ரகுவம்சம்-14
– சாந்திப்பிரியா – 

ரகுவம்ச அழிவின் துவக்கம்

இப்படியாக நாக மன்னனின் சகோதரி குமுதவதியும் அவளை மணந்து கொண்ட ராமனின் மகன் குசனும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கையில் அவர்களுக்குப் பிறந்த மகனுக்கு அதீதி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். குசன் பல இடங்களுக்கும் திக்விஜயம் செய்து பல நாடுகளைக் கைப்பற்றி ராஜ்யத்தை விரிவுபடுத்திக் கொண்டார். அவர் ராஜ்யத்தில் மக்களும் மன மகிழ்வோடு வாழ்ந்து வந்தார்கள். எந்தக் குறையும் அவர்களுக்கு இருந்திடவில்லை. அப்படிப்பட்ட நேரத்திலே ஒருமுறை இந்திரன் தைத்தியாக்கள் என்பவர்களுடன் போருக்கு சென்றபோது அவர் தனக்கு துணையாக குசனையும் அழைத்துச் சென்றார்.  அந்த யுத்தத்தில் தைத்தியாக்கள் கடுமையான தோல்வி கண்டு ஓடினார்கள். கடுமையாக நடந்த யுத்தத்தில் தைத்தியா மன்னன் துர்ஜயா  மரணம் அடைந்தார். ஆனால் அது போலவே அந்த  கடுமையான யுத்தத்தில் துர்ஜயாவினால் குசனும் கொல்லப்பட்டு மரணம் அடைந்தார். குசன் மரணம் அடைந்த சில காலத்திலேயே அந்த மன வருத்தத்தினால் உந்தப்பட்ட குமுதவதியும் மரணம் அடைந்தாள். தந்தை குசாவின் மரணத்துக்குப் பின்னர் அதீதி அரச தலைமைப் பொறுப்பை ஏற்று நாடாண்டார்.

அதீதியைத் தொடர்ந்து அவரது புத்திரன் நிதடராஜன்  பதவியை அடைய அதீதியும் மரணம் அடைந்தார். அவரைத் தொடர்ந்து  நளன், நளனைத்  தொடர்ந்து  நப்பஹா,  நப்பஹாவைத் தொடர்ந்து புண்டரிக்கா, புண்டரிக்காவைத் தொடர்ந்து ஷேமாதவ் என்ற மன்னர்  போன்றவர்கள் ஆட்சியில் தொடர்ந்தார்கள்.  ஷேமாதவ் ஆட்சியும் முந்தைய ரகு மன்னர்கள் ஆட்சிக்கு சற்றும் சளைத்தது அல்ல என்ற அளவிலே புகழ் பெற்று வளர்ந்தது. மக்களுக்கும் எந்தக் குறையும் இல்லை. சில காலம் வாழ்ந்து வந்த ஷேமாதவ் தனது புத்திரனான தேவனிகனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தேவலோகம் சென்றான். தேவனிகனுக்கு அக்னிஹு என்ற புத்திரன் பிறக்க அவனோ நான்கு திசைகளிலும் இருந்த அனைத்து  நாடுகளையும் வென்று அவற்றை ஆண்டு  வந்தான்.

அக்னிஹுவைத்  தொடர்ந்து அவனது மகன் பரியாத்திரா  ஆட்சிப் பொறுப்பை ஏற்க, சிலா, குசா (லவ குசாவில் உள்ள குசா அல்ல), மற்றும்  உன் நாபா எனும் மன்னர்கள் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். அடுத்து ஆட்சிக்கு  வந்த  வஜ்ர நாபா என்பவன் தேவலோக அதிபதியான இந்திரனுக்கு ஒப்பான வலிமையைக் கொண்டவனாக இருந்து அற்புதமான ஆட்சியைத் தந்தான். வஜ்ர நாபா மறைவுக்குப் பிறகு அவன் புத்திரன் சங்கணா என்பவர் ஆட்சிக்கு வர  சங்கணாவின் மறைவுக்குப் பிறகு அவனது மகன் வியூஷி தாசா என்பவர் ஆட்சிக்கு வந்தார். அவர் சிவபெருமானிடம் இருந்து பல அறிய வரங்களைப் பெற்று இருந்தவர். வியூஷி தாசாவோ பல அறிய வரங்களைப் பெற்றுக் கொண்டு தானே விசுவசகா  என்ற பெயரில் தனக்கே மகனாகப் பிறந்து ஆட்சிப் பொறுப்பை தன்னுடைய தந்தையின் காலத்துக்கு பிறகு ஏற்றுக் கொண்டார். நல்ல ஆட்சி கொடுத்து வந்தவரும் காசி விஸ்வநாதரின் பெரும் பக்தனுமான அந்த விசுவசகா துறவறத்தை மேற் கொண்ட  பின்னர் தன்  மகனான ஹிரண்ய நாபா என்பவரை  ஆட்சியில் அமர்த்தினர்.  மாமுனிவரான யாக்யவால்யகர் அத்யாத்ம யோகக் கலையை ஹிரண்ய நாபாவிடம் இருந்தே கற்றறிந்தார்.

ஹிரண்ய நாபாவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் ஹிரண்ய நாபாவின் மகனான  கௌசல்யன் என்பவர் ஆவார்.  விரைவில் கௌசல்யரும் ஆட்சி பொறுப்பை தனது மகனான பிரமிஷ்டர் என்பவரிடம் தந்து விட்டு மறைந்து போனார்.  பிரமிஷ்டர் ஆட்சியில் மக்கள் அனைவரும் பெரும் சுகத்தோடும், மன மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வந்தார்கள். விஷ்ணு பகவானின் வாகனமான கருடன் கூட இவருக்கு சேவகம் செய்ததாக கருதினார்கள். பிரமிஷ்டர் தனக்குப் பிறகு பூச நட்ஷத்திரத்தில் பிறந்த புஷ்யன் எனும் பெயரைக் கொண்ட தனது  புத்திரனை ஆட்சியில் அமர்த்தி அவருக்கு நல்லாட்சி தர வழி காட்டினார்.  பூஷ்யனும் ஜைனிமி முனிவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு யோகக் கலைகள் பலவற்றையும் கற்றறிந்த பின்னர் தனது புத்திரனாகிய துருவசாந்தி என்பவரை ஆட்சியில் அமர்த்தி விட்டு மரணம் அடைந்தார்.

துருவசாந்தி மன்னனானதும் தனது மூதையர்கள் போல வேட்டை ஆடுவதில் ஆர்வம் கொண்டு இருந்தார்.  அப்போது ஒருநாள் அவர் வேட்டை ஆடிக்கொண்டு இருக்கையில் அவர் ஒரு சிங்கத்தினால் அடித்துக் கொல்லப்பட்டு  மரணம் எய்தினார். அவர் மரணம் அடைந்த தருவாயில் அவருக்கு சுதர்சனன்  எனும் குழந்தை இருந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு அவர் முடி சூட்டவில்லை, தமது வாரிசாக நியமிக்கவும் இல்லை. துருவசாந்தி மரணம் அடைந்த செய்தியைக் கேட்ட மந்திரிமார்கள் உடனடியாக ஆறு வயதுக் குழந்தைப் பருவத்தில் இருந்தாலும் அவரது மகனான சுதர்சனுக்கு அயோத்தியாவின் மன்னனாக முடி சூட்டினார்கள்.

இந்த நிலையில்தான் ரகுவம்சத்தின் அழிவும் துவங்க உள்ளது என்ற விதி செயல்பட்டத் துவங்கியது. சுதர்சனன் எனும் அந்தக் குழந்தையும் அனைத்தையும் முறையாகக் கற்றறிந்து கொள்ளத் துவங்கி அறிவில் சிறந்தவனாக விளங்கிற்று.  இருட்டில் ஜொலிக்கும் ஒரே ஒரு சந்திரன் போலவும், வனத்தில் தனிக்காட்டு ராஜாவான சிங்கம் போலவும் தனித்தன்மைக் கொண்டவராக விளங்கினார்.  நவரத்தினங்களில் நீல வண்ணத்தில் காணப்படும் ரத்தினக்கல் எத்தனை சிறியதாக இருந்தாலும் அதை மகாநீலம் என்றே அழைப்பார்கள். அதைப் போலவேதான் மன்னன் சிறுவனாக இருந்தாலும் மகாராஜன் என்றே அழைக்கப்பட்டார். இவர் வாழ்க்கையில் இருந்தே மீண்டும் அவருக்கு மன்னர்களுக்கே உரிய பரம்பரைக் குணங்கள் தோன்றலாயிற்று. அவரது அழகிய வதனம் பெண்களைக் கவர்ந்தது. காம புருஷார்த்தங்கள் அனைத்தையும் கற்றிருந்த  அவரைப் பல  பெண்கள்  மோகிக்கலாயினர்.

தொடரும்….15