COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -11 : அஷ்டாங்க யோக தத்துவம்:
ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் குருமார்கள்

அத்தியாயம் 49
மலைப்பாம்பு, தேனீ, யானை, மான் மற்றும் மீன் போன்றவர்களிடம் இருந்து பெற்ற பாடம்

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

குரு வேத தர்மா தீபக்கிடம் தொடர்ந்து கூறினார் ‘துறவிகளுக்கும் முனிவர்களுக்கும் தலைவனாகவும், கருணைக் கடலாகவும் திகழும் இறைவன் ஸ்ரீமத் தத்தர், யதுகுல மன்னரிடம் பின்வருமாறு கூறினார் ‘நான் எனது ஒன்பதாவது குருவிடமிருந்து பெற்ற போதனையை, நீ மிகுந்த கவனத்துடனும் மரியாதையுடனும் செவிமடுப்பாயாக ||1||

மனைவி மற்றும் குழந்தைகளைச் சார்ந்த ஆசைகளிலேயே மூழ்கிக் கிடப்பவர்களும், தங்கள் ஐம்புலன்களின் ஆசைகளிலும் மூழ்கிக் கிடப்பவர்களும், விதியின் காரணமாக திடீரென அழிவைச் சந்தித்து வீழ்ச்சியடைகிறார்கள்; எனவே, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் ஒருவரின் வயதுக்கும் வேத புராண நூல்களின் வழிகாட்டுதலுக்கும் ஏற்ப, வன வாழ்க்கையை மேற் கொள்வதே சாலச் சிறந்தது ||2||

நன்மையாக இருந்தாலும் சரி, தீமையாக இருந்தாலும் சரி, அனைத்தும் தானாகவே நிகழ்கின்றன; இவை அனைத்தும் ஒருவரின் கர்ம வினைகளின் தாக்கத்தினால் விளைபவைகளே ஆகும்; அப்படியிருக்கையில், எந்த ஒரு நோக்கமும் இன்றி, வீணாக இங்கும் அங்கும் அலைந்து திரிவது ஏன்?||3||

விதியினால் பெறப்படும் கர்ம வினைகளின் பலன்கள் மிகவும் வலிமை வாய்ந்தது; அதனால் எப்படி வாழ்வில் இன்பம் கிடைக்கிறதோ அதே போலவே, அதே வாழ்வில் எந்த முயற்சியும் செய்யாமலேயே துயரம், கவலை மற்றும் இன்னல்கள் ஆகியவையும் தோன்றுகின்றன ||4||

இந்த உண்மையை ஏற்றுக் கொள்வாயாக; ஒரு குறிக்கோள் இல்லாத செயல்களைத் தவிர்க்க வேண்டும்; அற்ப இன்பங்களை நாடி அலைந்து, உன் வாழ்நாளை வீணடித்துக் கொள்ளாதே; எனது அடுத்த குருவான மலைப் பாம்பைப் போலவே, நீயும் மன நிறைவுடன் வாழ பழகிக் கொள் ||5||

விதியின் விளைவாக ஏற்படும் பலன்களால் வெளிப்படும் ரகசியம் இதுவேயாகும்; ஸ்வர்கமும் நரகமும் கூட இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையே; ஐம்புலன்களோடு தொடர்புடைய இன்பங்கள் அங்கும் காணப்படுகின்றன என்றாலும், அவையும் விதிப் பலன்களின் தவிர்க்க முடியாத விளைவுகளுக்கு உட்பட்டவையாகும் ||6||

ஒருவன் நாயாகப் பிறக்க நேர்ந்தாலும் கூட, தனது புலன் சார்ந்த இச்சைகளைத் தணித்துக் கொள்ள அதற்கு ஒரு பெண் நாய் கிடைத்து விடும்; அதேபோல, ஒரு வேளை ஒருவன் ஸ்வர்கத்தை அடைய நேரிட்டால், அங்கும் அதே நோக்கத்திற்காகப் பிற தேவ கன்னிகைகள் காத்திருப்பார்கள் ||7||

தேவலோக ராணியான இந்திராணியுடன் அவளது கணவன் தேவேந்திரன் கூடி மகிழ்ந்து இன்பம் பெற முயல்வது போலவே, ஒரு நாயும் தன் துணையுடன் இணையும்போது, அந்தச் செயலின் வாயிலாக இன்பம் பெற முயல்கிறது ||8||

புலனிச்சிகளினால் கிடைப்பதே இன்பம் ; இதை உன்னை சுற்றி உள்ள அனைத்து இடங்களிலும் காணலாம்; தொடக்கம் முதல் முடிவு வரை அது துயரத்தின் சாயலோடு கலந்தே உள்ளது; இடைப்பட்ட காலத்தில் மட்டுமே, பெரிதும் விளம்பரப்படுத்தப்படும் இன்பம் எனும் மாயையான உணர்வு மேலோட்டமாகத் தென்படுகிறது ||9||

பிரபஞ்சம் வெறும் கேளிக்கைக்காகப் படைக்கப்படவில்லை; உயிரினங்களின் தோற்றம் என்பது பிரபஞ்சத்தின் ஒரு தொடர் நிகழ்வு (Cosmic Process); அதில் புலன் இச்சைகள் என்பது வெறும் தூண்டுதல்கள் (Triggers) மட்டுமே, அவை இலக்குகள் அல்ல; அத்தகைய உயிர்களின் தோற்றமும் விதியால் நிர்ணயிக்கப்பட்டதே ஆகும்; இதை ஒரு மலைப்பாம்பின் வாழ்க்கையின் மூலம் நாம் நன்கு புரிந்து கொள்ளலாம் ||10||

தனக்கு உணவு கிடைக்கும் என்ற போலியான நம்பிக்கையை ஒதுக்கி வைத்துக் கொண்டு, மலைப் பாம்பு மிகுந்த நிம்மதியுடனும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் பொறுமையாக ஒரு இடத்தில் படுத்துக் கிடக்கும்; அதற்குத் தேவையான இறை (பல வகைகளிலான மிருகங்கள் உணவாக) அதைத் தேடி வருகின்றன என்பதினால் அது என்றுமே பசியால் வாடுவதில்லை ||11||

இயற்கையே தனக்கு உணவளிக்கும் என்று முழுமையாக நம்பிக் கொண்டு பொறுமையாக படுத்துக் கிடைக்கும் மலைப் பாம்பு, தன் அருகில் வரும் இறை எதுவாக இருந்தாலும் அதை அலட்சியப்படுத்துவதில்லை; அந்த நேரத்தில் தனக்குக் கிடைத்த உணவு எதுவாக இருப்பினும், அதை முழுங்கி விட்டு மனநிறைவு அடைகின்றது ||12||

மனிதனும் அத்தகைய பொறுமையைக் கடைப் பிடித்து, அந்த மலை பாம்பைப் போலவே மன அமைதியுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்; கிடைப்பது எதுவாக இருப்பினும், நல்ல உணவும் அல்லது சாதாரணமான உணவோ, போதுமானதோ அல்லது குறைவாகவே இருந்தாலும் கூட, அதை மனப்பூர்வமாக ஏற்றுக் அதில் மன நிறைவை அடையும் பக்குவத்தை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும்||15||

ஒருவேளை ஒருவனுக்கு உணவு ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் கூட, நடக்க வேண்டியது நடக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் மன வலிமையோடு அவன் காத்திருக்க வேண்டும்; சோம்பேறித்தனத்தில் மூழ்கி விடாமல், விழிப்புணர்வுடன் கூடிய அமைதியில் இருக்க வேண்டும்; தேவைகளுக்காக அலையாமல், அந்த நேரத்தில் தன் உள்ளிருக்கும் ஆத்மாவோடு ஒன்றிணைவதே ஒரு மனிதன் செய்ய வேண்டிய மிகச் சிறந்த பயிற்சி ஆகும்||16||

உடலின் எந்தெந்தப் பாகங்கள் இயங்க வேண்டுமோ, அதற்குத் தேவையான ஆற்றல் உடலில் இருக்கும் வரை, அவன் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்; மலை பாம்பைப் போலவே, விழிப்புணர்வுடன் கூடிய ஓய்வை* மேற்கொள்ள அவன் கற்றுக் கொண்டால், காலப் போக்கில் எந்தப் பொருளின் மீதும், உணர்வுகளின் மீதும் பற்று இல்லாமல், அனைத்தையும் ஒரு சாட்சியாக நின்று கவனிக்கும் உயர்ந்த ஆன்மீக நிலையை அடையலாம்
{*விழிப்புணர்வுடன் கூடிய ஓய்வு என்பது ஒன்றும் செய்யாமல் அமர்ந்து இருப்பது அல்ல; அது தியான நிலை, அதாவது உடல் ஓய்வில் இருந்தாலும், மனம் விழிப்புடன் இருப்பதே ஆகும்} ||17||

ஒருவனது நெற்றியில் விதி எதை எழுதி வைத்திருக்கிறதோ, மானிடப் பிறவியில் எத்தனை காலத்தை கழிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப் பட்டிருக்கின்றனவோ, அதிலிருந்து விடுபட ஒரே வழி—அந்த வாழ்வை முழுமையாக வாழ்ந்து கடப்பதே ஆகும்; முதிர்ந்த மனப் பக்குவத்துடன் அந்த உண்மையை ஏற்றுக் கொண்டு, எந்த வித அலட்சியமுமின்றி, ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு குறிக்கோளுடன் வாழ்வதே மிகச் சிறந்த வழியாகும் ||18||

ஓ யதுகுல மன்னரே, ஒரு மலை பாம்பைப் போல ஓய்வெடுத்துக் கொண்டிருந்த என்னை நீர் இவ்வாறே பார்த்துள்ளீர்கள்; எந்த காலத்திலும் என் அகத்திலுள்ள ஆத்ம ஆனந்தத்தோடு என்னால் ஒன்றி இருக்க முடிகிறது; ஒரு மலை பாம்பு கற்பிக்கும் பாடம் இதுவேயாகும்; இனி எனது பத்தாவது குருவைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறேன்||19||

புலன்களின் வாயிலாக இன்பங்கள் கிடைத்தாலும் சரி, கிடைக்கா விட்டாலும் சரி, ஒருவன் தன் மனதை விழிப்புணர்வுடன் கூடிய அமைதியிலும் ஓய்விலும் வைத்திருக்க வேண்டும்; இன்பம் கிட்டியதும் ஆரவாரத்திலோ அல்லது அதீத மகிழ்ச்சியிலோ மூழ்கி விடாமல், முதிர்ந்த மனப் பக்குவத்துடன் எதையும் ஏற்றுக் கொண்டு வாழப் பழக வேண்டும்; கடலை பத்தாவது குருவாகக் கருதுவதன் மூலம் கற்றுக் கொண்ட பாடம் இதுவேயாகும் ||20||

கடல் எப்போதும் தண்ணீரால் நிரம்பி முழுமையாகவே திகழ்கிறது; மழைக் காலத்தில் பல ஆறுகள் அதனோடு வந்து இணைகின்றன; அவ்வாறு இணையும்போது, கடல் பொங்கி வழிவதில்லை; அது அதீத மகிழ்ச்சியினால் தன் கரை எல்லைகளை மீறி நிலப் பகுதியை நோக்கிப் பாய்ந்து செல்வதும் இல்லை||21||

கோடை காலத்தில் பல ஆறுகள் வற்றிப் போகின்றன; அதனால் அவை கடலோடு வந்து இணைவதில்லை; அவ்வாறு ஆறுகள் வந்து சேராத காரணத்தினால் கடல் துயரப்படுவது இல்லை; அதனால் அது வற்றிப் போவதும் இல்லை; அத்தகைய எண்ணத்தையும், சீரான மன நிலையையும் மனிதர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்||22||

ஒருவன் தர்ம சாஸ்திரங்கள் வகுத்துரைத்த நன்னெறிகளின்படி வாழ்வதே சிறந்தது; ஒரு புலனின்பம் கிட்டியதும் அதீத மகிழ்ச்சியில் ஆழ்ந்து விடாமலும், அதே போல புலனின்பம் ஏதும் கிட்டாதபோது துயரத்திலும், புலம்பலிலும் மூழ்கி விடாமல் இருக்க வேண்டும்; மாறாக, சற்றே முயற்சி தேவைப்பட்டாலும், விழிப்புணர்வுடன் கூடிய ஆத்ம ஐக்கியத்தோடு வாழ்வதே சாலச் சிறந்தது ||23||

ஒருவன் எத்தனை முயற்சிகள் செய்தாலும், கடலின் ஆழமான அடிப் பகுதியை சென்றடைவது அரிதிலும் அரிதான ஒன்றாகும்; அதன் அடியில் எத்தனை இரத்தினங்களும் கருவூலங்களும் மறைந்து கிடக்கின்றன என்பதை யார் அறிவார்? கடலின் ஒவ்வொரு உண்மையான நீளம், அகலம் மற்றும் ஆழம் ஆகியவற்றை யார் அறிவார்? ||24||

கடல் தன்னுள் கடல் அலைகள், ஏற்ற இறக்கங்கள், புயல், அமைதி என அனைத்தையும் தன் இயல்பாகக் கொண்டுள்ளது; அதே போல, வாழ்க்கையின் இன்ப துன்பங்கள், ஏற்ற தாழ்வுகளை இயல்பாக ஏற்றுக் கொண்டு வாழ்வதற்கும் பயிற்சி தேவை; உலகம் நம்மைப் புரிந்து கொண்டாலும், தவறாகப் புரிந்து கொண்டாலும், அதற்காக நம் மன அமைதியை இழக்கக் கூடாது. அவர்களின் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் தராமல், தன் அக அமைதியில் நிலைத்திருப்பதே முதிர்ச்சி; உலகம் என்ன சொன்னால் எனக்கென்ன?; நான் என்னுள் நிலைத்திருக்கிறேன் என்ற அத்வைத நிலையே முதிர்ந்த யோகியின் வாழ்க்கை||25||

சமூகம் ஒருவனை நல்லவன் அல்லது கெட்டவன் என்றோ எளிதாக முத்திரை குத்தி விடுவார்கள்; வீண் வதந்திகளும், அவதூறுகளும் வாழ்க்கையின் ஒரு அங்கம் ஆகி விட்டது; அவற்றை உனது அமைதியைக் கெடுக்கும் அளவிற்குத் தீவிரமாகி விட அனுமதிக்காதே; அந்த நேரங்களில் துயரத்தின் மறு பக்கத்தை அடைவதற்குத் தேவையான முயற்சியை மேற் கொள்ள வேண்டும்||26||

ஒருவரின் நல்லவை அல்லது தீயவை எவை என்று கணக்குப் போட்டுக் கொண்டே இருந்தால், நம் மனம் எப்போதும் மற்றவர்களைப் பற்றிய சிந்தனையிலேயே உழலும். இது தேவையற்ற மனச் சோர்வை தரும்; சமநிலை தவறாத மனம் (Equanimity) என்பது ஒரு மிகப் பெரிய சொத்து; வெளிச் சூழ்நிலைகள் நம்மைப் பாதிக்காதவாறு மனதை ஒரு நிலையில் வைத்திருப்பதே சிறந்தது; அத்தகைய நிலையை அடைவதற்கும் அசைக்க முடியாத முயற்சி தேவைப்படுகிறது ||27||

மன்னா, கடல் எப்போதும் தண்ணீரால் நிரம்பி வழிகிறது; வெளியிலிருந்து பார்க்கும்போது அது அமைதியாகவும், காண்பதற்கு இன்பம் கொடுப்பதாகவும் தோன்றும்; கடலின் ஆழ்ந்த, அமைதியான மனப்பான்மையை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டு, இப்போது பதினொன்றாவது குருவின் உபதேசத்தைக் கேட்பாயாக ||28||

கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகிய ஐம்புலன்களின் வாயிலாகக் கிடைக்கும் இன்பங்களை மட்டுமே தொடர்ந்து நாடிச் செல்பவர்கள், இறுதியில் அந்த மோகத்திலேயே சிக்கி தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்; அத்தகையோரின் வாழ்க்கையும் மரணமும், ஒருவரது வாழ்க்கையைச் சீர் படுத்திக் கொள்வதற்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாக அமையட்டும்; இதுவே அடுத்த ஐந்து குருமார்களிடமிருந்து பெறப்பட்ட உபதேசமாகும்||29||

சமஸ்கிருதச் செய்யுள்: ‘ஸ்வப்ன ஏவ ந ஜானாதி ஸ்வதோऽபி விஷயான் யதா, ததைவ ஜாக்ருதஸ்யேச் சேத் கோ ந முச்யேத பந்தனாத்’
இதன் பொருள் என்ன என்றால் ‘ஒருவன் கனவு காணும்போது பல மனிதர்களையும் பொருட்களையும் பார்க்கின்றான்; ஆனால், அந்த கனவுப் பொருட்களுக்குச் சுயமான அறிவாற்றல் கிடையாது; அவை அனைத்தும் கற்பனைகளே தவிர வேறில்லை; அதே மனிதன் நாம் விழித்திருக்கும் போதும் அவன் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் வெறும் தோற்றமே, அவற்றுக்குத் தனி அறிவு இல்லை என்பதை எப்போது உணர்கிறானோ, அப்போது அவனுக்குப் பற்று நீங்கி விடும் |30||

தங்கள் புலன் இச்சைகளைக் கட்டுப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்காமல், பெண்களின் தோற்றத்தை மட்டும் கண்டு மயங்கி, சுயக் கட்டுப்பாடு இல்லாமல், பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அதிலேயே மூழ்கியிருக்கும் மனிதர்களின் நிலை, விட்டில் பூச்சிகளைப் போன்றது||31||

அழகிய உருவத்தைக் கண்டதும் மிகுந்த உற்சாகமும் களிப்பும் அடையும் மனிதர்கள், எரியும் விளக்கைக் கண்டதும் மகிழும் விட்டில் பூச்சிகளைப் போன்றவர்கள்; விட்டில் பூச்சிகள் எவ்வித முயற்சியும் செய்யாமல் தாமாகவே சென்று தீச்சுடரில் வீழ்ந்து, அதில் கருகி அழிகின்றன ||32||

தெய்வத்தை நினைப்பதை தள்ளி வைத்து விட்டு, ஆணோ அல்லது பெண்ணோ, இளமைப் பருவத்தில் தோன்றும் புதிய முகங்களைக் கண்டு அவர்களது கவர்ச்சியிலும் துடிப்பிலும் மயங்கி நிற்கும் மனிதர்களின் முடிவும், அந்த விட்டில் பூச்சிகளின் வீணான வாழ்க்கையை போன்றதே ஆகும்||33||

சிறந்த ஆடைகள், தங்கம், நவ ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் எனத் தலை முதல் கால் வரை தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாலும், அந்த வெளிப் பூச்சுக்கள் அனைத்தையும் விலக்கி விட்டு ஊடுருவிப் பார்த்தால், அவர்களின் தோற்றமும் ஒரு பேயை போன்றதாகவே இருக்கும்||34||

உடலில் உள்ள தோல் எனும் உறை நீக்கப்பட்டால், உள்ளே தெரியும் உறுப்புகளின் தொகுப்பு முழுவதும் தூய்மையற்ற பொருட்களின் குவியலே ஆகும்; அது எலும்புகள், தசைகள் மற்றும் கொழுப்புப் படிவுகள் ஆகியவை ஒன்று திரண்ட வடிவமே அன்றி வேறில்லை; இத்தகைய அசுத்தக் குவியலை, கண்கள் ஏன் உற்று நோக்க முற்பட வேண்டும்; அத்தகைய காட்சியில் இன்பம் என்று எதைத்தான் காண முடியும்?||35||

இழிந்த மனப்பான்மை கொண்ட மனிதர்கள் எப்போதும் ஈடுபட்டிருக்கும் ஒரே செயல் இதுவே ஆகும். ஒரு தவளையின் வயிற்றைக் கீறிப் பார்த்தால் உள்ளே என்ன தென்படுமோ, அதே பொருட்கள்தான் மனித உடலிலும் வெவ்வேறு அளவுகளில் காணப்படுகின்றன—இதுவே வாழ்வின் எதார்த்தமான உண்மைக் காட்சியாகும்; இதில் இன்பம் இருப்பதாக வீணாகக் கற்பனை செய்து கொண்டு, ஏன் இரவும் பகலும் அதில் மூழ்கிக் கிடைக்க வேண்டும் ||36||

உடலின் மற்ற உறுப்புகளும் கூட, அவற்றின் மேலுறைகளைப் விலக்கி விட்டுப் பார்த்தால், கண்களால் பார்க்க இயலாத மிகச் சிறிய அளவிலான உயிரினங்கள் பிறந்து வளரும் இருப்பிடங்களாகவே திகழ்கின்றன; அத்தகைய உயிரினங்கள் வாழும் இடத்தில்தான் மகிழ்ச்சி கிடைக்கின்றது என மனிதன் நம்பினால், பேன் போன்ற ஒட்டுண்ணி உயிரினங்களை மட்டும் அவன் ஏன் வெறுத்து ஒதுக்க வேண்டும்? ||37||

அத்தகைய உறுப்புகளைப் பற்றியும், குறிப்பாக உடலின் அந்தரங்கப் பகுதிகளைப் பற்றியும் சிந்திப்பதை அறவே விட்டுவிடு; அவற்றைப் பற்றிய நினைவே உள்ளத்தில் ஒருவித அருவருப்பையும் நடுக்கத்தையும் ஏற்படுத்துகிறது; இனி, எனது பன்னிரண்டாவது குருவாகிய ‘தேனீ’யைப் பற்றிப் தெரிந்து கொள்; அது ஆன்மீகப் போதனைகளுக்குத் துணை புரியும் இரு வித ஞானங்களை நமக்கு வழங்குகிறது ||38||

ஓ மன்னா, நான் கூறுவதை மிகுந்த கவனத்துடன் கேள்; தேனீக்கள் பல வகைகளாக உள்ளன; அவற்றுள் சில வகை தேனீக்கள் தாவரங்களை அழித்து விடுகின்றன; வேறு சில வகை தேனீக்களோ தேனை சேமித்து வைக்கின்றன ||39||

சமஸ்கிருதச் செய்யுள்: ‘மது க்ருந்ததி புஷ்பாதாச்சித்ய க்ருஹ்ணாதீதி மதுக்ருத்; ஆஹாரத்வேன ஸ்வரூபேண ச மது கரோதீதி மதுக்ருத்’
இதன் தத்துவார்த்த விளக்கம் என்ன என்றால் எப்படி ஒரு தேனீ ஒவ்வொரு மலராகச் சென்று தேனை மட்டும் உறிஞ்சித் தன்னிடம் சேர்த்துக் கொள்கிறதோ, அதேபோல அறிஞர்கள் எல்லா நல்ல விஷயங்களிலிருந்தும் சாரத்தை மட்டும் எடுத்துக் கொள்வார்கள்; எப்படி தேனீ தான் சேகரித்த சாரத்தைத் தனது உணவாகவும், பின்னர் அதைத் தேனாக மாற்றும் தன்மையை கொண்டதோ, அதை போலவேதான் ஆன்மீக சாதகனுக்கு தான் கற்ற நற்பண்புகளையே தனது உணவாகவும், தனது சுபாவமாகவும் (ஸ்வரூபம்) மாற்றிக் கொள்ள வேண்டும்; பூக்களிலிருந்து தேனைப் பிரித்து, சேகரித்து (உள்ளே இழுத்து) வைத்துக் கொள்வதால் அது ‘மதுக்ருத்’ (தேனீ) எனப்படுகிறது ||40||

தான் அமரும் ஒவ்வொரு மலரிலிருந்தும் அதன் சாரத்தை (தேனை) உறிஞ்சி ஏற்கும் இச் சிறு பூச்சிகளைப் போலவே, மனிதனும் அனைத்து சாஸ்திரங்களில் இருந்தும் அவற்றின் சாரம்சத்தை படித்து கற்றுக் கொள்ள வேண்டும்; ஏனெனில், சாஸ்திரங்களின் பட்டியல் மிக நீண்டது, முடிவில்லாதது; அதில் கூறப்பட்டு உள்ள ஆன்மீக ஞானத்தை பயில மனித ஆயுட்காலம் அறவே போதாது ||41||

தேனீ கற்றுத் தரும் மற்றொரு பாடம் என்னவென்றால், தேனுக்காக அதிக பேராசைப்படக் கூடாது என்பதே; ‘இன்னும் நிறையத் தேன் இருக்கிறது’ என்று கருதி, ஒரு தாமரை மலரை நாடிச் செல்லும் தேனீயானது, அதிலிருந்து விலக மனமின்றி அங்கேயே தங்கி விடுகிறது; அவ்வாறு விலக நேரிட்டாலோ, அந்த இழப்பைக் குறித்து அது பெரிதும் வருந்துகிறது*
{சில தாமரை மலர்கள் இரவில் தங்கள் இதழ்களை மூடிக் கொள்ளும்; இதனால், தேனுக்காக பேராசைப்பட்டு அதில் தேன் எடுக்கச் செல்லும் தேனீ அந்த மலருக்குள்ளேயே சிக்கிக் கொண்டு, தன் உயிரையும் இழக்க நேரிடுகிறது} ||42||

அதைப் போலவே, ஒரு மனிதன் தனக்குத் தேவையான அனைத்தும் தடையின்றிப் கிடைக்கும் ஒரு இல்லத்தைக் கண்டு விட்டால், அவன் அந்த இல்லத்திலேயே தங்கி விட ஆசை கொள்வான்; அந்த ஆசையே அந்த வீட்டின் மீதான பற்றை ஏற்படுத்தும்; அதன் விளைவாக, தியானம் அல்லது ஞானத்தை தரும் பாதையை அவன் கை விட்டு விடுகிறான் ||43||

பட்டுப் புழுவானது, பொருட்களைச் சேர்த்து வைப்பதின் மூலம் எனக்கு சில முக்கியமான விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளது; நான் கூறும் ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்க்கையையும் கூர்ந்து நோக்கினால், அவை பல உண்மைகளை வெளிப்படுத்துகின்றன என்பது தெரியும்||44||

பேராசையின் காரணமாகப் பொருட்களைச் சேர்த்து வைப்பதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டவர்கள், தாங்கள் சேர்த்து வைத்த செல்வத்தைத் தாங்களும் அனுபவிப்பதில்லை; பிறரையும் அதை அனுபவிக்க விடுவது இல்லை; அது எப்படி உள்ளது என்றால் தனது வாயை தானே பூட்டு போட்டு பூட்டிக் கொண்டது போலத்தான் உள்ளது; செல்வத்தை மறைத்து வைத்துக் கொண்டு உள்ளவர்கள் பாதுகாப்பவர்கள், சிறு காசையும் கூட தர்மமாக வழங்குவதில்லை ||45||

அப்படி பதுக்கி வைக்கப்பட்ட செல்வத்தைப் குறித்து திருடர்கள் அறிந்து கொள்ளும்போது, அவர்கள் அதை பறித்துச் செல்கிறார்கள்; அதில் சில நேரங்களில் செல்வத்தை பதுக்கியவன் உயிரையே இழக்க நேரிடுகிறது; தான் செல்வத்தை எங்கே மறைத்து வைத்துள்ளேன் என்பதை வெளிப்படுத்தாமல் இருக்க அவன் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் இறுதியில் தோல்வியிலேயே முடிகின்றன||46||

தேனீயானது, அனைத்துத் தடைகளையும் கடந்து ஒரு உயரமான மரத்தைத் தேடிச் செல்கிறது; பின்னர், படிப்படியாக, நாள் தோறும் உழைத்து, மக்களின் கண்களுக்குப் புலப்படாத வகையில் இருக்குமாறு அந்த மரத்தில் தேன் கூட்டை கட்டி அதில் தேனை நிறப்புகின்றது ||47||

எதிர் காலத்தைப் பற்றிய நம்பிக்கையில், தேனீ தான் சேமித்த தேனைத் தானும் சாப்பிடுவது இல்லை; பிறரையும் தேனை அனுபவிக்க அனுமதிப்பதில்லை; ஆனால், தன் தேன் கூட்டைப் பாதுகாக்க அது எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகவே முடிகின்றன; ஏனெனில், தேன் எடுப்பவர்கள் வந்து அந்த கூட்டில் உள்ள தேனை முழுவதையும் எடுத்துச் சென்று விடுகிறார்கள்||48||

அதேபோல, ஒருவன் எத்தனைதான் பொருளைச் சேமித்து வைத்திருந்தாலும், அதை அவன் பயன்படுத்தாமல் இருந்தால், பதுக்கி வைக்கப்பட்ட ஒரு பொருள் துருப் பிடித்துப் பாழாகி, எவருக்கும் பயன் படாமல் போவதை போல பதுக்கி வைத்திருப்பவனுடைய செல்வத்தை, தகுதியற்றவர்கள் எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். ||49||

ஓ யதுகுல மன்னனே, தேனீக்களிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் இதுவே ஆகும். இனி, எனது பதிமூன்றாவது குரு பற்றிய பாடத்தைக் கூறுகிறேன்; அதை அமைதியாகவும், முழு கவனத்துடனும் கேட்பாயாக||50||

அன்பின் அடிப்படையில் ஒருவன் தன் மனைவியின் மீதோ அல்லது பிற பெண்களின் மீதோ கொள்ளும் அதீத பற்றுதலும், அதே போல பெண்கள் ஆண்கள் மீது கொள்ளும் அதீத பற்றுதலும் இருவரையும் மன ரீதியாக கட்டிப் போடும் ‘விலங்கு’ போல மாறி விடுகின்றது ||51||

ஒரு அழகான பெண், ஒருவனை போற்றும் விதமாக அவன் கால்களை தொட்டு வணங்கினால், அந்தத் தொடுதல் மூலமாகவே ஒரு பந்தம் ஏற்பட்டு விடுகிறது; மரத்தால் செய்யப்பட்ட பெண் யானையின் உருவத்தைக் கண்டு மயங்கி, ஆண் யானை வலையில் சிக்குவதே இதற்குச் சிறந்த உதாரணமாகும்||52||

மனதை முழுமையாகக் கட்டுப்படுத்தி சமநிலையில் வைத்திருப்பவர்கள் (யோகிகள்/ஞானிகள்) தவிர, வேறு யாரால் எதிர் பாலினத்தவர் வெளிப்படுத்தும் கவர்ச்சியை எதிர்த்து நிற்க முடியும்? ஆண் யானையானது, மரத்தால் செய்யப்பட்ட பெண் துணையின் மீதான ஆசை காரணமாகவே, ஆழமாகத் தோண்டப்பட்ட குழியில் வீழ்ந்து விடுகிறது||53||

ஒரு சிலையைப் போன்ற, ஆனால் தசை, எலும்பு மற்றும் கழிவுகளால் நிரப்பப்பட்ட ஒரு அழகிய மனித உடலானது எதிர் பாலினத்தை சேர்ந்தவனை ஏன் தன் வசம் இழுக்கவோ அல்லது தன்னிடம் பந்தப்படுத்தவோ முடியாது ?; ஒரு சிலராலேயே அத்தகைய மாயைகளில் விழாமல் தனது மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முடிகிறது; எனவே நீங்களே உங்களைச் சுய பரிசோதனை செய்து கொண்டு, ஒரு தெளிவான முடிவுக்கு வாருங்கள்||54||

அந்த நிலை இனிமையானது போலத் தோன்றினாலும், அந்த பந்தத்தினால் ஏற்படும் பற்றுதல் ஒருவனை மோகத்தில் ஆழ்த்தி, ஒரு கட்டத்தில் நரகத்திற்கு ஒப்பான துன்ப மயமான சூழல்களில் காலத்தைக் கழிக்கும் நிலைக்கு அவனை அழைத்துச் சென்று விடும்||55||

ஆண் யானையானது, மரத்தால் செய்யப்பட்ட பெண் யானையின் உருவத்தைக் கண்டதும், அதன் அறிவை (Logic) மழுங்கச் செய்து, அதைத் தழுவுவதற்காக ஆவேசமாகப் பாய்ந்து செல்லும்; இந்தச் சிறந்த உதாரணம் உணர்த்தும் இத்தகைய இயல்பான நடத்தையானது, மற்ற அற்பமான தர்க்கங்களையெல்லாம் வென்று விடுகிறது; ஆயிரம் தர்க்கங்கள் பேசினாலும், ஆழ் மனதின் இயல்பான உந்துதல் ஏற்படும்போது அறிவு பின் வாங்கி விடுகிறது||56||

அதேபோல, இளமைப் பருவத்திலுள்ள ஒரு பெண்ணைக் கண்டதும், எவனொருவன் அவளை நோக்கி அவசரமாகப் பாய்ந்து செல்கிறானோ, அவனை விட வலிமையான மற்ற போட்டியாளர்கள் விரைவில் அங்கு வந்து, அந்த பலவீனமானவனை விரட்டி விடுகிறார்கள் ||57||

எதிர் பாலினத்தவர் துரதிர்ஷ்டத்தின் இருப்பிடமாகவும், காமப் பேய்களின் களஞ்சியமாகவும் கருதப்படுகிறார்கள்; எனவே, உங்கள் பார்வையை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்; கண்களின் வழியாக உள்ளே நுழையும் மோக இழுப்பிற்கு பலர் பலியாகியுள்ளனர்; அவர்களைத் தழுவுவது போன்ற பகற் கனவுகளைக் காண்பது போன்றவை கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை ஆகும்||58||

இவ்வாறு பலர் உலகப் பற்று எனும் படு குழியில் வீழ்ந்து விடுகின்றார்கள்; அவர்கள் இந்த உலகத்திற்குள் பெண்ணின் எந்த பகுதியில் இருந்து எப்படி வெளி வந்தார்களோ, அதே பகுதியின் மீதே மோகம் கொண்டு தங்கள் வாழ்நாள் முழுவதையும் அழித்துக் கொள்கின்றார்கள்; அப்படிப்பட்ட மனிதர்களையும் விலங்கு போன்ற நடத்தையுடையவர்கள் என்று ஏன் கருதக் கூடாது?||59||

மதநீர் ஒழுகும் (மதங் கொண்ட) எந்தவொரு ஆண் யானையும், தன் துணையைக் கண்டதும் அதை நோக்கிப் பாய்ந்து சென்று வலையில் சிக்கிக் கொள்கிறது; ஓ, மன்னா, மனிதர்களின் நிலையும் அத்தகையதே ஆகும்||60||

இளமையுடனும் உடல் வலிமையுடனும் இருந்த போதிலும், பெண்களைத் தேவையின்றிக் தொடுவதைத் தவிர்த்து விலகி இருப்பவர்களே தூயவர்கள் என்று கருதப்படுகிறார்கள்; அவர்களாலேயே சிவபெருமானை அடையும் ஆன்மீகப் பாதையில் முன்னேறிச் செல்ல முடியும் ||61||

தேவலோகப் பெண்கள் பலர் தன்னை மயக்க முயன்ற போதும், நாராயணப் பெருமான் எவ்விதப் பற்றுதலுமின்றி விலகி நின்றாரல்லவா? அதேபோல, ஒரு ஆன்மீகச் சாதகன் அசைக்க முடியாத மனவுறுதியுடனும் பொறுமையுடனும் தன்னைத் வைத்துக் கொண்டிருந்தால் அவன் இறைவனுடன் ஒன்றிணையும் உணர்வு பூர்வமான பாதையில் பயணிக்கிறான் என்பதை அறிந்து கொள்ளலாம்||62||

இரவு நேரங்களில் பெண்களுடன் உறவு கொண்டு, பல்வேறு காமச் செயல்களில் திளைத்து மகிழும் வேளையில், காமம் எனும் பேய்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, தங்கள் தீய ஆட்டங்களை அரங்கேற்றத் தொடங்குகின்றன ||63||

இரவு வேளையில், தன்னையே அளிக்கத் தயாராக இருக்கும் ஒரு பெண்ணைக் காணும்போது, நிமிர்ந்து அமரும் ‘சித்த ஆசனத்தை’ மேற்கொண்டு, மிகுந்த விழிப்புணர்வுடன் விழித்திருக்கும் ஒருவனே, அறிவு கூர்மையும் பொறுமையும் கொண்ட யோகி ஆவான் ||64||

பேரழிவை தரும் யானையின் மோகத்தை கண்டு, நான் கற்றுக் கொண்ட பாடம் இதுவே; பதினான்காவது குரு எனக்குக் கற்பித்தது என்ன என்பதை, நான் இப்போது முழுமையாக விவரிக்கிறேன்||65||

ஒருவன் மனப்பூர்வமாக ஆழ்ந்த தியானத்தில் அல்லது முழு மனதுடன் அறிவுத் தேடலிலோ மூழ்கி உள்ளபோது, அவர்கள் உடல் சார்ந்த தேவைகளுக்காக அந்தப் பயணத்தைத் தற்காலிகமாக கூட நிறுத்தக் கூடாது||66||

ஓ, மன்னா, அதற்கான எளிய வழிமுறை இதுவே; ஒருவனுக்குப் பசி எடுக்கும் போதெல்லாம், அவன் பிட்ஷை பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, தன் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் பிட்ஷைக்காக சுற்றித் திரிய வேண்டும் ||67||

துறவிகளுக்கு இது மிகவும் எளிதானது; ஆனால் இல்லறத்தில் இருப்பவன் தன் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது; அதற்காக அவன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அலைந்து திரிய வேண்டியிருக்கிறது ||68||

ஒரு ஏழை இல்லறத்தானின் நிலைமை என்பது, அவனையும் அவனது குடும்பத்தாரையும் காப்பாற்றிக் கொள்வதற்காக; அவன் தன் முழு இளமைக் கால வலிமையை செலவு செய்து, விறகு, தானியம், காய்கறி என்ற அடிப்படைத் தேவைகளை பெறுவதற்காக ஊர் ஊராகச் சுற்றி (பல்வேறு நகரங்கள்/காடுகள்) அலைய வேண்டி உள்ளது||69||

விடியற் காலை தொடங்கி, வேலை தேடி அலைந்து அதன் மூலமே அன்றைய தினத்திற்கான உணவைப் பெறுகின்றனர்; அவர்களில் பலர் மதிய உணவு வேளையில் தாங்களே சமைத்து உண்ண வேண்டிய நிலையும் உள்ளது ||70||

நாள் முழுவதும் உணவைச் சமைப்பதில் சிரத்தை எடுத்துக் கொண்டு, அதைத் தங்கள் குடும்பத்தினருடன் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் வேளையில், பழைய சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களை போன்று இருந்த துறவிகள் பிட்ஷை கேட்டு அங்கு வந்து சேருவார்கள் ||71||

பல்வேறு காடுகளில் அலைந்து திரிந்து, தங்களுக்குத் தேவையானவற்றை சேகரித்துக் கொள்ளும் முயற்சியை மேற் கொண்ட துறவிகள், வண்டுகள் அல்லது தேனீக்களுடன் (குறிப்பாக மதுகரம் – தேன் சேகரிக்கும் வண்டு) ஒப்பிடப்படுகிறார்கள் ||72||

இந்தத் தேனீயும் கடுமையாக உழைத்து, தன் கூட்டில் தேனைச் சேகரிக்கிறது; ஆனால் அது அதிலிருந்து ஒரு துளியைக் கூடத் தான் உண்ணுவதில்லை, பிறருடனும் பகிர்ந்து கொள்வதில்லை; இறுதியில், அத் தேனைப் யாராவது வந்து கவர்ந்து சென்று விடுகின்றனர் ||73||

ஒரு தேனீ எப்படி மலருக்கு மலர் சென்று, பற்றுதல் இல்லாமல் சிறிது சிறிதாகத் தேனைச் சேகரித்துத் தன் இருப்பிடத்திற்குச் செல்கிறதோ, தேன் எடுப்பவனைப் போல ஒரு துறவி (சந்நியாசி அல்லது பற்றற்றவர்) தனது உணவுக்காகப் பல வீடுகளுக்குச் சென்று, யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், யாருடைய உணவிலும் ஆசை கொள்ளாமல் சிறிது உணவைப் பெறுகிறார்.||74||

ஓ மன்னா, எந்தவிதமான கடும் முயற்சியும் இன்றி, வயிற்றை நிறப்புவதற்காக மட்டுமே, தானாகவே கிடைக்கும் ஏதேனும் ஒரு உணவை ஒருவன் பெற்றால் —தேனீ கற்பித்த பாடத்தை நினைவில் கொண்டு—அவன் அதை ஏற்றுக் கொண்டு, அன்றைய தினத்திற்கான பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும்||75||

சமையல் அறையில் சமைக்கும் சிரமத்தை விட, துறவறம் பூண்டவர்களுக்கு இம்முறை மிகவும் பொருத்தமானது; சமையலறை புகை கண்களை எரிக்கிறது; மேலும், சமையல் செய்யும் போது கைகளில் தீக்காயம் படாமல் தப்பியவர்கள் மிகச் சிலரே ||76||

அனைத்து உணவுகளும் உடலை வளர்ப்பதற்காகவே படைக்கப்பட்டுள்ளன; குறிப்பாக; பிட்ஷை ஏற்று பெறப்படும் உணவை, விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படாமல் உண்ண வேண்டும்; அவ்வாறு உண்ணும் போது, உணவு செரிக்கும் செயல் முறையைத் தியானிக்க வேண்டும் ||77||

உணவை உட்கொண்ட பிறகு, அந்தச் சத்து உடல் முழுவதும் பரவிச் சேர சிறிது நேரம் தியானிக்காதவர்கள், பெருந் தீனி எனும் ஆசைக்கு அடிமையாகி விடுகின்றனர்; விரைவில் அவர்கள் தங்கள் ஆன்மீகப் பாதையிலிருந்து தவறி விடுகின்றனர்||78||

பிட்சை (யாசகம்) எடுப்பது உண்டு விட்டு உறங்குபவர்களுக்கோ அல்லது பொழுதைக் கழிக்க விரும்புவோருக்கானது அல்ல; சோம்பலையும் மந்தத் தன்மையையும் தடுப்பதற்கான எளிய வழிமுறை என்ன என்றால் உணவு உண்ட பின், அந்த உணவு எப்படி இரத்தமாகவும், சக்தியாகவும் மாறுகிறது என்பதை மனக் கண்ணால் உற்று கவனிக்கும் தியான நிலையில் இருக்க வேண்டும்||79||

இல்லறத்தார்கள் அறிந்தோ அறியாமலோ ஐந்து வகையான பாவங்களைச் செய்கின்றனர்; அவர்கள் விருந்தினர்களுக்கு மனமுவந்து உணவளிக்கும்போது, அவ்வுணவால் விருந்தினர் திருப்தியடைவதால் அப்பாவங்கள் குறைகின்றன; மாறாக, பசியுடன் வருவோரை விரட்டியடித்தால், அது இல்லறத்தாருக்குப் பெரும் இழப்பையே விளைவிக்கும் ||80||

பறவைகளும் விலங்குகளும் நிறைந்த ஒரு காடு எத்தகையதோ, பல்வேறு அலங்காரங்களுடன் திகழும் ஒரு இல்லமும் அத்தகையதே ஆகும்; பசியுடன் வரும் எந்தவொரு விருந்தினரும் திருப்தியடையாமல் திரும்பிச் சென்றால், அவர் அந்த இல்லத்தின் தலைவன் ஈட்டிய நற் பயன்களையும் (புண்ணியத்தையும்) தன்னுடன் எடுத்துச் சென்று விடுகிறார் ||81||

ஒரு இல்லறத்தான் ‘வைச்வதேவ’* யாகத்தைச் செய்யாத நிலையில், பிரம்மச்சாரிகளோ அல்லது துறவிகளோ தன் இல்லத்திற்கு வருகையில், அவர்களுக்கு உணவளித்துத் திருப்திப்படுத்தினால், அந்த இல்லறத்தானுக்கு ஒரு வேத யாகத்தைச் செய்ததற்கான பலன் கிடைக்கிறது; மாறாக, அவர்களை வெளியேறுமாறு கூறினால், அப்பாவத்திற்குப் பரிகாரமாகச் செய்ய வேண்டிய சடங்கு ‘சந்திராயண விரதம்’ என்று அழைக்கப்படுகிறது
{*‘வைச்வதேவ’ (Vaishvadeva) யாகம் என்பது தினமும் செய்யப்பட வேண்டிய ஐந்து பெரும் வேள்விகளில் ஒன்றான ‘பூத யக்ஞத்தின்’ ஒரு பகுதியாகும்; இது அக்னியில் உணவை அர்ப்பணிப்பதன் மூலம் தேவர்களுக்கும், பிரபஞ்ச சக்திகளுக்கும் நன்றி தெரிவிக்கும் சடங்காகும்; பூதயக்ஞம் என்றால் உணவு சமைத்த பிறகு, ஒரு சிறிய பகுதியை காக்கைகள், நாய்கள், எறும்புகள் மற்றும் பிற பூச்சிகளுக்கு நிலத்தில் அல்லது பிரத்யேக இடங்களில் வைப்பது ஆகும்; வைச்வதேவ விரதத்தில், ஒருவன் அமாவாசை அன்று ஒரு கவளம் உணவை உண்ணத் தொடங்கி, பௌர்ணமி வரை தினமும் உணவின் அளவை அதிகரித்து, பதினைந்து கவளங்கள் வரை உண்ண வேண்டும்; பின்னர் தேய்பிறைக் காலத்தில் உணவின் அளவைக் குறைத்துக் கொண்டு வந்து, அடுத்த அமாவாசை அன்று முழுமையாக உண்ணாவிரதம் இருக்க வேண்டும்}||82||

மன்னா, எனது பதினான்காவது குருவிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் இதுவே ஆகும்; இனி, எனது அடுத்த குருவிடமிருந்து நான் பெற்ற அறிவைப் பற்றிச் சொல்கிறேன்; அதை நீ கவனத்துடன் கேட்பாயாக ||83||

மான்கள் அவற்றின் வேகத்திற்கும் துள்ளல் நடைக்கும் பெயர் பெற்றவை; அவற்றின் வேகம் காற்றிற்கு ஒப்பிடப்படுகிறது; அவற்றை எளிதில் பிடித்து விட முடியாது; ஆனால், இசையைக் கொண்டு அவற்றை மயக்கும் போது, அவை எளிதில் வலையில் சிக்கிக் கொள்கின்றன ||84||

இசையைக் கேட்பதில் கொள்ளும் இந்த அதீதப் பற்று, ஒருவனது அறிவுசார் புலன்களுக்குத் தீங்கை விளைவிக்கிறது; இனிய இசைக்கு மயங்கி மான்கள் வலையில் சிக்குவது போலவே, வேடன் அதிக சிரமமின்றி மனிதர்களையும் தன் வலையில் வீழ்த்தி விடுகிறான்||85||

பல வேடர்கள் காடுகளுக்குச் செல்லும்போது, பாடகர்களையும் இசைக் கலைஞர்களையும் உடன் அழைத்துச் செல்கின்றனர்; அங்கே அவர்கள் வீணை போன்ற நரம்பிசைக் கருவிகளை மீட்டி, அதற்குப் பொருத்தமான ராகங்களில் பாடல்களைப் பாடுகின்றனர் ||86||

திடீரென ஒலிக்கும் அந்த இன்னிசையைக் கேட்டு, அதனால் இழுக்கப்படும் மான்கள், மற்ற அனைத்தையும் மறந்து விட்டு, அந்த இசை ஒலிக்கும் திசையை நோக்கி விரைந்து ஓடுகின்றன; அவ்வாறு வரும்போது, அங்கே காத்திருக்கும் வேடர்களின் கையில் அவை சிக்கிக் கொள்கின்றன||87||

இன்னிசையின் மெட்டுகளில் மயங்கி, மான்கள் வேடர்களிடம் சிக்கிக் கொள்கின்றன; செவிப்புலனைத் திருப்திப்படுத்துவதில் அளவிற்கு அதிகமாக மூழ்கி விடக் கூடாது என்னும் பாடத்தை இது எனக்குக் கற்பித்தது ||88||

பாடல்களின் ஒலிகள் இனிமையாகத் தோன்றலாம்; நேர்த்தியாக இசைக்கப்படும் மெல்லிய மெட்டுகள் மனதை ஈர்க்கலாம்; ஆனால், அவற்றின் மீது அதீத மோகம் கொள்வது அனைத்து அகப் புலன்களுக்கும் தீங்கிழைக்கும்; அதன் விளைவாக ஏற்படும் பந்தம் மிகவும் கொடியதாகும் ||89||

குறிப்பாக, ஒரு இளம் மங்கை குயிலின் குரலைப் போல இனிமையாகப் பாடும்போது, அதைக் கேட்டுப் பலர் மதி மயங்கிப் போகின்றனர்; அப்போது, விழிப்புணர்வுடன் கூடிய அகப் புலன்கள் தங்கள் நிலையிலிருந்து வழுவிச் செல்வது எத்துணை எளிது ||90||

பலவிதமான வண்ணக் காட்சிகளுக்கிடையே, சுருதி மற்றும் தாள லயங்கள் பிசகாமல், பல்வேறு ராகங்களையும், ராகிணிகளையும் பாடுவதில் வல்லமை பெற்ற ஒரு தேர்ந்த இசைக் கலைஞரே பாடினாலும் கூட, விவேகம் கொண்டோர் அதைக் சற்றுத் தொலைவிலிருந்தே கேட்க வேண்டும்||91||

மாறாக, எவ்விடத்தில் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் முழக்கத்தையும், சாம வேதப் பாராயணத்தையும் பக்தியுடன் கேட்கும் வாய்ப்பு கிடைக்கிறதோ, அவ்விடத்திற்குச் சென்று அதைக் கேட்க வேண்டும்; அல்லது, பக்தர்கள் ஓரிடத்தில் கூடி, இறைவனைப் போற்றிப் பாடி, பக்திப் பரவசத்தில் திளைக்கும் சூழல் அமைந்தால், அதிலும் கலந்து கொள்வது மிகவும் சிறப்பானதாகும் ||92||

மற்றவை புலம்பலே; இருப்பினும் அது இசைக்கு ஏற்றதாக இருக்கலாம்; தெய்வீகத்தைப் போற்றாத அத்தகைய இசைக் குறிப்புகள் நரிகளின் அலறல் அல்லது ஓலத்துடன் ஒப்பிடப்படுகின்றன ||93||

முற்காலத்தில் ரிஷி ஸ்ருங்கி என்ற முனிவர், ஒருவர் பாடல்கள் மற்றும் மெல்லிசைகளால் எவ்வாறு ஒருவர் கவரப்படலாம் என்பதற்கு உதாரணமாகக் இருந்துள்ளார்; அவர் ஒருமுறை பெண்கள் நடனமாடுவதையும், பாடுவதையும் கண்டு, அவற்றால் கவரப்பட்டு மற்ற அனைத்தையும் மறந்து நின்றார் ||94||

அத்தகைய காமமூட்டும் மெல்லிசைகளைக் கேட்க முயற்சி செய்யா விட்டாலும், அவற்றை நினைவு கூர்வதைக் கூட தவிர்க்க வேண்டும்; இதுவே பதினைந்தாவது குரு கற்பிக்கும் பாடம்; இப்போது பதினாறாவது குருவின் போதனையைப் பற்றி சுருக்கமாகக் காண்போம்||95||

நீரில் மிகவும் சுறுசுறுப்பாகவும், பார்ப்பதற்கு விளையாட்டுத்தனமாகவும், வெறும் கைகளால் பிடிப்பதற்கு கடினமாகவும் இருக்கும் மீன்கள், உணவின்மையாலும், சுவை உணர்வுக்கு அடிபணிவதாலும், உணவிற்காகவும் பிடிபடுகின்றன||96||

மீன்கள் தங்கள் வாழ்நாளை நீரில் கழித்தாலும், அவை தங்கள் நாவை அடக்கவில்லை; அதனால் மீன் பிடிக்கச் செல்பவர்கள் உணவுத் துண்டுகளையோ அல்லது வண்ணப் பொருட்களையோ தூண்டிலில் கட்டி தண்ணீருக்குள் போட்டு நிறைய மீன் பிடிக்கிறார்கள்; ஒரு நிமிடம் சுவைக்காக அது தனது உயிரையே இழக்க நேரிடுகிறது ||97||

ஒருவன் சுவைக்கு அடிபணியாத வரை நல்லது; பொருட்களின் நாக்கின் சுவை மீதான ஆசைகளை வெல்வது கடினமானது; மீன் எவ்வாறு ஒரு சிறு சுவைக்காகத் தன் முழு வாழ்வையும் இழக்கிறதோ, அதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, அதிக உப்புள்ள ஊறுகாய், காரமான உணவுகள் மூலம் ஏற்படும் நாவின் சுவை உணர்வுகளை மெல்ல மெல்லக் கட்டுப்படுத்தப் பழக வேண்டும் ||98||

செழுமையான உணவுகளின் வெறும் நினைவே வாயில் நீர் ஊறச் செய்கிறது, அதன் பிறகு நல்ல சமையல் பொருட்களின் நறுமணம் கவர்ந்திழுக்கிறது; அப்படிப்பட்டவர்களால் தங்கள் புலன்களை அடக்க முடியும் என்று எப்படி நம்ப முடியும்? ||99||

நாவின் சுவைக்கு அடிபணிந்த அனைவரும், தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்ள இங்குமங்கும் அலைய வேண்டியுள்ளது; மற்ற போதைப் பழக்கங்களைப் போலவே, அவர்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வீட்டில் உள்ள வளர்ப்பு விலங்குகள், பொருட்கள் மற்றும் அத்தனை ஏன் தங்கள் குழந்தைகளைக் கூட விற்கத் தொடங்குகிறார்கள்||100||

போரில் பெரும் வலிமையைக் காட்டி, வலிமை மிக்க எதிரிகளை வெல்லும் பல வீரர்கள் கூட, இந்தச் சிறிய நாவுக்கும் அதன் வேட்கைக்கும் அடிக்கடி இரையாகி விடுகிறார்கள்; உணவு மீதான பேராசையை வெல்வது கடினம் ||101||

அறிஞர்களின் விஷயத்திலும் இதுவேதான்; அவர்கள் விவாதங்களில் மற்றவர்களை வெல்கிறார்கள்; சொற்பொழிவுகளில் பாராட்டப்படுகிறார்கள்; ஆனால் அவர்களும் நாவின் சுவையில் அடங்கி விடுகிறார்கள்; எனவே, உலகில் எங்கிருந்தாலும் நாவின் சுவை என்பது ஒரு வலிமையான எதிரியாகக் கருதப்படுகிறது||102||

இது மிகுந்த வியப்பைத் தூண்டுகிறது; நாக்கு எனும் உறுப்பு நான்கு விரல்களுக்கு மேல் நீளம் இல்லாதது; ஆனாலும் அதன் சுவையின் தன்மையை ஏன் வெல்ல முடிவதில்லை? இதைப் பற்றிச் சிந்தித்து, அதற்கேற்பப் பதிலளியுங்கள் ||103||

நானும் இதை மீண்டும் மீண்டும் பயில வேண்டியிருந்தது; மிகுந்த முயற்சிக்குப் பின்னரே இதில் வெற்றியை அடைந்தேன்; அதனால்தான், நீங்களும் அதற்கேற்ப நடந்து கொள்ளும் பொருட்டு, ஐம்புலன்களில் ஒன்றான இந்த குறிப்பிட்ட உறுப்பின் மீது நான் இவ்வளவு அழுத்தம் கொடுக்கிறேன்||104||

நீங்கள் படிப்படியாக முயற்சி செய்ய வேண்டும்; நாக்கின் ஒவ்வொரு தன்னிச்சையான விருப்பத்திற்கும் அடி பணியக் கூடாது; பிராணாயாமம் போன்ற சுவாசப் பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டும்; அதன் வாயிலாகவே, அந்தப் புலன் சார்ந்த விருப்பத்தை அடக்க முடியும் ||105||

ஒருவர் சுவை எனும் புலனை முழுமையாக வெல்லும் வரை, மற்ற எந்தப் புலன் சார்ந்த விருப்பத்தையும் வெல்ல இயலாது; அதனால்தான், ‘நாக்கை வென்றவரே மற்ற அனைத்தையும் வென்றவர்’ என்று கூறப்படுகிறது; சுவை அடக்கப்பட்டால், தொடுதல், பார்த்தல் போன்ற பிற புலன்களின் ஈர்ப்புகளும் வெல்லப்படாமல் இருப்பதில்லை ||106||

இதை மனதில் கொண்டு, அனைத்துப் புலன் சார்ந்த விருப்பங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வென்று, அவற்றின் மீது முழுமையான ஆளுமை செலுத்தும் நிலையை நான் அடைந்தேன்; அதன் விளைவாகவே, இப்போது நான் ஆழ்ந்த மன அமைதியுடனும் சம நிலையுடனும், எவ்விதக் கவலையுமின்றி இளைப்பாறுவதை காண்கிறீர்கள்||107||

ஐம்புலன்களைக் கட்டுப்படுத்துதலே — குறிப்பாக நாக்கு எனும் புலனைக் கட்டுப்படுத்துதலே, பதினாறாவது குருவின் போதனையாகும்; சுவைக்கு அடிபணிந்து நடப்பதில் இருந்து விலகி இருக்க, எப்போதும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருங்கள் ||108||

II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் நாற்பத்தொன்பதாவது (49) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் நாற்பத்தொன்பதாவது (49) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 5187 = 5295

*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}

……இதோடு பாகம் -11, அத்தியாயம் 49 முடிவடைந்தது
அத்தியாயம் 50 தொடர்கின்றது