குசன் நாக கன்னிகையை
மணந்த கதை
அதைக் கேட்ட பரதேசி போல தோற்றம் தந்த அந்தப் பெண்மணியோ ‘அரசனே, உன்னுடைய தந்தையார் பூத உடலைத் துறந்து வைகுண்டம் போய் விட்டப் பின் தக்க தலைவன் இன்றி அவதிப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கும் அயோத்தியா பட்டிணத்தின் தெய்வ மகள் என என்னை அறிந்து கொள். ரகுவின் வம்சத்திலே நீ தோன்றி பிற ராஜ்யங்களை திறமையாக ஆண்டு கொண்டிருக்கையில் உன்னுடைய முன்னோர்களின் நகரமான அயோத்தியாவின் நிலை என்னவென என்றாவது எண்ணிப் பார்த்தாயா? அந்த நகரமே பாழ்பட்டு, சீரழிந்து கிடக்கிறது. சாலைகள் பழுதடைந்து கிடக்க வீடுகள் பலவும் இடிந்து கிடக்கின்றன. பஞ்சு போன்ற புற்கள் நிறைந்த பாதையில் உள்ள புல்லும் வாடி அந்த பூமியே வறண்ட நிலமாக காணப்படுகிறது. பெண்களின் முகத்தை மூடிக் கொண்டிருக்கும் திரைகள் கிழிந்து சிலந்தி வலைப் போல ஆகி உள்ளன. அத்தனை ஏழ்மை நிலை. நகரெங்கும் ஏழைகள் நிறைந்துள்ள நிலை. இரவிலே பெண்கள் அஞ்சாது சென்று கொண்டு இருந்த சாலைகளில் நரிகளும், பேய்களும் சுற்றித் திரிகின்றன. ஆகவே அவர்களால் பயமின்றி வெளியில் வர முடியவில்லை. பூஜைகள் செய்யப்பட்டு வந்திருந்த சராயு நதிக்கரை ஓநாய்களும், நரிகளும், நாய்களும் கொன்று தின்று போட்டுள்ள மிச்சம் உள்ள மான்களின், முயல்களின் மாமிச பிண்டங்களினால் நிறைந்து கிடக்கின்றன. ஆகவே அரசே, நீர் சற்றும் தாமதியாது அயோத்திக்கு வந்து அந்த பட்டிணத்தை சீர்படுத்த வேண்டும் என்பதை வேண்டிக் கொளவே இங்கு வந்தேன்’ என்று கூறிவிட்டு அப்படியே மறைந்தும் போனாள் .
அதைக் கேட்டு மனம் வருந்திய குசாவும் மனக் கலக்கம் அடைந்தார். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பது புரியாமல் சற்றே பிரமித்து நின்றாலும் உடனடியாக பெரும் படையுடன் கிளம்பி விந்திய மலை, கங்கை நதி என அனைத்து இடங்களையும் கடந்து அயோத்தியை அடைந்து ஆட்சியை தன் கையில் எடுத்துக் கொண்டான். அந்த ஊரிலேயே தங்கி மெல்ல மெல்ல ஒவ்வொரு சீர்கேட்டையும் களைந்து சென்றவாறு நகருக்கே புதுப் பொலிவை தந்தான். இடிந்து கிடந்த சாலைகளும் கட்டிடங்களும் புதுப்பிக்கப்பட்டன. வறண்டு கிடந்த ஏரிகளும், நதிகளும் தூர் வாரப்பட்டன. நீர் நிறைந்திருந்த நதிகளில் எல்லாம் மறைந்து இருந்த முதலைகளை, கொடிய பாம்புகளை விரட்டி அடிக்கப்பட்டன. இப்படியாக அயோத்தி புதுப் பொலிவைப் பெற ஜனங்கள் மீண்டும் மன மகிழ்வோடு வாழத் துவங்கினார்கள். ரகுவம்சம் மீண்டும் பொலிவு பெற்றுள்ளதே என எண்ணி எண்ணி மகிழ்ந்தார்கள்.
எப்போது வேண்டுமானாலும் மக்கள் தம்மை வந்து சந்தித்து குறைகளைக் கூறலாம் என்று அறிவித்ததும் அல்லாமல், தம்மை வந்து சந்தித்தவர்களை தவறாமல் சந்தித்து அவர்களது நிறை குறைகளைக் கேட்டறிந்து தேவையானவற்றை செய்தார். குறைகளைக் கேட்டு நீதி வழுவாமல் முடிவு செய்தார். பலமான ஒற்றர் படைகளை வைத்திருந்து நாட்டு நடப்புக்களை உன்னிப்பாக கவனித்து தக்க நடவடிக்கைகளை எடுத்து வந்தார். எந்த பிரச்சனைகளிலும் மூத்த மந்திரிமார்களின் ஆலோசனைகளைக் கேட்டடறிந்த பின், அனைத்தையும் நன்கு விவாதித்த பின்னரே நடவடிக்கையையும் எடுத்தார். அஸ்வமேத யாகம் செய்தார்.
இப்படியாக காலம் கடந்து கொண்டு இருக்கையில் ஒருநாள் குசன் தனது மனைவிகளுடன் நதியில் ஜலக்ரீடை செய்தவாறு குளித்துக் கொண்டிருக்கையில் அவரது அரண்மனையின் ஒரு ராஜகுமாரியின் நகை நதிக்குள் விழுந்து விட்டது. அதை தேடி எடுத்து வருமாறு மன்னன் ஆணையிட நதிக்குள் மூழ்கி ஆபரணத்தை தேடிய நீர்முழ்கி பணி செய்பவர்கள் அந்த நகை நதியில் பாதாளத்தில் வாழும் நாகராஜனின் தங்கையின் கழுத்தில் உள்ளது என்று கூற அதை திருப்பித் தருமாறு மன்னன் அவர்களை கேட்கச் சொல்லி அனுப்பினார். ஆனால் அந்த ஆபரணத்தை தனது சகோதரி ஆசையாக கழுத்தில் போட்டுக் கொண்டு உள்ளதினால் அதை திருப்பிக் கொடுக்க இயலாது என அதைக் கொடுக்க மறுத்த நாக மன்னன் அவர்களை வெறும் கையுடன் திருப்பி அனுப்பி விட்டார்.
அதைக் கேட்டு கோபமுற்ற குசன் அந்த நதிக்குள் மறைந்திருந்த விஷ ஜந்துக்களையும், மறைந்திருந்த முதலைகளையும் விரட்டி அடிக்கவும், நாக மன்னனின் சேனையை ஒடுக்கவும் தனது பாணத்தை நதிக்குள் செலுத்தினார். அதே நேரத்தில் விஷ்ணுவின் வாகனமான பெரும் கருடனை அழைத்து நாகங்களை அழித்து விட்டு ஆபரணங்களை மீட்டு வருமாறு கூறினார். கருடனும் அந்த காரியத்தை செய்ய அங்கு வந்து நதியின் மீது வட்டமடிக்கத் துவங்க, அதைக் கண்டு பயந்து போன நாகராஜனும் வெளியில் வந்து குசனை சந்தித்து அவருடைய ஆட்சியை பெரிய அளவில் பெருமையாகப் பேசி அந்த ஆபரணத்தை எடுத்துக் கொண்டது தன்னுடைய தங்கையான குமுதவதி என்று கூறி அவளை மணம் செய்து கொள்ளுமாறு குசனிடம் வேண்டுதல் வைக்க, குசனும் அதை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டு நாகராஜனின் சகோதரியான குமுதவதியை மணந்து கொண்டார். அதன் பின் பல காலம் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தபோது குசன் மற்றும் குமுதவதிக்கு ஒரு அழகிய ஆண் குழந்தைப் பிறந்தது. அதற்கு அதீதி என்ற பெயரிட்டு வளர்த்து வரலானார்கள்.