என்னுடைய தாயாரும் தந்தையும்
இன்று என்னுடைய தந்தையின் வருடாந்திர திவசம். அதி காலையில்  எனக்கு ஒரு விசித்திரக் கனவு. விடியல் காலை சுமார் 3.10 மணி இருக்கும். அதில் முன்னர் எனக்கு தெளிவில்லாத சில விஷயங்களுக்கு பதில் அளிக்கும் வகையில்  என்னுடைய தாயார் எனக்கு சில செய்திகளைக் கூறினார். இந்தக் கனவு  இன்று ஏன் வந்தது என்பதையும், அல்லது எதற்காக வந்தது  என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.  ஆனால் இது என்னுடைய குடும்பத்தின் முக்கியமான செய்தி என்பதினால் உடனடியாக  எழுதி உள்ளேன்.

என்னுடைய தந்தை காலத்தில் இருந்தே எங்களுடைய குல தெய்வம் யார் என்பதையை அறியாமல் நாங்கள்  வைதீஸ்வரன் கோவில்தான் எங்களுடைய குல தெய்வம் என்று எண்ணிக் கொண்டு  அங்கு மொட்டை அடித்தல் மற்றும் எங்களுடைய பிரார்த்தனைகளை செய்து கொண்டு இருந்தோம். அதற்கு இடையில் என்னுடைய தந்தையின் காலத்தில் இருந்தே  வேறு ஒருவர் நட்பினால் திருச்சி அகிலாண்டேஸ்வரி ஆலய வழிபாட்டை தொடரத் துவங்கி அதையே எங்கள் குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபடத் துவங்கினோம். எங்கள் வீட்டு அனைத்து விசேஷங்களுக்கும் திருச்சி அகிலாண்டேஸ்வரியை மட்டுமே ஆராதித்து வழிபாட்டு வந்தோம். ஆனால் உண்மையில் கூறினால் எங்கள் குடும்பம் வசதியாக இருக்கவில்லை. மாறாக பல்வேறு பிரச்சனைகளில் மூழ்கிக் கிடந்தது.  வசதியின்மைக் காரணமாக சமூகத்திலும் நாங்கள் அதிக மதிப்பின்றி இருந்தோம் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இத்தனைக்கும் என்னுடைய தாயார் அதிக பூஜை புனஸ்காரங்களை கைக் கொண்டிருந்தவர்.

காலம் ஓடிக் கொண்டு இருந்தது.  எங்கள் குடும்பத்தினர் யாருக்குமே நல்ல வேலையும் அமைந்திருக்கவில்லை. வாழ்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகள், பிரச்சனைகள்,ஓயாத பிரச்சனை. ஏளனப் பேச்சுக்களையும்  சந்திக்க வேண்டி இருந்தது.

முன்னரே கூறியது போல இன்று என்னுடைய தந்தையின் வருடாந்திர திவசம். அதி காலையில் என்னுடைய கனவில் என்னுடைய தாயார் வந்தார்.  தந்தையின் திவசத்தன்று தாயாரா? ஆச்சர்யமாக இருந்தது.  அவர் என்னுடன் மனம் விட்டுப் பேசினார். அதில் அவர் கூறியவைதான் இந்த செய்தி.

ஒருநாள் என்னுடைய தாயாருக்கு யாரோ ஒரு நண்பர் மூலம் பேச்சு வாக்கில் ஒரு செய்தி கிடைத்தது.  என்னுடைய தந்தையின் இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கான முன்னோர் இன்னார் இன்னார் என  என் தாயாருடன் பேசிக் கொண்டு இருந்தபோது அவரும் தன்னுடைய தந்தை வழி தலைமுறையின் சிலர் எங்களுடைய பாட்டனார் தலைமுறையினருக்கு தெரிந்தவர்கள் என்பதாகக் கூறியபோது  பேச்சுவாக்கில் என்னுடைய தாயார் எங்களுடைய பூர்வீகம் நங்கவரம் என்றும்   எங்கள் குல தெய்வம் என்பது அகிலாண்டேஸ்வரி ஆலயம் மற்றும் வைதீஸ்வரன் கோவில் என்றபோது அவர் அதை சந்தேகித்தாராம். ‘இல்லையே நங்கவரத்தில்  இருந்த  உங்கள் இன்னன்ன  தலைமுறையினர் வணங்கி வந்த குலதெய்வம் என்பது சித்தாடி எனும் கிராமத்தில் இருந்த காத்தாயி அம்மன் அல்லவா, அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி வைதீஸ்வரன் கோவிலை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு, அகிலாண்டேஸ்வரி அம்மனையும் குல தெய்வம் என்கிறீர்கள்’  என்றதும் என்னுடைய தாயாருக்கு பொறி தட்டியது போல சந்தேகம் வந்ததாம்.

ஒருமுறை சந்தேகம் வந்து விட்டால் அதை தீர்த்துக் கொள்ளும்வரை என்னுடைய தாயாருக்கு வேறு சிந்தனை ஏற்படாது. எங்களுடைய சில உறவினர்களிடமும் குல தெய்வம் பற்றிக் கேட்டபோது  அவர்களுக்கும் எங்கள் குல தெய்வம் யார்  என்றே தெரியவில்லை.  ஆனால் வைதீஸ்வரன் கோவிலில் மட்டும் மொட்டை அடிப்பது பல வம்சங்களில் வந்து கொண்டிருந்த பழக்கம் என்பதை மட்டும் கூறி உள்ளார்கள். இன்னும் சில நாட்கள் பொறுத்து மேலும் சிலருடன் பேசிக் கொண்டு இருந்தபோது காத்தாயி  அம்மனே எங்கள் மூதையோர்  வழிபாட்டு வந்திருந்த குல தெய்வம் என்பது என்னுடைய தாயாருக்கு  உறுதியாகத் தெரிந்தது.

அந்த காலத்தில் எங்களுடைய பாட்டனார் தலைமுறையினர் கோவில் குல வழிபாடு என்பதில் அதிக அக்கறைக் காட்டாமல், குல தெய்வத்தின்   படத்தைக் கூட பூஜை அறையில் வைத்திருக்காமல் இருந்துள்ளார்கள். குலதெய்வ வழிபாடு என்பதே இல்லாமல் இருந்துள்ளார்கள். அதனால்தானோ என்னவோ என்னுடைய தந்தையும் கோவில் குளம் என சுற்றிக் கொண்டு தெய்வீக வழிபாடுகளில் அதிக ஈடுபாடு வைத்து இருக்கவில்லை. வீட்டில் மட்டும் அமைதியாக விடியல் காலைக் குளித்ததும் பூஜை அறையில் சென்று அமர்ந்து கொண்டு சில மணி நேரம் தியானத்தில் இருப்பார். அவருடைய தெய்வீக  வழிபாடு அவ்வளவு மட்டுமே இருந்தது. மற்ற நேரங்களில் வீட்டு வாயில் கூடத்தில் அமைதியாக சாமியாரைப் போலவே எப்போதும் அமர்ந்து இருப்பார். ஆனால் என்னுடைய தாயாரோ பூஜை புனஸ்காரங்களை  மிக அதிக அளவில் கொண்டு இருந்தவர்.

என்ன காரணத்தினாலோ  எங்கள் குடும்பத்தினர் குல தெய்வ வழிபாடு என்பதை உணராமலேயே இருந்துள்ளார்கள். அதற்கான வேளை வரவில்லையோ என்னவோ, தெரியவில்லை. ஆனால் என்னுடைய தாயாருக்கு மட்டும் அடிக்கடி மனதில் காத்தாயி அம்மனின் நினைவு தொடர்ந்து கொண்டே இருந்தபோது  உண்மை தெரிய வந்தது.  மெல்ல மெல்ல என்னுடைய தாயார் பலரிடமும் பேசிக் கொண்டு இருந்தபடி  இருக்கையில் உண்மையில் எங்கள் குல தெய்வம் காத்தாயி அம்மனே என்ற உண்மையைக் கண்டு பிடித்தார். இப்படியாக என்னுடைய தாயார் பேசிக் கொண்டு இருக்கையில் என்னுடையக் கனவும் கலைந்தது.  முழித்துப் பார்த்தபோது  காலை மணி 3.20 என தேர்ந்தது. இப்படியாக  என்னுடைய தாயார் மூலமே எங்களுடைய குல தெய்வம் யார் என்பது அடையாளம் தெரிந்தது.   வெகு காலத்துக்குப் பிறகு நாங்கள் மீண்டும் எங்கள் குல தெய்வத்தை வழிபடத் துவங்கி  உள்ளோம்.

முன்னோர்கள்  அக்கறை  காட்டாமல் உதாசீனப்படுத்தி வந்த  குல தெய்வ  வழிபாடு  எங்களுக்கும் பல வருடங்கள் தெரியாமலே இருந்துள்ளது.  குல தெய்வ வழிபாட்டை உதாசீனப்படுத்தியதினலோ என்னவோ எங்கள் குடும்பத்தில் வளமே இல்லாமல், அமைதியும் இல்லாமல்  தேவை அற்ற பல பிரச்சனைகளை சந்தித்தபடி  இருந்தது.  சமூகத்திலும் நல்ல நிலையில் பார்க்கப்படவில்லை.  எங்களை சுற்றி இருந்த தாய் வழி உறவினர்கள்  மேன்மேலும்  முன்னேற்றப்  பாதையில் சென்று கொண்டு  இருக்கையில் தந்தை வழி வந்த முதல் வம்சத்தினரும்  (என்னையும் சேர்த்தே) சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தபடி இருந்தோம். அவற்றை வெளிப்படையாகக் கூற முடியாமல் சமூகத்தில் ஓரளவு ஒதுங்கியே இருக்கும் நிலையில் இருக்க வேண்டியதாயிற்று.

ஆனால் உண்மையாகவே  நாங்கள் பூர்வ ஜென்மத்தில் செய்திருந்த புண்ணியங்களினால்  தக்க நேரத்தில் எங்களுக்கு எங்கள்  குல தெய்வம் தன்னை எங்களிடம் அடையாளம் காட்டிக் கொண்டது என்றே நினைக்கிறேன். ஒரு காலத்தில் என்னுடைய தந்தை பூனாவில் நல்ல வேளையில் இருந்து அங்கு வசித்துக் கொண்டு இருந்தபோது  அவர்கள் வசித்து வந்த பகுதியில் உள்ள வீடுகளில்  யார் இறந்தாலும் என்னுடைய தந்தையும் அங்கு சென்று அவர்களுக்கு  உதவுவாராம்.  அது மட்டும் அல்ல பிணத்தை எடுத்துச் செல்கையில் ஒரு பக்க பாடையை அவர் தனது தோளில்  சுமந்து கொண்டு செல்வாராம். அதனால் அவரை அங்கிருந்தவர்கள் ‘பிணம் தூக்கி ராமசாமி ஐயர்’ என்று  மரியாதையாக அழைப்பார்களாம்.  பிணங்களை  எரிக்கும் இடமே சுடுகாடு.  சுடுகாட்டில் வசிப்பவர் ஸ்மசானவாசி எனும் சிவபெருமான். சிவபெருமானின்  மகனின் மனைவியே வள்ளி எனும் காத்தாயி.  அந்த புண்ணியமும் எங்களை காத்தாயி அம்மனை வழிபட வைத்து இருக்க வேண்டும்.  அது முதல் நாங்கள் சித்தாடி காத்தாயி அம்மனை வழிபடத் துவங்கினோம்.  அதனால்தானோ என்னவோ எங்கள் வழி வம்சத்தினர் தற்போது முன்னேற்றப் பாதையில் செல்லத்  துவங்கி உள்ளார்கள் என்பது மனதுக்கு புரிகிறது.  இல்லை என்றால் குல தெய்வத்தின் சாபத்துக்கு நாங்கள் ஆளாகி இருப்போம்.

இதை வருங்காலத்தில் என்னுடைய வம்சாவளியினர் மறந்து போகாமல் இந்த உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்,  குல தெய்வம் யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்  என்பதற்காக காலப் பெட்டகம் போல இன்று  எழுதி வைத்துள்ளேன்.

இன்று என்னுடைய தந்தையின் திவசத்தன்று  எனக்கு வந்த தாயாரின் கனவு என் மனதில் அமைதியை தந்துள்ளது.  சில நேரங்களில் நம்முடைய கற்பனைக்கு எட்டாமல் சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

நான் யோசனை செய்து பார்த்தேன். எப்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள நங்கவரத்தை  சேர்ந்த எம்முடைய பாட்டனார் காலத்தினர் கும்பகோணத்தின் அருகில் உள்ள சித்தாடி கிராமத்தில் உள்ள காத்தாயியை குல தெய்வமாக வணங்கி வந்துள்ளார்கள் ?  திருச்சியும் கும்பகோணமும் வெகு தொலைவில் உள்ள இடங்கள் அல்ல. நான்கு மணி நேரத்துக்குள்ளேயே சென்று விட முடியும்.  நங்கவரத்தில் இருந்த எங்கள் வம்சத்தினருக்கு ஒன்று கனவில் வந்து தன்னை வழிபடுமாறு குலதெய்வம் கூறி இருக்க வேண்டும். அது முதல் அவர்கள் அங்கு செல்லத் துவங்கி இருக்க வேண்டும். இல்லை அந்த கிராமத்தில் விவசாய நிலம் இருந்து அவர்கள் அடிக்கடி அங்கு சென்று கொண்டு இருக்க வேண்டும்.  அந்த காலத்தில் ஒரு பழமொழி  உண்டு. ‘நாடு பாதி, நங்கவரம் பாதி’ என்று நங்கவரத்தை  சேர்ந்தவர்களைக் குரிப்பிடுவார்கலாம்.  எது எப்படியோ, எங்கள் குலதெய்வத்தை அடையாளம் கண்டு கொண்டு வழிபடுவதின் காரணம் எங்கள் தெய்வமான என்னுடைய தாயார்தான் என்பதே சத்தியமும் ஆகும்.