COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

 

பாகம்-3 : முனிவர்களின் அறிவுரை
அத்தியாயம் 10

கர்ம பந்தம் நீங்குவது குறித்து நோயுற்ற ஒரு அந்தணருக்கு அளிக்கப்பட்ட அறிவுரை

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

‘குரு பிருஹஸ்பதி தொடர்ந்து கூறினார்: பக்தியுள்ள அந்தணரான விஷ்ணு தத்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்த இந்தத் தூய்மையான நிகழ்ச்சி உண்மையில் மிக அற்புதமான ஒன்றாகும்; தனித் தன்மையும் முற்றிலும் சுதந்திரமானவருமான பரமாத்மன் எனும் ஸ்ரீமத் தத்த பகவான், தன் மீது தூய பக்தி கொண்ட பக்தர்களின் பக்தி மீதான காரணமாக, அவர்களது அன்புக்கு கட்டுப்பட்டு நிற்பதுண்டு||1||

அனு தினமும் யாகங்கள் மற்றும் சடங்குகள் என பலவும் நடைபெற்றாலும் ஸ்ரீமத் தத்தர் அவை அனைத்தினாலும் முழுமையான திருப்தியை அடைவதில்லை; ஆனால், விஷ்ணு தத்தரின் இல்லத்தில் முன்னோர்களுக்காக (பித்ருக்களுக்காக) செய்யப்பட்ட சிறிய சடங்கில் மட்டும், இறைவன் முழுத் திருப்தியுடன் கலந்து கொண்டு வயிறாற உண்டு விட்டு சென்றார் என்பதைக் கேட்பதற்கு வியப்பாக உள்ளது அல்லவா||2||

விஷ்ணு தத்தரின் பக்தி சிரத்தை கொண்ட மனைவி சுசீலா பாராட்டிற்கு உரியவள் ஆகிறாள் என்பதின் காரணம் ஸ்ரீமத் தத்த பகவானுக்கே நேரடியாக உணவைப் பறிமாறும் பெரும் பாக்கியம் அவளுக்கு கிடைத்தது; அவர் மிகுந்த அன்புடன் தெய்வத்திற்கு மீண்டும், மீண்டும் உணவு பரிமாற முன் வந்தார்; ஆன்மீகப் பாதையில் தீட்சை பெற்றவர்களுக்கு எட்டாத ஒரு உயர்ந்த நிலையை அவர் அடைந்தார் ||3||

அதேபோல, தூய அந்தணரான விஷ்ணு தத்தரும் பாராட்டிற்குரியவர்; அவர் தனது விடா முயற்சியால் தனது மனத்தையும் அறிவையும் தூய்மைப் படுத்திக் கொண்டார். மேலும், தனக்கு அறிவுறுத்தப்பட்ட வழிகளின்படி ஸ்ரீமத் தத்த பகவானைத் தொடர்ந்து தேடினார்; இவருடைய நற்செயல்களாலேயே இவருடைய குடும்பத்தினர் அனைவரும் ஆன்மீக உயர் வினைப் பெற்றனர் ||4||

அந்தப் பூதமும் (Goblin) பாராட்டுகளுக்கு தகுதியானதுதான்; காரணம் தனது இனத்தின் ஆற்றல் எத்தகையது என்பதைச் செயலால் நிரூபித்துக் காட்டிய பூதம் அது; விஷ்ணு தத்தரின் பரஸ்பர நட்பு மற்றும் ஆன்மீக உயர்வு ஆகியவற்றை மனதில் கொண்டு, அவருக்கு துணையாக நின்று உதவி அந்தத் தூய அந்தணருக்கு பரபிரும்மனை (ஸ்ரீமத் தத்தரை) மூன்று முறை அடையாளம் காட்டியது அந்த பூதமே ஆகும் ||5||

அந்தப் பூதத்தின் அறிவுரையை ஏற்று, ஸ்ரீமத் தத்த பகவானும் அந்த அந்தணர் தமது வீட்டில் நடந்த சடங்கிற்கான அழைப்பை ஏற்றுக் கொண்டார்; அதன் விளைவாக, அந்த அந்தணரும் அந்த பூதமும் ஸ்ரீமத் தத்தரின் பேரருளை பெற்றார்கள்; மேலும், அதன் மூலம் விஷ்ணு தத்தர் ஆன்மீக அருளை பெற முடிந்தது ; அந்த ஞானத்தின் துணையுடன் விஷ்ணு தத்தர் சமூகத்தின் நலனுக்காக செயல்படும் தகுதியைப் பெற்றார் ||6||

அப்படி அந்த அந்தணர் பெற்ற ஞானத்தின் விளைவு எத்தனை மேன்மையாக இருந்தது என்றால், விஷ்ணு தத்தர் எவருக்கெல்லாம் உதவவும் கருணை காட்டவும் நினைத்தாரோ, அவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நற்பேறுகள் பெற்றார்கள்; ஆகவே எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி மனித குலம் முழுமைக்கும் நன்மைகளை வாரி வழங்கிய அவரைப் போன்ற அந்தணர்களை இந்த அண்டத்தில் காண்பது அரிது என்று சாஸ்திரங்கள் பதிவு செய்துள்ளன ||7||

விஷ்ணு தத்தர் அடைந்த ஆன்மீக வலிமை எத்தகையதென்றால், பேய்கள் மற்றும் பிற தீய சக்திகள் மட்டுமல்லாமல், தேவர்கள் கூட அவரைக் கண்டு அஞ்சினர்; ஸ்ரீமத் தத்த பகவானின் அருளினால் கிடைத்த ஞானத்தால், அவர் எவருக்காகவும், எந்த விஷயத்தில் தலையிட்டாலும் அவர்களது துயரமும் வேதனையும் உறுதியாக தீர்ந்தன ||8||

தேவர்களின் தலைவனான இந்திரனே, இப்பொழுது நான் கூறப்போகும் ஐந்தாவது நிகழ்வை கவனமாகக் கேள்; இது கர்ம வினைகளின் பிணைப்பை அறுப்பது பற்றியதாகும்; கர்ம வினைகளின் பிணைப்பை அறுத்துக் கொள்வதின் மூலமே ஒருவன் முக்திப் பாதையில் நுழைந்து முன்னேற முடியும் ||9||

கோதாவரி நதிக்கரையில் ஹரி சர்மா என்னும் அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார்; அவருக்கு நற்பண்புகள் நிறைந்த மனைவி இருந்தாள்; காலப் போக்கில் அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்; துரதிர்ஷ்டவசமாக, அந்த மகன் ஐந்து வயதை எட்டிய உடனேயே அவனது பெற்றோர் இருவருமே எதிர்பாராத விதமாக மரணத்தை தழுவி விட்டார்கள் ||10||

அக் குடும்பம் செல்வச் செழிப்புடன் விளங்கியதால், சமூகத்தினருடைய அரவணைப்பில் அவன் எப்படியோ வளர்ந்து வந்தான்; உரிய காலத்தில் அவனுக்குத் திருமணமும் நடைபெற்றது. ஆயினும், அந்த இளைஞன் பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு, விதி அளித்த துயரங்களை எண்ணி வருந்தியவாறு, எப்போதும் மன உளைச்சலுடனே வாழ்ந்து வந்தான்||11||

பிறந்த சில நாட்களிலேயே ‘குல்மம்’ (Gulma)* எனப்படும் கட்டிகள் அவனைத் தாக்கின; அவனுக்குப் பதின்மூன்று வயதானபோது காச நோய் (Tuberculosis) அவனைப் பீடித்தது; பதினெட்டு வயதை எட்டியபோது, ‘மஹோதரம்’ (Ascites) எனப்படும் வயிற்று வீக்க நோயால் அவனது வயிறு உப்பிப் போனது; இதன் விளைவாக, அவனது உடல் முழுமையும் பொலிவிழந்து, மிகவும் தளர்ச்சியுற்ற நிலையில் காணப்பட்டது||12||

அவனுக்குப் பத்தொன்பது வயதானபோது, ‘அதிசாரம்’ (Atisaar)* எனப்படும் வயிற்றுப் போக்கு நோய் அவனைத் தாக்கியது. வயிற்றுப் பிடிப்புகளுடன் அவன் மூச்சு விடவே திணறித் தவித்தான்; மூலநோய் (Haemorrhoids) அவனது உடல் நிலையை மேலும் சிக்கலாக்கியது; ஆயுர்வேதத்தில் ‘திரிதோஷம்’ என்று அழைக்கப்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்று தோஷங்களின் சீர்கேடு அவனை மிகக் கடுமையாகப் பாதித்தது
{*இது ஆஸ்துமா அல்லது வலிப்பு நோய் என்றும் குறிப்பிடப்படுகிறது} ||13||

பல்வேறு வகையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டன; மந்திரங்கள் மூலம் மருத்துவம் செய்யப்பட்டது ; யாகங்கள் செய்யப்பட்டன; ஜாதகத்தின் அடிப்படையில் தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யப்பட்டன, சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டு மஹா மிருத்யுஞ்சய வழிபடும் பரிகாரங்களும் செய்யப்பட்டன; ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவருடைய நோய்கள் என்ன செய்தும் குணமாகவில்லை||14||

அவர் மணந்து கொண்டிருந்த மனைவிக்கு அப்போதுதான் பதினாறு வயது ஆகி இருந்தது ; அவள் எவர் மூலமாகவோ புண்ணிய சீலரான அந்தணர் விஷ்ணு தத்தரின் நற்புகழைப் பற்றிக் கேள்விப்பட்டாள்; சற்றும் தாமதிக்காமல் அவரைத் தேடிச் சென்று அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, தன் கணவரின் உயிரைக் காப்பற்றித் தருமாறும், தான் ஒரு விதவையாகாமல், தொடர்ந்து அவருடைய சுமங்கலியாக மனைவியாகவே வாழ அருளுமாறும் அவரை வேண்டிக் கொண்டாள்||15||

விஷ்ணு தூதரிடம் சென்று அவள் கூறினால் ‘என் கணவருக்கு இப்போது இருபது வயதாகிறது. அவர் பிறந்ததிலிருந்தே ‘குல்ம’ (வயிற்றுக்கட்டி) நோயால் அவதிப்பட்டு வருகிறார். ; கடந்த எட்டு ஆண்டுகளாக அவருக்குக் காசநோய் உள்ளது; கடந்த மூன்று ஆண்டுகளாக ‘ஜலோதரம்’ (வயிற்றில் நீர் கோர்த்தல்) நோயால் துன்புறுகிறார் ||16||

கடந்த ஓராண்டாக, அவரது உடலில் எப்போதும் லேசான காய்ச்சல் இருந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக அவருக்கு ‘அதிசாரம்’ (பேதி நோய்) ஏற்பட்டுள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்பு மூலநோய் தோன்றியது; மேலும், உடலில் உள்ள தோஷங்களின் சீற்றம் (நோயின் தீவிரம்) ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது||17||

நான் பல்வேறு வழி முறைகளையும், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை கொடுத்துப் பார்த்தேன்; ஆனாலும் அவர்களில் ஒருவராலும் கூட என் கணவரின் உடல் நலத்தை மீட்டுத் தர இயலவில்லை; தயவுசெய்து நீங்கள்தான் அவரது உயிரைக் காப்பற்றித் தர வேண்டும் என்று உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்; பரிபூரண தெய்வமான ஸ்ரீமத் தத்த பகவானால் ஆசிர்வதிக்கப்பட்ட, பெரும் பாக்கியமும் புண்ணியமும் செய்தவர் நீங்கள் ஒருவரே என்பதினால் உங்களிடம் வந்துள்ளேன்||18||

அந்த இளம் மனைவியின் உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட விஷ்ணு தத்தர் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் அவளுடன் அவள் வீட்டிற்குச் சென்றார்; அங்கே நோயால் வருந்திக் கொண்டிருந்த அந்த இளம் அந்தணரைப் பரிசோதித்துப் பார்த்த அவர், மிகுந்த கருணையுடன் அந்த அந்தணரிடம் பின்வருமாறு கூறினார்||19||

‘உங்களது கணவருக்கு வந்துள்ள அனைத்து நோய்களும் கடந்த கால பாவச் செயல்களுடனே தொடர்புடையவை ஆகும்; உண்மையான நிலையில் அதற்கான பிராயசித்தம் செய்தால் மட்டுமே அந்த பாவங்களின் பிடியிலிருந்து அவரால் விடுபட முடியும்; ஒருவரது சொந்த கர்ம வினையே அவரவர்கள் அனுபவிக்க வேண்டிய இத்தகைய விளைவுகளை அவர்களுக்கு தருகிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன; துறவிகளும், முனிவர்களும் கூட இத்தகைய விளக்கத்தையே ஏற்றுக் கொண்டுள்ளனர்||20|| “

ஏதோ ஒரு காலத்தில் பிரும்ம நிலையை எட்டியவரும் பரம்பொருளை உணர்ந்தவருமான எவரையோ ஒருவரை நீ கொன்று உள்ளாய்; அதன் விளைவாகவே உனக்கு காசநோய் (Tuberculosis) ஏற்பட்டுள்ளது. இதற்கான பிராயச்சித்த காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். தெய்வங்களுக்கு எதிரான துரோகம் இழைத்ததே, உனக்கு இளம் வயதிலேயே குல்ம நோய் (வயிறு சார்ந்த நோய்) ஏற்படக் காரணமாக அமைந்தது; இதற்கான பிராயச்சித்த காலம் ஆறு ஆண்டுகள் ஆகும் ||20||

அதே போன்று ஜலோதரம் (வயிற்றில் நீர் கோர்த்தல்) எனும் நோய்க்கு பன்னிரண்டு ஆண்டு காலப் பிராயச்சித்தமும், லேசான காய்ச்சலுக்கு ஓராண்டு காலப் பிராயச்சித்தமும் தேவைப்படும்; அதன் பின்னர் ஓராண்டு காலப் பிராயச்சித்தத்திற்குப் பிறகு மூலநோயும், அதிசாரம் (பேதி) எனப்படும் நோயும் குணமாகி விடும் ||22||

அதைக் கேட்ட வேத தர்மாவின் மனைவி மனம் தளரவில்லை; விஷ்ணு தத்தர் அறிவுறுத்தியபடியே தன் கணவரை அந்தப் பிராயசித்தங்களை மேற்கொள்ளுமாறு ஊக்கப்படுத்தினாள்; நாட்கள் செல்லச் செல்ல, முன்னரே சுட்டிக் காட்டப்பட்டிருந்த ஒவ்வொரு நோயும் ஒன்றன் பின் ஒன்றாக மறையத் தொடங்கின||23||

ஆயுர்வேதத்தில் ரசாயனம் என்று அழைக்கப்படும் ஒரு மூலிகை மருந்துக் கலவை, நோயாளியின் உடலில் உள்ள திரிதோஷங்களின் (வாதம், பித்தம், கபம்) சீர்கேட்டைக் குறைக்க அவருக்கு வழங்கப்பட்டது; அந்தச் சிகிச்சை பலனளிக்கத் தொடங்கியதும், உடல் நலம் தேறிக் கொண்டிருந்த அந்த அந்தணர், நீண்ட காலத்திற்குப் பிறகு முதன் முறையாக எழுந்து அமர்ந்து, பிறருடன் எளிதாக உரையாட முடிந்தது||24||

அதன்பின் விஷ்ணு தத்தர் அந்த நோயாளியின் மார்பின் மீது தன் கைகளை வைத்து, ஒரு மந்திரத்தை ஓதினார்; மனதிற்குள் ஸ்ரீமத் தத்தாத்ரேயரை வேண்டி உதவியை நாடிய பிறகு அவர் ஓதிய அந்த மந்திரம், அந்த நோயாளிக்கு உடல் நலத்தை கொடுத்து நீண்ட கால நோய்களை குணப்படுத்தியது ||25||

காலம் செல்லச் செல்ல, உடல் நலம் தேறிக் கொண்டிருந்த அந்த அந்தணர் மீண்டும் முழுமையான ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும், செல்வத்தையும், ஏன் நல்ல பெயரையும் கூட பெற்றார்; அவர் மிகுந்த வீரமும் மிக்கவரானார்; நற்பெயரை ஈட்டினார்; மேலும் ஆன்மீக ரீதியாக உயர்ந்த, மேன்மையான நிலைகளை அடைவதற்காகவும் உழைத்தார்; இவை அனைத்திற்கும் முழு முதற் காரணமாக அமைந்தது, விஷ்ணு தத்தர் அவருக்கு அளித்த உண்மையான உதவியும் தாராள மனப்பான்மையும் ஆகும்||26||

மேலும், அந்த அந்தணர் விரைவில் தன்னைத் ஸ்ரீமத் தத்த பகவானின் வழிபாட்டில் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்; அதன் விளைவாக, அவரது களங்கங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டுத் தெளிவுற்றார்; அதனால் அவர் தேடிய முக்தி நிலையை அடைவதற்கான பாதை அவருக்கு எளிதானது; தகுதி வாய்ந்த ஒரு அறிஞரால் உச்சரிக்கப்படும் மந்திரங்களின் சக்தி எத்தகைய அற்புதங்களை நிகழ்த்துகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் ||27||

தனது கணவர் முற்றிலும் நலம் அடைந்த பின்னர் அந்த அந்தணரின் மனைவி, மிகுந்த நன்றியுணர்வுடன் விஷ்ணு தத்தரைப் பார்த்து இவ்வாறு கூறினாள் ‘எனது தந்தை போன்றவரே, என் திருமண வாழ்வு மேலும் சில ஆண்டுகள் நீடிக்கவும், என் கணவர் நல்ல உடல் நலத்துடன் திகழவும் நீங்கள் அருள் புரிந்துள்ளார்கள்; இதற்கான தட்ஷணையாக எதைக் கேட்டாலும் நான் அளிக்கத் தயாராக இருக்கிறேன்; தயவுசெய்து பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறியவுடன், அதற்கு விஷ்ணு தத்தர் மிகவும் பணிவுடன் மறுப்பு தெரிவித்தார் ||28||

அவர் கூறினார் ‘நீ எனக்குச் சொந்த மகளைப் போன்றவள்; இவ்வுலகில் நீ பெரும் புகழை அடைய உள்ளாய் என்பது நிச்சயம்; உன் கணவனிடம் முழுமையான பக்தி செலுத்துவதின் மூலம் நீ மன நிறைவை அடைவாய்; இதை விடச் சிறந்த, உயர்ந்த நிலை வேறு எதுவும் உனக்குக் கிடைக்காது ||29||

கனவு நிலையில் கூட, பிற ஆண்களுடன் உறவு கொள்வது பற்றிச் சிந்திக்காதவளே உண்மையான பதிவிரதை (கணவனிடம் பக்தி கொண்டவள்) ஆவாள் என்பதை அறிந்துகொள்; பிற ஆண்களைத் தன் சொந்தச் சகோதரர்களாக கருதிப் பழகும் பெண்கள், பதிவிரதைகளில் இடைநிலை வகையைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள் ||30||

பிற ஆண்களைக் கண்ட மாத்திரத்திலேயே மனதில் காம உணர்வுகளும் ஆசைகளும் பொங்கினாலும், சமூகத்திற்குப் பயந்தோ அல்லது பிறர் பார்த்து விடுவார்களோ என்ற பயத்தினாலோ தங்களை எப்படியோ கட்டுப்படுத்திக் கொள்ளும் பெண்கள், பதிவிரதைகளில் கீழ்நிலை வகையைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள் ||31||

கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே, கையில் அகப்படும் எந்த ஆணிடமும் தங்களை முழுமையாக ஒப்படைத்து விடும் பெண்கள், நிச்சயமாக பதிவிரதைகள் அல்லர்; அத்தகைய பெண்கள் தங்கள் பல பிறவிகளிலும் மீண்டும் மீண்டும் விதவை நிலையையே அடைய நேரிடும் ||32||

தங்கள் காம இச்சையைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டு அதிலேயே திளைக்கும் பெண்கள், இறுதியில் தங்கள் குடும்பத்தையும், கணவரின் குடும்பத்தையும், தங்கள் கள்ளக் காதலனின் குடும்பத்தையும் ரௌரவா* எனப்படும் நரக லோகத்திற்குத் தள்ளி விடுகிறார்கள்; அதே வேளையில், அத்தகைய நரக லோகங்களிலேயே தாங்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டுத் துன்புறுகிறார்கள்; இவர்களுக்கான தண்டனை மிகக் கடுமையானது; அத்தகைய பெண்கள் துரதிர்ஷ்டத்திற்குப் பலியானவர்களாகவே கருதப்படுகிறார்கள்.
{*ரௌரவா (Raurava) என்பது இந்து மத நம்பிக்கைகளின்படி, கருட புராணம் விவரிக்கும் ஒரு கொடிய நரகமாகும். தண்டனையை அனுபவிக்க அங்கு அனுப்பி வைக்கப்படும் ஆத்மாக்கள் வலி மற்றும் வேதனையால் அலறுவார்களாம்}||33||

விஷ்ணு தத்தர் தொடர்ந்து கூறினார் ‘ஆகவே மகளே, நீ இன்னும் அதிக பக்தி சிரத்தையுடனும், தெய்வீக மற்றும் புனிதத் தன்மையுடன் திகழ்வாயாக; உன் கணவனின் நலனையே எப்போதும் உன் மனதில் முதன்மையாகக் கொண்டிரு; கனவு நிலையில் கூட, உண்மை நெறியிலிருந்தும் நற்பண்புகளிலிருந்தும் நீ ஒரு போதும் விலகாதே; அவ்வாறு நீ நடந்து கொள்வாயானால், என்றும் குன்றாத நல்வாய்ப்புகளை பெறும் பேறுகளை நீ அடைவாய்||34||

மேற்கூறிய முறையில் அவளுக்கு அறிவுரை வழங்கிய பிறகு, விஷ்ணு தத்தர் வேறு எந்த ஆசைகளோ விருப்பங்களோ இன்றித் தன் இல்லத்திற்குத் திரும்பினார்; நோயுற்ற பிராமணர் இறுதியில் நல்ல ஆரோக்கியத்தையும் உன்னதமான உயர் நிலைகளையும் அடைந்த இந்த நிகழ்வு, கர்ம விபாக் சாஸ்திரம்* எனப்படும் சாஸ்திரத்தின் செயல் திறனை விளக்குகிறது – இதன் மூலம் கடந்த கால கர்ம வினை அல்லது பாவங்களின் பந்தம் இவ்வாறு பாராட்டத்தக்க வகையில் கையாளப்பட்டுள்ளது என்பது விளங்கும்.
{*கர்ம விபாக் சாஸ்திரம்’ (Karma Vipak Shastra) என்பது இந்து மதத்தில் கர்மா (செயல்) மற்றும் அதன் விளைவுகள் (பலன்கள்) பற்றி விளக்கும் ஒரு முக்கியமான நூலாகும். இது ஒருவர் முந்தைய பிறவிகளில் அல்லது தற்போதைய பிறவியில் செய்த செயல்களின் அடிப்படையில், அவரது தற்போதைய வாழ்க்கைச் சூழ்நிலைகள், நோய்கள், மற்றும் இன்ப துன்பங்கள் எவ்வாறு அமைகின்றன என்பதை விவரிக்கிறது} ||35||

பிராயச்சித்த சடங்குகள் நோயுற்ற பிராமணரை நோயிலிருந்து விடுபட உதவின; ரசாயனம் என்ற மருந்துக் கலவை அவரை விரைவாக நல்ல ஆரோக்கியத்தைப் பெறத் தூண்டியது; அது போலவே, ஒருவர் ஏதேனும் ஒரு சாஸ்திரத்திற்கு உண்மையாக இருக்கும்போது, அறியாமை குறைவதைக் காண முடியும்; தெய்வீகத்தின் அனுபவங்களை அதிக அளவில் உணர முடியும் ||36||

புனித நூல்கள் பல்வேறு செயல்களினால் விளையும் பல்வேறு பலன்களைக் எடுத்துக் காட்டுகின்றன என்று கூறப்படுவதை குறித்து இன்னும் சற்று ஆழமாகச் சிந்தனை செய்தால் ஆசைகளும், சோதனைகளும் உலக பந்தங்களோடு இணைந்ததுதான் என்றாலும் அவை ஒருவரை நேர்மையான பாதையில் நடப்பதற்காகவே கூறப்பட்டு உள்ளன||37||

ஒரு தாய் தன் மகன் இனிப்பானவற்றை அதிகம் உண்பதைக் கண்டறிந்தாள்; அதன் விளைவாக, அந்த மகன் விரைவில் நோய் வாய்ப்பட்டான்; எனவே, அவள் வேறு வழியின்றி அவனுக்கு அவள் வேப்ப இலைச் சாற்றைக் கொடுக்க வேண்டியிருந்தது; அதன் கசப்புத் தன்மையால், நோய் வாய்ப்பட்ட மகன் இயல்பாகவே அதை உண்ண மறுத்தான்; அப்போது அவனது தாய் அவனிடம் கூறினாள் ||38||

‘அன்பு மகனே, இந்த சாறு கசக்கும் என்று எனக்கும் தெரியும்; இருப்பினும், நீ இதை ஒரே மூச்சில் குடித்தால், நான் உனக்கு ஒரு இனிப்புப் பண்டம் தருகிறேன்; இனிப்பின் ஆதாயத்தால் கவரப்பட்ட நோய் வாய்ப்பட்ட மகன், அந்தச் சாற்றை முடிந்தவரை விரைவில் குடிக்குமாறு தூண்டப்பட்டான் ||39||

ஆகவே, அந்த அன்பான தாய் அவனது ஒரு கையில் இனிப்பையும், மறு கையில் பழச் சாற்றையும் வைத்துக் கொண்டு மருந்தை கொடுத்த பின்னர் அதை குடிக்குமாறு கூறினாள் ; நோயுற்ற மகன் முதலில் தனது தாய் கொடுத்த கசப்பு மருந்தை உண்ட பின்னர், அந்தப் பாச மிகு தாய் மீண்டும் தந்திரமாக அந்த இனிப்பைப் பறித்துக் கொண்டு விடுவாள் ||40||

இந்த உதாரணத்தில் காட்டப்பட்டு உள்ள இனிப்புகள் வேதங்களில் கூறப்பட்டு உள்ள பலன்களை போன்றவை; இந்த எடுத்துக் காட்டு மூலம் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறுவதே முதன்மையான பலன் என்பது காட்டப்பட்டு உள்ளது ; நோயுற்ற மகன், உலகப் பற்று எனும் கடலைக் கடக்க முடியாத மனித குலத்தை குறிக்கின்றது ; மேலும், அந்தப் பாசமிகு தாய் என்பவள் தெய்வீக நூல்களின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தும் நாயகி போன்றவள் ||41||

வேத மற்றும் தெய்வீக நூல்களில் காணப்படும் அறிவுரைகள், நெறிமுறைகள் என்பவை சொர்க்க லோகங்களில் மேலான வாழ்வைப் பெறுவதற்காகவோ, அல்லது மற்றவர்களை கவர்வதற்காகவோ தரப்பட்டவை அல்ல ; மேலும் அவை காமத்தையோ அல்லது பிற உடல் தேவைகளையோ திருப்திப்படுத்துவதற்காக எழுதப்பட்டவை அல்ல; அல்லது உங்கள் எதிரிகளைக் கொல்வது அல்லது அகற்றுவது எப்படி என்பதை கற்பிக்கும் நூல்களும் அல்ல||42||

தெய்வீக நூல்களின் நோக்கம் நமது அறிவைத் தூய்மைப்படுத்துவதே ஆகும்; நமக்குள் உள்ள தவறான கருத்துக்களை நீக்குவதற்காக அவை உதவுகின்றன; எனவே அத்தகைய நூல்களில் உப்பில்லா சாராம்சங்களை கவனமாகக் படிக்க வேண்டும்’; குரு பிருஹஸ்பதி தொடர்ந்து இந்திரனுக்கு அறிவுரை கூறினார் ‘இப்போது ஆறாவது நிகழ்வைக் கேளுங்கள்’||43||

சஹ்யாத்ரி மலையின் வடக்குப் பகுதியில் ஒரு அந்தணர் வாழ்ந்து வந்தார்; ஒரு முறை, வேறொரு ஊரில் வசித்த அவரது நண்பர் ஒருவரை தன் வீட்டிற்கு விருந்தினராக அழைத்தார்||44||

அந்த அழைப்பை ஏற்றுச் செல்ல இருந்த அந்த அந்தணருக்கு, மிகவும் அழகான ஒரு மனைவி இருந்தாள்; அவர் அவளிடம் ‘என் நண்பர் ஒருவர் என்னை அழைத்து, ஒரு மாதம் முழுவதும் தன் வீட்டிலேயே தங்கியிருக்குமாறு அழைப்பு விடுத்து உள்ளார்’என்று கூறினார் ||45||

நீ வீட்டில் மகிழ்ச்சியாகவும் சௌகரியமாகவும் இரு; நான் ஒரு மாதம் கழித்துத் திரும்பி வந்து விடுவேன்’ என்று அவர் கூறினார்; அதைக் கேட்ட அவரது மனைவி, அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அவரது பயணத்திற்குத் தேவையான உணவுப் பண்டங்களையும் பிற உடைமைகளையும் எடுத்து வைத்தாள் ||46||

அவ்வாறு எடுத்து தந்திருந்த பொருட்களுடன் அந்த அந்தணர் தன் மனைவியிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியூரில் இருந்த நண்பரின் வீட்டிற்கு சென்றார்; கணவர் கிளம்பிச் சென்ற பின்னர் அன்றாடப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் நீராடுவதற்காக அந்தப் பெண் ஆற்றங்கரைக்குச் சென்றாள். ஆற்றங்கரைக்குச் செல்லும் வழியில் இருந்த ஒரு அரச மரத்தில், ஜோட்டிங்* அல்லது ஜூட்டிங்**எனப்படும் ஒரு வகைத் தீய ஆவி (பூதம்) வசித்து வந்தது; அந்தப் பெண் நீராடிக் கொண்டிருந்தபோது, அந்த ஆவியின் பார்வை அவள் மீது தற்செயலாக விழுந்தது.
{*and**: – அநியாயமாக அல்லது அகால மரணமடைந்தவர்களின் ஆத்மாக்கள், தங்களுக்குத் தீங்கிழைத்தவர்களைப் பழி வாங்க ஜோட்டிங் அல்லது ஜூட்டிங் ஆவியாக மாறுகின்றன என்று நம்பப்படுகிறது. இந்த ஆவி கொடியது மற்றும் மனிதர்களைத் துன்புறுத்தக்கூடியது. இது நாய், பூனை, புலி போன்ற விலங்குகளின் உருவங்களை எடுக்கும் சக்தி கொண்டது} ||47||

ஒரு அந்தணச் சிறுவன், தனது வாழ்வின் முதல் இருபத்தைந்து ஆண்டுகள் நீடிக்கும் பிரம்மச்சரியக் காலத்தில் இருக்கும்போதே, காம இச்சையால் பெரிதும் துன்புற்று அகால மரணமடைந்தால், அவன் மறு பிறவியில் இந்த ஜூட்டிங் வகைத் தீய ஆவிகளுள் ஒன்றாகப் பிறக்கிறான்; இத்தகைய ஆவிகள், தங்கள் இயல்பின்படியே மிகுந்த காம வெறியும், எளிதில் வெல்ல முடியாத வலிமையும் கொண்டவையாகத் திகழ்கின்றன ||48||

அந்த ஜூட்டிங் ஆவிக்கு, கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் அறியும் ஆற்றலும் இருந்தது; அதன் விளைவாக, நீராடிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தவுடனேயே, அவளது கணவன் ஒரு மாதம் முழுவதும் வெளியூரில் இருக்கப் போகிறான் என்பதை அந்த ஆவியால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது; எனவே, அது அந்தப் பெண்ணின் கணவன் போலவே தன்னை உருமாறிக் கொண்டு, அவர்கள் வசித்த வீட்டை நோக்கிச் சென்றது||49||

அந்த அந்தணரின் மனைவி தன் கணவன் மீது மிகுந்த பக்தி கொண்டவள்; இயல்பாகவே சற்று வெகுளித்தனமானவளாக இருந்ததால் அந்த ஜூட்டிங் ஆவியின் வஞ்சகத்தை அவளால் கண்டறிய முடியவில்லை; தன் கணவன் தான் எதிர்பார்த்ததை விட மிக விரைவாகவே வீட்டிற்குத் திரும்பி விட்டான் என்று மட்டுமே அவள் எண்ணினாள்; எனவே, மலர்ந்த முகத்துடன் அவனை வரவேற்றாள் ||50||

அவள் தன் கணவனுக்காக ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த வழக்கமான இருக்கையை அவனுக்கு அளித்தாள்; பின்னர், வெந்நீரால் அவனது பாதங்களை மிகுந்த மரியாதையுடன் கழுவி விட்டாள்; பழைய சம்பிரதாயங்களின்படி, பாதங்களைக் கழுவிய அந்த நீரிலிருந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துத் தன் உள்ளங்கையில் ஏந்தி, அதை வணங்கிய பிறகு அந்த நீரை வெளியே கொட்டினாள்; அதன்பின், பயணத்தால் ஏற்பட்ட களைப்பை போக்கும் நோக்கில், மிகுந்த அன்புடன் அவனுக்கு விசிறி விடத் துவங்கினாள்||51||

அப்போது அவள் மிகவும் மென்மையான குரலில் ‘அன்பரே நீங்கள் இவ்வளவு விரைவாக வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டீர்களே? அது எப்படி?; ஒரு வேளை ஏதேனும் தீய சகுனங்களை கண்டீர்களா? அதனால்தான் உங்களது நண்பனின் இல்லத்திற்குச் செல்லும் பயணத்தைத் தள்ளிப்போட எண்ணிக் கொண்டு திரும்பி வந்து விட்டீர்களா ||52||

அல்லது, என் மீதிருந்த ஆசையினால் மீண்டும் இல்லத்திற்கு வந்து விட்டீர்களா; என்னை இங்கே தனிமையில் விட்டு விட்டு, நண்பர்களை சந்திக்கச் செல்ல உங்களுக்கு மனம் வரவில்லையோ?; தன் கணவர் வீட்டை விட்டுத் தொலைவில் இருக்கும் வேளையில், பத்தினி மனைவியர் தங்கள் கணவரின் அருகாமைக்காக எத்துணை ஏங்குவர் என்பதை நீங்களே நன்கு அறிவீர்கள் அல்லவா’ என்று கேட்டாள் ||53||

அவள் கூறிய கனிவான, பாசம் மிக்க சொற்களைக் கேட்டதும் அவளது நடத்தையில் வெளிப்பட்ட கணவன் மீதான பக்தியை கண்ட அந்த ஜூட்டிங் (Zuting) இவ்வாறு கூறியது ‘அன்பே நான் சந்திக்கச் சென்றிருந்த அதே நண்பனை, வழியிலேயே நான் சந்தித்தேன்; அவன்தான் என்னை மீண்டும் இல்லத்திற்குத் திருப்பி அனுப்பினான் ||54||

வேறிடத்தில் அவனுக்கு இருந்த அவசரப் பணிகளைப் பற்றி அவன் கூறியதைக் கேட்டு, நான் மனம் மாறி வீடு திரும்பினேன்; நமது சந்திப்பை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்க நாம் முடிவு செய்திருந்தோம் அல்லவா, அப்படி இருந்தும் பிரிவு பற்றியும், ஏக்கம் பற்றியும் நீ பேசுவது எதற்காக, என் அன்பே?’ ||55||

அந்த அல்லது ஜூட்டிங் கூறிய தேன் தடவிய நச்சு வார்த்தைகளைக் கேட்ட அப்பாவி மனைவி, அவற்றை அப்படியே உண்மை என்று நம்பினாள்; அவனோடு மீண்டும் சல்லாபித்ததில் அவள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள்; ஆனால் அந்த ஜூட்டிங், அவளைச் தனது இச்சை தீரும் அளவில் பயன்படுத்திக் கொண்டான் ||56||

இவ்விதம் அந்த ஜூட்டிங் அவளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான்; இனம் சார்ந்த இயல்பிலேயே இழிவான செயல்களையும், அதீத காமத்தையும் கொண்டவன் அவன்; இரவும் பகலும் அவளோடு உறவாடிய அவன், அவளுடைய உண்மையான கணவனைப் போலவே மிகச் சிறப்பாக நடித்து வந்தான்||57||

வேடமிடுவதில் வல்லவனான ஜூட்டிங், வயது, உடல்வாகு, தோற்றம், குண நலன்கள், வாழ்க்கை முறை, பேச்சு வார்த்தைகள், நடை உடை பாவனைகள், தோரணைகள் மற்றும் எளிமை என அனைத்திலும் அவளுடைய உண்மையான கணவனைப் போலவே காட்சியளித்தன; அவளுடைய உண்மையான கணவனின் நகலைப் போலவே அவன் மாறி விட்டிருந்தான்’ ||58||

இரவு நேரங்களில் அவள் அவனோடு உடல் ரீதியாக இணையும் போது, தன் உடல் முழுவதும் கடுமையாக வலிப்பதை உணர்ந்தாள்; ஆயினும் அவன் இன்னும் இச்சை தீராதவன் போலவும், தணியாத காமத்தோடு இருப்பவனாகவும் தோன்றினான்; அந்த உடல் உறவு, அவர்கள் ஏதோ ஒரு போர்க் களத்தில் சண்டையிடுவது போன்ற ஒரு உணர்வை அவளுக்கு ஏற்படுத்தியது ||59||

தன் கணவனின் இயல்பை நன்கு அறிந்திருந்த அவள், காமத்தில் அவனுக்கு ஏற்பட்டு இருந்த திடீர் பேராசைகளையும், ஆக்ரோஷமான ஆக்கிரமிப்பையும், இன்னும் அதிகம் வேண்டும் என்ற தணியாத கொடூரமான உடல் பசியையும் கண்டு திகைத்துப் போனாள்; அவனுடைய விருப்பத்திற்கு தொடர்ந்து இணங்கிக் கொண்டே இருந்ததின் விளைவாக, வெகு விரைவில் அவளுடைய உடல்நலம் குன்றிப் பலவீனமடையத் தொடங்கியது||60||

உள்ளும்வெளிப்புற மும் துன்புற்று, உடல் நலமும் பாதிக்கப்பட்ட அந்த மனைவி, தனக்கு என்ன நேர்ந்தது என்று தனக்குள்ளேயே சிந்தனை செய்து பார்த்தாள்; அவள் இவ்வாறு மனதிற்குள் எண்ணி வியந்தாள் ‘நான் இவருக்கு இணங்க மறுத்தால், ஒரு மனைவி எனும் அந்தஸ்தில் உள்ள என் தர்ம நெறிக்கு அது முரணாக அமையும்; அதே சமயம் இவருக்கு மறுக்காமல் இணங்கி நடந்து கொண்டே இருந்தால், எனக்கு மிஞ்சுவதெல்லாம் ஆழ்ந்த வருத்தமும் மன உறுத்தலும் மட்டுமே ||61||

இவ்விதம் தன் மனக் குழப்பங்களில் வேதனையுற்றவளாகவும், தன் உடல் மேலும் அவனது இச்சையை தாங்கிக் கொள்ள இயலாத நிலையிலும் அவள் இருந்தாள்; தன் கணவன் மீது எழுந்த ஒரு வித சந்தேகமும் அவநம்பிக்கைகளும் அவளுடைய மனதை உள்ளுக்குள்ளேயே அரித்துக் கொண்டே இருந்தன; ஆயினும்,அவள் அனுபவித்து வந்த அப்படிப்பட்ட துரதிர்ஷ்டவசமான நிலையை மற்றவர்களிடம் வெளிப்படுத்த அவள் கூச்சமும் தயக்கமும் கொண்டாள் ||62||

இரவும் பகலும் இடைவிடாமல், அவளால் முடிந்தவரை அவனது இச்சைகளை தாங்கிக் கொண்டாள்; ஆயினும் அவன் மேலும் மேலும் வேட்கையுடன் இருந்ததைக் கண்டு, ஒவ்வொரு நாளும் அவள் உடல் தளர்ந்து போனாள்; நல்ல வேளையாக, ஒரு மாதம் கழித்து அவளது உண்மையான கணவன் வீடு திரும்பினான் ||63||

அவன் வீட்டு வாசலை மிதித்த அடுத்த கணமே, தன்னைப் போலவே அச்சு அசலாக மற்றொரு உருவம் வீட்டிற்குள் இருப்பதை கண்டான்; செய்வதறியாது திகைத்த அவன், வாசலிலேயே அமர்ந்து விட்டான்; அங்கே என்னதான் நடக்கிறது என்பதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை; தன்னைப் போலவே இருக்கும் அந்த இரட்டை உருவத்தின் மர்மத்தை எப்படித் தெளிவுபடுத்துவது என்று தெரியாமல் கலக்கத்தில் நின்றான் ||64||

ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்தப் பிராமணன் ஜூட்டிங்கிடம் வினவினான் ‘நீ யார்? என் உருவத்தை நீ எப்படிப் பெற்றுக் கொண்டாய்; எவ்வளவு காலமாக என் வீட்டில் தங்கியிருக்கிறாய்?; உண்மையில் நீ யார் என்பதை எனக்குச் சொல்||65||

உண்மையான கணவன் அந்தக் கேள்விகளைக் கேட்டதும், அந்த ஜூட்டிங் (Zuting) பதில் கூறியது ‘நான் இந்த வீட்டில் உள்ள என் மனைவியின் கணவன் என்று எல்லோருக்கும் நன்கு தெரியும்; ஏ, கள்ள வேடதாரி, உன்னை நான் கேட்கிறேன்—நீ யார்?; எங்கிருந்து வந்தாய்?; என்னைப் போலவே அச்சு அசலாக இருக்கும் உருவத்தை நீ எப்படிப் பெற்றுக் கொண்டாய்? |66||

இருவரும் ஒருவரையொருவர் கள்ள வேடதாரி என்று குற்றம் சாட்டிக் கொள்ள அவர்களது வாக்குவாதம் தொடர்ந்தது; ஒருவரையொருவர் கடும் சொற்களால் திட்டிக் கொண்டனர். விரைவில் ஊர் மக்கள் பிராமணனின் வீட்டின் முன் கூடினர்; அவர்களுக்கும், இருவரில் யார் உண்மையானவர், யார் போலியானவர் என்பதைத் தீர்மானிக்க முடியாமல் திகைத்து நின்றனர் ||67||

கூடியிருந்த மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர் ‘இருவரும் பார்ப்பதற்கு அச்சு அசலாக ஒரே தோற்றத்துடன் இருக்கிறார்களே; இவர்களில் யார் உண்மையானவர், யார் போலியானவர் என்பதை யாரால் எப்படி கண்டறிய முடியும்? இவர்களின் சண்டையும் வாக்கு வாதமும் கட்டுக்கடங்காமல் அல்லவா உள்ளது; இந்தச் சிக்கலை யாரால் தீர்த்து வைக்க முடியும்?||68||

உண்மையான பிராமணன் மக்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான் ‘இக்கணமே இவனை என் வீட்டிலிருந்து வெளியேற்றுங்கள்; அதற்குப் போட்டியாக, அந்த ‘ஜூட்டிங்’கும் அதே அளவு ஆவேசத்துடன் கூறினான் ‘ஊர் மக்களே, இவனை என் வீட்டு வாசலிலிருந்து மட்டுமல்ல, நம் கிராமத்திலிருந்தே வெளியேற்றுங்கள் ||69||

என் மனைவி எவ்வளவு அழகாக இருப்பாள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். புதிதாக வந்திருக்கும் இவன், அவளைத் தன் விருப்பப்படி அனுபவிக்கப் போவதாகக் கூறுகிறான்; இவனால் எப்படி என் உருவத்தையே அச்சு அசலாக பெற முடிந்தது என்று எனக்குத் தெரியவில்லை; ஆனால் ஒன்று மட்டும் உறுதி, நான் இந்த வீட்டை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன்’ என்று அந்த ‘ஜூட்டிங்’ உறுதியாகக் கூறினான் ||70||

மேலும், அவனோ அல்லது உங்களில் எவரேனும் ஒருவரோ என்னை வலுக் கட்டாயமாக வெளியேற்ற முயன்றால், என்னால் இயன்றவரை பலரைக் கொல்லவும் நான் தயங்க மாட்டேன்’ இவ்வாறு சீற்றத்துடன் வெளி வந்த வார்த்தைகளைக் கேட்டதும், உண்மையான அந்த அந்தணனால் அதற்கு மறுப்போ அல்லது பதிலையோ கூற இயலவில்லை ||71||

கிராமப் பெரியவர்கள் அந்த மனைவியின் பெற்றோரை வரவழைத்தனர்; அவர்களும் வந்து, உருவத்தில் அச்சு அசலாக ஒரே தோற்றத்துடன் இருந்த அந்த இருவரையும் உற்று நோக்கி விட்டு, மிக அறிவு பூர்வமாக ஒரு கருத்தைத் தெரிவித்தனர் ‘நாம் அவ்விருவரையும், அந்தப் பக்திச் செம்மலான விஷ்ணு தத்தரின் இல்லத்திற்கு அழைத்துச் செல்வோம்||72||

விஷ்ணு தத்தர், ஸ்ரீமத் தத்த பகவானால் அருள் பெற்றவர் என்பது யாவரும் அறிந்ததே; நம் அனைவரையும் ஒப்பிடுகையில், அவர் ஒருவரே சர்வமும் அறிந்தவர்; எனவே, தற்போது நிலவும் இந்தக் குழப்பச் சூழலில், இவர்களில் யார் உண்மையானவர், எது உண்மை என்பதைத் தீர்மானித்து, நம் அனைவரையும் அமைதிப்படுத்தும் பொறுப்பை அவரிடமே ஒப்படைப்போம்’ ||73||

அங்கு கூடியிருந்த அனைவரும் அந்த முடிவை ஏற்றுக் கொண்டனர்; அதன்படி, போட்டியிட்ட அந்த இருவரையும் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தினர்; உண்மையான பிராமணனின் மனைவியையும் உடன் வருமாறு கேட்டுக்கொண்டனர்; இவ்வாறு அந்தச் குழுவினர் அனைவரும் விஷ்ணு தத்தரின் இல்லத்தை நோக்கிப்வெளிப்புற ப்பட்டுச் சென்றனர் ||74||

ஊர் தலைவரின் தலைமையில், அனைவரும் அப்படி ஒரு நியாயமான நடவடிக்கையை மேற் கொண்டதால், தற்காலிகமாக சண்டை நின்று அமைதி நிலவியது ; விரைவில் அவர்கள் அனைவரும் அந்தப் பக்திச் சிரோமணி விஷ்ணு தத்தரின் இல்லத்தை அடைந்தனர் ||75||

அங்கு அவரிடம் அந்தப் பிரச்சனை விவரமாக எடுத்துரைக்கப்பட்டது; விஷ்ணு தத்தர் அனைவரையும் சரி சமமான நிலையில் வரவேற்றார்; அந்த ‘ஜூட்டிங்கை (Zuting) பார்த்த கணமே அந்தச் சேட்டைகளைச் செய்தது என்பதை அவரால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது; பின்னர் அவர் பேசத் தொடங்கினார் ||76||

உங்கள் இருவரையும் பார்த்தால் உண்மையில் நீங்கள் இருவருமே இரட்டையர்களைப் போலவே தோன்றுகிறீர்கள், வயது, உருவம், ஆண்மை அழகு, குரல் வளம், நடத்தை, உச்சரிப்பு மற்றும் உடல் அசைவுகள் என அனைத்திலும் நீங்கள் ஒன்று போலவே உள்ளீர்கள்; எனவே, உங்கள் இருவரில் ஒவ்வொருவராக, உங்கள் பெயர், வம்சம் மற்றும் குடும்பப் பின்னணி ஆகியவற்றை எனக்குத் தெரிவிக்க வேண்டும் ||77||

விஷ்ணு தத்தர் அவ்வாறு விசாரித்தபோது, அவர்கள் இருவரும் எதிலும் முரண்படாத வகையில் ஒரே மாதிரியான விவரங்களை கூறினார்கள்; நான் எவ்வாறு அடுத்த கட்ட முடிவை எடுப்பது என்று மனதில் எண்ணிய விஷ்ணு தத்தர் ‘நான் இன்னும் ஒரு படி மேலே சென்று, இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்’ என்று தீர்மானித்தார் ||78||

அங்கு கூடியிருந்த அனைவரையும் நோக்கி அவர் கூறினார் ‘நான் செய்ய உள்ள பரீட்சை உங்கள் அனைவருக்கும் ஏற்புடையதாக இருந்து, அதுவே போதுமான ஆதாரமாகவும் கருதப்படுமானால் நான் அதைத் தொடர அனுமதியுங்கள்; இத்தகைய நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக, முன்னரே உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்புக் கோருகிறேன்’ என்றார்; அவரது நேர்மையையும் பக்தியையும் அனைவருமே நன்கு அறிந்திருந்ததால், அங்கு கூடியிருந்த அனைவரும் முழு மனதுடன் அதற்கு ஒப்புதல் அளித்தனர்||79||

விஷ்ணு தத்தர் ஒரு மந்திரத்தை ஓதி, உண்மையான அந்த அந்தணரின் தலையில் ஒரு வெண்ணிற அடையாளப் பட்டையை அணிவித்தார்; அதேபோல, அந்த ஜூட்டிங் தலையில் ஒரு செந்நிற அடையாளப் பட்டையை அணிவித்தார். கையில் இருக்கும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண, இது எவ்வாறு உதவும் என்று அங்கிருந்த அனைவரும் வியப்புடன் நோக்கினர் ||80||

பின்னர் விஷ்ணு தத்தர் கூறினார்; ‘நீங்கள் இருவருமே இந்த அடையாளப் பட்டைகளின் மீது உங்கள் கவனத்தைச் செலுத்தித் தியானியுங்கள்; உங்கள் முழு மனதையும் நீங்கள் அடைய விரும்பும் இலக்கின் மீதே ஒருமுகப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்; இவை மந்திர சக்தியால் வலுவூட்டப்பட்ட அடையாளப் பட்டைகள்; எந்தவொரு பேய் பிசாசுகளாலோ அல்லது பிற சக்திகளாலோ இவற்றை மாற்றியமைக்கவோ அல்லது பாதிக்கவோ முடியாது’ என்றார்||81||

அவ்வாறு கூறிய பின்னர் விஷ்ணு தத்தர் இருவரையும் ஒவ்வொருவராக தனித் தனியே அழைத்து விசாரித்தார். அவர்களின் வீடு, சேமித்து வைத்துள்ள செல்வம், வீட்டுப் பாத்திரங்கள், நகைகள் போன்ற பல்வேறு விவரங்களைப் பற்றி அவர் விசாரித்தார்||82||

மேலும், அவர்கள் தங்கள் மனைவியாகக் குறிப்பிட்ட பெண்ணின் உடலில் ஏதேனும் மச்சங்களோ அல்லது தனித்துவமான அடையாளங்களோ உள்ளனவா என்பது குறித்தும் அவர் விசாரித்தார்; அதற்கு அந்த உண்மையான அந்தணர் இவ்வாறு பதிலளித்தார் ‘ஐயா உண்மையைக் கூற வேண்டும் எனில் என்னுடைய மனைவியின் அங்க அடையாளங்களைக் குறித்த விவரங்களை நான் கணக்கிட்டு நினைவில் வைத்திருக்கவில்லை’ என்றார்||83||

அவர் மேலும் கூறினார் ‘என் மனைவியைப் பொறுத்தவரை, அவளைப் பற்றி வெளிப்படையான சில விஷயங்களை மட்டுமே என்னால் உங்களுக்குச் சொல்ல முடியும்; ஏனெனில் அவளுடன் நான் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளவன்; ஆனால், அவளுடைய உடலின் மறைவான பாகங்களில் ஏதேனும் தனித்துவமான அடையாளங்கள் உள்ளனவா என்பதைப் பொறுத்தவரை, நான் அவ்வளவு நுணுக்கமாக அவற்றை கவனித்தது இல்லை’ என்றார் ||84||

ஜூட்டிங் முறை வந்தபோது, அந்த தீய ஆவி மிகுந்த நம்பிக்கையுடன் இவ்வாறு கூறியது ‘நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்கிறீர்கள்? வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் செல்வம், பாத்திரங்கள், ஆபரணங்கள், அவற்றின் எடை, வீட்டின் கட்டுமானத்திற்கு எத்தனை செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, அந்தப் பொருட்கள் ஒவ்வொன்றும் எங்கே, எவ்வாறு வைக்கப்பட்டிருக்கின்றன என்பது போன்ற மிகத் துல்லியமான விவரங்களை என்னால் உங்களுக்குச் சொல்ல முடியும் ||85||

மேலும், அந்தப் பெண்ணைப் பொறுத்தவரை, அவளுடைய உடலின் வெளிப்படையான மற்றும் மறைவான அனைத்து அடையாளங்களையும் கூட என்னால் விவரிக்க முடியும்’ என்று கூறிய பின்னர் அவற்றையும் விஷ்ணு தத்தருக்கு விவரித்தான்; அத்தகைய வியக்கத்தக்க விவரங்களைக் கேட்ட மக்கள் கூட்டம், சந்தேகத்துடன் தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கியது ‘ஒருவரால் இவ்வளவு துல்லியமாக எப்படிச் சொல்ல முடியும்? இந்த நபரிடம் ஏதோ மர்மம் இருக்கிறது ||86||

அதைக் கேட்ட விஷ்ணு சர்மா இவ்வாறு கூறினார் ‘நாம் வசிக்கும் இந்தப் பகுதி மிகவும் தெய்வீக அலை நிறைந்துள்ள பூமி ஆகும்; இப்பகுதியைச் சுற்றி சுமார் 5 கோஸ்* (சுமார் 10 மைல்) தொலைவிற்கு நீங்கள் வலம் வர வேண்டும். யார் முதலில் திரும்பி வந்து, அவர்கள் என்னவெல்லாம் வழியில் பார்த்ததாக பயண விவரங்களைச் சொல்கிறார்களோ, அவர்கள் சிறப்புக்குரியவர்களாகக் கருதப்படுவார்கள்’ ||87||

அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்ட இருவரும் அங்கிருந்துவெளிப்புற ப்பட்டனர்; பன்னிரண்டு நிமிடங்களுக்குள் அந்த தீய ஆவி வெளிப்புற ப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்து கூறியது ‘நீங்கள் கூறியபடியே நான் இப் பகுதியை சுற்றி விட்டு இங்குத் திரும்பி வந்துள்ளேன் ||88||

அங்கு கூடி இருந்த மக்கள் ஜூட்டிங்கிடம் வழியில் தென்பட்ட சில அடையாளங்களைப் பற்றிக் கேட்டபோது, அந்த ஆவியும் அவற்றை மிகத் துல்லியமாகவும் விரிவாகவும் கூற, மீண்டும் மக்கள் தங்களுக்குள் இவ்வாறு முணுமுணுத்துக் கொண்டனர்; ‘ஒரு மனிதனால் இவ்வளவு விரைவாகப் பயணம் செய்து விட்டுத் திரும்பி வருவதும், அத்தகைய துல்லியமான விவரங்களைச் சொல்வதும் சாத்தியமே அல்ல||89||

ஆகவே, ஏதோ ஒரு பூத கணம் அந்தணரின் உருவத்தை எடுத்துக் கொண்டு வந்திருப்பதாகவே தோன்றுகிறது’; இதற்கிடையில், உண்மையான அந்தணர் ஆறு முதல் ஏழு மணி நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்தார்; அவரால் வழியில் தென்பட்ட சில அடையாளங்களைப் பற்றிய தகவல்களை மட்டுமே சொல்ல முடிந்தது; அனைத்தையும் கூற இயலவில்லை; இருப்பினும், அவர் கூறிய விவரங்கள் அங்கிருந்த சாட்சிகளுக்குத் திருப்தியளித்தன; அவர்தான் அந்தப் பெண்ணின் உண்மையான கணவர் என்பதை அவர்கள் மௌனமாக ஏற்றுக் கொண்டனர்||90||

அதன்பின் மீண்டும் விஷ்ணு தத்தர் அவர்களை நோக்கி இவ்வாறு கூறினார் ‘இதோ இங்கே தெரியும் தெய்வீகமான மலையைப் பாருங்கள்; நீங்கள் அதன் உச்சிவரை ஏற வேண்டும்; பின்னர் திரும்பி வந்து, அங்கே எத்தனை மகான்கள் (நிறைவுற்ற ஆத்மா க்கள்) வசிக்கிறார்கள், அவர்களின் பெயர்கள் என்ன, அவர்களின் குல மரபுகள் எவை, மற்றும் உங்கள் கண்களுக்குத் தென்படும் பிற விவரங்கள் என்னென்ன என்பதை எங்களிடம் சொல்ல வேண்டும்||91||

மேல் உச்சி வரை சென்று மலையை வலம் வந்த பிறகு, மீண்டும் இங்கு திரும்புங்கள்; எவர் முதலாவதாக திரும்பி வந்து, தாம் பார்த்த விவரங்களை நமக்கு உண்மையுடன் விவரிக்கிறாரோ, அவருக்கே சரியான தீர்வு அளிக்கப்படும்’ என்றார் ||92||

அந்த புதிய போட்டி குறித்து அறிந்த போட்டியாளர்கள் இருவரும், பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணும் சம உறுதியுடன் மீண்டும் அங்கிருந்துவெளிப்புற ப்பட்டனர்; நாற்பது முதல் ஐம்பது நிமிடங்களுக்குள் ஜூட்டிங் (Zuting) திரும்பி வந்து ‘ நீங்கள் கூறியபடியே நான் மலையை வலம் வந்து விட்டேன்; வலம் வரும் பாதையின் வழியாக மேல் உச்சி வரை சென்று வந்தேன் என்று அறிவித்தது ||93||

ஜூட்டிங் விவரித்த விவரங்கள் அனைத்தும் மிகத் துல்லியமாக இருந்தன; பின்னர், பன்னிரண்டு முதல் பதினைந்து மணி நேரங்களுக்குப் பிறகு அந்த உண்மையான அந்தணர் திரும்பி வந்து, மிகுந்த களைப்புடன் இவ்வாறு கூறினார் ‘எனது பயணத்தின்போது, ஒரு முழுமை பெற்ற ஆத்மா வைக் கூட என்னால் சந்திக்க இயலவில்லை’ ||94||

அவர் கூறியதைக் கேட்டதும், அவரது களைப்புற்ற நிலையைக் கண்டதும், அங்கிருந்த அனைவரும் உண்மையான அந்தணரைத் தாங்கள் கண்டறிந்து விட்டதாக தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்; அப்போது விஷ்ணு தத்தர் மீண்டும் ‘உங்கள் இருவருக்கும் இன்னும் ஒரே ஒரு இறுதிச் சோதனை மட்டும் மீதமுள்ளது’ என்று கூறினார்||95||

விஷ்ணு தத்தர் இரும்பினால் செய்யப்பட்ட ஒரு நீர்க் கலத்தை வரவழைத்து, அவ்விருவர் முன்னிலையிலும் வைத்து, பின்வருமாறு கூறினார் ‘இதன் வாய் வழியாக உள்ளே நுழையுங்கள்; உள்ளிருந்து இதை உற்று நோக்கி விட்டு, உள்ளிருக்கும் நீர் வெளியேறும் மறு துளையின் வழியாகத் திரும்ப வெளியே வாருங்கள்’ ||96||

இயல்பாகவே அமைதியற்றவனான ஜூட்டிங்’ (Zuting), காரியத்தை விரைவில் முடித்து விட வேண்டும் என்ற அவசரத்தில், அந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு, வேறு எவரும் ஏதும் சொல்வதற்கு முன்னரே, அவன் அந்த நீர்க் கலத்தினுள் நுழைந்து விட்டது; அதே வேகத்தில் விஷ்ணு தத்தரும் மந்திரங்களை ஓதி, தீய சக்திகளைப் சிறை பிடிக்கும் முறைப்படி , அக் கலத்தின் இரு துளைகளையும் அடைத்து விட்டார் ||97||

அக் கலத்தின் இரு முனைகளும் அடைக்கப்பட்டு விட்டதால், உள்ளே சிக்கிக் கொண்டதை உணர்ந்த அந்த ஜூட்டிங்கினால் வெளியே வர இயலவில்லை; நடந்த அனைத்தையும் தொடக்கம் முதல் இறுதிவரை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டம், மகிழ்ச்சிப் பெருக்கோடு கைதட்டி ஆரவாரம் செய்தது ||98||

அந்த நீர்க் கலத்தை தூக்கிப் பார்த்தபோது, அது முன்பை விட அதிக எடையுடன் காணப்பட்டது; விஷ்ணு தத்தர் சுட்டிக் காட்டியபடி, மலையிலுள்ள ஒரு இடத்தில் அது பூமிக்குள் புதைக்கப்பட்டது; இதன் விளைவாக, அங்கிருந்த அனைவரையும் ஒரு பேரானந்த உணர்வு ஆட் கொண்டது; அப்போது, அந்தப் பக்திச் சிரத்தையுள்ள அந்தணர் பின்வருமாறு கூறினார் ||99||

அந்த ஜூட்டிங் என் முன் தோன்றிய கணமே, அது எத்தகைய தீய சக்தி என்பதையும், என் மனைவி மீது அது இழைத்திருந்த வஞ்சகச் செயலையும் என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது; ஆனால், நான் அப்போதே அவனை சிறை வைத்து இருந்திருந்தால், நடந்த அனைத்திற்கும் நானே பழி சுமக்க நேர்ந்திருக்கும்||100||

ஆகவேதான், இன்று காலை முதல் இத்தனை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. இம்முயற்சிகள், இங்குள்ள நம் ஒவ்வொருவரின் உண்மையான இயல்பையும் அடையாளம் கண்டு கொள்ள உதவியுள்ளன; இப்போது ஜூட்டிங்’ எனும் அந்த தீய ஆவி சிறை வைக்கப்பட்டு புதைக்கப்பட்டு விட்டது; அந்த அந்தணரின் மனைவியும் அவனது பிடியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு விட்டாள் ||101||

ஒருவர் சாஸ்திரங்கள் காட்டும் நெறி முறைகளின்படி நடந்து கொண்டால், அறியாமையை படிப்படியாகப் போக்கிக் கொள்ள முடியும்; அந்த அறியாமையை நீக்குவதின் மூலமே அனைத்து சந்தேகங்களையும் அகற்றி, ஒருவரை ஆத்ம-உணர்தல் (Self-Realization) எனும் உயர்ந்த பாதையை நோக்கி அழைத்துச் செல்ல இயலும் ||102||

ஆகவேதான், இத்தகைய தீர்வு முறைகளைக் கையாள வேண்டியதாயிற்று; முதல் கட்டச் சோதனை உங்களுக்கு முழுமையான மன நிறைவைத் தராததுபோல் தோன்றியிருக்கலாம்; ஆனால், இரண்டாவது சோதனை உங்கள் ஐயங்களைப் போக்குவதற்கு உறுதியாக உதவியிருக்கும்; மூன்றாவது சோதனை நம்முடைய முடிவுகளை முழுமையாக உறுதிப் படுத்தியிருக்கும்||103||

இனி எதிர் காலத்திலும் எவரும் சந்தேகப்பட வேண்டிய அவசியமே இல்லை; அந்த தீய சக்தியாலும் இனி தன்னை விடுவித்துக் கொள்ள இயலாது; அந்தப் அந்தணரின் கற்புடைய மனைவியும் எவராலும் பழிச் சொல்லுக்கோ அல்லது அவப் பெயருக்கோ ஆளாக மாட்டாள்; இவையே எனது உறுதியான வார்த்தைகள் ஆகும் ||104||

விஷ்ணு தத்தர் கூறியவற்றையும், தீர்ப்பையும் கேட்ட அனைவரும் ‘தெய்வத்தின் புகழ் பெருகட்டும், அந்த தெய்வத்தின் நாமம் வாழ்க’ என்று உரத்த குரலில் குரலெழுப்பினர். பின்னர், கூட்டத்தினர் ஒவ்வொருவராக கலைந்து செல்லத் தொடங்கினர்; அந்தப் பிராமணரும் அவரது மனைவியும், தங்களுக்கு நீதி வழங்கிய அந்த புனிதருக்கு நன்றி கூறி அவருக்கு மரியாதையுடன் தலை வணங்கினர் ||105||

நீதி கிடைத்த அந்தணர் நன்றிப் பெருக்குடன் விஷ்ணு தத்தரிடம் இவ்வாறு கூறினார் ‘தாங்கள் எனது கவலைகள் அனைத்தையும் போக்கி விட்டீர்கள்; அந்த ஜூட்டிங் (Zuting) அரக்கன் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது; எனது இல்லத்தையும், அதன் உடைமைகளையும், எனது மனைவியையும் தாங்கள் எனக்குத் திரும்பப் பெற்றுத் தந்துள்ளீர்கள்; நிச்சயமாகத் தங்களின் நற்புகழ் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவி ஒளிரும் ||106||

நீங்கள் கடவுள் தத்தரின் (Datta) புகழ்பெற்ற பக்தர் ஆவீர்கள்; மக்களுக்கு உதவி செய்வதற்காக தாங்கள் மேற்கொள்ளும் எந்தச் செயலிலும், சிறுமையோ அல்லது சுயநலமோ துளியும் இல்லை; பிறருக்கு உதவுவதே தங்கள் வாழ்வின் குறிக்கோளாக கொண்டு தாங்கள் வாழ்ந்து வருகிறீர்கள்; அதுவே, ஒரு நிறைவான மற்றும் செழுமையான வாழ்க்கையை வாழ்வதற்கான சிறந்த வழியாகவும் அமைகிறது||107||

இவ்வாறு தங்கள் மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் விஷ்ணு தத்தருக்கு தெரிவித்து விட்டு, அந்தப் பிராமணத் தம்பதியினர் விஷ்ணு தத்தரிடம் விடை பெற்றுக் கொண்டு தங்கள் இல்லம் திரும்பினர்’; இந்த கதையை இந்திரனுக்கு கூறி முடித்த குரு பிருஹஸ்பதி ‘இவ்விதமாக, சாஸ்திரங்களின் வழிகாட்டுதலை பின்பற்றி நடந்தால், ஒருவன் தனது ஐயங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள இயலும்’ என்று கூறினார்||108||

இந்த சாஸ்திரம் தந்திர சாஸ்திரம்* (Tantra-Shaastra) என்று அழைக்கப்படுகிறது. இது தவறான நம்பிக்கைகளையும் மாயைகளையும் அகற்றிக் கொள்வதற்கு உதவுகிறது; மெய்ப்பொருளின் மீது நம்பிக்கையை வைத்துக் கொண்டு உண்மைகளை உணர்ந்து கொள்ளத் துணை நிற்கிறது; மேலும், பரமாத்மனை பற்றிய ஞானத்தைப் பெறுவதற்கான பாதையில் ஒருவனை அழைத்துச் செல்கிறது.
{* தந்திர சாஸ்திரம் (Tantra Shastra) என்பது இறைவனின் ஞானத்தை செயல்பாட்டில் கொண்டுவரும் ஒரு பழமையான இந்திய ஆன்மீக மரபாகும். இது மந்திரங்கள் (ஒலி), யந்திரங்கள் (வரைபடம்), தந்திரங்கள் (சடங்குகள்), முத்திரைகள் (சைகைகள்) மற்றும் தியானம் மூலம் சக்தி தேவியை வழிபட்டு, விரைவான ஆன்மீக முன்னேற்றத்தையும், தற்-அறிதலையும் (Self-realization) அடைய உதவும் நுட்பமான வழிமுறைகளை உள்ளடக்கியது } ||109||

II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் பத்தாம் அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 109
முதலாவது அத்தியாயம் முதல் பத்தாம் அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
109 + 973 = 1082

*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}

……இதோடு  பாகம் -3, அத்தியாயம் -10  முடிவடைந்தது
பாகம் -4, அத்தியாயம் -11 தொடர்கின்றது