ராமரின் வனவாசம்
ஜடாயுவின் மரணம் மற்றும் ராவண வதம்
பரசுராமருடன் ஏற்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டறிந்த அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்து ராம லஷ்மணர்களை வரவேற்று உபசரித்தார்கள். அவர்களது வீர, தீர மற்றும் பெருமையை எடுத்துக் காட்டிய சம்பவங்களை நிகழ்த்தியதற்கும், சீதையை ராமன் திருமணம் செய்து கொள்ளக் காரணமாக இருந்தவருமான விஸ்வாமித்திர முனிவருக்கும் பெரிய வரவேற்பு அளித்து, அவரை பல விதமாக கௌரவித்து, வணங்கித் துதித்து தமது ஆனந்ததை வெளிப்படுத்தினார்கள்.
அடுத்து நிகழ்ச்சிகள் மீண்டும் வேக வேகமாக நடந்தேறின. தசரதன் தனக்கு வயதாகி விட்டதை உணர்ந்தவுடன் ராமனை பட்டதில் அமர்த்தி விட்டு தான் ஆன்மீக வாழ்வை மேற்கொள்ள முடிவு செய்தபோது, மீண்டும் ஒரு சங்கடம் கூனியின் உருவிலே வந்தது. கூனியின் போதனையினால் ஈர்க்கப்பட்ட கைகேயி தசரதனிடம் இருந்து முன்னொரு காலத்தில் தான் பெற்று இருந்த வாரத்தை நினைவூட்டி ராமனை தனது மனைவியுடன் பதினான்கு வருட காலம் வனவாசம் செல்லவும், பரதனை ராஜ்ய பரிபாலனத்தை ஏற்கவும் வழி செய்து கொண்டாள் . அதன்படி ராம லஷ்மணர்கள் வனவாசத்துக்கு செல்ல வேண்டியதாயிற்று.
அதனால் மனமுடைந்து போன தசரதனும், ராமன் அவரது மனைவி சீதை மற்றும் என்றும் தன்னை விட்டுப் பிரியாமல் இருந்த சகோதரன் லஷ்மணரையும் அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றதும் பாசத்தினால் கட்டுண்டு தனது உயிரை விட்டார். தன்னுடைய தாயாரின் சூழ்ச்சியை அறிந்த பரதனும் ராஜ்யபரிபாலனத்தை ஏற்க மறுத்து வனத்துக்கு சென்று தமது தந்தை தசரதனுக்கு கட்டாயத்தினால் ஏற்பட்ட சங்கடங்கள் அனைத்தையும் ராமனிடம் எடுத்துக் கூறி, ராமனை நாடு திரும்பி ராஜ்ய பரிபாலனத்தை ஏற்குமாறு வேண்டிக் கொண்டான். ஆனால் மரணம் அடைந்து விட்ட தனது தந்தைக்கு தான் கொடுத்த வாக்கை மீற முடியாது என்பதில் உறுதியாக இருந்தார் ராமபிரான். ஆனால் ராமர் தன்னுடன் வந்து ராஜ்ய பரிபாலனத்தை ஏற்காவிடில் அங்கிருந்து செல்ல முடியாது என அடம் பிடித்து நின்ற இளைய சகோதரன் பரதனிடம் ராமர் அதன் விளைவுகளை எடுத்துக் கூறினார். பரதன் அயோத்தியாவுக்கு திரும்பிச் சென்று ராஜ்ய பரிபாலனம் செய்யாவிடில் நாடு நலிவுறும், மக்கள் அவதியுறுவார்கள் என்பதை புரிந்து கொள்ளுமாறு அறிவுரைக் கொடுத்தார். அதன் பின் பரதன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி தான் அணிந்திருந்த பாதுகையை பரதனிடம் தந்து தன்னுடைய அந்த பாதுகையை எடுத்துக் கொண்டு போய் தனக்கு பதிலாக அதை தனது துணையாக வைத்துக் கொண்டு ராஜ்யத்தை தான் திரும்பி வரும்வரை நிர்வாகம் செய்யுமாறு கூறினார். பரதனோ அந்த பாதுகைகளை கொண்டு போய் அதுவே தனது சகோதரன் ராமன் என்பதாக அறிவித்து, சிம்மாசனத்தில் தான் அமராமல் தனக்கு பதிலாக ராமருடைய பாதுகையை வைத்து ஆட்சி செலுத்தி வரலானார்.
நிற்க, அங்கோ வனத்திலே இருந்த ராமனோ தனது மனைவி சீதை மற்றும் சகோதரன் லஷ்மணருடன் அங்கிருந்த காய் கனிகள் மற்றும் மூலிகைகளை உண்டபடி காலத்தைக் கழித்து வந்தார்கள். அங்கிருந்த நாட்களிலே அத்ரி முனிவர் ஆஸ்ரமத்திலும் தங்கி பணிவிடை செய்தார்கள். அவர்கள் பஞ்சவடி எனுமிடத்திலே இருந்தபோது ராமரின் அழகில் மயங்கிய ராவணனின் தங்கை சூர்ப்பனகை ராமனைக் காதலித்து அவரை நாயகனாக அடைய முயன்றாள். ஆனால் அவளது வார்த்தைகளைத் உதறித் தள்ளிய புனித குணம் கொண்ட ராமரோ அவளை துரத்தி அடிக்க, அவருக்கு தொல்லைத் தர முயன்ற சூர்ப்பனகையின் காதுகளையும், மூக்கையும் அறுத்து லஷ்மணர் அவளைத் துரத்தி அடித்தார். அவளும் ஓடோடிச் சென்று சகோதரன் ராவணனிடம் முறையிட, அதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த ராவணனும் பெரும் சேனையை அனுப்ப அந்த சேனையையும் நிர்மூலமாக்கி அனுப்பினார்கள் ராம லஷ்மண சகோதரர்கள். சூர்ப்பனகை விவரித்திருந்த சீதையின் அழகை மனதிலே கொண்ட ராவணனும் சீதையை தான் அடைய எண்ணம் கொண்டான். அதுவே முன் ஒரு காலத்திலே நாராயணன் தேவர்களுக்கு தான் ராமனாக அவதரித்து தேவர்களுக்கு தொல்லைத் தந்து வந்த ராவணனை அழிப்பேன் என்ற வாக்கு கொடுத்ததற்கு போடப்பட்ட முதல் அஸ்திவாரம் ஆயிற்று. பூர்வ ஜென்மத்தில் சீதையும் ‘ராவணனை தான் அழிப்பேன்’ எனப் போட்டு இருந்த சபதத்துக்கு அஸ்திவாரமாயிற்று.
ராம லஷ்மணர்களின் பலத்தை தவறாக எடைபோட்டு இருந்த ராவணனும் தனது மாமன் மாரீசனின் மாய மான் வேஷ உதவியோடு ராம லஷ்மணர்களின் கவனத்தை திசை திருப்பி தனியே இருந்த சீதையை கவர்ந்து வந்தான். வழியிலே தன்னை தடுக்க வந்த ஜடாயுவையும் கொன்று சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்தான். சீதையிடம் தன் பராக்கிரமங்களையும், பலத்தையும், தான் கொண்டிருந்த சக்திகளையும் செல்வத்தையும் பலவாறு எடுத்துரைத்து தன்னை திருமணம் செய்து கொள்ள எத்தனையோ வற்புறுத்தியும் அவள் மறுத்ததினால் அவளை அசோக வனத்திலே தனிமை சிறையில் வைத்தான். ஏமாற்றப்பட்டு வீடு திரும்பிய ராம லஷ்மணர்கள் சீதையை தேடி அலைந்தபோது, வழியிலே இறக்கும் தருவாயில் கிடந்த ஜடாயு மூலம் ராவணன் சீதையை கவர்ந்து சென்ற உண்மையை அறிந்து கொண்டார்கள். அந்த செய்தியை கூறிய உடனேயே மரணம் அடைந்துவிட்ட ஜடாயுவுக்கும் அங்கேயே இறுதிக் கிரியைகள் செய்து முடித்தப்பின் வானரங்களின் உதவியோடு சீதை உள்ள இடத்தைத் தேடலானார்கள்.
கிஷ்கிந்த மலையில் இருந்த வாலி-சுக்ரீக சகோதரர்களின் சண்டையில் ராமர் சுக்ரீவனுக்கு உதவி செய்து, வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு அவர் இழந்த ராஜ்யத்தை மீட்டுத் தந்ததின் மூலம் குரங்குப் படையின் துணையும் கிடைத்தது. ஹனுமானும் ராமருக்கு கிடைத்தார். அந்த ஹனுமானைக் கொண்டுதான் சீதையின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து, இலங்கைக்குப் போய் ராவணனுடன் யுத்தம் புரிந்து கும்பகர்ணன், இந்திரஜித் போன்ற மகா அசுரர்களையும் கொன்று, முடிவில் ராவணனின் தம்பி விபீஷணனின் துணையோடு ராவணனையும் கொன்று சீதையை மீட்டு வந்தார்.