ரகுவம்சம்-12
– சாந்திப்பிரியா – 

ராமர், லஷ்மணர் மற்றும் சீதையின் மறைவும் ரகுவம்சத்தினர் ஆட்சி தொடர்வும்

இப்படியாக பல்வேறு விதங்களிலும் இடையூறுகள் ஏற்பட்டு வந்தாலும் திறமையுடன் தனது வம்சத்தினர் ஆட்சியை தொடர்ந்து கொண்டு இருந்த ராமருடைய ராஜ்ய எல்லைகளும் விரிவடைந்து கொண்டே சென்றன. ஒரு நாள் யாத்திரையில் இருந்த ராமனை வழியிலே அகஸ்திய முனிவர் சந்தித்தார். அவருடைய ஆலோசனையின் பேரில் தனது ராஜ்ஜியம் ஸ்திரமாக அமைந்திருக்க ராமரும் அஸ்வமேத யாகம் ஒன்றை செய்ய முடிவு செய்தார். பல திசைகளில் இருந்தும் மன்னர்கள் பொன்னும் பொருளும் அனுப்பி யாகத்துக்கு பெருமை சூட்ட,  யாக முறைப்படி தனது ராஜ்ய குதிரையை திக் விஜயம் செய்ய அனுப்பி வைத்தார். அந்த யாக  குதிரையை வால்மீகி  ஆஸ்ரமத்தில் இருந்த லவ குசர்கள் அடக்கி வைத்துக் கொண்டார்கள்.

அஸ்வமேத யாகத்தைச் செய்யும் மன்னர்கள்  தமது சார்பிலே ஒரு குதிரையைப் பெரும் படையோடு அண்டை நாடுகளுக்கு அனுப்புவார்கள். மன்னனது படையினருடன் போரிட பலமில்லாத அரசர்கள் அந்த யாகக் குதிரையைத் தமது நாட்டின் வழியே இடையூறு இன்றி செல்ல  அனுமதிப்பதின் மூலம் அந்த குதிரையை அனுப்பிய மன்னருக்கு தாம் தமது ராஜ்யத்தோடு கட்டுப்படுவதாக  கூறப்படும் செய்தியாகும்.  அப்படி   அடிபணிய விரும்பாத மன்னர்கள் அந்த யாகக் குதிரையைப் பிடித்துக் கட்டி  குதிரையை அனுப்பிய அரசப் படையினருடன்  போர் புரிந்து தோற்பார்கள் அல்லது ஜெயித்து அவர்களை அடித்து விரட்டுவார்கள். அதன் மூலம் தாமும் தமது ராஜ்யமும் அஸ்வமேத யாகத்தை செய்த அரசர்களுக்கு அடி பணிய மாட்டோம் என்ற செய்தியை அளிப்பார்கள்.  இப்படிப்பட்ட நிலையில்தான் இராமன் அனுப்பிய யாகக் குதிரையை ராமரது  மகன்களான  லவனும், குசனும்  பிடித்துக் கட்டியதுடன், அதனுடன் வந்த படையினருடன் மோதி அவர்களைத் தோற்கடித்தனர். அதைக் கண்டு வியந்து போன ராமர் வால்மீகி முனிவரை அழைத்து அவர்களை குறித்து விசாரிக்க முனிவரோ அவர்கள் ராமனது சபையில் வந்து இராமாயண கானத்தைப் பாடிய பின்னர் அவர்களைக் குறித்த விவரத்தைக் கூறுவதாக  செய்தி அனுப்பினார்.

ராமரை சந்தித்தப் பின் வனத்துக்கு வந்த வால்மீகி முனிவரும் லவ குசர்களை அந்த யாகத்துக்கு சென்று ராமாயணக் காவியத்தைப் பாடுமாறு  அனுப்பி வைத்தார். லவ குசர்கள் யார் என்பதை அறிந்திடாத ராமரும் சபைக்கு வந்து அற்புதமான ராம காவியத்தைப் பாடிய லவ குசர்களை அதைக் கற்பித்தது யார் என்பதைக் கேட்டறிந்த பின்னர் வால்மீகி முனிவர் ஆஸ்ரமத்துக்கு சென்று அவரை வணங்கித் துதித்து அந்த சிறுவர்களை சபைக்கு அனுப்பி இராமாயண காவியத்தை  பாட ஏற்பாடு செய்ததற்கு நன்றி கூறிய பின் அந்த சிறுவர்கள் யார் என்பதைக் கேட்க அவர்களே  ராமருக்கும் சீதைக்கும் பிறந்த  இரட்டை மகன்களான லவ குசர்  என்பது  வால்மீகி முனிவர் மூலம் ராமருக்கு தெரிய வந்தது.  அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த ராமரும் அந்த முனிவரிடம் தனது மனைவி சீதையை அழைத்து வந்து தம்மிடம் சேர்க்குமாறு வேண்டினார்.  முனிவரின் ஆலோசனையின் பேரில் தனது மனைவி சீதையை யாக முடிவில் அழைத்து வந்து அனைவர் முன் நிலையிலும் கற்புக்கரசி என நிரூபித்தப் பின்னர் அவளை மக்களறிய  மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அவருக்கு உறுதி கூறி விட்டு யாகத்தை தொடர்ந்தார். ஆனால் யாகம் நடைபெறுவதற்கு அதை செய்பவருடைய  மனைவியும் உடனிருக்க வேண்டும் என்பது விதியாக இருந்ததினால், அந்த யாகசாலையில் சீதையின் ஒரு பதுமையை வைத்திருந்து, அதேயே தனது மனைவியாகக் கருதி யாகத்தை ராமன் செய்தார்.

யாகம் முடியும் தருவாயில் இருந்தபோது மனைவி சகிதம் ஒரு கணவர் செய்ய வேண்டிய சடங்கை செய்ய  வேண்டிய தருமணம் வந்தபோது வால்மீகி முனிவரும் சீதையை அழைத்து வந்தார். அந்த நிலையில் அனைவர் முன்னிலையிலும் முனிவர் சீதையைப் பார்த்துக் கூறினார் ‘மகளே உன்னுடைய கற்பையும், நீ யார் என்பதையும் நிரூபிக்க வேண்டிய தருமணம் வந்து விட்டது. முதலில் நீ ராவணனின் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டு பல காலம் இருந்திட்டாலும் ராமனை மட்டுமே நினைவில் கொண்டு வேறெந்த நினைவும் இல்லாத நிலையில் இருந்த கற்புக்கரசி என்பதை  அனைவர் முன்னிலையிலும் நிலை நாட்டு ‘ என்று கட்டளை இட்டார்.

அதைக் கேட்ட சீதையும்  அனைவர் முன்னிலையிலும் பெரும் தீ மூட்டச் சொல்லிய பின்னர் அனைவர்  முன்னிலையிலும் பூமா தேவியை நோக்கிக் வேண்டினாள்  ‘தாயே, நான் எந்த விதமான களங்கமும் இல்லாதவள்.  நான் களங்கமற்றவள், தூய்மையான  கற்புக்கரசி என்பது உண்மை என்றால் என்னை உன்னுள் அழைத்துக் கொண்டு விடு’ என்று கூறி விட்டு யாரும் எதிர்பாராத நிலையில் அப்படியே தீயில் குதிக்க, அந்த தீயின் அடியில் இருந்த பூமி  இரண்டாகப் பிளக்க, தீயோடு எந்த சலனமும் இன்றி சீதையும் பூமிக்குள் சென்று மறைந்து விட பூமி மூடிக் கொண்டது. அவளது வரவுக்காக பாதாளத்தில் காத்திருந்த பூமா தேவியும் அவளை தன்னுடன் இணைத்துக் கொண்டாள் .

ஷண நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்திட அதை சற்றும் எதிர்பாராத ராமரும் கற்புக்கரசியான தனது மனைவி சீதையை இழந்த கோபத்தில் ‘என் மனைவி சீதையை மீண்டும் என்னிடம் திருப்பிக் கொடுக்காவிடில் பூமாதேவியை அழித்திடுவேன்’ என ஆவேசத்துடன் கூறியவாறு தனது உறையில்  இருந்த வாளினை வெளியில் எடுக்க அங்கு தோன்றிய பிரும்ம தேவர் ராமரின் கோபத்தை அடக்கினார்.  ‘சீதை பூமியிலே மனித குலத்தில் அவதரித்ததின் காரண காரியமும் காலமும் முடிந்து விட்டதென்றும், அதனால்தான் அவர் முன்னிலையில் அவள் தன்னை பூமாதேவியுடன் இணைத்துக் கொண்டு விட்டாள் என்றும் அதனால் இனிமேலும் அது குறித்து வருந்துவதோ இல்லை அழுது புலம்புவதோ தவறு. ஆகவே அழுது புலம்புவதை விடுத்து யாகத்தில் பங்கேற்க வந்துள்ளவர்களுக்கு தக்க சன்மானம் கொடுத்து,  மரியாதை செலுத்தி அனுப்புவதே முறையாகும்’ என்று அறிவுறுத்த தன்  நிலையை அறிந்திட்ட ராமனும் வந்திருந்த அனைவருக்கும்  தக்க சன்மானங்களையும் வெகுமதியையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.

(சிறு விளக்கம் : –

இன்னொரு முக்கியமான செய்தியையும் இங்கு கூற வேண்டிய அவசியம் உள்ளது. மாய சீதா தேவி படைக்கப்பட்டு அனுப்பப்பட்டபோது அந்த மாய உருவினுள் சீதா தேவியின் சில உணர்வுகளை பிரதிபலிக்கும் உணர்வுகளையும் கொடுத்தே அனுப்ப வேண்டி இருந்தது. இல்லை என்றால் அந்த மாய உருவம் சீதா தேவி அல்ல என்பதை ராவணன் கண்டுபிடித்து விடுவான் என்பதினால் அப்படி செய்ய வேண்டிய நிலை இருந்தது. ராவண வதம் முடிந்து ராமபிரானிடம் சீதா தேவி வந்து சேரும் சில ஷணங்களுக்கு முன்பாகவே அசோகவனத்தில் இருந்த மாய உருவை உண்மையான சீதை தன்னுள் அடக்கிக் கொண்டு அங்கு அமர்ந்து கொண்டு விடுவதினால் ராமருடன் மீண்டும் ஒன்றிணைந்த சீதை உண்மையான சீதா தேவியாவார். அப்போது அது குறித்து ராமபிரான் உட்பட எவருக்குமே தெரியாது. இலங்கையில் இருந்து ராமருடன் அயோத்தியாவுக்கு வந்தது வேதவாதியான மாய உருவம் அல்ல. ஆனால் தனக்காக தன்னுள் இருந்து படைக்கப்பட்ட மாய உருவம் குறித்த உண்மையை பின் ஒரு சமயத்தில் மட்டுமே வெளி உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதினால்தான் அக்னி பிரவேச சம்பவத்தின்போது அக்னியில் இருந்து தனது மாய உருவுடன் சீதா தேவி வெளிவந்து , அந்த உண்மையை உலகிற்கு தெரியப்படுத்துகின்றாள். அதன் பின்னரே வேதவதி எனும் மாய உருவம் அங்கே மறைந்து விடுகின்றது எனக் கூறுவது சீதையின் உடலுக்குள் மீண்டும் அந்த மாய உருவம் ஐக்கியமாகி விடுகின்றது என்பதை உணர்த்தும் தத்துவம் ஆகும்.

அதை போலவேதான் அக்னிப்பிரவேசம் நடைபெறும் காட்சியும் ஆகும். ராவண வதம் முடிந்த உடனேயே சீதா தேவி அக்னி பிரவேசம் செய்யவில்லை. லவ-குசா எனும் மகன்கள் பிறந்த பிறகே சீதா அவதாரம் முடிய வேண்டிய கட்டம் வந்தபோதுதான் அக்னி பிரவேசம் மற்றும் சீதா தேவி பூமிக்குள் மறைந்து விடும் நிகழ்வுகள் நடை பெறுகின்றது. அந்தக் கதைகள் அனைத்தையும் விளக்கி எழுத ரகுவம்சத்தில் இடம் இல்லை, அவை அனைவருக்கும் தெரிந்த கதைகள், அனைவரும் அதை புரிந்து கொண்டு இருப்பார்கள் என்பதினால் அவற்றை மீண்டும் விளக்கமாக எழுதாமல் தவிர்த்து உள்ளேன்சாந்திப்பிரியா)

அதன் பின் சீதையின் பிரிவால் மன அமைதி இழந்த ராமர் தனது மாமனாகிய யதாசித்து என்பவரின் ஆலோசனையை நாடி அவர் கூறியபடி தனது ஆட்சியில் இருந்த சிந்து எனும் தேசத்தை  பரதனுக்குக் கொடுத்தார். ஆனால் சில காலம் ஆண்டதும்  பரதனோ அந்த நாட்டை தமது புதல்வர்களான தக்கன் மற்றும் புர்கலன் என்பவர்களுக்குக் கொடுத்து விட்டு ராஜ்ய பரிபாலனத்தில் இருந்து விலகிக் கொண்டார்.  அது போலவே லஷ்மணரும் தனது நாட்டை தனது புதல்வர்களான அங்கதன் மற்றும் சந்தரகேது என்பவர்களுக்கு கொடுத்து விட ராமரும் தனது ராஜ்யத்தை தனது புதல்வர்களிடம் ஒப்படைத்து விட்டார்.

இப்படியாக ராம லஷ்மணர் மற்றும் அவர்களது சகோதரர்களான பரதனும், சத்ருக்னனும் தமது ஆட்சிப் பொறுப்புக்களை தத்தம் மகன்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். சில காலம் கடந்ததும் ராமாவதாரம் முடிவுற வேண்டிய நிலை வந்தது.  அந்த நிலையில் ராமரைக் காண ஒருநாள் துர்வாச முனிவர் வந்தார். வந்தவர் தான் ராமனிடம் தனியாக  பேச வேண்டும் என்று கூறிவிட்டு உள்ளே  சென்று ராமாவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டிய தருமணம் குறித்து ராமருடன் பேசிக் கொண்டிருக்கையில் அதன் இடையில் உள்ளே சென்று அவர்கள் பேசியதைக் கேட்டுவிட்ட லஷ்மணர் மனம் தளர்ந்து போனார்.  தன்னை அழைக்காத நிலையில் தான் உள்ளே சென்று அவர்கள் உரையாடலைக் கேட்டதினால் ஏற்பட்ட பாவத்திற்காக  தாம் மனப்பூர்வமாக  அவர்களிடம் மன்னிப்புக் கேட்பதாக கூறிவிட்டு, இனி தனக்கும் வாழ்வு தேவை இல்லை என்பதை உணர்ந்து  கொண்ட பின் அங்கிருந்து நேராக சராயு நதிக்கரைக்குச்  சென்று யோக வழியை பயன்படுத்தி தன்  ஆத்மாவை உடலில் இருந்து விலக்கிக் கொண்டார்.

அதைக் கண்ணுற்ற ராமரும் மேலும் வருத்தம் அடைந்து கலங்கினார். எப்போது தன் இணை பிரியாத சகோதரன் தன்னை விட்டு விலகி விட்டாரோ, அப்போதே தமக்கும் தன்னுடைய அவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டிய தருமணம் வந்து விட்டதை உணர்ந்தார். தனது அனைத்து ராஜ்ய பொறுப்புக்களையும் லவ குசலர்களுக்கு தந்த பின் தனது சகோதரர்களான பரதன், சத்ருக்னன் போன்றவர்களை அழைத்துக் கொண்டு சராயு நதிக்கரைக்கு சென்றார். அங்கு சென்றதும் ராமர் முன்னே செல்ல, மற்றவர்கள் அவர் பின்னால் செல்ல சராயு நதியில் புகுந்த அனைவரும் தமது மானிட வாழ்வை முடித்துக் கொண்டு மேலுலகத்துக்குச் சென்றார்கள்*. இப்படியாக சீதையின் மறைவை  தொடர்ந்து ராம லஷ்மண, பரத மற்றும் சத்ருக்னனின் அவதாரங்கள் மறைந்தன. அவரவர் கொடுத்துச் சென்ற ராஜ்யத்தை அந்தந்தவர்களின் புதல்வர்கள் ஆளத் துவங்கினார்கள்.  ரகுவம்ச ஆட்சி  முடிவுக்கு வர மேலும் சில காலம் இருந்ததினால் அந்த புத்திரர்களின் ஆட்சியுடன் ரகு வம்ச ஆட்சியும்  தொடரலாயிற்று.

——————
*சிறு குறிப்பு :– 

வால்மீகி ராமாயணத்தை அவர் எப்போது இயற்றினார் என்பதைக் குறித்து சில சர்ச்சைகள் உள்ளன. ராமாயணம் என்பது ராமனின் பிறப்பு முதல் ராவணனைக் கொன்ற பின் அயோத்தியாவுக்குத் திரும்பி அந்த நாட்டை ஆண்டவரையிலான பாடல்கள் எனக் கூறப்படுகிறது. அவற்றை வால்மீகி முனிவர் தனது மனக்கண்ணால் அறிந்து கொண்டு இயற்றியதாக கூறுகிறார்கள்.

ஆனால் வால்மீகி வட மொழியில் எழுதியதாக கூறப்படும் உண்மையான ராமாயண காவியத்தை 1941 ஆம் ஆண்டில் ‘காஞ்சீபுரம் உபய வேதாந்த மகாவித்வான் ஸ்ரீமத் பிரதிவாதி பயங்கரம் அண்ணன்கராசாரிய ஸ்வாமிகள்’ என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அதில்  முதல்  ஸர்கமான ஸம்ஷேப ராமாயணம் எனும் அத்தியாயத்தில்  நாரத முனிவர்தான் வால்மீகி முனிவருக்கு ராமாயணக் கதையை சுருக்கமாக உபதேசித்ததாகவும், அதற்குப் பிறகுதான்  அவர் தாம்ஸா  நதிக்கரையில் ஏற்பட்ட நிகழ்ச்சியினால் நாரதர் உபதேசித்த ராமாயணத்தை பாடல்களாக இயற்றியதாகவும்,  அதைப் பாடவல்லவர்கள் எவரேனும் கிடைப்பார்களா என எண்ணிக் கொண்டு இருந்தபோதுதான்  லவ குசர்கள் அங்கு வந்து அவரிடம் தாம்  இருவரும் அந்தப் பாடல்களை பாட ஆவலுள்ளவர்களாக இருப்பதாகக் கூறி இராமாயண கானத்தைக் கற்றரிந்தார்கள் எனக்  எழுதப்பட்டு உள்ளது.

அந்த ராமாயணம் ராமர் அயோத்தியாவை ஆண்டு கொண்டிருந்த காலத்திலேயே இயற்றப்பட்டு உள்ளதினால்தான் ராமர் சபையில் லவ மற்றும் குசா இருவரும் அதைப் பாடலாகப் பாடி உள்ளார்கள்.  அவர்கள் பாடிய பாடல் ராமாயணயத்தில் ராமரின் சாகசங்களை  எடுத்துரைத்துள்ளது.  ஆனால் ராமரை  அதில் தெய்வீக அவதாரமாக காட்டவில்லை என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். இரண்டாவதாக ராமாயணத்தின் கதாபாத்திரங்கள் பூமியிலும், தேவலோகத்தோடும் சம்மந்தம் கொண்டுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் அதில்  காணப்படுகின்றன.

வால்மீகி சமிஸ்கிருத மொழியில் இயற்றியதாக  கூறப்படும் இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது என்றும் அவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த ராமாயணம் இராமரின் பிறப்பில் இருந்து ராமர் பட்டாபிஷேகம் மற்றும் சீதை வனத்துக்கு சென்ற சம்பவங்களை  மட்டுமே  விளக்குகின்றன என்றும் கூறுகிறார்கள். ராமர் செய்த யாகத்தில் வால்மீகி  கற்றுக் கொடுத்து லவ மற்றும் குசா பாடியதாக கூறப்படும் ராமாயணத்தில் சீதை மற்றும் ராமர் இறப்பு குறித்து  குறிப்பு இருந்திருக்குமா என்பது  விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.  அதன் காரணம் வால்மீகி சமிஸ்கிருத மொழியில் இயற்றியதாக  கூறப்படும் இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்ட காவியம் ஆகும்  என ஆய்வாளர்கள் கருதினாலும்  அவற்றில் பெரும் பகுதி கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.

இன்னும் சில  விடை தெரியாத கேள்வியும் உள்ளது. காளிதாசர் எழுதிய ரகுவம்சத்தில் ராமனுடைய முன்னோர்கள் குறித்தும், ராமர் வம்சம் தோன்றிய வரலாறும் கூறப்பட்டு உள்ளபோது வால்மீகி முனிவருக்கு அவை  தெரியாமல் இருந்திருக்குமா? ஆகவே அப்படி கிடைக்காத பெரும் பகுதியான  பாடல்கள் ராமருடைய முன்னோர்களின் வரலாறாக இருந்திருக்கலாம் என்றும் நம்புகிறார்கள். காளிதாசரின் ரகுவம்சத்தில் வால்மீகி இயற்றிய ராமாயணத்தை லவ குசர்கள் ராமன் நடத்திய யாகத்தில்  பாடியதாக  எழுதி உள்ளத்தில் இருந்து காளிதாசர் வால்மீகி முனிவர் எழுதி இருந்ததாக கூறப்படும் ராமாயணத்தைப்  முழுவதும் படித்திருக்கலாம் என நம்ப இடம் உள்ளது.

தொடரும்……….13