COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -11 : அஷ்டாங்க யோக தத்துவம்:
ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் குருமார்கள்

அத்தியாயம் 50
விலைமகள் பிங்களா, சிறுவன், கை வளையல், பாம்புகள் மற்றும் சிலந்திகளிடமிருந்து
பெற்ற போதனைகள்

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

குரு வேத தர்மா தீபக்கிடம் இறைவனின் பெருமைகளை தொடர்ந்து கூறிக் கொண்டு இருந்தார்; அதே வேளையில், துறவி வடிவில் இருந்த அவதூதர், யதுகுல மன்னனிடம் பின்வருமாறு கூறினார் ‘எனது பதினேழாவது குரு, பிங்களா எனும் விலை மகள் ஆவாள்; வீணான நம்பிக்கைகளையும் பொய்யான எதிர்பார்ப்புகளையும் எவ்வாறு துறப்பது என்பதை அவள் எனக்குக் கற்றுக் கொடுத்தாள்||1||

பிங்களா திருமணம் செய்து கொள்ளவில்லை; அவள் தினமும் தனது துணையை மாற்றிக் கொண்டே இருந்தாள்; சமூகத்தில் அவள் நற்பெயர் பெற்றவளாகக் கருதப்படவில்லை; அவளது மனம் ஒரு நரியின் தந்திரம் போன்றதாக இருந்தது||2||

தூய்மையைப் பற்றிக் கவலைப்படாத ஒருவளால், கற்புடைய மனைவியரின் மற்றும் பக்தர்களின் உன்னதமான நன்னடத்தையை எவ்வாறு அறிய முடியும்? அவளுடன் சேர்ந்து மது அருந்தி, அவளுடன் உறவு கொண்டவர்கள் அனைவரும், அவளுடன் சேர்ந்து தாழ்ந்த நிலைகளை நோக்கிச் சறுக்கி விழுவதையே கண்டனர்||3||

விதேகநகர்’ என்று அழைக்கப்பட்ட ஒரு நகரத்தில் அவளைப் பற்றி இழிவான சொற்களே கோரப்பட்டு வந்தன; அது பக்திமான்கள் வாழ்ந்த நகரம் ஆகும்; அந்த ஊரும் நல்ல பண்பாடு மிக்கதாகக் கருதப்பட்டது; அங்குதான் இந்தப் பிங்களா எனும் விலை மகள் வாழ்ந்து வந்தாள் ||4||

அவள் பேரழகு வாய்ந்தவளாகத் திகழ்ந்தாள்; அவளைச் சுற்றி ஒரு பொன்னிற ஒளி வட்டம் வீசிக் கொண்டிருந்தது; இரவில் அவள் முழுமையான இளமைப் பொலிவுடன் திகழும்போது, நிலவொளி அவளைச் சூழ்ந்திருப்பது போலவே தோன்றும்; அவளைக் கண்டால் போதும், ஆண்களின் அறிவு மயக்கி விடும்; அவளைக் கண்டதும், ஆண்களின் சிந்தனைகள் அனைத்தும், அழுக்கடைந்த மற்றும் கிழிந்த ஆடைகளைக் களைந்து எறிவது போலாகி விடும்||5||

அவள் மோகன சிரிப்பு, இனிப்பான உரையாடல் மற்றும் வஞ்சகம் ஆகிய கலைகளை நிறையவே பெற்றிருந்தாள்; எளிதில் ஏமாறக் கூடியவர்களைப் பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையாக்குவது எப்படி என்பதையும் அவள் அறிந்திருந்தாள்; பாடுவது, பல்வேறு வேடங்களில் நடிப்பது மற்றும் இசைக் கருவிகளை வாசிப்பது ஆகிய கலைகளையும் அவள் கற்றுத் தேர்ந்திருந்தாள்; எனவே, அந்த நகரத்தில் அவள் மிகவும் பிரபலமானவளாகக் கருதப்பட்டதில் வியப்பேதுமில்லை ||6||

மற்றவர்கள் அவளை தீய குணங்களின் இருப்பிடமாகவும், வஞ்சகத்தின் சுரங்கமாகவும் கருதினர்;அவள் எத்தகையவளாக இருப்பினும், பிங்களா எனும் அந்தப் பெண்மணி, ஆடம்பரமான மற்றும் பகட்டான நம்பிக்கைகளால் நிறைந்திருந்தாள் ||7||

பண ஆதாயம் ஒன்றையே ஒரே நம்பிக்கையாகக் கொண்டு, எவர் அவளை நாடி வந்தாலும், அவள் முதலில் கேட்பது பணம் கேட்பதே ஆகும்; அவர்கள் எதைக் கொடுத்தாலும், இன்னும் அதிகம் வேண்டும் என விரும்பி, அவள் தன் வாடிக்கையாளர்களின் மனத்துடனும் சூழ்நிலைகளுடனும் விளையாடினாள்||8||

விரைவிலேயே அவளை நாடி வந்தவர்கள் அவளது பேராசைக்கு அளவே இல்லை என்பதை உணர்ந்து, அவளைச் சந்திப்பதையே முற்றிலுமாக நிறுத்தி விட்டனர்; இருப்பினும், புதிய நம்பிக்கையுடன் அவள் தலை முதல் கால் வரை தன்னை அலங்கரித்துக் கொண்டு, வாசற்படியில் நின்று, அவ்வழியே செல்பவர் எவராயினும் அவர்களை நோக்கிச் சைகைகள் செய்வாள்||9||

அவ்வாறே ஒரு நாள் அவள் தன் வாசலில் காத்திருந்தாள்; சிறிது நேரத்திற்குப் பிறகு அவள் வீட்டிற்குள் சென்றாள்; அன்று அவள் ஒரு ஊஞ்சலைப் போல, இங்கும் அங்கும் அலைந்து, மிகுந்த அமைதியற்ற மனநிலையில் இருந்தாள்; உறக்கம் கூட வராமல் சோர்ந்து போனாள்||10||

விதியின் நியதிப்படி, எதிர்பாராத விதமாக, அவளுக்குள் அசைக்க முடியாத பற்றின்மை உணர்வு திடீரெனப் பொங்கி எழுந்தது; அவள் தனக்குத்தானே கூறிக் கொண்டாள் ‘நான் என்னை மிகவும் இழிவான நிலைக்குத் தள்ளிக் கொண்டுள்ளேன்; என் வாழ்நாளில் நான் தேர்ந்தெடுத்ததெல்லாம் தீய நடத்தைகளை மட்டுமே ||11||

ஆனால் இன்றோ, ஏதோ ஒரு விசித்திரமான உணர்வு என்னை உள்ளிருந்தே ஆட் கொண்டுள்ளது; ஒரு செல்வந்த வாடிக்கையாளரை நான் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், இது எவ்வாறு நிகழ்ந்தது?; இப்போது என் உள்ளத்தில் விவேகமும் மன நிறைவும் குடியேறியிருப்பதாகத் தோன்றுகிறது; என் முட்டாள்தனமான, உணர்ச்சி வசப்பட்ட நடத்தைகள் அனைத்தும் என்னை விட்டு விலகிச் செல்வது போலிருக்கிறது||12||

உலகிற்கே ஒரே ஆதாரமாகப் போற்றப்படும், நம் உள்ளே உறையும் தெய்வமும் அதன் திருவிளையாடல்களும் இந்த உலகில் இடை விடாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன; அந்த மெய்ப்பொருள் (சாரம்) என்ன என்பதை அறிய நான் ஏன் ஒரு போதும் முயன்றதில்லை?; இறுதியில் அச்சம், துயரம் அல்லது வெறும் மாயைகளில் சிக்கித் தவிக்கும் மனிதர்களைத் தேடி நான் ஏன் எப்போதும் அலைந்தேன்?||13||

இறுதியில் இறக்கப் போகும் மனிதர்களிடமிருந்து செல்வத்தை மட்டுமே நான் எதிர்பார்த்து நின்றேன்; இந்த நொடியிலிருந்து, என் மீது எனக்கே வெறுப்பு தோன்றுகிறது; இனி நான் என் உடலை விற்பனை செய்ய மாட்டேன்; அதற்கு மாறாக, என் உடலைத் தூய்மைப்படுத்தி, என் உள்ளே ஆனந்தமாக வீற்றிருக்கும் அந்தத் தெய்வத்திற்குச் சேவை செய்வேன் ||14||

இனி நான் என் நேரத்தை, தெய்வத் தன்மை என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வதிலேயே செலவிடுவேன்; இவ்வாறு அவள் உறுதியாகத் தீர்மானித்ததும், அவள் செய்த முதல் செயல், தன் பாவனைகளையும், காம உணர்வைத் தூண்டும் சைகைகளையும் கை விட்டதுதான்; இனி இறக்கப் போகும் மனிதர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக் கூடாது எனத் தீர்மானித்தவளாய், அன்று இரவு அமைதியான மன நிலையில் உறங்கினாள்||15||

ஏதேனும் ஒரு கற்பனையான நம்பிக்கைக்கு அடி பணிந்து கொண்டிருப்பவர்களால், நிம்மதியாக உறங்கவோ ஓய்வெடுக்கவோ முடிவதில்லை; அவர்களின் நம்பிக்கைகள் அவர்கள் மனதில் மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன; இதுதான் அவளிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம்; இப்போது பதினெட்டாவது குரு என்ன வழி காட்டப் போகிறார் என்பதைக் கேளுங்கள் ||16||

ஒருவன் பொய்யான நம்பிக்கைகளைக் கை விடும் வரை, தனக்குள் இருக்கும் மகிழ்ச்சியை அறிய முடியாது; அந்த வகையான நுட்பமான கற்பனைகள், விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளைச் சேமித்து வைக்கும் பழக்கம் கை விடப்படும் போதுதான், சம நிலையும் மேலும் அறியும் ஆர்வமும் உதயமாகின்றன ||17||

இதே போன்ற ஒரு பாடத்தை திட்டோடி என்ற பறவையும் கற்பித்தது; ஒரு நாள், பல பறவைகள் பகிர்ந்து உண்ட ஒரு துண்டு இறைச்சியை அது கண்டது; அதுவும் அவர்களுடன் சேர்ந்து, அதைத் துண்டு துண்டாக வெட்டி, ஒரு சிறு பகுதியை எதிர் காலத்திற்காகச் சேமித்து வைத்துக் கொண்டது||18||

அந்தப் பறவைக் கூட்டத்திற்குக் கிடைத்த உணவின் எந்தப் பகுதியாக இருந்தாலும், அவை அனைத்தையும் விரைவாகத் தின்று விட்டன; பின்னர் பயன்படுத்துவதற்காக திட்டோடி பறவை ஒரு துண்டைச் சேமித்து வைத்திருப்பதை அறிந்ததும், அனைத்தும் அந்த இறைச்சிக்காக அதைத் தாக்கிக் கொத்தத் தொடங்கின||19||

அவர்கள் அவளிடம் சொன்னார்கள் ‘நாங்கள் எல்லோரும் அந்த இறைச்சியைத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம், நீ அந்த ஒரு துண்டை மட்டும் எப்படி ஒளித்து வைத்தாய்?; அந்தக் கூட்டத்தின் ஆரவாரத்தைக் கேட்டு அவள் அந்தத் துண்டைக் கீழே போட்டாள், பசித்திருந்த பறவைகளும் அவளுக்குப் பெரிய காயம் ஏதுமின்றிப் பறந்து செல்ல அனுமதித்தன ||20||

நான் இந்த நிகழ்வைக் கவனிக்க நேர்ந்தது, அது என் மனதில் பதிந்து விட்டது; பதுக்கி வைப்பது துக்கத்திற்குக் காரணமாகிறது; இதைத்தான் அன்று அந்தப் பறவை எனக்குக் கற்றுக் கொடுத்தது ||21||

எந்த அறிஞர் தன்னிடம் உள்ள அறிவை பதுக்கி வைக்காமல், எரியும் நெருப்பைப் போல, பிறர் பயன்பாட்டிற்கு தந்து தன்னிடம் உள்ளதை எரிப்பதில் திருப்தி அடைகிறாரோ, அத்தகைய அறிஞர்கள் பணமின்றி இருந்தாலும், பதுக்கி வைத்திருப்பதைப் பற்றிய கவலையிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருக்க முடியும் {இதன் தத்துவம் என்ன என்றால் அறிவும் செல்வமும் அனுபவிப்பதற்கும், பிறருக்குப் பயன்படுவதற்கும் தானே தவிர, பதுக்கி வைப்பதற்கல்ல}||22||

பறவைக்கு இறைச்சித் துண்டு கிடைத்தபோது, அதற்கு ஈடாக ஏளனங்களும், பிற பறவைகளின் தாக்குதல்களும் கிடைத்தது; அதை தடுத்துக் கொள்ள, அது புத்திசாலித்தனமாக அந்தத் துண்டைத் தூக்கி எறிந்தது; அதாவது தனது வலிக்கும் துக்கத்திற்கும் காரணமானதை அது தூக்கி எறிந்தது||23||

ஒரு யோகி பொருட்களைச் சேமிக்கத் தொடங்கினால், அவனது கவனம் அந்தப் பொருட்களின் மீதும், அவற்றைப் பாதுகாப்பதின் மீதும் திரும்பும்; யோகத்தின் நோக்கம் உள் முகமாகப் பயணிப்பது; ஆனால், சேமித்து வைக்கும் குணம் மனதை வெளி நோக்கி இழுத்துச் செல்லும்; இதனால் அவன் தனது இலக்கிலிருந்து திசை திருப்பப்படுவான் ||24||

ஆகையால், ஒரு உணவையோ அல்லது பொருளையோ கை விட்டதின் மூலம், இழிவு படுதலும், அவமானமும் நின்றன; இதுதான் அந்தப் பறவை எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம்; குழந்தைகள் கூட நிகழ் காலத்தில் வாழ்வதைக் கற்றுக் கொடுக்க முடியும், அவர்கள் பாராட்டுக்களையோ, அவமானங்களையோ பொருட்படுத்துவதில்லை, கவலைப்படுவதில்லை||25||

குழந்தைகள் தாங்கள் புனித சாம்பலுடன் விளையாடுகிறோமா அல்லது மண்ணுடன் விளையாடுகிறோமா என்பதை அறியாது; பல்வேறு நறுமணங்களையோ, ஒருவர் இனிமையாக நடந்து கொள்கிறாரா அல்லது விரும்பத்தகாதவராக இருக்கிறாரா என்பதையோ அவை வேறுபடுத்தி அறியாது; தன்னிலேயே மூழ்கியிருக்கும் ஒரு குழந்தை அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை ||26||

ஒரு குழந்தை ஒரு பொருளைப் பார்க்கும்போது, அதற்கு இது பயம் தரும் ‘பாம்பு’ என்றோ அல்லது பயன் தரும் கயிறு என்றோ பிரித்துப் பார்க்கத் தெரியாது ; அது போலவே ஒரு குழந்தை புண்ணியத்தையோ பாவத்தையோ தன் மீது சுமந்து கொள்வதில்லை ||27||

மேலும், ஒரு குழந்தை தனக்குக் கிடைக்கும் பொருட்கள் மலிவானதா அல்லது விலையுயர்ந்ததா என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை; அது தனது பராமரிப்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை; அதன் காரணமாக அது மன உளைச்சலுக்கு ஆளாவதும் இல்லை ||28||

ஒரு குழந்தை தன் வீட்டில் என்ன இல்லை, இல்லாத அந்தப் பொருட்களை எப்படிப் பெறுவது என்று சிந்திப்பதில்லை; யாராவது என்னை அவமதிப்பார்களா அல்லது வீட்டிற்குள்ளோ அல்லது வேறு எங்கேயோ தள்ளி விடுவார்களா போன்ற கவலைகள் அதன் விளையாட்டைக் கெடுப்பதில்லை ||29||

மரணம் எப்போதும் வருமா; துன்பம் எப்போதும் தாக்குமா; என் வாழ்வில் அவப்பெயர் இருக்குமா; இது போன்ற எண்ணங்களும் ஒரு குழந்தையிடம் இருப்பது இல்லை||30||

பணத்தை எப்படி சம்பாதிப்பது, சம்பாதித்த பணத்தை எப்படி பாதுகாப்பது? குடும்பத்தை எப்படி நிலை நிறுத்துவது, போன்ற கேள்விகளிலிருந்து குழந்தை காப்பாற்றப்படுகிறது||31||

ஒரு குழந்தை கற்பனையான ஆசைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் அடி பணிவதில்லை; அது தனியாகவோ அல்லது ஒரு துணையுடனோ விளையாடுகிறது; அது தன் மீதே மிகுந்த அன்பு கொண்டு லயித்திருக்கிறது; அதனால்தான் பெரியவர்களை விடக் குழந்தைகள் மிக அதிகமாகச் சிரிப்பதையும் மகிழ்ச்சியாக இருப்பதையும் நாம் காண்கிறோம்||32||

அடிப்படையான பசியும் தாகமும் தணிக்கப்பட்டு விட்டால், ஒரு குழந்தை தான் தனித்திருந்தாலும் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருக்கும்; இவையே ஒரு குழந்தை நமக்குக் கற்பிக்கும் பாடங்கள்; இவை புரிந்து கொள்ள எளிதானவை; அதே சமயம், நம் மனதிற்குள் உறுதியாக நிலைத்திருக்க போதுமான உத்வேகத்தை அளிப்பவை ||33||

உலகியல் வாழ்வு ஒரு மாயையே; உண்மையில் சகோதரன் என்பவன் ரத்த சம்மந்தம் கொண்டவன் யார்; இந்த வீடு யாருக்குச் சொந்தமானது; இன்று இவ் வீட்டில் இருப்பவர்கள் எதிர் காலத்தில் எங்கே செல்லப் போகிறார்கள்; இவை அனைத்தும் கவலைகளால் நிறைந்த ஒரு சந்தை போன்றவையே||34||

அந்த இனிப்புப் பண்டத்தை நான் எப்படி வாங்குவது; சமூகத்தில் நான் எப்படி மதிப்பையும் மரியாதையையும் பெறுவது; துன்பத்தை நான் எப்படித் தவிர்ப்பது; வரும் ஆண்டுகளில் பண வீக்கம் குறையுமா ||35||

இத்தகைய கேள்விகளிலேயே நாம் எப்போதும் மூழ்கிக் கிடக்கிறோம்; இல்லற வாழ்வின் நோக்கம் இவ்வளவுதானா?; யாரும் என்னை வெறுக்கக் கூடாது; அனைவரும் எனக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும்; இதுவே அனைவருடைய விருப்பமாகவும் இருக்கிறதல்லவா ||36||

இத்தகைய எண்ணங்களுக்கு மத்தியில், ஒருவன் தன் மனதிற்குள் கவனம் செலுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகும்; அத்தகைய குணத்தைக் கொண்டவர்கள் ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்டாலும் கூட, குழந்தைகளிடம் இயல்பாகவே வெளிப்படும் அந்தத் தூய மகிழ்ச்சி போன்ற நிலை எழுவது இல்லை; அதனால்தான் குழந்தையின் விளையாட்டு ஒரு சிறந்த முன் மாதிரியாகத் திகழ்கிறது ||37||

தான் இருக்கும் இடத்தில் எந்த செயலைச் செய்தாலும் அதை ஒரு விளையாட்டாகவே செய்கிறது குழந்தை; ஒரு குழந்தைக்குக் ஆழ்ந்த சிந்தனைகள் பற்றி கற்பிக்க வேண்டியது என்ன இருக்கிறது?; எனவே, ‘விருப்பு-வெறுப்பு’ எனும் இருமைகளுக்கு அப்பாற்பட்டுச் சுதந்திரமாக இருப்பதே, பத்தொன்பதாவது குருவிடமிருந்து நாம் பெறும் போதனையாகும் ||38||

குழந்தைகளிடம் இயல்பாகவே வெளிப்படும் தூய மகிழ்ச்சியைப் போலவே, ஒருவன் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்; தனிமையில் இருக்கும் நேரத்தைக் கூட வீணாக்காமல், அதைச் சுய சிந்தனைக்கும் கல்விக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; இதுவே, ஒரு இளம் பெண்ணும் அவளது வளையல்களும் நமக்குக் கற்பிக்கும் பாடமாகும் ||39||

குருமார்களின் வாழ்க்கை வரலாற்றையும் போதனைகளையும் ஒருவன் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கும்போது, அவனுக்கு நிச்சயமாக நன்மையே விளையும்; ஒரு ஊரில், திருமண வயதை எட்டிய ஒரு இளம் பெண் இருந்தாள்; அவளது பெற்றோர் அவளுக்குத் திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டனர்||40||

அதன்படி, ஒரு நாள் அவர்கள் வெளியூர் சென்றனர்; அப்போது அந்தப் பெண்ணை மட்டும் வீட்டில் இருக்குமாறு கூறிச் சென்றனர்; தற்செயலாக, அதே நாளில் ஒரு திருமணத் தரகரான அந்தணர் ஒருவர் அவர்கள் வீட்டிற்கு வந்தார்; அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புவதை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார் ||41||

அவளுடைய பெற்றோருக்கு அந்த திடீர் வருகை பற்றித் தெரியாது; தெரிந்திருந்தால் அவர்கள் அவளைத் தனியாக விட்டுச் சென்றிருக்க மாட்டார்கள்; அந்தப் பெண் புத்திசாலியாக இருந்ததால், அந்த பிராமணரை வரவேற்றாள்; அவரும் மணமகனையும் அவரது குழுவினரையும் அந்த வீட்டிற்கு அழைத்தார் ||42||

அந்தப் பெண் அவர்கள் அனைவரிடமும் உபசரிப்புடன் நடந்து கொண்டாள்; அவர்களுக்கு மதிய உணவு அளிக்க விரும்பிய அவள், ஒரு சாதாரணப் பொருளான அரிசியைச் சுத்தம் செய்து இடிக்கத் தொடங்கினாள்; அப்போது அவளுடைய வளையல்கள் ஒன்றோடொன்று இடித்துக் கொண்டு கலகலவென ஒலித்தன ||43||

இந்த இரைச்சல் நமது நிதி நிலையை வெளிப்படுத்த நான் எப்படி அனுமதிப்பேன்?; என் பெரியவர்களின் பெயர் வீணாவதை நான் எப்படி அனுமதிப்பேன்?; இவ்வாறு எண்ணியவள் ஒவ்வொரு கையிலும் இருந்த இரண்டு வளையல்களை கழற்றி விட்டு, இரண்டை மட்டும் அணிந்து கொண்டாள். அப்படியும் இடித்தபோது, அவையும் ஒலி எழுப்பின ||44||

ஒரு கையில் உள்ள எல்லா வளையல்களையும் கழற்றுவது துரதிர்ஷ்டவசமானது எனக் கருதப்படுகிறது; எனவே அவள் புத்திசாலித்தனமாக ஒவ்வொரு கையிலும் ஒரு கைக் காப்பு, ஒரு வளையல் என வைத்துக் கொண்டாள்; அவளுடைய வேலையைப் பற்றி எந்த விளம்பரமும் இல்லாமல், அமைதியாக நடக்க வைத்தது; மேலும் அது அவளுக்குள் ஒரு திருப்தியை அளித்தது ||45||

அன்று அவள் எனக்குக் கற்பித்த பாடம் இதுவே; பலர் ஓரிடத்தில் கூடும் போது, அங்கே ஒரு ஆரவாரம் எழுகிறது; இருவர் மட்டும் இருந்தாலும், உரையாடல்கள் முடிவின்றி நீள்கின்றன; ஆனால் தியானத்திற்கு, தனித்திருப்பதே மிகச் சிறந்தது||46||

ஒரு சமஸ்கிருத முதுமொழி இவ்வாறு கூறுகிறது: ‘ப்ரமாத: கலு ஸங்கேன’
இதன் அர்த்தம் என்ன என்றால் ‘பற்றுதல் அல்லது தீய சேர்க்கையால் (ஆசைகள் அல்லது உலகியல் விஷயங்கள் மீது கொள்ளும் ஈடுபாடு) நிச்சயமாக கவனக் குறைவு அல்லது விழிப்புணர்வின்மை ஏற்படுகிறது’; துறவி கூறினார் ‘அதை நான் அறிந்து இருந்ததினால்தான் தனித்திருக்கத் தீர்மானித்தேன்; தனித்து இருந்ததில் எனக்குத் தேவையான அமைதியும் தெளிவும் கிடைத்தன’||47||

மேலும் ஒருவன் ஆன்மீக ஐக்கியத்தை (conscious union) அறியவும், அதன் மூலம் கிடைக்கும் பேரின்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் விரும்பினால், ஒரே இடத்தில் நிரந்தரமாகத் தங்கியிருப்பது அவ்வளவு உகந்ததல்ல ||48||

காலப் போக்கில், தூசியைப் போலவே உலகப் பற்று ஏதோ ஒரு வழியில் நமக்குள்ளே நுழைந்து விடுகிறது; இது அனைத்து இடங்களிலும் காணப்படும் உண்மை; மக்களும் அவர்களின் குடும்பத்தினருமே பெரும்பாலும் தொல்லைகளையும் மனக் கலக்கத்தையும் ஏற்படுத்துகின்றனர்; ஒரு பாம்பு தனது நடத்தையின் மூலம் உணர்த்தும் பாடம் இதுவே ||49||

பாம்புகள் கூட்டமாகச் சுற்றித் திரிவதை நீங்கள் காண்பது மிக அரிது; ஏதேனும் ஒரு அசாதாரணமான சத்தம் கேட்டவுடனேயே அவை மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகின்றன; வழக்கமாக அவை தங்கள் சிறிய பொந்துகளில் வசிக்கின்றனவே தவிர, தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே இடத்தில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதில்லை ||50||

பாம்புகள் தாங்கள் இருப்பதை வெளிப்படையாக அறிவிப்பதில்லை; அதே போல, எவ்விதக் கவலையுமின்றி, கவனக் குறைவுடனும் அவை உறங்குவது இல்லை; அவை காரணமின்றி தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்துவதில்லை; கண்ணில் படும் அனைவரையும் கண்டபடி கடித்துத் துன்புறுத்துவதும் இல்லை ||51||

ஆன்மீகத் தேடலில் இருப்பவர்களுக்குத் துணை புரியும் இத்தகைய நற்பண்புகள் அனைத்தையும் உள் வாங்கிக் கொள்வதற்காகவே, நான் பாம்பை ஒரு குருவாகப் போற்றுகிறேன்; அதன் நடத்தையைப் பின்பற்றி, ஒருவன் தான் வசிக்கும் இருப்பிடத்தின் மீது அதீதப் பற்று கொள்ளாமல், தனது ஆன்மீக இலக்கின் மீது மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தத் தீர்மானிக்க வேண்டும் ||52||

ஒருவன் வசிக்கும் வீடு ஒரு சாதாரணக் குடிசையாகவோ அல்லது பழுதான இருப்பிடமாகவோ இருந்தாலும் சரி, பாம்புகளின் வாழ்க்கையில் நிகழ்வது போலவே, எப்போது ஆபத்து அல்லது துயரம் தாக்கும் என்பதை யாரால் கணிக்க முடியும்?; மனித உடல் நோய்க்கும் மாற்றங்களுக்கும் எளிதில் ஆளாகக் கூடியது; ஆகவே நமக்கு தகுதியானது கை கூடும் முன், நாம் அதைக் கைவிட வேண்டுமா?||53||

ஆற்றின் ஓட்டத்தைப் போலவே, மனிதனின் வாழ் நாட்களும் கடந்து செல்கின்றன; தன் வாழ்வில் கடந்து போன ஒரு நாளைக் கூட யாராலும் மீண்டும் திரும்ப அழைக்க முடியாது; ஆகவே தற்காலிகமான இருப்பிடத்தை விட்டுத் தாங்கள் எப்போது விடைபெற நேரிடும் என்பதை யாராலும் உறுதியாகக் கூற இயலாது ||54||

கர்மா பலனளிப்பதால், மனிதர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் ஒரே இருப்பிடத்தில் கழிப்பது அரிது; எனவே அத்தகைய கட்டமைப்புகளை உருவாக்குவதில் நேரத்தையும், பணத்தையும், முயற்சியையும் செலவிட வேண்டாம், அதன் மீது பற்று கொள்ளக் கூடாது; ஒரு பாம்பே அத்தகைய பற்றின்மையை போதிக்கிறது ||55||

சிறந்த தியானத்திற்கு, ஆரம்பத்தில் ஆசனங்களையும் சுவாச நுட்பங்களையும் பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது; அதன் விளைவாக ஒருவர் வெளிப்புற செயல்களால் பாதிக்கப்படாமல் இருக்கின்றார்; இதை அம்பு செய்பவர் போதிக்கிறார்; அவரை நான் இருபத்தி இரண்டாவது குருவாகக் கருதுகிறேன்||56||

ஒருமுறை அந்த கை வினைஞர் தனது வேலையில் மூழ்கியிருந்தார்; அவரது கடைக்கு எதிரே மன்னர், இசைக் கலைஞர்கள், ஒரு அணிவகுப்பு மற்றும் பிற உபகரணங்களுடன் முழு அரச பரிவாரமும் கடந்து சென்றது; ஆனாலும் கொல்லன் அவர்கள் கடந்து செல்வதை அறியாமல் இருந்தார்||57||

யாராவது அர்த்தமற்ற உளறல்களை உதிர்த்தாலோ, அல்லது ஏதேனும் விரும்பத்தகாத சத்தம் கேட்டாலோ, அவற்றை பொருட்படுத்தாமல் தனது கவனத்தை கையில் உள்ள வேலையில் வைத்திருக்க முடிந்தால், அவர் வெளிப்புறத்துடன் எந்த புலன் தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்று கருதப்படுகிறார் ||58||

ஒரு யோகி ஒரே ஆசனத்தில் நிலை பெற்று, சுவாசத் திறன்களை வென்று, மற்ற அனைத்தின் மீதும் பற்றின்றி தனது யோகக் கலையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்; அவ்வாறு செய்யும் திறமையை அடைந்ததும், அவரால் இருமை அல்லது முரண்பாடுகளைக் கடந்து, சமாதி நிலையின் பக்தி மயமான ஈடுபாட்டிற்கான பாதையில் செல்ல முடியும்||59||

ஒருவேளை அத்தகைய ஆசனங்களும் சுவாசமும் வெல்லப் படாவிட்டால், நிச்சயமாகத் தடைகள் ஏற்படும்; சுவாசத் திறனை அடக்குவதன் மூலமே, மனமும் அதன் அலைபாயும் போக்குகளையும் கட்டுப்படுத்த முடியும்||60||

உருவமற்ற இறை நிலையை விட, நமக்கு விருப்பமான ஒரு வடிவத்தில் (இஷ்ட தெய்வம்) மனதை நிலை நிறுத்துவது எளிது; அந்த வடிவத்தின் மீது மனம் நிலை நிறுத்தப்படும்போது, வெளி உலகச் சிதறல்கள் குறைகின்றன; அப்போது புலன் உணர்வுகள் அனைத்தும் உள் நோக்கித் திரும்பி, ஒற்றைப் புள்ளியில் குவியத் தொடங்குகின்றன||61||

அதுவே யோக மார்க்கத்தின் இரகசியம்; தொடர்ச்சியான பயிற்சி செய்யும்போது மனதையும் அதில் அலை பாயும் எண்ணங்களையும் கட்டுப்படுத்த உதவுகிறது; அதன் பிறகு, ஆத்ம விடுதலையை தேடுபவர் தனது குறிக்கோளில் நிலைத் தன்மையுடன் கவனம் செலுத்த முடிகிறது ||62||

தன் பணியில் ஈடுபட்டு உள்ள அம்பு செய்பவனைப் போல, தேடுதலில் ஈடுபட்டு உள்ளவர்கள் வெளித் தெரியும் காட்சிகளினாலும், ஒலிகளினாலும் எந்த பாதிப்பையும் அடைவதில்லை; அவர்கள் தங்கள் புலன் இச்சைகளுக்கு அடிபணியாமலும், உறங்காமலும் இருக்கிறார்கள்; அத்தகையவர்களால் தெய்வீகத்துடன் உணர்வு பூர்வமான ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்||63||

தூய்மையுடன் தொடர்புடைய இயற்கையின் ‘சத்துவ’ குணம் மேலோங்கி நிற்கும்போது, மற்ற இரண்டு குணங்களான ‘ரஜஸ்’ மற்றும் ‘தமஸ்’ (அதாவது செயல்பாடு மற்றும் சோம்பல்) ஆகியவை மெல்ல மறைந்து விடுகின்றன; அந்த தருணத்தில் அவனது மனம், எரிந்து கொண்டிருக்கும் தீயில் எரியும் விறகுக் கட்டை போன்று இருக்கும்; விறகு தீயில் சங்கமித்த பிறகு அது தீயாகவே மாறி விடுகிறது; அதேபோல், சத்துவ குணத்தில் மனிதன் இயற்கையின் பேரமைதியோடு இரண்டறக் கலந்து விடுகின்றான்||64||

மனமும் அதன் புலன்களும் நான் என்பதில் ஒன்றிணைந்து விடும்போது, வெளி அல்லது உள் சார்ந்த எந்தவொரு சலசலப்பிலும் மனம் தொடர்பு கொள்வதில்லை; இதுவே அம்பு செய்பவனிடமிருந்து நான் கற்ற பாடம் ஆகும்; இந்த முறை, ஆத்மாவின் சாரத்தை மிக விரைவான முறையில் அடைவதற்கு வழி வகுக்கிறது||65||

ஒருவன் எதை இடைவிடாமல் சிந்திக்கிறானோ, அதுவாகவே மாறுகிறான்; மனதை எதன் மீது குவிக்கிறோமோ, மனம் அந்த வடிவத்தை ஏற்கிறது; இதுவே அந்தப் பூச்சியிடமிருந்தும், அதனால் சிறை பிடிக்கப்பட்ட புழுவிடமிருந்தும் நான் கற்றுக் கொண்ட உண்மையாகும்; இதன் மூலம் காலப்போக்கில் அவன் அத்தகைய இலட்சிய வடிவமாகவே தன்னை மாற்றிக் கொள்ள முடியும்.||66||

ஒரு குளவி மிகுந்த முயற்சி எடுத்து ஒரு புழுவைப் பிடிக்கிறது; பின்னர் அதனைச் சுவரில் அமைந்துள்ள தனது இருப்பிடத்திற்குக் கொண்டு செல்கிறது; அங்கே அப் பூச்சி அந்தப் புழுவை மீண்டும் மீண்டும் கொட்டிக் கொண்டே இருந்து, அதன் மனதில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது ||67||

கடும் அச்சத்தின் காரணமாக, அந்தப் புழு தான் கடந்த காலத்தில் எத்தகைய வடிவத்தில் இருந்தது என்பதை முற்றிலுமாக மறந்து விடுகிறது; இறுதியில், தன்னைத் தொடர்ந்து கொட்டிய அந்தப் பூச்சியின் வடிவத்தையே அது தானும் ஏற்றுக் கொண்டு, தன்னை முழுமையாக உருமாற்றிக் கொள்கிறது என்று கூறப்படுகிறது ||68||

குலம், வயது, பதவி, கௌரவம் போன்ற சமூக அடையாளங்கள் உடல் சார்ந்தவை; ஆன்மீக சாதகன் அவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தான் அடைய விரும்பும் இலக்கின் மீதான சிந்தனையில் மூழ்கி, அதுவாகவே மாறும் நிலையில், சாதகனுக்கும் அந்த இலட்சியத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு மறைந்து, அவன் அந்த வடிவத்தையே அடைகிறான்||69||

இவ்விதமாகவே, ஒரு சாதகன் தனது தீவிரமான சிந்தனையின் வாயிலாக, தான் தேடும் அந்தப் பரம்பொருளுடன் இரண்டறக் கலந்து இரண்டற்ற நிலையை அடைகிறான்; இதில் ஜீவாத்மாவும் (தனி ஆத்மா ) பரமாத்மாவும் (பரம்பொருள்) ஒன்றே என்ற தெளிவு பிறக்கிறது; வியப்புடன் கூடியதாயினும் இந்த உணர்வுப் பூர்வமான இணைப்பு சாத்தியமாகிறது||70||

உடலெடுத்த தனி ஆத்மா வானது, பிடிபட்ட ஒரு புழுவைப் போன்றது; அது அன்பு, வெறுப்பு அல்லது அச்சம் இவற்றுள் எந்த காரணமாக இருப்பினும் இறைவனைப் பற்றியே இடை விடாமல் சிந்தனை செய்து வருமானால் தான் தேடும் அந்தத் தெய்வத்தின் வடிவத்தையே அடைவது உறுதி ||71||

எவர் ஒருவர் அந்தப் பரம்பொருளுடன், அன்பின் அடிப்படையில் உறவு கொண்டு, இறைவனுக்குச் சேவை செய்வதிலேயே தங்கள் காலத்தை கழிக்கிறார்களோ, அவர்கள் இந்த உலகிலேயே உலகியல் இன்பங்களையும், மேலுலகங்களில் முக்திப் பேறையும் அடைகிறார்கள்||72||

ஓ சீடனே, கவனமாக இதைக் கேள்; எவன் ஒருவன் அச்சத்தினாலோ அல்லது தீவிரமான வெறுப்பினாலோ இறைவன் மீது பக்தி கொள்கிறானோ, அவன் இவ்வுலகில் மிகக் குறுகிய காலமே வாழ்ந்து, பின்னர் மேலுலகங்களில் முக்திப் பேறை அடைகிறான்; இதுவே எனக்கு இருபத்து மூன்றாவது குருநாதர் அருளிய உபதேசமாகும்||73||

சிலந்திப் பூச்சியே எனது அடுத்த குருவாகும்; அது இரண்டற்ற நிலையை (அத்வைத்ய) நிலையை அறியும் வழியை எனக்குக் கற்பிக்கிறது; இது மிகவும் சிறப்பானதொரு உபதேசமாகும்; மேலும், இது உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியப்பட வேண்டிய ஒன்றாகும்’ ||74||

அவதூதர் தொடர்ந்து கூறினார் ‘ஓ யதுகுல மன்னனே, சிலந்திப் பூச்சியானது தனது தொப்புளிலிருந்து தானே நூலை வெளிப்படுத்தி, அதைக் கொண்டே தனக்கான ஒரு வலையை (வீட்டை) அமைத்துக் கொள்கிறது என்பது அனைவரும் அறிந்ததே; அந்த வலையிலேயே அது இரவும் பகலும் தங்கியிருந்து, தனித்திருந்து மகிழ்கிறது ||75||

இறுதியில், தான் உருவாக்கிய அந்த வலையை தானே விழுங்கி விட்டு, மீண்டும் தனித்த நிலையில் இருக்கின்றது; அவ்வாறே, இறைவனும் படைப்புச் செயலின் வாயிலாக பிரபஞ்சத்தை படைத்து, அதை அனுபவத்திற்குரியதாக மாற்றுகிறான்; பின்னர் அதை நிலை பெறச் செய்து, இறுதியில் அழித்து, மீண்டும் அனுபவத்திற்கு அப்பாற்பட்ட நிலைக்குக் கொண்டு செல்கிறான் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும் ||76||

தொடக்க காலத்தில் எவ்வாறு இருந்ததோ, அவ்வாறே இப்போதும் இறைவன் ஒருவனே தனித்து நிற்கிறான்; அவனைத் தவிர வேறு எதுவும் அங்கே இருக்கவில்லை; நான் பலவாகப் பெருக வேண்டும் என்ற அவனது விருப்பத்தினாலும், சர்வ வல்லமை படைத்த அவனது அருள் பார்வையினால் மட்டுமே, இந்த பிரபஞ்சத்தின் படைப்புகளும், அதில் வாழும் உயிரினங்களும் தோன்றின ||77||

உலகங்களைத் தாங்கி நிற்பது அந்தச் சர்வ வல்லமை பொருந்திய தெய்வமே; எங்கும் பல்வேறு வடிவங்களில் மகிழ்ந்திருப்பது அவரே; இறுதியில் அனைத்தையும் அழித்தொழிப்பவரும் அவரே; எல்லாம் அறிந்த காலத்தின் ஆற்றலாகத் திகழ்பவரும் அவரே||78||

அதே போன்று, இயற்கையின் முக் குணங்களான தூய்மை (சாத்வீகம்), செயல்பாடு (ராஜசம்) மற்றும் மந்த நிலை (தாமசம்) ஆகியவற்றின் ஆற்றலானது, இறைவனின் ஆண் மற்றும் பெண் வடிவங்களில் ஒன்றிணைந்திருந்தது; அந்த இறைச் சாரம் பல்வேறு வடிவங்களில் தோன்றி மகிழ விரும்பிய போது, அதே ஆற்றல் மீண்டும் புதிதாகப் படைக்கப்படுகிறது||79||

தொடக்க காலத்தில், அனைத்து உயிரினங்களையும் சார்ந்த உடலுடைய ஆத்மாக்கள் அனைத்தும், எவ்விதம் எங்கும் நிறைந்த இறைவனிடத்தில் ஒடுங்கி ஓய்வெடுத்திருந்தனவோ, அவ்விதமே எல்லாம் அறிந்த இறைவன் விரும்பும்போது, அவை மீண்டும் வெளிக் கொணரப்பட்டு, அனுபவ உலகிற்குள் புகுத்தப்படுகின்றன||80||

படைக்கப்பட்டவர்களில் உயிருடன் இருக்கும்போதே முக்தி நிலையை அடைபவர்கள் பரமானந்தத்தை உணர்கிறார்கள்; மற்றவர்களோ, பிரளய காலத்தின் போது கூட ஒரு நீண்ட, கனவற்ற, உணர்ச்சியற்ற, ஆழ்ந்த உறக்க நிலையில் (சுஷுப்தி – dreamless sleep) இருக்கின்றார்கள்; பின்னர், புதிய படைப்பு தொடங்கும் போது, முந்தைய கர்ம வினைகளின் அடிப்படையில், அவர்கள் எந்தப் பரிணாம நிலையில் அல்லது எங்கு வாழ்வை நிறுத்திக் கொண்டார்களோ, அங்கிருந்தே மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்குகிறார்கள் ||81||

ஓ மன்னா அதனால்தான், உறங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புவது போற்றுதலுக்குரிய செயல் என்று கூறப்படுகிறது; தெய்வத்திடம் சரண் அடைவதால் கிடைக்கும் நற்பயன் எத்தகையது என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவே அவர்கள் எழுப்பப்படுகின்றார்கள் ; அத்தகையதொரு சாத்தியக்கூறு உள்ளது என்று அவர்களுக்கு உணர்த்துவதே இதற்கான முதல் படியாகும்||82||

காலம் (Time) கனியும்போது, படைப்புத் தொழிலுக்காக இறைவன் தனது சக்தியான மாயையைத் தூண்டுகிறார்; மாயை என்று அழைக்கப்படும் இறைவனின் பெண் வடிவத்தை முக்குணங்களை (இயற்கைப் பண்புகளை) ஏற்றுக் கொண்டு உருவெடுக்கச் செய்வது அந்தச் சர்வ வல்லமை பொருந்திய இறைவனே ஆகும்; அப்போதுதான், ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில், உலகங்களும் அதில் வாழும் உயிரினங்களும் தோன்றிச் செயல்படத் தொடங்குகின்றன. *
{*இந்த செய்திகள் அனைத்துமே சாங்கியம் மற்றும் ஸ்ரீமத்மத் பாகவதம் போன்ற புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ள பிரபஞ்சத் தோற்றக் கொள்கையை (Cosmology) அடிப்படையாக கொண்டு உள்ளவை} ||83||

மேற் கூறிய செயல்பாடும் இறைவனின் ஒரு மகிழ்ச்சியான திருவிளையாடலே ஆகும்; அத்தகைய வலிமை வாய்ந்தது அந்த தெய்வத்தின் சங்கல்பம் (தீர்மானம்); அந்த தெய்வம் படைத்து இருந்த பல்வேறு வடிவங்களில் மகிழ்ந்திருக்கும் காலம் நிறைவடைந்த பிறகு, அந்த இறைவன் மீண்டும் அனைத்தையும் தனக்குள்ளேயே அடக்கிக் கொள்கிறான் ||84||

ஆகவேதான், பரம்பொருள் (பரமாத்மா) என்பது ஒன்றே ஒன்றுதான் என்று கூறப்படுகிறது; அந்த ஒரே பரம்பொருள், மாயை அல்லது இயற்கையின் காரணமாகப் பல பெயர்களுடனும் (நாமம்), பல வடிவங்களுடனும் (ரூபம்) காட்சி அளிக்கிறது; அந்த ஒரே உண்மையை (பரம்பொருள்) உணரும் அறிவே ஞானம். இதுவே நுண்மையான பகுத்தறிவு (Subtle Intellect) எனப்படுகிறது||85||

சிலந்திப் பூச்சியானது, வேறு எவரையும் எப்பொருளையும் சாராமலும், எதையும் விரும்பாமலும், தானே தனது வலையைப் படைத்து, அதைப் பராமரித்து, இறுதியில் அதை அழித்து விடுவதைப் இந்த உலகம் இறைவனிடமிருந்தே தோன்றியது; அவர் வேறொரு பொருளைக் கொண்டு இதைப் படைக்கவில்லை; பிரளய காலத்தில் அவரே அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு விடுகின்றார் ||86||

பல்வேறு புனிதத் திருநாமங்களால் போற்றப்படுவது அந்தத் தெய்வீகப் பரம்பொருளே; எங்கும் நிறைந்துள்ள அந்த விஷ்ணு எனும் பரம்பொருளிலிருந்து நான் வேறுபட்டவன் அல்ல; எனது குருமார்கள் அனைவரும் போதித்த உபதேசங்களின் சாரமும் இதுவேயாகும் ||87||

ஆனால், பற்றற்ற மனநிலை இல்லாவிடில், இத்தகைய ஆன்மீக ஞானம் ஒருவரின் உள்ளத்தில் நிலைத்திருக்காது; எனவே, இந்த உடலையே எனது இருபத்து ஐந்தாவதும் இறுதியுமான குருவாக நான் கருதுகிறேன்; ஏனெனில், இதில் இருந்து நான் கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்கள் நிறையவே உள்ளது ||88||

நானே இந்த உடல் என்று கருதி, அதனைப் பேணிப் பாதுகாக்கப் பெரிதும் முயல்பவர்கள், இறுதியில் அதே உடல் புழுக்கள், பூச்சிகள், நாய்கள் மற்றும் நரிகளுக்கு உணவாகிப் போவதைக் காண்கின்றனர்; அப்படியென்றால், அப்போது அந்த உடல் யாருக்குச் சொந்தமாக இருக்கும்? ||89||

இந்த உடல் என்பது, பெற்றோரின் இனப் பெருக்கத் திரவங்கள் இணைந்ததின் விளைவாக உருவானதாகும்; இந்த உடல் நிலையற்றது, பிறப்பால் உருவானது என்பதினால் சில சமயங்களில் அந்த உடலே துன்பங்களுக்கு களஞ்சியமாக இருந்து விடுகின்றது||90||

ஆனால் ஒருவனுக்கு உடல் இல்லா விட்டால், அவன் பற்றின்மையை எப்படிக் கற்றுக் கொள்வான்? மேலும், அத்தகைய பற்றுதான் துன்பத்திற்கு காரணமாக இருக்கும் எனில், ஆத்ம விடுதலையை தேடுபவர்களது மனதை யார் அமைதிப்படுத்த முடியும்? ||91||

இந்த உடல் பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றின் சேர்க்கை மட்டுமே; படைப்பில் உள்ள அனைவருக்கும் இது ஒன்றுதான்; தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கும், வாரிசுகளை உருவாக்குவதற்கும் மட்டுமே இது செயல்படுகிறது; இது ஒரு மரமும் அதன் விதையும் போன்றதே ஆகும் ||92||

மரங்கள் பட்டுப் போய் அழிவதற்கு முன், பல்வேறு வழிகளில் தங்கள் விதைகளைச் சிதற விட்டு, பூமியில் தங்கள் இனத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கின்றன; அப்படி சிதறி விழும் விதைகளின் மூலமாகவே பல மரங்கள் வெளியாகி வளர்கின்றன; உடலின் நிலையும் இத்தகையதே ஆகும்||93||

ஒருவன் உடலைத் தாங்கியிருக்கும்போது, எண்ணம், சொல் மற்றும் செயல் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் கர்மங்களின் அடிப்படையில் அவன் உலகத்தினரோடு ஒட்டி உறவாடுகின்றான்; அந்த செயல்கள் அனைத்தும் பந்தத்தை ஏற்படுத்துகின்றன; அந்த பந்தங்களே மற்றொரு உடலைப் பெறுவதற்கான காரணங்களாக அமைகின்றன; ஒரு மனிதன் எப்போது நான் வெறும் உடல் அல்ல, என் புலன்கள் காட்டும் உலகம் நிலையற்றது என்ற விழிப்புணர்வைப் பெறுகிறானோ, அப்போதுதான் அவனுக்கு மெய்யறிவு பிறக்கிறது ||94||

அப்படி விழிப்புணர்வு பெற்ற நிலையில் ஆன்மீகப் பாதையில் முதல் அடியை எடுத்து வைத்து மெய்ஞானம் அடைந்த குருமார்கள் காட்டும் வழியில் பயணிக்கத் தொடங்குகிறான்; இல்லை என்றால் மனம் எனும் கடிவாளம் அற்ற குதிரை, கடமை உணர்வுள்ள பணியாளர்களைப் போல இருந்து கொண்டு, புலன்கள் எனும் குதிரையை நோக்கி அவனை ஓட வைக்கின்றன; அந்த நிலை பல மனைவிகளை உடைய ஒருவனை ஒவ்வொரு மனைவியும் தன் பக்கம் இழுக்க முயல்வதை போன்றது||95||

அத்தகைய நடத்தை அனைத்து துயரங்களுக்கும் ஆணிவேராகி மனக் கொந்தளிப்பையும் துன்பத்தையும் விளைவித்து தடுமாற வைக்கும்; சீழ் மற்றும் கழிவுகள் போன்ற அசுத்தங்களை கொண்டதே இந்த உடல் என்றாலும் கூட மானிடப் பிறவி எடுத்து இத்தகைய உடலைப் பெறுவதே மிகவும் புண்ணியமாக கருதப்படுகின்றது ||96||

விதிப்படி பல்வேறு வடிவங்களையும் இனங்களையும் கொண்ட உடல்கள் வெளி வந்தாலும் மானிடப் பிறவி எடுத்து மனித உடலைப் பெறும்போது மட்டுமே, ஒருவன் அளவற்ற மகிழ்ச்சி அடைகின்றான் ||97||

மனித உடலைக் கொண்டிருக்கும்போது மட்டுமே, பிறப்பு-இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிகளில் ஒருவன் பயணிக்க முடியும்; ஓ மன்னா, அத்தகைய விடுதலையை தேடி அலைந்து பெற்று இங்கு வந்துள்ளேன்; அதனால்தான், எந்த சூழ்நிலைகளும் என்னைச் சற்றும் பாதிக்காத நிலையில், நான் இங்கே நிம்மதியுடன் சாய்ந்து கொண்டு அமர்ந்திருப்பதை நீ காண்கிறாய்||98||

சமஸ்கிருதச் செய்யுள்: ‘யுக்திபி: சததம் பூப பூர்வ-உக்தபிர் யயா தியா, ஸ்வாத்ம-ரூப விவேசேஹ பிரம்ம பூதோ-ஸ்மி அசம்சய’ *
இதன் விளக்கம் என்ன என்றால் ‘ மன்னனே! முன்பு கூறப்பட்ட சாஸ்திர யுக்திகளினாலும் (வழி முறைகளினாலும்), எக்காலத்திலும் இடைவிடாது தியானிக்கும் புத்தியினாலும், ஒருவன் இந்த உலகிலேயே தன் சுய-ஆத்ம வடிவத்தை உடலிலிருந்து பிரித்து உணரும்போது, அவன் ‘நானே பிரம்மமாக இருக்கிறேன்’ (பிரம்ம சொரூபம்) என்ற நிலையை எவ்வித சந்தேகமும் இன்றி அடைகிறான்’
{* இந்த ஸ்லோகம் விஷ்ணு புராணத்தில் (6.7.94) வரும் புகழ் பெற்ற தத்துவ வரிகளாகும்} ||99||

குரு வேத தர்மா தன் சீடரான தீபக்கிடம் தொடர்ந்து கூறினார் ‘யதுகுல மன்னன், முழு விளக்கத்தையும் ஒரு முகப்பட்ட கவனத்துடன் கேட்டதும் பரவசமடைந்தார்; அவரது நற்பண்பான பற்றின்மையின் உதவியால், அவரால் ஒரு உண்மையை ஊகித்தறிய முடிந்தது; ‘இந்தத் துறவியே, முனிவர் அத்திரியின் திவ்யப் புதல்வர்’ என்று உணர்ந்து, அவர் மிகுந்த பக்தியுடன் வணங்கினார்||100||

அவர் கூறினார் ‘ஓ இறைவா, எவ்விதமான வீண் பெருமையோ அல்லது கபடமோ இன்றி, உமது அருளினால் இந்த ஞானத்தை நான் பெற்று, என் உள்ளத்தில் உள் வாங்கிக் கொண்டேன்; இவ்வாறு என்னை நீங்கள் புனிதப்படுத்தியுள்ளீர்; இனிமேல் எனக்கு எதன் மீதும், எவ்வித விருப்பமும் இல்லை||101||

படைப்பின் பன்முகத் தன்மையில் வெளிப்படையாகத் தெரிபவர் நீரே; அப்படைப்பின் ஒவ்வொரு அங்கத்திற்கும் நான் தலை வணங்குகின்றேன்; உங்கள் போதனைகளை என் உள்ளத்தில் ஆழமாகப் பதித்துக் கொண்ட பிறகு, இனி என்ன இருமை நிலைகளோ அல்லது இன்ப துன்பங்களோ எந்த விதத்திலும் பாதிக்க முடியாது||102||

உலகங்களையும் அதில் வாழும் உயிரினங்களையும் படைத்து, காத்து, அழிக்கும் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரின் வடிவமாகத் திகழ்பவர் நீரே; நான் உங்களுக்கு வணக்கம் செலுத்தி, எனது எதிர் காலம் குறித்த உங்களது அனுமதியையும் வழி காட்டுதல்களையும் கோருகிறேன்’ இவ்வாறு அரசர் அந்த இறைவனின் பாதங்களில் விழுந்து வணங்கினார்; இறைவனின் கட்டளைப்படியே, அவர் தான் விரும்பிய இடங்களிலெல்லாம் சுதந்திரமாகச் சஞ்சரித்தவாறு அவரது வாழ்க்கையில் இருந்தார் ||103||

II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் ஐம்பதாவது (50) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 103
முதலாவது அத்தியாயம் முதல் ஐம்பதாவது (50) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
103 + 5295 = 5398

*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}

……இதோடு பாகம் -11, அத்தியாயம் 50  முடிவடைந்தது
அத்தியாயம் 51 தொடர்கின்றது