ஆனந்தத்தை அனுபவிப்பது இல்லை ||71||

இல்லறத்தை அனுபவித்த பின்னர், மன திருப்தியுடன் நிம்மதியாக உறங்குபவன், தன்னை இரண்டற்றவனாக உணர முடிந்தவனாக இருப்பான்; உடலுடன் கை இணைந்திருப்பது போல, ஆத்ம ஞானத்தை ஒரே நிலையில் எப்போதும் வைத்திருப்பான் ||72||

நம்மில் பெரும்பாலோர் இந்த உண்மைகளை அறியாதவர்கள்; நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்து வந்தார்களோ அப்படியேதான் நாமும் ஒருவித கட்டுப்பாட்டுடன் இல்லறத்தில் வாழ்கின்றோம்; அதனால் நமது புலன் இச்சைகளுக்காக ஏங்கிக் கொண்டே இருக்கிறோம்; அது நம்மை நமது இல்லத்தரசிகளுடன் ஒருமுகப்படுத்தாமல் வைத்திருக்கிறது ||73||

ஆனாலும் நான் குறிப்பிட்ட அந்த அந்தணர் ஒரு உண்மையான அறிஞர்; அவர் அன்பின் சூத்திரங்களில் தேர்ச்சி பெற்று இருந்தவர்; உயிருடன் இருக்கும்போதும் சரி, முக்தி நிலையில் இருக்கும் போதும், தாம்பத்திய உறவு தரும் மகிழ்ச்சியை அவர் நன்கு அறிந்திருந்தார்||74||

இளவரசி தன் கணவனான பிராமணனின் பாதங்களில் முழுமையாக தன்னை அர்பணித்துக் கொண்டு இருந்தாள் என்பதினால் தனது தாம்பத்திய வாழ்க்கையில் முழுமையான மனது திருப்தியுடன் இருந்து வந்தாள்; தனது உடல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேறு எந்த எண்ணத்தையும் வைத்திருக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லாமல் இருந்தது; எனவே ஒரு கணம் கூட அவனிடம் கொண்டிருந்த விசுவாசத்திலிருந்து அவள் விலகிச் செல்லவில்லை ||75||

தன் கணவனின் மனதில் என்ன இருந்தது என்பதை அவள் விரைவில் அறிந்து கொள்பவளாக இருந்ததினால், தனது கணவரிடம் ஒரு பக்தியுள்ள மனைவி எப்படி நடந்து கொள்வாளோ அவ்வாறே அவனுடன் உடலளவிலான அனைத்து விதங்களிலான மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டாள்; அவன் பரமாத்மனுடன் இரண்டறக் கலந்து கொண்டு இருந்தவன் என்பதையும் அவள் அறிந்திருந்தாள் என்பதால் தானும் அதையே கடை பிடித்தாள்; அதனால் கணவருடன் அவள் புத்திசாலித்தனமாக முழுமையான அளவில் இன்பத்தை அனுபவித்தாள் ||76||

அந்த தம்பதியர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ கூட எந்த விதமான பாவச் செயலையும் செய்யவில்லை; அதன் விளைவாக, கனவில் கூட துன்பம் அவர்களை வருத்தப்பட வைக்கவில்லை; அவர்கள் மனதில் தாம் இருவர் என்ற உணர்வு தோன்றவில்லை, தாம் இருவரும் ஒருவரே என்ற உணர்வே நிறைந்து இருந்தது என்பதினால் அனைத்து வகையிலும் ஒருவருக்கொருவர் மனதார இன்பத்தை அனுபவித்தனர்||77||

அவர்கள் பரஸ்பரம் தங்கள் மத, சமய நெறிமுறைகளை மீறாமல் இருந்து வந்தார்கள்; இல்லற வாழ்க்கைக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்தையும் முறையோடு செய்தனர்; அத்தகைய செயல்களை முழு மனதோடும், மகிழ்ச்சியுடனும் செய்து வந்ததினால் தங்கள் மீது பரமாத்மனும் மகிழ்சியுடன் இருப்பதையும் அவர்களால் உணர முடிந்தது||78||

அந்த அரிய தம்பதியினர், பல தேவர்களுக்கும் கூடத் தெரியாத ஆனந்த நிலையை அறிந்திருந்தனர்; வேத புராணங்களில் கூறப்பட்டு வந்திருந்த பேரின்ப நிலை என்பதை அவர்கள் உணர்வு பூர்வமாக அனுபவித்தனர்; காலப் போக்கில் இருவரும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உயிர் துறந்த பின்னர் தேவ இசைக் கலைஞர்களான கந்தர்வ லோகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்||79||

அங்கும் அவர்கள் ஒருவருக்கொருவருடனான அன்பு தம்பதியினராகவே இருந்தனர்; மேலும் இசை மற்றும் அதன் ஸ்வரங்கள் மூலம் பர பிரும்மனுடன் ஒன்றிணையும் பயிற்சி மார்க்கத்தையும் கற்றரிந்தார்கள்; அவர்கள் தங்கள் இசை திறமையைக் கொண்டு பொருத்தமான இசைக் கருவிகளின் பயன்பாட்டில் நல்ல பயிற்சி பெற்று , விரைவில் தேவ லோக இசைக்க கலைஞ்சர்களிடையே நற்பெயரை பெற்றனர் ||80||

ஒரு நாள் இருவரும் இமயமலை சிகரத்தை சென்றடைந்து, அங்கே கண்ட இயற்கை அழகுடன் சேர்ந்து பாடத் தொடங்கினர்; தனது ஜடா முடியில் சந்திரனைத் தாங்கி நின்ற சிவபெருமான் ஒருநாள் அவர்களின் பாடலைத் கேட்க நேரிட்டது; அந்த பாடல்களின் தனித்துவத்தால் கவரப்பட்ட அவர் அவர்களிடம் வந்தார்||81||

அவர்கள் பாடிய பாடலின் எளிய, தெளிவான இசைக் குறிப்புகளையும், அவற்றின் தாளங்களுக்கு ஏற்ப, ஏழு இசைக் கருவிகளையும், அவர்கள் பயன்படுத்திய விதத்தையும் கண்டார். இசை பற்றிய 22 சுருதி* நூல்களையும், பாடலில் ஒலிகளையும் இசைக் குறிப்புகளையும் நீட்டிப்பது எப்படி என்று கற்பிக்கும் 49 சாஸ்திரங்களையும்** அவர்கள் கற்றுத் தேர்ந்திருந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார்.
{(i)*இந்திய பாரம்பரிய இசை மற்றும் கர்நாடக இசையில், ஒரு சப்தத்தில் (Octave) உள்ள நுட்பமான சுருதிகளைப் பற்றி விளக்கும் கொள்கை 22 சுருதிகள் (22 Shrutis) என்று அழைக்கப்படுகிறது (ii) பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தில், கலைகளின் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கு (Rasa Theory) அடிப்படையாக 49 பவங்கள் (உணர்ச்சிகள்/மனநிலைகள்) விவரிக்கப்பட்டுள்ளன; இசைச் சாஸ்திரத்தில் 49 என்ற எண், பண்டைய இந்திய இசை மரபான சாமவேத இசை மற்றும் பரதரின் நாட்டிய சாஸ்திர அடிப்படையிலான 49 தானங்கள் (Tanas) மற்றும் 49 பவங்கள் (Bhavas / உணர்ச்சிகள்) ஆகியவற்றைக் குறிக்கிறது. ||82||

அந்தத் தம்பதியினர், ராக ராகினிகளை அவற்றுக்கு ஏற்ற இசைக் குறிப்புகள் தவறாமல் பாடினர்; மேலும் பாடல்களின் துவக்கத்தை எப்போது தொடங்க வேண்டும் என்பதையும் எப்போது நிறுத்த வேண்டும் என்பதிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள்; அவர்களது இசைத் திறமையால் அவர்களால் சிவபெருமானையே வசீகரிக்க முடிந்தது எனும்போது அவர்களது இசையைக் கேட்ட பூமி மண்டலம் பெரும் மகிழ்ச்சி அடைந்தது என்பதை கூறவும் வேண்டுமா? ||83||

அவர்களின் மனதில் ஏற்படுத்திய தாக்கம் எப்படி இருந்தது என்றால் சிவபெருமானும் கூட தனது தியான நிலையை விட்டு வெளியேறி வந்து, அவர்களை நோக்கி மிகுந்த மகிழ்ச்சியுடன், அன்போடும் தம் கைகளை உயர்த்தி ஆசிர்வதித்தார்||84||

அவர் கூறினார் ‘நீங்கள் இருவரும் இசைக் கலைஞர்களுக்குள் மெத்த கற்றறிந்த மேதைகள் ஆவீர்; உங்கள் பாடல் உண்மையிலேயே மனதை உருக்கும் வண்ணம் இருந்தது; அது சாம வேதத்தின் இன்னிசையைப் போலவே அற்புதமாக அமைந்து இருந்தது; பேரின்பத்தின் இருப்பிடத்தில் இருப்பதை போன்ற உணர்வை உங்கள் பாடல் கொடுத்தது ||85||

நீங்கள் இருவரும் பாடிய பாணியிலான இசையை, இதற்கு முன் நான் கேட்டதே கிடையாது; அத்தகைய அற்புதமான மனதை மயக்கும் இசையை கேட்கும் பேறு எனக்கு இதுவரை கிடைத்ததில்லை; உங்கள் எளிமையான, நேர்த்தியான, தெளிவான, மயக்கும் இசையை கேட்டு நான் அளவில்லா ஆனந்தம் அடைந்தேன் ||86||

பல தேவர்கள் படும் துன்பங்களைப் போல, நீங்கள் இருவரும் எவ்வித இன்னல்களுக்கும் ஆளாக மாட்டீர்கள்; நான் இப்போதே உங்களுக்குச் ஸ்வர்க லோகங்களில் நிரந்தர இடமளிக்கிறேன்; அங்கே சென்று மகிழ்ச்சியோடும் அமைதியோடும் வாழுங்கள்; உங்கள் தனித்துவமான இசை திறமையினால் அங்குள்ள தேவ-தேவர்களை மகிழ்ச்சியாக இருக்க வையுங்கள்’||87||

இவ்வாறு அவர்களுக்கு ஆசி கூறிய சிவபெருமான் அவர்களைத் தமது விமானத்தில் அமர்த்திக் கொண்டு, அவர்களைச் ஸ்வர்க லோகங்களுக்கு தானே அழைத்துச் சென்று, அங்கே அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்||88||

ஸ்வர்க லோகத்திற்கு சென்ற அந்த தம்பதியினர் தங்கள் இசைக் கலையை மேலும் மெருகேற்றுவதில் ஈடுபட்டனர்; அவர்களின் இசை, அங்கே வாழ்ந்த கின்னர்* தம்பதியினரின் இதயங்களைக் கவர்ந்தது; மேலும், அங்கே கூடியிருந்த தேவ மங்கையரும் இசைக் கலைஞர்களும், அவர்களின் இசையைக் கண்டு வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்து நின்றனர்.
{*கின்னரர்கள் என்பவர்கள் மனித உடலும் பறவை அல்லது குதிரை முகமும் கொண்ட தேவ சாதியினர் ஆவர்; கந்தர்வர்கள் போல இவர்கள் சிறந்த இசைக் கலைஞர்களாகவும், யாழ் வாசிப்பதில் வல்லவர்களாகவும், குபேரனின் பணியாளர்களாகவும், நடனமாடும் தேவதைகளாகவும் இலக்கியங்களில் சித்தரிக்கப்படுகின்றனர்} ||89||

அந்த அந்தணரின் வாழ்க்கை இவ்வாறு தொடர்ந்து சென்றது; தேவர்களுக்கிடையேயான இசைக் கலைஞர்களிடையே அவர் நற் பெயரைப் பெற்றார்; அந்தப் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து பெருகியது; அதே வேளையில், தன் ஆழ் மனதிலும், உள்ளத்திலும் அவர் எப்போதும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருந்தார் ||90||

காலம் இவ்வாறு மகிழ்ச்சியுடன் ஓடிக் கொண்டு கொண்டிருக்கையில், ஒரு நாள் படைப்புக் கடவுளாகிய பிரம்ம தேவரின் இருப்பிடத்தில் ஒரு பிரம்மாண்டமான விழா நடைபெற்றது; அந்த விழாவிற்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில், பல ஸ்வர்க லோக இசைக் கலைஞர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தனர் ||91||

முன்பொரு காலத்தில் சாதாரண அந்தணனாக திகழ்ந்தவர், இப்போது தேவர்களுக்கே உரிய ஒரு ஸ்வர்க லோக இசைக் கலைஞராக பெரும் அளவிலான புகழ் பெற்று அங்கு இருந்தார் என்பதினால் சிறப்பு மிக்க அந்த விழாவிற்கு அவரும் அழைக்கப்பட்டிருந்தார்; பிற தேவர்களுடன் அவர் விழா நடைபெற்ற இடத்திற்கு சென்றார் ||92||

மிருகத் தோல் கொண்டு செய்யப்பட்டு இருந்த தபலா, மேளம் போன்ற வாத்தியங்கள்; வீணை, கிதார் போன்ற நரம்பு வாத்தியங்கள்; துளைகளைக் கொண்டு இசைக்கப்படும் புல்லாங்குழல், எக்காளம் போன்ற ஊது குழல்கள் ; மற்றும் ஒன்றோடு ஒன்று மோதும்போது ஒலி எழுப்பும் தாளம் (Cymbals) போன்ற கனமான வாத்தியங்கள் போன்றவை மூலம் இசை இசைக்கப்பட்டது ||93||

தேவ கன்னிப் பெண்களின் நடனங்களுடன் அனைத்தும் இணைந்து இசைக்கப்பட்டன; ஒவ்வொருவரும் தங்கள் உணர்ச்சிகளையும் நடனத் திறமையையும் வெளிப்படுத்துவதில் வல்லுநர்களாக இருந்தனர்; இசைக் கலைஞர்கள் மனதார பாடினர்; ஒட்டு மொத்த சூழலும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியை உருவாக்கியது||94||

அப்படிப்பட்ட சூழ்நிலையில் பாடிய பாடகர்கள் அனைவரை விட மேன்மையாக அந்த பிராமணனின் குரல் தனித்து நின்றது; அது பார்வையாளர்கள் அனைவரின் காதுகளையும் இதயங்களையும் கவர்ந்தது; பிரம்மதேவன் கூட அவருடைய பாடலின் இனிமையினால் மனம் கவர்ந்து நின்று இருந்தார் ||95||

அந்த பிராமணர் பாடிய பாடலின் இனிமையினால், பாடிக் கொண்டும், இசைகளை எழுப்பிக் கொண்டும் இருந்த பிற கலைஞர்கள் தமது பாட்டையும், இசை ஒலிகளையும் நிறுத்தும்படி பணிவுடன் கேட்டுக் கொள்ளப்பட்டனர்; பிராமணத் தம்பதியினர் பாடிய பாடலுக்கு முன் உரிமை தரப்பட்டு அவர்கள் பாடத் துவங்க, ஊசி விழுந்தால் கூட கேட்கும் அமைதியில் அவர்கள் பாடுவதை அனைவரும் கேட்டார்கள். அவர்களின் இசையும் ராகமும் நீண்ட நேரம் அனைவரது மனதையும் அவர்களிடமே தக்க வைத்துக் கொண்டது ||96||

பிரம்மதேவன் அவர்களின் இசையினால் மனம் கவர்ந்து போய் இவ்வாறு கூறினார் ‘உங்கள் பக்தி ரம்யமான பாடல்களையும் துதிகளையும் கேட்ட பின்னர் இங்கு உங்கள் வாழ்க்கை ஆனந்த மயமானதாகவும் திருப்திகாரமாகவும் உள்ளது என்பது புரிகின்றது; இப்படிப்பட்ட இசைகளின் மூலமே ஒருவரால் பரபிரும்மனின் ஆனந்தத்தை உணர்வுபூர்வமாக அனுபவிக்க இயலும் ||97||

இன்று இந்த உத்தமமான தம்பதியினரின் இசையின் மூலம் இசையை ஆத்மார்த்தமாக நம்மால் உணர முடிகின்றது; இசைக்கு மூலமே அதன் சாராம்சம் மட்டும் அல்ல, அதன் இனிமைதான்; ஒவ்வொரு கலைஞர்களும் அவற்றை தத்தமது பாணியில் வெளிப்படுத்துகிறார்கள்; இசையின் கீதம் மனதிற்கு தரும் ஆனந்தத்துடன் வேறு எதையுமே ஒப்பிட முடியாது ||98||

இசை தரும் ஆனந்தம் தனித்துவமானது, ஏனெனில் அது கேட்பவர்களையும் பேரின்பத்தில் முழுக வைத்து விடும்; தெய்வீக இசை அதன் கலை நயத்தில் நம்மை இணைத்து விடும்; தெய்வீக இசையை கேட்கையில் ஒருவருடைய துக்கம், துயரம் போன்ற அனைத்துமே தற்காலிகமாக மறந்து விடும், எதிர் மறை எண்ணங்களும் விலகி நிற்கும் ||99||

ஆகவே இனி இந்தத் தம்பதியினர், பிரம்ம லோகம் எனும் இந்தத் தேவலோகத்திலேயே தங்கியிருக்கட்டும்; இந்த இசைக் கலைஞரும் அவரது மனைவியும், அவர்களது கலையின் வழியே தெய்வீகத்தை நாங்கள் அனுபவித்துக் கொண்டே இருக்க, எப்போதும் இந்த மேன்மையான தேவலோகத்தினர் அருகிலேயே இருக்கட்டும் ||100||

இவ்வாறு, அந்த மாபெரும் நிகழ்வில் பிரம்மதேவன் அறிவித்தது மட்டும் இல்லாமல் அனைவரும் காணும் வகையில் அவரது ஒளி மயமான முகமும் அவர் அடைந்த மகிழ்ச்சியும் வெளிப்படையாகத் தெரிந்தது; பிரும்ம லோக விதி விலக்காக அந்த இரண்டு கலைஞர்களுக்கும் உரிய அன்போடும் மரியாதையோடும், தனது சன்னிதியில் இருக்கும் பாக்கியத்தை பரிசாக கொடுத்தார்||101||

இவ்வாறு, தனது கலையில் முழுமை எய்தியவரும், வாத்சாயன முனிவரின் காம சூத்திரங்களில் வல்லவரும், சிவபெருமானால் மிகச் சிறந்த தேவகான வித்வான்களில் ஒருவராக ஆசீர்வதிக்கப்பட்டவருமான அந்த அந்தணர், இப்போது தனது மனைவியுடன் மேற்கூறிய அந்தத் தேவலோகத்தில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பெற்றுக் கொண்டு அங்கேயே தங்கி உள்ளார்||102||

உண்மையான ஆன்மீகத் தேடுதலில் ஈடுபட்டுள்ளவர்களின் பட்டியலில் காத்திருக்கும் அப்படிப்பட்ட தெய்வீக நிலை, அந்தத் தம்பதியினரை தானாகவே வந்து அடைந்தது; இது படிப்படியாக நிகழும் ஒரு முன்னேற்றமாகும்; தொடர்ச்சியான முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லும் பாதை ஆகும் என்பதினால் இனி அவர்கள் மறு பிறவியையோ அல்லது கர்ம வினைகளின் பிணைப்பையோ எதிர்கொள்ள வேண்டியதில்லை||103||

ஆனாலும் ஞான நிலையிலான முதிர்ச்சி பெறாதவர்களும் கூட, மிக அரிதாக அந்த தெய்வீக பிரம்மலோகத்திற்கு சென்று தங்க அனுமதிக்கப்படலாம்; அப்போது அங்கு தங்கும் அவர்கள் புனித வேத நூல்களை நன்கு கற்றறிந்து, அவற்றை காதால் கேட்டு தமது ஆன்மீகச் சாதனைகளைத் தொடர்ந்து கொண்டிருக்க முடியும்; அதன் இறுதிப் பயனாக, அவர்கள் நிர்வாண நிலை எனும் புனித நிலையை அடைய முடியும் ||104||

மேலும், நற் புண்ணியச் செயல்களால் பலன்கள் பெற்றவர்களும் இந்தத் தேவலோகத்திற்கு வருகை தரலாம்; ஆனால், அங்கு சென்ற பிறகு அவர்கள் தங்கள் உயர்ந்த ஆன்மீக லட்சியங்களுக்கு ஏற்ப செயல்படத் தவறினால், அவர்களின் புண்ணியங்களின் பலன்கள் குறைந்து போய்விடும் ; அவர்கள் மீண்டும் பூவுலகிற்கு சென்று அங்கு மறுபிறவி எடுக்க நேரிடும்’||105||

இப்படியாக தேவேந்திரனுக்கு அறிவுரை கூறிய குரு பிருஹஸ்பதி மேலும் கூறினார், அதையும் கேள் கூறுகின்றேன்; பிரஹஸ்பதி கூறினார் ‘இந்திரா, அந்த அந்தணர் காமக் கலையில் வல்லவராகத் திகழ்ந்த போதிலும், அதற்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல், அத் திறமையை மற்ற நற்பண்புகளுடன் சேர்த்து வாழ்க்கையில் செயல்படுத்தி வந்ததினால் மட்டுமே அவரும் அவருடைய மனைவியும் திவ்யமான தெய்வீக லோகத்தை அடையும் பேறைப் பெற்றனர்||106||

வேத மற்றும் அனைத்து புனித நூல்களின் சாராம்சம்களையும் ஆழமாக உணர்ந்து கொண்ட காரணத்தினாலேயே, அவர் படிப்படியான முக்தியைப் பெறுவதற்குத் தகுதியுடையவராக மாறினார்; அத்தகைய முக்தியை அடைவதே அவரது குறிக்கோளாகவும் விருப்பமாகவும் அமைந்திருந்தது; அதன் பயனாகவே, அவர் முக்தி நிலைகள் நான்கையும்* ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கும் பேறைப் பெற்றார்.
{* முக்தி அடைவதில் நான்கு நிலைகள் உள்ளன; அவை (i) சாரூப்யம் – இறைவனைப் போன்றதொரு உருவத்தைப் பெறுதல்; (ii) சாமீப்யம் – இறைவனுக்கு அருகிலேயே தங்கியிருக்கும் பேறு பெறுதல்; (iii) சாலோக்யம் – இறைவன் வீற்றிருக்கும் அதே லோகத்தில் (இருப்பிடத்தில்) தங்கியிருத்தல்; மற்றும் (iv) சாயுஜ்யம் – முழுமையான விழிப்புணர்வுடன் இறைவனுடன் இரண்டறக் கலத்தல் போன்றவை ஆகும்} ||107||

ஸ்ரீமத் தத்தாத்ரேயர் அர்ஜுனனுக்குத் தொடர்ந்து உபதேசித்தார் ‘இவ்வாறு, இந்திரன் தன் குரு பிரஹஸ்பதியினால் விரிவாக விளக்கிக் கூறப்பட்ட அந்த இரண்டு தனித்துவமான உதாரணங்களையும் கவனமாகக் கேட்டான்; அது அவனது மனதை ஓரளவுக்கு அமைதிப்படுத்தியது; ஆயினும், மேலும் பலவற்றை அறிந்து கொள்ளும் பேராவல் கொண்டவனாய், அவன் மூன்றாவது உதாரணத்தைப் பற்றி மிகுந்த பணிவுடன் வினவினான்||108||

|| இத்துடன், பி. தெம்பே மகாராஜ் (P. Tembe Maharaj) அவர்களால் இயற்றப்பட்ட
இந் நூலின் எட்டாவது அத்தியாயம் நிறைவு பெறுகிறது ||
இது கடவுள் தத்தாத்ரேயரின் திருவடிகளில் பணிவுடன் சமர்ப்பிக்கப்படுகிறது.

OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் எட்டாவது அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:108 + 757 = 865

*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}

……இதோடு பாகம் -3, அத்தியாயம் -8 முடிவடைந்தது
அத்தியாயம் -9 தொடர்கின்றது