COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION
பாகம் –2
தெய்வத்தின் சேவகர்கள்

அத்தியாயம்-5
அசுரர்களால் தோற்கடிக்கப்பட்ட தேவர்கள்
ஸ்ரீமத் தத்தாத்திரேயரிடம் சரண் அடைந்த கதை
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
குரு வேத தர்மா கூறினார் ‘தீபக், இனி என்ன நடந்தது என்பதைச் செவி கொடுத்துக் கேள்; கர்கா முனிவர் இளவரசன் அர்ஜுனனுக்குப் பதிலளிக்கத் தொடங்கினார்; ‘முன்னொரு காலத்தில் ஜம்பன் என்ற அசுரன், சூரிய குடும்பத்தில் உள்ள மூன்றாவது கோளான பூவுலகத்தை முற்றிலும் ஆக்ரமித்துக் கொண்டிருந்தான்||1||
அப்போது பூவுலகை ஆண்டு கொண்டிருந்த மன்னர்கள் அனைவரையும் வென்ற பின்னர் பூவுலகத்தைத் தனக்கு அடிமைப்படுத்திக் கொண்டான்; பெரும் வலிமை பெற்று இருந்த அவன், எவராலும் வெல்ல முடியாதவனாகவும், அனைவரையும் அச்சுறுத்தும் ஒரு பெரும் அசுரனாகவும் திகழ்ந்தான்||2||
இனி நான் தேவர்களை வெல்ல வேண்டும்; அவர்களிடமிருந்து தேவலோகத்தை பறித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த அவன், தனது தூதன் ஒருவனைத் தேவர்கள் வாழ்ந்து வந்திருந்த தேவலோகத்திற்கு அனுப்பினான்||3||
தேவர்கள் தேவலோகத்தை அவனுக்கு விட்டுக் கொடுக்க சம்மதிக்கவில்லை; எனவே, ஜம்பன் தனது படைகளை எல்லாம் திரட்டிக் கொண்டு பொறுமைக்குப் புகழ் பெற்ற தேவர்கள் மீது படையெடுத்து தேவலோகத்தை முற்றுகையிட்டான்||4||
முற்றுகையில் அகப்பட்டுக் கொண்ட தேவர்கள், தங்கள் தலைவனான இந்திரனிடம் சென்று நடந்ததைத் கூறினார்கள்; உடனடியாக இந்திரன், தேவர்களின் படைகளை திரட்டிக் கொண்டு அசுரப் படையினரை அழித்து, துரத்தும் நோக்கத்துடன், போர் முனைக்கு சென்றார்||5||
பயங்கரமான போர் மூண்டது; பலம் மிக்க தேவர்கள் பல அசுரர்களைக் கொன்று குவித்ததும் அல்லாமல், சரமாரியாக அம்புகளை எய்து பல அசுரர்களை தாக்கி காயப்படுத்தினார்கள் ||6||
எனவே, அசுரர்கள் அங்கிருந்து தப்பி ஓடி, தங்கள் தலைவனான ஜம்பனிடம் செய்தியைத் தெரிவித்தனர்; அதைக் கேட்டு கோபமடைந்த ஜம்பன் அவர்கள் அனைவரையும் சினத்துடன் முறைத்துப் பார்த்து, மீண்டும் போர்க் களத்திற்கே செல்லுமாறு அவர்களுக்கு ஆணையிட்ட பின்னர், தானே அந்த படைக்கு தலைமை பூண்டு நேரடியாக போர்க் களத்திற்கு சென்றான்||7||
வலிமை மிக்க அசுரன் ஜம்பன் தேவர்களின் படைகள் மீது பாய்ந்து தாக்கினான்; அவர்களை கருணையே இல்லாமல் கொன்று குவித்தான்; ஆயுதங்களைக் கையாள்வதில் அவனுக்கு நிகர் எவரும் இல்லை; அவனது தாக்குதலைக் கண்டு அரண்டு போன தேவர்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள யுத்த களத்தை விட்டு ஒடத் தொடங்கினர்||8||
அசுரர்கள் சற்றும் சளைக்காமல் போர் புரிந்தார்கள்; தேவர்களோ, போர்க் களத்தில் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ளவே மிகவும் கஷ்டப்பட்டு களைப்படைந்து போன நிலையில், கோழைகளைப் போலப் போர்க் களத்திலிருந்து ஓடி ஒளிந்து கொண்ட நிலையை தேவர்களின் தலைவன் இந்திரன் பார்த்தார்||9||
ஏழு தந்தங்களைக் கொண்ட ‘ஐராவதம்’ எனும் தெய்வீக யானையின் மீது அமர்ந்து கொண்டு, கையில் வஜ்ராயுதத்தை ஏந்தியவாறு, தேவேந்திரன் போர்க்களத்தில் நுழைந்தான்; யுத்த பூமியில் எதிரிகளுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினான்; அப்போது பல அசுரர்கள் தங்கள் உயிரை இழந்தனர்||10||
உக்கிரமான தாக்குதலினால் பல அசுரர்களின் உடல் சிதைந்து போயிற்று; மின்னல் வேகத் தாக்குதலினால் பலரின் தலை நசுங்கியது; இன்னும் சிலர் தங்கள் வாகனங்களிலிருந்து கீழே விழுந்து, உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில், விசித்திரமான கோணங்களில் தரையில் விழுந்து கிடந்தார்கள்||11||
இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் ஜம்பனைத் தாக்கினான்; அந்தத் தாக்குதலால் ஜம்பன் மயங்கி விழுந்தான். ஆயினும், அந்த வலிமை மிக்க வீரன் விரைவிலேயே சுய நினைவு பெற்று, தனது முழு பலத்தையும் திரட்டிக் கொண்டு மீண்டும் இந்திரனை நோக்கிப் பாய்ந்தான்||12||
அவன் இந்திரனை காயப்படுத்தி, போர்க் களத்தில் எஞ்சியிருந்த தேவர்களையும் விரட்டியடித்தான்; பின்னர், வெற்றியின் அடையாளமாக பெரும் கர்ஜனையை எழுப்பி தேவலோகத்தை தன் வசப்படுத்திக் கொண்டான்||13||
பின்னர் ஜம்பன் தனது முழுப் படையுடனும் தேவலோகத்தை கைப்பற்றிய பின்னர் தேவலோக அதிபதியின் அரியணையில் அமர்ந்து கொண்டு தேவலோகத்தின் மன்னனாகத் தன்னை அறிவித்துக் கொண்டவன், இனி அனைவரும் தன்னை இந்திரன் என்றே அழைக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்||14||
அவன் தேவர்களைப் பூமிக்கு துரத்தி அடித்தான் ; திசைகளைக் காக்கும் எட்டுத் திசைக் காவலர்களின் பொறுப்புகளையும் அவர்களிடமிருந்து பறித்துக் கொண்டான்; இவ்வாறாக விண்ணுலகம், பூவுலகம் மற்றும் பாதாளம் ஆகிய மூன்று உலகங்களையும் வென்றெடுத்த ஜம்பன், யாகங்களில் படைக்கப்படும் அவிர் பாகங்களை (படையல்களை) தானே எடுத்துக் கொள்ளத் தொடங்கினான் ||15||
அதன் பின்னர், அரக்கர்கள் வேண்டும் என்றே பூமிக்கு சென்று, தேவர்கள் எங்கெல்லாம் ஒன்றாக இணைந்து இருந்தார்களோ அங்கெல்லாம் சென்று, அவர்களைக் கடுமையாகத் தாக்கி அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்; அதனால் எங்கு சென்று ஒளிந்து கொள்வது என்று அறியாமல் திகைத்த தேவர்கள், இறுதியில் மேரு மலையை அடைந்து அங்கு தஞ்சம் புகுந்தனர்||16||
தேவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, தங்கள் குருவும் ஞானியுமான ‘பிருகஸ்பதி’ என்பவரிடம் சென்று தங்கள் அவல நிலையையும் துயரத்தையும் அவரிடம் எடுத்துரைத்தனர்; அவர்கள் தோல்வி அடைந்ததில் விளைவாக, பெரும் அவமானத்துடனும், வருத்தத்துடனும் அவர் முன் நின்றனர்||17||
தேவர்கள் அனைவரும் அவரிடம் கூறினார்கள் ‘குருவே, எங்களது பரிதாபகரமான நிலையைப் பாருங்கள்; எங்களுக்கு என்ன எதிர்காலம் உள்ளது என்றே தெரியவில்லை; எங்கள் எதிரிகளை எங்களால் வீழ்த்த முடியாமல் ஓடி வந்துள்ளோம்; இனி நாங்கள் என்ன செய்ய வேண்டும், அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அறியாமல், அறிவு மங்கி திகைத்து நிற்கிறோம் ||18||
அதைக் கேட்ட அவர்களது குரு பதிலளித்தார் ‘ஓ இந்திரா, விதியை அவ்வளவு எளிதில் தடுத்து நிறுத்தி விட முடியாது; எப்போது எது நிகழ வேண்டுமோ, அவை விதி வகுத்துள்ள நேரத்தில் நிகழ்ந்தே தீரும் ||19||
இப்போது, நீங்கள் அனைவரும் விரைவாகப் புறப்பட்டு, பூமியில் உள்ள சஹ்யாத்ரி எனும் பெயர் கொண்ட மலைக்குச் செல்லுங்கள்;அங்கேதான், அத்ரி முனிவரின் திரு மகனாக, ஸ்ரீமத் தத்தாத்ரேயர் எனும் நாமத்தால் போற்றப்படும் பரமாத்மன் வீற்று உள்ளார்; அவர் தெய்வங்களுக்கு எல்லாம் மேலானவர் ||20||
தவ வலிமை நிறைந்த அந்த பரமாத்மன், தம்மைச் சரணடைந்த பக்தர்களை நிச்சயமாக காப்பாற்றுவார்; துயருற்ற நீங்கள் அங்கு சென்று அவரை வணங்கி துதிக்கும்போது அவரது கருணைப் பார்வையை உங்கள் மீதும் செலுத்துவார்; தம்மைச் சரணடைந்தோர் எத்தகைய துயரில் உழன்றாலும், அவர்களுக்குத் துணையாக நின்று அவர்களை காப்பாற்றுவதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமேதான் ||21||
பொறுமையுடன் இருந்து அவரை வழிபடுபவர்கள், அவரிடமிருந்து வரங்களைப் பெறுவதிலும் வெற்றி பெறுகின்றார்கள்; நீங்கள் அனைவரும் இயன்றவரை விரைவாக அங்கே சென்று, உங்களால் முடிந்த அளவு ஈடுபாடுடன் அவருக்குச் சேவை செய்யுங்கள், அவர் கருணை உங்களுக்கு கிடைக்கும் ||22||
தமது மதிப்பிற்குரிய குருவின் அறிவுரையைச் சிரமேற்கொண்டு, அவரது திருவடிகளில் பணிவுடன் வணங்கிய பின்னர் அங்கிருந்து புறப்பட்ட தேவர்கள், ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் ஆஸ்ரமத்திற்கு சென்றார்கள்; அங்கு சென்ற பின்னர் ஆழ்ந்த பக்தியுணர்ச்சியுடன் அவரைப் பணிந்து வணங்கினர்||23||
அங்கு சென்று அவரது திருவுருவத்தைக் கண்டு களித்தனர்; ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் கைகள் முழங்கால் வரை நீண்டிருந்தன; அதீத பேரழகுடன் காணப்பட்ட அவர், பார்ப்பவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வசீகரத்துடன் காணப்பட்டார்; மனித அறிவுக்கு எட்டாத நிலையில், அகன்ற கண்களைக் கொண்டு காணப்பட்ட அந்தப் பரமாத்மன், ஆடையின்றி காணப்பட்டார் ||24||
தாமரை மலர் போன்ற அவரது திருமுகம் மகிழ்ச்சியில் தவழ்ந்து இருந்தது; நிகரற்ற அழகுடன் திகழ்ந்த அவரது கழுத்துப் பகுதியில் மூன்று ரேகைகள் அழகிற்கு மேலும் உரம் சேர்ப்பது போல காணப்பட்டன; தேவர்கள் அவரை கண்ட உடனேயே தம்மை மறந்து எல்லையற்ற ஆனந்தத்தில் ஆழ்ந்தார்கள்||25||
அது மட்டும் அல்ல ஆடையின்றி ஒரு மங்கை அவரது மடியில் அமர்ந்திருந்தாள்; அவர் அவளைத் திரும்பத் திரும்பத் தம்முடன் அணைத்துக் கொள்வதைக் கண்டார்கள்; பின்னர், அவளது கைகளைப் பற்றிக் கொண்டு, முழுமையான அன்புடனும் பாசத்துடனும் அவளை முத்தமிட்டார் ||26||
அந்த நிலையில் காணப்படும் அவர் இவ்வுலகில் ‘அனக’ (பாவமற்றவர்) எனும் திருப்பெயரால் போற்றப்படுகிறார்; அவருக்குத் துணையாக இருப்பவளையும், அதே போலப் பாவமற்றவள் எனும் பொருளில் ‘அனகா’ என்றே அழைக்கின்றார்கள்; மது அருந்தியவர்களின் பேச்சு குழறுவது போல அவரது பேச்சும் குழறிக் கொண்டே காணப்பட்டது; அவர் மது போதையில் இருப்பதை அவரது முக பாவனைகள் தெளிவாக உணர்த்தின||27||
அத்தகைய மாறுபட்ட தெய்வீக தோற்றத்தைக் கண்டவர்கள் பயந்து போய் தொலைவாக நின்றனர்; பின்னர், மிகுந்த பக்தியுடனும் மரியாதையுடனும் அவரைச் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர்; ஆயினும், ஸ்ரீமத் தத்தாத்ரேயர் அவர்கள் செய்த அந்த வணக்கத்தை ஏற்றுக் கொண்டதாகவோ, அங்கீகரித்ததாகவோ காட்டிக் கொள்ளவில்லை’ ||28||
முடிவாக அங்கிருந்து கிளம்பிய ஸ்ரீமத் தத்தர் நடந்து செல்லத் துவங்கியதும் தேவர்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள்; அவர் எங்காவது ஒரு இடத்தில் நின்றால், தேவர்களும் அப்படியே நின்றனர்; அவர் அமர்ந்து ஓய்வெடுக்க விரும்பினால் அவர்களும் அங்கேயே அவரை வணங்கியபடியே அமர்ந்தார்கள்; வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அவர்கள் மிகுந்த மரியாதையுடன் மீண்டும், மீண்டும் அவரை வணங்கினர், துதித்தார்கள்||29||
இவ்வாறாகப் பல காலம் கடந்தது; ஆயினும் ஸ்ரீமத் தத்தர் அவர்களிடம் அவர்கள் வந்ததற்கான காரணத்தை விசாரிக்கவில்லை; அதைக் கண்ட தேவர்களும், மனம் சோர்ந்து போய், வருத்தத்தில் ஆழ்ந்து, என்ன செய்வதென்று தெரியாமல், குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தார்கள்||30||
எங்களிடம் தவ வலிமையும் இல்லை; பக்திப் பெருக்கால் விளையும் மனவுறுதியும் இல்லை என்பதை வருத்தத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கும் நிலையில் இருந்தார்கள்; அவர்கள் நினைத்தார்கள், ‘தம்மை நாடி வந்த பக்தர்களை காப்பவராகிய கோவிந்தன் என புகழ் பெற்றவர் எங்களை ஏறெடுத்தும் பார்க்காமல் பாராமுகமாக அல்லவா இருக்கின்றார் ||31||
ஆயினும் இவர் மட்டுமே நமக்கு ஒரே புகலிடம் என்று நாம் உறுதியாகத் தீர்மானித்து விட்டோம்; அப்படியிருக்க, நமது உடல்களை இங்கேயே துறந்து விடலாமே? இவர் நமக்கு அச்சமற்ற நிலையை அருளும் வரை, வேறு எவரால் நமக்கு நன்மை கிடைத்து விட முடியும்?’||32||
இவ்வாறு எண்ணிக் கொண்டு தங்கள் மனதில் உறுதியை உரமேற்றிக் கொண்ட தேவர்கள், அந்தப் புனித ஆசிரம வளாகத்தை விட்டு நகர மறுத்தனர்; நாளடைவில் மெல்ல மெல்ல அவர்கள் தெய்வத்தை நெருங்கும் பக்திப் பெருக்கையும், ஏக்கத்தையும் பெற்றனர்; அந்த நிலையை அவர்கள் எட்டியபோதுதான் ஸ்ரீமத் தத்தரும் அவர்களுடன் பேசத் தொடங்கினார்||33||
அவர் கேட்டார் ‘நீங்கள் உங்கள் இருப்பிடமான தேவலோகத்தை விட்டு இங்கு எதற்காக வந்துள்ளீர்கள்?; இந்த ஆசிரம வளாகத்தில் நீங்கள் அனைவரும் ஏன் கூடி இருக்கிறீர்கள்?; உங்கள் முகங்கள் அனைத்தும் ஏன் இவ்வளவு வாட்டத்துடனும், சோர்வுடனும், நம்பிக்கையற்ற நிலையிலும் காணப்படுகின்றன?; யாகங்களின் வாயிலாக உங்களுக்கு கிடைத்த நையவேதிய பண்டங்கள் {அவிர் பாகங்கள்} திருப்தி அளிக்கவில்லையா||34||
அந்தப் பரிவு நிறைந்த கேள்விகளைக் கேட்டதும், தேவர்கள் மீண்டும் ஸ்ரீமத் தத்தரை விழுந்து வணங்கினர்; தோல்வியுற்றவர்களும், பணிவுற்றவர்களும் பேசும் தோரணையில் தாங்கள் கடந்து வந்த துயரங்கள் அனைத்தையும் அவரிடம் எடுத்துரைக்கத் தொடங்கினர் ||35||
அவர்கள் கூறினார் ‘ஓ இந்த பிரபஞ்சத்தின் அதிபதியே, நீங்கள் அறியாதவை எதுவும் கிடையாது; நடந்த அனைத்தையும் நன்கு அறிந்தவர்; ஜம்பன் என்னும் பெயருடைய ஒரு வலிமை மிக்க அரக்கன், ஆணவத்துடனும் எங்களை வென்று தேவலோகத்தில் இருந்து துரத்தி விட்டான்||36||
வேத யாகங்களில் படைக்கப்படும் அவிர்ப் பாகங்களை இப்போது அவனே ஏற்றுக் கொள்கின்றான்; தேவலோகத்தில் தற்போது அவனும் அவனது படையினரும் மட்டுமே தங்கி உள்ளார்கள்; அவன் மூவுலகங்களையும் ஆள்வதுபோல் தோன்றுகிறது; எனவே, இப்போது நாங்கள் எங்கு செல்வது, என்ன செய்வது என்பதை அறியாமல் இங்கு வந்துள்ளோம்||37||
யாகங்களில் படைக்கப்படும் அனைத்தையும் அனுபவிக்கும் பாக்கியம் அவர்களுக்கே கிடைக்கிறது என்பதினால் யாகங்களின் அனைத்துப் பலன்களும் இப்போது அவர்களுக்கே சென்று விடுகின்றது; ஆகவே எங்களால் அவர்களை வெல்ல முடியவில்லை; இந்த இக்கட்டான நிலைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வழி தேடி, நாங்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம்||38||
சகல உயிர்களுக்கும் இறைவனே, நாங்கள் தற்போது உங்களிடமே சரணடைந்திருக்கின்றோம்; எங்கள் பகைவர்களை வெல்ல நீங்கள்தான் எங்களுக்குத் துணை புரிய வேண்டும்; இனியும் எங்கள் துயரத்தை நீட்டி வைத்துக் கொண்டு இருக்க விடாதீர்கள் ||39||
பிரளய காலத்தில், இந்த முழுப் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள அனைத்தையும் அழிப்பவன் நீங்கள் அல்லவா?; அப்போது எவ்விதத் தயக்கமோ, தாமதமோ இன்றி, நீங்கள் ஒருவனே நின்று அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்குகின்றீர்கள்; அப்படியிருக்க, அற்பமான சில அரக்கர் படைகளை அழிக்க இயலாதா?||40||
நாங்கள் அனைவரும் எங்களுக்குரிய பதவிகளை இழந்து விட்டு இங்கு வந்துள்ளோம்; இங்கும் எப்போது அவர்களது தாக்குதலுக்கு உள்ளாவோமோ என்ற அச்சத்துடனே அலைந்து திரிகின்றோம்; பூமியில் வாழும் மானிடர்களைப் போலவே நாங்களும் இயலாமையில் தவிப்பதை உணர்கிறோம்; எனவே, அனைவரையும் பாதுகாத்திடுபவரும், கருணைக் கடலாகத் திகழ்பவருமான உங்களிடமே நாங்கள் சரணடைந்து வேண்டுகிறோம் ||41||
தெய்வமே, நாங்கள் அனைவரும் உன்னிடமே பக்தி பூண்டுள்ளோம்; எங்கள் செயல்பாடுகள் அனைத்தும் உங்களை நோக்கியே அமைந்துள்ளன; இப்போது நாங்கள் அனைவரும் உங்கள் திருவடிகளின் நிழலில் அடைக்கலம் புகுந்துள்ளோம்; இந்தத் துயரத்திலிருந்து எங்களை நீங்கள்தான் விரைவாக விடுவிக்க வேண்டும்’|42||
அவர்கள் கூறிய அனைத்தையும் கேட்ட ஸ்ரீமத் தத்தர், புன்னகைத்தவாறே பின்வருமாறு கூறினார் ‘இத்தனை காலமாக இங்கு தங்கி உள்ள நீங்கள் என் வாழ்க்கை நெறி முறையை பார்க்கவில்லையா? நான் பெண்களின் எச்சில் உணவையே உண்டு வாழ்கிறேன். போதைப் பொருட்களின் ஆதிக்கத்திற்குத் தொடர்ந்து ஆட்பட்டிருப்பதால், என் மனம் தடுமாறுகிறது; சொல்லப்போனால், பெண்களின் எச்சில் பானங்களை அருந்தியதால், என் தூய்மைக்கே களங்கம் ஏற்பட்டு விட்டது ||43||*
மதுவின் மயக்கம் என்னை முழுமையாக ஆட்கொண்டு விட்டது; என் ஐம்புலன்களின் மீது எனக்கே எந்தக் கட்டுப்பாடும் இல்லை; அத்தகையதொரு பரிதாபகரமான நிலைக்கு நான் தள்ளப்பட்டு விட்டேன்; எனவே, என்னிடம் உதவி தேடி நீங்கள் வந்திருப்பது வீணான செயலாகும்; நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ, அங்கேயே விரைவாகத் திரும்பிச் செல்லுங்கள் ||44||*
பெண்களுடன் உறவு கொள்வது வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே, இடைவிடாத புணர்ச்சி பரிதாபகரமான துயரங்களுக்கு வழி வகுக்கும் என்பதையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள்; விதி வசத்தால் நான் பெண்கள் மிச்சம் வைத்த எச்சில் உணவையும் பானத்தையும் உண்டுள்ளேன்; அதனால் நீங்கள் அனைவரும் நான் எந்த தெய்வீக நிலையில் இருந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இங்கு வந்தீர்களோ அங்கு நான் இல்லை ||45||*
நாம் எங்கே செல்கிறோம், நாம் எதை நோக்கி செல்லும் மன நிலையில் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் குறித்து சிந்திக்க முடியாத நிலையில் உள்ளேன்; அதை முழுமையாக அறிய இயலாதவனாகவும் ஆகி விட்டேன்; எனவே புண்ணியம் மற்றும் பாவம் என்பதையெல்லாம் குறித்த நுட்பமான நிலைகளைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? நன்மை தீமை ஆகிய இரண்டிற்கும் அப்பாற்பட்ட துயர நிலை இல்லையா?’ ||46||*
இப்படியாக ஸ்ரீமத் தத்தர் அவர்கள் கேட்டதற்கு சற்றும் தொடர்ப்பு இல்லாமலும், சிக்கலான, தெளிவற்ற பதிலைக் கேட்டதும், அங்கு வந்திருந்த தேவர்கள் தங்கள் குருவின் அறிவுரைகளை நினைவு கூர்ந்தார்கள்; எனவே, அவர்கள் ஸ்ரீமத் தத்தர் முன்பாக மீண்டும் மரியாதையுடன் தலை வணங்கி நின்றவாறு கூறினர்||47||
{*43 முதல் 46 வரை பத்திகளில் ஸ்ரீமத் தத்தர் தம்மைப் பற்றிக் கூறியவற்றை மேற்கோள் காட்டி தேவர்கள் பதில் கூறத் துவங்கியதாக எண்ண வேண்டும்}
‘பிரபஞ்சத்திலுள்ள அனைத்திற்கும் அதிபதியானவரே, நீங்கள் மாயை என்பதற்கு அப்பாற்பட்டவர், அனைத்து இடங்களிலும் வியாபித்து உள்ளவர் என்பதினால் உங்களிடம் இருந்து எதுவுமே வேறுபட்டு இருக்க முடியாது; ஆகவே ‘நான் உண்பது அவர்கள் விட்டு வைக்கும் மிச்ச உணவு’ என்று நீங்கள் கூறுவதை எப்படி ஏற்க முடியும்? நீங்கள் எப்படி தடுமாறி வீழ்ச்சி அடைய முடியும்? வெற்று உடலில் உள்ள ஆத்மாக்களோடு சுற்றித் திரியும் சாமான்ய மக்கள் அல்லவா தடுமாறுகிறார்கள்||48||
மதுவின் போதையில் இருக்கின்றேன் என்பது வீண் கற்பனையுடன் கூறப்படுவதாகும்; வேண்டும் என்றே நீங்கள் உண்மையான நிலையை ஏற்க மறுக்கின்றீர்கள்; நீங்கள் குறிப்பிடும் நிலைகளெல்லாம் வெற்று உடலுக்குள் உள்ள ஆத்மாக்கள், ஐம்புலன்களில் சிக்கி தவிப்பதை குறிப்பவை ஆகும்; அது உங்களுக்கு பொருந்தாது; நீங்கள் அனைத்திற்கும் மேலானவர், அனைத்திலும் வியாபித்து உள்ளவர் என்பதினால் உங்களை எதனிடம் இருந்தும் தனியே பிரித்துப் பார்க்க இயலாது ||49||
அனகன் எனப்படும் நீங்கள் தூய்மையானவர், எதனாலும் களங்கப்பட்டவர் அல்ல; அதுவே உங்கள் தெய்வீக சக்தியின் தூய்மையான உருவம் ஆகும் ||50||
சூரியனின் ஒளிக் கதிர்கள் அந்தணர்கள் மீதோ அல்லது அல்லது தாழ்ந்த சண்டாள பரிவாரங்கள் மீது விழுந்தாலும் சூரியன் அவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களினால் பாதிக்கப்படுவதில்லை; அந்த நிலையில் உள்ளவர்தான் நீங்களும் உங்களது தெய்வ சக்தியும் ஆகும் ||51||
நீங்கள் ஒருவருக்கு அருள் புரிய நினைத்தால் அதை வேறு யாரால் தடுத்து நிறுத்த முடியும்?; நேர்மையான தர்ம நெறிகளில் வழி நடப்பவர்களுக்கே அது கிடைக்கும் என்பதை அறியாமையில் உள்ளவர்கள் அறிய மாட்டார்கள்; அப்படி இருந்தும் ஆத்ம ஞானம் பெற்றவர்கள் இதுவே நடக்க வேண்டும், அது நடக்க கூடாது என்று எப்படி வலியுறுத்த முடியும்?’ ||52||
அவர்கள் கூறிய அனைத்தையும் கேட்ட ஸ்ரீமத் தத்தர் இவ்வாறு கூறினார் ‘நீங்கள் அனைவரும் கூறுவது உண்மையென்றால், உங்கள் உள்ளுக்குள் உங்களை வாட்டிக் கொண்டிருக்கும் அனைத்துக் கவலைகளிலிருந்தும் விடுபட்டுக் கொள்ளுங்கள்; உங்கள் துன்பங்கள் அனைத்தும் தானாகவே விலகி ஓடும்; கண் இமைக்கும் நேரத்தில் உங்களை வாட்டிக் கொண்டிருக்கும் துன்பங்களும் துயரங்களும் உங்கள் மீதுள்ள பிடியை இழந்து விடும்; நீங்கள் மேன்மையான நிலையை அடைவீர்கள்||53||
இப்பொழுதே நீங்கள் அனைவரும் புறப்பட்டு செல்லுங்கள்; மீண்டும் உங்கள் எதிரிகளுடன் போர் தொடுங்கள்; அவர்கள் அனைவரையும் இந்த இடத்திற்கு இழுத்து வாருங்கள்; இனிமேல் அவர்களின் பராக்கிரமம் எதுவும் அவர்களுக்குப் பயன்படாது||54||
ஸ்ரீமத் தத்தர் கூறியதைக் கேட்டதும், மனத் தெளிவும், தைரியமும் பெற்ற தேவர்கள் மீண்டும் அவரை வணங்கி விட்டு சென்றார்கள்; தேவலோகத்தை அடைந்து அங்கிருந்த அசுரர்களை போருக்கு அழைத்தனர்; இப்படியாக தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மீண்டும் இரண்டாம் முறையாக போர் துவங்கியது ||55||
இரண்டாவது முறையும் அசுரர்கள் தேவர்களை மிகக் கடுமையாகத் தாக்கினர்; அதை சமாளிக்க முடியாத தேவர்கள் மீண்டும் தப்பி ஓடத் தொடங்கினர்; அசுரர்கள் அவர்களைத் தொடர்ந்து விரட்டவே, தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஸ்ரீமத் தத்தப் பெருமானின் ஆசிரம வளாகத்திற்குள் புகுந்தனர்||56||
கடும் கோபத்துடன் தேவர்களை விரட்டிக் கொண்டு சென்ற அசுரர்கள் ஸ்ரீமத் தத்தரின் ஆசிரமத்திற்குள் நுழைந்த மறுகணமே, அங்கே வீற்றிருந்த அழகான ஒரு பெண்ணை கண்டனர்; அவளது ஈடு இணையற்ற அழகைக் கண்டு, அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு மந்திரத்திற்கு ஆட்பட்டது போல மயங்கி நின்றனர் ||57||
பொன்னையும் பெண்ணையும் காணும் எவன் ஒருவனும் அவற்றின் மீது மோகத்தில் ஆழ்ந்து விடுவான் என்பது சான்றோர் கூறிய முது மொழியாகும்; ஆனால் எவன் ஒருவன் அவற்றை துச்சமாக மதித்து அதன் மீது ஆசை கொள்ளாமல் இருப்பானோ அவனே பற்றற்ற நிலையில் உள்ளவன் என்பதாக கூறுவார்கள்||58||
உடலின் ஒவ்வொரு அங்கமும் அழகு தோற்றம் தந்து கொண்டிருக்க, கண்கள் தாமரை இதழ்களைப் போன்று கூர்மையாக இருக்க, முகமோ மலர்ந்த தாமரை மலரைப் போன்று காணப்பட, அத்தகைய பேரழகியை அதுவரை பார்த்திராத அசுரர்கள், அவளது அழகை ரசித்தபடி இருந்தார்கள் ||59||
வாயோ சிவந்த இதழ்கள் போன்று காணப்பட, பற்கள் மாதுளம் பழ முத்துக்களைப் போன்று இருக்க , மார்புகள் இரண்டும் நீரால் நிறப்பட்ட பொற் குடங்களைப் போன்று காணப்பட, சொற்களால் விவரிக்க முடியாத அழகைக் கொண்ட ஈடு இணையற்ற பேரழகியை, பார்த்தவாறே அசுரர்கள் நின்று கொண்டு இருந்தார்கள் ||60||
ஸ்ரீமத் தத்தரின் மடியில் அமர்ந்தவாறு, காண்பவர் அனைவரையும் தன் அழகால் தன் மீது இழுத்துக் கொண்டு கொண்டிருந்த அந்தப் பேரழகியை கண்ட அசுரர்களின் மனம் அமைதியிழந்து தவித்தது ||61||
காமத்தில் மயங்கிய அந்த அசுரர்கள், தாங்கள் விரட்டி வந்த தேவர்களைத் தாக்குவதை முற்றிலும் மறந்து விட்டு, அந்த அழகிய பெண்ணை தாங்களே சொந்தமாக்கிக் கொள்ளும் ஆவலுடன், அடுத்து என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினர் ||62||
அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்; விதி வசத்தால் நாம் எவ்வித முயற்சியும் எடுக்காமலேயே நமக்கு ஒரு பேரழகி கிடைத்து உள்ளாள்; இவள் வேறொருவனுடன் இருந்தாலும், அவன் பார்ப்பதற்கு மிகவும் வலுவற்றவனாகவே தெரிகிறான்; அவனால் நம்மை எதிர்த்து என்ன செய்து விட முடியும்? ||63||
மேலும், நாம் விரட்டி வந்த தேவர்கள் எவரேனும் நாம் செய்ய உள்ள காரியத்தின் இடையில் குறுக்கிட்டால், இம்முறை நாம் அவர்களில் ஒருவனையும் உயிரோடு விட்டு வைக்கக் கூடாது என்பதாக தீய எண்ணம் கொண்ட அந்த அசுரர்கள் தீர்மானித்துக் கொண்டு, ஒரு பல்லக்கை வரவழைத்து, ஸ்ரீமத் தத்தர் வீற்றிருந்த இடத்தை நோக்கிச் சென்றனர் ||64||
ஸ்ரீமத் தத்த பெருமானின் மடியில் அமர்ந்திருந்த அந்தப் பேரழகியை அவர்கள் தூக்கிக் கொண்டு, அவளை அந்தப் பல்லக்கினுள் அமர வைத்து, அங்கிருந்து அவளைச் சுமந்து செல்லத் தொடங்கினர்||65||
ஸ்ரீமத் தத்தர், முன்பு போலவே மாறாத அமைதியுடன் அமர்ந்திருப்பதைக் கண்ட தேவர்கள் அனைவரும், வாயடைத்து நின்றவாறும், செய்வதறியாதும் திகைத்தவர்களாகவும் நின்றனர்; அப்போது ஸ்ரீமத் தத்தர் அவர்கள் அனைவரையும் நோக்கிக் கூறினார் ‘அந்த அசுரர்கள் ஒரு கற்புக்கரசியை கடத்திச் சென்று விட்டனர்||66||
பெண்களுக்கு ஒருவர் இழைக்கும் கொடிய குற்றங்களில் இதுவும் ஒன்றாகும்; அவர்கள் அவளைத் தீண்டியிருப்பது, அவர்களின் பாவத்தின் பலனை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதன் விளைவாக, அவர்களின் குலம் முழுமையும் கண் இமைக்கும் நேரத்திற்குள் அழிந்து சாம்பலாகிவிடும் ||67||
பாவங்களில் மிகக் கொடியவை என்றும், சிறிய அளவிலான கொடியவை என்றும் இரு வகைகள் உண்டு; அசுரர்கள் செய்துள்ள பாவம் முதல் வகையைச் சார்ந்த மிகக் கொடிய பாவமாகும்; அவர்கள் தாங்களாகவே தங்கள் மீது ஒரு அழிக்க முடியாத களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள்; இதன் விளைவாக, அவர்கள் தங்கள் ஆற்றல் மற்றும் செல்வம் அனைத்தையும் இழந்து, இவ்வுலகிலும், மேல் உலகிலும் வீழ்ச்சியை சந்திப்பார்கள்||68||
செல்வத்தின் அதிபதியான தேவியே எனது சரீரத்தில் உள்ள ஆற்றலின் வடிவமானவள்; அவள் தற்போது அந்தப் பல்லக்கில் அசுரர்களின் தலை மீது அமர்ந்திருக்கிறாள்; அவள் அசுரர்களின் தலைகளை சீவி சாய்த்து விட்டு, அவளுக்குரிய என்னிடமே திரும்பி வருவதற்கு அதிக நேரம் ஆகாது||69||
அசுரர்கள் ஏற்கனவே இறந்து போனவர்களுக்கு சமமானவர்களாகி விட்டனர்; எனவே நீங்கள் அவர்களை விரட்டிச் சென்று அவர்களோடு போரைத் தொடருங்கள்; இந்தப் போரில், உங்கள் உடலில் உள்ள ஒரு மயிரிழைக்குக் கூட அவர்களால் எந்தத் தீங்கும் விளைவிக்க முடியாது||70||
தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் அனைவரும் எனக்காகச் செயல்படும் கருவிகள் மட்டுமே ஆவீர்கள்; எனவே, தேவர்களே, இனியும் தாமதிக்காதீர்கள்; எதற்காக இன்னமும் இங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் இதயங்கள் தைரியத்தில் நிரம்பி வழியட்டும், அச்சத்தின் சாயலை தூக்கி எரிந்து விடுங்கள் ||71||
ஸ்ரீமத் தத்தரின் அறிவுரைகளை கேட்டதும், தேவர்கள் அனைவரும் மன உறுதி கொண்டும், ஸ்ரீமத் தத்தர் மீது முழு நம்பிக்கை வைத்தும் , மீண்டும் தங்கள் கைகளில் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு, அசுரர்களை நோக்கி ஆவேசமாகப் பாய்ந்து சென்றனர் ||72||
தேவர்கள் ஆக்ரோஷமாகத் தாக்கத் துவங்கியதும் அசுரர்களின் கால்கள் முறிந்து விழுந்தன; சில அசுரர்களின் தலைகள் பிளந்து சிதறின; சிலரின் கைகள் துண்டிக்கப்பட்டு விழுந்தன; இன்னும் சிலரின் முதுகுகளில் ஆழமான காயங்களும் வடுக்களும் ஏற்பட்டன||73||
பேராற்றல் கொண்ட சூறாவளி வீசியதை போல, தேவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒன்றன் பின் ஒன்றாக அசுரர்கள் மீது சரமாரியாக வீசினார்கள். அசுரர்களின் உடல்கள் தரையில் கொத்து, கொத்தாக விழத் தொடங்கின; போரின் அந்த நிலை அசுரர்கள் தேவர்களிடம் இருந்து அபகரித்த சுவர்க்க லோகத்தை மீண்டும் மீட்கும் வகையிலும், தேவர்கள் அசுரர்களை பழி வாங்கும் விதத்திலும் இருந்தன ||74||
தமக்குச் சொந்தமில்லாத ஒரு பெண்ணைத் தீண்டியதாலும், அவள் மீது காமம் கொண்டதாலும், பின்னர் அவளைக் கடத்திச் சென்றதாலும் விளைந்த பாபங்களினால், அசுரர்களின் தீவினைகள் பன்மடங்கு பெருகின; அதன் விளைவாக அவர்கள் தங்கள் பலம் அனைத்தையும் இழந்தனர்; அவர்களின் நடத்தை மந்த புத்தி கொண்டவர்களை போலவே மாறி விட்டிருந்தது ||75||
தேவர்களால் கடுமையாகத் தாக்கப்படும்போது கூட, தற்காப்பிற்காகத் தங்கள் கைகளை உயர்த்தக் கூட முடியாமல் அவதிப்பட்டார்கள்; அந்த நிலை அங்கு இருந்த அசுரர்களுக்கு சிறிதளவேனும் வலிமை உண்டு என்பதையே அவர்கள் மறந்து விட்டது போலிருந்தது; மேலும், அவர்களுள் இருந்த சில கற்றறிந்த அசுரர்கள், தங்களுக்கு வலிமை தரும் மந்திரங்களைக் உச்சரிக்க முடியாமல் மந்திரங்களை மறந்து போனார்கள் ||76||
செல்வத்தைத் தரும் தேவியின் அருளினால், தேவர்களினால் அசுரர்களை மிக விரைவாக அடக்க முடிந்தது; அசுரர்கள் அனைவரும் போர்க் களத்தில் மாண்டனர்; நடந்தவை அனைத்துமே ஸ்ரீமத் தத்தர் தேவர்களுக்கு கொடுத்த வரத்தினால் நிகழ்ந்தவை ஆகும்||77||
அசுரர்களினால் கடத்திச் செல்லப்பட்ட தேவி விரைவாகத் தனக்குரிய இடத்திற்கே திரும்பினாள்; அமைதி நிறம்பிய ஸ்ரீமத் தத்தரின் மடியில், தன் இடத்தை ஏற்று அமர்ந்த அவள்,வெற்றியடைந்து களிப்புடன் வந்தடைந்த தேவர்கள் முன்னிலையிலேயே, தன் இறைவனின் இதழ்களோடு தனது இதழ்களை பதித்துக் கொண்டாள்||78||
தேவர்கள் அனைவரும் அவர்களை மரியாதையுடன் வணங்கி மௌனமாக நின்றனர்; அப்போது ஸ்ரீமத் தத்தர் கூறினார் ‘நீங்கள் அனைவரும் இந்தப் போரில் முழு மனதுடன் ஈடுபட்டு உங்கள் எதிரிகளை வீழ்த்தினீர்கள்||79||
ஜம்பன் என்னும் அசுரன் உண்மையில் மிகவும் ஆபத்தானவன்; நீங்கள் அனைவரும் அவனுடன் உக்கிரமாக போர் புரிந்தீர்கள்; அதன் விளைவாக, அவனது முழுப் படையும் இப்போது முழுமையாக அழிந்து விட்டது. நீங்கள் மாபெரும் வெற்றி பெற்று உள்ளீர்கள்||80|
இப்போது நீங்கள் உங்களது வெற்றித் கொடிகளைப் தைரியமாக பறக்க விடலாம்; உங்கள் முயற்சிகளை மனதார பாராட்டுகின்றேன்; எனக்கு ஏற்பட்ட அவமானத்திலிருந்து என்னைக் காத்தவர்கள் நீங்களே; கடத்திச் செல்லப்பட்ட அந்த அழகியையும் மீட்டவர்களும் நீங்கள்தான் ||81||
நீங்கள் அனைவரும் எனக்குப் பேருதவி செய்திருக்கிறீர்கள்; இதற்கு நான் எவ்வாறு கைமாறு செய்ய முடியும்? நான் எடுத்துள்ள ஒரு முடிவை இப்போது உங்களிடம் வெளிப்படுத்துகிறேன்: நீங்கள் அனைவரும் மீண்டும் தேவலோகத்துக்கு சென்று, உங்கள் இருப்பிடங்களை மீட்டுக் கொண்டு ஆட்சி செய்யலாம்||82||
ஸ்ரீமத் தத்தர் உரைத்த செய்தியைக் கேட்ட தேவர்கள் மீண்டும் அவரது மாய சக்தியின் தாக்கத்திற்கு ஆட்பட்டனர்; அவர்கள் உடனடியாக அவரது திருவடிகளில் பணிந்து வணங்கி, ஆழ்ந்த நன்றியுணர்வுடன் பின்வருமாறு கூறலாயினர் ||83||
பாமர மக்களுக்கெல்லாம் தலைவனான, ஓ ஜனார்த்தனப் பெருமானே, நாங்கள் உம்மை மீண்டும் மீண்டும் வணங்குகிறோம்; உங்களுடைய வார்த்தைகள் மிகவும் நுட்பமானவையாகவும், எங்களால் முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாதவாறு சிக்கலானவையாகவும் உள்ளன; இந்த மாபெரும் வெற்றியை எங்களுக்கு கொடுத்தவர் நீங்களே எனும் போது எங்களை ஏன் மீண்டும் பழைய நிலைக்கே* அனுப்பி வைக்க முயல்கின்றீர்கள்?
{*பழைய நிலைக்கே என்பதின் மூலம் மீண்டும் ஸ்ரீமத் தத்தர் அங்கு இருந்த தேவர்களை வேண்டும் என்றே மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்த முயல்கின்றார் என்பதான அர்த்தம் கொள்ள வேண்டும்} ||84||
எங்களைக் கட்டிப் போட்டிருந்த அந்த வலிமை மிக்க ஜம்பன் எனும் அசுரனை, நாங்கள் அனைவரும் எவ்வளவோ முயன்றும் வெல்ல முடியாமல் திணறி இங்கு வந்தோம்; ஆனால், அதே வலிமை மிக்க அசுரன் இன்று எங்கள் கரங்களாலேயே வதம் செய்யப்பட்டிருக்கிறான்; இதை நிச்சயமாக எங்களால் சாதித்து இருக்க இயலாது ||85||
சர்வ வல்லமை படைத்த சூத்திரதாரியே, நாங்கள் உமது கைகளில் ஆடிய பொம்மலாட்ட மரப் பொம்மைகள்; ஓ கருணைக் கடலே, இந்த மாபெரும் வெற்றி நீங்கள் இல்லாமல் எங்களுக்கு இவ்வளவு எளிதாக எப்படி சாத்தியமாகி இருக்க முடியும்? ||86||
நாங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும்படி எங்களிடம் என்ன திறன் இருக்கிறது? எங்கள் சொந்த இல்லங்களிலிருந்தே நாங்கள் விரட்டியடிக்கப்பட்டபோது, அவர்களை அடித்துத் விரட்டும் வலிமை எங்களிடம் என்ன இருந்தது?; உம்முடைய கருணையினாலேயேதான் நாங்கள் அனைவரும் விடுதலை அடைந்துள்ளோம்||87||
நீங்கள் ஒருவர் மட்டுமே முழுமையான சுதந்திரத் தன்மை கொண்ட பரமாத்மன் ; நாங்கள் அனைவரும் கதியற்றவர்கள், உம்மிடம் அடைக்கலம் கேட்டு வந்துள்ளவர்கள்; எங்கள் அனைவரையும் கர்ம வினைகளின் விளைவுகளால் ஆன பந்தங்களால் கட்டுபவரும் நீரே; பின்னர், உம்முடைய ‘மாயா’ எனும் ஆற்றலின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தி எங்களை ஆட்டுவிப்பவரும் நீரே ||88||
நீங்கள் தொடக்கமும், முடிவும் இல்லாதவர் என்பதை நாங்கள் நன்கே அறிவோம்; எனவே, நாங்கள் மிகவும் பணிவுடன் கைகூப்பி வணங்கியவாறு நிற்கிறோம்; எங்கள் நெற்றிகள் தரையில் படுமாறு விழுந்து வணங்குகிறோம்; உம்முடைய தெய்வீக மற்றும் புனிதமான திருவடிகளின் ஸ்பரிசத்தைப் பெறும் பேறை எங்கள் சிரங்கள் பெற வேண்டும் என்று நாங்கள் ஏங்கி நிற்கின்றோம் ||89||
வாழ்க, வாழ்க, அனைவரது அச்சங்களையும் போக்கி , அனைவரது ஆசைகளையும் நிறைவேற்றித் தரும் வகையில் அருள் புரிபவரே; காலம் மற்றும் மரணத்தின் பிடியில் சிக்கியிருப்பவர்களுள், உண்மையான பக்தர்களுக்கு நற்கதி அளிப்பவரே; கடல் போன்ற பரந்த கருணை மனம் கொண்டவரே; அனைத்துத் தெய்வங்களையும் மேன்மைப் படுத்துபவரே; உம்மைச் சரணடைந்தோரைக் காப்பவரும் நீரே; ஒ அற்புத தெய்வமே, உமக்கு எங்கள் பணிவான வணக்கங்கள்’||90||
உள்ளம் உருகி அவர்கள் கூறியதைக் கேட்ட , ஸ்ரீமத் தத்தர் அக மகிழ்ந்தார்; அவர் அவர்களை நோக்கி ‘இனியாவது மெத்தனமாக இருக்காமல் இருந்து கொண்டு, அவரவர் இல்லங்களுக்கு சென்று தேவலோக இன்பங்களை மீண்டும் என்றும் போல அனுபவியுங்கள்’ என்று அறிவுறுத்தினார் ||91||
‘நான் உங்கள் அனைவர் மீதும் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்; நீங்கள் விரும்பும் எந்த வரத்தையும் என்னிடம் கேளுங்கள்; என்னைச் சரணடைந்து பக்தி செலுத்துவோரின் வாழ்வில், குறை என்று ஏதேனும் இருக்க முடியுமா? நான் எப்போதும் அவர்களுக்கு மிக அருகிலேயே இருப்பவன்’||92||
அதைக் கேட்டு பேரானந்தம் அடைந்த தேவர்கள், மிகுந்த பணிவுடன் இவ்வாறு கூறினார்கள் ‘தெய்வமே நீங்கள் எங்களுக்கு ஏதேனும் வரம் அருள திருவுள்ளம் கொண்டிருப்பீராயின், எங்கள் உள்ளத்தில், இரவும் பகலும் சிறிதும் குறைவில்லாத, என்றுமே மாறாத நிலையிலான பக்தி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற வரத்தை தந்தருள வேண்டும்’||93||
அதைக் கேட்டு மகிழ்ந்து போன ஸ்ரீமத் தத்தரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்று அவர்களை வாழ்த்தினார்; தங்கள் மனதிற்கு உகந்த வரம் கிடைத்த மகிழ்ச்சியில், தேவர்கள் மீண்டும் மீண்டும் கீழே விழுந்து, விழுந்து வணங்கினர்; ஏனெனில், ஆன்மீகப் பாதையில் ஏற்படும் தடைகள் அனைத்திலிருந்தும், தங்கள் சொந்த முயற்சியின்றியே தாங்கள் விடுபடப்போவது உறுதி என்பதை அவர்கள் இப்போது உணர்ந்து கொண்டனர்||94||
ஸ்ரீமத் தத்தர் மீதே தங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தியவாறு, தேவர்கள் அவரது திருக்கால்களில் விழுந்து வணங்கிய பின்னர் அவரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு தத்தமது இருப்பிடங்களுக்கு திரும்பிச் சென்றார்கள்; அவரவர் இழந்த பதவிகளும் அதிகாரங்களும் மீண்டும் கிடைத்த நிலையில் மகிழ்சியோடு சென்றார்கள் ||95||
அதனால்தான் இன்றும் கூட, தேவலோக அதிபதியான இந்திரனும், அவருடன் அனைத்துத் தேவர்களும் மிகுந்த பக்திப் பெருக்கோடு தினமும் இங்கு வருகிறார்கள்; தங்களுக்கு அருள் புரிந்த அந்த தெய்வத்தை தரிசித்து, பக்தி சிரத்தையுடன் அவரது கால்களில் விழுந்து வணங்கி விட்டுச் செல்கின்றார்கள்’ ||96||
கர்கா முனிவர் அர்ஜுனனுக்குத் தொடர்ந்து ஸ்ரீமத் தத்தரின் மேன்மையைக் குறித்துக் கூறினார் ‘அர்ஜுனா, உன் மனதின் உணர்வுகள் மிகவும் தூய்மையானவையாகவும் உண்மையானவையாகவும் உள்ளன; ஆகவே நீயும் சென்று ஸ்ரீமத் தத்த பகவானின் திருவடிகளில் சரணடைவாயாக; அவருடைய முழுமையான தெய்வீகப் பெருமையை மனதில் வைத்துக் கொண்டு அவரைத் தரிசிப்பாயாக; ஏனெனில், நீ விரும்பும் அனைத்தையும் அவரால் மட்டுமே நிறைவேற்றித் தர இயலும் ||97||
உன் மனதில் எழும் அனைத்து சந்தேகங்களையும் நீக்கிக் கொண்டு இயன்றவரை முழுமையான ஆற்றலோடும் நம்பிக்கையோடும் அவருடைய திருவடிகளைப் பற்றிக்கொள்; அவ்வாறு நீ செய்தால், உன் இலக்கை அடைவதற்கான பாதையில் எழும் எந்தத் தடையும் உன்னை எவ்விதம் பாதிக்க முடியாது, வேத சாஸ்திரங்கள் கூறும் அறிவுரையும் இதுவேயாகும்||98||
அந்தப் புனித முனிவரும், தனது குருவானவருடைய வார்த்தைகளைக் கேட்டதும், அர்ஜுனனின் உள்ளம் நெகிழ்ந்து சிலிர்த்தது; அவன் ஆழ்ந்த மரியாதையுடனும், பக்திப் பெருக்குடனும், அந்த முனிவருக்குப் பின்வருமாறு பதிலளித்தான்||99||
‘முனிவரே, உங்கள் அறிவுரைகளைக் கேட்டு நான் பெரிதும் மகிழ்ந்தேன்; உங்களுக்கு என் வந்தனங்கள்; இங்கு கூடியுள்ள அறிஞ்சர்களை விட நீங்களே மேன்மை வாய்ந்தவர்; உங்களுடைய அருளாலும் தக்க போதனையினாலும் மட்டுமே, இறைவன் ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் திருவடிகளைச் சரணடையும் பக்தி உணர்வு என்னை முழுமையாக ஆட்கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன்||100||
உங்கள் அறிவுரைப்படியே நான் இப்போது இங்கிருந்து புறப்படுகிறேன்; அதற்கு முன்னர் நீங்கள் எனக்கு ஒரு வரத்தை அருள வேண்டும்; தெய்வமான அந்த ஸ்ரீமத் தத்தரை அவரது முழுப் பேரொளியுடன் தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிட்ட வேண்டும்; ஏனெனில், என் உள்ளத்தில் இப்போது மேலோங்கி நிற்கும் ஒரே சிந்தனை அதுவே ஆகும்’||101||
அதைக் கேட்ட கர்கா முனிவர், கருணையுடன் அவனை நோக்கி ‘அப்படியே ஆகட்டும்’ என்று வாழ்த்தினார்; அர்ஜுனன் உடனடியாகத் தன் பயணத்தைத் தொடங்கினான்; தனி ஒருவனாகவே அவன் தொடர்ந்து பயணித்து, சஹ்யாத்ரி மலையை அடைந்தான்; அங்குதான் ஸ்ரீமத் தத்தரின் ஆஸ்ரமமும் அமைந்திருந்தது ||102||
அங்கு அவன், குளிர்ந்த, இதமான நீரோட்டத்துடன், மென்மையாகப் பாயும் நீர் நிலையைக் கண்டான்; தூய்மை நிறைந்த காற்றும் மெல்லியதாக வீசியவண்ணம் இருந்தது; அந்த தென்றல் காற்றுடன் அங்காங்கே மரங்களில் அமர்ந்து இருந்த குயில்களின் இனிய இசையும் கலந்தே வந்தது||103||
பலவகை மரங்கள் அடர்ந்து வளர்ந்து, அமைதியான நிழலை வழங்கிக் கொண்டிருந்தன; அவற்றில் எண்ணற்ற பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு மரமும் பூக்களாலும் கனிகளாலும் நிறம்பி வழிந்து கொண்டிருந்தன; எந்த விதத்திலான துயரங்களும் மனதில் எழாதவாறு இருக்கும் வகையிலான சூழ்நிலை அங்கு அமைந்து இருந்ததினால் பரிபூரண அமைதி நிலவியது ||104||
இயற்கையாகவே அமைந்த பகைகளை மறந்து, புலியும் ஆடும் ஒன்றாகப் பழகக் கூடிய இடமது; அனைத்து விலங்குகளும் பறவைகளும் களிப்புடன் விளையாடி மகிழும் இடமது; அத்தகைய சிறப்பு மிக்க, இடத்தில் இருந்த முனிவர் அத்திரியின் ஆசிரமத்தை இளவரசன் அர்ஜுனன் வந்தடைந்தான் ||105||
தேவலோகப் பூங்காவான நந்தனவனம் எத்தனை அழகுடன் காணப்படுமோ, அதே போன்ற அற்புதமான அழகோடு சஹ்யாத்ரி மலையின் மீது அமைந்து இருந்த இடம் காணப்பட்டது. இங்குதான் அர்ஜுனன் தேடி அலைந்து, இறுதியில் ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் தெய்வீக மற்றும் புனிதத் திருவடிகளைக் காணும் பேறு பெற்றான்||106||
முதலில் அர்ஜுனன் ஸ்ரீமத் தத்தரின் கால் தடங்களைக் கண்டான்; அதைக் கண்டதும் அவன் உள்ளம் பூரித்து மகிழ்ந்தது’; இப்படியாக அனைத்தையும் குரு வேத தர்மா தமது சீடன் தீபக்கிற்குத் தொடர்ந்து விவரித்து வந்தார்; அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த தீபக்கின் உள்ளமும் வியப்பால் நிறைந்தது ||107||
|| பி. தெம்பே மகாராஜ் அவர்களால் இயற்றப்பட்ட இத்திருநூலின் ஐந்தாவது அத்தியாயம் இத்துடன் நிறைவு பெறுகிறது ||
இது இறைவன் தத்தாத்ரேயரின் திருவடிகளில் பணிவுடன் சமர்பிக்கப்படுகிறது.
*OVI பாடல்களின் எண்ணிக்கை: 107
முதலாவது அத்தியாயம் முதல் ஐந்தாம் அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
433 + 107 = 540
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -2 , அத்தியாயம் -5 முடிவடைந்தது
அத்தியாயம் -6 தொடர்கின்றது