COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம்-4 : ஆத்மாவின் பயணம்

அத்தியாயம்-12
பிரபஞ்சத்தின் தோற்றமும் படைக்கப்பட்ட உயிரினங்களும்

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

குரு வேத தர்மா தனது சீடரான தீபக்கிற்குத் தொடர்ந்து உபதேசங்களை செய்தவண்ணம் இருந்தார் ‘மன்னன் அர்ஜுனனின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான் , சாஸ்திரங்களின் சாராம்சங்களை தெளிவாக எடுத்துரைத்த பின்னர் மன்னன் அர்ஜுனனின் மனம் அமைதி அடைந்தது ||1||

இவ்வுலகில் உடலெடுத்துள்ள உயிர்களில் பெரும்பாலானவை, போதிய விழிப்புணர்வும் ஞானமும் அற்றவைகளாகவே திகழ்கின்றன; அவை தெய்வீக மற்றும் வேத நூல்களின் மீது எவ்வித ஈடுபாடும் கொள்வதில்லை என்பதினால் அவர்களுக்கு பரிபூரண தெய்வ அருளும் கிடைப்பது இல்லை; இதனால் அவர்கள் முடிவற்ற ஜனன-மரண சுழற்சியில் இருந்து கொண்டே இருக்கின்றார்கள் ||2||

சில சமயங்களில் விழிப்பு, கனவு மற்றும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய மூன்று நிலைகளில் உள்ளபோது, இயற்கையின் விளைவால் தெய்வீக உணர்வு நிலையை ஒருவன் சில கணங்கள் உணர்ந்தாலும், தனது பிறப்பு உண்மை நிலையின் சிறு சிதறலை காண முடிந்தாலும், கவனக் குறைவினால் தான் உணர்ந்த உண்மைகளை இயல்பு தன்மையினால், மறந்து விடுகின்றான்||3||

நானே அதை செய்தேன், இதை செய்தேன்; பல சாதனைகளை செய்துள்ளேன்; நான் கொடையாளி, என்னால் பலனடைந்தவர்களைப் பாருங்கள்; நான் இன்ப துன்பங்களைச் சுமந்தவன் என்றெல்லாம் தன்னை தானே பெருமைப் படைத்துக் கொள்பவன், இந்த பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களில் இருந்தும் தன்னை ஒரு தனி மனிதனாக காட்டிக் கொள்ள முயல்கிறான்||4||

செய்யப்படும் அனைத்து செயல்களும் வெற்று உடலோடு சம்மந்தப்பட்டவை மட்டுமே என்பதினால், அந்த உடலோடு தன்னை அடையாளப் படுத்திக் கொள்வது ஒரு குறுகிய மனப்பான்மையில் தன்னை அடக்கிக் கொள்வதாகும்; அப்படிப்பட்ட நான் , எனது என்னால் என்பவை போன்ற அடையாள உணர்வு எப்போது கடந்து செல்லப்படுகிறதோ, அப்போது முக்தி (விடுதலை) அடைவது என்பது அவர்களுக்கு வெகு தொலைவில் இருக்காது; ஒருவரது உள்ளே அமைதியாக உறைந்து கிடைக்கும் தூய ஆத்மா வை மறைத்து நிற்கும் மிக வலிமையான திரை மறைப்பு அப்படிப்பட்ட எண்ணங்களே ஆகும் என்பதாக வேத சாஸ்திர வல்லுநர்கள் கூறுகின்றார்கள்||5||

நாம் நம்முடைய உண்மையான ஸ்வரூப தத்துவத்தை அறிந்து கொண்டால் மட்டுமே எவ்வித பந்தத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல எனும் உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும்; அதை பிறந்த அனைவருமே உணர்ந்து விட்டால் முக்தி அடைய வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு, எங்கிருந்து வரும்?; ஆகவே தான் யார் என்பதை உணர முடியாதவர்களுக்கு அதை அறிந்து கொள்ளும் வகையில் வேத சாஸ்திர கோட்பாடுகள், வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன; புராண நூல்கள் வெளிப்படுத்தும் உண்மை இதுவே ஆகும்||6||

இந்த பிரபஞ்சம் படைக்கப்படும் முன் பிரபஞ்சத்தின், அனைத்து பிரிவுகளையும் வேறுபாடுகளையும் கடந்த நிலையில், அனைத்தையும் உள்ளடக்கிய பரமாத்மன் என்பது ஒன்று மட்டுமே இருந்தது; அந்த நிலையில் இருப்பு-அறிவு-பேரானந்தத்திலிருந்து நீ வேறுபட்டவனல்ல என்பதை நீ உணர்கிறாய். ||8||

அந்த தெய்வம் ஈடு இணையற்றது எனும்போது அதற்கு எப்படி பாலின வேறுபாடுகள் இருந்திருக்க முடியும்?; அந்த தெய்வ சக்தி ஆண் மற்றும் பெண் எந்த பாகுபாடும் இல்லாமல் இருந்தது *
{*இதை எளிமையாக கூற வேண்டும் எனில் உயிரினங்களுக்குள் நாம் காணும் வடிவங்கள், பெயர்கள், குணங்கள் போன்ற எந்தவொரு வேறுபாடும் இல்லாது இருந்திருந்த ஆதி நிலை ஆகும்} ||9||

அது சத்-சித்-ஆனந்தம்* என்ற உணர்வுடன்தான் இருந்துள்ளது ஆகிய மூன்று நிலைகளின் சேர்க்கையாகவே இருந்தது } என்பதினால் அது எதனாலும் வேறுபட்டு இருக்கவில்லை; அத்தனை ஏன், அந்த தெய்வம் உடலின் பாகங்களினால்** கூட பிரிக்கப்படாமல் இருந்துள்ளது.
{* இது உண்மை (சத்), அறிவு/உணர்வு (சித்), மற்றும் எல்லையற்ற பேரின்பம் (ஆனந்தம்) என்ற உணர்வு;
** கைகள், கால்கள் போன்றவை மனித உடலின் வெவ்வேறு உறுப்புகள் போன்றவைகள் எதுவுமே இல்லாமல் தெய்வீகம் என்பது சர்க்கரையால் செய்யப்பட்ட பொம்மை போன்று இருந்திருக்க வேண்டும்; சக்கரை பொம்மை என்பது ஆனந்த நிலையை குறிப்பதற்காக கூறப்பட்டு உள்ளது} ||10||

உதாரணத்திற்கு கூற வேண்டும் எனில் ஒரு மரத்தின் இலைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை; அவை அதன் பூக்கள் அல்லது பழங்களிலிருந்து வேறுபட்டவை; ஆனால் ‘சத்-சித்-ஆனந்தம்’ என்பது அந்த மரத்தைப் போன்றது அல்ல; அந்த மூன்று நிலைகளையும் ஒன்றடக்கிய, ஒன்றை விட்டு இன்னொன்றை பிரிக்க முடியாத, மனதிற்கு பேரானந்தம் தரும் நிலை ஆகும்; அது உடல் முழுவதும் வெப்பத்தை தரும் இரத்தத்தை போன்றது; அது அறை முழுவதையும் ஒளிரச் செய்யும் ஒரு பிரகாசமான விளக்கு போன்றது ஆகும் ||11||

எந்த விதமான மாற்றத்திற்கும் உட்படாதது, சிதைவிற்கு* அப்பாற்பட்டது என்பதினால் அதை எந்த நிலையிலும் பிரித்துப் பார்க்க முடியாது; அதனால்தான் அந்த தெய்வமே கூட மாயை என்பதை தன்னுடைய ஒரு தன்மையாக ஏற்றுக் கொள்கின்றது; சூரியக் கதிர்களும் சூரியனும் எப்படி பிரிக்க முடியாததோ அப்படிப்பட்ட நிலைதான் தெய்வம் கொண்டுள்ள மாயை என்ற நிலை ஆகும்.
{*ஒரு பொருள் தன் கட்டமைப்பை இழந்து, பகுதிகளாகப் பிரிந்து, அழிந்து அல்லது சிதைந்து போவதைக் குறிக்கும் சொல் அது} ||12||

வலிமை என்பது வலிமையான ஒருவனது ஒரு தன்மை ஆகும்; இரண்டும் பிரிக்க முடியாதவை என்பதை போலவேதான் மாயை என்பதை தெய்வத்திடம் இருந்து பிரித்துப் பார்க்க இயலாதது; இல்லை எனில் தெய்வமும் மாயையும் இருமை* என்பதாகி விடும் அல்லவா; இதை ஒரு நிதர்சனமான உண்மை என்று கூற முடியுமா?
{*தனித்தனியான இரண்டு தன்மைகள்} ||13||

சிலர் கூறுவார்கள் ‘நாம் பூமியை பார்க்கும்போது அதன் மண்ணில் இருந்து செய்யப்படும் மண் பாத்திரங்களே நினைவிற்கு வரும்; காரணம் அந்த பாத்திரங்களின் ஆதாரம் அந்த பூமியின் மண் ஆகும்; கடந்த கால பதிவுகளை நனவு நிலையில் பார்க்க முடிவதும் அப்படித்தான் உள்ளது.
{*நனவு (Consciousness) என்பது ஒரு நபர் தனது சொந்த எண்ணங்களை, உணர்வுகளை தன்னைச் சுற்றியுள்ள சூழலை விழிப்போடு உணர்ந்து கொள்ளும் நிலை ஆகும். இது உறக்கம் அல்லது மயக்க நிலைக்கு மாறான, விழிப்புணர்வுடன் கூடிய மனநிலை} ||14||

இதை ஒருவர் நம்பினால், பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் வெற்றிடம் என்பது மட்டுமே இருந்துள்ளது, மனமோ, பேச்சோ, மொழியோ என்ற எதுவுமே கிடையாது என்பதினால் அத்தகைய சூழ்நிலையில் பல்வேறு பெயர்களும் வடிவங்களும் இருந்திருக்க வாய்ப்பில்லை ||15||

எவரோடும் ஒப்பிட முடியாத தனித் தன்மை வாய்ந்த அந்த பரமாத்மன் எனும் தெய்வம், பல உயிரினங்கள் அடங்கிய பிரபஞ்சமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடிவு செய்தது என்பதாகவே பல்வேறு வேத புராண நூல்கள் வெளிப்படுத்துகின்றன; ஆகவே உங்களால் தனித்துவ தன்மைக் கொண்ட தெய்வத்தை அறிந்து கொள்ள முடிந்தால் அதன் பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தையும் ஆழ்ந்து சிந்தனை செய்து பார்த்தால் அனைத்தும் புரியும் ||16||

உதாரணத்திற்கு மண் பானையை எடுத்துக் கொள்வோம்; மண்ணில் இருந்துதான் குயவன் ஒரு பானையை செய்கிறான் எனும்போது மண்ணுக்கு ஆதாரமான பூமியே மண்ணின் முதன்மைக் காரணம்; மண் என்பது மண்பானையின் இரண்டாவது காரணம் ; மூன்றாவது அதை செய்யும் குயவன் ஆவான் ||17||

ஆனால் இந்த பிரபஞ்சத்தை படைத்த தெய்வத்தை பொறுத்தவரை, அதுவே குயவனாகவும், மண்சேறாகவும், பூமியாகவும் உள்ளார் என்பதே உண்மை; பூமியும் அதற்கான மண்ணும் தோன்ற அவரே காரணம், குயவனின் தோற்றத்திற்கும் அவரே காரணம்; இத்தனை இருந்தும் அவர் தனக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை; அவர் ஒரு சுதந்திரமானவராகவே நிலைத்து இருக்கின்றார்||18||

ஒரு சிலந்தி தன் வலையைத் தானே பின்னி, அதனுள்ளேயே வாழ்ந்து கொண்டு வருவதை போல, தெய்வீகமும் (Divinity) இந்த பிரபஞ்சத்தை படைத்து, அதை காத்து, இறுதியில் மீண்டும் மானிட அனுபவத்திற்கு அப்பாற்பட்ட நிலையாகவே மாற்றுகின்றது (அழிக்கின்றது என்பது பொருள்) ; எனவே மேலே கூறப்பட்டு உள்ள மண் பாண்டத்தை செய்த குயவனோடு பிரபஞ்சத்தை படைத்த தெய்வத்தை ஒப்பிட்டுக் காட்ட முடியாது; படைப்பின் தொடக்கம் குறித்த கோட்பாட்டை முழுமையாகப் புரிந்து கொள்ளவும் இயலாது||19||

பாலில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்த்தால், அது தயிராக உரு மாறி விடுகிறது; இதுவே விளைவுகள் குறித்த கோட்பாடாகும்; அதாவது ஒன்றால் ஏற்படும் இன்னொரு மாற்றம்; ஆனால், இருப்பினும், மாற்றமற்ற அந்தத் தெய்வீகத் தன்மை இத்தகையதன்று; எனவேதான், சிலர் ‘தெய்வீகக் கனவு’ எனும் கோட்பாட்டை முன் வைக்கின்றனர். எந்த நிலையிலும் தெய்வத்தின் தெய்வீகத் தன்மை எவற்றினாலும் மாற்றத்தை அடைவது இல்லை; எனவே, மாற்றம் என்பதை ‘இறைவனின் கனவு’ (Divine dream) எனும் கோட்பாடு என்று கூறுவார்கள் ||20||

நாம் சங்குகளில் வெள்ளி ஒட்டிக் கொண்டு மின்னுகிறது என்று தவறாகக் கருதியதில்லையா, அல்லது தொங்கும் ஒரு கயிற்றை பாம்பு தொங்குவது போல நினைத்தது இல்லையா; எனவே, தெளிவு கிடைக்கும் வரை நாம் காண்பது எதுவுமே முழுமையான உண்மையாக இருக்காது; அது போலவேதான் இந்த பிரபஞ்சத்திற்கே ஆதாரமாக திகழும் தெய்வதின் நிலையும் உள்ளது||21||

ஒரு ஜீவனின் உடலுக்குள் உள்ள ஆத்மாவும் (ஜீவன்), கண்களுக்கு தெரியாத தெய்வமும் அடிப்படையில் ஒன்றேதான் என்றாலும், அவை வெவ்வேறானவையாகவே பார்க்கப்படுகின்றன; ஒரு உருவமாக பிறப்பெடுத்துள்ள நாம் அனைவரும் அறியாமையால் சூழப்பட்டுள்ளோம்; அதனால்தான் மனித உடல் ஆறு வகையான மாற்றங்களுடன் தொடர்புடையது; அவை
(i) பிறப்பு (Jayate/Birth); உயிரினத்தின் தொடக்கம்;
(ii) இருப்பு (Existence):- பிறந்தவுடன் உடல் நிலைத்திருத்தல்; வளர்ச்சி (Growth):- உடல் மற்றும் மனம் வளர்ந்து பெரியதாவது;
(iii) மாற்றம் (Transformation):- பருவ மாற்றங்கள், உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றம்;
(iv) தளர்ச்சி (Decay/Dwindling): -முதுமை அடைதல், உடல் ஆற்றல் குறைதல்
(v) இறப்பு (Death):- உடல் செயல்பாடுகள் நின்று அழிதல் போன்றவை ஆகும் ||22||

ஆனால் ஞானிகள் இந்த கூற்று உண்மையல்ல என்று கூறுகின்றனர்; ஏனெனில், அனைத்தையும் அறிந்துள்ள தெய்வத்திற்கு அறியாமை என்பதே இல்லை எனில், நமக்கு அறியாமை எங்கிருந்து வர முடியும் என்று கேட்கின்றார்கள் ; நமது ஆத்மாவும் தெய்வமும் ஒன்றல்ல என்ற இருமை தன்மையில் நம் மனதில் இருப்பதினால்தான் நாம் நம் உடலோடும் அதன் கூறுகளோடும் நம்மை அடையாளப்படுத்தி கொள்கின்றோம்; அதனால்தான் அறியாமை போன்றவை தோன்றுகின்றன என்கின்றார்கள்’ ||23||

ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான் (Datta) தொடர்ந்து அர்ஜுனனுக்கு கூறிக் கொண்டு இருந்தார் ‘இருமை எனும் தவறான கண்ணோட்டம் ஆதாரமற்றது என்றால், ஒருவன் உண்மை நிலையை அறிந்து கொண்ட பிறகு , வேத சாஸ்திர உபதேசங்களைக் அறிந்து கொள்ள முயற்சிப்பது ஏன் என்று நீ நினைக்கலாம்; அனைவரும் இருமை என்ற நிலையை துறந்து, என்னுடைய ஆத்மாவும், தெய்வமும் ஒன்றே என்று உண்மையை முழுமையாக நம்பத் துவங்கி விட்டால் நாம் இவ்வுலகில் துன்பங்களை இவ்வளவு தீவிரமாக அனுபவித்திருப்போமா||24||

ஆகவே, உண்மையை மறைக்கும் அனைத்துத் மாயத் திரைகளையும் நீக்குவதற்காகவே, எட்டு அங்கங்களைக் கொண்ட யோக நிலை பரிந்துரைக்கப்படுகிறது; இது தங்கத்தை சோதிக்க நெருப்பில் போடப்படுவதை போன்ற நிலை ஆகும்; அந்த நிலைக்கு சென்று விட்டால் நமக்குள் உள்ள சந்தேகங்கள் எனும் அனைத்துக் களங்கங்களும் எரிந்து மறைந்து விடும்; எஞ்சி நிற்பது தூய தங்கம் எனப்படும் உண்மையை அறிந்து கொண்ட நிலை ஆகும் ||25||

அது போலவே, யோக வழி மூலம் கிடைக்கும் அறிவாற்றலின் துணையால் அனைத்துத் தவறான நம்பிக்கைகளும் விலகும்போது, வெளியிலிருந்து எந்த ஒளியையும் பெறாமல், தனது இதயத்திற்குள்ளேயே பிரகாசமாக இருக்கும் சுய ஒளி (Self-Effulgent) வெளிப்படுகிறது; அதன் வெளிப்பாட்டிற்கு பின்னர் அங்கே இருமை (duality) என்பது எப்படி இருக்க முடியும்; அறியாமை எனும் திரை விலகும் வரை, இருமை என்பது ஒரு மாயை அல்லது தவறான பார்வையாக நிலவுகிறது||26||

ஒரு மந்திரவாதி ஒரு காட்சியில் தண்ணீரை கீழே கொட்டினால் , அது நிச்சயமாக பூமியை நனைத்து விடாது; இருப்பினும், அந்த மாயத் தோற்றத்தை உண்மையானது என்று அந்த நேரத்தில் நாமும் நம்பி ஏமாற்றப்படுகிறோம்||27||

அது போன்றதே நமது அறியாமையினால் ஏற்படும் தெய்வத்துடனான இருமை என்ற கருத்தும், பிளவு பட்ட எண்ணங்களும் ஆகும்; ஒருமுறை ஞான நிலையை அடைந்து விட்டால் உலகத்துடனான பந்தம் நம்மை விட்டு அகன்று விடும்; தெய்வத்துடன் நாம் ஐக்கியமாகி விடுவோம்; மீண்டும் மீண்டும் சுழலும் ஜனன -மரண சக்கரங்களில் இருந்து நாம் விடுதலை அடைந்து விடுவோம் எனும்போது எங்கிருந்து இன்பங்களும் துன்பங்களும் நம்மை தீண்ட முடியும்? ||28||

அத்தகைய மாயையான எண்ணங்கள் நம் மனதில் இருந்து அகன்று விடும்போது, அந்த பிரகாசமான பரப்பில் தூய அத்வைதத்தை தவிர வேறு என்ன எஞ்சி இருக்க முடியும்? ஜனன-மரண சுழற்சியையே நாம் கடந்து விட்டால் விதி எப்படி நம்மை ஆட்டுவிக்க முடியும்? ஓ அர்ஜுனா, நமது அறியாமையை நாம் எவ்வளவு காலம் பொறுத்துக் கொண்டிருக்க முடியும் ||29||

நாம் அறியாமையில் உழன்று கொண்டே இருந்தால் கர்மா அல்லது பந்தம் என்ற நிலைகளை குறித்து என்னவென்று சொல்வது?; அதனால்தான் பெரும்பாலோனர்களின் தவறான நம்பிக்கைகளினால் கர்மா மற்றும் பந்தம் என்பவை அவர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே உள்ளன; இந்த அடிப்படை உண்மையை உணர்ந்து கொண்டால் மாயை நம்மை விட்டு நீங்கும்; நாம் மாயையில், தவறான எண்ணத்திலும் உழன்று கொண்டே இருந்தால் மறு பிறப்பால் நம்மைத் தொடரும் பந்தங்கள் விலகாது||30||

இதனால்தான் யோக மார்க்க வழிப் பாதையில் செல்ல நல்ல குருமார்களை தேடி அவர்களிடம் சரண் அடைபவர்கள்,தவறான எண்ணங்களைக் கொண்ட மாயை இனி தங்களைப் பற்றிக் கொள்ள முடியாது என்பதை உணர்வார்கள்; அவர்களால் தெய்வீகம் எனும் பேரானந்த நிலையில் இருக்க முடிகின்றது; அந்த உண்மையை இங்கேயே, இப்போதே உணர்ந்து கொள்ள முடியும்’||31||

ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் அறிவுரைகளைக் கேட்ட அர்ஜுனன் பணிவுடன் அவருக்கு தலை வணங்கி நமஸ்கரித்த பின்னர் கேட்டான் ‘தேவா, ஆத்மா குறித்த அறிவையும், யோக நெறி குறித்த அறிவையும் நான் எவ்விதம் தேட வேண்டும்?; தயவு செய்து அதை எனக்குக் கூறுங்கள்’ ||32||

இந்த பிரபஞ்சத்தை படைத்த தெய்வம் தனித் தன்மையிலானது என்பது உண்மை என்றால் அது எப்படி ஜடமான, உயிருள்ள பல ரூபங்களில் பிரபஞ்சத்தில் தோன்றியது ; அந்த பல ரூபங்களில் ஒரு ரூபமான நாங்கள் ஏன் வாழ்க்கையில் இத்தகைய துயரத்தை எதிர் கொள்ள நேரிடுகின்றது? இறைவா, அவை அனைத்தையும் நான் அறிந்து கொள்ளும் வகையில் எனக்கு நீங்கள் விளக்க வேண்டும்’ என்று கேட்டான் ||33||

அதற்கு ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான் இப்படியாக பதிலளித்தார் ‘ஓ, அர்ஜுனா, ஒன்றை உன் மனதில் உறுதியாக வைத்துக் கொள்; தெய்வத்தின் தோற்றம் குறித்து எந்த விதமான கற்பனைகளுக்கும் இடம் இல்லை; அதன் தன்மையில் எந்த பிரிவுகளையும் ஏற்படுத்த முடியாது; அது துவக்கத்தில் எப்படி இருந்ததோ இனியும் அப்படித்தான் இருக்கும், அதன் நிலையான, அழிவற்ற தோற்றத்தில் எந்த காலத்திலும் எந்த விதமான மாற்றமும் ஏற்படாது ||34||

இயற்கையில் தூய்மையானவற்றிலும் தூய்மையானதாக எது இருந்ததோ அங்குதான் பரபிரும்மனின் பிரதிபலிப்பைக் காண முடியும்; அத்தகைய பிரதிபலிப்பை அளிப்பவரே படைப்பின் மூதையோர் என்று கூறப்படுகிறது; இந்த தனித்தன்மை வாய்ந்த, ஆனந்தமான, உணர்வுள்ள தெய்வ உண்மையை அனைத்து தெய்வீக மற்றும் வேத நூல்களும் எடுத்துக் காட்டுகின்றன ||35||

பிரம்மா, விஷ்ணு மற்றும் ருத்ரன் போன்ற வடிவங்களை எடுத்து, படைப்பை உருவாக்கவும், பராமரிக்கவும், அழிக்கவும் தன்னை நியமித்துக் கொண்ட தெய்வமே அந்த பரபிரும்மன் ஆகும்; பிரபஞ்சத்தின் அனைத்து படைப்பிலும் குடி கொண்டிருக்கும் தெய்வமே அது; உண்மையைத் தேடி தன்னிடம் அடைக்கலம் ஆகும் பக்தர்களை மேன்மை நிலையில் கொண்டு செல்வதும் அந்த தெய்வமே ஆகும் ||36||

இயற்கையில் எந்த சக்தி தூய்மையானவற்றிலும் தூய்மையாக இருக்கின்றதோ, அந்தச் சக்தியே, சாஸ்திரங்களின்படி மாயை என்பதின் ஞானப் பகுதி என்று கூறப்படுகிறது; இந்தச் சக்தியே ஒருவரை அனைத்தையும் அறிந்தவராக மாற உதவுகிறது; இதுவே இயற்கையின் இயல்பு ஆகும்||37||

பிரபஞ்சத்தின் மாயை அல்லது ஸ்தூல உலகமே இயற்கையின் முழுமையாக தூய்மையற்ற பகுதியாகும்; இந்த உலகில் இறைவனின் உண்மையான தெய்வீகச் சக்தியை அரிதாகவே காண முடியும்; சாஸ்திரங்களின்படி, இவ்வுலகில் உடலில் உள்ள அனைத்து உயிர்களும் ஜீவாத்மாக்கள் எனப்படும்; ஒவ்வொரு ஆத்மாவும் இயல்பாகவே பரமாத்மனை சார்ந்திருப்பவை (Dependence) என்று வேத நூல்களில் கூறப்பட்டு உள்ளன ||38||

அனைத்து உயிர்களின் உள்ளேயும் குடி கொண்டுள்ள சக்தி எனும் ஆத்மா வரம்பிற்குட்பட்ட அறிவையே கொண்டுள்ளன ; ஆனால், அந்த சக்தி எனும் ஆத்மாக்கள் அனைத்திற்கும் அதிபதியாக விளங்கும் பரபிரும்மன் சர்வ ஞானியாக இருக்கின்றார்; அதனால்தான் அந்த பரபிரும்மனை ஞானமயமான தெய்வம் என்று போற்றுகிறார்கள்; அனைத்து உயிர்களையும் அவற்றிற்குரிய செயல்களில் ஈடுபடத் தூண்டுபவனும் அந்த தெய்வமே (பரபிரும்மன்) ஆவார்.
{விளக்கம்: – இதன் மூலம் என்ன கூறப்படுகின்றது என்றால் அனைத்து ஆத்மாக்களும் பரபிரும்மன் எனும் சக்தியில் இருந்தே வெளியாகி, அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள காலம் முடிந்ததும் அதே சக்தியில் சென்று மறைந்து விடுகின்றது அதனால்தான் அனைத்து சக்திகளையும் (ஆத்மாக்கள்) வெளிப்படுத்தும் பரபிரும்மனை சர்வ ஞானி என்று கூறுகின்றார்கள்; அவர்தான் அனைத்து ஆத்மாக்களை இயக்குகிறார்} ||39||

அதே போலவே அனைத்து உயிர்களுக்கும் தான் யார் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள முடியாமல் மூடி மறைத்து வைப்பது எந்த சக்தி என்றால் அதுவே மாயா என்பதாகும் ; அந்த மாயா எனும் சக்தி இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது; ஒன்று உண்மையை அறிந்து கொள்ள விடாமல் மனதை அலைக் கழிப்பது (விக்ஷேபம்*), மற்றொன்று உண்மையை மறைப்பது (ஆவரணம்**); இதன் விளைவாக, ஒருவரால் தனது உண்மை வடிவத்தை அறிந்துகொள்ள முடிவதில்லை; எனவே, இச் சக்தியானது உண்மையை மூடி மறைக்கும் அல்லது இருளடையச் செய்யும் ஆற்றல் கொண்ட சக்தியாகவே உள்ளது.
{வேதாந்தத்தில் (*) விக்ஷேபம் என்பதை தவறாகக் காட்டுதல் என்றும், (**) ஆவரணம் என்பதை மறைத்தல் என்றும், அந்த இரண்டுமே மாயையின் இரு பெரும் கருவிகளாகக் கருதப்படுகின்றன என்று கூறுவார்கள்; மாயை என்பது பிரம்மத்தை மறைத்து, நிலையற்ற உலகப் பொருள்களை நிலையானது என நம்ப வைக்கும் இறைவனின் ஒரு அதீத சக்தி ஆகும்; அதே மாயையை சைவ சித்தாந்தத்தில் சுத்த மாயை (மாமாயை, சுத்தமான அறிவு) மற்றும் அசுத்த மாயை (மோகினி, அறியாமை) என்றும் இரு வகையாக பிரித்துக் கூறுகின்றார்கள்} ||40||

தெய்வத்தையும், ஆத்ம விடுதலை அடைந்த முக்தர்களையும் தவிர மானிட உடலெடுத்துள்ள அனைத்து உயிர்களும், அசுத்த மாயையின் மறைக்கும் ஆற்றலால் கட்டுண்டு கிடக்கின்றன; எனவே, அந்த ஜீவன்கள் தத்தமது அறிவாற்றல் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது என்றும் தம்மால் தமது உண்மை வடிவத்தை அறிந்து கொள்ள முடியவில்லை என்றும் ஒப்புக் கொள்ளும் நிலையிலேயே உள்ளன||41||

அறியாமையினால் உந்தப்பட்டு, தனது உடலையே, தான் என்று தவறாக அடையாளப்படுத்திக் கொண்டு, அனைத்து செயல்களையும் தானே செய்பவனாகவும் (கர்த்தா), அதன் பயனையும் தானே அனுபவிப்பவனாகவும் (போக்தா) தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றான்; இப்படிப்பட்ட தவறான மன நிலையை உருவாக்குவது அசுத்த மாயை எனும் சக்தி என்பதை புரிந்து கொள்; அதனால்தான் நாம் உண்மையிலேயே யார் என்பதை அறிந்து கொள்ள முடியாதவர்களாகவே இருந்து கொண்டு, ஒவ்வொரு பிறவிகளிலும் ஒவ்வொரு உருவத்தை எடுத்துக் கொண்டு வருகின்றோம்||42||

மனதை அலை பாய வைக்கும் மாயையின் தன்மையினால் நாம் கர்ம வினைகளின் பிடியில் சிக்கி பல்வேறு நிலைகளிலான இன்ப துன்பங்களைச் சுமக்க வேண்டி உள்ளது; பரமாத்மாவின் ஒரு சக்தியான மாயை அனைத்திலும் வியாபித்து உள்ளது என்பதினால், அந்த மாயையின் பிடியில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் ஆற்றல் ஒரு சிலருக்கு மட்டுமே உள்ளது ||43||

இருள் சூழ்ந்த அந்தி வேளையில், நாம் நடந்து செல்லும் வழியில் கீழே கிடைக்கும் ஒரு கயிற்றை தூரத்தில் இருந்து பார்க்கும்போது, அறியாமையின் காரணமாக, முதலில் அதை படுத்துக் கிடைக்கும் பாம்பு என்று நாம் எண்ணுவோம் ||44||

உண்மை நிலையை மறைத்து, அந்த கயிற்றையே பாம்பு என்றே உறுதியாக நம்பும் மன நிலையை அசுத்த மாயை தந்து, அடுத்த தவறான எண்ணங்களான அச்சம், நடுக்கம், மற்றும் பதற்றத்தை மனதில் குடி கொள்ள வைக்கும்; அதன் விளைவாக அந்த பாம்பு தம்மை கடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும், எப்படி தப்பித்துப் போகலாம் என்ற தவறான எண்ண அலைகளையும் அதே மாயை சக்திதான் தோற்றுவிக்கும்||45||

ஒரு தீ பந்தத்தின் துணையுடன் அல்லது ஒளி தரும் (டார்ச்) வேறு ஏதேனும் சாதனத்தின் உதவியுடன், அது உண்மையில் ஒரு கயிறுதான் என்பதை சுத்த மாயையின் தன்மையினால் உணர்ந்து கொண்ட உடனேயே, கயிற்றை பாம்பு என்று நம் மனதில் தோன்றிய தவறான அச்ச உணர்வு விலகி விடுகின்றது; நமது அச்சத்திற்குரிய உண்மையான காரணம் எதுவென்று தெளிவாகத் தெரிந்து விட்டால் அதன் பின் அச்சத்தினால் யார் நடுங்கிக் கொண்டிருக்கப் போகிறார்கள்||46||

அது போலவே, தான் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாத அளவிலான அறியாமையைத் தந்து கொண்டிருந்த அசுத்த மாயையை, சுத்த மாயையின் உதவியால் ஞானம் எனும் உண்மை அறிவு மற்றும் தெய்வ அருள் மூலம் பெற்றுக் கொண்டு விலக்கி விட்ட பின்னர், அறியாமையை தரும் எந்த பந்தங்களுக்கும், அதுவரை அறியாமையினால் சூழப்பட்டு இருந்தவன் கட்டுப்படுவதில்லை; ஜனன-மரண பந்தங்களுக்கும் அச்சப்படுவதில்லை ||47||

பிரம்மத்தை (உண்மையான மெய் பொருளை) மறைத்து, நிலையற்ற உலகப் பொருள்களை நிலையானது என நம்ப வைக்கும் இறைவனின் ஒரு அதீத சக்தியான மாயை என்பதை தொடர்ந்து அவரிடம் இருந்தே மஹத்-தத்துவம் (Mahat-tattva)* என்பது வெளிப்படும் போது அது அகந்தையைத் தோற்றுவிக்கிறது, அது மேலும் பூமி, நீர், ஒளி, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களாக விரிவடைகிறது.
{* மஹத்-தத்துவம் (Mahat-tattva) என்பது இந்து மத தத்துவங்களில், குறிப்பாக சாம்க்கிய (Samkhya) மற்றும் வைணவ (Vaishnava) தத்துவங்களில் விவரிக்கப்படும் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய செய்தியாகும்; சமஸ்கிருதத்தில் ‘மஹத்’ என்றால் ‘மிகப் பெரியது’ என்றும், ‘தத்துவம்’ என்றால் ‘உண்மை அல்லது கொள்கை’ என்றும் பொருள்படும்; உலகம் உருவாகத் தொடங்கும் போது வெளிப்படும் முதல் தத்துவம் இதுவே ஆகும்; மனித உடலில் ‘புத்தி’ (அறிவு/மனம்) எவ்வாறு செயல்படுகிறதோ, அதுபோல ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் புத்தியாக மஹத்-தத்துவம் செயல்படுகிறது;மஹத் வெளிப்பட்ட பிறகே, அதிலிருந்து அகங்காரம் (முனைப்பு), மனம், ஐந்து புலன்கள், ஐந்து செயல் திறன்கள் மற்றும் ஐம்பூதங்கள் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) ஆகிய 22 தத்துவங்கள் வரிசையாகத் தோன்றின.}||48||

ஆகாயம் ஒலியாலும், காற்று தொடுதலாலும், ஒளி பார்வையாலும், நீர் சுவையாலும் பிரித்து வைக்கப்பட்டு உள்ளது ||49||

பூமி என்பதில் வாசனை, சுவை, பார்வை, தொடுதல் மற்றும் ஒலி ஆகியவற்றின் தன்மைகளும் உள்ளன; இந்த ஐந்து பூதங்களின் தன்மைகளினால் ஐந்து புலன்களும் தோன்றுகின்றன||50||

அந்த ஐம்புலன்களான காதுகள், தோல், கண்கள், நாக்கு மற்றும் நாசி என்பதின் மூலமாகவே ஒருவர் தான் காண்பவற்றை குறித்த அறிவாற்றலை பெறுகிறார்; அவற்றை உள்மன உணர்வு அல்லது உள்ளுணர்வு ஆற்றல்கள் என்பார்கள் ||51||

மீண்டும் பஞ்ச பூதங்களின் தூய தன்மையினால் இந்த உள்ளுணர்வு ஆற்றல்கள் எழுகின்றன; அவைகளும் ஐந்து வகையான தன்மையுடன் உள்ளவை, உருமாற்றம் அடையக் கூடியவை||52||

மனம் தீர்மானிக்கிறது, புத்தி முடிவு செய்கிறது, உணர்வு விழிப்புணர்வு தருகின்றது மற்றும் அகங்காரம் நான் என்பதை நிலை நாட்டுகிறது ||53||

இந்த நான்கிலும் உள்ள அகங்காரம் என்பது நான் என்பதை விட முழுமையானது; நான் என்பது வெறும் உணர்வு என்றால், அகங்காரம் (Ego) என்பது பஞ்ச பூதங்கள் (உடல்), ரஜோ குணம் (செயல்பாட்டுத் திறன்), கர்ம உறுப்புகள் (செயல் புரியும் உறுப்புகள்), உயிர் மூச்சுகள் (Prana), மனது (Manas – எண்ணங்கள்) மற்றும் அறிவு (Buddhi – பகுத்தறிவு) ஆகியவற்றின் தொகுப்பைக் கொண்டு நான் செய்கிறேன், இது என்னுடையது என்று உரிமை கொண்டாடும் ஒரு மனப் படைப்பு ஆகும் ||54||

பேச்சு, கைகள், கால்கள், இனப் பெருக்க உறுப்பு மற்றும் கழிவு நீக்க உறுப்பு ஆகிய ஐந்தும் செயல் உறுப்புகள்* எனப்படும்; அதே போன்று, மூச்சும் ஐந்து வகையாகப் பிரிக்கப்படுகிறது.
{*அந்த ஐந்து செயல் உறுப்புக்களை கர்மேந்திரியங்கள் என்பார்கள்; அவை என்னவென்றால் (i) வாக்கு (Speech): பேசுதல், கருத்துக்களைப் பரிமாறுதல்; (ii) கை: பொருட்களைப் பிடித்தல், கையாளுதல்; (iii) பாதம் (Feet): நடத்தல், இடமாற்றம்; (iv) பாயு (Anus): கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் (v) உபஸ்தம் (Generative Organs): இனப்பெருக்கம் மற்றும் இன்பம் அனுபவித்தல் ஆகியவை ஆகும்} ||54||

பஞ்ச பிராணன் எனப்படும் ஐந்து உயிர் மூச்சுகள் உள்ளன; அந்த ஐந்து உயிர் மூச்சுக்களை பிராணன், அபானன், வியானன், சமானன் மற்றும் உதானன் என்று கூறுவார்கள்; அவை ஒவ்வொன்றும் உடலில் தனித்துவமான செயல்பாட்டை கொண்டுள்ளன; இந்த ஐந்து மூச்சுகளும்* மூச்சு விடும் உயிரினங்கள் அனைத்திலும் காணப்படுகின்றன; மேலும், இவை உயிரினங்களைச் செயலில் ஈடுபடத் தூண்டுகின்றன
{*ஐந்து உயிர் மூச்சுக்கள் என்பவற்றின் செயல்பாடுகள் மூச்சு உள்ளிழுத்தல், வெளியிடுதல், ஏப்பம் விடுதல், வாயு வெளியேற்றுதல், கொட்டாவி விடுதல் போன்றவை ஆகும்} ||56||

நாம் காணும் அந்த தூல உடலைப் போலவே, நமக்கு ஒரு சூக்கும உடலும்* உள்ளது; அதில் அந்த ஐந்து வகை மூச்சுகளும், செயல் உறுப்புகளும், அறிவு உறுப்புகளும் அடங்கியுள்ளன; ஆன்மீக ஞானத்தை ஒருவன் முழுமையாக பெறும் வரை, ஒவ்வொரு பிறவியிலும் உலகத்தில் சஞ்சரித்து வருவது அந்த சூக்கும உடலே ஆகும்
{*சூக்கும உடல் (Astral Body) என்பது தூல உடலுக்குள் (Physical Body) இருக்கும் அழியாத நுண் உடலாகும். இது பஞ்ச ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், பிராணன்கள் மற்றும் மனதை உள்ளடக்கிய 16 நுண் கூறுகளைக் கொண்டது} ||57||

அந்த நிலையில் உள்ள மூன்றாவது உடலான கரண உடல் (Causal body), அறியாமையினால் மூடப்பட்டுள்ளது; ஆயினும், அதுவே ஆனந்தமய கோசத்தின்* இருப்பிடமாகத் திகழ்கிறது; அதே வேளையில் சூக்கும உடல் என்பது முறையே பிராணமய கோசம்#, மனோமய கோசம்# மற்றும் விஞ்ஞானமய கோசம்# ஆகியவற்றுடன் தொடர்புடையதாக உள்ளது.
{*ஆனந்தமய கோசம் (Bliss Body) என்பது நம் உடலில் அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய என்ற பஞ்ச கோசங்களில் ஐந்தாவது அடுக்கு ஆகும்.
#இவை மனம், மூச்சு, அறிவு ஆகியவற்றுடன் தொடர்புடைய உடல் உறைகள் என அழைக்கப்படுகின்றன; கோசம் என்றால் உறைகள் என்பது பொருள்} ||58||

கைகள், கால்கள் போன்ற ஐந்து செயல் உறுப்புகளும், ஐந்து வகை மூச்சுகளுடன் இணைந்து பிராணமய கோசத்துடன் (மூச்சு உறையுடன்) தொடர்புடையவையாகத் திகழ்கின்றன; மேலும், இவை உயிரினங்களைச் செயலில் ஈடுபடத் தூண்டுகின்றன ||59||

கண்கள், மூக்கு போன்ற ஐந்து அறிவு உறுப்புகளும் மனதுடன் இணைந்து, மனோமய கோசத்துடன் (மன உறையுடன்) தொடர்புடையவையாக திகழ்கின்றன; முடிவெடுக்கும் திறன் கொண்ட அதே ஐந்து அறிவு உறுப்புகளும், புத்தியுடன் இணைந்து, விஞ்ஞானமய கோசத்துடன் (அறிவு உறையுடன்) தொடர்புடையவையாகத் திகழ்கின்றன ||60||

நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து முதன்மைப் பூதங்கள் ஒவ்வொன்றும் இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டு {1/2 or 50%} பின்னர் அந்த ஒவ்வொரு பாதியும் மீண்டும் நான்கு சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டால் {1/4 + 1/4 + 1/4 + 1/4 or 12.5%} அதன் விளைவாக என்ன நிகழ்கிறது என்பதை கவனிக்கவும்||61||

மேலுள்ள ஐந்து பூதங்களில் ஒவ்வொன்றிலும் விடுபட்டுள்ள பகுதிகள் அனைத்தும் ஒன்றிணையும்போது, அந்த ஐந்து பூதங்களும் முழுமை பெறுகின்றன [50% + 12.5% + 12.5% + 12.5% + 12.5% = 100%]; அவை அனைத்தும் இணைந்து தூல உடலை (gross physical body) உருவாக்குகின்றன’ ||62||

உடல் முடி, தோல், தசை, நரம்புகள் மற்றும் எலும்புகள் ஆகிய ஐந்தும் ஐம்பூதங்களின் ஒன்றான பூமியின் நிலக் கூறிலிருந்து* (earth element) தோன்றுகின்றன; உமிழ்நீர், இரத்தம், வியர்வை, சிறுநீர் மற்றும் இனப் பெருக்கத் திரவங்கள் ஆகிய ஐந்தும், பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீர் கூறிலிருந்து (water element) தோன்றுகின்றன.
{*அடிப்படைத் திடப் பொருட்களையும், அதன் தன்மையையும் குறிக்கும்} ||63||

பசி, தாகம், உடல் ஒளி (aura), உறக்கம் மற்றும் மந்த நிலை ஆகிய ஐந்தும் ஒளி அல்லது அக்னிக் கூறிலிருந்து (fire element) தோன்றுகின்றன; இனி, பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்றுக் கூறு எவ்வாறு மேலும் விரிவடைந்து செயல்படுகிறது என்பதை கவனமாகக் கேள் ||64||

இயக்கம் (நடை), ஓட்டம், தாண்டுதல், சுருங்குதல் மற்றும் விரிவடைதல் ஆகியவை காற்றுக் கூறின் (wind element) செயல்பாடுகளாகும்; இவை உடலில் அமைதியின்மையையும், விரைவான அனிச்சை* செயல்களையும் (quick reflexes) ஏற்படுத்துகின்றன.
{*அனிச்சைச் செயல் (Reflex) என்பது ஒருவரின் இச்சையோ, விருப்பமோ, சுய உணர்வோ இல்லாமல் நடைபெறும் செயல் ஆகும்; ஒருவரின் சிந்தனையோ அதன் அடிப்படையில் ஏற்படும் முடிவோ எதுவுமே அனிச்சைச் செயலுக்குத் தேவைப்படுவதில்லை; தம்மையறியாமலே ஒருவர் நிகழ்த்தும் செயலே அனிச்சைச் செயல் ஆகும்} ||65||

இவ்வாறு, தூல உடலை உருவாக்கும் இருபத்து நான்கு (24*) கூறுகளும் அன்னமய கோசத்துடன் (உணவு உறையுடன்) தொடர்புடையவையாக அமைகின்றன
{*ஐந்து கர்ம (செயல்) உறுப்புக்களான கைகள், கால்கள், பேச்சு, இனப்பெருக்கம், கழிவு நீக்கம்; ஐந்து ஞான(புலன்) உறுப்புகளான கண்கள், காதுகள், மூக்கு, தோல், நாக்கு; ஐந்து பூதங்களான நிலம், நீர், ஒளி/நெருப்பு, காற்று, ஆகாயம்; ஐந்து தன்மாத்திரைகளான காட்சி, நுகர்ச்சி, சுவை, தொடு உணர்வு, ஒலி; நான்கு அந்த கரணங்களான மனம், புத்தி, சித்தம் (உணர்வு), அகங்காரம் (தான் என்ற உணர்வு) போன்ற அனைத்தும் இணைந்து இருபத்து நான்கு கூறுகளாக அமைகின்றன} ||66||

ஒரு மன்னன், தான் விரும்பியவாறு மேடான இடங்களிலோ அல்லது பள்ளமான இடங்களிலோ அரண்மனைகளைக் கட்டி, அவற்றில் வாழ்ந்து கொண்டு மகிழ்சியில் திளைப்பதை போலவே, இந்தத் தூல உடலைத் தாங்கியுள்ள தனி ஆத்மாவும் (உயிரும்), தனக்கு ஞானம் கிட்டும் வரை மூன்று வகையான உடல்களுக்குள் (கோசங்களுக்குள்) வசித்து வருகிறது||67||

தூல உடலோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, தனது புலன் உறுப்புகளின் துணையோடு, உலகில் உள்ள பல்வேறு வகையான உணவுகள், நறுமணங்கள் போன்றவற்றை அந்த ஆத்மா உணர்ந்து கொள்கிறது; தானே இந்த உலகின் அதிபதி என்று கருதி ஆசை கொண்டு அலைகிறது; அதன் பிறகு, களைப்புற்ற நிலையில், அது ஓய்வெடுக்கவோ அல்லது உறங்கவோ முற்படுகிறது’ ||68||

‘தைஜஸ்’ என்பது கனவு நிலையின் அதி தேவதையின் பெயர் ஆகும்; பார்வை, ஒலி, மணம், சுவை மற்றும் தொடுதல் ஆகியவை மனிதனின் ஐந்து முக்கிய புலன் உணர்வுகள் (Senses) ஆகும். இவை நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை அறிய உதவுகின்றன; அவற்றின் செயல்களினால் மனதில் சேமிக்கப்பட்ட பதிவுகளின் காரணமாக, கனவு உலகில் மனதினால் படைக்கப்படும் உலகத்தை அனுபவிக்கும் நிலை ஏற்படுகின்றது ||69||

அனைத்து உயிரினங்களும் ஆழ்ந்த உறக்க நிலையை அனுபவிக்கின்றன, ‘பிரக்ஞை’ என்பது உரக்க நிலையின் அதி தேவதை; அது உறக்கத்தை அனுபவிக்க உதவும் உணர்வாகும்; மீண்டும் விழித்தெழும்போது முன்பைப் போலவே அந்த மனிதரின் வாழ்க்கை சுழற்சி தொடர்கிறது||70||

இந்த உடல்கள் ஒருவர் வசிக்கும் வீடுகளை போன்றது, அனைத்து புலன்களையும் ஒட்டு மொத்தமாக வைத்துள்ள அமைப்பாகும்; அந்த வீட்டில் உள்ள அகங்காரமே அனைவரையும் செயல்பட வைக்கின்றது; புலன்கள் வெறும் சாதனங்கள் மட்டுமே; அவற்றின் மூலம் உள்ளே உள்ள மூச்சுக் காற்றுகள் அந்த உடல் செய்யும் செயல்களுக்கு உதவியாக உள்ளன ||71||

ஒவ்வொரு புலன்களுக்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு; அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து முழு உடலையும் பயன்படுத்தியோ, அல்லது பேச்சை மட்டும் பயன்படுத்தியோ, அல்லது மனதை மட்டும் பயன்படுத்தியோ, மங்களகரமான அல்லது வேறு வகைகளிலான செயல்களை செய்ய வைக்கின்றன ||72||

ஒருவர் செய்யும் பல்வேறு புண்ணிய செயல்கள், சொர்க்கத்தில் மகிழ்சி நிலையில் இருப்பதை போன்று வாழ வழி வகுக்கின்றன; அவர்கள் செய்யும் இழிவான செயல்கள், பாவத்திற்கும், நரக வேதனைகளை அனுபவிக்கும் விதத்திலான வாழ்க்கை முறைக்கும் வழி வகுக்கின்றன; ஆனால் புண்ணியமும் பாவமும் கலந்த கலவையே உலகில் பிறப்பு எடுக்க வைக்கின்றன; புண்ணிய பாவங்களின் விளைவாக மூன்று விதங்களிலான பிறப்பு ஏற்படுகின்றன||73||

பிறப்பு எடுக்கும் ஜீவன்கள் முட்டைகள் {கோழிகள், பறவைகள் போன்ற பறவை இனங்கள்} மூலமோ, வியர்வை {நுண்ணுயிரிகள்} வழியாகவோ, மேல்நோக்கி வளரும் தாவரங்களாகவோ {செடி கொடிகள் மற்றும் மரங்கள்}, நஞ்சுக் கொடி* உதவியுடன் பிறக்கும் {மனிதர்கள், கால்நடைகள்} உயிரினங்களாக தோன்றுகின்றன; உயிரினங்கள் அனைத்தும் செய்யும் பாவ புண்ணியங்களின் விளைவுகளுக்கு ஏற்ப பிறப்பு எடுக்கின்றன**.
{*நஞ்சுக் கொடி (Placenta) என்பது கர்ப்ப காலத்தில் கருப்பையில் உருவாகும் ஒரு தற்காலிக உறுப்பு; இது தாய்க்கும் வளரும் குழந்தைக்கும் இடையில் தொப்புள்கொடி மூலம் இணைப்பை ஏற்படுத்தி, ஆக்ஸிஜன், ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது; மேலும், கழிவுப் பொருட்களை நீக்கி, ஹார்மோன்களை உற்பத்தி செய்து, குழந்தையைப் பாதுகாக்கும் மிக முக்கியப் பங்காற்றுகிறது;
**இங்கு ‘த்விஜ்’ என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது இருமுறை பிறப்பு எடுப்பவர்கள் என்பது அர்த்தம்; முதலாவது பிறப்பு தாயின் கருப்பையிலிருந்து வெளிவந்து வளரும் நிலை; பிறப்பு பூணூல் சடங்கு நடைபெற்று அதன் மூலம் தீட்ஷை பெற்று அதி தேவதையை உணரும்போது இரண்டாம் பிறப்பை எடுக்கின்றார்கள் என்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன; இந்த இரண்டையும் தவிர மூன்றாம் பிறப்பும் உள்ளதாக கூறுவார்கள்; அது என்ன எனில் வேத யாகங்களின் குழுவிற்கு தலைவராக நியமிக்கப்படும் ஒருவர் அந்த தகுதிக்கு தீட்ஷை எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவே மூன்றாவது பிறப்பு என்பதாகும்} ||74||

நமது கடந்த கால கர்ம வினைகளின் அடிப்படையில், ஒன்றன் பின் ஒன்றாகப் பத்து மில்லியன் முறை பிறவிக்கு மேல் பிறவி எடுத்து வலம் வந்தாலும், கர்மாக்களின் விளைவுகளைக் கடந்து செல்லாமல் ஞான நிலையை ஒருவரால் எப்படி எட்ட முடியும்? ||75||

இவ்வாறு படைப்பு முடிவில்லாமல் ஜனன-மரண சுயற்சியில் தொடர்கிறது; இந்த உண்மை பல்வேறு சாஸ்திரங்களிலும் வேதங்களிலும் பலவிதமாகக் கூறப்பட்டுள்ள உள்ளது; ஞான நிலை (உண்மை அறிவை) அடையும் வரை, கர்ம வினைகளின் விளைவுகள் நம்மைத் தொடர்ந்து கொண்டே இருக்கும். இது பிறவி சுழற்சியையே ஏற்படுத்தி, சுக துக்கங்களை அனுபவிக்கச் செய்யும் ||76||

அப்படிப்பட்ட நிலைகளை தவிர்க்க வேண்டும் என்றால் ஆணவத்தை அகற்றி அடக்கம், பணிவு போன்ற நற் பண்புகளை வாழ்க்கையின் ஒரு அங்கமாக வளர்த்துக் கொண்டு, ஞான நிலையில் உள்ள குரு ஒருவருடைய வழிகாட்டுதலை நாடிச் சென்று, அவர் அருளினால் ஆத்ம ஞானம் பெற முயற்சி செய்ய வேண்டும்’ ||77||

பலன்களை எதிர்பார்க்காமல், எவன் ஒருவன், தர்ம* வழியில் நடந்து கொண்டு, தனது கடமைகளை செய்தபடி இருந்து கொண்டிருப்பானோ, அவனால் மட்டுமே சத்குருவின் அருளால் தெய்வ ஈடுபாடு ஏற்படுகின்றது; அதன் பின்னர் அவன் தேடும் தெய்வத்தை தரிசிக்கவும் முடிகிறது.
{*இங்கு கூறப்பட்டு உள்ள தர்மம் என்ற சொல் பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கும் மாணவர்கள், இல்லறவாசிகள், அலைந்து திரியும் துறவிகள் மற்றும் ஞான நிலையை அடைந்தவர்கள் என்று நான்கு பிரிவுகளாக உள்ளது; ஒவ்வொரு பிரிவினரும் சுமார் இருபத்தி ஐந்து ஆண்டு காலம் அந்த நிலையில் நற் பண்புகளை கடை பிடித்தவர்களாக இருக்க வேண்டும்; ஆசிரியர்கள், போர் வீரர்கள், வணிகர்கள் மற்றும் மேற் கூறிய மூன்று பிரிவினர்கள் கடைபிடிக்க வேண்டிய நற்பண்புகளின் தன்மைகளிலும் வேறுபாடு உள்ளது} ||78||

நிர்வாண நிலையை அடைய விரும்புபவர்கள் தமது குருவை, தாம் தேடும் தெய்வத்திற்கு இணையாக கருதி அவரது அறிவுறுத்தல்களை சத்திய உண்மையுடன் பின்பற்றி நடந்து கொண்டிருக்க வேண்டும்; அவர்களுக்கு உண்மையான சீடர்களாக இருந்து கொண்டு, குறைவற்ற சேவையைச் செய்து கொண்டும், அவரது அனைத்து அறிவுரைகளையும் போதனைகளையும் கவனமாகக் கேட்ட வண்ணமும் இருக்க வேண்டும்||79||

ஞான நிலை பெற்ற குருக்களின் அருளால்தான்,அவருடைய போதனைகள் அவருடைய சீடர்களின் மனதில் உள்ளே அழியாத நிலையில் பதிவாகின்றன , குருவின் அத்தகைய அருள் கிடைக்கவில்லை என்றால் அந்த சீடர் தமது உற்சாகத்தை இழக்கிறார்; அவரை வருத்தம் சூழ்ந்து கொள்கிறது; அவரது அனைத்து முயற்சிகளும் பயனற்றதாகி விடுகின்றன; ஞானமோ, அறிவாற்றலோ பெறத் தேவையான ஆன்மீக அறிவாற்றல் அவர்களுக்குள் மலர்வதில்லை’||80||

ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான் தொடர்ந்தார் ‘ஓ மன்னனே, உமது வாழ்க்கையின் நிலைக்கும் தகுதிக்கும் மாறாக, வாழ்க்கையில் அதிக பற்று வைத்துக் கொள்ளாமல், உன் கடமைகளை செய்தவாறு இருந்தாய்; அதனால் நீ எனது அருளை பெற்று விட்டாய். உனது பக்தியை பாராட்டுகின்றேன் ||81||

நீ உன்னை மோகத்திலிருந்து விலகிக் கொண்டு தவறான கண்ணோட்டங்களை விலக்கி வைத்துக் கொண்டு உன்னை தூய்மைப்படுத்திக் கொண்டாய்; துறவு நிலையில் நீ உறுதியாக இருக்கின்றாய்; இப்போது மிக விரைவில் நீ ஆவலுடன் தேடும் ஞானம் கிடைக்க உள்ளதைக் காண்பாய்||82||

நீ முன்பே அறிந்திருந்த அல்லது படித்திருந்த இந்த ஆத்ம ஞானம் என்பது இரு வகைகளிலானது; முதலாவது பரோக்ஷா*என்று அழைக்கப்படுகிறது, இது வெளிப்படையாக தெரியாத தெய்வீகத்தைப் பற்றிய சாஸ்திர ஞானம் பெறுதல் ஆகும்; இரண்டாவது அபரோக்ஷா** எனப்படுவது; இது தெய்வீகத்தை அனுபவபூர்வமாக உணரும் நிலை ஆகும்
{*(i) பரோக்ஷ ஞானம் (Pareesha Jnana) என்பது மறைமுக அறிவு ஆகும்; ஒரு குருவின் மூலமோ அல்லது சாஸ்திரங்கள் மூலமோ பிரம்மம் அல்லது ஆத்மாவைப் பற்றி தெரிந்து கொண்டாலும், அது சொந்த அனுபவமாக (Direct Experience) மாறாமல், அறிவாக மட்டுமே இருக்கும் நிலை இதுவாகும் (ii) **அபரோக்ஷ ஞானம் என்பது பிரம்மத்தை (உண்மைப் பொருளை) வெறும் தத்துவமாக அறியாமல், நான் பிரம்மம் (அஹம் பிரம்மாஸ்மி) என நேரிடையாக, சுயமாக உணர்ந்து அனுபவிக்கும் நேரடி ஞானம் ஆகும்} ||83||

ஒருவர் குருவின் போதனைகளை கவனச் சிதறல் இன்றி கேட்க வேண்டும்; தாம் கேட்டவற்றின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் சந்தேகமின்றிப் புரிந்து கொள்ள வேண்டும்; இவ்வாறு வேத நூல்களில் கூறப்பட்டு உள்ளவற்றை மனதில் முழுமையாக ஏற்றிக் கொண்ட பிறகு, அடுத்து அறிந்து கொள்ள வேண்டியது நமது கண்களால் நேரடியாக பார்க்க முடியாமல் உள்ள தெய்வீகத்தைப் பற்றிய அறிவாகும் ||84||

கண்களால் காண முடியாமல் உள்ள தெய்வம் ஒன்றா அல்லது பலவா என்ற சந்தேகங்கள் அனைத்தையும் முழுமையாக விலக்கிக் கொள்ளும் வழி முறையே சீடன் தனது வழிகாட்டியான குருவிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் போதனைகளை கவனம் சிதறாமல் கேட்டு மனதில் பதிய வைத்துக் கொள்ளும் நிலை ஆகும்||85||

பரபிரும்மன் என்ற ஒரு தெய்வம் கிடையாது என்ற வாதத்தை எவராவது எடுத்து வைத்தால், அந்த வாதங்களை தனது சிந்திக்கும் திறனைக் கொண்டு ஆராயும்போது அந்த வாதம் தவறானது என்பதை அறிந்து கொள்ள முடியும்; அதையும் நல்ல குருவின் வழிகாட்டுதலாலும், அதன் விளைவாக அந்த சீடருக்கு ஏற்படும் மன உறுதியாலும் தைரியமாக பரபிரும்மன் என்ற ஒரு சாராம்சம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்||86||

தனக்கு கிடைத்த போதனைகளை ஆழ்ந்து சிந்திக்கும் போது, துவக்கத்தில் தமக்கு தெய்வத்தின் மீது இருந்த தவறான எண்ணங்களை முற்றிலும் அழித்துக் கொண்டு விட முடியும்; ஆனால் அந்த நிலை எப்படி ஏற்படும் என்றால், அவன் தனது மனதை அசைக்க முடியாத நம்பிக்கையுடனும், விழிப்பு உணர்வு நிலையில் வைத்துக் கொண்டும், கவனத்துடனும் இருந்து கொண்டு தாம் எட்ட வேண்டிய நிலையை அடைய வேண்டும் என்ற வைராக்கியத்தையும் கொண்டிருந்தால் மட்டுமே முடியும் ||87||

நான் பல்வேறு குறைகளைக் கொண்ட ஒரு உடலுள்ள ஆத்மா மட்டுமே; ஆனால் தெய்வமோ பரிசுத்தமானவர், எந்த குறை நிறைகளும் இல்லாதவர்; அப்படி இருக்கையில் என்னால் அந்த தெய்வத்துடன் எப்படி ஐக்கியமாக முடியும் போன்ற தவறான உணர்வையும், கற்பனையில் எழும் எண்ணங்களையும் கடந்து சென்று விட்டால் நிச்சயமாக நாம் தேடும் தெய்வத்துடன் ஐக்கியம் ஆகி விட முடியும்||88||

விழிப்பு, உறக்கம் அல்லது கனவு நிலை என்பவை எதுவாக இருந்தாலும் ஒவ்வொருவரிடமும் சத்-சித்-ஆனந்தம் என்பவை எப்போதும் போலவேதான் இருக்கும்; ஆனால் அனுபவம் இல்லாததாலும், சாஸ்திரங்களை சரிவர புரிந்து கொள்ளாமல் இருப்பதினாலும், தன்னால் தெய்வத்தை பார்க்க முடியாமலும் இருப்பதினால்தான், தனக்கும் தான் தேடி அலையும் தெய்வத்திற்கும் இடையில் ஒரு பெரும் பிளவை தானே ஏற்படுத்திக் கொள்கின்றான்||89||

ஆத்மா எப்போதும் போலவே அது இருக்க வேண்டிய இடத்தில்தான் உள்ளது; உலகப் பற்றுக்களோடு நாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு கனவு நிலையைப் போன்றதுதான்; நாம் நேரடியாக தொடர்ப்பு கொண்டுள்ளோமோ இல்லையோ, அழிவற்ற அந்த பரபிரும்மன் அப்படியேதான் இருக்கின்றார்; ஆனால் நம்மால் அந்த தெய்வத்தை புரிந்து கொள்ளும்வரை, உலக பந்தங்களுடன் நம்மை இணைத்துக் கொண்டு இருக்கும்வரை நாமும், அந்த தெய்வமும் வெவேறானவர்கள் என்ற இருமை நம்மை விட்டு விலகுவதில்லை ||90||

ஒருவன் தனது குரு போதித்தவற்றை கவனமாக கேட்டு, அவற்றை ஆழமாக சிந்திக்கும் போது நாம், நமது, என்னுடைய போன்ற ஆணவத்தை நாம் துறந்து விட்டு , நமக்குள்ளே இருக்கும் உடல் மற்றும் மன வரம்புகளையும் கடந்து, அதாவது அவற்றின் தாக்கத்தினால் பாதிக்கப்படாமல் சென்று விட்டால் தனது ஆத்மா தெய்வத்துடன் ஒன்றிணைய முடியும் என்கின்ற நம்பிக்கை அவனுக்குள் துளிர் விடத் துவங்கும் ||91||

நமது மனம் அறியாமை எனும் திரையினால் மூடப்பட்டு இருக்கும்போது நாம் தெய்வத்தை நேரடியாக பார்த்தால் மட்டுமே அது உண்மை என நம்ப முடியும் என்று நினைப்போம்; ஆனால் போதனைகளை ஆழமாக சிந்தனை செய்து பார்த்த பின் தெய்வத்துடன் ஒன்றிணைவது சாத்தியமே என்ற எண்ணம் மேலோங்கும் போது அறியாமையினால் மூடப்பட்டு உள்ள திரை தானாகவே விலகி விடும்||92||

சீரான தியானத்தில் இருந்தவாறு , மீண்டும் மீண்டும் தமக்கு கிடைத்த போதனைகளை ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது, நமது சந்தேகங்களுக்கான விடைகள் அனைத்தும் நமக்கே கிடைக்கும்; நமது எண்ணங்களை மூடிக் கொண்டு உள்ள அறியாமை எனும் திரை கிழித்து எறியப்படும்; தியான நிலையை தொடர்ந்து கொண்டிருக்கும்போது தெய்வத்துடன் நாமும் ஒன்றிணைய முடியும் எனும் நம்பிக்கை துளிர் விடத் துவங்கும்||93||

நம் மனதில் அலை பாய்ந்து கொண்டிருக்கும் அனைத்து எண்ணங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு, தெய்வ நினைவை மட்டுமே மனதில் ஏந்திக் கொண்டு தனிமையில் அமர்ந்திருந்தவாறு தியானித்துக் கொண்டு இருக்க வேண்டும்; இவ்வாறான நுட்பமான தியானப் பயிற்சியில் தினமும் ஈடுபட்டுக் கொண்டிருந்தால், நம்மால் தேடப்படும் அந்த தெய்வத்தை முழுமையாக காண முடியும் என்ற மன மாற்றம் நமக்குள் ஆழமாக பதியத் துவங்கும்||94||

ஒரு தேனீயால் அதன் கூட்டிற்குள் கொண்டு வரப்பட்ட புழுவை இதற்கு ஆதாரமாக கூறலாம்; அந்த தேனீயை போல தானும் மாறி விட வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் தினமும் அந்த புழு காத்துக் கிடக்கும்போது, மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருக்கும் அந்த புழுவும் ஒருநாள் தேனீயாக மாறி விடுகின்றது; உண்மையான தியான நிலை தொடரும்போது நமக்கும் நாம் தேடுவது கிடைக்கும் என்பதினால்தான் அப்படிப்பட்ட ஒரே எண்ணத்திலான தியான முறை* அங்கீகரிக்கப்பட்டு உள்ளது
{*தினமும் காத்துக் கிடைக்கும் புழுவின் நிலை} ||95||

உடலுள்ள ஆத்மா தெய்வத்திடம் இருந்து வேறுபட்டதல்ல என்பதை முழுமையாக உணர வேண்டும்; அந்த நிலையில் ஒருவன் தெய்வமும் தானும் ஒன்றே என்ற எண்ணத்தை வைத்துக் கொண்டு, தொடர்ந்து தியானித்து வருகையில், அவன் தேடும் தெய்வீகத்துடன் இணையும் நிலையில் சென்று விடுவான்; அந்த நிலையை எட்டியவுடன் அவன் வியக்கிறான் ‘இருப்பதெல்லாம் தெய்வம் என்பதைத் தாண்டி வேறொன்றுமில்லை எனும்போது, யாரால் யாருக்கு பயன்? ||96||

அந்த நிலையை எட்டிய பின்னர் எதற்காக ஒருவன் இன்னமும் தொடர்ந்து தியானிக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம்; ஒருவன் தானே அந்த பூரணத்துவத்தை உணர்ச்சி பூர்வமாக அனுபவிக்கும்போது, தான் எதற்காக பிறப்பு எடுத்தானோ அதை அடைந்து விட்டோம் என்று அறிந்து கொள்ளும்போது , அந்த கேள்விக்கான விடை தாமாகவே கிடைத்து விடுகிறது||97||

அறிஞர்கள் மாயையினால் எழும் அறியாமையை பலவாறாக சித்தரிக்கிறார்கள்; அதில் ஒன்று உண்மையைத் தவறாக உணரும் நிலை ஆகும்; உண்மை தெரியும் வரை மங்கலான ஒளியில் ஒரு கயிற்றை பாம்பாக நம்புகிறான் , சூரியன் அதன் கதிர்களும் வெவேறானவை என்று நினைக்கின்றான் ||98||

அறியாமையை முதலில் இருந்தே சரியான முறையில் கையாளாவிடில், இரவும் பகலும் அது நமது செயல் திறனை பாதித்த வண்ணமே இருக்கும்; அதன் விளைவால் ஏற்படும் விருப்பு வெறுப்பு, அன்பு அல்லது பகைமை ஆகியவற்றால் நாம் சூழப்பட்டு உள்ள நிலையில், ஒருவர் விரும்பும் தெய்வத்துடன் ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் தோன்றுவது இல்லை ||99||

அளவுக்கு அதிகமான பற்று அல்லது வெறுப்பை வளர்த்துக் கொண்டு ஒருவன் செயல்படுகையில் அதன் தாக்கம் அவனது உடல், மனம் அல்லது பேச்சு மூலம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்; இதன் விளைவு, மீண்டும், மீண்டும் எதோ ஒரு வகையிலான உருவில் பிறப்பு எடுக்க வைத்து பிறப்பு-மரண சுழற்சியில் இருந்து வெளிவர இயலாத நிலையில் அவனை வைத்து விடுகின்றது ||100||

அனைத்து கோள்களும் நேர் கோட்டில் வரும்போது சிறிய அளவிலான கால கட்டத்தில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது; ஆனால் கோள்கள் நேர் கோட்டில் இருந்து விலகி விடும்போது மீண்டும் சூரியன் தெரிகிறான்; அது போலவே ஒருவன் அறிவாற்றலை பெற்று ஞான நிலை பாதையில் செல்லத் துவங்கும்போது அதுவரை அவனது உண்மையான எண்ணங்களை மறைத்துக் கொண்டிருந்த அறியாமை எனும் திரையும் விலக்கப்பட்டு விடுகின்றது ||101||

அறியாமையை எப்படி விலக்கிக் கொள்ள முடியும், அது சாத்தியமா, தெய்வத்துடனான உணர்வு பூர்வமான ஒருமை நிலையை அடைய முடியுமா என்றெல்லாம் சந்தேகம் கொள்ளத் தேவை இல்லை; போதனைகளை கவனமாகக் கேட்டு, அவற்றின் சாரங்களை பல்வேறு வகைகளிலும் சிந்தித்துப் பார்த்து, அவற்றின் அடிப்படையில் உண்மையை புரிந்து கொள்ளும்போது ஒருவன் விரும்பும் பேரின்ப நிலை அவனுக்கு கிடைக்கும் ||102||

ஞானிகளிடம் இருந்து பெறும் பல போதனைகள் மேலோட்டமாக பார்க்கும்போது தெளிவற்ற, வெளிப்படையற்ற நிலையில் இருக்கும்; ஆனால் அதன் அடிப்படையில் தியானம் செய்யும்போது அவற்றின் சாரம் தெளிவாகத் துவங்கும்; அதன் பிறகு மெல்ல, மெல்ல தியான நிலை தீவிரம் அடையும்போது அனைத்தும் சாராம்சங்களும் தெளிவாக விளங்கத் துவங்கும்; அத்தகைய உறுதியுடனும் அசைக்க முடியாத நம்பிக்கையோடும் அதே பாதையில் சென்று கொண்டு இருக்க வேண்டும் |103||

மன்னா, நீ உண்மையிலேயே பாக்கியசாலி; உனது மனமும் இதயமும் துறவு நிலை வேண்டும் என்பதில் முழு மனதோடு இணைந்துள்ளது; இந்த நிலைதான் ஆன்மீக போதனையை பெறுவதற்கான முன் நிபந்தனையாகும்; நீ முக்தி நிலையின் அனைத்தையும் அறிந்து கொள்ளும் தகுதியை பெற்றுள்ளாய்’ ||104||

ஸ்ரீமத் தத்தர் தொடர்ந்தார் ‘நீ செய்துள்ள அனைத்து செயல்களையும் முழுமையாக எனக்கே அர்ப்பணித்துள்ளாய்; உனது உள் இதய ஆத்மா மூலம் உனது அனைத்து செயல்பாடுகளையும் தூய்மைப்படுத்திக் கொண்டு உள்ளாய்; உனக்கு என் மீது அசைக்க முடியாத பக்தியும் உள்ளது; இது உனக்கு பெரும் ஆன்மீக பலத்தை தருகின்றது ||105||

இப்போது நீ வேத, புராண நூல்களின் மகத்தான சாராம்சங்களை எளிதாகவும் தடையின்றியும் மனதில் ஏற்றி வைத்துக் கொண்டு தியானிக்க முடியும்; அதன் பலனாக ஆத்ம ஞானம் அடைந்து தெய்வத்துடன் ஒன்றிணைய முடியும்; அதன் பின் உனக்கு சமாதி நிலை விரைவில் கைகூடும் ||106||

முதலில், இப்போது உனக்கு கூறப்பட்டவைகளின் அறிவைக் கொண்டு உனது அடித்தளத்தை உறுதி படுத்திக் கொள்; அதன் பிறகு உன்னுடைய அலைபாயும் மனதிற்கு அடி பணியாமல் இரு; இருள் சூழ்ந்த காட்டைப் போல உன்னை வேறு விதமாகத் தூண்டும் சூட்சும உணர்வுகளை ஒதுக்கி விடு; நீ தேடும் ஒருமை நிலையை* அறிய உன்னைத் தயார்படுத்திக் கொள்.
{*தெய்வத்துடன் ஒன்றிணையும் நிலை} ||107||

இவை அனைத்தின் விளைவாக நீ ஆன்மீகத் தெளிவு அல்லது உயரிய அறிவை பெற்று அன்றாட வாழ்க்கையில் அவற்றை கடைப் பிடித்து வாழும் நிலையாக இருக்க வேண்டும்; அதுவரை உனக்கு இந்தப் பிறவியை அளித்த விதியை தாங்கிக் கொள்ள வேண்டும்; அதன் பின் உடலோடு உள்ள உன் வடிவத்தைக் களைந்த பிறகு முக்தி கிடைக்கும்; அப்போது நீ உணர்வு பூர்வமாக என்னோடு இணைந்து விடுவாய்||108||

மன்னா , இப்போது உரிய கவனத்துடனும் மனசாட்சியுடனும், வேத புராண நூல்களின் நெறிமுறைகளை தெளிவாக அறிந்து கொள்; அவை மட்டுமே அந்த தெய்வீகத்தை அடைய உதவும்; அதன் மூலம் நீ விரும்பிய இலக்கை எளிதாக எட்டி விடலாம்||109||

II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் பன்னிரண்டாம் (12) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 109
முதலாவது அத்தியாயம் முதல் பன்னிரண்டாம் (12) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
109+1190=1299

*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}

……இதோடு  பாகம் -4, அத்தியாயம் -12 முடிவடைந்தது
அத்தியாயம் -13 தொடர்கின்றது