COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -2 : தெய்வத்தின் சேவகர்கள்
அத்தியாயம்-7
கார்த்தவீர்யன் விரக்தி அடைந்த கதை
ஸ்ரீமத் தத்தாத்திரேயரிடம் மீண்டும் சரண் அடைதல்
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
இப்படியாக எவராலும் எதிர்க்க முடியாத வகையில் ஆட்சி செய்து வந்த வலிமை மிக்க அர்ஜுனன், யோக அதிபதியானவரும், தெய்வமானவருமான ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் ஆசிகளுடனும், எவ்விதத் தடையின்றி, எண்பத்து நான்காயிரம் ஆண்டுகள் நல் ஆட்சி கொடுத்த மன்னனாக அரச கட்டிலில் அமர்ந்து இருந்தான் ||1||
தூய்மையான எண்ணங்களையும், அறிவாற்றலும் கொண்டிருந்த அவனது நன்னடத்தையின் வலிமையினால் புகழ் பெற்ற ஏழு தீவுகளைக் கொண்ட பூவுலகை தனித்து நின்று ஆட்சி செய்தான்; அவனது ராஜ்ய பரிபாலனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த குடி மக்களுக்கு எந்த இன்னல்களும் இருந்திடவில்லை ; அவனுக்குக் கீழ் பணி புரிந்து வந்திருந்த பிற மன்னர்களும், ஆளுநர்களும் அவனுக்கு உரிய மரியாதையைச் செலுத்தி வந்தார்கள் ||2||
அர்ஜுனன் அனுதினமும் சஹ்யாத்ரி மலைக்குச் சென்று, தான் விரும்பி மனதார ஏற்றுக் கொண்டிருந்த தெய்வமான ஸ்ரீமத் தத்தரைக் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்; அங்கே சென்று, அன்புடனும் பக்தியுடனும் அவரை வணங்கி துதித்த பிறகு, தனது வீட்டிற்கு திரும்பி வந்து, தன் பொழுதை ஆன்மீகச் சிந்தனையில் கழித்தான்; ஒரு நாள் இடைவெளி கூட இன்றி இத்தகைய பழக்க வழக்கத்தை தொடர்ந்து செய்தவண்ணம் இருந்தான் ||3||
இப்படியாக எண்பத்து நான்காயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்து வந்து கொண்டிருந்த மன்னன் அர்ஜுனன், ஒரு நாள், தன் படுக்கையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, தன் முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்தி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான்||4||
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நான் சாதித்த மகத்தான செயல் என்ன? எனது கடினமான உழைப்பு என்னை இறுதியில் எங்கு கொண்டு செல்லப் போகின்றது?; என் உள்ளத்தில் மறைந்திருக்கும் ஆத்மா எனது உழைப்பினால் என்ன பயனை பெற உள்ளது?; நான் உழைத்த உழைப்பின் பலனாக எனக்கு கிடைத்தது இந்த ராஜ்யமே என்றால் வர உள்ள காலங்களில் அது துயரத்திற்கே அல்லவா வழி வகுக்கும்||5||
ஏனெனில், நாம் பார்க்கும் அனைத்துமே மாயை; அவை நிலையற்றவை, காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருப்பவை; மற்றும் அழிவுக்கு உட்பட்டவை என்ற உண்மையை அனைவரும் நன்கே உணர்ந்து உள்ளார்கள்; ஆனால் என்றுமே எந்த மாற்றத்திற்கும் உட்படாதது, அழிவற்றதும், நிலையானதும் அந்த பரமாத்மனே என்ற சத்தியத்தை மறந்து விட்டு, அந்த பரமாத்மனை முழுமையாக அறிந்து கொள்ளாமல் அல்லவா நான் இருந்து வருகின்றேன்||6||
ஒரு மன்னன் ஒரு பிச்சைக்காரனை உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டபோது அவன் எனக்கு ஒரு காசு வேண்டும் என்று அற்பமாக கேட்டதை போல அல்லவா நானும் பரமாத்மன் வரம் அளிக்க முன் வந்தபோது, அந்த பிச்சைக்காரன் அறிவின்மையால் ஒரு காசை மட்டும் கேட்பது போல, நிலையற்ற, அழிவிற்கு உட்பட்ட அனைத்தையும் கேட்டுப் பெற்று உள்ளேன்; எனது விதி நிர்ணயித்து இருந்த துயர வேளை நெருங்கி விட்டதால்தான், நான் அப்படிப்பட்ட வரங்களைக் கேட்டேனா? ||7||
தெய்வமான ஸ்ரீமத் தத்தரே என்மீது மனம் மகிழ்ந்து, நான் கேட்ட வரங்களை அளித்து எனக்கு மன நிறைவை அளித்தபோது, நான் அவரிடம் எத்தகைய மகத்தான வரங்களைக் கேட்டிருக்க வேண்டும்?; அப்போது நான் புத்தி பேதலித்து போய், மூடனாக இருந்திருக்கிறேன் என்றே நினைக்கின்றேன்||8||
அவரை என்ன குறை கூற முடியும்?; எனது சொந்த வீழ்ச்சிக்கு எவை தேவையோ அவற்றை நான் அல்லவா அவரிடம் இருந்து கேட்டுப் பெற்றுக் கொண்டுள்ளேன்; மஹா யோகிகளினால் தேடப்பட்டு, வரும் அவரை நேரிலே கண்ட பின்னரும் அவரது திருப்பாதங்களை அடையும் வழியைக் கேட்காமல் வேறு எதை எத்தனையோ அல்லவா கேட்டுப் பெற்றுக் கொண்டுள்ளேன்||9||
நான் அவருடைய பாதங்களைப் பற்றிக் கொண்டிருந்த போதிலும், சுழன்ற வண்ணமே இருக்கும் பிறப்பு-இறப்பு எனும் பந்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்று நான் அவரை வேண்டிக் கொள்ளவில்லையே; ஒரு பேரரசு என்பது முடிவற்ற இருள் சூழ்ந்த ஒரு ஆழமான கிணறு போன்றது; கண்கள் இருந்தும், நான் அதே கிணற்றுக்குள் குருடனைப் போல இருந்தவாறு விழுந்து விட்டேன்||10||
செல்வத்தால் பெறக் கூடிய இன்பங்கள் எதுவுமே நிரந்தரம் அல்ல, நேரமும் காலமும் மாறும்போது அவையும் மாறக் கூடும்; மறுநாள் விடியும் போது தான் உயிருடன் இருப்போம் என்று யாரால் உறுதியளிக்க முடியும்?; தலை விதியின்படி உடலில் இருந்து ஆத்மா வெளியேறும் நேரம் வந்து விட்டால், குடும்பத்தினராலோ அல்லது உற்றார்-உறவினர்களாலோ என்ன பயன் இருக்கும் ? ||11||
ஒவ்வொருவரும் எடுக்கும் எண்ணற்ற பிறவிகளில், உண்மையில் யார் யாருக்கு அத்தனை பிறவிகளிலும் அதே மகனும் மனைவியும் அமைந்து இருக்க முடியும்?; எவருக்கு அத்தனை பிறவிகளிலும் அதே பணியாளும், அதே நண்பரும் தொடர்ந்து கொண்டு இருக்க இயலும்? அரச கருவூலங்கள் எவ்வாறு என்றென்றும் நிலைத்திருக்க முடியும்?; நாம் குடும்பத்தினர் என்று நாம் அழைக்கும் அனைவருமே, எனது பேரரசின் குடி மக்களையும் சேர்த்தே கூற வேண்டும் எனில் எதுவுமே நிலையானது அல்ல||12||
எந்த கைகள் பகைவர்களைக் கட்டிப் போட்டதோ அதே கைகளைக் கொண்ட என் சடலமும் நான்கு பேர்களால் சுமந்து செல்லப்பட வேண்டிய ஒன்றே ஆகும்; எந்த அறிவுத் திறனும் ராஜாங்க கம்பீரமும் மற்றவர்களை அடக்கி ஆண்டதோ அவை கூட, மயானத்தில் நெருப்பில் தூக்கி எறியப்படும் உடலோடு எரிந்து செல்கின்றன||13||
சிற்றரசர்கள், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு நாட்டு அரசர்களை அடக்கி ஆண்டவன் எவனோ, அவனும் சுடுகாட்டில் எரிப்பதற்காக கொண்டு செல்லப்படும் விறகுகளுடன் சேர்த்துக் கட்டப்படும் சடலமாக இருக்கிறான்; அழகிய மங்கையரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அவர்கள் மோகத்தினால் விலங்குகளைப் போல ஆடிக் கொண்டு இருந்தவனும், இறுதியில் புழுக்களுக்கு உணவாகவோ அல்லது தகனத்திற்குப் பின் மிஞ்சும் சாம்பலாகவோ ஆகின்றான் ||14||
அழிய உள்ள உடலை பராமரிப்பதற்காகவே, பெரும்பாலானோர் தங்கள் தீய நடத்தைகளை கூட நியாயப்படுத்திக் கொண்டு காலத்தை கழிக்கின்றனர்; நானும் அதே மூடச் செயலை செய்தவண்ணம் இருந்து வந்துள்ளேன்; அதற்காக நான் சற்றும் வருந்தாமல் இருந்துள்ளேன் என்பதுதான் கேவலமானது||15||
அந்த பரமாத்மன் உண்மையில் கருணை மிக்கவர்; அவருக்கு எனது ஆயிரமாயிரம் பணிவான வணக்கங்களை அளிக்கின்றேன்; பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக என் மனதில் அத்தகைய வாழ்க்கையின் சுகமான எண்ணங்கள் மிதந்து கொண்டிருக்க வகை செய்தவரும் அவரே அல்லவா ||16||
அவரே கருணையின் வடிவமாகத் திகழ்பவர்; இனி நான் நாடிச் செல்ல வேண்டியது அவருடைய திருப்பாதங்களே ஆகும்; நான் அவருடைய திருவடிகளைப் பணிவுடன் பற்றிக் கொள்ள வேண்டும்; அவரைத் தவிர வேறு யாரால் என்னை சம்சாரக் கடலில் இருந்து மீட்டு கரை சேர்க்க முடியும்?’ ||17||
இவ்வாறான எண்ணங்கள் மனதில் மிதந்து கொண்டிருக்க, வாழ்க்கை மீது பற்றுக்களை அகற்றிக் கொண்ட மன நிலையுடன் மன்னன் அர்ஜுனன் மீண்டும் சஹ்யாத்ரி மலையை நோக்கிச் சென்றான்; அங்கே சென்றவன் தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயர் எவராலும் கலைக்க முடியாத நிலையிலான ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்துள்ளதைக் கண்டான்; ஆனால் அனைத்தையும் அறிந்த தெய்வமான ஸ்ரீமத் தத்தரோ, அர்ஜுனன் அங்கு வருவதற்கு வெகு முன்னரே ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து விட்டார் ||18||
தமது சீடரின் மனதை ஒருமுகப்படுத்துவதற்காகவும், அவனுக்கு ஆன்மீக ரீதியிலான மேல் நிலையை அடைய வழி காட்டவும், அனைத்து குருமார்களும் எக்காலத்திலும், முதலில் தமது பக்தர்களின் ஸ்திரமான மன நிலையை சோதிப்பதுண்டு; அதே வழி முறையைத்தான் ஸ்ரீமத் தத்தரும் கடை பிடித்து அமர்ந்திருந்தார்||19||
ஆனாலும் அர்ஜுனன் மனம் தளரவில்லை; தான் தேடி வந்த அந்த தெய்வத்திற்கு தனது மனத்தால், ஸ்தோத்திரங்களினால் மற்றும் உடலால் சேவைகளை செய்தபடி இருந்தான்; ஆயினும் அந்த தெய்வம் வேண்டும் என்றே தனது தியானத்திலிருந்து விழித்து எழவில்லை, தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருந்ததையும் கண்டு கொள்ளவில்லை; அதன் காரணம் அர்ஜுனனின் மனதில் என்ன எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருந்தன, எதற்காக அவன் இங்கு வந்தான் என்பதை முற்றிலும் அறிந்தவர் அல்லவா||20||
அதன் பிறகு அர்ஜுனன் தண்ணீர் குடிப்பதையும் கூட நிறுத்திக் கொண்டான்; மனதில் மிக்க துயரத்துடன் தியானத்தில் இருந்த ஸ்ரீமத் தத்தரைப் புகழ்ந்து போற்றி மீண்டும் மீண்டும் பணிந்து வணங்கினான்; ஆனாலும் ஸ்ரீமத் தத்தர் கண் திறந்து பார்த்து அவனை தேற்றவோ, ஆறுதல் கூறவோ இல்லை ||21||
ஸ்ரீமத் தத்தரின் மௌனத்தைக் கண்ட அர்ஜுனன் மீண்டும் அவர் மீதான துதி பாடத் துவங்கினான்; அவனது உணர்வுகளின் ஆழத்தினால் அவனது குரல் தழுதழுத்தது; அத்தகைய நிலையில், அவன் ஸ்ரீமத் தத்தரின் திருவடிகளை பார்த்தபடி மன்றாடும் பார்வையுடன் பாடலானான் ||22||
துதிப் பாடல் : ‘போற்றி, போற்றி, இந்த பிரபஞ்சத்தைக் காத்தருளும் தயாளனே, இந்த எளியவன் மீது என்ன கோபம்?; தயவுசெய்து அதற்கான காரணத்தை எனக்கு விளக்குவீர்களா? ||23||
நீங்கள் எனக்கு பாசம் மிக்க பெற்றோரைப் போன்றவர்; நீங்களும் என்மீது கோபமுற்று என்னை ஒதுக்கி வைத்தால் என் மனதில் உள்ள துயரத்தை யாரிடம் நான் கூற முடியும்?; தந்தையே, தயவு செய்து உங்கள் கோபத்திற்கான காரணத்தை விளக்குவீர்களா?||24||
தாம் விரும்பியதைப் பெற முடியாத நிலையிலான குழந்தைகள் கதறி அழுவதை போன்ற எனது துதிப் பாடல்களை செவி கொடுத்துக் கேட்பீர்களா; என் கவலைகளை போக்கி அருள்வீர்களா?; ஏனெனில், உலகப் பற்று எனும் பந்தங்களை அறுத்து எறியும் ஆற்றல் உங்களுக்கு மட்டுமே உள்ளது ||25||
உங்களது திருப் பாதங்களில் எப்போதும் சரணடைந்து உள்ளவர்களே உண்மையான மன நிறைவை அடைகிறார்கள்; ஆன்மீக ஞானிகளின் இந்தக் கருத்து தவறானதோ? ||26||
எவன் என் மீது ஆழ்ந்த பக்தியும், என் திருவடிகளின் மீது மிகுந்த பற்றும் கொண்டிருக்கிறானோ, அவன் அனைத்துக் கர்ம பாவங்களில் இருந்தும் விடுபட்டு, மேன்மையான இன்ப நிலையை அடைந்து, முக்தியையும் பெறுகிறான் என்பது உங்கள் திரு வாக்கு ஆகும், ஓ தெய்வமே||27||
எனது பக்தர்கள் வாழ்க்கையில் ஒரு போதும் வீழ்ச்சி அடைய மாட்டார்கள் என்று நீங்கள் உறுதியுடன் கூறுவீர்கள்; அவை உங்கள் திரு வாக்குகள் அல்லவா?; ஓ தெய்வமே, அத்தகைய சத்திய உரைகளை வீணாகப்வெளிப்புற ந் தள்ளி விடாதீர்கள்||28||
போற்றி, போற்றி, கருணைக் கடலே போற்றி; இந்த பிரபஞ்சத்தை காத்தருளும் கருணைக் கடலே போற்றி; இன்று என்மீது உங்களுக்கு என்ன கோபம்?; தயவு செய்து அதற்கான காரணத்தை எனக்கு கூறி அருள்வீர்களா? ||28||
யோகிகள் இப்படியாக துதிப்பது உண்டு ‘எனது ஆருயிர் நண்பரைப் போன்றவரே, என்மீது ஏன் இவ்வளவு அதிருப்தி கொண்டுள்ளீர்கள்?; ஓ, தெய்வமே, ஸ்ரீமத் ஹரி, உலகப் பற்று எனும் பந்தங்களுக்கும், மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கக் காரணமாக உள்ளவற்றுக்கும் எதிரியாக உள்ளவரே; உங்கள் பக்தர்கள் அனைவருமே, உங்கள் அருளை வேண்டியவாறு, உங்களையே மையமாகக் கொண்டு உங்களை சுற்றி வந்த வண்ணமே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்; நீங்களும் அவர்களைத் தனது உயிரினும் மேலான ஆத்மாக்களாக போற்றிப் பாதுகாத்து வருகின்றீர்கள்; அப்படியிருக்க, இன்று மட்டும், ஓ கருணைக் கடலே, என் மீது ஏன் இத்தகைய அலட்சியம் எனும் அம்பைத் தொடுத்துள்ளீர்கள்? ||29||
தெய்வமே, நான் ஒன்றை உணர்கின்றேன்; என் மீது எதோ காரணத்தினால் ஏமாற்றமடைந்து, இங்கு வந்துள்ளவன் யார் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு , என்னை விட்டு நீங்கள் விலகி நிற்பதாகவே தோன்றுகிறது; தெய்வமே; உங்கள் மௌனத்தைப் பார்க்கும்போது எனக்கு இப்படித்தான் தோன்றுகின்றது; ‘நான் ஏதாவது தவறு செய்திருந்தால், அதற்குரிய எத்தகைய தண்டனையை எனக்கு அளித்தாலும் அதை ஏற்றுக் கொள்வதற்கு நான் தயாராகவே உள்ளேன்; ஆயினும், நான் எங்கு தவறிழைத்தேன் என்பதை மட்டும் தயவு செய்து எனக்குத் தெளிவுபடுத்துமாறு வேண்டிக் கொள்கின்றேன் ||30||
இப்படிப்பட்ட மனத் துயரத்திலிருந்து நான் எவ்வாறு மீண்டு எழுவது?; நீரில் இருந்து வெளியில் எடுத்து போடப்பட்ட மீன், உயிர் வாழ முடியாமல் எவ்வாறு துடி துடிக்குமோ, அவ்வாறேதான் நானும் எனது அகத்திலும்வெளிப்புற த்திலும் துடி துடித்துக் கொண்டிருக்கின்றேன்; இன்று அன்பு மிக்க நீங்கள் என் மீது சற்றும் இரக்கப்படாமல் மெளனமாக ஏன் இருக்கின்றீர்கள்? ||31||
‘இஸ் தன் தன் கி கௌன் படாயி’ அதாவது இந்த அழிந்து போகும் உடலைப் பற்றி பெருமை பேசுவதற்கு என்ன இருக்கிறது என்ற கருத்தில் உள்ள பாடலைப் போன்று அர்ஜுனன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரை துதித்தான் ‘இன்று உமது அருள் பார்வை எனக்குக் கிட்டாமல் போனது ஏன்? ஒருவேளை என்னிடமே ஏதேனும் தவறு உள்ளதா || 32||
அப்படித் தவறு இருப்பது நிச்சயமாகச் சாத்தியம்தான்; ஆயினும், ஓ கருணை தெய்வமே, என் குறைகளை நீங்கள் பட்டியலிட்டுக் காட்ட வேண்டாம்; ஏனெனில், நிலப்பரப்பில் உள்ள எண்ணற்ற தூசிகளை போலவே எனது குறைகளும் எண்ணற்றவைகளாக இருக்கலாம் ||33||
இந்த பிரபஞ்சத்தில் உங்களை போன்று கருணை நிறைந்தவரும் வேறு எவரும் கிடையாது; அதே போன்று, இவ்வுலகில் என்னைப் போல எண்ணற்ற குறைகள் கொண்ட வேறு எவரும் இருக்க முடியாது ||34||
உடலளவிலோ அல்லது மனதளவிலோ நோய் வாய்ப்பட்டவர்கள் இவ்வுலகில் எவருமே கிடையாது என்ற நிலை இருந்திருந்தால், பாரம்பரியம் மிக்க மருத்துவர்களையும், மந்திர சக்தியால் பிணி தீர்ப்பவர்களையும் குறித்து எவராவது தேடி அலைந்திருப்பார்களா என்று நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா?||35||
கருணா மூர்த்தி தெய்வத்தின் மேன்மை ஏன் கருணை இல்லாமல் மாறிவிட்டது என்று எவராலும் கேட்க முடியுமா? ||36||
எனது குருவானவர், நீங்களே எனது தாயும் தந்தையும் ஆவீர்கள்; ஓ ஸ்ரீமத் ஹரி, நீங்கள்தான் எனது துயரத்தை நீக்க வேண்டும்; உண்மையைக் கூற வேண்டும் எனில், எனக்கு நிச்சயமாக தெரியும் உங்கள் மனதிற்குள் என் மீது எந்த கோபமும் வெறுப்பும் கிடையாது ||37||
பாடல்; தெய்வமே, எந்த மேன்மையான தெய்வத்தின் அருளினால், அறிவற்ற ஜடப் பொருட்களின் உண்மையான தன்மைகள் அறியப்படுகின்றனவோ, அந்த தெய்வம் நீங்கள்தான்; எப்படி கடந்த கால நிகழ்வுகள் அனைத்தும் கனவுகள் கலைவதை போல கரைந்து விடுகின்றனவோ, அத்தகையவாறாகவே நீங்களும் காணப்படுகின்றீர்கள்; எப்படி ஒரு விளக்கை ஏற்றி விரைவாக சுற்றினால் தீக் கோளம் போன்ற ஒரு மாயத் தோற்றம் தோன்றுமோ அப்படித்தான், மாயை உருவான, அமைதியும் சாந்தமும் கொண்ட உங்களை, ஆத்ம விடுதலையையும் ஞானத்தையும் தேடி அலைபவர்கள் தேடி அலைகிறார்கள் ||38||
உங்கள் திருவடிகளைச் சரணடைவதன் மூலம், அனைத்து மாயை எண்ணங்களும் முற்றிலுமாக நீங்கி விடுகின்றன என்பதில் வியப்பில்லைதான்; அதனால்தான் உங்களைத் தேடி விழிப்புணர்வு பெற விரும்பும் அடியவர்கள் ஓடி வருகின்றார்கள். அப்படி ஏற்கப்படும் அடியவர்களுக்கு மீண்டும், மீண்டும் இறப்போ பிறப்போ ஏற்படுவது இல்லை ||39||
மேல் கூறப்பட்ட அனைத்து அருளையும் கொடுக்கவல்ல தெய்வமே, எல்லையற்ற மகிழ்சியின் இருப்பிடமாக இருக்க முடியும்; எனவே ஓ,கோவிந்தா, முக் குணங்களுக்கும் (சத்துவம், ரஜஸ், தமஸ்) அதிபதியாகத் திகழ்பவரே, நீங்கள் மட்டுமே இப் பிரபஞ்சத்தில் முற்றிலும் சுதந்திரமாக உள்ள தெய்வம் என்பதே சத்தியம்||40||
ஓ, தெய்வமே நான் உங்கள் பல பக்தர்களில் ஒருவன்; நானும் இவ்வுலகப் பந்தங்களிலும், நியதிகளிலும் கட்டுப்பட்டு உள்ளவன் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். பிறப்பு-இறப்பு எனும் சுழற்சி மீண்டும் நிகழுமோ என்ற அச்சம் மட்டுமல்ல, மாயையினால் ஏற்படும் பல்வேறு வேதனைகளினாலும் சூழப்பட்டு கொண்டுள்ளவன் ||41||
இம்முறை ஏன் உங்கள் மனம் என் மீது கருணை கொள்ளவில்லை; ஏன் என்னால் உங்கள் அமைதியான, இனிய புன்னகையுடன் கூடிய திரு முகத்தை இம்முறை தரிசிக்க முடியாமல் உள்ளது? உலக பந்தங்களில் சிக்கிக் கொண்டதால் ஏற்படும் வேதனையை என்னால் இனியும் தாங்கிக் கொள்ள இயலவில்லை என்ற என்னுடைய துயரத்தைக் குறித்து நீர் கவலைக் கொள்ளாமல் இருக்கின்றீர்களா ||42||
உலக பந்தங்களினால் ஏற்படும் துயரங்கள் எப்படிப்பட்டவை என்பதை உங்கள் திரு அருளால் நான் முற்றிலும் உணர்ந்து உள்ளேன்; குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்கள் அனுபவிக்கும் பிரசவ வேதனையை குழந்தை பாக்கியம் இல்லாத மலடிப் பெண்களினால் எவ்வாறு அறிய இயலும் என்பதை போல , உலக பந்தங்களில் சிக்கிக் கொள்பவர்கள் அனுபவிக்கும் வேதனையை உங்களால் எப்படி உணர இயலும்?||43||
நீங்கள் அனைத்தையும் அறிந்தவர், எந்த பந்தமும் இல்லாத முக்தன் (ஆத்ம விடுதலை பெற்றவர்); பிறப்பு-இறப்புச் சுழற்சி இல்லாதவர் என்பதினால் அதன் மீதான அச்சம் உங்களுக்கு கிடையாது; இன்பம், துன்பம், துயரம் அல்லது பற்று ஆகியவற்றால் உங்களை தீண்ட முடியாது; நீங்கள் எல்லையற்ற ஆனந்தத்தில் உள்ளவர்; என்றும் புதுப் பொலிவோடு உள்ளவர் ||44||
தங்கக் கரண்டியுடன் பிறந்தவர்கள், பஞ்சத்திலும் பட்டினியாலும் உழல்பவர்களது வேதனையை உணர முடியாதது போல, ஓ தெய்வமே, என்றும் நன்மையையே அருளும் சிவபெருமானே, உலக பந்தங்களினால் ஏற்படும் எந்த விதமான துயரங்களும் துன்பங்களும் உங்களை சிறிதும் தீண்டுவதில்லை ||45||
உலக பந்தங்களினால் ஏற்படும் எந்த விதமான துயரங்களும் துன்பங்களும் குறித்து நீங்கள் எவ்வித அனுபவமும் அற்றவர் என்றே கூறலாம்; உங்களுக்கு தெரிந்ததெல்லாம் உங்களைக் குறித்து நித்திய சாட்சியாக உள்ள மேன்மைகள் மட்டுமே; அந்தப் பார்வையுடனேதான் நீங்கள் அனைத்து உயிர்களையும் பார்க்கின்றீர்கள்; உங்களை நேசிப்பவர்கள் வாழ்க்கை வலையில் சிக்கி எவ்வளவு துன்பப்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்||46||
நீங்கள் சூரியன் மற்றும் சந்திரனை உங்கள் கண்களாக கொண்டு இந்த உலகை நோக்குகின்றீர்கள்; எதையுமே மறைக்க முடியாத அந்த கண்களினால் என்னை ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை என்பது எனக்கு வியப்பைத் தருகின்றது; ஓ கருணைக் கடலே, நீங்கள் வேண்டும் என்றேதான் என் மீது அக்கறை இல்லாமலும் பார்க்க வேண்டாம் என்றும் இருக்கின்றீர்களா? ||47||
எப்படி நூலிழைகளை ஒரு குறிப்பிட்ட முறையில் பின்னி ஒரு ஆடையை உருவாக்குகின்றார்களோ, அதை போலவேதான் இந்த பிரபஞ்சமே உங்களால் உருவாக்கப்பட்ட உள்ளது; அவற்றையும் நீங்கள் உங்கள் திருமேனியில் அணிந்து கொண்டு உள்ளீர்கள்; அப்படியிருக்க, ஓ எல்லையற்ற தெய்வமே நீங்கள் ஏன் என்னுடைய அழிவை வேடிக்கை பார்க்கவும், அது நிகழ அனுமதிக்கவும் விரும்புகின்றீர்கள்? தயவுசெய்து அதை எனக்கு விளக்குவீர்களா? ||48||
நீங்களே ‘சத்-சித்-ஆனந்தம்’ (இருப்பு-அறிவு-பேரின்பம்) ஆகியவற்றின் முழு வடிவமாகப் உள்ளவர்; இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைவரது அச்சத்தையும் நீக்குபவரும் ஸ்ரீமன் நாராயணர் ஆன நீங்கள்தான்; உலக பந்தங்களிலிருந்து விடுதலை அளிப்பவரான உங்களது திருவடிகளை மட்டுமே நான் உறுதியாக பற்றிக் கொண்டுள்ளேன்||49||
எங்கும் நிறைந்துள்ள தெய்வமே, உங்களது திருவுள்ளத்தில் என்ன உள்ளது என்பதை யாரால் அறிய இயலும்? படைப்பு தெய்வமான பிரும்மாவிற்கும் கூட உங்களுடைய ஆரம்பமும் தெரியவில்லை, முடிவும் தெரியவில்லை எனும்போது ஒரு எளிய ஜீவனான என்னைப் பற்றி என்ன கூறிக் கொள்வது?; உங்களுடைய இதயத்தில் என்னைக் குறித்து உண்மையில் என்ன உள்ளது என்பதையோ, உங்களுடைய நோக்கம் என்ன என்பதையோ என்னால் எவ்வாறு எடுத்துரைக்க இயலும்? ||50||
தயவு செய்து இப்போதாவது என் மீது கருணை காட்டி என் அனைத்துக் குறைகளையும் பிழைகளையும் மன்னித்தருள்வீராக; உங்களது திருக் கண்களைத் திறந்து, என்னையும், இந்த உலகையும் நீங்கள் பார்க்க வேண்டும்; எனது தந்தையே, என்னை பார்த்து ஒரு சில ஆசிகளையாவது எனக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் ||51||
பிரபஞ்சத்தில் உள்ள எண்பத்து நான்கு மில்லியன் உயிரினங்களும் அற்பத்தனமான அளவிலான மகிழ்ச்சியை மட்டுமே பெறுகின்றார்கள், அதை பெறுவதற்காகவே உலகப் பற்று என்பதில் புதைந்து போகின்றார்கள்; எலி எப்படி தனது இரையை கடிக்கின்றதோ அதை போல, காலம் எனும் பாம்பு தம்மை கடிக்கும்போது மட்டுமே அவர்கள் திடீரென அதை உணர்கிறார்கள்’ ||52||
‘ஓ தெய்வமே உலக பந்தங்கள் எனும் காட்டில் நான் குழப்பமடைந்து தொலைந்து விட்டேன்; உடல், துன்பங்கள் நிறைந்த மனம், ஆத்மா போன்ற தீயில் விழுந்து நான் எரிந்து விட்டேன்; ஆகவே முற்றிலும் சோர்ந்து போய் விட்ட நான் அந்த வலிகளில் இருந்து நிவாரணம் தேடுகிறேன்; மேலும் உங்களைக் குறித்து இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவலும் எனக்கு எழுந்துள்ளது, ஓ கருணை தெய்வமே, அந்த நோக்கத்துடன்தான் நான் புகலிடம் தேடி உங்களிடம் வந்துள்ளேன் ||53||
படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் எனும் மூன்று தொழில்களின் சங்கமமான ஸ்ரீமத் தத்தாத்ரேய தெய்வமாக நீங்கள் பக்தி, ஞானம் மற்றும் துறவு ஆகியவற்றை வழங்குவதில் மேன்மையானவர் ; அவற்றை பெறுபவர்கள் ஆத்ம விடுதலை பெற்று மேன்மை அடைகின்றார்கள் என்பதையும் நான் அறிவேன்||54||
உலகில் காணப்படும் இன்பங்கள் அனைத்துமே, அவற்றில் மூழ்கி திளைத்து, வாழ்க்கையை அனுபவிப்பதற்குதான் உள்ளன என்று எவரேனும் கூறினால், அது உண்மை அல்ல, ஏனெனில் அவை அனைத்தும் ஒருவரை துன்பத்தில் ஆழ்த்தி விடுகின்றன; நானும் அதில் விழுந்து மயக்கமுற்று, நிலை குலைந்து விட்டேன் என்று தோன்றுகிறது||55||
மனைவி, மகன், நண்பர்கள்,செல்வம், ராஜ்ஜியம் என அனைத்துமே மாயையே; ஒருவனின் உண்மையான வடிவத்தை (ஆன்மீக வாழ்க்கை முறை) மறைக்கும் எதையுமே தவிர்க்க வேண்டும்; அவற்றை நினைப்பது கூட ஒருவனை அவனது வாழ்க்கையைக் குலைத்து, அமைதியற்றவனாக ஆக்கி விடுகின்றது||56||
ஒருவன் தேள் நிறைந்த படுக்கையையும், பாம்புகள் நிறைந்த தலையணையையும், கொதிக்கும் நிலக்கரி நிறைந்த போர்வையையும் ஒய்வு எடுக்க அளித்தால், யாராவது அதில் நிம்மதியாக அல்லது மகிழ்ச்சியாக உறங்க முடியுமா? ||57||
தங்கள் செய்த சாதனைகளால் தாங்கள் வாழ்க்கையில் அனைத்தையும் அடைந்து விட்டோம் என்று பெருமை அடித்துக் கொள்வதற்கு கூட மிகச் சிலரே இருப்பார்கள்; ஆனால் உலக இன்பங்களின் கவர்ச்சியும், அவற்றின் மீது தொடர்ந்து கொண்டே இருக்கும் கற்பனைகளும் அவர்களை துரத்திக் கொண்டே இருந்தவாறு இன்னமும் முயற்சிகளை எடுக்க வைத்து, அவர்களை வீழ்ச்சி அடைய வைத்து, மரணத்தை நோக்கித் தள்ளுகிறது; அந்த நிலையில் அவன் கடுமையான துயரத்திலும் எண்ணற்ற துன்பங்களிலும் தள்ளப்படுகிறான்||58||
மேற்கூறிய அதே தேக்க நிலையை மீண்டும், மீண்டும் கடந்து செல்வதை விட, நரகத்தில் சென்று அங்கு வேதனையுடன் கழிக்கும் நேரம் மிகவும் மேலானதாக இருக்கும் என்றே மனதில் தோன்றுகிறது; நான் என்னை முழுமையாக உங்களிடத்தில் ஒப்படைத்துக் கொண்ட பின்னரே இந்த முடிவிற்கு வந்துள்ளேன்||59||
உலகப் பற்று எனும் பந்தத்தைத் தவிர்த்து உள்ள மற்றொரு பகைவன் தனது தடியுடனும் வஜ்ராயுதத்துடனும் வரும் மரணத்தின் அதிபதியான யமன் ஆவார்; பூவுலகில் நிலவும் வன் முறையைப் பொறுத்தவரை, உமது அருளால் நான் மரணத்திற்கும் கூட அஞ்சாமல் அவற்றை சந்தித்து உள்ளேன் என்றாலும் பிறந்த எவன் ஒருவனுக்கும் மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதையும் உணர்கின்றேன் ||60||
உலகப் பற்றுடன் கூடிய தொடர் சுழற்சியான ஜனன மரணத்தை உடைக்க என் முன் உள்ள ஒரே தீர்வு உமது திருவடிகளில் சரண் அடைந்து வழிபடுவதுதான்; அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது; காரணம் உங்களது திருவடிகள்தான் அச்சத்திற்கும் கூட அச்சத்தை தரும் வலிமையானது என்ற உண்மையை அனைவரும் அறிந்துள்ளார்கள்||61||
ஒருவன் உங்களது திருவடிகளில் மனதார அடைக்கலம் அடைந்தவுடன், ஆனந்தக் கண்ணீர் உடலை நனைத்து விடும்; அதன் பயனாக அவன் உலகப் பற்றுகளையும் அதன் சூழ்ச்சிகளையும் எளிதில் கடந்து விடுவான், இதை விட நன்மை தாரக கூடியது வேறு என்ன இருக்க முடியும்?’ ||62||
தன் மீதே கட்டுப்பாடற்ற மனித குலத்திற்கு தெய்வங்களினால் , அவர்கள் விரும்பும் வரை புலன் இன்பங்களில் திளைக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது; அவர்களும் மகிழ்ச்சி, இன்பம் அல்லது சந்தோஷத்தை மட்டுமே வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டு அந்த அனுபவங்களில் ஆர்வமாக ஈடுபட்டுக் கொண்டுள்ளார்கள் ||63||
நான் அந்த அனுபவங்களைக் கடந்து பற்றற்ற நிலையில் நுழைந்து விட்டேன்; தற்போது நான் உங்களது பக்தனாகி, உங்களைக் குறித்து இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள வேட்கை கொண்டுள்ளேன்; உங்கள் திருவடிகளில் சரணடைய உங்களை துதித்த வண்ணம் உள்ளேன்; உண்மையான மன விடுதலையை அருளுவதில் புகழ் பெற்ற தெய்வமே, முகுந்தா, எனக்கு இப்போதே முக்தியை அருள வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகின்றேன் ||64||
இவ்வுலகம் சார்ந்ததோ அல்லது மறுவுலகம் சார்ந்ததோ உள்ள இன்பங்கள் அனைத்தின் மீது இருந்த நாட்டங்கள் என்னுள் இருந்து அழிந்து விட்டன; உங்களிடம் நான் சரண் அடைந்த பின்னர் அவை அனைத்துமே ஒன்றும் அற்ற, விஷயங்களாக தெரிகின்றன; அப்படி இருக்கையில் அவற்றின் மீது எதற்காக அளவுக்கதிகமாக நாட்டம் கொள்ள வேண்டும் என்பதின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை ; இப்போது நான் விரும்புவது அனைத்துமே ஒன்றே ஒன்றுதான்; அது உங்களது திருவடிகளிலேயே தவம் கிடந்து, வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு சேவை செய்தபடி என் காலத்தைக் கழிப்பதே ஆகும்; உங்கள் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் தெய்வீகக் கற்பக விருட்சமே, எனக்கு அந்தப் கதியை நீங்கள் அருள வேண்டும்||65||
தாய் அனுசூயாவிற்கும், முனிவர் அத்திரிக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகுக; நான் அவர்களின் தெய்வீக மற்றும் புனிதத் திருவடிகளை பணிவுடன் வணங்குகிறேன்; ஏனெனில், வேதங்களாலும் முழுமையாக அறிய முடியாத அந்தப் பரமாத்மனை, ஒரு குறிப்பிட்ட பெயரையும் உருவத்தையும் கொண்டதாக ஏற்றுக் கொண்டு, அவர்களின் ஆசிரமத்தில் ஆனந்தமாக இருக்க வைத்திருப்பதற்கு அவர்களுக்கு கோடானுகோடி வந்தனங்கள் ||66||
தெய்வமே, நீங்கள்தான் தற்போது அப்படி வெளிப்படையாகத் தெரியும் அந்தப் பரமாத்மன் ஆவீர்கள்; உங்களை சரண் அடைந்துள்ள அனைத்து பக்தர்களுக்கும் உங்கள் இருப்பிடம் தாய் வீடல்லவா; அப்படி இருக்கையில் என்னை மட்டும் ஏன் இவ்வளவு தொலைவில் விலக்கி வைத்து உள்ளீர்கள்? நீரை பிரித்து வைக்க மரக்குச்சியை பயன் படுத்த முடியுமா? ||67||
பக்தர்களின் மனம், உடல் மற்றும் ஆத்மா சார்ந்த துயரங்களையும் துன்பங்களையும் நீக்கிடும் தெய்வமே, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும் ஊடுருவி உள்ள பரம்பொருளே, கண்ணுக்குப் புலப்படாத தெய்வமே, ஹ்ருஷிகேசா, அனைத்திற்கும் அப்பாற்பட்ட நிலையில் உள்ள பரமாத்மனே, உனக்குள் உள்ள அளவற்ற ஆற்றலாகிய மாயையின் அதிபதியே, உங்களை நான் உன்னை நான் மீண்டும், மீண்டும் வணங்கி துதிக்கின்றேன் ||68||
இவ்வாறு தன்னிலை மறந்து மிகுந்த ஏக்கத்துடன் துதித்துப் போற்றிய அர்ஜுனன், திடீரென தன் சுய நினைவை இழந்தான்; சற்று நேரத்திற்குப் பின்னர் மீண்டும் சுயநினைவை அடைந்தவன், தன்னைப் பற்றியும் தன் சுற்றுப்புற நிலையையும் குறித்து உணர்ந்த பின், மீண்டும் தான் தேடி வந்த அந்த தெய்வத்தை போற்றி புகழலானான் ||69||
பூபாலி (Bhupali) எனும் ராகத்தில் அமைந்த ஒரு காலைத் துதிப் பாடலை பாடத் துவங்கினான் ‘விழித்தெழுவாயாக, ஓ, முனிவர் அத்திரியின் தெய்வீகப் புதல்வனே, எழுந்தருள்வாயாக; உங்களது தெய்வீகப் பேரொளியை கண்டு தரிசிப்பதற்காக, எத்தனை பக்தர்கள் இங்கே கூடி உள்ளார்கள் என்பதைப் பாராயோ; அவர்களின் தெய்வீக மற்றும் புனிதமான விருப்பங்களை நிறைவேற்றி அருள மாட்டாயா?குறைந்த பட்சம் உங்களுடைய திருக் கண்களையாவது திறந்து பார்த்து அவர்கள் மீது கருணை காட்ட மாட்டாயா? உங்களது கடைக் கண் பார்வையாவது அவர்கள் மீது விழாதா? ||70||
உமது கருணை ததும்பும் கண்களால் எங்களை பாராயோ; உங்கள் பக்தர்கள் எங்களை உங்களின் திவ்ய ரூபத்திற்குள் அணைத்துக் கொள்ள மாட்டாயா; வீண் பெருமையினால் எங்களை அலைக் கழிக்கப் பட விடாமல் எங்களை பற்றிக் கொண்டிருப்பாய்; எங்களை அன்புடன் தழுவிக் கொண்டு, உமது அன்பினால் எங்களை மெய்மறந்து இருக்க வைப்பாய் ||71||
எங்கள் இருப்பிடமோ செந் நிறத்தில் காணப்படும் உங்களது திருவடிகள் ஆகும்; நாங்கள் எங்கள் இல்லத்தை, துணைவியினரை மற்றும் பிற உலக எண்ணங்கள் அனைத்தையும் மறந்து விட்டோம்; உங்களது அருளால் எங்கள் உள்ளிருக்கும் ஆத்மா வுடன் ஒன்றிணைந்து, சுய ரூபத்தில் நிலை பெற நாங்கள் முயன்று கொண்டிருக்கிறோம்||72||
அப்படி எங்களது ஆத்மா வுடன் உணர்வு பூர்வமாக ஒன்றிணைந்தபோதுதான், அது நீயே அன்றி வேறில்லை என்பதை உணர்ந்தோம், அதனால்தான் உங்களிடம் அடைக்கலம் தேடி வந்தோம்; அப்படியிருக்க, இப்போது ஏன் உங்கள் திருவடிகளை எங்களிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும்; நீங்கள் எங்கள் அன்னை அல்லவா ? அனைத்து தீய செயல்களையும் விலகிப் போகச் செய்யும் அந்தப் பரமாத்மனிடம் நாங்கள் வந்தடைந்துள்ளோம் எனும்போது மரண பயம் எங்களை எப்படி சூழ்ந்திருக்க முடியும்? ||73||
எங்கள் மீது பாராமுகமாக இருக்கும் வகையிலான சினத்தை உங்கள் சித்தத்தில் குடி கொள்ள விடாதிருப்பாய்; கனிவுடன் எங்களை ஆற்றித் தேற்றி அமைதிப்படுத்துவாய்; ஈடு இணையற்ற கருணைக்குப் பெயர் பெற்ற அன்னை நீயே; எங்கள் துயரத்தை விரைந்து போக்கியருள்வாய் ||74||
விழித்தெழு, விழித்தெழு, ஓ தாயே, ஓ சத் குருவே, ஓ ஞான குருவே, விழித்தெழு, விழித்தெழு; கருணையின் புகலிடமே, விழித்தெழு, விழித்தெழு; கருணையின் உருவமே விழித்தெழு, விழித்தெழு; எங்கள் மீது படர்ந்துள்ள சக்தி வாய்ந்த உங்கள் மாயையை விலக்கி வையுங்கள் ||75||
மேற் கூறியவாறு நீண்ட நேரம் அந்த தெய்வத்தின் மீது தோத்திரம் செய்த அர்ஜுனன், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றான்; ஆழ்ந்த மௌனத்தில் அங்கே நின்றிருந்தான்; விடியற் காலையின் ஒளி தென்பட்டது போல் தோன்ற, கிழக்கு நோக்கிப் பார்த்தவனுக்கு, வானம் சிவப்பாகக் காட்சியளித்தது ||76||
தூரத்திலிருந்து வந்து கொண்டிருந்த முனிவர்கள், துறவிகள், தேவர்கள், குருமார்கள், தேவலோக அப்சரஸ் கன்னியர்கள் மற்றும் தேவலோக இசைக் கலைஞர்களான கந்தர்வர்கள் போன்றவர்கள் விரைவில் அங்கு வந்து கூடினர்; வந்த அனைவரும் அங்கிருந்த பரமாத்மனை பணிவுடன் வணங்கி விட்டு வந்த வேகத்திலேயே திரும்பி சென்றனர்; வந்து சென்ற பரிவாரத்தில் தங்களது கர்வ உணர்வை அழித்துக் கொண்டவர்களே பிரதானமாக காணப்பட்டார்கள் ||77||
அதே சஹ்யாத்ரி மலைத் தொடரில் வசித்து வந்திருந்த முனிவர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து, அந்த தெய்வத்திற்கு மரியாதை செலுத்தி விட்டு அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றார்கள். அதன்பிறகு, சாந்தீபனி முனிவர்* தன் கைகளில் மண் மற்றும் நீருடனும் வந்தார்; அவர் அமைதியான தவத்தில் ஈடுபடுவதற்கும் தெய்வ பக்திக்கும் பெயர் பெற்றவர் ஆவார்.
{* ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீ பலராமர் ஆகிய இருவரின் குருவே குரு சாந்தீபனி முனிவர் ஆவார்; ஸ்ரீ கிருஷ்ணரும் ஸ்ரீ பலராமரும் அவந்தீபுரியில் இருந்த சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் தங்கி குரு குலக் கல்வியை கற்றனர். சாந்தீபனி முனிவரிடம் வேதங்கள், வானவியல், ஆயுர்வேதம், வில் வித்தை மற்றும் யானை, குதிரையேற்றம் போன்ற பல்வேறு கலைகளைக் கற்றனர்; சாந்தீபனி முனிவர் குரு குலக் கல்வியின் சிறப்பைக் கூறும் ஒரு முக்கிய புராணக் கதா பாத்திரமாவார்.} ||78||
அந்த முனிவர் வந்ததும் ஸ்ரீமத் தத்த தேவரும் எழுந்தார். அவர் சாந்தீபனி முனிவரிடமிருந்து மண்ணையும் நீரையும் ஏற்றுக் கொண்டு, பின்னர் தெற்கு நைருத்ய திசையை நோக்கிச் சென்று, அவற்றை பயன்படுத்தி அன்றைய தினத்திற்காகத் தன்னைப் புத்துணர்ச்சி ஊட்டிக் கொண்டார்’ ||79||
இதற்கிடையில், தினசரி பலி பீடங்களில் அளிக்கப்படும் நெய்வேத்தியங்களுக்காக மற்றொரு முனிவர் மண், நீர் மற்றும் விறகுக் குச்சியுடன் வந்தார்; ஸ்ரீமத் தத்த பகவானும் தன்னை ஏற்கனவே தூய்மைப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாலும், நெய்வித்தியங்களைக் கொண்டு வந்திருந்த அந்த முனிவரின் மன திருப்திக்காக மீண்டும் ஒருமுறை தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு திரும்பினார் ||80||
கடவுள் அருகிலுள்ள ஏரியில் நீராடி, முனிவர்கள், தேவர்கள் மற்றும் பித்ருக்களுக்கு அபிஷேகம் செய்தார்; அவர் இந்தக் காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது , மற்றொரு முனிவர் குழு, இறைவனுக்கு ஆடையாக பயன்படுத்தப்படும் புனித சாம்பலையும் விலங்குகளின் தோல்களையும் சமர்ப்பிக்க வந்தது ||81||
அதன்பிறகு கடவுள், மங்களகரமான திரிபுண்டத் திலகத்தைத்* தமது நெற்றியில் இட்டுக் கொண்டு, காணிக்கையாக கொடுக்கப்பட்ட அனைத்தையும் அணிந்து கொண்டு,பிராமண குருமார்கள் விடியற்காலையில் செய்யும் சந்தியா வழிபாட்டை செய்ய மீண்டும் தியானத்தில் அமர்ந்தார்
{*திரிபுண்டத் திலகம் (Tripundra Tilak) என்பது சிவபெருமான் மற்றும் சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் நெற்றியில் அணிந்து கொள்ளும் மூன்று கோடுகள் கொண்ட திரு நெற்றிப் பட்டையைக் குறிக்கும். திரி என்றால் மூன்று, புண்டம் என்றால் கோடுகள் அல்லது பட்டை என்பது அர்த்தம்} ||82||
நீண்ட நேரமாகக் காத்திருந்த அர்ஜுனன் இதனால் மேலும் மனம் வருந்தினான்; ஆயினும், அவன் கை கூப்பியவாறு அங்கே அமைதியாக நின்று கொண்டே இருந்தான்; அதைக் கண்ட சாந்தீபனி முனிவர் தன் குருவான ஸ்ரீமத் தத்தாத்ரேயப் பெருமானை வணங்கி, மிகுந்த பணிவுடன் இவ்வாறு கூறலானார் ||83||
‘தெய்வமே, இதோ இங்கே நிற்கும் உங்களது பக்தனை பாருங்கள்; இவர் கை கூப்பியவாறு, உண்ணாவிரதம் மேற்கொண்டு வெகு நேரமாக இங்கேயே நின்று கொண்டிருக்கிறார்; இவர் முழுமையாக உம்மையே சரணடைந்தவர்; தயவுசெய்து இனிமேலும் இவரைப் புறக்கணிக்காதீர்; இவருடைய மனச் சோர்வை மேலும் அதிகரிக்கச் செய்யாதீர் ||84||
இவர் உங்களிடத்தில் தூய்மையான பக்தி கொண்டவர் என்பது உங்களுக்கும் தெரியும்; இவரை வாட்டும் துயரத்தை அறிந்து கொண்ட பின்னரும் இவர் மீது இரக்கமற்றவராய் இருக்காதீர்கள்; ஒரு முறையாவது உங்களது கருணைப் பார்வையால் இவரை பாருங்கள்; உங்களிடத்தில் உணர்ச்சி பூர்வமாக பக்தி செலுத்தும் இந்த பக்தனை நீங்கள் நினைவில் வைத்து இருப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’||85||
மன்னர் அர்ஜுனனுக்காக அந்த முனிவர் விடுத்த கோரிக்கையைக் கேட்டதும் ஸ்ரீமத் தத்தர் புன்னகைத்தார்; பின்னர் முனிவரிடம் இவ்வாறு கேட்டார் ‘இவனுடைய மனதை வாட்டும் குறை என்னவென்று உமக்குத் தெரியுமா; இவனுக்கு அதிக செல்வம் தேவை என்றால், அதை என்னால் மிக விரைவாகவே நிறைவேற்றித் தர இயலும் ||86||
என்னைச் சரணடைந்த அடியவர்களுக்குக் மேலும் கிடைக்க வேண்டிய அரிய பொருள் எதுவும் இருக்க முடியுமா? என் அருளினால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய செல்வங்களும், மற்ற அனைத்தும் அவர்கள் கைகளில் ஏற்கனவே உள்ளன; அப்படியிருந்தும் அவர்கள் மேலும், மேலும் பேராசை கொண்டு அலைந்து, தங்களுக்கு கிடைத்தவை போதாது என்று கருதினால் என்னால் அவர்களுக்கு இன்னும் என்னதான் செய்ய முடியும்; நீங்களே கூறுங்கள்’ என்றார் ||87||
ஸ்ரீமத் தத்தரின் கடுமையான வார்த்தைகள் மன்னனின் இதயத்தை ஈட்டி போல குத்தியது; அவனது கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தன; அவன் மிகவும் பரிதாபமான குரலில் இவ்வாறு கூறினான் ‘சகல உயிர்களுக்கும் மேலானவர், எனது என் உயிரினும் மேலானவரே, உண்மையாகவே எனது இதயத்தில் என்ன இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்||88||
அப்படி இருந்தும் இப்படி எல்லாம் கடுமையாகக் கூறி என்னைச் சோதிப்பதையும், மேலும் கடிந்து கொள்வதையும் தயவு செய்து நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்; இதுவே போதுமானது என்று உம்மிடம் நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்; நான் உண்மையாகவே உம் கருணைப் பார்வை என் மீது விழ வேண்டும் என்பதற்காகவே இங்கு ஏங்கி நிற்கிறேன்; வேறு எதையுமே விரும்பி இங்கு வரவில்லை; தயவு செய்து உம்முடைய இந்த எளிய பக்தன் மீது பாராமுகமாய் இருக்காதீர்கள் ||89||
சாஸ்திரங்கள் கூறுவது என்ன என்று உங்களுக்கு தெரியும் ‘தாகம் எடுத்தவனுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்;பசியோடு உள்ளவனுக்கு உணவு அளிக்க வேண்டும் ; மற்றும் வறுமையில் வாடுபவர்களுக்குச் செல்வமும், அடைக்கலம் தேடி வருபவர்களுக்குப் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்’||90||
மேலும் சாஸ்திரம் கூறுகின்றது , தகுதி உள்ளவர்களுக்கு பொருத்தமான பரிசுகளை வழங்க வேண்டும். அனைத்து இடத்திலும் வியாபித்து உள்ள தெய்வமே, இவற்றை விடுத்து உங்களிடம் நான் வேறு என்ன சொல்ல முடியும்? நீங்கள் எனக்கு நிறைவேற்றித் தர வேண்டும் என்று வேறு என்ன கோரிக்கையை உங்களிடம் நான் வைக்க முடியும்?; என் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் நன்கே அறிவீர்கள்||91||
எனக்கு எந்த விதமான பொன்னாசையோ, பொருளாசையோ அல்லது உலக ரீதியான எதிர்பார்ப்புகள் கிடையாது; உங்களிடம் இருந்து ஆன்மீக ஞானத்திற்கான தீட்சை பெற்றுக் கொண்டு, உங்களைக் குறித்த அனைத்து மேன்மைகளையும், உண்மைகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையான வேட்கை மட்டும் எனக்குள் உள்ளது; அப்படிப்பட்ட தீட்ஷையை பெற வேண்டும் என்பதற்காகவேதான் நான் இங்கு வந்தேன்; அந்த ஞான தீட்சையை எனக்கு நீங்கள் அருள வேண்டும்||92||
எனக்குள்ள அறிவாற்றலைக் கொண்டு அவற்றை புரிந்து கொள்ள நினைத்து சாஸ்திரங்களைப் படித்தால், அது என்னை ஒரு குழப்பமான நிலையிலேயே கொண்டு செல்கின்றது; ஆன்மீக ஞானம் முழுமையாகப் அடைய எந்த வரிசைகிரமத்தில் அதை படிக்க வேண்டும் என்பது புரியவில்லை; என்னால் எனது புலன்களின் ஆசைகளையும் அடக்கிக் கொள்ள முடியவில்லை; அதில் என்னால் வெற்றி அடைய முடியவில்லை||93||
நீங்கள் அனைவரது மனதிற்கும் எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டவர் என்று சொல்லப்படுபவர் ; உங்களை பிரும்மன், அதாவது அனைவருக்கும் மேலானவர் என்கின்றார்கள்; இந்த பிரபஞ்சமே தற்காலிகமானது, நிலையற்றது மற்றும் உங்களது மாயையின் பிடியில் உள்ளது என்று சொல்லப்படுகிறது; ஆன்மீக மகான்கள் இந்த பிரபஞ்சத்தை நீர்க் குமிழி போன்று நிலையற்றது என்று அழைக்கிறார்கள்||94||
அன்றாடம் உலக இயக்கத்திற்குள் அனைவரும் இருப்பதினால் பிரபஞ்சம் மாயை அல்ல, அது உண்மையானது என்பதாக வேறு பலர் கூறுகிறார்கள்; மீமாம்சை* கோட்பாட்டாளர்கள், ஒருவர் தமது கடமைகளை செய்து கொண்டு இருக்க வேண்டும் என்றும் அவற்றை பின்பற்றுவதால் அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றும் வாதிடுகின்றனர்
{* மீமாம்சை (Mimamsa) என்பது இந்து மதத்தின் ஆறு மரபுவழித் தத்துவங்களில் (ஷட்-தரிசனங்கள்) ஒன்றாகும்; ஆராய்ச்சி அல்லது விசாரித்தல் என்று பொருள்படும் இது, வேதங்களின் கர்ம காண்டத்தை (சடங்குகள் மற்றும் கடமைகள்) விளக்கி, சரியான விளக்கங்களை அளிப்பதையும், வேத வாக்கியங்களை ஆராய்ந்து தர்மத்தை நிலை நிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது}||95||
முனிவர் கணாதர் பிரபஞ்சம் அணுக்களின் சேர்க்கையால் உருவானது என்றும், பிரிக்க முடியாத மிகச் சிறிய துகள்களே ‘அணு’ என்றும் விளக்கி பிரபஞ்சத்தை தெய்வங்கள் தோற்றுவிக்கவில்லை என்று கூறினார்; சாங்க்ய சமயத்தினர் ஆத்மா என்பது ஒன்றுதான் என்பது தவறு தனித்தனி ஆத்மா க்கள் பல உண்டு என்கின்றனர்; யோகிகள் இன்பம் என்பது யோக நெறியில் மட்டுமே குடி கொண்டிருக்கிறது என்று பிரகடனப்படுத்துகின்றனர்; அனைத்தும் சூன்யமே (வெறுமையே) என்ற கொள்கையை பின்பற்றுபவர்கள், நாம் காணும் அனைத்துமே ஒன்றுமில்லாதவை, காலத்தால் வரையறுக்கப்பட்டவை என்று கூறுகின்றனர்
{*கணாதர், பௌத்த, சமண தத்துவங்களுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த ஒரு தர்க்கவாதி; அணு அறிவியலின் முன்னோடியாக கருதப்படுகிறார்; உலகம் தோன்றுவதற்கு காரணமானவை பரமாணுக்கள் (atoms) என்றும், இவை அழியாதவை, நித்தியமானவை என்றும் அவர் விளக்கினார் }||96||
ஒரு சிலர் தெய்வம் என்பது ஒரு இயக்கம் கருவி மட்டுமே என்கின்றனர்; வேறு சிலர் ஒவ்வொரு இயக்கமும் இன்னொரு இயக்கத்தின் மூலமே செயல் படுகின்றது என்கின்றனர்; இன்னும் சிலர், இவ்வுலகின் தோற்றத்திற்குக் காரணம் இயற்கையே என்கின்றனர்; மற்றும் சிலர், எதிரெதிர் துருவங்களின் சேர்க்கையாலோ அல்லது இணைப்பாலோ அனைத்தும் தோன்றின என்று கருதுகின்றனர்||97||
அறிஞர்கள் ஒவ்வொருவரும், சாஸ்திரங்களில் இருந்துதான் மேற்கோள்கள் காட்டித் தங்கள் கொள்கைகளை நிலைநாட்ட முயல்கின்றனர்; இதன் விளைவாக, என் அறிவு குழப்பமடைந்துள்ளது; ஒ தெய்வமே, அனைத்தையும் அறிந்தவரே, நான் உம்மிடம் இதனால்தான் அடைக்கலம் அடைந்து உங்கள் மூலம் ஞானம் அடைய விரும்புகின்றேன் ||98||
நான் கூறிய குருமார்கள் அனைவரும் சுட்டிக் காட்ட முயலும் அந்த உண்மைதான் என்ன?; அவற்றில் உண்மையில் எவை உண்மையானவை என்பதைக் கண்டறிய விரும்பும் அன்பர்கள் என்ன செய்ய வேண்டும்?’; இவ்வாறு ஸ்ரீமத் தத்தரை வேண்டிக் கொண்ட மன்னர் அர்ஜுனன், மீண்டும், மீண்டும் அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கினான்; ஆத்ம விடுதலையைப் பெறுவதற்கான வழியை முறையை எனக்கு கூறியருளும் என்று பணிவுடன் மன்றாடினார்||99||
உமது அருளால், மூவுலகங்களிலும் இப்போது என்னை எதிர்த்து நிற்கக் கூடிய மானிடர் எவரும் இல்லை; என் ஆணைகளை மீறக் கூடிய மானிடர்களுக்கு எவரும் இல்லை; என் பகைவர்கள் அனைவரும் இப்போது எனக்குப் பணிவிடை செய்பவர்களாக மாறி விட்டார்கள்; மேலும், எனது நாட்டின் செழுமைக்கும், எனது அரண்மனையில் உள்ள வளத்திற்கும் ஈடு இணையாக எதுவுமே இல்லை எனும் அளவில் உள்ளது ||100||
மூவுலகங்களிலும் கிடைக்கும் அனைத்து இன்பங்களையும் நான் அனுபவித்து விட்டேன்; இப்போது அப்படிப்பட்ட இன்பங்கள் எனக்கு துன்பம் தரும் வகையில் வெறுப்பாக மாறி விட்டன; என்னுள் தற்போது எந்த விருப்பமோ வெறுப்போ கிடையாது; எனக்குள்ள ஒரே இறுதி ஆசை ஆத்ம ஞானம் பெறுவது மட்டுமே ஆகும் ||101||
என்னைக் காத்தருள்பவரே தயவு செய்து என்னை நம்புங்கள்; நான் கூறுவது அனைத்துமே சாத்தியமான உண்மையாகும்; என் தெய்வமே, எனது குருநாதா, நான் உங்கள் திருவடிகளை உறுதியாகப் பற்றிக் கொண்டு விட்டேன்; இவ்வுலகத்தில் மீதான பற்றுகள் அனைத்தின் இருந்தும் என்னை மீட்டு கறை சேருங்கள் ||102||
நீங்கள் எதை செய்தாலும் அதில் நான் உடன்படுகிறேன்; முடிவற்ற இந்த உலக பந்தங்கள் அனைத்தில் இருந்தும் எனக்கு முக்தி தந்து, இந்த படுகுழியில் இருந்து என்னை வெளியில் எடுத்து கரை சேர்க்க வேண்டும்; உங்களைத் தவிர வேறு எவராலும் அதை செய்ய இயலாது ||103||
பிரம்மா உள்ளிட்ட தேவர்களுக்கே தாங்கள் குருவாகத் திகழ்கிறீர்கள்; இதை வேதங்கள் மூலமாகவே நான் அறிந்து கொண்டுள்ளேன்; நீங்கள் போட்டுள்ள மாயை எனும் சக்தியின் அனைத்துத் திரைகளையும் விலக்கி, அதன் உண்மை வடிவத்தை வெளிப்படுத்த, கருணையும் வல்லமையும் கொண்ட உங்களைத் தவிர வேறு எவரால் முடியும்?’ ||104||
என் மனம், உடல் மற்றும் வாக்கு ஆகியவற்றால் மற்றும் உறுதியான நம்பிக்கையுடன் உங்கள் மீது முழுமையான பக்தி வைத்து, உணவும் உண்ணாமல், நீரையும் கூட அருந்தாமல், நீங்கள் எழுந்தருள்வீர் என்று எதிர்பார்த்து நான் அமர்ந்திருந்தேன்||105||
முற்காலத்தில், என் சேவையில் மகிழ்ச்சி அடைந்த நீங்களே,உங்களிடம் சில வரங்களைக் கேட்குமாறு ஆணையிட்டீர்கள்; ஆனால் தெய்வமே, மந்த புத்தி கொண்டவனைப் போல, இவ்வுலகங்களுக்குரிய செல்வங்களை மட்டுமே நான் உங்களிடம் இருந்துக் கேட்டுப் பெற்றேன் ||106||
அச்சமயத்தில் விதி என்மீது கருணையற்று இருந்தது; ஓ, தெய்வமே அந்த மங்கலமான நாளில், இவ்வுலகச் செல்வங்கள் மீதான ஆசைகளைத் தூண்டி, அது என்னை முழுமையாக ஆட் கொண்டது; காலத்தால் வரையறுக்கப்பட்டதும், விரைவில் மனிதன் தன் ஆர்வத்தை இழக்கக் கூடியதுமான உலக ஆடம்பரங்களை, நான் அறியாமையால் உம்மிடம் கேட்கும்படி அது செய்து விட்டது||107||
உங்களது மாயை எனும் சக்தியின் மயக்கும் ஆற்றலை நீங்கள் நன்கு அறிவீர்கள்; உங்கள் துணையின்றி, எவரால் அந்த மாயையைக் கடந்து செல்ல இயலும்? நான் மீண்டும், மீண்டும் உங்களை பணிவுடன் வணங்குகின்றேன்; தயவு செய்து, இவ்வுலகப் பற்றுக்களாகிய அனைத்துச் சிக்கல்களிலிருந்தும் என்னை விடுவித்து, என்னை காத்தருள வேண்டும் ||108||
|| இத்துடன், பி. தெம்பே மகாராஜ் (P. Tembe Maharaj) அவர்களால் இயற்றப்பட்ட இந் நூலின் ஏழாம் அத்தியாயம் நிறைவு பெறுகிறது ||
இது கடவுள் தத்தாத்ரேயரின் திருவடிகளில் பணிவுடன் சமர்பிக்கப்படுகிறது.
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் ஏழாம் அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 649 = 757
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம்-2, அத்தியாயம் -7 முடிவடைந்தது
அடுத்து பாகம்-3, அத்தியாயம்: 8 தொடர்கின்றது