………….அத்தியாயம் – 8 (i)

 ஸ்ரீ பாத வல்லபா  கூறலானார்  ‘அம்மணி, முன் ஒரு காலத்தில் உஜ்ஜயினி என்ற நகரை சந்திரசேனன்  என்ற ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் நற்குணம் பெற்றவன். அவனுக்கு சிவபெருமானின் அருளினால் கிடைத்த சிந்தாமணி என்ற ஒரு நகை இருந்தது. அதை எந்த உலோகத்தின் மீதிலாவது வைத்தால் அந்த உலோகம் தங்கமாகிவிடும் என்பது அதன் விசேஷம். அதனால் அந்த மன்னன் அந்த நகையை நல்ல காரியங்களுக்கே பயன்படுத்தி வந்ததினால் தனது நாட்டில் உள்ளவர்களை பசி, பட்டினி இல்லாமல் வாழ வைத்து வந்தான். நாடும் செழிப்பாக இருந்தது. இவற்றைக் கண்ட பக்கத்து நாட்டு அரசர்கள் பொறமைக் கொண்டார்கள்.   ஆகவே  அரசன் ஏமார்ந்து இருக்கும் நேரத்தில்  அவன் நாட்டின் மீது படை எடுத்து  அவனை கொன்று விட்டு நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என முடிவு செய்தார்கள்.

சந்திரசேனனுக்கு ஒரு விதமான சனி தோஷம் இருந்தது. அதன் தீமையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றால் பகுளா திரியோதசி எனும் நாளில் சிவபெருமானை ஆராதித்து பூஜை செய்து வழிபட வேண்டும் என்று அவரது அரசவை பண்டிதர்கள் கூறினார்கள். ஆகவே அரசனும் அந்த பூஜையை செய்ய மஹாகாலேஷ்வரர் ஆலயத்துக்கு சென்று இருந்தபோது அண்டை நாட்டு மன்னர்கள் ஒரு இரவில் அவன் நாட்டின் மீது படையெடுத்து வந்தார்கள். அவர்கள் படை எடுத்து வருவது சந்திரசேனனுக்கு தெரியாது. அவன் அமைதியாக பூஜைகளை செய்து கொண்டு இருந்தான். அவர்கள் வந்து கொண்டு இருந்ததைக் கண்டுவிட்ட வனப்பகுதியில் திரிந்து கொண்டு இருந்த  இரண்டு ஆட்டிடையர்கள் பார்த்து விட்டார்கள். அதை உடனடியாக மன்னனிடம் சென்று கூற வேண்டும் என்று எண்ணிக் கொண்டு மகாகாளேஸ்வரர் ஆலயத்துக்கு சென்றபோது   அவர்கள்  மன்னன் செய்து கொண்டு இருந்த சிவபூஜையைக் காண நேரிட்டது. அவர்கள்  இருவரும் சகோதரர்கள்.

பூஜையைக் கண்டவர்களுக்கு தாம் வந்தக் காரியம் மறந்து போயிற்று. மன்னனைப் போல நாமும் பூஜை  செய்தால் என்ன என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட, அவர்கள் இருவரும் தம் வீட்டின் அருகில் இருந்த ஒரு மரத்தின் அடியில் சென்று அந்த இடத்தை பசுவின் சாணத்தை தெளித்து சுத்தப்படுத்தியப் பின்னர்  கோலங்கள் போட்டு உருண்டையான ஒரு கல்லைக் கொண்டு வந்து அங்கு வைத்து  அதற்கு சிறிது பால் ஊற்றி (ஆட்டுப் பால்) அபிஷேகம் செய்து வனத்தில் இருந்து கொண்டு வந்திருந்த பூக்களையும் வில்வ இலையையும் போட்டு ஆராதித்தார்கள். அவர்களில் ஒருவன் அந்த இடம் அமைதியாக இருப்பது போல உணர்ந்ததினால் நமச்சிவாயா எனும் மந்திரத்தை மனதில் கூறிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு அதன் எதிரில் அமர்ந்து கொண்டுவிட்டான். அவன் பக்தி உண்மையாக இருந்ததினால் அவனை அறியாமலேயே அவன் தியான நிலைக்குச் சென்று விட்டான்.
அவனை எத்தனை அழைத்தும் அவன் எழுந்திருக்கவில்லை என்பதினால் அவனுக்கு எதோ ஆகிவிட்டது என பயந்து போன இரண்டாமவன் தனது வீட்டுக்குச் சென்று பெற்றோர்களை அழைத்து வந்தான். அவர்களும் வந்து தியானத்தில் இருந்தவனை எழுப்ப முயல அவன் எழுந்திருக்கவில்லை. சிவசிவா இவனுக்கு என்ன ஆயிற்று எனக் கூவியவாறு வந்து அவனை அப்படியே தூக்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்கள். இந்தக் கல்லினால்தானே  உனக்கு எதோ ஆகிவிட்டது எனக் கோபம் கொண்டு அந்தக் கல்லை தூக்கி எறிந்தார்கள். அதோடு அதன் மீது அவன் அர்ச்சனை செய்து போட்டு இருந்த வில்வ இலைகளையும் சேர்த்து குப்பைப் போல எடுத்து அந்தக் கல் மீதே போட்டு விட்டு அவனை தூக்கிக் கொண்டு சென்றார்கள்.   அந்த நேரத்தில் கண் விழித்தவன் முன்னால்  சிவபெருமான் அவன் கண்களுக்கு மட்டும் புலப்படும் வகையில் தோன்றினார். அவனும் சிவபெருமானிடம் மனம் வருந்தி தாம் சென்ற காரியத்தை மறந்து   பூஜை செய்த கதையையும் கூறி விட்டு, தமது பெற்றோர்கள் தாம் பூஜித்த சிவலிங்கத்தை அவமானப்படுத்தியதற்கு மன்னிப்புக் கெட்டப் பின் நாட்டையும் அவர் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினான். அதைக் கேட்ட சிவபெருமான் கூறினார் ‘மகனே, நீ வருத்தப்படத் தேவை இல்லை.  எப்போது உன்னுடைய பெற்றோர்கள் சிவசிவா என என்னை உச்சாடனம் செய்து, வில்வ இலைகளை என்மீது கொட்டினார்களோ அதை நான் அவர்கள் செய்த அர்சசனையாகவே பாவித்துக் கொண்டேன். ஆகவே அவர்கள் என்னை தம்மை அறியாமலேயே ஆராதித்தார்கள். ஆகவே அவர்களுக்கு நீயே அடுத்த ஜென்மத்தில் பேரும் புகழும் பெற்ற மகனாகப் பிறப்பாய். அதன் பின் நீயும் கைலாயத்தை அடைவாய். கவலைப் படாதே மன்னனை நான் காப்பேன்’  என்று கூறிவிட்டு மறைந்தார்.
அந்த ஆட்டு இடையன் தன்னை பூஜித்த இடத்தில் பெரும் ஜோதி வடிவமாக நெருப்பு பிழம்பாக அவர் நின்று கொண்டார். அந்த நாட்டை நோக்கி வந்து கொண்டு இருந்த எதிரிப் படையினர் ஆகாயம்வரை நீண்டது போல எரிந்து கொண்டிருந்த ஜோதியை தூரத்தில் இருந்தே கண்டார்கள். அதைக் கண்டவர்கள் பயந்து போயினர். அவர்களுக்கு அது சிவபெருமான் என்பது தெரியாததினால்  தாங்கள் வருவதை அறிந்து கொண்டு விட்ட மன்னன் சந்திரசேனன் தம்மை தீயில் அகப்பட்டுக்  கொண்டு கருகி சாகடிக்க திட்டம் போட்டு பெரும் தீயை அனைத்து பகுதிகளிலும் பரவ விட்டு விட்டார் என்று எண்ணிக் கொண்டு பயந்து திரும்பி ஓடி விட்டார்கள். இதற்கிடையில் நடந்த அனைத்தையும் மற்றவர்கள் மூலம் அறிந்து கொண்ட மன்னன் அந்த ஆட்டிடையனின் பக்தியினால்தான் சிவபெருமானே தன்னுடைய நாட்டைக் காத்தார் என்று பெருமை அடைந்து அவனுக்கு நிறைய நிலங்களை தானம் கொடுத்து கௌரவித்தான். அடுத்த ஜென்மத்தில் அந்த அட்டிடையனின் தாயாரும் யசோதையாக பிறக்க, அந்த ஆட்டிடையனே  கிருஷ்ணராக அவளுக்கு பிறந்தார்’.
இப்படியாக அம்பிகாவுக்கு கதையைக் கூறிய ஸ்ரீ பாத வல்லபா அவர்களை சிவபெருமானை துதிக்குமாறு அறிவுரைக் கூறிய பின்னர் அந்த முட்டாள் மகனை அருகில் அழைத்து அவன் தலை மீது தன்  கையை வைத்து ஆசிர்வதிக்க அந்த சிறுவனும் தன்னை மறந்து அனைத்து வேதங்களையும் அந்த இடத்திலேயே உச்சரிக்கத் துவங்க, ஸ்ரீ பாத வல்லபாவும் அங்கிருந்து மறைந்து விட்டார். அந்த சிறுவன் பெரும் பாண்டித்தியம் பெற்றவனாகி பெரும் புகழ் பெற்று விளங்கி சிவபக்தரானார்.  அவரை முட்டாள், மூடன் என கேலி செய்த மக்கள் அவரிடம் மன்னிப்பைக் கோரினார்கள்”.
இப்படியாக  நமத்ஹரகாவுக்கு கதையைக் கூறிய சித்த முனிவர் ‘மகனே, குருவின் மகிமை என்பது எத்தனை உயர்வானது என்பது இந்தக் கதை மூலம் உனக்குப் புரிந்திருக்கும். குருவின் துணையும், ஆசியும் இருந்தால் இந்த உலகில் கிடைக்காதது எதுவுமே இருக்காது என்பதை நன்கு உணர்ந்து கொள் ‘ என்றார்.
அந்தக் கதையைக் கேட்ட அம்பிகாவும் மனம் அமைதி அடைந்து தனது மகனுடன் கிளம்பிச் சென்றாள் . அவள் ஸ்ரீ பாத வல்லபாவின் அறிவுரைப்படி சனிப்பிரதோஷ தினங்களில் தவறாமல் ஆலயம் சென்று சிவபெருமானை வழிபாட்டு வர அடுத்த ஜென்மத்தில் கராஞ்சா எனும் இடத்தில் அம்பா பவானி என்ற பெயரில் பிறப்பை எடுக்க அவளுக்கு ஒரு பெரிய மகான் மகனாகப் பிறந்தார். (இத்துடன் அத்தியாயம் – 8 முடிந்தது). 

 

……….தொடரும்