COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION
பாகம் – 6
தெய்வ அவதாரங்கள்

அத்தியாயம் 17
சூரிய பகவானுக்கு அளிக்கப்பட்ட காணிக்கை
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
‘குரு வேத தர்மா தொடர்ந்து கூறினார் ‘கேள் ஆர்வமுள்ள சீடனே, அரசன் அர்ஜுனன் உண்மையிலேயே நற் பண்பும் நீதியும் மிக்கவன்; ஆத்மா வைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்த அவனது நடத்தையும் அதையே பிரதிபலித்தது; மேலும், ஒரு அரசனுக்குரிய கடமைகளாகப் பல பணிகளை அவன் செவ்வனே ஆற்றி வந்தான்||1||
தனக்குள்ளே உறையும் ஆத்மா மீதும், தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயர் மீதும் அவன் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடு சற்றும் குறையவில்லை; அவன் தனது ராஜ்யத்தில் தொடர்ந்து வேத யாகங்களைச் செய்து வந்தான்; தவத்தில் ஈடுபட்டான்; தாராளமாகத் தானங்கள் வழங்கினான்; அறிவாற்றலும், ஞானமும் மிக்க அந்தணர்களைத் தவறாமல் போற்றினான்; குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல் வாழ்வில் மிகுந்த அக்கறை செலுத்தினான்||2||
தன் குடிமக்கள் அனைவரையும் தன் சொந்தக் குழந்தைகளைப் போலவே பாவித்து, அவர்களின் தேவைகளை அவன் மிகுந்த அன்புடனும், பரிவுடனும் கவனித்து வந்தான்; மேலும், பஞ்சாங்கத்தின்படி பல்வேறு காலங்களுக்கும் ஆண்டுகளுக்கும் உரிய சிறப்புச் சடங்குகளையும் யாகங்களையும், மரியாதையுடனும் நடத்துவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் அவன் தவற விட்டதே இல்லை ||3||
தனது அன்பிற்குரிய குருவும் தெய்வமுமான ஸ்ரீமத் தத்தரை எப்போதும் நினைவில் கொள்ளும் விதமாக, வேத புனித நூல்களில் கூறப்பட்டு இருந்தவாறு அவன் ‘அஸ்வமேத யாகத்தை’ (குதிரை வேள்வியை) தொடங்கினான்; அந்த யாகமும் எவ்விதத் தடங்கலுமின்றி வெற்றிகரமாக நிறைவடைந்தது; இனி அவன் விண்ணுலகை ஆளும் பொருட்டு யாகங்களைச் செய்யத் தொடங்குவானோ என்றே எண்ணத் தோன்றுகின்றது||4||
அர்ஜுனன் ஒரு வலிமை மிக்க வீரன் என்பதை அனைவரும் அறிந்திருந்ததால், மேற்கூறிய யாகத்திற்காக அவன் சுதந்திரமாக நடமாட விட்ட குதிரையை எவரும் பிடித்து நிறுத்தத் துணியவில்லை; ஆனால், இந்த நிலை மேலுலக தேவர்களுக்குப் அச்சத்தை ஏற்படுத்தியது; யாக குதிரையை எவரும் தடுக்காவிட்டால், யாகம் முழுமையாக நிறைவடைந்து விடும் என்று அவர்கள் அஞ்சினர்||5||
சந்தேகம் கொண்ட தேவர்களால் அர்ஜுனனின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்ள இயலவில்லை; அதனாலேயே அவர்களுக்குள் அச்சம் எழுந்தது; கவலைக் கொண்ட தேவர்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடி இனி நமது நிலை என்னவாகுமோ என்று சிந்தித்தனர்||6||
தேவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டனர் ‘நாம் அனைவரும் மிகுந்த மனக் கலக்கத்திற்கு ஆளாகியுள்ளோம்; அர்ஜுனனின் யாகம் வெற்றிகரமாக நிறைவடைந்து விடுமோ என்பதே கவலைக்குக் காரணம் ஆகும்; ஒரு வேளை, யாகம் முடிந்த பிறகு அவன் விண்ணுலகைத் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து விட்டால் என்ன செய்வது? அந்த யாகத்தின் ஆற்றல் அவனுக்கு அதற்கான வல்லமையை அளித்து விடுமே||7||
ஆகவே, நாம் அனைவரும் ஏதாவது ஒரு காரியத்தை செய்ய வேண்டும்; அது அர்ஜுனனின் யாகத்தில் ஏதேனும் ஒரு தடையையோ அல்லது இடையூறையோ ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்; இந்த மன்னன் அறிவாற்றல் மிக்க அந்தணர்களைப் பெரிதும் மதிப்பவன் என்பது அவனது கடந்த கால வரலாற்றிலிருந்து தெளிவாகப் தெரிகின்றது ||8||
எனவே, தேவர்களில் எவராவது ஒருவர், தூய அந்தணரின் வேடம் பூண்டு பூவுலகிற்குச் செல்ல வேண்டும்; அங்குச் சென்று அர்ஜுனனின் மரியாதையை ஏற்றுக் கொண்டு, அவனை ஏமாற்றி அவனது தார்மீகப் புனிதத் தன்மையை இழக்கச் செய்ய வேண்டும்’ என்றும் முடிவு செய்தார்கள் ||9||
அவர்கள் அனைவருக்கும் மத்தியில் சூரிய பகவான் வீற்று இருந்தார்; அவர்கள் திட்டத்தை நிறைவேற்ற அவர் நிச்சயம் உதவுவார் என்று நான் உறுதியாக நம்பினார்கள்; அவரைத் தவிர, தேவர்களுக்கு உதவக் கூடிய வகையில் வேறு எவரையும் அவர்களால் கண்டறிய முடியவில்லை||10||
இவ்வாறு தேவர்கள் அனைவரும் ஒன்று கூடிச் சதி செய்து, தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகப் பூவுலகிற்குச் செல்லுமாறு சூரிய பகவானைத் தூண்டினர்; சூரிய பகவானும் அதற்குச் சம்மதித்து, ஒரு கற்றறிந்த அந்தணரின் வேடம் பூண்டு, அர்ஜுனனின் தலை நகரான ‘மஹிஷ்மதிபுரம்’ என்னும் நகரைச் சென்றடைந்தார்||11||
விதிக்கப்பட்ட ‘வைச்வதேவம்’* எனும் சடங்கு நடைபெறும் வேளையில், அர்ஜுனனே நேரில் வந்து அவிர்ப் பாகம் (பலி) அளிப்பான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்; அந்த தருணத்திலேயே, அந்தணரின் வேடத்தில் வந்த சூரிய பகவான், அந்த வள்ளல் மன்னனைச் சந்திப்பதற்காக முன் வந்தார்
{*‘வைச்வதேவம்’ என்றால் விஷ்வ தேவர்களை (அனைத்து தேவர்களையும்) மகிழ்விக்கும் சடங்கு என்று பொருள்படும்; இது பஞ்ச மஹா யக்ஞங்களில் (ஐந்து பெரிய வேள்விகள்) ஒன்றாகக் கருதப்படுகிறது} ||12||
சூரிய பகவான் ஒரு அந்தணராக வேடமிட்டு வந்த காட்சி மிகவும் வியக்கத்தக்கதாக இருந்தது; அவரது வயிறு முதுகெலும்போடு ஒட்டியதுபோல் சுருங்கியிருந்தது; கண்கள் குழி விழுந்து காணப்பட்டன; அவர் நடந்து செல்லும் போது கால்கள் தள்ளாடின; உடல் நடுங்கியது; அவரது பேச்சு மிகவும் தளர்ச்சியுற்று இருந்ததினால், அவர் கூறியது எதையுமே கேட்க முடியாத நிலையில் இருந்தது ||13||
அத்தகையதொரு அந்தணரைக் கண்டதும் மன்னர் வியப்பால் திகைத்துப் போனார்; அவர் அந்த அந்தணரைப் பார்த்து ‘தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இங்கு எப்படி வந்தீர்கள்? என் நாட்டில், உங்களை போன்று பரிதாபகரமான நிலையில் உள்ள ஒருவரை நான் இதுவரை கண்டதில்லை’ என்று கூறினார்||14||
மன்னர் அந்த அந்தணரை நோக்கிச் சென்று, பாரம்பரியத்தின்படி பணிவுடன் வணங்கினார்; பின்னர் மிக்க கனிவுடன் கேட்டார் ‘தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? நான் உங்களுக்கு எந்த விதத்தில் உதவி செய்ய வேண்டும்? தங்களுக்கு என்ன தேவை? என்று விசாரித்தார்||15||
அதற்கு அந்த அந்தணர் வடிவில் இருந்த சூரியன் ‘ஓ மன்னரே! தங்கள் நற் புகழைக் கேள்விப்பட்டு நான் இங்கு வந்துள்ளேன்; மூவுலகிலும் விருந்தினர்களை எப்போதும் உபசரிப்பதில் தாங்கள் புகழ் பெற்றவர்; குறிப்பாக, கற்றறிந்த அந்தணர்களிடம் தாங்கள் காட்டும் தாராள குணம் மிகவும் பிரசித்தி பெற்றது’ என்று கூறினார் ||16||
நீங்கள் மதிப்பிற்குரிய குருமார்களை போற்றி வணங்குபவர் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்; உங்களை பார்த்த விநாடியிலேயே நீங்கள் அனைவரிடமும் மிகுந்த கருணை கொண்டவர் என்பது தெளிவாகிறது; எதையாவது வேண்டி வருபவர்களுக்கு, அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதையே தாங்கள் வழங்குகிறீர்கள்; இத்தகைய கருத்துக்களை அனைவரும் கூறியதினால் நான் தங்கள் வாசலைத் தேடி வந்துள்ளேன்||17||
உண்மையான தாராள குணம் கொண்டவர்கள், தங்கள் செல்வம், மனைவி, மக்கள் அல்லது தங்களது அரசாங்கம் ஆகியவற்றின் மீது பேராசையோ, அதீத பற்றோ கொள்வதில்லை; அவர்கள் தங்கள் சொந்த உடலின் மீதும் கூட அதீத ஈடுபாடு கொள்வதில்லை’ என்று சொல்லப்படுகிறது. எனவே, அதே நம்பிக்கையுடன்தான் நானும் தங்களை நாடி வந்துள்ளேன்||18||
தங்களைப் பற்றிப் பரவியுள்ள புகழுக்கு ஏற்பத் தாங்கள் உண்மையிலேயே தாராள குணம் கொண்டவர் என்றால், இன்றே எனக்கு மன நிறைவை தரும் வகையில் ஒன்றை செய்திட வேண்டும்; எனக்குத் தேவையானதை வழங்கக் கூடிய வேறு எவரையும் இந்த முழு பூமியிலும் என்னால் காண முடியவில்லை; தங்களைச் சந்தித்த பிறகு நான் எடுத்திருக்கும் உறுதியான முடிவு இதுவே’ என்றார் ||19||
அதற்கு மன்னர் ‘ஐயா, நீங்கள் என்னைப் போதுமான அளவிற்கு மேல் புகழ்ந்து விட்டீர்கள்; இனி அதை நிறுத்துங்கள்; நான் என்ன செய்தால் நீங்கள் மனநிறைவு அடைவீர்கள் என்பதை மட்டும் எனக்கு கூறுங்கள்; என்னைப் பொறுத்தவரை கற்றறிந்த அந்தண ஆசான்கள் அனைவரும் தெய்வங்களுக்குச் சமமானவர்கள்; தங்களுக்குத் தேவை என்றால், என்னிடமுள்ள அனைத்தையும், என்னையும் சேர்த்தே நான் தங்களுக்கு வழங்கத் தயாராக இருக்கிறேன் என்று பதிலளித்தார் ||20||
அந்த அந்தணர் மகிழ்ச்சியுடன் பதிலளித்தார் ‘ஏழு தீவுகளைக் கொண்டதாக அறியப்படும் இந்த பூமி ஏற்கனவே உமது ஆட்சிக்கு உட்பட்டதே; ஆயினும், இது பல்வகைத் தாவரங்கள், விலங்குகள், விளை நிலங்கள் மற்றும் பசுமையான செடி கொடிகள் நிறைந்து காணப்படுகிறது; அவை அனைத்தையும் எனக்கே அளித்து விடும்; அவ்வாறு செய்தால் மட்டுமே நான் முழு மனநிறைவு அடைவேன் ||21||
நான் கேட்டதை கொடுத்தால் நான் நிச்சயமாக முழுமையான திருப்தி அடைவேன்; அதைத் தவிர எனக்கு வேறு எதுவுமே தேவை இல்லை’ என்றார்; அந்த அந்தணரின் பதிலைக் கேட்ட அர்ஜுனன், அந்த வேண்டுகோளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான் ||22||
நிச்சயமாக இந்த அந்தணர் ஒரு சாதாரண மனிதர் அல்லர்; சில சமயங்களில் தேவர்களும் மனித உருவில் பூமியில் உலவுவார் என்று சொல்லப்படுவதுண்டு; அறநெறி தவறாத அசுர மன்னனான மஹாபலியின் யாக சாலைக்கு, திருமால் ஒரு வாமனாக (குள்ளராக) சென்றது போல, மெலிந்த தோற்றத்துடன் நிற்கும் இவரும் சக்தி வாய்ந்த தேவர்களில் ஒருவராகவே இருக்க வேண்டும் ||23||
இவர் பார்ப்பதற்கு மெலிந்தவராகத் தோன்றினாலும், தலை முதல் கால் வரை பேரொளி வீசுகின்றது; நிச்சயமாக சூரிய பகவானே மாறு வேடத்தில் இங்கு வந்திருக்க வேண்டும்; இவ்வளவு காலமும் இத்தகைய பேரொளியுடன் திகழக் கூடியவர் வேறு யார் இருக்க முடியும்? இவர் தனது அந்தப் பேரொளியை சற்று மட்டுப்படுத்திக் கொள்ள முயன்றிருந்தாலும் கூட அவரால் அது முடியவில்லை ||24||
இவ்வாறு தன் மனதிற்குள் சிந்தித்தவாறே அர்ஜுனன் அந்த அந்தணரிடம் கூறினான் ‘நீர் கேட்டது அனைத்தையும் நான் உமக்கு அளித்து விட்டதாகவே கருதிக் கொள்ளும்; ஆனால், தயவுசெய்து நீர் உண்மையில் யார் என்பதை எனக்குச் சொல்ல வேண்டும்’; அதற்குப் பதிலாகச் சூரிய பகவான் பின்வருமாறு கூறினார் ||25||
‘என் பெயர் ‘திவாகர பட்டன்*; நான் எனது பசியைத் தணித்துக் கொள்ளவே இங்கு வந்துள்ளேன்; இடையில் எங்கும் நிற்காமல், தென் இந்தியாவில் அமைந்துள்ள புனிதமான அருணாசலத் திருத்தலத்திலிருந்து நேராக இங்கு வந்துள்ளேன்|
{*இப் பெயரின் மூலம், தான் சூரிய பகவானே என்பதைச் வார்த்தை ஜாலங்களினால் உணர்த்தினார்} |26||
அந்த அந்தணரின் பதிலைக் கேட்டு அர்ஜுனன் புன்னகைத்தான்; ‘இந்த பூமியில் நான் மிகவும் பாக்கியம் பெற்றவனாகத் தோன்றுகிறது! சூரிய பகவானே நேரில் என் வீட்டு வாசலுக்கு வந்து, மற்ற யாசகர்களைப் போலவே தானம் கேட்டு நிற்கிறாரே’ என்று கூறினான்||27||
இல்லற வாழ்வில் ஈடுபட்டுள்ளோர் போற்றுதலுக்குரியவர்; விருந்தோம்பல் உள்ளிட்ட வேத நெறிகளைச் செம்மையாகக் கடைப் பிடிக்க முயலும் அத்தகையோர் பாராட்டுக்குரியவர்; ஏனெனில், உண்மையான தெய்வத் தன்மை வாய்ந்த, மிகுந்த பக்தி கொண்ட ஒருவர் அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்து ஏதேனும் ஒன்றைக் கேட்கும்போது, அதுவரை அவர்கள் கொண்டிருந்த தவறான கண்ணோட்டங்கள் அனைத்தும் விலகி மறைந்து விடுகின்றன||28||
மன்னன் அர்ஜுனன் மனதில் எண்ணினான் ‘நான் தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் அருளைப் பெற்ற ஒருவன் ஆவேன்; யோக மார்க்கத்தில் பயணிக்க நான் முயன்றுள்ளேன்; உண்மையான சாதகர்களுக்கு யோகத்தின் பேராற்றல் அளிக்கும் வலிமையைக் கொண்டு, உமது ஜ்வாலைகளால் எரிக்கப்படும் அனைத்துத் தாவரங்களும் மீண்டும் தழைத்தோங்க நான் வழிவகை செய்வேன்|29||
இவ்வாறு தன் உள்ளத்தில் உறுதி எடுத்துக் கொண்ட அர்ஜுனன், தான் வாக்களித்தபடியே, தனது ராஜ்யத்தில் இருந்த அனைத்துப் பசுமையான செடி கொடிகள், மரங்கள், மற்றும் தாவரங்கள் என அனைத்தையுமே அந்தணர் உருவத்தில் இருந்த சூரிய பகவானுக்கு அர்ப்பணித்தான்; அந்தப் பரிசை முறைப்படி ஏற்றுக் கொண்ட அந்த அந்தணர், பின்னர் தனது சுய உருவை மீண்டும் தரித்துக் கொண்டார்; அது பேரொளி வீசுவதாய், ஒப்பிடப்பட முடியாத அளவிலான பிரகாசம் கொண்டதாய் விளங்கியது ||30||
அர்ஜுனன் சூரியனாரை நேரில் கண்டதும் மிகுந்த பரவசம் அடைந்தான்; மீண்டும் அவன் இவ்வாறு உறுதிபட கூறினான் ‘மலர் செடிகள், விலங்குகள், மரங்கள், புதர்கள், விளை நிலங்கள் மற்றும் காய்கறிகள் என அனைத்தையும் நான் உங்களுக்கு அன்பளிப்பாக அளிக்கிறேன்; எவ்விதத் தயக்கமுமின்றி இவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம்’||31||
சூரியன் அதற்குப் பதில் கூற்றினார் ‘ஓ அரசனே! ஒரு வள்ளல் குணம் கொண்ட ஆட்சியாளன் என்ற உன் நற்பெயருக்கு நீ உண்மையிலேயே தகுதியுடையவனாகத் திகழ்கிறாய்; எனக்கு இன்னும் ஒரு வேண்டுகோள் உள்ளது; தயவு செய்து அவை அனைத்தையும் எனக்காக காய* வைத்து விடு; உலர்ந்த மரங்களை எரிப்பது எளிது; அதன் மூலம் எனது பசி முழுமையாகத் தணியும்.
(*வாடி வதங்க வைத்து விடு என்பது பொருள்)||32||
அரசன் அதற்குப் பதிலளித்தான் ‘முதலில் நீங்கள் எதைக் கேட்டீர்களோ அவற்றை நான் உங்களுக்கு அன்பளிப்பாக அளித்து விட்டேன்; ஆனால், செங்குத்தாக வளர்ந்து நிற்கும் இந்த உயிரினங்களை (மரங்களை) நானாகவே உலரச் செய்ய மாட்டேன்; உங்களால் முடிந்த வகையில் அதை செய்து அவற்றை உணவாக ஏற்றுக் கொள்வாயாக’ ||33||
சூரிய தேவன் இன்னும் ஒரு வேண்டுகோளை விடுத்தார் ‘நான் உனக்கு ஒரு அம்பை அளிக்கிறேன்; நீ உன் வில்லை நாணேற்றி, அந்த அம்பைத் தொடுப்பாயாக; அதன் விளைவாக, பூமியில் உள்ள அனைத்துத் தாவரங்களும் தாமாகவே உலர்ந்து விடும்; அதன்பின், எனது தீ ஜுவாலைகளைக் கொண்டு அவை அனைத்தையும் நான் உணவாகக் உண்டு விடுவேன்||34||
இவ்வாறு வேண்டிக் கொண்ட பிறகு, சூரிய தேவன் தெய்வீக அம்புகள் நிறைந்த ஒரு அம்பறாத் தூணியை அரசன் அர்ஜுனனிடம் அளித்தான்; சூரியனாரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அரசன், தனது ஆயிரம் கரங்களைப் பயன்படுத்தி, நாணேற்றப்பட்ட விற்களிலிருந்து ஒரே நேரத்தில் ஐநூறு அம்புகளைத் தொடுத்தான் ||35||
அவன் தொடுத்த ஒவ்வொரு அம்பிலிருந்தும், மேலும் ஆயிரம் அம்புகள் முளைத்து வெளி வந்தன; கணப்பொழுதில் ஆயிரக்கணக்கான மரங்கள் உலர்ந்து போயின ||36||
அந்த மரங்கள் நகரங்களிலோ, மலைச் சிகரங்களிலோ, கோட்டை வளாகங்களிலோ, அடர்ந்த காடுகளிலோ அல்லது நதிக்கரைகளில் பூமியின் மேற்பரப்பில் எங்கு அமைந்திருந்தாலும் சரி, அனைத்து மரங்களும் தாவரங்களும் அடுத்த சில நிமிடங்களிலேயே தீ பிடித்துக் கொண்டன||37||
அர்ஜுனனின் அம்பு எந்த மரத்தைத் துளைத்ததோ, அந்த மரம் உடனடியாக உலர்ந்து வாடிப்போனது; பின்னர், தீ ஜுவாலைகளின் வடிவம் கொண்ட சூரிய தேவன், கணப்பொழுதில் அவை அனைத்தையும் தீக்கிரையாக்கினான்||38||
புற்கள், மரங்கள், கொடிகள், மருத்துவத் தாவரங்கள் மற்றும் மூலிகைகள் என அனைத்தும், அணைக்கவே முடியாத ஒரு பயங்கரமான காட்டுத் தீயைப் போலப் எரிந்து கொண்டிருந்தன; அச்சமயத்தில், முனிவர் வசிஷ்டர் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார்; இந்த நிகழ்வுகளின் போக்கை உணர்ந்த அவர், தனது தியான நிலையிலிருந்து விழித்துக் கொண்டு வெளி உலகத்தை நோக்கினார்||39||
தனது ஆசிரம வளாகத்திற்குள்ளேயே மரங்களும் செடிகளும் எரிவதைக் கண்ட அவர், ஒரு சீடனை அழைத்து அதற்கான காரணத்தை விசாரித்தார்; அதற்கு அந்தச் சீடன் வெகுளித்தனமாக ‘அரசன் அர்ஜுனன், இவை அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்கும் நோக்கில், தன் அம்புகளை மழையெனப் பொழிந்துள்ளான்’ என்று பதிலளித்தான்||40||
சீடனின் பதிலைக் கேட்ட, அந்த உயர்ந்த முனிவர் உண்மையான காரணத்தை அறிய மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்; பின்னர், கடும் சீற்றத்துடன் விழித்தெழுந்து, கோபம் நிறைந்த கடுஞ் சொற்களை உதிர்த்தார் ||41|| ‘
அர்ஜுனன் தன் அறிவை இழந்து விட்டான் போலும்; அரசனாகப் பதவி ஏற்றதும், போதையில் இருப்பவனைப் போல வரம்பு மீறிப் பொறுப்பற்றவனாக மாறி விட்டான்; தூய சூழலில் வளர்ந்த தாவரங்களை அவன் எரித்து விட்டான்; அவனுக்குத் தக்க பாடம் புகட்டாமல் நான் விடப் போவதில்லை ||42||
அவனுடைய செயல்கள், அவன் அகங்காரத்தால் தலை கனம் பெற்று விட்டதை வெளிப்படுத்துகின்றன; தன்னை எதிர்த்துப் போரிட எவரும் முன் வராததால், தன்னை விட வலிமையானவர் எவரும் இவ்வுலகில் இல்லை என்று அவன் தவறாக எண்ணுகிறான்; அதனால்தான் இத்தகைய வீண் பெருமையை அவன் வெளிப்படுத்தி உள்ளான் ||43||
சினமுற்ற அந்த முனிவர் ‘அர்ஜுனா, உன் ஆணவமும் தற்பெருமையும் போதும், ஜமதக்னி முனிவரின் தெய்வீகப் புதல்வர் (பரசுராமர்) தோன்றும் வேளையில், அவர் உன் கைகளைத் துண்டித்து, மாயையினால் நீ பெற்று உள்ள அந்த தவறான உயர் எண்ணத்தை நிறைந்த உன் தலையையும் கொய்து வீழ்த்துவார்’ என்று சபித்தார்||44||
இவ்வாறு சினத்தால் ஆட் கொள்ளப்பட்ட போற்றுதலுக்குரிய முனிவர், ஒரு தீர்க்கமான மனதுடன் கடுஞ் சொற்களை கொண்ட சாபத்தைக் கொடுத்தார்; இறைத் தத்துவத்தை உணர்ந்த ஒரு ஞானியால் மொழியப்பட்ட இத்தகைய சாபத்தின் தாக்கத்தை மாற்றவோ அல்லது குறைக்கவோ வல்லவர் இவ்வுலகில் எவரேனும் இருக்க முடியுமோ?||45||
அர்ஜுனன் எப்போதும் அறிவாற்றல் மிக்க அந்தணர்களுக்கு உரிய மரியாதை அளிப்பவன் என்றாலும், வசிஷ்ட முனிவர் அமைதியும் ஞானமும் நிறைந்த சான்றோர்களில் முதன்மையானவர் என்றாலும், சினத்தின் வெறியில் இத்தகைய துன்பம் விளைவிக்கும் கடுஞ் சொற்களை உதிர்த்தார்; இத்தகைய நிகழ்வுகளுக்கு ஒரே காரணம், விதியால் நிர்ணயிக்கப்பட்ட எதிர்கால நிகழ்வுகளின் மாற்ற முடியாத ஓட்டமே ஆகும் ||46||
உண்மையில் அனைத்துச் செயல்களையும் நிகழ்த்துபவன் அந்த பரமாத்மனே என்றாலும், உயிரினங்கள் அதற்கு ஒரு கருவியாகவே அமைகின்றன; இவ்வுலகில் முற்றிலும் சுதந்திரமாகச் செயல்படுபவர் என்று எவரையும் கூற இயலாது; வேத சாஸ்திரங்கள் எடுத்துரைக்கும் உண்மை இதுவேயாகும் ||47||
அனைத்துத் தாவரங்களையும் எரித்துச் சாம்பலாக்கிய பிறகு, தன் பணி நிறைவுற்ற நிலையில் சூரிய பகவான் அங்கிருந்து மறைந்தார்; பின்னர் அர்ஜுனன், யோக மார்க்கத்தால் தான் பெற்ற தெய்வீக ஆற்றலைக் கொண்டு, அந்தப் பூமியை மீண்டும் முன்பிருந்ததைப் போலவே பசுமையாக்கி உயிர்ப்பித்தான் ||48||
ஞானம் பெற்ற அந்தண ஆசிரியர்களின் சீற்றம் மிகக் கடுமையாக இருக்கும் என்றும், அவர்கள் இடும் சாபங்கள் எவ்விதத் தடுப்பு மருந்தும் இல்லாத நஞ்சைப் போலத் தவறாமல் பலிக்கும் என்றும் கூறப்படுகிறது; அப்படிப்பட்ட சாபத்தால் ஏற்படும் பாதிப்பு நிச்சயம் காயங்களை ஏற்படுத்தும், உயிர்களையும் பறிக்கக் கூடும்; அந்த சாபத்தின் விளைவை அமைதிப்படுத்தவோ, சரி செய்யவோ அல்லது மாற்றியமைக்கவோ ஒரு வழியைக் காண்பது மிகவும் அரிதான ஒன்றாகும் ||49||
அந்த ஞானநிலை பெற்ற அந்தணர் இட்ட சாபத்தின் உடனடி விளைவாக, அர்ஜுனனின் நடத்தை திடீரென மாறி, வரம்பு மீறிய பொறுப்பற்ற தன்மையை அடைந்தது; அவனது அடுத்த சிந்தனை இதுவாக இருந்தது ‘நான் இப்போதே விண்ணுலகங்கள் மீது படையெடுத்துச் சென்று, அங்கிருக்கும் தெய்வங்கள் அனைவரையும் வென்று, என் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவேன்||50||
அர்ஜுனனுக்குப் பல புதல்வர்கள் இருந்தனர்; தன் அரசை நிர்வகிக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்த அவன், தன் ஆகாய விமானத்தில் ஏறி, விண்ணுலகங்கள் நோக்கிச் செல்லும் பாதையில் பயணத்தைத் தொடங்கினான்||51||
எவருடைய அரச கம்பீரம் ஈடு இணையற்றது என்று போற்றப்பட்டதோ, எவனுக்கு யோக சித்துக்கள் அனைத்தும் ஏவல் செய்யும் பணிப் பெண்களைப் போலக் கட்டுப்பட்டு நின்றதோ, எவனுடைய பயணங்களுக்கு எவ்விதத் தடையும் தடையூறும் ஏற்பட்டதே இல்லையோ, எவனுடைய கட்டளைகள் ஒரு போதும் மீறப்பட்டதே இல்லையோ, அத்தகைய ஆற்றல் மிக்க மன்னன் அர்ஜுனன் தனது பயணத்தைத் தொடங்கினான்||52||
எவன் தன்னை நினைத்த மாத்திரத்திலேயே நினைத்தவர் முன் தோன்றும் வரத்தைப் பெற்றிருந்தானோ, எவனுடைய ஆட்சி இரும்புக் கரம் கொண்டு நடத்தப்பட்டதோ, எவன் பல வடிவங்களை எடுத்துக்கொண்டு மூவுலகங்களிலும் சஞ்சரிக்கும் ஆற்றல் பெற்றிருந்தானோ, எவன் தன்னுடன் பழகும் அனைவரின் மனதிலிருப்பதை அறியும் நுண்ணறிவைப் பெற்றிருந்தானோ, அத்தகைய ஆற்றலை கொண்டிருந்த அர்ஜுனன் தனது பயணத்தைத் தொடங்கினான்||53||
தடைபடாத வேகத்துடன் செல்லும் தன் விமானத்தில் அமர்ந்தவாறே, அர்ஜுனன் விண்ணுலகங்களை அடைந்து அங்குச் சுற்றித் திரிந்தான்; அப்போது, விண்ணுலகச் செல்வங்களுக்கு அதிபதியான குபேரனின் அழகிய நந்தவனம் ஒன்றை அவன் காண நேர்ந்தது; அங்கே அவன் சிறிது நேரம் இன்பமாகப் பொழுதைக் கழித்தான்||54||
தங்கள் நந்தவனத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த அன்னியனைக் கண்டதும், அது அவனைத் தாக்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது என்று கருதிய யட்ச தேவர்கள், அவன் மீது பாய்ந்து தாக்கத் தொடங்கினர்; பல்வேறு வகையான ஆயுதங்களையும் உடலைச் சிதைக்கும் கருவிகளையும் அவர்கள் அர்ஜுனன் மீது சரமாரியாக வீசினர்; ஆயினும், அர்ஜுனன் அவை அனைத்தையும் திறம்பட முறியடித்துத் தடுத்தான்||55||
மனித முகம் மற்றும் குதிரை உடல்* கொண்டவர்களாகவும் அல்லது குதிரை முகம் மற்றும் மனித உடல் கொண்டவர்களாகவும் {பஞ்சமுக} விசித்திர வடிவங்களில் இருந்த அந்தத் தேவர்கள் அர்ஜுனனைத் தாக்கினர்; இவர்களே வழக்கமாக ‘யட்சர்கள்’ மற்றும் ‘கின்னரர்கள்’ என்று அழைக்கப்படுபவர்கள் ஆவர்; அர்ஜுனனின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல், அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கிப் பின்வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்; அந்தப் போரின் வெறியில், இந்த வலிமை மிக்க வீரன் அர்ஜுனன், மீண்டும் தனது ஆயிரம் கைகளில் ஐநூறு வில்களை ஏந்தி, அப்பகுதியில் போரிட விரும்பிய எவரும் இல்லாத வகையில் அம்புகளை ஒன்றன்பின் ஒன்றாகப் பொழிந்தான்.
{*குதிரை மனிதன் (Centaur) என்பது ஒரு மனிதனின் மேல் உடல் மற்றும் குதிரையின் கீழ் உடல் மற்றும் கால்கள் கொண்ட கிரேக்க புராணங்களின் விவரிக்கப்படும் ஒரு உயிரினமாகும். இவை தெசலியின் மலைகளில் வசிப்பதாக கூறப்படுகிறது}, ||57||
தேவர்கள் தங்கள் உடல்களில் பலத்த போர்க் காயங்களை அடைந்தார்கள்; திடீரென்று அவர்கள் தங்கள் உயிருக்கு அஞ்சினர்; அர்ஜுனனைத் தாக்கிய தேவர்களின் கூட்டம் முழுவதும், இது எப்படி நிகழ முடியும் என்று எண்ணி திகைத்தது ||58||
சிலர் ஒளிந்து கொள்ள இடங்களை தேடி குதிரை முகம் மற்றும் மனித உடல் கொண்டவர்; சிலர் தப்பி ஓடினர், மற்றவர்கள் சிதறி ஓடினார்கள்; களத்தை விட்டுச் சென்றவர்களை அர்ஜுனன் தனியாக விட்டுச் சென்றான்; பின்னர் அவன் தனது ஆயுதங்களை அவற்றின் சரியான இடத்தில் கவனமாக வைத்து விட்டு, உண்மையான தேவலோகத்தை நோக்கிச் சென்றான் ||59||
அர்ஜுனனை முற்றத்தில் கண்டதும், ஒரு தேவ பரிவாரம் இந்திரனிடம் ஓடிச் சென்று அவன் வருவதைப் பற்றித் தெரிவித்தது; அர்ஜுனன் அவர்களை விரைவாகப் பின் தொடர்ந்தான்;அவன் எமனின் மற்றொரு வடிவம் போல் தோன்றினான்||60||
ஆயிரம் கைகள் கொண்ட வீரன் எனப் புகழ்பெற்ற அர்ஜுனன் அங்கே இந்திரனை நேருக்கு நேர் சந்தித்தபோது, இந்திரன் மற்ற எல்லா தேவர்களையும் விரைவாக ஒன்று திரட்டினான், தேவர்கள் தங்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தது போல் தோன்றியது ||61||
பின்னர் ஒரு பெரும் போர் தொடங்கியது; பல தேவர்கள் காயமடைந்தனர், அரசன் அர்ஜுனனின் வலிமை மிக்க செயலைக் கண்டு, அங்கிருந்தவர்கள் மிரண்டு போய் திகைத்து நின்றனர் ||62||
அர்ஜுனனின் அம்புகள் தேவர்களைத் துளைத்தபோது, அவர்கள் தங்கள் உடல் வலிமையை இழந்து, துன்பப்பட்டு, மூச்சுத் திணறினர்; அவர்களும் இரகசியமாகப் பாதுகாப்பான இடத்திற்குத் தப்பிச் செல்ல விரும்பினர் ||63||
அப்போது அரசன் அர்ஜுனன் மோக வலையில் வீழ்த்தும் ஒரு பொருளை ஏவினான்; இந்தத் திறமையான அம்பு உண்மையிலேயே தேவர்களை ஒரு மயக்க நிலைக்கு இட்டுச் சென்றது; பின்னர் அவன் தனது அசல் விளையாட்டை அங்கே தொடர நந்தனவனம் என்ற அவர்களின் தோட்டத்திற்குத் திரும்பினான்||64||
இந்த நிகழ்வுகளுக்கும், தேவர்கள் சுய நினைவுக்கு வந்ததற்கும் ஒரு நாள் கழித்து, இந்திரன் தனது தேவ வாகனத்தில் அமர்ந்து, ஐராவதம் என்ற தனது தெய்வீக யானையின் தலைமையில் தன் துணைவியுடன் அதே தோட்டத்திற்கு வந்தார் ||65||
அர்ஜுனன் அங்கே தோட்டத்தில் தனியாக மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்ட அவர், மிகவும் கோபமடைந்தார்; அவர் தனது வஜ்ராயுதத்தை எடுத்துக் கொண்டு, ஆயிரம் கண்களின் கடவுள் என்று புகழ் பெற்றவராக, பாய்ந்து சென்றார் ||66||
மன்னன் அர்ஜுனன் அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை விரைவிலேயே உணர்ந்தான்; எனவே, இந்திரனின் வாகனத்தை தன் தோளில் சுமந்து கொண்டு, பேரொலி எழுப்பியவாறே, இந்திரனுடனும் அவனது தெய்வத் துணைவியுடனும் அங்கிருந்துவெளிப்புற ப்பட்டான் |67||
அர்ஜுனன் தன்னையும் தன் மனைவியையும் சிறை பிடித்துச் செல்வதை இந்திரன் உணர்ந்தான்; எனவே, மிகுந்த மனத் துயருடன் மற்ற தேவர்களைத் தனக்கு உதவ வருமாறு அவன் அழைத்தான்; தேவர்களும் அவனது அழைப்பிற்குச் செவி சாய்த்து மீண்டும் ஓரிடத்தில் கூடினர்; அர்ஜுனனுக்கும் விண்ணுலகத் தேவர்களுக்கும் இடையே மீண்டும் ஒரு போர் மூண்டது||68||
இப்போரும் மிகக் கொடூரமானதாக அமைந்தது; தேவர்கள் மீண்டும் ஒருமுறை தங்கள் வலிமையை இழந்து தளர்வுற்றனர்; அர்ஜுனனின் மேன்மையும் ஆற்றலும் அங்கே முழுமையாக மேலோங்கி நின்றன; தேவர்களில் எவராலும் அவனுக்கு எதிராக நீண்ட நேரம் தொடர்ந்து போரிட முடியவில்லை ||69||
மன்னன் அர்ஜுனன் ஏற்கனவே யோகக் கலையில் முழு ஆற்றல் பெற்றிருந்தான்; ஸ்ரீமத் தத்த பகவானின் அருளால் அவனது உடல், மின்னலின் உருவமாகவே திகழ்ந்தது; அத்தகையவனை எளிதில் அடக்கக் கூடியவர் யார்? தேவர்கள் அனைவரும் இப்போரைத் தொடர்ந்து நடத்துவதில் நம்பிக்கை இழந்து, உள்ளுக்குள்ளேயே துவண்டு போயினர்||70||
தேவர்களில் சிலரின் ஆடைகள் கிழிந்து போயின; வேறு சிலர் தங்கள் ஆயுதங்களைக் களத்திலேயே போட்டு விட்டு உயிர் பிழைக்க ஓடினர்; சிலர் தங்கள் முகத்தையும் கண்களையும் கைகளால் மறைத்துக் கொண்டனர்; வேறு சிலர் தங்கள் உடல் உறுப்புகள் இன்னும் செயல்படுகின்றனவா என்பதைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர் ||71||
சில தேவர்கள் மன்னன் அர்ஜுனனின் பாதங்களில் பணிந்து, தங்களைக் காக்குமாறும் அமைதி நிலவச் செய்யுமாறும் வேண்டிக் கொண்டனர். தேவர்கள் மீண்டும் ஒருமுறை இவ்வாறு பணிந்து நிற்பதைக் கண்ட அர்ஜுனன், அவர்களுக்கு மேலும் எவ்விதத் தீங்கும் இழைக்காமல் அவர்களை விடுவித்து அனுப்பி வைத்தான்||72||
விடுவிக்கப்பட்ட அந்த கணமே, இந்திரனும் மற்ற தேவர்கள் அனைவரும், தங்களுக்கு ஏற்பட்ட அந்த அவமானகரமான தோல்வியால் மனம் வருந்தி, மேரு மலையில் அமைந்திருந்த ஒரு குகைக்குச் சென்றனர்; அங்கே அவர்கள் தங்களுக்குள்ளேயே வருத்தத்துடன் கலந்தாலோசிக்கத் தொடங்கினர் ||73||;
தேவர்களுக்கு விண்ணுலகமும், மனிதர்களுக்குப் பூவுலகமும் எனப் பிரித்துக் கொடுத்தவர் படைப்புக் கடவுளான பிரம்மதேவரே ஆவார்; எனவே, நாம் படைப்புக் கடவுளான பிரம்ம தேவரிடம் சென்று, தற்போது நிகழ்ந்துள்ள இச்சம்பவங்கள் அனைத்தையும் அவருக்குத் தெரிவிப்போம் ||74||
அர்ஜுனன் ஒரு மனிதனாக இருந்தபோதிலும், தன் வலிமையைப் பயன்படுத்தி விண்ணுலகத்திற்குள் அத்து மீறி நுழைந்து விட்டான் என்றும்; எவ்விதக் காரணமும் இன்றியே எங்களுடன் தொடர்ந்து போரிட விரும்புகிறான் என்றும், மேலும், விண்ணுலகச் சபையையே அவன் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விட்டான் என்றும் நாம் அவரிடம் முறையிடுவோம் ||75||
அர்ஜுனனின் நிகரற்ற வலிமை குறித்து அனைவரும் நன்கு அறிவர்; ஸ்ரீமத் தத்த பகவானின் அருளால் அவன் அழிவற்ற தேவர்களில் ஒருவனாகவே மாறி விட்டான்; அவன் நம் அனைவரையும் அழித்துத் தூளாக்கி விடுவதற்கு முன்னரே, நாம் சென்று இச்சம்பவங்கள் குறித்து உயர்ந்த நிலையில் உள்ள தேவர்களுக்குத் தெரிவிப்போம்’ ’ என்று தீர்மானித்தார்கள்||76||
தேவேந்திரன் முன்மொழிந்த கருத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்; அவரது தலைமையில், படைப்புக் கடவுளாகிய பிரம்ம தேவன் வீற்றிருக்கும் உயர்ந்த விண்ணுலகப் பகுதிகளுக்கு அவர்கள்வெளிப்புற ப்பட்டுச் சென்றனர்||77||
இவ்விடத்தில்தான் வேதங்கள் தமக்கே உரிய பொருத்தமான வடிவத்தை ஏற்றுக் கொண்டு, படைப்புக் கடவுளின் அருகிலேயே நின்று கொண்டு உள்ளன; சனத் குமாரர்கள்* போன்ற புகழ் பெற்ற முனிவர்களும் அவதாரங்களும், அந்த இடத்தில்தான் வேத ஞானத்தையும் கடவுள் பிரம்மதேவனையும் தொடர்ந்து போற்றிப் புகழ்கின்றனர்.
{* இந்து சமய புராணங்களின்படி, பிரம்மாவின் மனதிலிருந்து தோன்றிய முதல் நான்கு படைப்புகளே சனத் குமாரர்கள் ஆவர்; இவர்கள் எப்போதும் ஐந்து வயதுடைய சிறுவர்களாகவே (பாலகர்களாக) காட்சியளிக்கும் வரத்தைப் பெற்றவர்கள். மேலும், உலகப் பற்றுகளைத் துறந்து, வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கும் துறவிகள் ஆவர்; இவர்கள் எந்தவொரு லோகத்திற்கும் (வானுலகம்) எவ்வித தடையுமின்றி பயணிக்கக் கூடியவர்கள். } ||78||
ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு வேதத்தின் மீதான முழுமையான ஆளுமையை கொண்டிருந்த நிலையை உணர்த்தும் வகையில் நான்கு முகங் கொண்ட பிரம்ம தேவனை, தேவர்கள் மெத்த மரியாதையுடன் தரிசித்தனர்; அவரைக் கண்டதும், தங்கள் துயரத்தை மறந்த அவர்கள், ஒரு கணம் மீண்டும் மகிழ்ச்சியால் பூரித்தனர்; தங்கள் கடந்த காலத் துன்பங்களை அறவே மறந்து, அவ்விடத்தில் வீற்றிருக்கும் பேறை எண்ணி அவர்கள் மகிழ்ந்தனர் ||79||
அவர்கள் பிரம்ம தேவனைச் சரணடைந்து கை கூப்பிய நிலையில் மிகுந்த மரியாதையுடன் நின்றனர்; பின்னர், இந்திரனின் தலைமையில், அந்தப் படைப்புக் கடவுளைப் போற்றித் துதிக்கத் தொடங்கினர் ||80||
‘தாமரை மலர் மீது வீற்றிருக்கும் இறைவா, உமக்கு எங்கள் வந்தனங்கள்; நான்கு முகங்களையுடையவரே, இப் பிரபஞ்சத்தைப் படைத்து வெளிக் கொண்டு வந்ததற்கு முதற் காரணமாக நீங்களே திகழ்கிறீர்; இவ்வுலகம் நிலை பெற்று இயங்குவதும், உயிரினங்கள் வாழ்வதும் உமது மூலமாகவே நிகழ்கிறது; பரம்பொருளாகிய இறைவனின் திரு நாபிக் கமலத்திலிருந்து தோன்றிய பெருமானே, உங்கள் முன் நாங்கள் தலை வணங்கி நிற்கின்றோம் ||81||
நாங்கள் உங்களது கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் விசுவாச மிக்க அடியார்கள் மட்டுமே; உங்களது கட்டளைகளை சிரமேற் கொண்டு நிறைவேற்றும் பணியாளர்கள் நாங்கள்தான்; இந்நாள் வரை நாங்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வாழ்ந்து வந்தோம்; ஆனால், திடீரெனத் துயரம் எங்களை அனைவரையும் சூழ்ந்து கொண்டது போல் உணருகின்றோம் ||82||
தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் அருளாசிகளைப் பெற்ற காரணத்தினால், மன்னன் அர்ஜுனன் மிகுந்த ஆணவமும் செருக்கும் கொண்டவனாக மாறி விட்டான்; அவன் தன் வலிமையைப் பயன்படுத்தி விண்ணுலகத்திற்குள் அத்து மீறி நுழைந்து விட்டான்; அதன் விளைவாக, எங்களை அனைவரையும் இத்தகையதொரு பரிதாபகரமான நிலைக்குத் தள்ளி விட்டான்||83||
அவனைத் தடுத்து நிறுத்துவது என்பது இயலாத காரியமாகத் தோன்றுகிறது; எங்கள் ஆயுதங்கள் அனைத்தும் பயனற்றுப் போய் விட்டன; அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் நாங்கள் திகைத்து நிற்கிறோம்; அவனை எதிர் கொள்வதற்காக நாங்கள் கையாண்ட வழி முறைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து விட்டன’ என்று கதறினார்கள் ||84||
அப்போது, நெருக்கடியான காலங்களில் எங்குச் சென்று அடைக்கலம் புகுவது என்பதைத் தேவர்களுக்கு உணர்த்தும் வகையில், பிரம்ம தேவன் பின்வருமாறு கூறினார் ‘நாம் அனைவரும் திவ்யமான வைகுண்டப் பெருமாள் உள்ள நகருக்குச் செல்வோம்; செல்வத் திருமகளாம் லட்சுமியின் பதியாகிய அந்தப் பரம்பொருள், தன்னைச் சரணடையும் பக்தர்களைக் காப்பதில் புகழ் பெற்றவர்; அவருக்கு நிகர் வேறு யாரும் கிடையாது; அவர் நம் அனைவரையும் இந்த நிலையிலிருந்து மீட்டெடுத்துக் காப்பார் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை’ என்றார்||85||
இவ்வாறு, அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்து கொண்டு, அவர்கள் உள்ளத்தில் நாராயணப் பெருமானை நினைத்துத் தியானித்தவாறே, பக்திப் பெருக்கோடு, துதி பாடியபடி விஷ்ணு பகவானின் திவ்யத் திருத்தலத்தை நோக்கிப்வெளிப்புற ப்பட்டனர்||86||
அந்த திருத்தலமானது, பேரின்பத்தை முழு உணர்வுடன் அனுபவிப்பதற்குரிய முதன்மையான இடமாகப் பெரிதும் போற்றப்படுகிறது; ஒருவன் கனவு நிலையில் இருக்கும்போது கூட அந்த திருத்தலத்தை நினைவு கூற முடிந்தால், அவனது சகல துரதிர்ஷ்டங்களும் முற்றிலுமாக விலகி விடும் என்பது நம்பிக்கை ||87||
அந்த பிரதேசம் சுய ஒளியுடன், பேரொளி வீசித் திகழ்கிறது; அதற்கு சூரிய ஒளியின் தேவை ஏதுமில்லை; அது நோய்கள், கவலைகள் மற்றும் பூசல்கள் அற்ற ஒரு பிரதேசமாகும்; அங்கு உடல், மனம் அல்லது ஆத்மா சார்ந்த சிறு குறையும் கூட அறவே இருக்க முடியாது ||88||
எக்காலமும் அது பேரின்பத்தின் ஊற்றாகத் திகழ்கிறது; அங்கு துயரத்திற்கோ அல்லது நிலையற்ற ஆசைகளுக்கோ இடமே இல்லை; அது என்றும் மாறாத பேரானந்தத்தின் இருப்பிடமாகும்; கருடன் எனும் தேவப் பறவையைத் தனது வாகனமாகக் கொண்ட இறைவனின் திரு உறைவிடம் அதுவாகும்||89||
எவர் அமைதி பூண்டவரோ, தம் ஐம்புலன்களையும் வென்றவரோ, பொறாமை அற்றவரோ; எவர் வஞ்சனைக்கோ அல்லது வீண் பெருமைக்கோ ஆட்படாதவரோ; எவர் சுயநலமின்றி, பக்தி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இறைவனை வழிபடுகிறாரோ அத்தகையோர், தாம் உயிருடன் இருக்கும்போதே அங்கு சென்று விஷ்ணு பகவானை தரிசிக்கும் பேறைப் பெறுகின்றனர் ||90||
அங்குள்ள பூங்காக்களும் காடுகளும், நினைத்ததை தரும் கற்பக விருட்ஷங்களால் நிறைந்துள்ளன; அங்குள்ள புல்வெளிகளிலும் வயல்களிலும், வரங்களை அருளும் காமதேனு எனும் தேவப் பசுக்கள் உலவுகின்றன; அது அமுதத்தால் நிரம்பிய திருக் குளங்களைக் கொண்ட பிரதேசமாகும்; மேலும், நினைத்ததை தந்தருளும் சிந்தாமணி எனும் தெய்வீக ரத்தினங்கள், அங்குள்ள கட்டிடங்களை அலங்கரித்து நிற்கின்றன||91||
அங்குள்ள சுவர்கள் அனைத்தும் தங்கத்தால் ஆனவை; அவை விலை மதிப்பற்ற நவ ரத்தினங்களால் இழைக்கப்பட்டுள்ளன; அங்குள்ள ஓவியங்கள் உயிருடன் இருப்பது போலவே தோற்றமளிக்கும்; அவை நம்முடன் உரையாடும் தன்மையையும் கொண்டுள்ளன; அந்த காட்சிகளைக் கண்டு, காண்போரின் அறிவு வியப்பிலும் பிரமிப்பிலும் உறைந்து போகும் ||92||
அத்தகைய தெய்வீகமான திருவுறைவிடத்தை நோக்கியே, தேவேந்திரனும் பிற தேவர்களும் ஒன்றிணைந்து பயணித்தனர்; அவர்கள் அந்தத் திவ்ய தேசத்தின் திரு வாயிலை அடைந்ததும், உள்ளிருக்கும் இறைவனைத் தரிசிப்பதற்கான அனுமதியைக் கோரி, அங்கிருந்த வாயில் காவலாளிகளிடம் தங்கள் வருகையைத் தெரிவித்தனர்||93||
அந்த வாயில் காவலாளிகள் கூட, உள்ளிருக்கும் இறைவனைப் போலவே தோற்றமளித்தனர்; அவர்கள் அனைவரும் கருநிற மேனியுடனும், நான்கு திருக் கரங்களுடனும் காட்சி தந்தார்கள்; அவர்களுள் ‘ஜயன்’* மற்றும் ‘விஜயன்’* எனும் பெயருடைய இருவர், எந்த குற்றமும் அற்ற தூய உள்ளம் கொண்டவர்கள், தங்கள் இறைவனிடம் தேவர்களின் வருகையைத் தெரிவிக்க உள்ளே சென்றனர்.
{*இந்து புராணங்களில் ஜயன் மற்றும் விஜயன் (ஜயன், விஜயன்) என்பவர்கள் வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவின் துவார பாலகர்கள் (காவலர்கள்) ஆவர்; இவர்கள் ஒவ்வொரு பிறவியிலும் மகாவிஷ்ணுவின் அவதாரங்களால் (வராக, நரசிம்ம, ராம, கிருஷ்ண அவதாரங்கள்) வதம் செய்யப்பட்டு இறுதியில் மோட்சம் அடைந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன} ||94||
இறைவனிடமிருந்து அனுமதி கிடைத்ததும், தேவர்கள், தேவேந்திரன் மற்றும் பிரம்ம தேவன் ஆகியோர் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர்; அவ்விடம் வந்தடைந்த ஒவ்வொருவரும் அளவற்ற மகிழ்ச்சியில் திளைத்தனர்; விரைவில், அவர்கள் தாமரை மலர் போன்ற திருக் கண்களைக் கொண்ட அந்தப் பரம்பொருளைக் கண்ணாரத் தரிசித்தனர் ||95||
அவருக்கு இடப்புறத்தில் அன்னை லட்சுமி அமர்ந்திருந்தார்; அவர் மேன்மையான பொன்னாடை (பீதாம்பரம்) அணிந்து மிளிர்ந்தார்; அவரது திருக்கரங்களில் தெய்வீகச் சக்கரம், சங்கு, கதை மற்றும் தாமரை ஆகியவை காணப்பட்டன; ‘மது’ எனும் அரக்கனை அழித்தவர் எனப் புகழ் பெற்ற அந்தப் பரம்பொருள், அமைதி தவழும் ஆனந்த நிலையில் வீற்றிருந்தார் ||96||
அங்கு வந்திருந்த தேவர் அனைவரும் அவர் முன் சரணடைந்து பணிந்து வணங்கினார்கள்; கை கூப்பித் தொழுது அவரைப் போற்றிப் புகழ்ந்தனர் ‘இப் பிரபஞ்சத்தின் உயிரே, உமக்கு நல்வாழ்த்துக்கள்; ஓ நாராயணப் பெருமானே, நாங்கள் உம்மைப் பணிந்து வணங்குகிறோம்||97||
நீங்கள் உங்கள் பக்தி மிக்க அடியார்கள் மீது கருணை பொழிந்து அவர்களைக் காப்பாற்றுகின்றீர்கள் என்பது யாவரும் அறிந்ததே; உம்மை நிபந்தனையற்று நேசிப்பவர்களுக்கு நீரே உயிராகத் திகழ்கிறீர்; அத்தகைய புனிதர்கள் துன்புற்ற நிலையில் இருப்பதை நீர் காணும்போது, உமது இதயம் கருணையால் நிரம்பி வழிகிறது||98||
ஓ சர்வ வல்லமை படைத்த இறைவா, அவதூதர் வடிவிலும், தெய்வீகத் துறவியான ஸ்ரீமத் ‘தத்தாத்ரேயர்’ வடிவிலும் தோன்றி, அரசன் அர்ஜுனனுக்கு அருள் பாலித்து வரங்களை கொடுத்தவர் நீரே; ஆனால் இன்று, அவனே விண்ணுலகத்தின் மீது படையெடுத்து வந்து, எங்களிடமிருந்து அனைத்தையும் பலவந்தமாகப் பறித்துச் சென்று விட்டான் ||99||
இறைவா, நாங்கள் உம்மைச் சார்ந்திருக்கும் அடியார்களே; நீங்களே எங்களுக்கு ஒரே புகலிடமாகத் திகழ்கிறீர்; எப்படியாவது அவனுக்கு நீங்கள்தான் தக்க பதிலடி கொடுத்து, நாங்கள் இழந்த எங்கள் அந்தஸ்தையும், எங்கள் இருப்பிடத்தையும் மீண்டும் மீட்டுத் தர அருள் புரிய வேண்டும் ||100||
கூடியிருந்த தேவர்களின் கதறலைக் கேட்ட விஷ்ணு பெருமான், தம் உள்ளத்தில் ஆழ்ந்து சிந்தனை செய்தார்; மன்னன் அர்ஜுனன், ஒரு மகரிஷியின் சாபத்தினால் தூண்டப்பட்டு, தற்போது இத்தகைய மனக் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளான் என்பதையும், இச் சம்பவம் முழுவதிலும் விதியின் பங்கு முக்கியமாக உள்ளது என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார்||101||
மன்னன் அர்ஜுனன் ஒரு ‘ஜீவன் முக்தன்’ (வாழும்போதே ஞானம் பெற்றவன்) எனும் நிலையில் உள்ளான்; தற்போது நிகழ்ந்துள்ள இச் சம்பவம், மாற்ற இயலாத விதியின் போக்கினால் மட்டுமே விளைந்ததாகும்; விண்ணுலகை ஆள்வதிலோ அல்லது அங்கிருந்து எதையும் பெற்றுக் கொள்வதிலோ அவனுக்கு எவ்வித விருப்பமும் இல்லை; அவனது இச் செயல்கள் அனைத்தும், அடிப்படையில் பயனற்ற வீண் முயற்சிகளே ஆகும்||102||
மன்னன் அர்ஜுனனின் அத்தகைய நிலையை, சூழ்ச்சித் திறம் அற்ற தேவர்களால் எவ்வாறு அறிந்து கொள்ள இயலும்?; அவனுக்கு இப் பிறவியை அளித்திருந்த விதியின் காலம் தற்போது நிறைவுறும் தருவாயில் உள்ளது; தன் பூத உடலைத் துறந்த பிறகு, அவன் நிச்சயமாகப் பரம்பொருளோடு இரண்டறக் கலந்து முக்தி நிலையை அடைய உள்ளான் ||103||
அவன் வேண்டிய வரங்களை அவனுக்கு அருளத் தீர்மானித்தவன் நானே; அவ்வரங்கள் ஒன்று, அகிலம் முழுவதிலும் தற்போதுள்ளவர்களில், தன்னைப் போலவே புகழும் ஆற்றலும் மிக்க ஒருவனாலேயே தன் உயிர் பிரிய வேண்டும் என்பதாகும்; அவனது அந்த ஆசையை நிறைவேற்றி, எனது வரத்தை மெய்ப்பிக்கக் கூடியவர் தற்போது எவருமில்லை||104||
நிலைமை இவ்வாறிருக்க, நானே ஒரு அவதாரம் மேற்கொண்டு, பூமியில் உள்ள ஒரு புண்ணியத் தலத்தில் அவனை உயிரிழக்க செய்வேன்; மரணத்திற்குப் பிந்தைய முக்தியான ‘விதேக முக்தியை’ (உடல் கடந்த முக்தியை) அவனுக்கு நான் அருளுவேன்; அதற்கேற்ற ஆன்மீகத் தூய்மையை அவன் வெகு காலத்திற்கு முன்பே பெற்றுக் கொண்டு விட்டான்’ ||105||
இவ்வாறு தன் திருவுள்ளத்தில் சிந்தித்தவாறே, சர்வத்தையும் ஆளும் பரம்பொருள் தேவர்களை நோக்கி இவ்வாறு கூறினார் ‘அவனை எதிர் கொள்வதற்காக, பூமியில் ஜமதக்னி முனிவர் மற்றும் புனிதத் தாய் ரேணுகாதேவி ஆகியோரின் வாயிலாக நான் ஒரு அவதாரம் மேற் கொள்வேன் ||106||
நான் அர்ஜுனனுடன் போர் புரிவேன்; அவன் விரும்பியபடியே, போர்க் களத்தில் அவனை நான் வெல்வேன்; எனது பெருமை, புகழ் மற்றும் ஆற்றல் ஆகியவற்றை அவன் நன்கு அறிவான்; எனவே, அவனது வரம் நிறைவேறப் போகிறது என்பதால், நீங்கள் அனைவரும் கவலைகளைத் துறந்து, அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள் ||107||
தெய்வமான விஷ்ணு பகவானின் அந்த உறுதி மொழிகளை கேட்டதும், தேவர்கள் அனைவரும் பெரு மகிழ்ச்சி அடைந்து தங்கள் உவகையை வெளிப்படுத்தினர்; பின்னர், அங்கிருந்து விடை பெற்றுக் கொண்டு, தாங்கள் வந்த இடத்திற்கே திரும்பிச் சென்றனர் ||108||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் பதினேழாவது (17) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை:108
முதலாவது அத்தியாயம் முதல் பதினேழாவது (17) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 1731 = 1839
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -6, அத்தியாயம் -17 முடிவடைந்தது
பாகம் -7, அத்தியாயம் -18 தொடர்கின்றது