சாந்திப்பிரியா

பாகம்- 5

அதைக் கண்ட சிசுபாலன் அடங்காத கோபம் கொண்டான். அவனால் கண்ணபிரானுக்கு கொடுக்கப்பட்ட பெருமையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தான் அவமானப் படுத்தப்பட்டு விட்டோம் என்று எண்ணினான். தனக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை கன்னபிரானுக்குச் சென்றதை ஏற்க முடியாமல் அவன் உள்ளம் கொதித்தது. முகம் கறுத்தது. வேர்வை தாரையாக உடல் முழுதும் வடிய பூமியே பிளந்ததோ என்பது போன்ற சப்தத்தை தருவது போல தனது தொடையில் ஓங்கி அடித்துக் கொண்டு எழுந்து கனலைக் கக்கும் வார்த்தைகளைக் கொட்டினான்.
‘குந்தியின் புதல்வரே, பட்டங்களும் மகுடங்களும் நிலையாகப் பெற்றுள்ள மன்னர்களும், அரசவழி உறவினர்களும் கூடி இருக்க பெரியவர்களின் மதிப்பைப் பெறாதவரான கிருஷ்ணருக்கு அர்க்கிய பூஜை செய்து இங்குள்ளவர்களை அவமதித்து விட்டீர்கள். தேவர்களுக்குக் கொடுக்கும் அவிர்பாகத்தை சேரியிலே உழலும் நாய்க்குத் தரலாமா? கண்ணபிரான் உமக்கு நண்பர் என்பதால் நிலை தவறி விட்டீர்கள். சத்தியம் தவற மாட்டோம் என்று நித்தம் கூறுகின்ற நீங்கள் கரை படிந்தவர் ஆகிவிட்டீர்.கண்ணபிரானுக்கு அக்கிர பூஜை செய்ததின் மூலம் சத்தியத்தை அல்லவா தவற விட்டீர்கள். தருமா புத்திரரே, நீதி இல்லாத உம்மையும் தருமர் என்று கூறுவது இழிவல்லவா? ‘ என்று கூறி விட்டு அடுத்து விட்டுமரைப் பார்த்து கூறலானார் ‘சந்தது குமாரரே , இந்த சபையிலே அர்க்கிய பூஜைக்கு தக்கவர் யார் என்பதை தருமர் அறிந்திடாவிடிலும், நீங்கள் அறிந்திருந்தீர்கள். ஆறு பிரிவினரை அர்க்கிய பூஜைக்கு தகுதியானவர் என்று நீரே கூறினீர். அந்த ஆறு பேரில் கண்ணபிரான் எந்தப் பிரிவில் உள்ளார் என்பதை உம்மால் கூற முடியுமா? ஆனாலும் அவற்றை மீறி நீங்கள் கண்ணபிரானுக்கு அர்க்கிய பூஜையை செய்யுமாறு கூறியதின் நோக்கம் என்னவோ? நீங்கள் அவரை புகழ்ந்து பாடிய துதிகளை என்ன என்று கூறுவது? கபட நாடகமா, இல்லை நீங்கள் அவருக்கு துதி பாடியா? பல காலம் வாழ்பவர்களின் ஆழ்ந்த அறிவை வெளிப்படுத்தும் தலைமுடி வெண்மை ஆகியுள்ள உமது நரையும் வீண், அறிவும் வீண், மூப்பும் வீண், நல்லுணர்வும் வீண்.
எவ்வளவோ உயர்ந்த அரசர்கள் இங்கு வீற்று இருக்கும் போதும், அவர்கள் மீது உங்கள் கவனம் செல்லாமல் தாழ்ந்த பள்ளத்தை நோக்கி ஓடும் கங்கையைப் போலில்லாத சாக்கடை நதியைப் போல உங்கள் எண்ணம் கீழ் நோக்கிப் போய் விட்டது’ என்று கூறிய பின் கண்ணனை நோக்கிக் கூறலானான், ‘கண்ணபிரானே, அக்கிர பூஜையை அரச வழி வந்தவரே பெற வேண்டும். நீங்கள் அந்த நிலையில் உள்ளவர் அல்லர். நீர் யார் என்பதை நீரே ஆராய்ந்து பாரும். பலராமருடைய துணை இல்லாமல் உங்களுக்கு எங்கிருந்து வந்தது பலம்? வலிமை உடையவன் என்று பீற்றிக் கொள்கிறீர்கள். உங்களுக்கு கிடைத்துள்ள பட்டங்களின் கதி என்ன என்பதைப் பார்த்தீர்களா? சத்தியன் என்ற புகழ் பெற்றது சத்தியபாமாவை மணந்து கொண்டதினால் வந்தப் பெயர். மதுச்சூதனன் என்பது தேனீக்களை விரட்டி விட்டு தேனை எடுத்ததினால் வந்த பெயர். அது மது எனும் அரக்கனை கொன்றதினால் வந்தப் பெயர் அல்ல. சக்கிராயுதமுடையான் என்பது பகைகருக்கு பயந்து ஓடிய சேனைக்கு தலைவனானதினால் கிடைத்தப் பெயர். நிர்குணன் என்ற நாமம் வீரம், வலி மற்றும் குணங்கள் இல்லாத மானிட உடலை உள்ளவருக்கு சூட்டும் நாமம். ஆகவே மூன்று குணங்களிலும் எந்த குணமுமே இல்லாத நிர்குணன் என்ற பெயரைப் பெற்றுள்ள நீர் அக்கிர பூஜையை ஏற்கத் தகுதியானவரா? பூபதி என்ற பெயர் பூமாதேவியான லஷ்மிக்கு கணவராக இருப்பதினால் வந்தப் பெயர். நரகாசுரனை வென்றதினால் நரகவிசயன் என்ற பெயரை நீர் அடையவில்லை. இப்படியாக போலியாக வெவ்வேறு காரணங்களினால் வந்த உங்களுக்குள்ள பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவை அனைத்தும் உமது வீரத்தனத்தினால் கிடைத்தப் பெயர்கள் அல்ல என்பது உங்களுக்கே வெட்கமாக இல்லையா?’.
இப்படியாகக் கூறிய பின் அங்கு அமர்ந்திருந்த மற்ற அரசர்களை நோக்கி ‘இந்த சபையில் சிங்கம் போல நீங்கள் வீற்று இருக்கையில் ஒரு காட்டு நாயை மதித்து அவிர்பாகம் கொடுப்பது போல கண்ணபிரானுக்கு இந்த தருமா புத்திரர் அர்க்கிய பூஜையை செய்துள்ளார். இதை விட உங்களுக்கெல்லாம் வேறு அவமானம் தேவையா? இந்த கண்ணபிரான் யார்? எருது உருவில் வந்து அரிட்டன் எனும் அரசனைப் பிடித்து வதைத்துக் கொன்ற கொலையாளி. கண்ணபிரான் குழந்தையாக இருந்தபோது பால் குடிக்க அழுததைப் பார்த்து முலை சுரந்து பால் கொடுத்த பூதனை எனும் அரக்கியை பெண் என்றும் பாராமல் முலை சுரந்து பால் கொடுத்த முலைத்தாய் என்றும் பாராமல் மனமிரங்காமல் அவளை வதைத்துக் கொலை செய்தவர். கண்ணனை காப்பதற்காக பசுக்களின் காவலிலே எவலரைப் போல பாதுகாப்பாக வைத்து இருந்த மாமனாகிய கம்சனையும் கொன்றார். வலிமையற்ற சடகாசுரனை அடித்தும், உதைத்தும் வதம் செய்தார். வைரம் போல உறுதியாக இல்லாத மருத மரத்தை இரு பிளவாக முறித்தார். இவை எல்லாம் வீரச் செயல்களா? கேவலம்….கேவலம்’.
இப்படியாக கோபமாக அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட விட்டுமர் எழுந்து அவனுக்கு பதில் கொடுத்தார் ‘ இந்த சபையிலே நான் செய்த அக்கிர பூஜையிலே பொறாமைக் கொண்டவன் கக்கிய விஷச் சொற்கள் வில்லைக் கூட வளைக்க முடியாதவன் எவன் என்பதையே கட்டுகிறது. அவனுக்கு அடி பணிந்த அனைத்து மன்னர்களின் சிரசிலும் இந்த பாதம், வைக்கப்பட்டது’ என்று தனது பாதத்தை சுட்டிக் காட்டி முழங்கினார்.
அதைக் கேட்ட சிசுபாலனின் பக்கத்தை சேர்ந்த அரசர்கள் கோபமுற்றார்கள். துருமன் என்ற மன்ன தேகம் சிவந்து நச்சு மரம் போல எழுந்து நின்றான். உருக்குமிணன் என்பவன் தனது தங்கையான ருக்மணியை கண்ணபிரான் கவர்ந்து சென்றபோது எத்தனைக் கொதித்தானோ, அத்தனைக் கொதிப்புடன் எழுந்து நின்றான். வசு என்பவன் அவரை நோக்கி சென்றபோது தடுக்கி விழுந்தான். இப்படியாக சிசுபாலனை ஆதரித்தவர்கள் கொதிப்பு கொண்டு எழுந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து எழுந்த சிசுபாலனும் படம் எடுத்து ஆடும் நாகம் போல நின்றான். கனல் பறக்க தன்னை ஆதரித்த மன்னர்களைப் பார்த்துக் கூறினான் ‘ சோரம் போன புத்திரர்களான பாண்டாவரையும், கஞ்சனுடைய ஏவலாளாகிய கண்ணபிரானையும் நீங்கள் இன்னமும் கொல்லாதிருந்தது மெத்த தவறாகும். ஆகவே இந்த கண்ணபிரான் போர்முகத்திலே வந்து என் முகத்தின் எதிரில் ஒரு கணமும் நிற்க மாட்டார். இவரைக் கொல்லுதலும் அறிய காரியமும் அல்ல. இவருக்கு அக்கிர பூஜையை செய்து பெருமை செய்த தருமருக்கும் சேர்த்தே கூறுகிறேன், இவரையும் என்னையும் யுத்த களத்தில் வைத்து பரிட்ஷை செய்து பார்க்கட்டும். எங்களில் வல்லவர் யார் என்பது புரிய வரும்’ என்று கூறி விட்டு தருமபுத்திரர் தடுத்தும் கேளாமல் சபையை விட்டு வெளியேறினார்.
பொறுமையும் கருணையும் கொண்ட பாண்டவர்கள் கொடிய நிந்தனைகளை சிசுபாலன் கூறினாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டார்கள். அவனை சிறிய தாய் பெற்றப் புதல்வன் எனவும், விருந்தினராய் நம்மை வந்தடைந்தான் என்றும் நினைத்தார்கள். சிசுபாலனோ வேகமான குதிரைகள் இழுக்கும் தேரில் ஏறிக் கொண்டு தெருத் தெருவை போய் யுத்தப் பிரகடனம் செய்தான். சேனைகளை ஆயத்தம் செய்தான் . போர்பறை முழங்க வைத்தான். போருக்குக் கிளம்பிச் செல்ல அவனது யானைப் படைகள் முதலில் செல்லத் துவங்கின.
அப்படி அவன் செய்ததுமே பல அபசகுனங்கள் நிகழ்ந்தன. போருக்குப் போகும் கணவனை வழி அனுப்ப வந்த ஒரு நங்கையின் தலையில் இருந்த வெண்கலப் பாத்திரம் தவறி கீழே விழுந்தது. வீதியில் இருந்தப் பெண்கள் விக்கி விக்கி அழுதார்கள். குதிரையில் ஏறிக் கொண்டிருந்த படைவீரர்களின் குழந்தைகள் வந்து ‘நீங்கள் எங்கே போகிறீர்கள் ? என அபசகுனமாகக் கேட்டார்கள். இப்படியே பல அபசகுனங்கள் தோன்றினாலும், அவற்றைத் தெரிந்திராத சிசுபாலன் பழிச் சொற்களைக் கொண்ட- விஷத்தை இனிப்பாக்கித் தருவது போல சிலேடைகளினால் கொண்ட – வார்த்தைகள் அடங்கிய வாசகத்தை கூறி யுத்த பிரகடனத்தை வெளியிட்டு விட்டு வருமாறு தூதுவன் ஒருவனை கண்ணனிடம் அனுப்பி போருக்கு அழைப்பு விடுத்தான்.
…………..தொடரும்  

 

முந்தைய பாகங்கள்