COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பகுதி 9 : ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் போதனைகள்
அத்தியாயம் 27
நாகலோக மன்னனின் புதல்வர்களும் இளவரசனும்
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
குரு வேத தர்மா, தனது சீடன் தீபக்கிடம் கூறினார் ‘மன்னர் சத்ருஜித் மிகுந்த தயக்கத்துடனும் ஆழ்ந்த வருத்தத்துடனும் இருந்த அந்த நேரத்தில்தான் இளவரசன் குவலயாஸ்வன் தன் தந்தையைச் சந்தித்தான்; குவலயாஸ்வனின் அன்பு மனைவியின் மறைவு குறித்தும், அவளுடைய மறைவிற்கான காரணம் குறித்தும் தமது மகனிடம் தெரிவிக்கும் துயரமான கடமை அவருக்கே வாய்த்திருந்தது ||1||
தன் தந்தையின் மன வேதனையை உணர்ந்த இளவரசன் மீண்டும் வினவினான் ‘தந்தையே, உங்கள் உள்ளம் ஏதோ துயரத்திலும் கலக்கத்தாலும் நிறைந்திருப்பதாக உணர்கின்றேன்; நீங்கள் என்னிடம் சொல்லாமல் மறைக்கும் விஷயம் அது என்ன? ||2||
உங்களுக்கு இந்த மனத் துயரை ஏற்படுத்தியது எது?; யாரேனும் உங்களை அவமதித்திருந்தால் என்னிடம் கூறுங்கள்; நான் அவர்களின் ஆணவத்தை அடக்குகின்றேன்; உங்கள் துயரத்திற்கான காரணத்தை நானே ஊகித்துக் கொண்டு குழப்பமடைய விரும்பவில்லை ||3||
இல்லை குற்றமிழைத்துச் சிறைப்பட்டிருக்கும் எவராவது ஒருவரை நான் விடுவிக்க வேண்டுமா?; அல்லது வேறு எவருக்கேனும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமா?; ஏதேனும் ஒரு ஏழைக்குச் செல்வம் தேவைப்படுகிறதா?; அல்லது தீய குணம் கொண்ட செல்வந்தர் ஒருவரைத் தண்டிக்க வேண்டுமா; எதைச் செய்ய வேண்டும் என்று உடனே எனக்குக் கட்டளையிடுங்கள்||4||
உங்கள் மனதை வாட்டும் விஷயம் எது? தயவுசெய்து என்னிடம் வெளிப் படையாக கூறுங்கள்; வீண் சந்தேகங்களுக்கு அல்லது தவறான புரிதல்களுக்கு இடமளிக்காதீர்கள்; உங்கள் கட்டளையைச் சிரமேற் கொண்டு நிறைவேற்றுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன்||5||
தந்தையே, காந்தர்வ குலத்தைச் சேர்ந்தவரும், உங்கள் மருமகளான என் அன்பு மனைவி மதாலஸா’வை நீங்கள் நன்கு அறிவீர்கள் அல்லவா?; அவள் ஏதேனும் தவறு இழைத்து விட்டாளா?; அப்படியென்றால் என்னிடம் கூறுங்கள்; நான் அவளை நம் அரண்மனையை விட்டு வெளியேறுமாறு ஆணை இடுகின்றேன்||6||
அவளுடைய பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே, மன்னர் சத்ருஜித்தின் மனம் அச்சத்தால் இன்னும் அதிகமாக நிரம்பியது; இப்போது ஏன் இவன் மதாலஸாவின் பெயரைச் சுட்டிக் காட்டுகிறான்?’ என்று வியந்தவாறே, அவர் தன் மகனின் முகத்தையே உற்று நோக்கினார் ||7||
துணிவை வரவழைத்துக் கொண்டு அவர் பதிலளித்தார் ‘ஐயோ, எப்படிக் கூறுவது; நமக்கு என்ன நேர்ந்து விட்டது மகனே, பார்த்தாயா? உன்னைப் பற்றித் துயரமான செய்திகளைக் கேட்டதும், உன் மனைவி தன் உடலைத் துறந்து மேலுலகங்களுக்குச் சென்று விட்டாள்; மகனே, இதைத் தவிர வேறு என்னதான் நான் உனக்குச் சொல்ல முடியும்? ||8||
அன்பு மகளே மதாலஸா! நீ ஏன் உன் கணவனையும், எங்கள் அனைவரையும் விட்டு விட்டுப் பிரிந்து சென்றாய்? என்று அரசர் புலம்பிக் கொண்டிருக்கையில், அவரை இடை மறித்த இளவரசன் ‘உண்மையில் அவளுக்கு என்னதான் நடந்தது?’ என்று பதபதைப்புடன் வினவினான் ||9||
அப்போது அரசர் தன் கண்களைத் துடைத்துக்கொண்டே கூறினார் ‘கேள் மகனே, நீ காட்டிற்கு சென்றிருந்த சமயத்தில், ஒரு துறவியைப் போன்ற தோற்றமுடைய முனிவர் ஒருவர் இங்கு வந்தார் ||10||
அவர் தலையில் பெரிய ஜடா முடி காணப்பட்டது; பார்ப்பதற்கு ஒரு மகத்தான முனிவரைப் போலவே தோன்றினார்; அவர் உன் மனைவியைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார்; எங்கள் அனைவர் முன்னிலையிலும் துயரம் தோய்ந்த முகத்துடன் நின்றார்; அவர் உன் புனிதமான மணி மாலையை அவையில் வைத்து விட்டு, நீ அகால மரணமடைந்து விட்டதாக எங்களிடம் கூறினார் ||11||
அந்தத் துயரமான வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்திலேயே, கந்தர்வனின் சிறந்த மகளான மதாலஸா, சற்றும் தயங்காமல் உடனே ஒரு சிதையை மூட்டி, கற்புக்கரசிகளுக்குரிய மரபுப்படி அதில் புகுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். ||12||
இந்தக் கொடிய, எதிர்பாராத பெரும் விபத்து நம் அனைவருக்கும் நேர்ந்து விட்டது; அவள் தன் உடலை வீணாக துறந்து விட்டாள்; யார் அந்த முனிவர்?; அவர் எதற்காக இங்கு வந்தார்?; அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்பதை என்னால் இப்போதும் புரிந்து கொள்ளவே முடியவில்லை.'” ||13||
இளவரசன் கூறினான் ‘தந்தையே, நான் தனியாகக் காட்டின் உள்ளே சென்றிருந்தபோது, அங்கே ஒரு முனிவரின் ஆசிரமத்தைக் கண்டேன்; உடல் முழுவதும் திருநீறு பூசியிருந்த அவர், பார்ப்பதற்கு ஒரு புனிதரைப் போலவே காட்சியளித்தார் ||14||
அவர் தான் செய்ய உள்ள யாகத்தை நிறைவு செய்வதற்காகப் அந்தணர்களுக்கு தட்சணை அளிக்க வேண்டி இருந்தது; அதற்கு தட்சிணையாக ஏதேனும் ஒரு பொருளை பொருள் அளிக்குமாறு என்னிடம் கோரினார்; அவரது கொடூர மனத் தன்மையை அறியாத நான், ஒரு புனிதருக்கு சேவை செய்யும் நன்னோக்கத்துடன், என் புனிதமான மணி மாலையை அவரிடம் கொடுத்து விட்டேன்; என்னிடம் அப்போது கொடுக்க வேறு எதுவுமே இல்லை ||15||
நமக்கு இந்தத் துயரத்தை விளைவித்தவன் அவனேதான்; இப்போது நான் அவனை அடையாளம் கண்டு கொண்டேன்; அன்று நான் அவனைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் இருந்து விட்டேன்; அவன் வேறு யாருமல்ல; அவன் தாளகேது (Talked) என்னும் அரக்கனே ஆவான் ||16||
எந்தவொரு மனிதனும், தனக்கு சமாளிக்கும் ஆற்றல் இருக்கும்போதே, தன் எதிரிகளை விரைவாக ஒழித்துக் கட்ட வேண்டும்; அது நெருப்பாக இருந்தாலும் சரி, கடனாக இருந்தாலும் சரி, எதையும் கவனிக்காமல் விட்டு விடவே கூடாது {மேலும், நோய்கள் மற்றும் விஷப் பாம்புகள் குறித்து ஒருவன் ஒருபோதும் கவனக் குறைவாக இருக்கக்கூடாது}||17||
இப்போதுதான் அவன் கூறிய வார்த்தைகளின் உண்மையை நான் உணர்கிறேன்; என் குடும்பத்தை நிர்மூலமாக்கி விட்டான்; இப்போது நான் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளேன்; என் அன்பு மனைவியைப் பிரிந்ததால் ஏற்படும் வேதனை சுட்டெரிப்பதாக உள்ளது ||18||
இப்போது, இப் பிறவிக்குரிய கடனிலிருந்து விடுபட விரும்பி, என் மனதில் ஒரு உறுதியை மேற் கொள்கின்றேன்; இந்த பிறவியில் நான் மறு மணம் செய்து கொள்ள மாட்டேன்; வேறெந்த பெண்ணையும் என் மனைவியாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் ||19||
ஏற்கனவே சால்வைகளால் தன்னை மூடிக் கொண்டிருப்பவனுக்கு, இன்னொரு போர்வையை பரிசளிப்பதால் என்ன பயன்?; அத்தகைய கொடையை அவனால் எவ்வாறு போற்ற முடியும்?; ஆகையால், பல திருமணங்களைச் செய்து கொள்வதில் எனக்குச் சிறிதும் விருப்பமில்லை||20||
இவ்வாறு உறுதியாகத் தீர்மானித்து விட்டு, உள்ளுக்குள் துயரம் நிறைந்தவனாக, அவன் ஒரு ஆதரவற்ற நிலையில் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்; அவன் தன் தந்தையின் அரசைத் துறந்து, காட்டையே தன் இருப்பிடமாக ஆக்கிக் கொண்டான் ||21||
அச்சமயத்தில் ‘அஸ்வதர’ என்னும் பெயருடைய தேவ நாகத்தின் புதல்வர்கள், விதி வசத்தால் அவன் இருந்த இடத்திற்கு வந்தனர்; அவன், வாழ்க்கையின் மூன்றாம் நிலையான வானப்பிரஸ்த ஆசிரமத்தில்* இருப்பவனைப் போலவே காட்சியளித்தான்; ஆயினும், அவன் ஒரு இளவரசன் என்பதை உணர்ந்த அவர்கள், அவனுக்கு வணக்கம் செலுத்தினர்.
{* இந்து தத்துவத்தின்படி மனித வாழ்க்கையின் நான்கு நிலைகளில் (ஆசிரமங்கள்) மூன்றாவது நிலையே ‘வானப்பிரஸ்த ஆசிரமம்’ ஆகும். இல்லறக் கடமைகளை முடித்த பின், உலகியல் ஆசைகளில் இருந்து விடுபட்டு, மனதை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தும் வாழ்க்கைப் பகுதியாகும் } ||22||
அவர்கள் தங்களை இளவரசனிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு ‘நாங்கள் இங்கு விளையாடுவதற்காக வந்தோம்; தாங்கள் ஒரு உத்தமமான மனிதராக காணப்படுகின்றீர்கள் ; நாங்கள் தங்களுடன் நட்பு கொள்ள விரும்புகிறோம்’ என்று கூறினர் ||23||
அவர்களின் சொற்களைக் கேட்ட இளவரசன் ‘உங்களை பார்த்த மாத்திரத்திலேயே, நான் புனிதமடைந்ததாக உணர்கிறேன்’ என்று பதிலளித்தான் ||24||
நீங்கள் என்னுடன் நட்பு கொள்ளத் தீர்மானித்தால், நிச்சயமாக எங்கள் குலம் முழுமையும் மேன்மையடையும்; இதில் புதிதாகச் சொல்ல வேண்டிய ஒன்றும் இல்லை’ ||25||
சான்றோர்களின் கருணைப் பார்வையினாலேயே அனைத்துப் பாவங்களும் சாம்பலாகி விடுகின்றன; அப்படியிருக்க, துன்பங்களைப் பற்றிப் பேசவேண்டிய அவசியம் ஏது?; நாங்கள் முக்தி பெறுவதைப் பற்றிக் கூட கவலைப்படவில்லை ||26||
இவ்வாறு அவர்களிடையே நீடித்த சம்பாஷணைகளுக்கு பின்னர் அவர்கள் நண்பர்களாயினர்’ என்று குரு வேத தர்மா கூறினார்; அவர் மேலும் தொடர்ந்து கூறினார் ‘அவ்விருவரும் தினமும் அந்த இடத்திற்கு வருவார்கள்; மூவரும் இணைந்து விளையாடிப் பொழுதைக் கழிப்பபார்கள்; சூரியன் மறையும் வேளையில் அவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு சென்று விடுவார்கள் ||27||
ஞானத்தில் பிரகஸ்பதி முனிவரைப் போன்றவராகவும், புகழில் தேவேந்திரனைப் போன்றவராகவும், அழகில் மன்மதனைப் போன்றவராகவும் இளவரசர் ரிதுத்வஜன் தோற்றம் தருவதாக அந்தத் தெய்வ நாக குமாரர்கள் கருதினர்||28||
இளவரசரோ அவர்களைத் தவ முனிவர்களின் புதல்வர்களாகக் கருதினார்; தினமும் அவர்களுடன் பொழுதைக் கழித்தார்; ஒரு கட்டத்தில் அவர்களின் துணையின்றி அவரால் இருக்கவே முடியாத நிலை ஏற்பட்டது; நாளுக்கு நாள் அவர்களின் நட்பு மேலும் பெருகிக் கொண்டே இருந்தது||29||
ஒரு நாள், அந்த நாக குமாரர்கள் இளவரசரின் கண்கள் சிவந்திருப்பதைக் கண்டனர்; அப்போது அவர்கள், பாசமும் கேலியும் கலந்த குரலில் அவரிடம் இவ்வாறு நகைச் சுவையாகக் கேட்டார்கள் ||30||
‘உம்முடைய மனைவி உம்மை இரவு முழுவதும் உம்மை உறங்க விடாமல் விழித்திருக்கச் செய்திருப்பார் போலும்; அதனால்தான், தூக்கமின்மையால் உம் கண்கள் சிவந்து காணப்படுகின்றன; எங்களுக்கு அப்படித்தான் தோன்றுகிறது’ ||31||
அவர்கள் கூறியதைக் கேட்ட இளவரசர், தன் துயரத்தை வெளிப்படுத்தினார்; ‘அந்த விஷயத்தை விட்டு விடுங்கள்; இந்த நேரத்தில் நீங்கள் விரும்பும் விளையாட்டை நாம் விளையாடுவோம்’ என்று கூறினார் ||32||
விவேகம் மிக்க அந்த நாக குமாரர்கள், பரிவு நிறைந்த குரலில் பதிலளித்தனர்; அந்தத் துயரத்திற்கான காரணத்தை அறிய எண்ணுகின்றோம்; தயவு செய்து எங்களிடம் விரிவாகக் கூறுங்கள்; உங்களுடைய மன வேதனைக்கு காரணம் என்ன?’ என்று வினவினர் ||33||
நல்ல நண்பர்கள் தங்கள் துயரங்களைப் பகிர்ந்து கொள்வர்; அதன் மூலம் நண்பரும் அத் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வார்; பின்னர், அத் துயரத்தைப் போக்கத் தகுந்த அறிவுரைகளை வழங்குவார்; அதன் விளைவாக, மனச் சோர்வை வெற்றி கொள்ள முடியும் என்று கூறினார்கள் ||34||
இளவரசர் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்; கடந்த காலத்தில் நிகழ்ந்த அனைத்தையும் அவர்களிடம் விவரமாகக் கூறினார். இளவரசரின் துயரத்தைக் கேட்டுப் மிக்க துக்கமுற்ற அவர்கள், விளையாடியவுடன் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பினர்||35||
தங்கள் நண்பனின் துயரத்தைப் பற்றிக் கேட்ட அவர்களும் மனம் வருந்தியது ; அனைத்து இன்பங்களையும் துறந்து விட்டு, தனிமையில் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினர் ||36||
அவர்களின் முகங்கள் வாடின; அடுத்து என்ன செய்வதென்று அறியாமல் அவர்கள் திகைத்து நின்றனர்; அவர்களின் பரிதாப நிலையைக் கவனித்து விட்ட தந்தை, அவர்களிடம் வினவினார் ‘உங்கள் மனதை துன்பப்படுத்துவது என்ன? என்று கேட்டார் ||37||
தந்தையின் அன்பிற்குரிய மைந்தர்கள் பதிலளித்தனர் ‘ஒரு நேரடி வம்சாவளியை சேர்ந்த சத்ருஜித் என்ற மன்னனின் மகன் குவலயாஸ்வன் என்பவன் ஆவான்; அவன் எங்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பன் ||38||
அவன் இப்போது பெரும் துயரத்தில் ஆழ்ந்து கிடக்கிறான்; அதனால் நாங்களும் மனம் சோர்ந்து போய் உள்ளோம்; எங்கள் நண்பனான அவன் துயருற்றிருக்கையில் நாங்கள் மட்டும் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?; எங்கள் உற்ற நண்பன் இப்போது ஆதரவற்றவனாய், எவராலும் தேற்ற முடியாத துயரத்தில் உழல்கிறான் ||39||
அதைக் கேட்ட நாக மன்னனான அவர்களது தந்தை தன் மைந்தர்களிடம் வினவினார் ‘அவனது துயரத்திற்கு என்ன காரணம்?; அந்த விவரத்தை என்னிடம் கூறுங்கள்; ஒருவேளை, நாம் அதற்கொரு தீர்வு கண்டு அவனுக்கு உதவலாம் ||40||
இக்கட்டான நேரத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என்று சொல்வார்கள்; எனவே, எப்படியாவது அவனுக்கு உதவலாம்; ஆகையால், அந்தப் பிரச்சனை முழுவதையும் எனக்கு விரிவாக எடுத்துரையுங்கள்; ஒருவேளை, அதற்கான தீர்வு என்னிடம் இருக்கக் கூடும் ||41||
நாக லோகத்தை சேர்ந்தவர்களுக்கு அவர்களது தந்தையின் வார்த்தைகள் ஆறுதலாக இருந்தன, நம்பிக்கையை தந்தது; ஆகவே அவர்கள் கூறினார்கள் ‘எங்கள் நண்பனுக்கு ‘மதாலஸா’ என்னும் பெயருடைய மனைவி ஒருத்தி இருந்தாள்; அவர்கள் இருவரும் சிறிது காலம் மிகவும் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்தி வந்தனர் ||42||
அவள் யோகிகளாலும் பெரிதும் மதிக்கப்பட்டவள்; வானுலக கந்தர்வ இசைக் கலைஞனான விஸ்வாவசுவின் மகள்; இவ்வுலகில் அவனுக்கு அவளைப் போன்றதொரு மனைவியே கிடைக்க முடியாது; அவர்கள் இருவரும் தங்கள் அரசை அமைதியுடனும் இன்பத்துடனும் ஆண்டு வாழ்ந்து வந்தனர் ||43||
ஒரு நாள், அந்த அரசனின் மகனான எங்கள் நண்பன் காட்டிற்குச் சென்றான்; அங்கே,
துறவி வேடம் பூண்ட ‘தாளகேது’ என்னும் அரக்கனை அவன் சந்தித்தான்; அந்த அரக்கன் இளவரசனை ஏமாற்றி அவனது மணி மாலையை வாங்கி கொண்டு, இளவரசனுக்கு தெரியாமல் அவனது அரண்மனைக்குச் சென்றான்; அங்கு சென்று அரச சபையில், ‘ரிதுத்வஜன் (எங்கள் நண்பன்) இறந்து விட்டான்’ என்று பொய்யான செய்தியை கூறி விட்டுத் திரும்பி சென்று விட்டான் ||44||
அந்தத் துயரச் செய்தியைக் கேட்டதும், மதாலஸா உடனே தீக்குளித்து உயிர் துறந்தாள்; தன் அன்பிற்குரிய கணவரின் பிரிவை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை; அந்தத் துயர அலையில் சிக்கி, அந்த நாடும், எங்கள் நண்பனான இளவரசனும் ஆழ்ந்த விரக்தியில் மூழ்கி உள்ளார்கள் ||45||
தன் பிரியத்திற்குரிய மதாலஸையின் ஆழ்ந்த பக்திப் பெருக்கை உணர்ந்த அவர், வேறொரு பெண்ணைத் தன் மனைவியாக ஏற்கப் போவதில்லை என்று உறுதி கொண்டுள்ளார்; அவர் இன்றும் தனிமையில் வாடுவதற்குரிய காரணம், அந்தப் பிரிவின் துயரை அவராலும் தாங்கிக் கொள்ள இயலாமை ஆகும்; அதன் விளைவாக, அவரது நண்பர்களாகிய எங்களாலும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை ||46||
ஒரு உடலெடுத்த ஆத்மா வானது, கர்ம பலன்களை கடந்துதான் செல்ல வேண்டி உள்ளது; அவ்வாறு கடந்து சென்ற பின்னரே, மெய்யான ஞானத்தைப் பெறுவதற்குத் தகுதியான நிலையை அது அடைகிறது; இல்லையேல், அது எதிர் காலத் துயரங்களுக்கு பண்டங்களை சேமித்து வைக்கும் கிடங்கு(பண்டக சாலை) போன்று மாறி விடும் ||47||
எங்கள் நண்பனின் துயரத்தைப் போக்க எங்களுக்கு எவ்வித வழியும் தென்படவில்லை; அவரைத் தேற்றுவதற்கு எங்களிடம் வார்த்தைகளே இல்லை; அவரது துயரத்தை எங்களால் பார்த்துக் கொண்டும் இருக்க முடியவில்லை ; இவ்விஷயத்தில் நாங்கள் முற்றிலும் கைகட்டி நிலையில் உள்ளதை போல இருக்கின்றோம் ||48||
தன் மகன்களிடமிருந்து அந்த முழு விவரத்தையும் கேட்டறிந்த நாகராஜர் இவ்வாறு பதிலளித்தார் ‘நான் இதை சரி செய்ய ஒரு வழியை கண்டறிய முயற்சி செய்கின்றேன்; உங்கள் நண்பனின் மனம் அமைதியடைய முயற்சி செய்கின்றேன்; அவன் இழந்த மகிழ்ச்சியை மீண்டும் பெறுவதற்காக, நாம் ஆக்க பூர்வமானதை செய்வோம் ||49||
தமது தந்தையின் உறுதி மொழியைக் கேட்ட நாக குமாரர்கள் நிம்மதியடைந்தனர்; இதற்கிடையில், நாகராஜன் அஸ்வத்தாரன், மற்றொரு தெய்வ நாகமான கம்பலனுடன் இணைந்து, இந்தியாவின் வடக்கே அமைந்துள்ள இமய மலைப் பகுதிகளுக்குச் சென்றான்; அங்கே அவர்கள் கடும் தவ நெறிகளைப் பின்பற்றத் தொடங்கினர் ||50||
அங்கே அவர்கள் ‘ப்ளக்ஷாவரண்’ (Palavering)* எனப்படும் ஒரு இடத்திற்கு வந்தனர்; தங்கள் சங்கல்பத்தை நிறைவேற்றிக் கொள்ள, அந்த இடத்தையே தங்கள் இருப்பிடமாக அமைத்துக் கொள்ள அவர்கள் முடிவு செய்தனர்; அவர்களின் தவ முறையின் முக்கிய நோக்கம், ஞானத்தின் தேவியான சரஸ்வதி தேவியின் அருளைப் பெற்று, அவளை நேரில் காண்பதே ஆகும்.
{*’ப்ளக்ஷாவரண்’ (Palavering) என்பது இந்துப் புராணங்களில் விவரிக்கப்படும் ஒரு இடமாகும்; ப்ளக்ஷ தீவு (Plaksha Dipa) என்ற இடத்துடன் தொடர்புடையது; இந்து பிரபஞ்சவியலின் படி (Hindu Cosmology), பூமி ஏழு தீவுகளாக (சப்தத்வீபம்) பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஜம்புத்வீபத்தை அடுத்து இரண்டாவதாக வருவது ‘ப்ளக்ஷ தீவு’ ஆகும்.} ||51||
முதலில் அவர்கள் விரதமிருந்து, உணவின் மீதான பற்றை துறந்தார்கள் ; பின்னர், உடலை அசைக்காமல் ஒரே நிலையில் உறுதியாக அமர்ந்திருக்கும் பயிற்சியை மேற் கொண்டனர்; மூன்றாவதாக, அவர்கள் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சிகளில் ஈடுபட்டனர்; இவ்வாறு, முழுமையான மன ஒருமைப்பாட்டுடன் அவர்கள் தங்கள் தவத்தைத் தொடர்ந்தார்கள் ||52||
சரஸ்வதி தேவியைப் போற்றி அவர்கள் இவ்வாறு பாடினார்கள் ‘எங்கள் சொற்கள், மழலைச் குழந்தைகளின் கொஞ்சும் பேச்சைப் போன்றவை; இது, பரந்து விரிந்த மாபெரும் பெருங் கடலுக்கே சென்று, ஒரு குவளை நீரை அன்பளிப்பாக அளிப்பதைப் போன்ற மிக சிறியதானது ஆகும் ||53||
ஆனால், மற்றொரு கோணத்தில் பார்த்தால், சிறிய அளவோ, பெரிய அளவோ, நீர்தான் பெருங் கடலின் உயிர் நாடியாகத் திகழ்கிறது; சிறு துளி பெரு வெள்ளம் என்பதை போல அதைத்தான் நாங்கள் கடலுக்கு திரும்ப அளிக்கிறோம்; இல்லையெனில், அந்த நிலை எப்படிப்பட்டது என்றால் சூரிய பகவானுக்கே விளக்கை ஏற்றி வைத்து வணங்குவதைப் போன்றது; அதன் மூலம் எங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்த நாங்கள் முயல்கிறோம் ||54||
ஓ தேவியே, நீயே எங்களுக்குள் இருந்து ஊக்கமளிப்பதால்தான், எங்களால் உன்னைச் சரியான சொற்களால் போற்றிப் பாட முடிகிறது; பாரதி என்ற திருப்பெயரால் நீ அழைக்கப்படுகிறாய் என்பது அனைவரும் அறிந்ததே; கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உத்வேகம் அளிப்பவள் நீயே ஆவாய் ||55||
இந்த முழுப் பிரபஞ்சமும், உன்னுடைய பரம்பொருளின் ஒரு மிகச் சிறிய அங்கம் மட்டுமே ஆகும்; அப்படியிருக்கையில், நாங்கள் மட்டும் உன்னிடமிருந்து எவ்வாறு மாறுபட்டவர்களாக இருக்க முடியும்?; உன்னுடைய மிகச் சிறிய அம்சமாகிய எங்களுக்கு, நீ ஒரு பாசமிகு தாயைப் போலவே விளங்குகிறாய் ||56||
இந்த உலகிலுள்ள அறிவற்ற ஜடப் பொருட்கள் அனைத்தும் அழிவுடையவை; ஆனால், அந்தச் ஜடப் பொருட்களுடன் தொடர்பு கொண்டுள்ள ஆத்மா க்கள் அழிவற்றவை; நீயோ, நிலையானவை மற்றும் நிலையற்றவை ஆகிய இரண்டிற்கும் அப்பாற்பட்ட அந்தப் பரம்பொருளின் வடிவமாகத் திகழ்கிறாய்; அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் ஒரு சாட்சியாகவும் நிலைத்திருக்கிறாய் ||57||
நீரின் மேற்பரப்பில் எழும் குமிழிகளைப் போலவே, நாங்கள் எனும் எங்கள் ஆத்மாக்களும் உன்னுடைய அம்சங்களே ஆவோம்; ஆயினும், எமது தவறான சுய-அடையாள உணர்வை நாங்கள் இன்னும் கடக்காத காரணத்தினாலேயே, எங்களிடையே வேற்றுமைகளை நாங்கள் காண்கிறோம் ||58||
நீயே ‘ஓம்’ (AUM) எனும் பிரணவ வடிவிலானவள்; சத்துவ, ரஜோ, தமோ ஆகிய முக்குணங்களையும் தன்னுள் கொண்ட படைப்பாற்றல் வடிவிலானவள்; எவ்வித மாற்றத்திற்கும் அல்லது வடிவங்களின் சிதைவிற்கும் (distortion) அப்பாற்பட்டு விளங்குபவளும், ‘ஓம்’ எனும் பிரணவத்தின் பாதி பிறை வடிவிலான சின்னமாகவும் (Matra) அமைந்துள்ளவள் நீயே||59||
வேதங்களில் கூறப்படும் ஏழு வகையான யாகங்களும்*, ஏழு வகையான சோம யாகங்களும்**, உணவை*** முதன்மையாகக் கொண்ட ஏழு வகையான யாகங்களும் இவையனைத்தும் உனக்கே உரியவை ஆகும் , ஓ அன்னையே.
{(i) *ஏழு வகையான யாகங்கள் (சப்த பாக யக்ஞங்கள் – Paka Yajnas) என்பது பெரும்பாலும் இல்லறத்தார் (Householders) தினமும் அல்லது அவ்வப்போது வீட்டில் செய்யும் எளிய யாகங்கள்
(ii) **சோமரசத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் பெரிய அளவிலான வேள்விகள்; சோமரசம் (Somara Sam) என்பது முக்கியமாக வேத காலத்தில் ரிஷிகள் மற்றும் மன்னர்களால் யாகங்களின் போது அருந்திய ஒரு புனிதமான, போதை தரும் பானத்தைக் குறிக்கிறது. இது சந்திரக் கடவுளுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது
(iii) ***இவை சமைத்த உணவுகள் மற்றும் ஹவிஸ்ஸை அக்னியில் அர்ப்பணிக்கும் யாகங்கள்} ||60||
‘நீ இல்லாத இடத்தில் எவ்வித யாகங்களும் நடக்காது; வேள்விகளுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் அருள்பவள் நீயே; உன்னுடைய எழுத்துகள் மற்றும் மந்திரங்களின் வாயிலாகவே, படைப்புலகின் அனைத்துச் செயல்பாடுகளும் நடைபெறுகின்றன ||61||
அனைவருக்கும் ஒளியைப் பாய்ச்சுபவள் நீயே; அனைவருக்கும் ஞானத்தை அருள்பவள் நீயே; அனைத்தும் தோன்றுவதற்குக் காரணமாகத் திகழ்பவள் நீயே; எங்களுக்கு ஒரே புகலிடமாக விளங்குபவளும் நீயே ||62||
எங்கும் நிறைந்திருப்பவள் நீயே; முன்னர் குறிப்பிட்ட திவ்ய வடிவத்தில் திகழ்பவளும் நீயே; உன்பால் உண்மையான உறுதியுடனும் பற்றுடனும் இருப்பவர்களால் மட்டுமே, உன்னை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள இயலும் ||63||
இவ்வுலகத்தை சார்ந்தவையோ அல்லது மேலுலகத்தைச் சார்ந்தவையோ, எத்தகைய இன்பங்களாக இருப்பினும், அவற்றின் மீது விவேகத்துடன் பற்றற்று விளங்கும் அன்பர்கள், தங்களுக்குள்ளேயே உன்னுடைய திவ்ய தரிசனத்தை பெற்றுக் கொள்ளும் பேறைப் பெறுகிறார்கள்||64||
துதிப் பாடல்*: ‘ஓ கலைகளின் அன்னையே, எங்களை நற்பண்புகளும் தூய்மையும் நிறைந்த நிலைகளுக்கு அழைத்துச் செல்லும் நல் விவேகத்தை எங்களுக்கு அருளுவாயாக; வேத நூல்களெல்லாம் போற்றிப் பாடும் அந்தப் பெருமையும் புகழும் உனக்கே உரியன, ஓ அன்னை பாரதியே
{* இந்த துதி மூல மொழியில் ‘ஓவி’ எனும் மரபுசார் யாப்பிலும், குஜராத்தி மொழியிலும் அமைந்து உள்ளது} ||65||
நீயே உணர்வின் உருவம்; வேதச் சொற்களின் வடிவமாய் விளங்குபவளே, ஓ அன்னை பாரதியே; அனைத்து செயல்களையும் நிறைவேற்றுபவள் நீயே; பேச்சுத் திறனை அருள்பவள் நீயே; இவ்வுலகை இயக்கிச் செல்பவளும் நீயே ||66||
இந்த துதியை கேட்டதும், ஓ தேவி சரஸ்வதி தேவியே, எங்களிடம் ஓடி வருவாயாக; எங்களுக்குப் புனிதமான அறிவை அருளுவாயாக; எங்களின் மந்தத் தன்மையை அகற்றி, எங்களை மேன்மையுறச் செய்வாயாக, ஓ திவ்யத் தாயே ||67||
அவர்கள் பாடல் மூலமாக துதித்ததைக் கேட்டதும், அந்த தேவி பெரிதும் மகிழ்ந்தாள்; அவள் அந்த நாகங்களுக்கு முன் தோன்றி ‘வேண்டிய வரத்தைக் கேளுங்கள்’ என்று கூறினாள் ||68||
அந்த நாகங்கள் தங்கள் கண்களைத் திறந்து பார்த்தபோது, ஒரு வெண்ணிற அன்னப் பறவையின் மீது அமர்ந்திருக்கும் தேவியின் திவ்ய வடிவத்தைக் கண்டன; அவள் தன் திருக் கரங்களில் வீணையை ஏந்தியவாறு, நான்கு திருக் கரங்களுடன் காட்சியளித்தாள்’||69||
வெண்ணிற ஆடையால் அலங்கரிக்கப்பட்டு, வெண் தாமரை ஆசனத்தில் அமர்ந்து இருந்த தேவி, பேரழகுடன் திகழ்ந்தாள்; அந்த நாகங்கள் களிப்புடனும் பக்தியுடனும் அந்தப் பிரம்மாண்டமான திவ்ய வடிவத்தைப் போற்றின ||70||
அந்த நாகங்கள் அந்த தேவியைப் பணிந்து வணங்கி, இவ்வாறு வேண்டின ‘நீ எம்மீது உண்மையாகவே மகிழ்ச்சி அடைந்து, எங்களுக்கு ஒரு வரம் அளிக்க விரும்பினால், இறைவனின் புகழைப் பாடும் பெரும் திறனை எங்களுக்கு அருளுவாயாக ||71||
ஓ தாயே, இந்த வரத்தை எனக்கு மட்டுமல்லாமல், என் அருகில் இருக்கும் ‘கம்பலன்’ எனும் என் தோழனுக்கும் அருள வேண்டும்; சப்த சுருதிகளிலும் (உச்ச ஸ்தாயி மற்றும் மந்தர ஸ்தாயி), மிக நுணுக்கமான இசை நுணுக்கங்களுடனும் கூடிய, சிறந்த கீதங்களைப் பாடும் திறனை எங்களுக்கு வழங்குவாயாக ||72||
இசைச் சுரங்களுடன் இணைந்து, கேட்போர் மனதைக் கவரும் வகையில் இனிமையாகவும், உள்ளத்தைத் தொடும் வகையிலும் துதிகளைப் பாடும் ஆற்றலை எங்களுக்கு அருள வேண்டும்; எங்கள் இசைத் திறனைக் கண்டு சிவபெருமான் மகிழும் வகையில், எங்களுக்கு அத்தகைய வரத்தை அருளுவாயாக, ஓ தாயே||73||
அன்னை சரஸ்வதி இவ்வாறு கூறினாள் ‘ஓ நாகங்களே உங்கள் இசையைக் கேட்கும் அனைத்து நாகங்களும் பரவசமடையும்; மக்களுடைய உள்ளத்தின் ஆழம் வரை சென்று அவர்களை விழித்தெழச் செய்யும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்கள்; உங்கள் கலைத் திறனைப் போற்றி, சிவபெருமான் நிச்சயமாக உங்களை ஆசீர்வதிப்பார் ||74||
நாதம்’ எனும் திவ்ய ஒலியின் ரகசியத்தை நான் உங்களுக்கு வரமாக அளிக்கிறேன்; அந்த நாதத்தை கேட்ட உடனேயே, சிவபெருமான் (சம்பு), மற்ற அனைத்தையும் மறந்து விட்டு, வானத்தை நோக்கித் தன் முகத்தை உயர்த்தி, ஆனந்தப் பெருக்கோடு மகிழ்ச்சி பொங்கச் சிரிப்பார் ||75||
இவ்வாறு அவ்விரு நாகங்களையும் ஆசீர்வதித்த பிறகு, அந்த தேவி மறைந்து போனாள்; அந்த நாகங்கள் இரண்டும் அங்கிருந்து கிளம்பி, கைலாய மலையின் ஒரு பகுதியில் அமைந்திருந்த ஓர் எழில் மிகு பூங்காவை நோக்கிச் சென்றன ||76||
அவர்கள் இருவரும் இசைக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர்; அவர்கள் அனைத்து பாரம்பரிய ஸ்வரங்களையும் அறிந்திருந்தனர்; மேலும் தாளத்துடன் கச்சிதமாக ஒத்திசைக்கும் இசைக் கருவிகளின் துணையுடன் அவற்றை இனிமையாகப் பாடவும் தெரிந்திருந்தனர்; அத்தகைய வரங்களைப் பெற்றதில் அவர்கள் மன நிறைவு அடைந்தனர்||77||
தாழ்ந்த சுருதியாக இருந்தாலும் சரி, உயர்ந்த சுருதியாக இருந்தாலும் சரி, அவர்கள் பாடும் விதம் மென்மையாக இதயத்தை உருக்கும் வகையில் இருந்தது; அவ்வாறு அவர்கள் குறையின்றிப் பாடினர்; அவர்களின் இசைக் கருவிகள் சேவைக்காக கச்சிதமாக இசைக்கப்பட்டிருந்தன||78||
அந்த இசைக் குறிப்புகளுடன் தங்கள் படைப்பாற்றலையும் சேர்த்து, அவர்கள் தங்கள் நிபுணத்துவத்தை மெருகேற்றிக் கொண்டார்கள்; அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், சிவபெருமான், தன்னிடம் அவர்கள் பணிவுடன் விடுத்த வேண்டுகோள் பாடல்களைக் கேட்டார் ||79||
அது அவருடைய இதயத்தை உருக்கி இருந்தது; அந்த பாடலின் பொருள், எல்லா இடங்களிலும் மங்கள கரங்கள் ஏராளமாக உள்ளன என்பதாகும்; அதன் பக்தியால் முற்றிலும் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவர்களுக்குக் காட்சியளித்தார்;அவர்களை வாழ்த்திய பிறகு, ஹரன் கூறினார்’. ||80||
குரு வேத தர்மா தனது சீடர் தீபக்கிடம் தொடர்ந்து அந்த கதையைக் கூறிக் கொண்டு இருந்தார்; ‘சிவபெருமான் கூறினார் ‘சபாஷ்! சபாஷ், நான் இப்போது கேட்ட பாடல்கள் என்னை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது; உங்கள் பாடல்கள் தெய்வீக உணர்வுகளால் நிரம்பியுள்ளன; அது என் மனதைக் கவர்ந்து விட்டது’ ||81||
அனைவரையும் வசீகரிப்பவரே சிவபெருமான்; ஆனால் அவரே அந்த நாகங்களின் இசையால் கவரப்பட்டார்; அவர் உண்மையில் அவற்றின் செயலால் திருப்தியடைந்தார்; மேலும் அவர்கள் பெற்று இருந்த கலை ஞானத்தை பாராட்டினார் ||82||
சிவபெருமான் கூறினார்: ஓ அஸ்வத்தாரா மற்றும் கம்பலா, நீங்கள் இருவரும் விரும்பும் வரத்தை உங்களுக்கு தருகின்றேன்; உண்மையில், என் இதயத்தை முழுமையாக கவர்ந்து விட்டதில் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள்||83||
நாகங்கள் தங்கள் கண்களைத் திறந்தன; தவத்தின் காரணமாக அப்படிப்பட்ட கௌரவத்தைப் பெற்ற தனது தெய்வ வாகனமான நந்தியின் மீது சிவபெருமான் அமர்ந்திருப்பதைக் கண்டன; அவரது இடதுவெளிப்புற த்தில் அன்னை பார்வதி அமர்ந்திருந்தார்; அந்த அற்புதமான காட்சியை இரண்டு நாகங்களும் கண்டன ||84||
அவரது மூன்று கண்களும் தீ, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய வடிவங்களைக் கொண்டவை; அவருக்கு ஐந்து முகங்கள் உள்ளன; அவர் வெண்ணிற மேனியுடன் காட்சி அளித்தார்; தனது கரங்களில் அனைத்துத் தெய்வீக ஆயுதங்களையும் ஏந்தியவாறு, அவர் மிகவும் அமைதியாகவும் வசீகரமாகவும் காட்சியளித்தார் ||85||
அவரது சிரசின் மீது பிறைச் சந்திரன் ஒளிர்ந்தது; புனித கங்கை நதி அவரது ஜடா முடிகளால் தாங்கப்பட்டு காட்சி அளித்தது; தேவர்களுக்கு உதவும் பொருட்டு, ஆலகால விஷத்தைத் தனது தொண்டைக் குழியிலேயே நிறுத்தி வைத்ததில், அவரது கழுத்துப் பகுதி மட்டும் கரு நிறத்தில் இருந்தது ; மேலும், அந்தப் பரம்பொருள் தனது திருமேனி முழுவதும் பல்வேறு தெய்வீக நாகங்களை ஆபரணங்களாக அணிந்திருந்தார் ||86|
அப்படிப்பட்ட காட்சியில் அவரைக் கண்ட இரு நாகங்களும், வியந்து போய் ஆழ்ந்த பக்தியுடன் அவரைப் பணிந்து வணங்கி, பின்வருமாறு வேண்டின ‘ஐயனே, தாங்கள் எங்கள் மீது கருணை கொண்டு மகிழ்ந்திருப்பீர்களாயின், நாங்கள் விரும்பும் வரத்தை எங்களுக்கு அருள வேண்டும்||87||
சத்ருஜித் என்கின்ற மன்னரின் புதல்வனான குவலயாஸ்வன் எனும் இளவரசரின் பக்தி மிக்க மனைவியான மதாலஸா என்பவள், தாளகேது என்னும் அரக்கனின் வஞ்சகச் செயலால் ஏமாற்றப்பட்டு, தன் கணவன் இறந்து விட்டான் என்று தவறாக எண்ணி, தீக் குளித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்; அவள் முன்பு பாதாளகேது என்னும் அரக்கனின் சிறையிலிருந்து தன் கணவனால் மீட்கப்பட்டவள்||88||
அவள் எனக்கு மிகவும் பிரியமான பேத்தி ஆவாள்; அவள் தூய ஆத்மா வை கொண்டவள்; பிரம்ம ஞானம் பெற்றவள்; நற் பண்புகளும் பக்தியும் நிறைந்தவள்; அவள் முன்பு எத்தகைய அறிவு, அழகு மற்றும் நன்னடத்தையுடன் திகழ்ந்தாளோ, அதே நிலையிலேயே அவளது உயிரை எனக்குத் திரும்ப அருளுமாறு நான் வேண்டுகிறேன்||89||
அவள் ஒரு சிறந்த யோகியின் பெருமை மிக்க தாயாகத் திகழ வேண்டும்; அவளிடம் அமைதி, பொறுமை மற்றும் மன்னிக்கும் குணம் ஆகிய நற்பண்புகள் நிறைந்திருக்க வேண்டும்; அவள் தன் கணவனிடமும் இறைவனிடமும் மாறாத பக்தி கொண்டு வாழ வேண்டும்; சர்வ வல்லமை படைத்த இறைவா, அவள் மீண்டும் என் மகளாகத் திகழும் வரத்தை எங்களுக்கு அருள வேண்டும்||90||
இப் பணி பலருக்கும் சாத்தியமற்றதாகத் தோன்றலாம்; ஆனால், தங்களைப் போன்ற சர்வ வல்லமை படைத்த இறைவனுக்கு இது மிகச் சாதாரணமான ஒரு செயலாகும்; நாங்கள் ஏற்கனவே விண்ணப்பித்த இந்த ஒரு வரத்தைத் தவிர, வேறு எதையும் தங்களிடம் நாங்கள் கேட்கவில்லை ||91||
அந்த நாகங்கள் தங்கள் அன்பிற்குரியவளுக்காக வைத்த கோரிக்கையைக் கேட்ட சிவபெருமான், உள்ளம் மகிழ்ந்து பின்வருமாறு கூறினார் ‘நீங்கள் வேண்டியபடியே அனைத்தும் நிச்சயமாக நடைபெறும்; இது குறித்து உங்கள் மனதில் எள்ளளவும் ஐயம் கொள்ளத் தேவையில்லை||92||
இப்போது நீங்கள் உங்கள் இருப்பிடம் திரும்பலாம்; வேத விதி முறைகளின்படி செய்யப்பட வேண்டிய ஈமச் சடங்குகளையும், அதன் பின் நடைபெறும் கிரியைகளையும் முழுமையாக நிறைவேற்றுங்கள்; பின்னர், சடங்குகளின் போது படைக்கப்படும் பிண்டங்களில் (உருண்டைச் சோறுகளில்) நடுவில் உள்ள பிண்டத்தை எடுத்து, அதை உங்கள் மனைவியை உண்ணச் செய்யுங்கள் ||93||
அவள் அந்தப் புனிதமான ‘பிண்ட’ (அன்ன உருண்டை) பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளும்போது, அந்த பெண்ணின் திருவுருவத்தைத் தன் மனத்தில் தியானிக்குமாறு அவளிடம் கூறுங்கள்; அவ்வாறு செய்தால், மூச்சின் வழியாக அவள் உடனடியாக மீண்டும் வெளிப்படுவாள் ||94||
அவர்கள் வேண்டிய வரத்தை அருளிய பிறகு, சிவபெருமான் மறைந்து போனார்; அந்த நாகங்கள் அவரைப் பக்தியுடன் வணங்கி விட்டு, ரசாதலம்* எனப்படும் பாதாள உலகத்திற்குத் திரும்பின.
{*இந்து சமயப் புராணங்களின்படி, பூமிக்கு அடியில் உள்ள ஏழு உலகங்களில் (கீழுலகங்கள்) ஐந்தாவது லோகம் ‘ரசாதலம்’ (Rasa Thala) என்று அழைக்கப்படுகிறது. பாதாள உலகங்கள் வரிசையில் இது வருகிறது } ||95||
அங்குச் சென்றடைந்ததும், அவர்கள் வேதங்களில் விதிக்கப்பட்டு இருந்த சடங்குகளை முறைப்படி நிறைவேற்றினர்; பின்னர் அங்குள்ள ஆலயத்தில் சிவபெருமானை வணங்கி விட்டு, அந்த பிண்ட பிரசாதத்தை அவருடைய மனைவி நாகராணிக்கு கொடுத்தார் ||96||
தான் கேள்விப்பட்ட விளக்கத்தின் படியே, அவள் அந்த பெண்ணின் திருவுருவத்தைத் தியானித்தாள்; முழு நம்பிக்கையுடன் அந்தப் புனிதமான பிரசாதத்தை உட்கொண்டாள்; இவ்வாறு அந்த நாகராணி, அவர்கள் கையில் எடுத்திருந்த பணியை வெற்றிகரமாக நிறைவு செய்யத் துணை நின்றாள்||97||
அவள் அதை உட்கொண்ட கணமே, அவளது மூச்சுக் காற்றின் வேகம் பெருமளவில் அதிகரித்தது; சில கணங்களிலேயே, அவள் மூச்சுக் காற்றை வெளியேற்றிய போது, ஒரு பேரொளிப் பிழம்பு அவள் மூக்கில் இருந்து வெளிப்பட்டது ||98||
அது ஒளியின் குவியலாகக் காட்சியளித்தது; சற்று நேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்தபோது, அது ஒரு மனித உடலின் வடிவத்தை அடைந்தது; அது மதாலஸையின் (Madalas) உருவமாகவே மாறி விட்டதை போலவே அவர்களுக்குத் தோன்றியது ||99||
ஆரம்பத்தில் அது ஒரு கட்டைவிரல் அளவே இருந்தது; ஆனால் நிமிடங்கள் செல்லச் செல்ல, ஒரு குழந்தை பிறந்து வளரும் அதே வரிசை முறையில், அதன் உருவம் பெரிதாகிக் கொண்டே சென்றது||100||
அதே அறிவுத் திறன், அதே உடல் வடிவம், அதே அழகு, அதே குரல் வளம் மற்றும் ஒலி நயம் ஆகியவற்றுடன், தான் முன்பு கொண்டிருந்த அதே நினைவாற்றலோடு அவள் அங்கே மீண்டும் தோன்றினாள்||101||
தான் சிதையில் புகுந்ததை குறித்தோ, அல்லது அரசவையில் பரப்பப்பட்ட அந்தப் பொய் செய்தியை குறித்தோ அவளுக்கு எந்த நினைவும் எழவில்லை; ஆனால் தன் கணவர் உயிருடன் இல்லை என்ற உண்மை அவளுக்குத் தெரிய வந்தபோது, துயரத்தின் மிகுதியால் அவள் தன் கால்களைத் தரையில் ஓங்கி மிதித்து அழுதாள்||102||
அவள் இவ்வாறு கதறினாள் ‘என் உயிரின் தலைவா, ஏன் என்னை இவ்வாறு தனிமையில் வீணாக விட்டு விட்டுச் சென்றாய்?; என் தலை வணங்கி உன் பாதங்களைப் பணிகிறேன்; நான் ஏதேனும் தவறு செய்திருந்தால், தயவு செய்து என்னை மன்னிப்பாயாக||103||
இப்போதே விரைந்து என்னிடம் வா, நான் உன்னை மீண்டும் ஒருமுறை கண்ணாரக் காண வேண்டும்; இல்லையெனில், உன் மணி மாலையை கையில் ஏந்தியவாறே, நானும் அந்தச் சிதையில் புகுந்து என் உயிரை மாய்த்துக் கொள்வேன் ||104||
இவ்வாறு கதறி அழுது, தன் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகக் கூறிய பின் , அந்தப் பக்திச் சிரத்தையுள்ள யோகினி மதாலஸா எழுந்து நின்றாள்; அவளது முழு வரலாற்றையும் நேரில் கேட்டறிந்த அந்த நாகங்கள் வியப்பால் திகைத்து நின்றன ||105||
அவை இவ்வாறு தங்களுக்குள் கூறி கொண்டன ‘தான் ஏற்கனவே தன் உயிரைத் மாய்த்துக் கொண்டு விட்டது அவளது மனதில் எழவில்லை; அதனாலேயே, தன் முழு மன உறுதியுடனும் மீண்டும் சிதையில் புகுந்து உயிர் துறக்க இவள் முயலுகின்றாள் ||106||
நடந்தவை அனைத்தையும் முழுவதாக புரிந்து கொண்ட அந்த நாகங்கள், அவளது கையைப் பற்றிக் கொண்டு, அவளைத் தங்கள் அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றன; அங்கே அவளுக்குப் பல விதங்களில் ஆறுதல் கூறி, மிகுந்த அக்கறையுடன் அவளைப் பாதுகாத்தனர் ||107||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் இருபத்தேழாம் (27) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் இருபத்தேழாம் (27) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
107 + 2814 = 2921
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -9, அத்தியாயம் -27முடிவடைந்தது
அத்தியாயம் -28 தொடர்கின்றது