COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

 

பாகம் -11 : அஷ்டாங்க யோக  தத்துவம்

அத்தியாயம் 39
ஸ்ரீமத் தத்தரின் கருணை; மன்னன் ஆயு புத்திர பாக்கியம் பெற்றார்

|| ஸ்ரீ கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீ தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீ கணேஷாயே நமஹா || || ஸ்ரீ சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீ குருப்யோ நமஹா || || ஸ்ரீ சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீ குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீ தத்த சமர்த்த ||

‘ஓ, இப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவி நிற்கும் இறைவா, எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே, உம்மைப் பற்றிய இந்த அமுத மயமான உபதேசத்தை யார் பருகுகிறார்களோ, அவர்கள் பாவிகளாகவே இருப்பினும் ||1||

அவர்கள், கங்கை போன்ற புண்ணிய நதிகளுடன் கலக்கும் கழிவு நீர்க் கால்வாய்களைப் போன்றவர்கள் ஆவர்; அந்த நதிகளுடன் கலந்த பின், அவர்களை மீண்டும் யார் அசுத்தமானவர்கள் என்று கூற முடியும்?; அது போலவே, உம்மை முழுமையாகச் சரணடைந்து விட்டவர்களை எப்படிக் களங்கப்பட்டவர்கள் என்று அழைக்க முடியும்?’ ||2||

மேற்கூறிய இந்த உண்மையை நம்பாதவர்கள் பலர் உள்ளனர்; அவ்வாறு அவர்கள் நம்ப மறுத்தால், அவர்கள் தங்களுக்குக் கிடைக்க இருந்த மிக உயர்ந்த நன்மையைத் தாங்களே இழக்க நேரிடும்; இதனால் எங்களுக்கு என்ன இழப்பு ஏற்படப் போகிறது? தாங்கள் செய்த தவறினாலேயே அழிய உள்ளவர்கள் அவர்களே ஆவர் ||3||

உண்மையான பரம்பொருளின் தத்துவம் ஒருவரால் விளக்கப்படும்போது, மக்கள் அதைத் தங்கள் உள்ளத்தில் ஆழப் பதிந்து வைத்துக் கொள்ள முடியாமல் போனால், அந்தத் தோல்விக்கு அந்த போதனையாளர் பொறுப்பு ஏற்க முடியாது; அந்தப் பரம்பொருளை குறித்து விளக்க வேண்டும் என்ற அவரது நல்ல எண்ணம் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே நிலைத்திருக்கும்||4||

கருணைக் கடலாகத் திகழும் இறைவா, படைப்பில் உள்ள அறிவுள்ள மற்றும் அறிவற்ற உயிரினங்கள் அனைத்தையும் மேன்மை அடைய வைக்க வேண்டும் என்ற ஒரே குறிகோளிற்காகவே நீர் ஒரு ஞான சித்தருக்கு மகனாக அவதரிக்கத் திருவுளம் கொண்டீர்; இது நீர் எங்களுக்குச் செய்திருக்கும் எத்தனைப் பெரிய உதவியாகும் ||5||

தெளிவாகச் சொல்வதானால், இதே மண்ணில் நீங்கள் உமது பல்வேறு திரு உருவங்களை வெளிப்படுத்தி உள்ளீர்கள்; அந்தத் திருவுருவங்கள் அனைத்தும் எங்களுக்கு நீர் செய்திருக்கும் பல்வேறு பேருதவிகளே ஆகும்; இவ்வாறாகவே உமது தாராள குணம் எங்கும் மேலோங்கி நிற்கிறது||6||

எவ்வித உருவமும் அற்ற அந்தப் பரஞ்சோதி பிழம்பானது, இப்போது திவ்யமான திருவுருவத்துடன் கண்களுக்குப் புலப்படுகிறது; இந்த பூமியில் உமது திருவுருவம் தெளிவாகக் காட்சியளிக்கும்போது, இறைவனின் கருணைக்கு இதை விடச் சிறந்த உதாரணம் வேறு என்ன இருக்க முடியும்?||7||

உலகியல் சார்ந்த இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து விட முடியும்; ஆனால் முக்திப் பேறு என்பது எளிதில் கிட்டாத ஒன்றாகும்; அந்த முக்திப் பேறை மக்கள் விரைவாக அடைவதற்காகவே, நீர் மனித உருவம் கொண்டு வந்துள்ளீர்கள் ||8||

தீயோரைத் தண்டிப்பதற்கும், நல்ல பண்புகளைக் கொண்டவர்களை ஊக்குவிப்பதற்கும், நீங்கள் நிகழ்த்தும் இன்ப மயமான செயல்கள் அனைத்துமே மனித குல மேம்பாட்டிற்காகவே துணை நிற்கின்றன ||9||

உள்ளத்து கருவிகளைத் தூய்மைப்படுத்த, இதை விடச் சிறந்த தீர்வு வேறு என்ன இருக்க முடியும்? உமது இன்ப மயமான லீலைகளைச் சிந்திப்பதை விட எளிதான வழி வேறு என்ன இருக்க முடியும் ||10||

சுருதி நூல்கள் ‘சர்வம் கலு இதம் பிரம்ம’ (இவையனைத்தும் பிரம்மமே) என்று கூறுகின்றன ; உண்மையில், இந்த முழு பிரபஞ்சமும் தெய்வீகத் தன்மையிலிருந்து வேறுபட்டது அல்ல; ஒருவன் உமது இன்பமயமான லீலைகளை உள்ளன்போடு உணர்ந்து கொள்ளும் போது, மேற்கூறிய முதுமொழியின் உண்மையை அவனால் அறிந்து கொள்ள முடியும் ||11||

மன அமைதி இன்றி இருப்பவர்களும் கூட , பொதுவாக உமது லீலை மற்றும் மேன்மையை உள்ளன்புடன் கேட்டு, அவற்றில் மூழ்கி இருக்கும்போது அவர்களது மனம் மீண்டும் அமைதி இன்றி இருப்பது இல்லை||12||

வழிபடுபவன், வழிபடப்படுபவன் ஆகியோருக்கிடையேயான வேறுபாடும், மட்டும் இன்றி வழிபாட்டுச் செயலும் கூட, ஒருமுக உணர்வினால் மறைந்து விடுகின்றன; உமது இன்பமயமான லீலைகள் ஏற்படுத்தும் மகத்தான விளைவு இத்தகையதே ||13||

இயற்கையின் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டது என்று போற்றப்படும் உமது திவ்ய ரூபத்தை, சாதாரண புலன்களாலும் அறிவாற்றலாலும் முழுமையாக உணர்வது கடினம்; எனவே, உமது கருணையால் மட்டுமே தரிசிக்கக் கூடிய அந்த திருவுருவத்தை, நாங்கள் ஆனந்தத்தோடு தரிசித்து மகிழ விரும்புகின்றோம் ||14||

எங்கும் நிறைந்திருக்கும், காணக் கூடிய இயற்கையின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட அந்தப் பரம்பொருளை, சிறந்த அடியார்கள் மூலமாக மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்; இவ்விஷயத்தில் வேதங்களே அதற்கு சான்றாகத் திகழ்கின்றன ||15||

சாஸ்திரங்களை விரித்துரைப்பவர்களும், இடை விடாமல் விவாதங்களில் ஈடுபடுபவர்களும் கூட, இயற்கைக்கு அப்பாற்பட்ட எங்கும் நிறைந்திருக்கும் சர்வ வல்லமையான அந்த பரம்பொருளின் மீதும் அவரவர்களுடைய தெளிவான பார்வையை வைக்க முடியாமல் உள்ளனர் ||16||

எல்லைகளற்ற ஆனந்தமாகத் திகழும் அந்தப் பரம்பொருளை, சாதாரண அறிவாற்றல் மூலம் எப்படி முழுமையாக அறிந்து கொள்ள முடியும்? பக்தர்களுக்காகவே வெளிப்படுத்திய உமது திருவுருவத்தை உள்ளன்போடு எவர் வழிபடுவார்களோ அவர்களால் மட்டுமே அந்தத் திவ்யமான பேரின்பத்தை முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன; அந்தப் பரம்பொருளோ தர்க்கங்களைக் கடந்தவர்; எல்லையற்ற ஒன்றை, எல்லைக்கு உட்பட்ட புத்தியினால் பிடித்து விட முடியாது ||17||

நிலம், நீர், ஒளி, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களுக்கும், அனைத்து வெளித் தெரியும் பொருட்களுக்கும் அதிபதியாகத் திகழ்பவர் நீர் ஒருவரே; எங்கள் அனைவரையும் உயர்த்துவதற்காகவே நீர் இவ்வுலகில் அவதரித்துள்ளீர்; இந்த உண்மையில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது||18||

ஆடையில் பின்னப்பட்டு உள்ள நூல்களைப் போல, இந்த பிரபஞ்சமும் உன்னால் பின்னப்பட்டு உள்ளது; உங்களால் பின்னி பிணைக்கப்பட்டு உள்ள இந்த உலகத்தை உங்களிடம் இருந்து எப்படி வேறுபடுத்திப் பார்க்க இயலும் ||19||

ஆகையால் இறைவா, நான் உனக்கே உரியவன் என்பதற்கு உங்களிடம் இருந்து அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும், உங்கள் மீது எனக்கு அத்தகைய உணர்வு உள்ளது; உன் மீதான என் அன்பு என்றும் மாறாதிருக்கட்டும் ||20||

உங்களது வாழ்க்கையை வார்த்தைகளில் சித்தரிக்கத் தேவையான பக்தியை உங்கள் பக்தர்களுக்கு தருபவரும் நீயே; அதன் மூலம் பக்தனின் உணர்வை உன் மீதுள்ள அன்பால் பிணைப்பவனும் நீயே ||21||

உங்கள் மீது பிரியம் கொண்டு உள்ள உங்கள் பக்தர்களின் தன்மை என்ன என்றால் அவர்கள் உங்களது மேன்மையை மனதார கேட்டுப் புரிந்து கொள்ளும்போது, அவர்களது கற்பனைகள் மற்றும் துக்கங்களிலிருந்து விடுபடுகின்றார்கள்||22||

குறிப்பாக, உமது பக்தர்களின் குணாம்சங்கள்* மீது பாடப்படும் கதையே உங்களுக்கு மிகவும் பிடித்தமானது; அதில் இருமை இல்லாத காரணத்தால், அது உங்களுக்கே சேவை செய்வதாக அமைகின்றது; அதனால்தான், உமது பக்தர்களின் வாழ்க்கையை கதையை* கேட்டறியும்போதும் மக்கள் மேன்மை அடைகிறார்கள்
{* ஸ்ரீமத் தத்தரின் அபாரமான பக்தர்களின் கதை ஸ்ரீமத் தத்தரின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து உள்ளது; ஆகவே அவர்களது கதையில் ஸ்ரீமத் தத்த பகவானின் வரலாறும் வருவதினால் பக்தர்களின் கதையை கேட்பதில் மூலமும் மற்றவர்கள் பலன் அடைகின்றார்கள்} ||23||

உங்களது புகழ்பெற்ற சீடர் சகஸ்ரார்ஜுனா மற்றும் புனித அரசி மதாலஸாவின் மகனான அரசன் அலர்கன் போன்றவர்களது வாழ்க்கை ஏற்கனவே இங்கே கூறப்பட்டு உள்ளது; இப்போது, உமது அன்புக்குரிய மேலும் சில பக்தர்களின் வாழ்க்கையை சித்தரிக்க எங்களை அனுமதிக்க வேண்டும்||24||

எங்களது குறிப்பிட்ட விருப்பம் நிறைவேறட்டும் என்றே நாங்கள் உம்மை வேண்டுகிறோம்; ஓ இறைவா, ஓ குருவே, உங்கள் அருள் மூலம் உங்களுடைய அடியவர்களின் வாழ்வை வரலாற்றை எழுதும் ஆற்றலும் ஊக்கமும் எங்களுக்கு கிடைக்கட்டும் ||25||

{மேலே கூறிய- 1 முதல் பத்தி 21 வரையிலான- அனைத்துமே இந்த புராணத்தை எழுதிய ஆசிரியரான டெம்பே ஸ்வாமிகளின் மன எண்ணங்களாகவே கருத வேண்டி உள்ளது}

சீடன் தீபக் மிகுந்த ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் அரசன் ஆயுவை நினைவு கூர்ந்தான்; அவன் தன் குருவான வேத தர்மாவிடம், ஸ்ரீமத் தத்த பகவானின் அடியவனான ஆயுவின் வரலாற்றை விவரிக்குமாறு வேண்டினான் ||26||

தீபக் தன் குருவிடம் கேட்டான் ‘குருவே, அரசன் ஆயு என்பவர் ஸ்ரீமத் தத்தப் பெருமானின் அடியவர் அல்லவா? தயவு செய்து அவருடைய சுவாரஸ்யமான வாழ்க்கை வரலாற்றை எனக்குக் கூறுங்கள்; அவர் எவ்வாறு இறைவனின் பெருமையால் இழுக்கப்பட்டு மெய் மறந்து போனார்? ||27||

இறைவனது அடியார்களின் வாழ்வும் செயல்களும் ஈடு இணையற்றவை; அவற்றை விவரிக்கும்போதே உள்ளத்தில் ஆனந்தம் பொங்கும்; கண்களில் அன்பும் நன்றியும் கலந்த கண்ணீர் பெருகினால், அதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது? ||28||

அகக் கரணங்களை (மனதை) இவ்வளவு ஆழமாக இழுக்கக் கூடியது வேறு எதுவாக இருக்க முடியும்?; இதற்கு மாற்றாக வேறு எதுதான் இருக்க முடியும்?; வேறு எதுவும் இல்லை என்று உறுதியாகத் தெரிந்து விட்டதினால் நான் உமது திருவடிகளே தஞ்சமெனப் அவற்றை பிடித்துக் கொண்டு உள்ளேன்||29||

தெய்வங்களின் வரலாற்று கதையின் விளக்கங்களைக் கேட்கும்போது எத்தகைய சந்தேகங்கள் எழுந்தாலும், அவை விரைவில் நீங்கி மனதை அமைதிப் படுத்துகின்றன; எனவே, நான் உங்களுக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்’ என்றான்’; தனது சீடனின் பணிவான நன்னடத்தையைக் கண்டு இறைவனும் குருவும் பெரிதும் மகிழ்ந்தனர் ||30||

வேத தர்மா கூறினார் ‘தெய்வங்களின் அடியார்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற உனது விருப்பம் மிகவும் சிறந்தது; இறைவனைப் பற்றியதாக இருப்பதால், இத்தகைய கேள்விகள் கேட்பவருக்கு மட்டுமல்லாமல், விடையளிக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றன; இத்தகைய அடியவர்களின் வாழ்க்கை வரலாறுகளே தவறான நம்பிக்கைகளை அகற்றுகின்றன; ஸ்ரீமத் தத்தப் பெருமானை ஒரு மகத்தான சித்தராகவும், மாபெரும் யோகியாகவும் நீ எனக்கு நினைவூட்டி விட்டாய்’||31||

குரு வேத தர்மா தொடர்ந்து கூறினார் ‘சந்திர குலத்தில் (சோம வம்சத்தில்) ஆயு என்ற பெயருடைய ஒரு நீதி நெறி தவறாத அரசன் வாழ்ந்து வந்தான்; அரசன் புரூரவஸின் மகனான அவன், ஸ்ரீமத் தத்தாத்ரேயப் பெருமானின் தீவிர அடியவராக (பக்தனாக) திகழ்ந்தான்||32||

அந்த அரசன் பெரும் கொடையாளி மற்றும் ஆன்மீக நாட்டம் அதிகம் கொண்டவர் என்பதினால் மக்கள் அனைவராலும் அறியப்பட்டிருந்தான்; விரைவில் அவன் புகழ் பெற்ற பேரரசனாக உயர்ந்தான்; பல நிலப்பரப்பும் அவனது ஆட்சியின் கீழ் வந்தது; தனது அகத் திறமையாலும் உடல் வலிமையாலும் அவன் இப் பூவுலகை வென்றான் ||33||

அவன் ஒரு போதும் நீதி தவறியதில்லை; கற்றறிந்த அந்தணர்களிடம் ஆழ்ந்த மதிப்பும் பக்தியும் கொண்டிருந்தான்; அவன் நிரபராதிகளான எவரையும் தண்டித்ததில்லை; அதே சமயம் தீயவர்களையும் ஒரு போதும் விட்டு வைத்ததில்லை||34||

அவர் உண்மையையே பேசினார்; தம்மிடம் சரணடைந்தவர்களை பாதுகாத்தார்; மக்கள் அவரைத் தம்மைப் பேணி வளர்க்கும் அன்புப் பெற்றோராகவே கருதினர்; அவரது ஆட்சியில் கொடியோர் அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர் ||35||

மற்ற அனைத்து வகையிலும் அவர் மகிழ்ச்சியும் மன நிறைவும் கொண்டவராகவே இருந்தார்; ஆயினும், தனக்கொரு வாரிசு வேண்டும் என அவர் பெரிதும் ஏங்கினார்; அதனால், இரவும் பகலும் அமைதியற்று, மிகுந்த மனத் துயருடன் இருந்து வந்தார் ||36||

தேவர்களுக்கே அரிதாகக் கிடைக்கக் கூடிய பெருமையும் மாண்பும் அவரிடம் நிறைந்திருந்தன; ஆயினும், அவருக்கு இருந்த பெரும் குறை அவர் பெரிதும் விரும்பிய வாரிசு இல்லாததுதான்; அதுவும் கூட விதியின் பயனாக ஏற்பட்டு இருந்ததாகவே தோன்றியது ||37||

வாரிசுப் பேறை அருளக் கூடிய யாகங்களை நடத்த அவர் வேதியர்களை நியமித்தார்; சாஸ்திரங்கள் அறிவுறுத்திய அனைத்துச் சமயச் சடங்குகளையும் தவறாமல் நிறைவேற்றினார்; ஆயினும், அவை எதுவும் பலனளிக்கவில்லை; அவர் முன்பிருந்ததைப் போலவே, வாரிசற்ற நிலையிலேயே தொடர்ந்து இருந்தார் ||38||

பிள்ளைச் செல்வம் இல்லாத ஒரு இல்லம், அடர்ந்த காட்டைப் போன்றதே என்ற நம்பிக்கை அந்த மன்னரின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது; இதனால், நாட்கள் செல்லச் செல்ல அவர் மேலும் மேலும் மனச் சோர்வும் துயரமும் அடைந்தார் ||39||

குழந்தை பாக்கியம் பெறுவதற்காக அவர் அறிந்தவற்றை மற்றும் பிறரால் அறிவுறுத்தப்பட்ட நியமங்களையும் செய்து பார்த்தார்; ஆயினும், அவர் விரும்பிய ஆண் வாரிசு அவருக்குக் கிடைக்கவில்லை; அத்தகைய சூழலில், ‘இனிமேல் நாம் என்னதான் செய்வது’ என்ற ஏக்கம் இரவும் பகலும் அவரது மனதில் எழுந்து கொண்டிருந்த ஒரே கேள்வியாக இருந்தது||40||

வம்சம் தொடர்ந்து நிலை பெறாவிடில் பித்ருக்கள் துன்புறுவர் என்ற சாஸ்திரங்களின் நெறியை எண்ணி அவர் கவலை கொண்டார்; அந்த துயரத்திற்குத் தீர்வு காண எங்கு செல்வது என்றும், அத்தகைய நிலையில் தனக்கும் தன் முன்னோர்களுக்கும் விதி எப்படி இருக்குமோ என்றும் அவர் கவலை கொண்டார்||41||

வாரிசுகள் இருப்பதனாலேயே, முன்னோர்களும் பெற்றோர்களும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் இன்பத்தைப் பெறுகின்றனர்; இல்லையேல், அந்த வம்சமே அடியோடு அழிந்து விடும் என்று பல சாஸ்திர நூல்கள் குறிப்பிடுகின்றன||42||

வேதங்களும் அதே கருத்தையே எடுத்துரைக்கின்றன; ‘அபுத்ரஸ்ய லோகோ நா’, அதாவது, வாரிசு இல்லாத ஒருவனுக்கு இன்பம் ஏதுமில்லை என்பது பொருள்; அந்த மன்னர் பெருமளவு தான தர்மங்களைச் செய்திருந்தாலும், பல்வேறு யாகங்களை நிறைவேற்றியிருந்தாலும், அவை அனைத்தும் வீணாகிப் போனவைகளாகவே தோன்றின||43||

சாஸ்திரங்கள் அறிவுறுத்தியவாறு மந்திரங்களை ஓதுவதிலும், நல்வழி தேடுவதிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்; ஆயினும், அவர் விரும்பிய நற்பலனை அவரால் அடைய இயலவில்லை. ‘ஒரு ஆண் வாரிசு இல்லாத நிலையில், நான் செய்த இவையனைத்தும் பயனற்றவையாக ஆகி விட்டனவே ; இவை அனைத்தும் நான் முற் பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவுகள்தானோ என்று அவர் தனக்குள் வினவியவாறே இருந்தார் ||44||

அத்தகைய ஐயம் அவன் மனதில் வலுப் பெற்றதினால் சோதிடர்களை வரவழைத்து, தன் வம்சம் எவ்வாறு தொடர்ந்து செழித்து வளரும் என்பது குறித்து அவர்களிடம் வினவினான் ||45||

எங்கள் வம்சாவளியைக் காத்தருளுங்கள் என்று அவர்களிடம் அவன் மன்றாடினான்; அதற்குப் பதிலளிக்கும் விதமாக, அங்கு கூடியிருந்த சோதிடர்கள் அவனது ஜாதகத்தையும் கணிப்புகளையும் ஆராய்ந்து, மன்னன் எதிர் நோக்கியிருந்த இக்கட்டான சூழலைக் குறித்துச் சிந்தித்தனர் ||46||

அவர்கள் கூறினர் ‘மன்னரே, இச்செய்தியைத் தெரிவிப்பதற்கு நாங்கள் வருந்துகிறோம்; ஆயினும், உங்கள் ஜாதகக் கணிப்புகளில் உங்களுக்கு ஒரு வாரிசு அமைவதற்கான எந்தக் குறிப்பும் தென்படவில்லை; இருப்பினும், வேதங்களின் ஒரு அங்கமாகத் திகழும் இச் சோதிடக் கலையின் சாராம்சம் குறித்து, இத்துறையில் வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைக் கூர்ந்து கேளுங்கள்||47||

ஒரு ஜாதகத்தில் குருவின் (ஆசிரியரின்) ஸ்தானத்தை வகிக்கும் கிரகத்தின் அதிபதி, வழக்கமாக ஆறாம், எட்டாம் அல்லது பன்னிரண்டாம் வீடுகளில் அமைந்திருந்தால், அத்தகைய ஜாதகத்தைக் கொண்டவருக்குச் சந்ததி பாக்கியம் வாய்க்காது ||48||

ஒருவர் பிறந்த நேரத்தில் (ஜாதகத்தில்) ‘லக்னம்’ ஐந்தாம் அல்லது ஒன்பதாம் வீட்டில் அமைந்திருந்து, அந்த லக்னத்தின் அதிபதி ஆறாம், எட்டாம் அல்லது பன்னிரண்டாம் வீட்டில் அமைந்திருந்தால், அத்தகைய நபருக்குச் சந்ததி வாயிலாக மகிழ்ச்சி உண்டாகும்||49||

இதற்கு மாறாக, அவரவர் குருமார்களுக்கு பணிவிடை செய்பவர்களுக்கும் , புனிதமும் புகழும் வாய்ந்த சான்றோர்களிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருப்பவர்களுக்கும், ஜாதகக் பலன்கள் பலவீனமாக அமைந்திருந்தாலும் கூட, கிரகங்கள் அவர்களுக்குச் சாதகமான நிலைகளை கொடுத்து அவர்களுக்குச் சந்ததி பாக்கியத்தை அருளுவதைக் காண்பார்கள்||50||

வெளிப் உலக புலன் இச்சைகளில் பற்றற்று, தங்கள் காலத்தை இறைவனுடன் ஒன்றிணைந்து கழிக்கும் அத்தகைய சான்றோர்களின் திருவடிகளையே நாடிப் போற்ற வேண்டும்; இத்தகைய மெய் ஞானம் பெற்ற ஆத்மாக்களுக்குச் சேவை செய்வதன் மூலம், ஒருவன் விரும்பும் அனைத்தும் கைகூடும்||51||

சோதிடர்களின் மேலான அறிவுரையைக் கேட்டதும், தேவ மங்கையான ஊர்வசியின் திரு மகனான ஆயு மன்னன் இவ்வாறு வினவினான் ‘ஓ என் நலம் விரும்பிகளே, நீங்கள் இப்போது விவரித்ததைப் போன்றதொரு உத்தமரை நான் எங்கு சென்றால் பார்க்க இயலும் என்பதை எனக்குக் கூறுங்கள் ||52||

இறைவனும் கூட, மெய் ஞானம் பெற்ற அந்தணர்களின் வடிவிலேயே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன; அதனாலேயே நான் உங்கள் திருவடிகளைப் பற்றிக் கொண்டேன்; என் துயரத்திலிருந்து என்னை மீட்டெடுங்கள்; உங்கள் அறிவுரையை நான் சிறிதும் வழுவாமல் பின்பற்றுவேன் ||53||

மெய்ஞானம் பெற்ற அந்தணர்கள் உணர்ந்து கொண்ட நுட்பமான பொருட்களின் அர்த்தங்களை, தேவர்களால் கூட முழுமையாகப் புரிந்து கொள்வது கடினம் என்று சொல்லப்படுகிறது; அதனாலேயே, சிறந்த அறிவுடையவர்களான உங்களை நாடி நான் வந்துள்ளேன்; என் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும் பொருட்டு உங்களிடம் அடைக்கலம் வந்துள்ளேன் என்றான் ||54||

மன்னனின் தூய உள்ளத்தைக் கண்ட அந்த ஞானச் சோதிடர்களின் சபை இவ்வாறு கூறியது ‘நீங்கள் சஹ்யாத்ரி மலைக்குச் செல்ல வேண்டும்; அங்கே, அத்ரி முனிவரின் திவ்யத் திரு மகனின் திருவடிகளைப் பற்றிக் கொள்ள வேண்டும் ||55||

அந்த மலைக்கு நேர் எதிர்ப்புறத்தில், ‘மாதாபூர்’ என்று அழைக்கப்படும் ஒரு பகுதி உள்ளது; சஹ்யாத்ரி மலையின் சிகரங்களில், கற்புக்கரசியான அனுசூயா தேவியின் புனிதத் திருமகன் வீற்றிருக்கிறார்||56||

அவரே எப்போதும் தன் சுயத்தில் (ஆத்மாவில்) மூழ்கியிருக்கும் பரம்பொருள் ஆவார்; நீர் அவரைத் தேடிச் சென்று, அவர் மீது மாறாத பக்தி செலுத்திப் பொழுதைக் கழிக்க வேண்டும்; அவ்வாறு செய்தாலன்றி, உம்முடைய விருப்பம் நிறைவேறாது ||57||

அவரே தெய்வமாக உள்ளவர் ; தம்மிடம் அன்பு செலுத்தும் பக்தர்களைக் காப்பதில் அவர் பெரும் புகழ் பெற்றவர்; அவருடைய தாமரைத் திருவடிகளையே நீர் நாடிச் சரணடைய வேண்டும்; அதன் பின்னரே, உமக்கு ஒரு புத்திரன் வேண்டும் என்ற விருப்பம் ஈடேறும் ||58||

விதிக்கு அதிபதியான பிரம்ம தேவன், ஒரு மனிதனின் நெற்றியில் நற்பலன்கள் எதையும் எழுதாதிருந்தாலும் கூட, பக்தர்களின் துயர் துடைக்கும் தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் அருள் மழை தலையில் பொழியும், முடியாது என்று கருதப்பட்ட அனைத்தும் முடியும் என்று மாறி விடுகின்றன||59||

ஒளி மயமான, உருவமற்ற அந்தப் பரம்பொருள் தத்துவத்தை, பக்தர்கள் எளிதாக உணர்ந்து கொள்ளும் பொருட்டு, அது ஒரு திவ்யமான திருவுருவை கொண்டுள்ளது; ஒருவன் அந்த இறைவனின் பக்தனாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டால், இந்தப் பிரபஞ்சத்தில் அவனுக்குக் கிடைப்பதற்கு அரிய பொருள் என்று வேறு எதுவுமே இருக்க முடியாது ||60||

தங்கள் அச்சங்களையும் சந்தேகங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு, மனவுறுதி மிக்க பொறுமையை தங்களுக்குள் வளர்த்துக் கொண்டு, தங்கள் வாழ்வை இறை சேவைக்கே அர்ப்பணிக்கத் துணிபவர்கள் எவரோ, அவர்கள் அனைவரும், இறைவனின் ஆசிகளின் வாயிலாகத் தாங்கள் தேடியதை அடைவது உறுதி ||61||

எண்ணற்ற தேவர்களாலேயே எவருடைய மகத்துவத்தை முழுமையாக அறிய இயலவில்லையோ, அத்தகையவரைப் பற்றிச் சாதாரண மனிதர்களால் எவ்வாறு அறிய முடியும்?; ஆகையால், அவரை தேடித் சென்று அவருடைய திவ்யத் திருவடிகளில் உள்ளத் தூய்மையுடன் சரணடைவதே சாலச் சிறந்தது||62||

அந்தத் தெய்வத்தையே பரம்பொருளாக கருதுங்கள்; அவருடைய திருவடிகளைப் பற்றிக் கொள்ளுங்கள்; அவரிடமே அடைக்கலம் தேடுங்கள்’ என்று கூறப்பட்ட தெளிவான அறிவுரையைக் கேட்டதும், தாம் தேடிய வழியைக் கண்டடைந்த மகிழ்ச்சியில் அந்த மன்னர் பெரிதும் பூரித்துப் போனார் ||63||

அதன்பின் அந்த மன்னர் கால் நடையாகவே புனிதப் பயணம் மேற் கொண்டு சஹ்யாத்ரி மலையை அடைந்தார்; அங்கே, அத்ரி முனிவரின் திவ்யப் புதல்வர், ‘சித்த ஆசனம்’ எனும் நிலையில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருப்பதை அவர் கண்டார்’ ||64||

அந்த எளிய தரிசனமே மன்னருக்குப் பெரும் மன நிறைவை அளித்தது; ஸ்ரீமத் தத்தாத்ரேயப் பெருமானை நேரில் தரிசிக்கும் பெரும் பேறு பெற்றவரான அவர், தம்மால் இயன்ற அளவு பக்திப் பெருக்குடன் அந்தத் தெய்வத் திருமுன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்||65||

பக்திப் பரவசம் அவருடைய முழு உடலையும் மனதையும் ஆட் கொண்டபோது, அவர் உள்ளம் முழுவதும் அன்பால் நிரம்பி வழிந்தது ; உணர்ச்சிப் பெருக்கால் அவருடைய குரல் தழுதழுத்தது; அவர் பணிவுடன் இவ்வாறு கூறினார் ‘இறைவா, இன்று எனது உள்ளம் தூய்மையடைந்தது போல உணர்கின்றேன்; உங்களது புனிதமான தரிசனத்தைப் பெறும் பேறு எனக்குக் கிடைத்தது ||66||

நான் உலக வலையில் சிக்கித் தவித்தேன்; எண்ணற்ற உயிரினங்களில் பல பிறவிகளை எடுத்து உழன்றேன்; விதியின் கருணையினாலேயே நான் உங்களிடம் வந்து, உங்களை நேரில் தரிசிக்கும் நற் பேறைப் பெற்றிருக்கிறேன் ||67||

யோக நெறியிலும் யாகங்களிலும் ஈடுபடும் சாதகர்களுக்கே உங்களை வந்தடைவது அரிதாக இருக்கும்போது, என் போன்ற சாதாரண ஒருவன் உங்களை தரிசிக்க முடிந்ததென்றால், அது என் முற்பிறவி நல் வினைகளின் பலனாகவே இருக்க வேண்டும்; அதனால்தான் என் கண்களுக்கு நீங்கள் காட்சி தந்துள்ளீர்கள் ||68||

இவ்வாறு அந்த மன்னர் தன் உள்ளத்தில் எண்ணித் தியானித்தவாறே, மீண்டும் ஒருமுறை அந்தத் தெய்வத் திருமுன் பக்திப் பெருக்கோடு தலை வணங்கினார்; அந்த மன்னரின் மனதையும் அதன் பக்குவத்தையும் சோதனை செய்யும் பொருட்டு, அத்ரி முனிவரின் அந்தத் திவ்யப் புதல்வர் அடுத்து என்ன செய்தார் தெரியுமா? ||69||

எவருடைய செயல்களை எளிதில் புரிந்துகொள்ள இயலாதோ, எவருடைய ஆற்றலை முழுமையாக அறிந்து கொள்வது கடினமோ, அத்தகைய இறைவன் தம்முடைய மாயா சக்தியின் துணையோடு அந்த மாயா தேவியைத் தம் மடியில் அமர்த்தியவாறு மன்னருக்குக் காட்சியளித்தார் ||70||

பின்னர் அவர், தங்கள் காதலை வெளிப்படுத்துவதைத் தாங்கிக் கொள்ள இயலாதது போல, ஒருவரையொருவர் தழுவி முத்தமிட்டுக் கொண்டிருந்த ஓர் காட்சியை வெளிப்படுத்தினார் ||71||

இறைவனின் அந்த லீலையைக் கண்டதும், மன்னர் ஒரு கணம் திகைத்துப் போய் சற்றே மனச் சோர்வுற்றார்; ஆயினும் ‘இறைவன் இத்தகைய விசித்திரச் செயல்கள் மூலம் என்னை மயக்க முயல்கிறார்’ என்று அவர் தமக்குள்ளே எண்ணிக் கொண்டார்||72||

இறைவன் பல வடிவங்களை ஏற்கிறான் என்பது யாவரும் அறிந்ததே; அவற்றை முழுமையாக எண்ணி முடிக்க யாரால் இயலும்? அரசனின் உள்ளத்தில் எழுந்த எண்ணங்களை உணர்ந்த ஸ்ரீமத் தத்தர், அவனிடம் கடுமையாக பேசினார் ‘ அரசனே, இங்கிருந்து உடனே அகன்று செல் ||73||

நான் எத்தகைய தவறு இழைத்துள்ளேன் என்பது உனக்குத் தெரியாது; அப்படியிருக்க, நீ ஏன் இங்கு வந்தாய்?; ஒரு வேளை நீ இந்த இடத்தை விட்டு உடனே அகலாவிடில், உன் உயிரையே இழக்க நேரிடும் ||74||

என் அளவற்ற கோபத்தின் அளவு உனக்குத் தெரியாது; நீ புகழ் பெற்ற ஓர் அரசன்; நானோ சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஒருவன்; நீ இந்த விநாடியே இவ்விடத்தை விட்டு அகலாவிடில், நான் உன்னைச் சபித்து விடுவேன்; அத்தகைய சீற்றமான சொற்களைக் கேட்ட அரசன், மிகுந்த பணிவுடன் பின்வருமாறு பதிலளித்தான் ||75||

மெய் ஞானம் உணர்ந்த சான்றோர் பிறரைச் சபிப்பதில்லை; குறைந்த பட்சம் அந்த உண்மை அடியேனுக்குத் தெரியும்; மேலும், எல்லாம் அறிந்த இறைவா, இந்த விநாடியில் நான் உம்முடைய அடைக்கலத்தையே நாடி வந்துள்ளேன்; அப்படியிருக்க, உம் அருகில் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? ||76||

நீங்கள் சர்வ வல்லமை படைத்தவர் என்பதை நான் அறிவேன்; அதனால்தான் நான் உம் திருவடிகளில் சரணடைந்துள்ளேன்; இப்படியிருக்க, மரணம் என்னை எப்படி நெருங்க முடியும்? நீங்கள் ஏன் இவ்வாறு கோபப்பட்டு கூச்சலிடுகிறீர்? தயவு செய்து விளக்குவீராக||77||

எவர் எல்லாத் துன்பங்களிலிருந்தும் மீட்கும் புகழைப் பெற்றவரோ, எவர் எல்லாச் சாபங்களையும் போக்கும் பெருமை கொண்டவரோ, அவரே பிறரைச் சபிப்பவராக இருக்க முடியுமா?; காலம் மூன்றிலும் (இறந்த, நிகழ், எதிர் காலங்களில்) அது சாத்தியமற்ற ஒன்றாகவே தோன்றுகிறது||78||

இனி, எதை, எதையோ தேடி நான் மேற்கொண்ட அலைச்சல்கள் அனைத்தும் நின்று விட்டன; உம்முடைய திருவருள் நிழலில் அமைதியாக அமர்ந்திருக்கவே நான் விரும்புகிறேன்; ஒரு பாசமிகு தாய் தன் குழந்தையைத் திருத்துவதற்காகச் தண்டனை அளிப்பது போல, நீர் என்னைத் தண்டித்தாலும் கூட, என் விருப்பம் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு ||79||

இதுவே என் உறுதியான முடிவு’ இவ்வாறு கூறிய அரசன், அங்கிருந்து ஒரு அங்குலம் கூட நகரவில்லை; இறைவன் தான் மிரட்டியது போலவே என்னைத் தாக்கினாலும் கூட, நான் இவ்விடத்தை விட்டு விலகிச் செல்லவே மாட்டேன் என்று அவன் தன் மனதிற்குள் உறுதி பூண்டிருந்தான் ||80||

இதற்கிடையில் இறைவன் இங்கு தங்காதே என்று மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே, அவனைத் தள்ளி விலக்க முயன்றார்; ஆயினும், அரசன் எத்தகைய கொடுமைகளையும் அவமதிப்புகளையும் சந்தித்த போதிலும், தன் உறுதியான சங்கல்பத்திலிருந்து சிறிதும் விலகாமல் அங்கேயே நிலைத்திருந்தான்||81||

அரசனின் உறுதியான மனதை உணர்ந்தவரும், அவனது வெளித் தோற்றத்தையும் உள்ளத்தின் ஆழத்தையும் ஒருங்கே காணும் ஆற்றல் பெற்றவருமான, அத்திரி முனிவரின் திருமகனாம் இறைவன், அவனிடம் பின்வருமாறு கூறினார் ‘நான் இடும் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு, எனக்குப் பணி விடை செய்ய நீ ஒப்புக் கொண்டால் மட்டுமே, உன்னை இங்கு தங்க அனுமதிக்க இயலும் ||82||

இல்லையேல் நான் உன்னை முற்றிலுமாய் விலக்கி விடுவேன்; இப்படியாக அந்த தெய்வம் மனமிரங்கி வந்ததைக் கண்டு பெரும் மகிழ்ச்சியுற்ற ஊர்வசி எனும் மங்கையின் மகன் இவ்வாறு கூறினான் ‘நான் உங்கள் கட்டளைகள் அனைத்தையும் சிரமேற்கொண்டு பணி செய்வேன்; அவற்றை மீறவோ அல்லது கேள்வி கேட்கவோ ஒருபோதும் துணிய மாட்டேன்||83||

அதைக் கேட்ட யோகங்களின் தலைவனான இறைவன் இவ்வாறு பணித்தார் ‘ஒரு மனித மண்டையோட்டை எடுத்துக் கொள்; அது முழுவதும் புதிய இறைச்சியையும், நல்ல மாதுவினால் நிறப்பிக் கொண்டு வர வேண்டும்; நீ இங்கு இருக்கும் காலம் வரையிலும், தினமும் அதை எனக்காகக் கொண்டு வந்து தர வேண்டும் ||84||

அதைக் கேட்ட கேட்ட மன்னன் சற்று வியப்புற்றான்; ஆயினும் ‘நான் தினமும் அவ்வாறே செய்வேன்’ என்று உறுதியளித்தான்; வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள ‘பசு யாகம்’ அல்லது ‘சோம யாகம்’ போன்ற சில வேள்விகளில் கூறப்பட்டுள்ள முறைப்படியே, மன்னன் விலங்குகளைப் பலியிட்டு, இறைவன் விரும்பியவாறே அவற்றைச் சமர்ப்பித்து வந்தான்||85||

எத்தனை வகையான வேள்விப் பொருட்களைச் சமர்ப்பித்தாலும் ஒரு போதும் திருப்தியடையாதவர் என்று போற்றப்படும் அந்தப் பரம்பொருள், மதுவையும் இறைச்சியையும் மிகுந்த ருசியுடன் சுவைப்பவர் போலவே தோன்றினார்; ஆயினும், அவ்வேள்விகளை ஏற்றுக் கொண்டு அருள் புரிந்த அந்த இறைவன், உண்மையில் ஏதன் மீதும் பற்று கொள்ளாமல் இருந்தவாறே விளங்கினார்||86||

ஒரு நாள், மலர்ந்த முகத்துடன் இறைவன் மன்னனை நோக்கி இவ்வாறு கூறினார் ‘ஓ மன்னனே, நீ உன் வாக்குறுதிக்கு ஏற்பவே வாழ்ந்துள்ளாய்; உன் சேவையால் நான் பெரிதும் மகிழ்வுற்றேன்; நீ எதை அடைய விரும்புகிறாயோ, அத்தகைய ஒரு வரத்தை என்னிடம் கேள் ||87||

என்னை வெறும் வெளிப்புற தோற்றத்தின் அடிப்படையில் மட்டுமே நோக்குபவர்களால், எனது தெய்வீகத் தன்மையை ஒருபோதும் உணர்ந்து கொள்ள இயலாது; அத்தகைய மந்த புத்தி கொண்டோர், என்னை இழிவான முறையில் பரிந்துரைத்து, குறை காண்பதிலேயே தங்கள் காலத்தைக் கழிக்கின்றனர் ||88||

நான் உண்மையில் எத்தகையவன் என்பதை உணர்ந்து கொள்ள, பரந்த மனப்பான்மையும் விரிந்த கண்ணோட்டமும் தேவைப்படுகின்றன; அத்தகைய விரிந்த தன்மையை ஏற்றுக் கொள்ள இயலாதவர்கள் அறியாமையிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர்; அந்த அறியாமையின் காரணமாகவே, அவர்களால் எப்போதும் எதிலும் பற்று இல்லாதவர்களாகவும், எதையும் அனுபவிக்காதவர்களாகவும் திகழ்கிறேன் என்பதை அவர்களால் உணர்ந்து கொள்ள இயலாமல் போகிறது ||89||

இவ்வுலகில் நிகழும் அனைத்திற்கும் நானே சாட்சியாகத் திகழ்கிறேன்; தெய்வீக வேள்விகளின் பலன்களை நுகர்பவனும் நானே; ஆயினும், வேள்விகளில் சமர்ப்பிக்கப்படும் பொருட்களை நான் ஒருபோதும் நேரடியாக நுகர்வதில்லை; உடல் தாங்கிய ஆத்மா க்கள் தங்கள் செயல்களின் விளைவுகளை எவ்வாறு அனுபவிக்கின்றன என்பதை நான் ஒரு சாட்சியாகவே காண்கிறேன்; அந்தச் செயல்களின் விளைவுகள் எதுவும் என்னை பாதிப்பது இல்லை||90||

இருப்பவை அனைத்தையும் ஜீரணிக்கும் அக்னி நானே; இதை இப்படியே நம்புங்கள்; இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்; அதுதான் உண்மை; இதையெல்லாம் வேறு யாரால் செய்ய முடியும்?’ ||91||

நானும் தெய்வீக அக்னிக்குள் இருக்கிறேன்; அதன் செயல்கள் அனைத்தையும் நானும் கடந்து செல்கிறேன்; ஆனாலும் அதன் செயலால் தீண்டப்படாமலும் பாதிக்கப்படாமலும் இருக்கிறேன் ||92||

ஸ்ரீமத் தத்த பகவான் தனது அதீத நிலையைப் பற்றிய அத்தகைய போதனைகளை உரைத்ததைக் கேட்ட, மன்னன் மகிழ்ச்சியடைந்து கூறினான் ‘உண்மையாகவே , நான் இன்று தூய்மையாக்கப்பட்டுள்ளேன் என்று உணர்கின்றேன்; உம்மை மகிழ்விப்பதில் ஒரு கருவியாக இருப்பதில் எனக்கு திருப்தி ஏற்படுகின்றது ||93||

மற்ற தெய்வங்களின் அதிபதியான விஷ்ணு பகவான் என்று போற்றப்படுபவரே நீங்கள்; ஓ இறைவா, எனக்கு ஒரு ஆசை இருக்கிறது, அதை நிறைவேற்றித் தருமாறு உம்மிடம் மன்றாடுகிறேன் ||94||

எனக்கு வாரிசு இல்லை; இறைவா, தயவு செய்து எனக்கு ஒரு வரம் அளியுங்கள்; அதன் மூலம் நான் தெய்வங்கள் மற்றும் பிதாக்களிடம் பக்தி கொண்ட ஒரு உன்னதமான மகனைப் பெற வேண்டும்’ ||95||

என் வாரிசு நீதி வழியில் நடப்பவனாகவும், தேவர்களையும் அசுரர்களையும் வெல்பவனாகவும் இருக்கட்டும்; அவன் தேவர்கள், உயர்ந்த பிராமணர்கள் மற்றும் பிற ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்டவனாகவும், கம்பீரமான செயல் திறன் கொண்ட ஒரு வலிமை மிக்க வீரனாகவும், ஆதரவற்றவர்களைப் பராமரிப்பவனாகவும், கவிஞனாகவும், புத்திசாலியாகவும், புகழ் பெறத் தகுதியானவனாகவும் இருக்கட்டும்||96||

பிரபுக்களும் ஆளுநர்களும் அவனுக்குப் பணிந்து வணங்கட்டும்; அவன் போர்க் களத்தில் வலிமையானவனாகவும், நீதியுள்ளவனாகவும் இருக்கட்டும்; அவன் மனதார தானங்கள் கொடுக்கட்டும்; தன் பாதுகாப்பில் இருப்பவர்களைப் பராமரிக்கும் வசதிகளைப் பெற்றிருக்கட்டும்||97||

ஒரு அரசனைப் போல அவனது குடிமக்கள் அவனை மதிக்கட்டும்; பிச்சைக்காரர்களும், குருக்களும், விருந்தினர்களும் அவனது நற் பண்புகளுக்காக அவனைப் புகழட்டும்; வீரர்களிடையே அங்கீகரிக்கப்பட்டவனாகவும் இருக்கட்டும்; அவனது குணாதிசயங்களால் அறியப்பட்டவனாகவும் இருக்கட்டும்; அத்தகைய ஒரு மகனை பெறுவதற்கான அருளை உங்களிடமிருந்து விரும்புகிறேன் ||98||

ஏற்கனவே மதிப்பு பெற்றவர்களிடமிருந்தும் அவன் மதிப்பு பெறட்டும்’’; இதுவே ஊர்வசி என்னும் பெண்ணின் மகன், தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயரிடம் கேட்ட வரம்; ஆனால் அத்தனை குணாதிசயங்களும் ஒருவனிடம் இருக்கும் வகையிலான மனிதரை காண்பது அரிது ||99||

ஆயினும் ஸ்ரீமத் தத்தர் தனது கருணையால், தனது பக்தனின் மனதை வருத்தமடைய விரும்பாமல், கூறினார் ‘நீ குறிப்பிட்ட அனைத்து நிபந்தனைகளுடன் நீ கேட்கும் வரத்தை நான் உனக்கு வழங்குவேன்||100||

ஆனால் ஒன்றை நன்கு அறிந்து கொள்; சுற்றத்தார் மீதான பற்று என்பது வெறும் உலகியல் பிணைப்பே; அது ஒரு கனவைப் போன்றதே; பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடமிருந்து பெறும் மகிழ்ச்சி கூட நிலையற்றது; ஆயினும், ஒரு மகன் வேண்டும் என்ற உன் ஏக்கத்தினால் நீ என்னிடம் வேண்டியது இதை மட்டுமே; இதுவும், ஏமாற்றும் ‘மாயையால் நீ மயக்கப்பட்டுள்ளதற்கான ஒரு அடையாளமே ஆகும்||101||

நீ வாழும்போதே முக்தி (ஜீவன்முக்தி) அடையும் நிலையில் இருந்த போதிலும், நீ என்னிடம் ஒரு மகனை மட்டுமே வேண்டினாய்; இதற்குக் காரணம் என்னவென்றால், உன் அறிவு உன் ஆசையினால் மறைக்கப்பட்டு விட்டது; அதனால்தான் உன் மனம் முழுவதும் ஒரு வாரிசைப் பெறுவதிலேயே ஏங்கிக் கொண்டிருக்கிறது ||102||

ஆனால், போதிய புண்ணியங்கள் சேராமல், விழிப்புணர்வுடன் கூடிய பிரார்த்தனையைச் செய்வது சாத்தியமல்ல; ஏதோ ஒரு ஆசையை மனதில் கொண்டு செய்யப்படும் வழிபாடு, காலப் போக்கில் அனைத்து விருப்பங்களிலிருந்தும் விடுபட்டு ‘வழிபாட்டிற்காகவே வழிபாடு’ என்ற நிலைக்கு மலர்கிறது; அதுவே இறுதியில் ‘நிர்வாண’ நிலைக்கு அழைத்துச் செல்கிறது||103||

சமஸ்கிருதச் செய்யுள்: ‘யத் ப்ராத: சம்ஸ்க்ருதம் சான்னம், சத்யம் தச்ச விநச்யதி;ததன்ன ரசவ்ருத்தஸ்மின், காயேகா நாம நித்யதா’*
இதன் விளக்கம் என்ன என்றால் : ‘காலையில் சமைக்கப்பட்ட உணவு, மாலையில் கெட்டுப் போகும்; காலையில் தயாரித்த உணவைச் சாப்பிட்டாலும், அது காலப்போக்கில் செரிமானமாகி அழிந்து விடுகிறது; இயல்பான கர்மங்களினால் (செயல்களால்) இந்த உடல் அழியக் கூடியது; இதில் நித்தியமாக (என்றென்றும்) நிலைத்திருப்பது என்று எதுவுமில்லை.
{*இந்த சுலோகம் பகவத் கீதையின் 18-வது அத்தியாயமான (மோட்ச சந்நியாச யோகம்) விளக்க உரைகளில், தேக தர்மம் மற்றும் கர்மத்தின் அவசியம் குறித்துச் சொல்லப்படும் ஒரு பகுதியாகும்} ||104||

இந்த உண்மையை அனைவரும் அறிந்திருந்த போதிலும், மக்கள் தங்கள் மாயையான கற்பனைகளுக்கு அடிமையாகி விடுகிறார்கள்; அதுவே ‘மாயையின் திரையாகும்; எனது அருளின்றி அதை யாராலும் கடந்து வெல்ல இயலாது ||105||

சமஸ்கிருத செய்யுள் : ‘ந ராஜ்ஞா: கலு தோஷோ-யத்ர’ – ‘இந்த மன்னனிடம் எவ்விதத் தவறும் இல்லை’ என்று கூறியவாறே, அத்ரி முனிவரின் மகன் அந்த மன்னனிடம் இவ்வாறு கூறினார் ‘நீ விரும்பியபடியே உனக்கு ஒரு மகன் பிறப்பான்; அவன் எங்கும் புகழ் பெற்றவனாகத் திகழ்வான் ||106||

மன்னன் வேண்டிய வரத்தை அவனுக்கு அருளிய இறைவன், தன் கையில் ஒரு பழத்தை எடுத்துக் கொண்டு இவ்வாறு அறிவுரை கூறினார் ‘இந்தப் பழத்தை உன் பட்டத்து ராணியிடம் கொடுத்து ‘இதை நான் அவளுக்காகவே அனுப்பி வைத்துள்ளேன்’ என்று அவளிடம் கூறுவாயாக’ ||107||

அவள் தன் மனதை ஒருமுகப்படுத்தி, உடலின் எட்டு அங்கங்களும் தரையில் படுமாறு பணிந்து, தெய்வங்களை வணங்கிப் பிரார்த்திக்கட்டும்.’ தான் ஏங்கிய வரத்தைப் பெற்றுக் கொண்ட அந்த மன்னன், இறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு தன் தலை நகருக்குத் திரும்பினான்||108||

II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் முப்பத்தொன்பதாவது (39) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை:108
முதலாவது அத்தியாயம் முதல் முப்பத்தொன்பதாவது (39) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 4106 = 4214

*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}

……இதோடு பாகம் -11, அத்தியாயம் 39 முடிவடைந்தது
அத்தியாயம் 40 தொடர்கின்றது