அத்தியாயம் -26

 சித்த முனிவர் தொடர்ந்து கூறினார் ”அவர்களுக்கு  நற்புத்தி கொடுக்க குருதேவர் இப்படியாகக் கூறலானார் ‘பண்டிதர்களே நீங்கள் நன்கு அறிவீர்கள் ரிஷி முனிவர்கள் கூட வேதங்களை கற்க பெரும் சிரம்மப்பட வேண்டி இருந்தது. இப்போது உள்ளதோ கலிகாலம். கலி காலத்தில் நல்லவை நிகழ பெரும் சிரமப்பட வேண்டும். உங்களுடைய மமதைதான் உங்களை இந்த நிலைக்கு அழைத்து வந்து தர்க்கம் செய்யுங்கள் என்று கேட்க வைக்கிறது.  தர்க்கம் செய்வது என்னைப் பொறுத்த வரை  சுலபமானது. ஆனால் உங்களுக்கு என்ன ஆகும் என்பதை நீங்கள் யோசனை செய்யுங்கள்.

பண்டிதர்கள் என்று கூறிக்கொள்கிறீர்களே, உங்களுக்குத் தெரியுமா வேதத்தின் அளவு? பாரத்வாஜ முனிவர் வேதங்களைக் கற்க எண்ணியபோது பிரும்மாவிடம் சென்று தனக்கு வேதங்களைத் தருமாறு கேட்டார். பிரும்மா என்ன செய்தார் தெரியுமா? வேதங்களை கொண்டு வந்து அவருக்கு முன்னால்  வைத்தார். அவற்றின் அளவு மூன்று மலைகளைப் போன்ற அளவாக குமிந்து இருந்தது. அதைக் கண்டு அரண்டு போன பாரத்வாஜர்  பிரும்மாவிடம் கூறினார் ‘பிரும்மனே, என்னால் எத்தனை வேதங்களை கிரகிக்க முடியுமோ என்று கருதுகிறீர்களோ அந்த அளவு வேதத்தை எனக்குக் கொடுங்கள். அது போதும். நீங்கள் இங்கு வைத்துள்ளதை நான் பத்து ஜென்மம் எடுத்தால் கூட படித்து கிரகித்துக் கொள்ள முடியாதே’. உடனே  பிரும்மாவும் மூன்று பிடி வேதங்களை எடுத்து அவருக்குக் கொடுத்தார். அந்த மூன்று பிடிகளை கிரகித்துக் கொள்ளவே பாரத்வாஜ முனிவருக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

உங்களுக்கு நான் சில புத்திமதிகளை தர விரும்புகிறேன். வேதங்கள் நான்கு பிரிவுகளைக்  கொண்டது என்பதை அறிவீர்கள். உங்களுடைய நன்மையைக் கருதி உங்களுக்கு சில புத்திமதி கொடுக்கின்றேன் கேளுங்கள்.

பாரத்வாஜ முனிவரின் நிலையைப் பார்த்த வியாச முனிவர் வேதத்தை நான்காகப் பிரித்து நால்வருக்கு அவற்றை ஒவ்வொன்றாக போதனை செய்தார். ஆயுர்வேதக் கலையை உள்ளடக்கிய அத்ரி எனும் கோத்திரத்தைக் கொண்ட ரிக் வேதத்தை பைலா என்ற முனிவருக்கு முதலில் போதனை செய்தார்.  கூர்மையான  கண்களையும் நீண்ட  கழுத்தையும் கொண்டவர் அவர். ரிக் வேதத்தின் தேவதை பரப்பிரும்மன். ரிக் வேதத்தின் சூத்திரங்களை ஆஷ்வலாயனா, சங்கியாயனா, ஷகலா, பாஷ்கலா மற்றும் மண்டுகா என்ற பைலாவின் ஐந்து சீடர்கள் இயற்றினார்கள். காயத்ரி மந்திரமே ரிக்வேதத்தை இயக்கும்  முக்கியமான கருவி ஆகும். முதலில் பிரும்மா கொடுத்த  ரிக் வேதமும் ஐந்து பாகங்களைக் கொண்டதுதான் என்றாலும் காலபோக்கில் அவற்றில் நான்கு பாகங்கள் மறைந்து போய் விட்டன. அவற்றில் ஒன்று மட்டுமே உலகில் தங்கி உள்ளது. அகவே நீங்கள் வேதங்களை முழுமையாக அறிந்து கொண்டு விட்டோம் என்று கூறும் தர்க்கமே தவறானது. இந்த உலகிலே காணாமல் போய்விட்ட ரிக் வேதத்தின் நான்கு பாகங்களை  நீங்கள் பார்த்தாவது  இருக்கிறீர்களா? அது சரி ரிக் வேதம் இப்போது எட்டு பிரிவுகளாகி உள்ளன. இந்த வேதத்தை முழுமையாக கற்றறிய ஆறு குறிப்புக்கள் உள்ளன. அவற்றை நீங்கள் படித்திருக்கிறீர்களா?

அடுத்து வைஷம்பாயன் என்ற முனிவருக்கு பல்வேறு யாகங்கள், யக்யங்களை  செய்யும் சாஸ்திரங்களை எடுத்துரைக்கும் யஜுர்வேதத்தை கற்றுக் கொடுத்தார். அதன் மூல தெய்வம் திருமால். கோத்திரம் பாரத்வாஜம். இந்த வேதம் 86  பாகங்களைக் கொண்டது. இந்த  வேதத்தின் கிரந்தங்களை இயற்றியவர்கள் சுபாதயானா, ஆபஸ்தம்பர், சத்யஷாதா, போன்ற மகரிஷிகள். இந்த வேதத்தை  விளக்கும் பதினெட்டு குறிப்புக்கள் உள்ளன. இந்த வேதத்தில் உள்ள மந்திரங்களின் உச்சரிப்பு, ஸ்வரம், வர்ணம், அவற்றின்  அளவு போன்றவை என்ன, அவற்றை எந்த விதத்தில் உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லாம் கற்றுக் கொண்டு விட்டீர்களா ?

மூன்றாவது வேதம் சாம வேதம். இதன்  அடிப்படை இசை ஆகும். சாம வேதத்தை ஜைமினி முனிவருக்கு போதனை செய்தார்.  இதன் அதிபதி காஷ்யப கோத்திரத்தைச் சார்ந்த ருத்திரன் எனும் சிவபெருமான் ஆவார்.  இந்த வேதத்திற்கு ஆயிரம் பாகங்கள்  உண்டு. பரமேஸ்வரரைத் தவிற வேறு யாருமே இந்த வேதத்தை முறைப்படி உச்சரித்தது இல்லை. நாரதர் இந்த வேததுக்கான குறிப்புக்களை எழுதி உள்ளார். ஆயிரம் பாகங்களாக இருந்த இந்த வேதத்தில் இன்று இருப்பது எட்டுக்கும் குறைவானது என்பது உங்களுக்குத் தெரியுமா?

நான்காவதான அதர்வண வேதத்தை சுமந்து என்பவருக்கு உபதேசித்தார். இந்த வேதத்தின் மூல தெய்வம் பைசன  கோத்திரத்தை சார்ந்த இந்திரன். இந்த வேதத்தில் ஓன்பது பாகங்கள் உள்ளன. ஐந்து கல்பாக்கள் எனும் இலக்கியங்கள் உள்ளன. இப்படியாக ஒவ்வொரு வேதத்திலும் பல பாகங்களும் கிளைகளும் உள்ளன. இவை அனைத்தும் உங்களுக்குத் தெரியுமா?

அந்த காலத்தில் வேதங்களை நன்கு கற்று அறிந்திருந்ததினால்தான் பிராமணர்கள் பெரிதும் மதிக்கப்பட்டு வந்தார்கள். அவர்களை தெய்வங்களின் தூதுவர்களாகவே பார்த்தார்கள். வேதங்களைப் பொருத்தவரை மூன்று தெய்வங்கள் நேரடியாக அவற்றை பிரதிபலித்தார்கள்.  இதனால்தான் இந்திரன் போன்றவர்கள் கூட பிராமணர்களைக் கண்டு பயந்தார்கள். பிராமணர்கள் மலையை மடுவாகவும், மடுவை மலையாகவும் ஆக்கும் திறமைப் பெற்றவர்கள் என்று நம்பினார்கள் .

ஆனால் இப்போது கலிகாலத்தில் என்ன நடக்கிறது?  பிராமணர்களே வேதம் ஓதுவதை  விற்கும் அளவுக்கு செயல்படுகிறார்கள். எளிமையான வாழ்வை கடைபிடிக்காமல், தவறான வழிகளில் செல்லத் துவங்கி விட்டனர். காமம், விருப்பு வெறுப்புக்களைக்  கொண்டும் பொருளாசை கொண்டும் இனிய வாழ்க்கைக்கு வழி தேடவும் தவறான வாழ்க்கை நெறியில் சென்று கொண்டு இருக்கிறார்கள்.  வேதம் ஓதுவதை வருமானம் தரும் தொழிலாக மாற்றிக் கொண்டு எவர் முன்னிலையில் வேண்டுமானாலும் சென்று அதை ஓதுகின்றனர். இதனால்தானோ என்னவோ அதைப்  போல நீங்களும் செல்வத்துக்கு அடிமையாகி பெரும் பண்டிதர்கள் என்ற போலி வேடத்தில் தலைகனம் பிடித்து  ஆடுகிறீர்கள்.
பண்டிதர்களை அவமானப்படுத்தும் நீங்கள் அதன் பின் உங்களுக்கு வர இருக்கும் மோசமான விளைவுகளை நிச்சயமாக சந்தித்து நரகத்திற்கே செல்வீர்கள். தோற்று விட்டதாகக் கூறி எழுதித் தரும்படி என்னுடைய சிஷ்யர் திருவிக்ரமபாரதியை நிர்பந்தப்படுத்தி அவரை அவமானப்படுத்தி விட்டீர்கள். அவர் மாபெரும் தபஸ்வி, அமைதியான குணமுடையவர். ஆகவே  இப்படி அற்பத்தனமாக நடந்து கொள்வதை விட்டு விட்டு உடனே திரும்பிப் போய் விடுங்கள்’ என்று   எத்தனை  அறிவுரைக் கூறியும் அவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு ஒலி போலவே  இருந்தன.
அந்த பண்டிதர்கள் ஆணவத்துடன் கூறினார்கள் ‘நீங்கள் தோல்வி அடைந்து விடுவீர்கள் என்ற பயத்தினால்தான் எதை எதையோ கூறி நேரத்தை வீணடிக்கிறீர்கள். எங்களுடன் தர்கம் செய்யுங்கள். இல்லை என்றால் தோல்வியை ஒப்புக் கொண்டு எழுதித் தந்து விடுங்கள்’ என்றார்கள்.

ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் மகத்தான சக்தியை உணர்ந்து கொள்ள முடியாமல் இருந்த அந்த மூட பிராமணர்கள் பாம்பு புற்றில் போய் தானாகவே அகப்பட்டுக் கொள்ளும் எலி போல ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் போய்  விழுந்தார்கள் (இதனுடன் அத்தியாயம் -26 முடிவடைந்தது) .

………. தொடரும்