COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

 

பாகம் –11 : அஷ்டாங்க யோக  தத்துவம்

அத்தியாயம் 38
காசி மன்னனுக்கு சுபாஹு அறிவுரை; அலர்கன் சகோதரர்கள் வன வாழ்க்கை

|| ஸ்ரீ கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீ தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீ கணேஷாயே நமஹா || || ஸ்ரீ சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீ குருப்யோ நமஹா || || ஸ்ரீ சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீ குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீ தத்த சமர்த்த ||

குரு வேத தர்மா, தன் சீடர் தீபக்கிற்கு தொடர்ந்து கூறினார் ‘ஸ்ரீமத் தத்த பகவான் மன்னர் அலர்கனிடம் அவன் திரும்பிச் சென்று அவனது சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் பாசம் மிக்க அக்கறைக்காகத் தன் நன்றியையும் வணக்கங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளை இட்டார் ||1||

தெய்வத்தின் தீர்ப்பே இறுதியானது என்பதை ஏற்றுக் கொண்ட, பக்தியுள்ள அரசி மதாலஸாவின் மகனான அலர்கன் தனது நகரத்திற்குத் திரும்பினார்; அங்கே தன் சகோதரரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார் ||2||

தன்னைப் பற்றிய தவறான அடையாள உணர்வுகளைக் கடந்தவர்; உலக பந்தங்களின் மீதான அனைத்து பற்றுக்களை துறந்தவர்; ‘தான்’ எனும் சுயத்தில், அந்தச் சுயமாகவே ஒன்றிப் போனவர் (அதாவது ஆத்மாவுடன் தன்னை இணைத்துக் கொண்டவர்) தெய்வீக பேரின்பத்தை எவ்வளவு எளிதாகவும் திறம் படவும் பெற முடியும் என்பதைத் தெளிவாக உணர்ந்து இருந்தவர்||3||

எவருடைய மனம் எப்போதும் திருப்தியுடன், மகிழ்ச்சியுடனும் இருக்குமோ, எவருடைய முகம் தெய்வீகத்தை உணர்ந்ததற்கான புன்னகையை வெளிப்படுத்துமோ, அத்தகைய பண்புகள் அனைத்தையும் தன் சொந்தச் சகோதரனிடம் கண்ட அலர்கன் அவரைச் சந்தித்த பிறகு, பின் வருமாறு தெளிவாகக் கூறினார் ||4||

ஓ காசி மன்னரே, என் அரசை இப்போதுள்ள நிலையிலேயே நீங்கள் ஏற்றுக் கொண்டு ஆளுங்கள்; உங்கள் பாதைக்குத் தடையாக நிற்க எதிரிகள் எவரும் இப்போது இல்லை; அல்லது, உங்களுக்கு விருப்பமென்றால், இந்த அரசை என் அன்பிற்குரிய சகோதரனான சுபாஹுவுக்கே நீங்கள் பரிசாக அளிக்கலாம் ||5||

அல்லது, நீங்களிருவரும் சேர்ந்து இந்த அரசைப் பங்கிட்டுக் கொண்டு ஆளலாம்; இதில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் நீங்களிருவரும் பகிர்ந்து கொள்ளலாம்; ஏன், எவர் வேண்டுமானாலும் வந்து இதைச் சூறையாடிச் செல்லட்டும் என்று கூட நீங்கள் விட்டு விடலாம்; எவ்விதக் கவலையும் இன்றி, என்னுடைய தீர்மானத்தை உங்கள் இருவரிடமும் கூறி விட்டேன் ||6||

அதற்கு காசி மன்னர் பதிலளித்தார் ‘அலர்கா நீங்கள் ஒரு ஷத்ரிய வீரன் ஆயிற்றே; ஏன் இத்தகைய பயனற்ற எண்ணங்களுக்கும் அச்சத்திற்கும் ஆளாகிறீர்?; ஏன் எங்களோடு போர் தொடுக்க முன் வரவில்லை? ||7||

மக்களை பாதுகாக்கும் கடமை உணர்ச்சி கொண்ட ஷத்ரிய வீரர்களிடம் ஒருவர் எதிர்பார்ப்பது இதுவே ஆகும்; மேலும், நீர் சந்திர குலத்து மன்னர்களின் உயரிய வம்சத்தைச் சேர்ந்தவர்; உமது புகழுக்கு ஏற்றவாறு நீர் உண்மையிலேயே வீரராக இருப்பின், உமது நற் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் இந்த அச்சத்தை உடனே கை விடுவீராக ||8||

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு போரில், மன்னனின் அமைச்சர்கள் அனைவரும் மாண்டாலும், அல்லது அவனது முழுப் படையும் கூட அழிக்கப்பட்டாலும் போர் களத்திலிருந்து தப்பி ஓடுவது உமக்கோ அல்லது பிற ஷத்ரிய வீரர்களுக்கோ சிறிதும் தகுதியானது அல்ல; ஆகையால், போர்க் களத்தை விட்டு ஓடாதீர்கள் ||9||

நீங்கள் உமது எதிரியை வென்றால், அந்த அரசை மகிழ்ச்சியோடும், புகழோடும் ஆட்சி செய்யலாம்; ஒருவேளை போரில் நீங்கள் வீர மரணம் அடைந்தால், எதிரியைக் கண்டு அஞ்சி ஓடாமல் அவர்களைத் துணிவுடன் எதிர் கொண்டவர்களுக்கு கிடைக்கும் சுவர்க்க லோகம் உங்களுக்கும் நிச்சயம் கிடைக்கும் ||10||

ஆகவே, நீர் வெற்றி பெற்றாலும் சரி, வீர மரணம் அடைந்தாலும் சரி, உங்களுக்கு எவ்வித இழப்பும் இல்லை; இந்த உண்மையை நன்கு அறிந்திருந்தும், ஒருவன் தன் படைகள் கடுமையாகத் தாக்கப்படுவதைக் கண்டு அஞ்சி, போர்க் களத்திலிருந்து தப்பி ஓடத் துணிந்தால், அவன் உண்மையில் மிகவும் துரதிர்ஷ்டசாலியே ஆவான் ||11||

உங்களது எதிரிகளை அடக்கி வெற்றி கொள்வதே மிகச் சிறந்தது; அதன் பிறகு போரில் கிடைத்த செல்வங்களை அனுபவிப்பதும் நன்மையே; அச் செல்வங்களைக் கொண்டு இறைவனுக்கு யாகங்கள் மற்றும் வழிபாடுகளைச் செய்வதன் மூலமும் கூட ஒருவன் சுவர்க்கத்தை அடைய முடியும் ||12||

சமஸ்கிருதச் ஸ்லோகம்: ‘அக்னிதோ கரதச்சைவ சஸ்திரபாண்நிர்-தனபஹ:,க்ஷேத்ரதாரஹர சைவ ஷடேதே ஆததாயின’ ||13||

மேல் காணும் ஸ்லோகத்தின் விளக்கம் என்ன என்றால் ‘பிறருடைய வீடுகளுக்குத் தீ வைப்பவன், பிறருக்கு நஞ்சு கொடுப்பவன், பிறருடைய செல்வங்களையும் ஆயுதங்களையும் கொள்ளையடிப்பவன், அல்லது பிறருக்குச் சொந்தமான நிலங்களையும் பெண்களையும் வலுக் கட்டாயமாக அபகரிப்பவன் — ஆகிய அத்தகைய ஆறு வகையினரும் சமுதாயத்தில் ‘ஆத்ததாயிகள்’ (கொடியோர்/துரோகிகள்) என்று அழைக்கப்படுகிறார்கள்
{இந்த சுலோகம் மனுஸ்மிருதி (8.350) மற்றும் பிற தர்ம சாஸ்திரங்களில் வரும், ‘ஆத்ததாயிகள்’ (கொலை வெறி கொண்டவர்கள்) ஆறு பேரைப் பற்றிக் கூறும் ஸ்லோகம் ஆகும்} ||14||

சமஸ்கிருதச் செய்யுள்: ‘ஆததாயினமாயாந்தம் ஹன்யாதேவாவிசாரயன்||நாததாயிவதே தோஷோ ஹந்துர்பவதி கஸ்சன’;
இந்த ஸ்லோகத்தின் விளக்கம் என்ன என்றால் ‘ கொலை வெறியோடு உன்னைக் கொல்ல வரும் ஒருவனை, எவ்வித யோசனையும் இன்றி உடனடியாகக் கொல்லலாம்; அத்தகைய கொடியவனைக் கொல்வதால் கொல்பவனுக்கு எந்தவிதமான பாவமும் (தோஷமும்) வந்து சேராது.
{இந்த ஸ்லோகம் மனுஸ்மிருதி (Manusmriti) என்ற நூலில் 8-வது அத்தியாயத்தில், 350-வது ஸ்லோகமாக (Chapter 8, Verse 350) அமைந்துள்ளது} ||15||

மாறாக, ஒருவன் ஒருவனைத் துரோகி என்றும் கொடியவன் என்றும் நன்கு அறிந்திருந்தும், அவனை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வரும்போது, அதிலிருந்து அஞ்சி ஓடி விட்டால், அவன் தன் புகழையும் நற் பெயரையும் முழுமையாக இழப்பதுடன், நரகத்தில் தனக்கென ஒரு இடத்தையும் உறுதி செய்து கொள்கிறான்
||16||

போர் களத்தில் ஒரு எதிரியை எதிர் கொள்வது, இறைவனுக்கு யாகங்கள் செய்வதைப் போலவே மேன்மையானதாகக் கருதப்படுகிறது; இது ஷத்ரிய வீரர்களுக்குப் பெரிதும் பொருந்தும்; புகழையும் விண்ணுலக செல்வத்தை அடைவதற்கு அவர்களுக்கு வேறு எளிய வழி முறைகள் ஏதும் கிடையாது ||17||

காசி மன்னனின் அறிவுரையைக் கேட்ட மன்னன் அலர்கன் பதிலளித்தான் ‘நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மையே; கடந்த காலத்தில் நானும் அந்த கூற்றுக்களை முழுமையாக நம்பியிருந்தேன்; ஆயினும், தற்போதைய சூழலில், அந்த நியதி இனி எனக்குப் பொருந்தாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் ||18||

இனி நான் என்னை ‘நான் தான் இந்த அலர்கனின் உடல்’ என்று அடையாளப்படுத்திக் கொள்வதில்லை; அப்படி தவறாக அடையாளப்படுத்துவதை கடந்த நிலையில் உள்ளவன் நான்; எனவே, ஒரு ஷத்ரிய வீரனாகப் பிறந்தேன் என்ற அடையாளம் எனக்கு எவ்வாறு பொருந்த முடியும்?; ஒருவேளை அது எனக்குப் பொருந்தும் என்று நீங்கள் கருதினால் தயவு செய்து அதை எனக்கு மேலும் தெளிவாக விளக்கி கூறுங்கள் ||19||

மண் பானை எவ்வாறு மண்ணால் மட்டுமே ஆக்கப்பட்டதோ, அவ்வாறே இந்த மனித உடலும் அமைந்துள்ளது; அதே போல், நான் இந்த உடலின் செயல்பாடுகளுடனோ, அதன் ஐம்புலன்களுடனோ அல்லது அதன் மூச்சுக் காற்றுடனோ என்னை அடையாளப் படுத்திக் கொள்வதில்லை; அவை எதுவுமே என்னை சார்ந்தவை அல்ல ||20||

இந்தச் சிக்கலான உடல் தொகுப்புடன்* ‘நாம்’, ‘நம்முடைய’ மற்றும் ‘நான்’ என்ற அடையாளத்தைச் சேர்க்கும்போது மட்டுமே, அது ‘அலர்க்கனின் உடல்’ என்றும், ‘அலர்க்கனின் ராஜ்ஜியம்’ என்றும் உருமாறுகிறது என்றே தோன்றுகிறது; ஆனால் இப்போது நான் அறிந்து கொண்டது என்னவென்றால், அவை அனைத்துமே உயிரற்ற ஜடப் பொருட்களாகும்; ஏனெனில், அந்த தொகுப்பு முழுவதையும் சாட்சியாக நின்று நோக்கும் ‘நான்’, அந்தத் தொகுப்பின் ஒரு பகுதியல்ல
(*ஜடமான உடல், ஐம்புலன்கள், உடலின் உணர்வுகள், மூச்சு என உடலுக்குள் இயங்கும் அனைத்தும் சேர்ந்ததே ஒரு தொகுப்பு என்று கூறப்பட்டு உள்ளது) ||21||

‘நான் ‘இருக்கிறேன்’ (I am); நான் முழுமையான உணர்வு வடிவமாகவும், தனித்துவமான ஒன்றாகவும் இருக்கிறேன்; இந்நிலையில், ‘பன்மை’ என்பது எனக்கு எவ்வாறு பொருந்தும்? எவரை நான் உள்ளபடியே முழுமையாக அறிந்திருக்கிறேனோ, அவரை அறியாமையின் காரணமாக ‘நண்பன்’, ‘எதிரி’ அல்லது ‘உற்றார்-சுற்றத்தார்’ என்று நான் எவ்வாறு பிரித்து அடையாளப்படுத்த முடியும்? ||22||

உமது ஒத்துழைப்பினால்தான் என்னால் தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயாரை தேடி அலைந்து அவரை சந்திக்க முடிந்தது; அவருடைய அருளால்தான் என்னால் இருமைக்கு மேலாகவும், முரண்பாடுகளின் உருவங்களுக்கு மேலாகவும் உயர முடிந்தது||23||

எனது பூத உடலுக்குள் உள்ள அனைத்து அக ஆற்றல்களையும் நான் வென்று விட்டேன்; அதனால் நான் உண்மையாகவே வெற்றி பெற்றுள்ளேன்; அனுபவபூர்வமான ஆன்மீக ஞானத்தை நான் பெற்றுக் கொண்டு உள்ளேன் ||24||

இனி எனக்கு எதிரிகள் என்பவர்கள் எவரும் கிடையாது; என் சகோதரன் சுபாஹு எனக்குப் பேருதவி செய்துள்ளான்; அவனுக்கு நான் நன்றி செலுத்த வேண்டும்; ‘நீ அதுவாகவே இருக்கிறாய்’ (தத் த்வம் அஸி) என்ற பெரிய உண்மையை அனுபவித்து அறிவதே சிறந்தது; பிரிவினை ஏற்படுத்தும் அனைத்து இருமைகளையும் கடந்து செல்வதற்கு அதுவே வழியாகும்’ ||25||

நான் எங்கும் நிறைந்திருக்கிறேன்; அனைத்தும் என்னுள்ளேயே அடங்கியுள்ளன என்று ஞான நிலையை அடைந்தவர் போல அலர்கன் அழுத்தமாக கூறியவாறே தன் சகோதரன் சுபாஹுவின் பாதங்களில் பணிவுடன் வீழ்ந்தான் ||26||

இந்த மாற்றத்தைக் கண்ட சுபாஹு, அவனை எழுப்பி, பேரன்புடன் தழுவிக் கொண்டான்; தானும் அதே மெய்யுணர்வைப் பெற்றவன் என்ற தெளிவுடன் புன்னகைத்தவாறே சுபாஹு கூறினான் ‘பகிர்ந்து கொள்ளத் தகுந்த பேருண்மையை பகிர்ந்து கொள்வதில், இப்போது நாம் இருவரும் சமமானவர்களாகவே உள்ளோம் ||27||

ஓ காசி மன்னரே, ஓ என் அன்பிற்குரிய நண்பரே, இந்த ஒரே காரணத்திற்காகவே நான் உங்கள் உதவியையும் நட்பையும் நாடி வந்தேன்; என் ஆழ்ந்த விருப்பங்கள் அனைத்தும் இன்று, வியப்பூட்டும் வகையில் நிறைவேறியுள்ளன ||28||

தாங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்; நான் இப்போது உங்களிடமிருந்து விடை பெற விரும்புகிறேன்; என்னை மீண்டும் என் வன வாழ்விற்கே திரும்பிச் செல்ல அனுமதியுங்கள்; நான் அடைய வேண்டிய தத்துவ ஞானத்தை அடைந்து விட்டேன்; என் கண்கள் கண்டு களிக்க விரும்பிய காட்சியையும் கண்டு விட்டேன் ||29||

அதற்கு காசி மன்னர் பதிலளித்தார் ‘நீங்கள் இருவரும் அறிந்திருக்கும் அந்தத் தெய்வீகச் செல்வத்தை நானும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்; துவக்கத்தில், உங்கள் தந்தையின் அரசாட்சியில் உங்களுக்கான பங்கைத் தேடியே நீங்கள் என்னிடம் வந்தீர்கள்; ஆனால் இப்போது, நீங்கள் இருவரும் இவ்வாறு மெய் ஞானத்தில் மூழ்கி உள்ளதைக் காணும்போது, நான் வியப்பில் ஆழ்ந்து போகிறேன்’ ||30||

நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ, அதே வன வாழ்விற்கே இப்போது ஏன் மீண்டும் திரும்பிச் செல்ல விரும்புகிறீர்கள்?; இங்கேயே தங்கி விடலாமே?; நாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் இப்போது பலனளித்துள்ளன; அப்படியிருக்க, நீங்கள் இருவரும் என்னை ஏன் இவ்வாறு குழப்பத்திற்குள்ளாக்குகிறீர்கள்?||31||

இந்த அரசாட்சி உங்கள் தந்தைக்குச் சொந்தமானது என்றும், அலர்கன் (Alarka) உங்களுக்குரிய பங்கைத் தர மறுத்து விட்டான் என்றும், அதனால் அவனைத் தண்டித்து, அரசாட்சியையும் அரச கருவூலங்களையும் இருவருக்கும் சமமாகப் பிரித்துத் தர வேண்டும் என்றும் கூறியது நீங்கள்தானே? ||32||

அந்த காரணங்களுக்காகத்தானே, நீங்கள் என்னிடம் வந்து உதவியையும், அடைக்கலத்தையும், நட்பையும் நாடி நின்றீர்கள்?; ஆனால் இப்போது, நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்கள் கைகளில் கிடைத்த பிறகு, மீண்டும் உங்கள் பழைய வன வாழ்விற்கே ஏன் திரும்பிச் செல்ல விரும்புகிறீர்கள்? ||33||

இதோ இங்கே அலர்கன் இருக்கிறானே; இவன் முன்னொரு காலத்தில், தன் ஆணவம் மிக்க நடத்தையினால் எதையும் பிறருக்கு கொடுக்க மறுத்தவன்; அத்தகைய இவனும் இப்போது வன வாழ்வைத் தேடிச் செல்ல விரும்புகிறான்; இது ஏன் நிகழ்ந்தது?; இதற்கான காரணத்தை உங்களில் எவரேனும் எனக்கு விளக்க முடியுமா? ||34||

அதற்குச் சுபாஹு தாராள மனதுடன் இவ்வாறு பதிலளித்தான் ‘அன்பு நண்பனே, இந்த உலகியல் சார்ந்த அரசாட்சி எமக்கு எதற்கு இனி தேவை ?; உங்கள் உதவியுடன் நான் பெரும் முயற்சியை மேற் கொண்டதற்குக் காரணம் ஒன்று உண்டு; அதை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்||35||

தெய்வ அருளின் கருணையினாலேயே என்னால் தெய்வீகத்தை அனுபவபூர்வமாக உணர முடிந்தது; எனவே, நான் அரசாட்சியைத் துறந்து விட்டு, நான் உணர்ந்த பேரின்பத்தை என்னுடன் சுமந்து கொண்டு காட்டிற்குச் சென்றேன்; அங்கே நான் முழுமையான மனநிறைவுடனும் விழிப்புணர்வுடனும் சுற்றித் திரிந்து வாழ்ந்தேன்||36||

நான் இளமையில் பெற்ற நல்வழி அறிவுரைகள் அலர்கனின் செவிகளில் விழாமல் போனது, முற்றிலும் விதியின் விளைவே ஆகும்; அதன் காரணமாக, அவன் தனது ஆசைகள், மனம் போன போக்கிலான விருப்பங்கள் மற்றும் தேவைகளுக்கு அடிமையாகி புலனின்பங்களில் தன்னை இழந்து நின்றான்||37||

குறைந்த அறிவையுடைய விலங்குகளைப் போன்ற நிலையில் வாழ்ந்த அவன், தனது உடலை மாதர்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருளாகவே அர்ப்பணித்தான்; சிதைந்த அறிவையுடைய ஒருவனைப் போலவே, அவன் எப்போதும் அந்த மாதர்களின் துணையிலேயே மூழ்கிக் கிடந்தான்||38||

புழுக்கள் அசுத்தத்தில் திளைப்பது போலவே, அலர்கனும் தனது புலன்களுக்கு முழுமையாக அடி பணிந்தான்; அவற்றின் ஒவ்வொரு விருப்பத்தையும் பூர்த்தி செய்வதிலேயே அவன் மூழ்கிக் கிடந்தான்; ஒரு பேரரசனாக இருந்த போதிலும், அவன் இத்தகைய பரிதாபகரமான நிலையில் இருப்பதைக் கண்டபோது, அது எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது||39||

அவன் ஒரு குடும்பஸ்தனாக வாழும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்தான்; தனது நேரத்தை அரசிகளுடன் கழிப்பதிலேயே செலவிட்டான்; அதே வேளையில், தன்னை ஒரு மகிழ்ச்சியான, அதிர்ஷ்டசாலியான மற்றும் வீர மிக்க பேரரசராகவே அவன் கருதிக் கொண்டான்; எதைப் பற்றியும் ஆழமாகச் சிந்தித்து கேள்வி எழுப்பும் எண்ணம் அவனுக்கு ஒரு போதும் தோன்றவில்லை||40||

தீய சகவாசத்தின் விளைவு இத்தகையதே; இன்பம் குறித்த தவறான கண்ணோட்டம் இத்தகையதே; அவற்றுக்கு அடி பணிந்து நடப்பதே ஒருவனைத் தாழ்ந்த நிலைகளுக்குத் தள்ளி விடுகிறது; அத்தகைய நிலையை அடைந்த பிறகு, ஒருவன் எவ்வாறு தூய அல்லது உயர்ந்த நிலைகளை அடைய முடியும்?; அல்லது, அதை விட மோசமாக, மந்த புத்தியுடைய ஒருவனைப் போலவே, வேறு வகையான வாழ்வு முறைகளும் சாத்தியம் என்பதை அறியாமலே அவன் இருந்து விடுகிறான்||41||

நாங்கள் நால்வரும், எங்களின் பக்தி மிக்க அன்னை அரசி மதாலஸாவின் ஒரே கருப்பையில் உதித்த சகோதரர்கள் ஆவோம்; எங்களில் ஒருவன் மந்த புத்தியுடைய விலங்கைப் போலத் தன் வாழ்வை வீணடித்துக் கொண்டிருப்பதை நான் எவ்வாறு சகித்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்க முடியும்?’ ||42||

ஆகவே, அவன் இருந்த அந்த இழி நிலையைக் கருத்தில் கொண்டும், அதைச் சீர் செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடனும், உங்களின் துணையோடு நான் இந்த முயற்சியை மேற் கொண்டேன்; அவன் உள்ளத்தில் பற்றின்மையையும் துறவு மனப்பான்மையையும் விதைப்பதற்கு மிக எளிய வழி, அவன் தன் நாட்களைக் கழிக்கும் இந்த உலக வாழ்வு எவ்வளவு நிலையற்றது என்பதை உணர்த்தி, அவனுக்கு ஒரு துயர அதிர்ச்சியை அளிப்பதே சரியானது என்று நான் கருதினேன் ||43||

உங்களின் தாராளமான உதவியினால், என் விருப்பம் நிறைவேறுவதை என்னால் காண முடிந்தது; அது வெற்றிகரமாக நிறைவு பெற்று விட்டது; நாங்கள் அனுபவிக்கும் அந்தப் பரமானந்த நிலையை, இப்போது அலர்கனும் உணர்ந்து கொண்டான் என்பதை அறிந்து, நான் முழுமையான மன அமைதியை அடைந்துள்ளேன் ||44||

எங்களால் அவன் துயரத்தைச் சந்திக்க நேர்ந்தது; அதன் விளைவாக அவன் காட்டிற்குச் சென்றான்; விதியின் நியதிப்படி, அங்கே அவனுக்குத் தெய்வம் ஸ்ரீமத் தத்தாத்ரேயரைச் சந்திக்கும் நற்பேறு கிடைத்தது; பிறர் அடைவதற்கு அரிதான வழிகாட்டுதலையும் ஆசியையும் அவன் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டான் ||45||

விதியின்படியே அவன் இப்போது ‘ஆத்ம ஐக்கியம்’ எனும் உணர்வு நிலையில் உறுதியாக நிலை பெற்று விட்டான்; தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயர் அதைக் குறித்து இவனுக்கு விளக்கிக் கூறியதும், அவன் அதை ஒரே கணத்தில் அதை முழுமையாகப் புரிந்து கொண்டான்; அதனால் அவன் இப்போது சமநிலை எனும் உயர்ந்த நிலையில் திகழ்கிறான்; அவன் தெய்வத்தின் அருளுக்கு பாத்திரமாகத் திகழ்கிறான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை ||46||

நான் நிறைவேற்ற விரும்பிய அந்தப் பணி இப்போது நிறைவேறி விட்டது; ஆகையால், நான் மீண்டும் எனது வன வாழ்விற்கே திரும்புகிறேன்; இனி இந்த ராஜ்ஜியம் உங்களுடையது; நீங்கள் இதை ஆள விரும்பினாலும் சரி, விரும்பா விட்டாலும் சரி||47||

எங்கள் அன்னை, ராணி மதாலஸா, அவரை எத்துணைப் பாராட்டினாலும் தகும்; மெய்ஞானம் உணர்ந்த யோகிகளின் மதிப்பை அவர் பெற்றார்; இன்றும் அவர் பெரிதும் போற்றப்படுகிறார்; அவரைப் போலத் தெய்வீகத்தில் ஆழமாக நிலை பெற்ற வேறொருவரை காண்பது அரிது; மெய்யாகவே, சிவபெருமானின் திருவருளாலேயே அவர் இத்தகைய ஆற்றலைப் பெற்றார் ||48||

நாங்கள் அனைவரும் அவர் மார்பில் பால் பருகி வளர்ந்தவர்கள்; அவரது புனிதமான புகழைப் போற்றும் வகையில் நாங்கள் வேறு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?; அவர் அனுபவித்த அந்தப் பரமானந்தத்தை, தன் புதல்வர்கள் அனைவரும் அறிய வேண்டும் என்று அவர் விரும்புவார் என்பதை உணர்ந்தே, நான் இந்த முழு முயற்சியையும் மேற் கொண்டேன்’ ||49||

உங்கள் உதவியால், எனது விருப்பம் நிறைவேறி விட்டது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்; அப்படியிருக்க, இனி இந்த ராஜ்ஜியத்தால் எனக்கு என்ன பயன்?; திசைகளையே ஆடையாகக் கொண்டு நான் வாழ்கிறேன்; நான் மக்கள் கூட்டத்தின் நடுவே இருந்தாலும் சரி, அல்லது தனிமையில் இருந்தாலும் சரி எப்போதும் அந்தத் தெய்வீகத்திலேயே என் மனம் நிலைத்திருக்கிறது ||50||

எனக்கு, ஒரு ராஜ்ஜியத்தை ஆள்வதினால் கிடைக்கும் இன்பம் என்பது, ஒரு எள்ளின் அளவுக்கே சமமானது. ஆனால், நாங்கள் உணர்ந்துள்ள அந்தப் பரமானந்தமோ, மேரு மலையின் அளவுக்கே இணையானது||51||

நம்மால் பிறருக்கு உதவ இயலும் போது, நமக்கு நெருக்கமான ஒருவர் உலகப் பற்று எனும் படு குழியில் வீணாக மூழ்கிக் கொண்டிருக்கும்போது, நாம் அவருக்கு உதவ முன் வராவிட்டால், அத்தகையோரை யார் அறிஞர்கள் என்றோ, நற்குணச் செம்மல்கள் என்றோ போற்றுவார்கள்?||52||

நம்மால் பிறருக்கு உதவ முடியும் போது, நமக்கு நெருக்கமான ஒருவர் உலகப் பற்று எனும் படுகுழியில் வீணாக மூழ்கிக் கொண்டிருக்கும்போது, நாம் அவருக்குத் துணையாகச் செல்லா விட்டால், நாம் இழிந்தோர் வரிசையிலேயே சேர்க்கப்படுவோம்;
ஓ அரசே, இதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்||53||

அவர் கூறியதைக் கேட்ட காசி மன்னர் அவற்றின் ஆழமான பொருளை உணர்ந்தார். கணப் பொழுதில் அவர் மனதில் பற்றற்ற துறவுணர்வு மேலோங்கியது; மிகுந்த பணிவுடன் அவர் பின்வருமாறு கூறினார் ||54||

‘சுபாஹு, உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது; உண்மையிலேயே நீங்கள் மிகுந்த மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரியவர்; உங்கள் சகோதரரான அலர்கனுக்கு நீங்கள் உதவ முன் வந்திருக்கிறீர்கள்; அதே வேளையில், என்னை மட்டும் ஏன் ஒரு அந்நியராகக் கருதுகிறீர்கள்? ||55||

சமஸ்கிருதப் பொன்மொழி: ஸதாம் ஸாப்தபதி மைத்ரீ புநத்யுருதராததாத்’;
இதன் அர்த்தம் என்ன என்றால் ‘மேலோர் அல்லது நல்லவர்களின் நட்பு என்பது அவர்களுடன் வெறும் ஏழு அடி சேர்ந்து நடந்தாலே அல்லது ஏழு வார்த்தைகள் பேசினாலேயே ஏற்பட்டு விடுமாம்; அப்படிப்பட்ட நட்பு மிகவும் புனிதமானது; அது ஒரு மனிதனைத் தூய்மைப்படுத்தி வாழ்க்கையில் மேன்மையான நிலைக்குக் கொண்டு செல்லும்||57||

புனிதர்கள் கருணையின் புகலிடமாகத் திகழ்கிறார்கள்; வருத்தத்துடன் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும்: சாதாரண மனிதர்களுக்கு, மழைக் காலத்தில் மட்டுமே வயல்களில் உழைத்து வாழ்வாதாரம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கிறது; ஆனால் புனிதர்களுக்கோ, காலம் அல்லது பருவம் எப்படி இருந்தாலும் அவர்களின் ஒவ்வொரு கணமும் கருணையாலேயே நிறைந்திருக்கிறது ||58||

புனிதர்களின் அருளைப் போற்றி உணர்வது எத்தகைய இன்பம்; அது, வெயிலில் வாடிய ஒரு பயணி தான் தேடிய நிழலைக் கண்டடைவது போன்ற தாயன்பு மிக்க அனுபவமாகும்; அந்த அருள் எக்காலத்திலும் ஒரே சீராகவே இருக்கும்; அதில் ஏற்ற இறக்கங்கள் ஏதும் இருக்காது; மேலும், அவர்கள் பேசும் வார்த்தைகள், இறைவனே நேரடியாக கூறுவது போலல்லவா ஒலிக்கின்றன?||59||

புனிதர்களுக்கு ஒரு எளிய வணக்கம் செலுத்தினாலே போதும், அது ஒருவருக்குத் தேவையான வெற்றியைப் பெற்றுத் தரும்; அப்படியிருக்க, உங்களுடன் ஒரு மாதம் முழுவதையும் கழித்த நான், இந்தத் தருணத்தில் மட்டும் உங்கள் பார்வையிலிருந்து விலகி நிற்கிறேனே, இது ஏன்?||60||

நீங்கள் உண்மையில் கருணை வடிவானவர்; தாயைப் போன்ற அக்கறை கொண்டவராயினும், என் விஷயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு பாராமுகமாக இருக்கிறீர்கள்? ‘நான்-நீ’ அல்லது ‘நாம்-அவர்கள்’ என்ற பாகுபாடுகளை எல்லாம் கடந்து உயர்ந்த நிலையில் இருப்பவர் நீங்கள்; எப்போதும் விழிப்புணர்வுடன் கூடிய சமநிலை மனப்பான்மையிலேயே திளைப்பவர் நீங்கள் ||61||

உங்கள் நடத்தையில் இத்தகைய மாறுபாடு ஏன் தென்படுகிறது?; எனினும், இதை நான் உங்கள் குறையாகக் கருதவில்லை; ஒருவன் தான் செய்த சேவைக்கு ஏற்ற பலனையே அடைவான் என்பது அனைவரும் அறிந்த உண்மையல்லவா ||62||

ஒருவன் நெருப்பின் அருகாமையில் இருந்தால், அது இருளையும் குளிரையும் நிச்சயம் போக்கி விடும்; அதே போலவேதான் சுற்றி இருப்பவர்களின் மூல நட்பில் இருந்து விலகிச் செல்லும் போது, அருகில் இருப்பவர்களுக்கும் தொலைவில் இருப்பவர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை அவன் நிச்சயம் உணர முடியும் ||63||

சுபாஹு, நீங்கள் உண்மையில் ஒரு புனிதர்; என் பகுத்தறிவும் தெளிவும் எனக்கு நற் பலனைத் தரட்டும்; இப்போது நான் உங்கள் அருகிலேயே இருக்கிறேன்; உங்களைப் பற்றி நன்கு அறிந்து கொண்ட பிறகும், நான் மீண்டும் தடுமாறிப் போய் விடுவேனா?||64||

‘பலதோ ஹி சதாம் சங்கா’ – என்ற கூற்று, நல்லோர்களின் சேர்க்கை (சத்சங்கம்) எப்போதும் நற் பலனைத் தரும் என்று கூறுகின்றது; அந்த கூற்று வீணாகப் போக வேண்டாம்; தயவு செய்து எனக்கு தக்க அறிவுரையை கூறுங்கள்; தேவைப்பட்டால் நானும் எல்லாத் தீய சகவாசத்தையும் துறப்பேன்||65||

அந்தப் பணிவான வார்த்தைகளைக் கேட்டதும், சுபாஹு மனம் உருகிப் பதிலளித்தார் ‘ஓ அரசனே, நீங்கள் கூறியதெல்லாம் உண்மை, அவற்றை யாரால் மறுக்க முடியும்?||66||

நீங்கள் நீதிமான், ஆனால் அது உங்களுக்குத் தெரியும், ஒழுக்கம், செல்வம் மற்றும் ஆசைகளை நிறைவேற்றுதல் ஆகிய முயற்சிகளைப் பொறுத்தவரை நீங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றவர்; ஆனால் இதை அறிந்து கொள்ளுங்கள் நண்பரே, இறுதி முக்திக்கான முயற்சிக்கு நீங்கள் விடா முயற்சியுடன் இருக்க வேண்டும்||67||

தர்மம், அர்த்தம் மற்றும் காமம் ஆகிய மூன்று முயற்சிகளும் கூட்டாக திரிவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றன, ஆனால் இறுதி மோட்சம் அல்லது முக்தி என்றால் என்ன, அது ஏன் அப்படி அழைக்கப்படுகிறது?; நீங்கள் அந்த தெய்வீக இருப்பிடத்தைத் தேட வேண்டும் ||68||

அது தானாகவே கிடைத்து விடாது என்பதை புரிந்து கொள்ளுங்கள், அதற்கு விதிக்கப்பட்ட வழிகளில் நீங்கள் நடக்க வேண்டும்; எனவே சுருக்கமாக நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் வாழ்க்கையில் மீதம் உள்ள நாட்களில், நீங்கள் அதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் ||69||

மாசற்ற ஆத்மா வை உடல் அல்லது நான் என்று தவறாக அடையாளம் காண வைப்பது எது?; நாமே அதன் எஜமானர்கள் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வைப்பது எது?; இதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; ஒரு முடிவுக்கு வர வேண்டுமென்றால் வேத உதவியை மட்டும் அல்ல தேவைப்பட்டால் தந்திரத்தையும் பயன்படுத்துங்கள்||70||

கண்ணுக்குப் புலப்படும் அனைத்தும், சரீர தோற்றம் கொண்ட அனைத்தும், பெயரும் உருவமும் கொண்ட அனைத்தும் குறிப்பிட்ட காலத்துக்கு உட்பட்டவை ஆகும்; ஆகையால், மேற் கூறியவற்றிலிருந்து மாறுபட்ட ஒன்றையே நிலையான சத்தியம் என்கின்றோம் ||71||

நிலையானதற்கும், காலத்துக்கு உட்பட்டவைகளுக்கும் இடையிலான விவேகம், உமது அறிவுத் திறனில் ஆழமாகப் பதியட்டும்; உமது அன்றாட வாழ்வில் நீர் கையாளும் அனைத்தையும் நிலையற்றவையாகக் கருதி, சத்தியத்தைத் தேடுவதற்காக எதன் மீதும் பற்று வைக்காமல் உம்மை அனைத்தின் இருந்தும் விலக்கி வைத்துக் கொள்ளும்||72||

இவ்வுலக இன்பங்கள் சார்ந்தோ அல்லது நீர் கேள்விப்பட்ட மேலுலக இன்பங்கள் சார்ந்தோ, எவற்றின் விதைகளும் உம்மிடம் உங்கள் உள்ளத்தில் முளை விடாது இருக்கட்டும்; பற்றின்மை உம்மிடம் உதயமாகட்டும்; மனம் மற்றும் புலன்களின் மீது கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டு உம்மைச் செழுமைப் படுத்திக் கொள்ளும்; இதன் மூலம் உமது ஆன்மீக முன்னேற்றம் பாய்ந்து செல்லத் துவங்கும்||73||

பசியால் வாடும் ஒருவன், உணவு தவிர வேறு எதையும் நாடுவதில்லை; உணவைத் தவிர வேறு ஏதாவது வழங்கப்பட்டாலும் கூட அதனால் அவன் பயன் பெறுவது இல்லை ; அதே போன்று, சத்தியத்தை அறிவதற்கும் அனுபவிப்பதற்கும் உரிய அந்தத் தீயை நீர் இடைவிடாமல் உமக்குள்ளேயே ஏற்றி வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்||74||

பின்னர், மகா வாக்கியங்கள்* எனப்படும் வலிமை மிக்க வேதக் கோட்பாடுகளைத் தியானிப்பீராக; குறிப்பாக, ‘நீயே அது’ (தத் த்வம் அஸி) மற்றும் ‘நானே அது’ (அஹம் பிரம்மாஸ்மி) போன்ற வாக்கியங்களை தொடர்ந்து எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்; அதில் உள்ள கோட்பாடுகள் உணர்த்தும் அனைத்துப் விஷயங்களையும் அறிந்து கொள்ள உமது பகுத்தறியும் திறனைப் பயன்படுத்துவீராக; விரைவில் நீர் அதன் சத்தியத்தை அனுபவிப்பீர்.
{* மகா வாக்கியங்கள் (Mahavakyas) என்பது இந்து மதத்தின் முதன்மை மறை நூல்களான நான்கு வேதங்களின் ஞானக் கருத்துக்களைச் சுருக்கமாக விளக்கும் நான்கு உன்னத சொற்றொடர்கள் ஆகும்; அத்வைத வேதாந்தத்தின்படி, இவை மனிதனின் ஆத்மாவும், பிரும்மமும் ஒன்றுதான் என்பதை உணர்த்துகின்றன; இவை உபநிடதங்களிலிருந்து பெறப்பட்டவை; அந்த நான்கு வாக்கியங்கள்:
(i) ப்ரக்ஞானம் பிரம்ம (Pragnanam Brahma): – பேருணர்வே பிரம்மம் (தூய அறிவே இறை நிலை); ரிக் வேதம்
(ii) அஹம் பிரம்மாஸ்மி (Aham Brahmasmi): -நான் பிரம்மமாக இருக்கிறேன்; யஜுர் வேதம்
(iii)தத் த்வம் அஸி (Tat Tvam Asi): -அது நீயாக இருக்கிறாய்; சாம வேதம்
(iv)அயமாத்மா பிரம்ம (Ayam Atma Brahma): -இந்த ஆத்மா வே பிரம்மம்; அதர்வண வேதம்} ||75||

அதன்பின், நீர் புரிந்து கொண்டவற்றை குறித்து ஆழமாகச் சிந்தனை செய்து அது உணர்த்தும் உட் கருத்துகளை பற்றி ஆழ்ந்து தியானிப்பீராக; எக்காலத்திலும் நீங்காதிருக்கும் அந்த ‘சாரப் பொருளின்’ (Essence) இருப்பைப் பற்றிய அகக் காட்சி (Realization) நிகழும்போது, ஒருவனது சுய உணர்வு நிலையானது தனக்குத் தேவையான முழுமையான ஞானத்தைப் பெற்று விடுகிறது’ ||76||

ஓ அரசே, நீர் அறிந்த அந்த ‘அலர்கன்’ (Alarka), ஆரம்பத்தில் தனது புலன் இச்சைகளில் முழுமையாகச் சிக்கிக் கொண்டிருந்தான் என்ற போதிலும், விதி வசத்தால், அவன் உண்மையான ஆர்வத்துடன் எழுப்பிய ஒரே ஒரு கேள்விக்கு கிடைத்த ஆழமான விளக்கத்தின் மூலம், அவன் அடைய வேண்டிய அனைத்தையும் அடைந்தான்||77||

இதுவே எங்களது பக்தி மிக்க அன்னை மதாலஸாவின் (Madalsa) அருளாகும்; அந்த அருளினாலேயேதான் அவனால் யோகத்தின் தலைவனான ஸ்ரீமத் தத்தர் (Datta) எனும் இறைவனைக் காண முடிந்தது; நிலையற்ற இவ்வுலக பற்றுதல்கள் அனைத்தும் பயனற்றவை என்பதை அவன் கணப்பொழுதில் உணர்ந்தான்; தனது ஆத்மா வை அடிமைப்படுத்தியிருந்த அனைத்துப் பந்தங்களையும் அவன் அறுத்து எறிந்தான்||78||

மீண்டும் சொல்கிறேன், விதி வசத்தினாலேயே நீர் எமது நன் நட்பை (Company) பெறும் வாய்ப்பைப் பெற்றீர்; அதன் விளைவாக, பற்றின்மை என்பதும் உம்மிடமும் உதயமாகியுள்ளது; ஆயினும், நீர் உமது ஆன்மீகப் பாதையில் உள்ள தடைகளை வெற்றி கொள்ளாத வரையில், இவ்வுலகக் கடலைத் தாண்டிச் செல்வது உமக்கும் கடினமாகவே இருக்கும் ||79||

இதற்கான தீர்வு மிக எளிமையானது: உமது அரசை ஒரு நம்பிக்கைக்குரிய வாரிசிடம் ஒப்படைத்து விட்டு, மெய் ஞானிகள் உடனான சத்சங்கத்தில் இணைந்து கொள்வீர்களாக; அவ்வாறு செய்தால், உமது பகுத்தறிவுத் திறன் செழித்து வளர்வதை நீர் காண்பீர்||80||

காசி மன்னருக்கு இவ்வாறு அறிவுரை கூறிய பின்னர், சுபாஹு தன் சகோதரன் அலர்கனைத் தழுவிக் கொண்டு கூறினார் ‘சகோதரா, இன்று நாம் உண்மையாகவே சம நிலையை அடைந்து விட்டோம்; நீ அறிய வேண்டிய மெய் ஞானத்தை முழுமையாகக் கற்றுணர்ந்து விட்டாய்||81||

இப்போது நீ விரும்பினால், நம் தந்தையின் அரசை நீயே தொடர்ந்து ஆளலாம்; அல்லது, துறவு பூண்டு வன வாழ்வை மேற் கொள்ளலாம்; ஆனால் ஒன்று, எப்போதும் விழிப்புடன் இரு; ஒரு கண நேர கவனக் குறைவாலும் கூட, மீண்டும் பந்த பாசங்களில் சிக்கிக் கொள்ளாதவாறு எச்சரிக்கையாக நடந்துகொள்||82||

அதற்கு அலர்கன் இவ்வாறு பதிலளித்தான் ‘சகோதரா, நான் ஒரு மந்த புத்தி கொண்டவனாகவும், செயலற்றவனாகவும் மாறிப் போயிருந்தேன்; புலனின்பங்களில் மூழ்கிப் போய், என் வாழ்வின் பெரும் பகுதியை வீணாகக் கழித்து விட்டிருந்தேன் ||83||

அத்தகைய என்னை, நீரே கனிவுடன் அரவணைத்து, ஆதரவு கரம் நீட்டி, இந்த ஆன்மீக உயர்வை அடையச் செய்தீர்; உம்மைப் போல இவ்வளவு தாராள குணமும், ஆழ்ந்த கருணையும் கொண்டவர் வேறு யார் இருக்க முடியும்?||84||

நாம் ஒரே தாயின் கருவில் உதித்த சகோதரர்கள் அல்லவா?; நாம் ஒரு பக்திச் செழுமையும், நற்பெயரும் வாய்ந்த அன்னையின் புதல்வர்கள்; அவள் விரும்பியபடியே நாம் இருவரும் ஆன்மீகத்தில் சம நிலையை அடைந்திருப்பது, அவளது அருளாலும், அவள் நமக்கு அளித்த நல் வினைகளின் பலனாலும் மட்டுமே சாத்தியமாயிற்று||85||

இவ்வாறு கூறிய அலர்கன், சுபாஹுவின் பாதங்களில் விழுந்து பணிவுடன் வணங்கினான்; சுபாஹு மீண்டும் அவனைத் தேற்றியும், ஆறுதல் கூறியும், தான் வந்த இடத்திற்கே திரும்பிச் சென்றார்||86||

துறவு வாழ்வின் உண்மையான சுவையை உணர்ந்த காசி மன்னர், தன் தலை நகருக்குத் திரும்பினார்; பின்னர், தன் அரசைத் தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு, சுபாஹுவுடன் இணைந்து வாழ்வதற்காக காட்டிற்குச் சென்றார்||87||

அங்கே அவர் சுபாஹுவின் வழிகாட்டுதலின்படி மெய் நூல்களைக் கற்றார்; காலப் போக்கில், அவர் அளவற்ற ஞானம் பெற்ற ஒரு பேரறிஞராகத் திகழ்ந்தார்; இறுதியில், உலகச் சேர்க்கையையும், அதற்கான தேவையையும் முழுமையாகத் துறந்து, உயிருடன் இருக்கும் போதே முக்தி நிலையை அடைந்து பேரானந்தத்தில் திளைத்தார் ||88||

அதேபோல, அலர்கனும் தன் அரசைத் தன் மகனிடம் ஒப்படைத்தார்; அதுவே செய்யக் கூடிய மிகச் சிறந்த செயல் என்று முழுமையாக உணர்ந்து திருப்தியடைந்த அவர், மீண்டும் வன வாழ்வை மேற் கொண்டார்; அங்கே அவர் தன் வாழ்நாள் முழுவதும், இறைவன் ஸ்ரீமத் தத்தாத்ரேயரை வழிபடுவதிலேயே கழித்தார்||89||

அனைத்துத் தொடர்புகளையும் துறந்து அங்கிருந்தவர் துறவு வாழ்க்கையின் வடிவமாகவே திகழ்ந்தார்; இருமை நிலையின் தாக்கங்களை வென்று, விதி தனக்குக் கொண்டு வந்த எதன் மீதும் பற்று வைத்துக் கொள்ளாமல், இறைவன் மீதான நிலையான பக்தியோடு தன் நாட்களைக் கழித்தார்||90||

தன் குருவின் மற்றும் இறைவனின் அருளால், தன் தவறான அடையாளப் பற்றுதல்களை விரைவிலேயே துறந்தார்; இவ்வுலகத்தை அது இருக்கும் இயல்பிலேயே உள்ளவாறு அறிந்து கொண்ட அவர், தான் தேடிய இறைவனைப் பலவாறாகப் போற்றித் துதித்தார்||91||

பாடல்* :- தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், கின்னரர்கள் என எந்தவொரு உயர்நிலை அல்லது கீழ்நிலை உயிரினமாக இருந்தாலும், இந்த உலகியல் பாசத்திற்கு அவர்கள் விதி விலக்கல்ல; தன் மனைவி, குழந்தைகள், சுற்றத்தார் மீது வைக்கும் குடும்ப பாசம் அறிவை மயக்கமடையச் செய்கிறது; ஒட்டு மொத்த உலக நன்மை என்பதை மறந்து, தன் குடும்பத்தின் நலனே முதன்மையானது என்ற குறுகிய எண்ணத்தில் சென்று விடுகின்றார்கள்; சங்கிலியால் பிணைக்கப்பட்ட கைதியைப் போல, குடும்ப பற்றுதல் ஒருவரை கர்ம வினைகளிலும், பிறவிச் சுழற்சியிலும் கட்டிப் போடுகிறது’
{*கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு மறைந்த பிறகு, மக்கள் அவரை ஒரு சாதாரண மனிதராகக் கருதி துயரப்படுவதைக் கண்டு உத்தவர் வருத்தத்துடன் சில உண்மைகளைக் கூறுகிறார்; ஆஹா! மக்களின் அறியாமையை என்னவென்று சொல்வது? அவர்கள் எதையும் நேர்மையாகப் பார்ப்பதில்லை; எல்லாவற்றையும் தவறான பார்வையிலேயே பார்க்கிறார்கள்; இது உத்தவ கீதையில் வருகின்ற பாடல் ஆகும்}||92||

முற்காலத்தில் பக்தரான யானை வேந்தன் முதலையின் பிடியில் சிக்கிக் கொண்டது* போல, இவ்வுலகில் பெரும்பாலானோர் தங்கள் தவறான கண்ணோட்டத்தாலும், வேறுபட்ட புரிதலாலும் பந்தத்திற்குள்ளாகியுள்ளனர்; மக்கள் சமூகத்தில் பரவலாகக் காணப்படும் இந்த நிகழ்வை, உரிய தெளிவுடனும் புரிதலுடனும் உற்று நோக்குங்கள்.
எப்போதும் செல்வம், செழிப்பு போன்ற பற்றுக்கும், வீண் பெருமைக்கும் அடிமையாகி, அதன் விளைவாகப் பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து வந்தேன்; இத்தகைய பரிதாபகரமான நிலையை நேரில் கண்டறிந்த நான், இப்போது வருத்தத்துடன் இப் பாடல்களைப் பாடுகிறேன்;
{*யானை வேந்தனான கஜேந்திரனின் வாழ்க்கை வரலாற்றை, ‘ஸ்ரீமத்மத் பாகவத மகாபுராண’ நூலின் எட்டாவது ஸ்கந்தத்தில் (பாகத்தில்) படிக்கலாம்} ||93||

ஆஹா, துயரமே இல்லாத ஒரு நிலை இருந்ததை நினைத்துப் பாருங்கள்; மக்களின் அறியாமையைப் பாருங்கள்; நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன்; உதவியற்று, பற்றுக்களால் பிணைக்கப்பட்டு, அந்த நரகச் சேற்றில் நான் எத்துணை ஆழமாகப் புரண்டு கிடந்தேன் ||94||

கடந்த காலத்தில் நானும் மந்தமான புரிதலையே கொண்டிருந்தேன்; ராஜ்யங்களைப் கைப்பற்றுவதிலும், உலகியல் லாபங்களிலுமே என் மனதை சிதற விட்டேன்; புலனின்பங்களுக்கு அடிமையாகி, என் உள் மனத்தில் எவ்வித உறுத்தலும் இன்றி வாழ்ந்தேன்; என் பார்வையில் ஏற்பட்ட அந்தப் பிழையினால் நான் எத்துணை மழுங்கிப் போயிருந்தேன்; ஒன்றுக்குப் பின் ஒன்றாகத் தோன்றும் ஆசைகளால் விழுங்கப்பட்டு, செல்வம், பெண்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றை மட்டுமே நான் தேடி அலைந்தேன்; என்னிடம் அவை அனைத்துமே போதுமான அளவு இருந்தபோதிலும், என் உள் மனத்தில் எவ்விதத் திருப்தியும் ஏற்படவில்லை ||95||

அந்த ஆசைகள் அனைத்தும் விலகிய பிறகு, துறவிகளுக்கு அளிக்கும் ஒரு பிடி உணவில் நான் திருப்தி கண்டேன்; சமூகத்தின் நடுவிலும் சரி, காடுகளிலும் சரி, உடலை மறைக்கப் போதுமான ஆடை கூட இல்லாத நிலையிலும், என் உள் மனம் உண்மையான மன நிறைவை உணர்கிறது||96||

ஆத்ம-உணர்தலால் விளையும் ஆனந்தம் என்பது, வெளிப்புற உலக இன்பங்கள் மீது பற்றற்ற நிலையை ஏற்படுத்துவதாகும்; ஆனால், அந்தப் வெளிப்புற இன்பங்களையே நான் வீணாகத் தேடிக் கொண்டிருந்தேன்; அந்தத் தேடலின் மர்மத்தை நான் இப்போதுதான் முழுமையாகப் புரிந்து கொண்டேன்; என் சகோதரனின் சகோதரத்துவ மிக்க மற்றும் பெற்றோர் போன்ற அன்பினாலும், என் குருவின் மற்றும் இறைவனின் அறிவுரைகளாலும், நான் இப்போது உயர்ந்த ஆன்மீக நிலைகளை அடைந்துள்ளேன். இத்தகைய நற் பேறை எனக்கு அருளிய விதியை நான் எவ்விதம் புகழ்ந்துரைக்க முடியும்?’||97||

இத்தகைய வார்த்தைகளின் மூலம் தன் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்திய பிறகு, அலர்கன் (Alarka) தன் அன்றாட ஆன்மீகப் பயிற்சிகளிலும் தியானத்திலும் தன் காலத்தைச் செலவிட்டார்; தியானிப்பவர், தியானச் செயல்முறை மற்றும் தியானிக்கப்படும் பொருள் ஆகிய மூன்றும் ஒன்றே என்ற இறை-இணைப்பு நிலையை அவர் நன்கு உணர்ந்து கொண்டார்||98||

இப்பிறவியில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்தும் விரைவில் முடிவுக்கு வந்தன; நிலையற்ற தன் பூதவுடலை துறந்து, அந்த உடல் தன் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றத் துணை நின்றதற்காக அதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, எவ்விதப் பற்றுக்களும் அற்ற ஒருவராக, அவர் முழு உணர்வுடன் பரம்பொருளுடன் ஒன்றிணைந்தார் ||99||

இது தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயருக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது; ஏனெனில், புனித அரசி மதாலஸாவின் மைந்தனுக்கு தாம் அளித்த வழிகாட்டுதல்கள் அனைத்தையும் அப்படியே பின்பற்றினான்; அவன் பூத உடலின் பெயரையும் உருவத்தையும் கடந்து, மெய் ஞானம் பெற்ற சான்றோர்களால் போற்றிப் பாடப்படும் அந்த உயர்ந்த நிலையை அடைந்தான்||100||

குரு வேத தர்மா தன் சீடன் தீபக்கிடம் தொடர்ந்து கூறினார் ‘கேள்விகள் பல எழுப்பிய தந்தையிடம், நற்பண்புகள் நிறைந்த அந்த மைந்தன் இவ்வாறே எடுத்துரைத்தான்; அதன்பின் அந்தத் தந்தையும் இல்லறத்தைத் துறந்து, வன வாழ்க்கையை மேற் கொள்ளத் தீர்மானித்தான்’ ||101||

அதன் பிறகு, அந்த மைந்தனின் தந்தையான பார்க்கவனும் (Bhargava) பற்றற்ற நிலையை அடைந்தார்; அவர் தான் தேடிய இறைவனைச் சேவித்தார்; ஆழ்ந்த பக்தி உணர்வுடன் தெய்வமான ஸ்ரீமத் தத்தரை வழிபட்ட அவர், வெகு விரைவிலேயே முக்திப் பேரின்பத்தை அனுபவிக்கும் பாக்கியத்தைப் பெற்றார் ||102||

மன்னன் அலர்கன், மன்னன் ஆயு, மன்னன் சஹஸ்ரார்ஜுனன், மன்னன் யது, பக்த பிரகலாதன், தெய்வீக நாகமான பிங்களன், சாத்தியர்கள்* ஆகிய அனைவரும், தெய்வமான ஸ்ரீமத் தத்தரின் மீது கொண்டு இருந்த ஆழ்ந்த பக்தியின் வாயிலாக, அவருடைய திவ்யமான இருப்பிடத்தில் அவருடன் இணைந்திருக்கும் பேற்றைப் பெற்றார்கள்.
{* இந்து மதப் புராணங்கள் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில், தேவர்களில் பல பிரிவுகள் கூறப்பட்டுள்ளன; அதில் ஒரு குறிப்பிட்ட கணமே சாத்தியர்கள் (Sadhya Devatas) ஆவர்; இவர்கள் தர்ம தேவனின் பிள்ளைகள் என்றும், பிரம்மாவின் தியானத்தில் இருந்து தோன்றியவர்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன; மிகத் தூய்மையான குணம் கொண்டவர்கள்;சடங்குகள், யாகங்கள் மற்றும் வேத மந்திரங்களின் அதிபதிகளாகக் கருதப்படுகிறார்கள்; இவர்கள் பூமிக்கும் சொர்க்கத்திற்கும் இடைப்பட்ட அந்தரங்க லோகத்தில் வசிப்பதாகக் கூறப்படுகிறது } ||103||

இறைவன் மீது செலுத்தும் உண்மையான பக்தியின் வாயிலாக, காலம் எனும் சக்தி அனைவர் மீதும் போடப்பட்டு இருந்த விலங்குகளை அறுத்து எறியக் கூடியவன் எவனோ, அவனே இறுதியில் அந்த நித்தியப் பரம்பொருளுடன் இனிமையான, உணர்வு பூர்வமான ஒன்றிப்பை அடைகிறான் ||104||

இவ்விதம் இறைவனைத் தேடி வழிபட்டவர்கள் அனைவரும், சம்சார சாகரத்தைக் (உலகப் பற்று எனும் பெருங்கடலைக்) கடந்து விட்டனர்; அவர்களே தங்கள் உண்மையான சுய ரூபத்துடன் ஒன்றிணைந்தவர்கள் ஆவர்; இனி அவர்கள் மீண்டும் இந்த உலகப் பற்று எனும் சேற்றில் விழிப் போவது இல்லை ||105||

சுருதி நூல்கள் (வேதங்கள்) இவ்வாறே இறைவனைப் போற்றிப் புகழ்கின்றன; இந்த வார்த்தைகளை நாம் முழுமையாக நம்ப வேண்டும்; இரவும் பகலும் இடைவிடாமல் தெய்வமான ஸ்ரீமத் தத்தரை வழிபடுபவர்கள், நிச்சயமாக நிர்வாணப் பேரின்பத்தை (முக்தி இன்பத்தை) உணரும் பாக்கியத்தைப் பெறுவார்கள்||106||

இப்போது நான் உங்களுக்கு, மன்னன் ஆயுவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கப் போகிறேன்; பக்தர்களே நீங்கள் மிகுந்த கவனத்துடனும், கூர்ந்த சிந்தனையுடனும் அதைக் கேளுங்கள்; நான் எடுத்துரைக்கும் செய்திகளைத் திறந்த மனதுடன் உள் வாங்கிக் கொள்ளுங்கள்||107||

II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் முப்பத்தெட்டாவது (38) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 107
முதலாவது அத்தியாயம் முதல் முப்பத்தெட்டாவது (38) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
107 + 3999 = 4106

*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}

……இதோடு பாகம் -11, அத்தியாயம் 38 முடிவடைந்தது
அத்தியாயம் 39 தொடர்கின்றது