COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION
பாகம் -11 : அஷ்டாங்க யோக தத்துவம்
அத்தியாயம் 37
அலர்கன் ஸ்ரீமத் தத்தரை போற்றிப் பாடிய துதிப் பாடல்கள்
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
குரு வேத தர்மா மன்னன் அலர்கனுக்கும் ஸ்ரீமத் தத்த பகவானுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை சீடன் தீபக்கிற்கு விவரித்தார்; இறைவனைத் தேடிய அந்த மன்னன் அடைந்த பேரானந்த விவரங்களை கேட்டறிந்த தீபக், மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் கேள்விகளைத் தொடர்ந்து பணிவுடன் கேட்டு வந்தான் ||1||
பக்தியில் சிறந்த அரசி மதாலஸாவின் இளைய மகனான அலர்கன், தெய்வத்தையே நேரில் தரிசித்து அவரிடமிருந்து உபதேசம் பெறும் பேறு பெற்றதால் மனம் மகிழ்ந்து, அவரை நோக்கி இவ்வாறு பதிலுரைத்தான்; ‘ஓ இறைவா, என் மன இருளை ஞானம் எனும் சூரிய ஒளி போலவே நீ தோற்றுவித்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது ||2||
நீ என் கையைப் பற்றிக் கொண்டு, இந்தச் சம்சார பெருங் கடலிலிருந்து என்னைப் பாதுகாப்பாக வெளியே இழுத்தாய்; எனக்கு மீண்டும் உயிர் கொடுத்து விழிப்படையச் செய்து, உன் ஆனந்தமயமான திருவுருவத்துடன் நான் இரண்டறக் கலக்கும் பேறை எனக்கு அருளினாய் ||3||
ஓ தெய்வமே, எந்த ஒரு ஆத்மாவும் உன்னை ஒரே ஒரு முறை பணிந்து வணங்கினால் கூட நீ மனம் மகிழ்ந்து, ஆத்மா விரும்பிய ஞானத்தை அருள்கிறாய் அல்லவா?; அது போலவே, என் துயரங்கள் அனைத்திலிருந்தும் நான் விடுபடும் நல் வாய்ப்பை நீ எனக்கு அருளியுள்ளாய்’ என்றான் ||4||
குரு வேத தர்மா கூறினார் ‘இது சர்வ வல்லமையுள்ள இறைவனைப் பணிந்து வணங்கும் ஒரு வகையான பக்தியாகும்; இறைவனுடன் ஒன்றிணையும் எத்தனை எளிமையான, வலிமையான வழிமுறை இது!; இறைவனை உண்மையான பக்தியுடன் பணிந்து வணங்குவதின் மூலமாகவே, முக்தி எனும் பேரானந்தத்தை அடைய முடியும் ||5||
ஒருவன் உயிருடன் இருக்கும் காலம் வரை, அவன் தேவர்களையும் தன் குருவையும் பணிந்து சேவிப்பதோடு, வேதாந்த நூல்களின் சாரத்தையும் கற்றறிய வேண்டும்; அவ்வாறு செய்யத் தவறினால், அவன் செய்த நன்மைகள் கூட புறந் தள்ளப்பட்டு நன்றியற்றவன் எனும் பாவத்தைச் சுமக்க நேரிடும் என்று, பண்டைக் காலத்து ஞானியர் கூறியுள்ளனர்||6||
சமஸ்கிருதச் செய்யுள் ‘ஆஜீவிதம் த்ரய: சேவ்யா: வேதாந்தோ குரு-ஈஸ்வர:, பூர்வம் ஞானாப்தயே பஸ்சாத் கிருதக்ஞத்வ நிவிருத்தயே’;
இதன் விளக்கம் என்ன என்றால் வாழ்நாள் முழுவதும் அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காகவும், ஞானம் பெறுவதற்காகவும் மற்றும் பழிச் சொல்லிலிருந்து விடுபடுவதற்காகவும் வேத நூல்கள், குரு, தெய்வம் ஆகிய மூவரையும் ஆராதிக்க வேண்டும்; ஆரம்பத்தில் ஞானத்தைப் பெறுவதற்காக அவர்களைச் சேவிக்க வேண்டும்; ஞானம் பெற்ற பிறகு, அவர்கள் மீதான நன்றியுணர்விற்காக, நம் கடமையை உணர்ந்து அவர்களை வழிபட வேண்டும்||7||
மனதில் இவ்வாறு உறுதியாக உணர்ந்து, இப் பிரபஞ்சம் இறைத் தன்மையிலிருந்து வேறானது அல்ல என்பதை ஏற்றுக் கொண்டு, ஒருவன் பரமாத்மனை பணிவுடன் தலை வணங்கும்போது, அவனைத் தகுதியற்றவன் என்று எவரால் முத்திரை குத்த முடியும்?||8||
வேதங்கள் மீண்டும் மீண்டும் இவ்வாறு பிரகடனப்படுத்துகின்றன ‘இந்த பிரபஞ்சம் தெய்வத்திடம் இருந்து சற்றும் வேறானது அல்ல; இந்தத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டு, அதையே அனுபவ பூர்வமாக உணருங்கள் ||9||
மேலும், ஞானம் பெற்ற ஒரு குருவும் அந்தப் பரம் பொருளும் வேறு வேறானவர்கள் அல்ல; ‘குரு’ என்னும் சொல்லில் வரும் ‘கு’ (Gu) என்னும் பகுதி அறியாமை எனும் இருளைக் குறிக்கிறது; ‘ரு’ (Ru) என்னும் பகுதி, அந்த அறியாமையைப் போக்கி அகற்றுபவரைக் குறிக்கிறது; ஆகையால், அந்தப் பரம்பொருளே ஒரு ஞான குருவின் வடிவத்தை ஏற்று வந்துள்ளார் ||10||
சமஸ்கிருத வாக்கியம்: ‘கும் அவித்யாம் ருண்ணத்தீதி குருர் ஈஸ்வர ஏவ ச’
இதன் விளக்கம் : ஒருவரின் அறியாமை எனும் இருளை எவர் தடுத்து/அழித்து ஞானத்தை வழங்குகிறாரோ, அவரே குரு; அந்த குரு ஈஸ்வரனே (இறைவனே) ஆவார் என்பது ஆகும் ||11||
விநாயகர், அக்னி (நெருப்பு), விஷ்ணு ஆகிய தெய்வங்கள் போற்றப்படும் அந்த மந்திரம் வேத மரபில் பெரிதும் புகழப் படுகிறது; அந்த மந்திரத்தின் சாரமே ஒரு குருவாக உருவெடுத்து, மாணவர்களை உலகப் பற்று எனும் பந்தத்திலிருந்து விடுவிக்கிறது ||12||
சமஸ்கிருத செய்யுள்: ‘கணேஷ் வஹ்னி-ஸன்யுக்தோ விஷ்ணுநா ச ஸமன்விதா:, வர்ண- த்வயாத்மகோ மந்த்ரஶ் சதுர்வர்க-பலப்ரதா’
இதன் விளக்கம் என்ன என்றால் கணபதி, அக்னி மற்றும் விஷ்ணு ஆகிய தெய்வங்களை உள்ளடக்கிய ‘ஓம்’ என்ற மந்திரமே அனைத்துப் பேறுகளையும் தரவல்லது; அந்த மந்திரம் வேதங்களில் போற்றப்படுகிறது; மேலும் அது மனித வாழ்வின் நான்கு சிறந்த குறிக்கோள்களிலும் வெற்றியை அருளக் கூடியது ||13||
மன்னன் அலர்கன் கேட்டான் ‘அந்த இரண்டு எழுத்துக்களே எனது மந்திரமாகும்; எவர் அந்த மந்திரத்தை அதன் தூய வடிவில் அனுபவித்து உணர்கிறார்களோ, அவர்களுக்கு இவ்வுலகம் சார்ந்ததோ அல்லது மேலுலகம் சார்ந்ததோ நிறைவேற்றப்பட வேண்டிய விருப்பங்கள் ஏதும் எஞ்சியிருப்பதில்லை ||14||
நான் எனது உடலின் தோலை உரித்து, என் குருவின் மேன்மை மிகு பாதங்களுக்காக ஒரு ஜோடி மிதியடிகளைச் செய்து அவருக்கு அதை அணிவித்து அவருக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டவனாகவே இருந்தாலும் கூட, அது என்னை என்றென்றும் அவரிடம் கடனாளியாகவே வைத்து இருக்கும்||15||
ஓ கருணை மிக்க இறைவா, எனது குருநாதா, நீங்கள் எனக்கு செய்துள்ள உதவிக்கு நான் ஆயுள் முழுவதும் உங்களிடம் கடன்பட்டவனாகவே இருக்க வேண்டும்; அந்த கடனை எப்படி தீர்க்க வேண்டும் என்பதற்கான வழி முறை எனக்குத் தெரியவில்லை||16||
நான் உங்களிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் இது மட்டுமே, நீங்கள் எனக்கு செய்துள்ள உதவிகளுக்கு நான் என்றென்றும் உங்களுக்கு கடனாளியாகவே இருக்க வேண்டும்; அந்த உணர்வினால் நான் எப்போதும் நான் உங்கள் நினைவுடனேயே இருக்க வேண்டும் ; நான் இந்த உடலை துறந்து மரணம் அடையும்வரை, இத்தகைய நிலையே எனக்கு நீடித்துக் கொண்டிருக்கட்டும் ||17||
இவ்வாறு தன் உணர்வுகளை வெளிப்படுத்திய மன்னன் அலர்கன், இறைவனின் திருவடிகளில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்; பின்னர் மீண்டும், மீண்டும் அவர் முன் தலை வணங்கி அவரை போற்றி இவ்வாறு விண்ணப்பித்தான்; ‘இப்போது நான் தூய்மையடைந்து விட்டேன்; நான் செய்யக் கூடியது எல்லாம், உம் மீது கொண்ட அன்பார்ந்த பக்தியுடன் உம்மை வணங்குவது மட்டுமே||18||
உமது அருளுக்குப் பாத்திரமான என் தாய் பெருமைக்குரியவள்; ஏனெனில், அவள் மூலமாகவே நான் உம்மைச் சந்திக்கும் பேறையும், என் தலையில் உமது ஆசி வழங்கும் கரத்தின் ஸ்பரிசத்தையும் பெறும் வாய்ப்பைப் பெற்றேன்||19||
என் சகோதரர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள்; அவர்கள் உண்மையில் கருணைக் கடல்கள்; அவர்களின் புனிதத் தன்மைக்கு ஈடு இணை ஏதுமில்லை; ஏனெனில், இந்தத் தெய்வீகப் பேறை நான் அடைவதற்காக பெரு முயற்சி எடுத்தவர்கள் அவர்களே ஆவார்கள்||20||
இறைவா, நான் உமக்கு எவ்விதம் நன்றி கூறுவேன்?; நன்மைகளை வாரி வழங்கும் உமது அருள் பார்வையை நான் எந்த விதத்தில் புகழ்ந்து பேச இயலும் ?; இந்த முழுப் படைப்பிலும் உம்மைப் போன்ற ஒருவரை நான் தேடினாலும், உமக்கு இணையான ஒருவரை என்னால் ஒருபோதும் காண இயலாது||21||
என்னை இங்கு அழைத்து வந்த என் தாயன்பு போற்றுதலுக்குரியது; சிறிது காலம் தன் சுய நலத்தை விடுத்து, என்னை இங்கு வழிநடத்தி வந்தவள் அவளே; அதனால்தான், அரண்மனைகளையும் காடுகளையும் கடந்து வந்து, சர்வ வல்லமையுள்ள இறைவனான மகேஸ்வரா, உம்மைத் தேடி அடைந்து, அந்தப் பரம்பொருளை உணரும் பேறை நான் பெற்று உள்ளேன் ||22||
காசி மான்னனையும் நான் பாராட்டியையே ஆக வேண்டும்; என்னிடம் கொண்டிருந்த பரிவு மற்றும் நட்பை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, என் பெருமையையும் என் அரசாட்சியையும் நான் இழக்கக் காரணமாக அமைந்தவன் அவனே; ஆயினும், அவனாலேயேதான் நான் உம்மைச் சந்திக்கும் நற் பயனைப் பெற்றேன் ||23||
என் அரச கருவூலம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தாலும், என் படைகள் அனைத்தும் அழிந்து போயிருந்தாலும், நான் என் சொந்தம் என்று கருதிய அனைவரும் எனக்குத் துரோகம் இழைத்திருந்தாலும், அவை அனைத்தும் இறுதியில் எனக்கு இந்த ஒப்பற்ற நன்மையையே பெற்றுத் தந்துள்ளன||24||
என்னிடம் ஏதுமில்லாத நிலையிலும், இனி எதை எதிர்பார்த்து வாழ்வது என்ற அறியாமை இருளிலும் நான் நின்றபோது, என் பக்தி மிக்க தாயான மதாலஸாவின் அறிவுரை எனக்கு நினைவுக்கு வந்தது; அதனால்தான், வர்ணிக்க இயலாத இறைவா, உம்மைச் சந்திக்கும் பேறு எனக்குக் கிடைத்தது; அற்பமான உலக ஆசைகளைப் பின் தொடர்வதிலிருந்து என்னை மீட்டெடுத்தவர் நீங்களே ஆகும்||25||
ஆகவே நான் இவ்வாறு சிந்திக்கிறேன்; இறைவன் நம்மை நேராகக் கவனிக்காத நிலையில்தான் நாம் பல விதமான உலகச் செல்வங்களை அடைய முயல்கின்றோம்; மாறாக, வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களுக்கே நாம் கடுமையாக ஏங்கும் ஒரு நெருக்கடி நிலை வரும்போது, அது இறைவன் தன் அருளைப் பொழியத் தயாராக இருப்பதற்கான ஒரு வழிகாட்டியாக அமைகிறது||26||
கையில் பொன் கிடைத்தவுடனேயே, மனிதன் வீண் பெருமை கொண்டு தன்னை உயர்த்திக் கொண்டு பேசுவது இயல்பான ஒன்றாகும்; அவன் காட்டும் அந்த ஆடம்பரமான இறுமாப்பு மற்றவர்களுக்குச் சகித்துக் கொள்ள முடியாததாக அமைகிறது; ஆயினும், அத்தகைய நடத்தையில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை||27||
ஆகவேதான், தங்கம் பெரும்பாலும் போதை தரும் ‘ஊமத்தை’ (Dhatura) செடியுடன் ஒப்பிடப்படுகிறது; அதை உட்கொண்ட கணமே ஒருவன் போதை மயங்கி, மதி மயங்கிப் போகிறான்; அதன் விளைவுகள் எத்தகையவை என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்ததே||28||
மேற் கூறிய உவமைகளுக்கு நானும் விதி விலக்கல்ல; பெருமளவு அரச செல்வங்களை பெற்று நானும் வீண் பெருமை கொண்டு அகம்பாவத்தில் இருந்துள்ளேன்; எனது அறிவாற்றல்கள் அனைத்தும் புலனின்பத்தை தேடுவதிலேயே மூழ்கி இருந்துள்ளன; அதன் காரணமாகவே, உண்மையான சான்றோரையும், மெய் ஞானம் உணர்ந்த ஆத்மாக்களையும் என்னால் அடையாளம் கண்டு கொள்ள இயலாமல் போயிற்று ||29||
சான்றோர்களால் பெரிதும் போற்றப்படும் என் சகோதரனும், என் சொந்த ரத்த உறவும், என் உற்ற நண்பனுமானவன், தன் வன வாசத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்து, எங்களது தந்தையின் அரசாட்சியில் தனக்குரிய பங்கைக் கேட்டபோது, அது எனக்கு எத்துணை வியப்பை அளித்தது ||30||
என் அறியாமை கலந்த ஆணவத்தால் நானும் அவனைத் தள்ளி விட்டேன்; அறிவதற்கு மிகவும் தகுதியான பரம்பொருளை அறிந்து, அதை அனுபவித்த அவனுக்கு, இந்த பூவுலக அரசாட்சியின் மீது துளியும் பற்றில்லை என்பதை என் உள்ளுணர்வு அறிந்திருந்தும், அறியாதவனைப் போல நான் நடந்து கொண்டேன்||31||
இப்போதுதான் அவனது கருணை எனக்குப் புலப்படுகிறது; ஏனெனில், வறுமை எனும் மூடத்தனத்தினால் என் கண்கள் மூடிக் கிடைத்துள்ளன ; மங்கிய கண்களுடனேயே நான் உம்மைத் தேடி அடைந்தேன்; இப்போது உங்கள் தெய்வீகப் பேரொளியாலும் மகிமைகளாலும் என் கண்கள் முழுமையாகத் திறந்து கொண்டு விட்டன ||32||
இத்தனை பெருமையும் எனது தாயாரைத்தான் சென்று அடைய வேண்டும், அவரே பாராட்டுகளுக்கு உரியவர்; அவருடைய அருளாலேயே நாங்கள் வளர்ந்தோம்; அதன் விளைவாகவே நான் இன்று இந்த பேறினைப் பெற்றுள்ளேன்; நான் இங்கு வந்து சேர்வதற்கு தேவையான சூழல்கள் அனைத்தும் அவரால்தான் அமைத்துத் தரப்பட்டது ||33||
குருவே, உமது திருவடிகளுக்குப் புகழஞ்சலிகள் உரித்தாகுக; ஏனெனில், உங்களது அருளாலேயே நான் அறியாமை எனும் இருளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளேன்; உங்களது திருவடி நிழலில் அடைக்கலம் புகுவதன் மூலமாக மட்டுமே, எந்த ஒருவரும் பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியிலிருந்து முழுமையாக விடுபட முடியும்||34||
ஆகவே, நானும் இல்லற வாழ்க்கையைத் துறக்கத் தீர்மானித்துள்ளேன்; இல்லறம் என்பது பற்றின்மைக்கும், மனம் மற்றும் புலன்களின் கட்டுப்பாட்டிற்கும் இரண்டாம் பட்ச முக்கியத்துவத்தையே அளிக்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்; எனவே, இனி நான் வன வாழ்க்கையையே மேற்கொள்ள விரும்புகிறேன் ||35||
சமஸ்கிருத வாக்கியம்: ‘கிருஹாத் ப்ரவ்ரஜிதோ தீர:’ புண்ய-தீர்த்த-ஜலாப்லுதா’;*
இதன் விளக்கம் : ஒரு சாதகன், தனது இல்லத்தையும் அதனோடு சார்ந்த பற்றுக்களையும் துறந்து விட்டு, அசைக்க முடியாத நம்பிக்கையுடன் புண்ணியத் தலங்களுக்கு சென்றும், பல்வேறு புண்ணிய நதிகளில் நீராடும் விதத்திலான யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது
{*இந்த ஸ்லோகத்தின் வரிகள் ஸ்ரீமத் பாகவதத்தில் (மகா புராணம்) விதுரரின் தீர்த்த யாத்திரையை விவரிக்கும் பகுதியில் இடம் பெற்றுள்ளது} ||36||
ஸ்மிருதி நூல்களில் இத்தகைய அறிவுரையே வழங்கப்பட்டுள்ளது; அந்த அறிவுரையை நான் மறந்ததாலேயே, நற் குணங்களையும், சான்றோர்களையும், குருமார்களையும், இறைவனையும் நான் மறந்து போனேன்; அதுவே என் அறிவு சீர்குலைந்த நிலைக்கு செல்லக் காரணமாக இருந்து விட்டது||37||
அலர்கனின் அத்தகைய உறுதியான சங்கல்பத்தை கேட்ட ஸ்ரீமத் தத்தாத்ரேயப் பெருமான், அவனிடம் பின்வருமாறு கூறினார் ‘அலர்கா, நீ இங்கிருந்து விடை பெற்றுச் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது; முதலாவதாக, நீ சென்று உன் சகோதரர்களுக்கு உன் வணக்கத்தைத் தெரிவிப்பாயாக ||38||
நீ இங்கு வந்து சேர்வதற்காக பின்னப்பட்ட இந்தச் சதித் திட்டம் முழுவதையும் அவர்களே செய்துள்ளார்கள்; அதுவே நீ தேடிக் கொண்டிருந்த நல் வழியை அடைய உனக்கு உதவியது; ஆகையால், இந்தச் கடமையிலிருந்து சிறிதும் வழுவாமல், நீ உடனடியாகச் சென்று அவர்களைச் சந்திக்க வேண்டும்||39||
நீ இப்போது உண்மையான நிறைவை அடைந்து விட்டாய் என்பதை உணர்ந்து கொள்; இனி ஒருபோதும் நீ வீண் பெருமைக்கு ஆளாக மாட்டாய்; இனி வரும் காலங்களில், உன் வாழ் நாளைக் கழிப்பதற்கு உகந்ததாகவும், உனக்குப் பிடித்தமானதாகவும், மனதிற்கு இதமானதாகவும் அமையும் சூழல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது உன் கையிலேயே உள்ளது ||40||
ஆத்மா எதனுடனும் ஒட்டாமல், பற்றற்ற நிலையிலேயே திகழ்கிறது என்பதையும், இந்த உலகமும், அதன் நிகழ்வுகளும் ஒரு மாயா ஜாலக் காட்சி (இந்திர ஜாலம்) போன்றவையே என்பதை நீ உறுதியாக அறிந்து கொள்; இந்த உண்மை தெளிவாக அறியப்பட்டு, மனதில் ஆழமாகப் பதிந்து விட்டால், பிறகு ஆசைகள் மற்றும் மனம்போன போக்கில் எழும் அலைகள் உனக்குள் மீண்டும் தோன்றவே தோன்றாது||41||
சமஸ்கிருதச் செய்யுள்: ‘ஆத்மா-அஸங்கஸ்ததோ-அன்யத்ஸ்யாத்-இந்திரஜாலம் து மாயிகம், இத்யசஞ்சல-நிர்ணீதே குதோ மனஸி வாஸனா’;
இதன் அர்த்தம் என்ன என்றால் ஆத்மா எப்போதும் எதனோடும் ஒட்டாதது; இதைத் தவிர மற்ற அனைத்தும் மாயா ஜாலத்தைப் போன்றது என்று ஒருவன் அசைக்க முடியாத உறுதியான முடிவுக்கு வந்துவிட்டால், அவனுடைய மனதில் ஆசை அல்லது எண்ணப் பதிவுகள் எப்படி உண்டாகும்? ||42||
வேதங்களின் துணையோடு கூடிய ஞானத்தின் மூலமாகவே ஒருவன் உண்மையை அறியத் தொடங்குகிறான்; அந்த ஞானத்தை அழித்து விட யாரால் இயலும்?; இந்த உலகில் அதை அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்த பொருள் என்று எதுவுமே இல்லை; அத்தகைய ஒரு நிகழ்வுக்கு சுட்டிக் காட்டக் கூடிய உதாரணம் எதுவும் கிடையாது ||43||
ஆகையால், ஓ மன்னனே, ஓ நண்பனே, இனி உனக்கு விருப்பமான இடத்திற்கு நீ செல்லலாம்; இனி எந்தவொரு தவறான கண்ணோட்டமும் உன்னை ஏமாற்றாது’; இவ்வாறு கூறி, அலர்க மன்னனை ஆசீர்வதித்தவாறே, ஸ்ரீமத் தத்தாத்ரேயப் பெருமான் அவனைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டார்||44||
குருவானவர் தன் சீடனை அணைத்துக் கொண்ட அந்தத் தருணத்திலேயே, அலர்க மன்னனின் உடல் முழுவதும் ஒரு தெய்வீகப் பரவசம் பரவியது; தெய்வத்தின் அன்பினால் அவன் தொண்டை அடைத்துப் போனதால் அவனால் ஒரு வார்த்தை கூடப் பேச இயலவில்லை; அவனது கண்கள் நன்றியுணர்ச்சியால் பெருகிய கண்ணீரால் நிரம்பி வழிந்தன ||45||
தன் உடலைப் பற்றிய நினைவின்றி, மிகத் தூய மற்றும் உறுதியான மன நிலையில் இருந்த அந்த அரசன், அகத்திலும் வெளிப் புறத்திலும் இருந்த அனைத்தையும் துறந்து, அந்த கணமே பரவசமடைந்து இறைவனுடன் ஒன்றிணைந்தான்||46||
அவன் அளவிட முடியாததொரு ஆனந்தத்தை அனுபவித்தான்; தேர்ந்த யோகிகளுக்கே கிடைக்காத அத்தகைய பேரின்பம், அன்பு நிறைந்த பக்தர்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு நிலையாகும்; அத்தகைய பக்தர்களின் நிலையும், அதன் பிறகு அவர்களின் செயல்பாடுகளும் சொற்களால் விவரிக்க இயலாதவை ||47||
கோடிக்கணக்கான பிறவிகளில் ஈட்டிய நற்பயன்கள் அனைத்தும் ஒரு உருவம் எடுத்து, விதியையே தள்ளி விட, அதன் விளைவாகவே ஒரு உண்மையான பக்தன் இவ்வுலகில் தோன்றுகிறான் ||48||
இந்த உலகில் பிரதானமாக நான்கு வகைகளிலான பக்தி நிலைகள் நிலவுகின்றன; அவற்றுள், ஞானத்தின் முதிர்ச்சியால் விளைகின்ற பக்தியே மிகச் சிறந்ததாகப் போற்றப்படுகிறது ||49||
மேற்கூறிய நிலையில், சாயுஜ்யம்* எனப்படும் முக்தி நிலையை அடைந்து இறைவனுடன் முழுமையாக ஒன்றிணைவது கூட இரண்டாம் பட்சமான நிகழ்வாகவே தோன்றுகிறது; அத்தகைய தீவிரமான பக்தி உணர்வை அந்த பக்தன் தன் இறைவனிடம் கொண்டிருக்கிறான்; தான் அனுபவிக்கும் பேரின்பத்தில் எல்லையற்றவனாய் இருப்பதால், முக்தி நிலைக்கும் கூட அவன் முக்கியத்துவம் அளிப்பதில்லை
{*சாயுஜ்யம் (Sayujyam) என்பது ஆன்மீகத்தில் முக்தி அல்லது மோட்ச நிலைகளில் மிக உயர்ந்த நிலையாகும்; இது இறைவனோடு இரண்டறக் கலப்பது அல்லது இறைவனின் திருமேனியிலேயே பிரவேசித்து இறைவனும் ஆத்மாவும் ஒன்றாகும் நிலையைக் குறிக்கும்} ||50||
ஆன்மீக ஞானத்தால் செழுமை பெற்ற பக்தர்கள் அனைவரும், எப்போதும் இறைவனுடன் ஒன்றிணைந்து இருக்கிறார்கள்; முக்தி அடைந்தவர்கள் மிகச் சிறந்தவர்கள்; அவர்கள் எக்காலத்திலும் இறை அன்புடன் பிணைந்தே வாழ்கிறார்கள் ||51||
பக்தியின் நுட்பமான உணர்வுகளை அறிந்து, அவற்றைச் சுவைக்கத் தெரிந்தவர்களே உண்மையான ஞானிகள் ஆவர்; அத்தகையவர்களே, தாங்கள் விரும்பும் போதெல்லாம் அந்த உணர்வு பூர்வமான பேரின்பத்தை அனுபவிக்கிறார்கள் ||52||
கலப்படமற்ற, நிலையான பேரின்பமானது, அறிவதற்கு அரிதானதாயினும் அறியத் தகுந்ததான முக்தி நிலையையும் மிஞ்சி நிற்கிறது; ‘சத்-சித்-ஆனந்தம்’ (இருப்பு-அறிவு-பேரின்பம்) எனப் போற்றப்படும் முழு முதற் கடவுளான முகுந்தனே தன் பக்தர்களுக்கு இத்தகைய பேரின்பத்தை அருளுகிறான்||53||
அத்தகைய இறைவனே அவ்வப்போது அவதாரங்களை மேற்கொண்டு, ஆணவத்தையும் வீண் பெருமையையும் அழித்து ஒழிக்கின்றான்; எப்போதும் தன் பக்தர்களுக்கு அருகிலேயே இருக்க விரும்பி, பக்தர்களின் தூய பக்தி உணர்வுகளுடன் ஒன்றிணைந்து விடுகிறான்||54||
தன் அன்பு பக்தர்கள் இல்லாதபோது, கடவுள் கூட அமைதியிழந்து தவிக்கிறார்; அதனால், சமூகத்தின் தயக்கங்களையோ அல்லது மக்கள் என்ன சொல்வார்களோ என்றெல்லாம் பொருட்படுத்தாமல், தெய்வம் தன் பக்தர்களுக்குக் கட்டுப்பட்டது போல அவர்கள் அருகில் வசிக்க விரும்புகிறது||55||
அது போன்ற அன்பு கலந்த பக்தி, பெரும்பாலும் தனிமையில் இருக்கும்போது வெளியாகின்றது; அந்த நிலையை அறிந்து அனுபவிப்பதன் மூலமே நான்கு* வகையான முக்திகளையும் எளிதில் தவிர்க்க முடியும்
{* நான்கு வகையிலான முக்தி நிலைகள் இவை; சாலோகம் (Salokya) என்பது இறைவனுலகில் அவரோடு வாழுதல், இது முதல் நிலை முக்தி; இரண்டாவதான சாமீப்யம் (சமீபியா) என்பது இறைவன் அருகிலேயே இருந்து அவருக்கு சேவை செய்யும் நிலை; மூன்றாவது நிலையை சாரூப்யம் (Sarupya) அதாவது இறைவனின் உருவத்தைப் பெறுதல் என்பார்கள்; நான்காவதானது சாயுஜ்யம் (Sayujya), அதாவது ஆத்மா இறைவனுடன் இரண்டறக் கலந்து, ஒன்றாகிப் பேரின்பம் எய்தும் நிலை ஆகும்} ||56||
அலர்கன் தன் பங்கில் அதிக முயற்சியின்றிப் பெற்ற பக்தி, தெய்வத்தின் அருளை பெற்றதுதான்; அவனது விதி அவனுக்கு அளித்ததை யாரால் போற்ற முடியும்? முழு பிரபஞ்சத்திலும் அத்தகைய விதியை யாரால் புகழ முடியும்?||57||
ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் தெய்வீக வடிவம், அவருடைய தாமரை போன்ற முகத்தின் அந்தப் பிரகாசம், அவருடைய உணர்ச்சி மிக்க கண்கள் வெளிப்படுத்தும் அந்த ஓய்வற்ற அசைவுகள் என்ற அனைத்துமே உண்மையில் தெய்வீக அழகின் எல்லையாகும் ||58||
அதைக் காண்பவர்களே அந்த அழகைப் போற்ற முடியும்; அவருடைய முகத்தில் சிரிப்பைக் காண பாக்கியம் பெற்றவர்கள், அவருடைய அன்பான கருணைப் பார்வையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அவருடைய கருணையை பெறுகின்றார்கள்; அவர்கள் அச்சமின்மையையும் பெறுகின்றார்கள்||59||
அவருடைய தொண்டை சங்கு வடிவில் உள்ளது; அவருடைய மார்பில் தெய்வீக முத்திரை உள்ளது; அவருடைய வயிறு அரச இலை வடிவில் உள்ளது; மேலும் அவருடைய தொப்புள் பகுதி இருண்டதாகவும் ஆழமானதாகவும் தோன்றுகிறது ||60||
அவருடைய தொடைப் பகுதிகள் வலிமையாகவும் உடலுக்கு ஆதரவாகவும் காணப்படுகின்றன; மேலும் அவருடைய பாதங்களின் அழகு இணையற்றது; அதில் வஜ்ராயுதம், அங்குசம், கொடி மற்றும் தாமரை ஆகிய தெய்வீக சின்னங்கள் உள்ளன; இவை தெய்வத்தின் தனி சின்னமாக (முத்திரையாகக்) கருதப்படுகின்றன||61||
கண்ணுக்கு இன்பம் தந்து, பெரும் வியப்பை உண்டாக்கும் அந்தத் தெய்வீக வடிவத்தின் அழகு அப்படிப்பட்டது; அதுவே உடலில் உள்ள உண்மையான வலை; அதில் தேடுபவனின் மனம் எனும் மீன் நிச்சயம் பிடிபடும் ||62||
நாடோடிகள், தாறுமாறாக இங்குமங்கும் அலைபவர்கள் போன்றவர்கள் தாங்கள் தேடும் ஓய்வை எங்கும் காண்பதில்லை; தெய்வீக வடிவத்தைக் காணும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைப்பதில்லை ||63||
ஒருமுறை அந்தக் கடவுளைக் கண்டு விட்டால், உணர்வுத் திறன்களின் அனைத்து தரப்பட்ட தவறான அசைவுகளும் நின்று விடுகின்றன; அந்தத் தெய்வீக ஒளியிலிருந்து பார்வையைத் திருப்ப ஒருவன் தன்னால் முடிந்தவரை முயன்றாலும், அவனால் அதை தடுத்து நிறுத்திக் கொள்ள முடியாது||64||
ஏற்கனவே முக்தி அடைந்தவர்களின் தெய்வ பற்றுக்கு வாழ்த்துகளைக் கூற வேண்டும்; தெய்வீகத்தின் மீதான அவர்களின் அன்பு தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது; மேலும் அவர்கள் தங்கள் மனதை அற்ப விஷயங்களை நாட அனுமதிப்பதில்லை ||65||
ஈக்கள் தேனைச் சுற்றி மொய்த்து, எப்படி பின்னர் அங்கிருந்து பறந்து செல்ல முடியாமல் தவிக்குமோ அதை போலவேதான் மனமும் அதன் எல்லா விருப்பங்களையும் மனச் சாய்வுகளையும் அகற்றிக் கொண்டு தெய்வ வடிவத்திலிருந்து தன் கவனத்தை விலக்க முடியாமல் நிற்கும்||66||
மனமானது மற்ற அனைத்துப் புலன்களுக்கும் அரசன் என்று கூறப்பட்டாலும், அது இறைவனின் திருவடிகளில் இறுதியாக சரண் அடையும்போது புலன்களின் பற்றுக்களுக்கு வெளியே தப்பிச் செல்ல எவ்வழியும் கிடைப்பதில்லை||67||
ஒரு உண்மையான பணியாளன் தன் எஜமானனை விட்டுப் பிரிந்து செல்ல மனமில்லாதது போன்றே, மனமானது தெய்வீகத்துடன் ஒன்றி விடும் மனமானது, அது தனக்கான உண்மையான சாம்ராஜ்யத்தை பெறுகிறது; அதன் பிறகு புலன்களின் இச்சைகள் அதன் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத நிலையில் இருந்து விடுகின்றன ||68||
ஒருவன் நன்கு அறியப்பட்ட செல்வந்தர் விருந்திற்கு செல்லும்போது, அவரது பணியாளர்களுக்கும் உபசரிப்பு கிடைக்கிறது; அந்தச் செல்வந்தரின் பணியாளர்களுக்குச் சுவையான உணவு, சுகம் போன்ற அனைத்தும் அவர்கள் கேட்காமலேயே கிடைக்கின்றன ||69||
அதேபோல, மனமானது தெய்வீகத்தின் மீதான ஆனந்தத்தை ருசிக்கத் தொடங்கும் போது, புலன்களின் இச்சைகள் அனைத்தும் அடங்கி, மிகச் சாதாரணமான இடத்தைப் பெறுகின்றன; அப்படிப்பட்ட நிலையை அடைந்த உடன் அதுவரை அனுபவித்த துன்பங்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றன; ஆயினும், அந்த தெய்வீக ஆனந்தத்தை அடைய பெரும் முயற்சி தேவைப்படும் ||70||
ஒருவன் தன் தியானத்தில் உண்மையான ஈடுபாட்டுடன் இருந்து, தன் மனத்தைத் தன் உண்மையான தன்மையில் நிலை நிறுத்த முடிந்தால், மனத்துடன் சேர்ந்து ஒய்வு நிலையை அடையும் புலன்களும், தாங்கள் கண்டடைந்த அந்தப் பொக்கிஷத்தை ஒருபோதும் விட்டு விலகுவதில்லை’ ||71||
குரு வேத தர்மா தொடர்ந்து கூறிக் கொண்டு இருந்தார் ‘மன்னன் அலர்கன் அடைந்த நிலை அத்தகையதே ஆகும்; இறைவனின் திவ்ய ரூபத்தை தரிசித்தவன் அந்த மகிழ்சியில் முழுவதும் மூழ்கி இருந்ததை போலிருந்தது; அவனது அக மற்றும் வெளிப்புற இச்சைகள், மன வேட்கைகள் அனைத்தும் முழுமையாக ஒடுங்கி கிடந்தன; இனி அவனிடம் அலை பாயும் மன நிலையையோ அமைதி இன்மையையோ இல்லை ||72||
அலர்கன் அத்தகைய நிலையில் இருப்பதைக் கண்ட இறைவன், அவனது கையைப் பற்றிக் கொண்டு ‘அலர்கா,நான் கூறுவதைக் கவனமாகக் கேள்’ என்று கூறினார் ; அத்ரி முனிவரின் திரு மகனான இறைவன் தன் பக்தனுக்கு ஆறுதல் கூறினார்||73||
‘இனி உன் மனம், என் மீது தியானம் செய்யும் திறனை ஒரு போதும் இழக்காது; இப்போது நீ சென்று, உனது நலத்தை நாடிய உன் சகோதரர்களிடம் உன் வணக்கத்தைத் தெரிவிப்பாயாக ||74||
அதன் பிறகு நீ வனவாசம் மேற் கொண்டு, என் திவ்ய ரூபத்திலேயே உன் மனத்தை லயித்திருக்குமாறு வைத்துக் கொள்; ஒவ்வொரு நாளும் நீ என்னுடன் உணர்வு பூர்வமான ஒன்றிப்பை அனுபவிப்பாய்; மனதில் எழும் சிற்றின்பங்களுக்கு அடிபணியாமல் அப்படியே நிலைத்திருப்பாயாக ||75||
அந்த சொற்களைக் கேட்டதும், அரசன் அலர்கன் இரு கரம் கூப்பி ஸ்ரீமத் தத்தரை வணங்கி, தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து பொங்கியெழுந்த துதிப் பாடலைப் பாடினான்; அதை பாடியபோது அவனது அறிவுத் திறன்கள் அனைத்தும், அவன் தேடிய இறைவன் மீதே நிலையாக நின்று இருந்தது||76||
துதிப் பாடல்: ‘நான் பிரம்ம தேவனையும், பரம்பொருளாகிய பிரம்மத்தையும் வணங்குகிறேன்; எங்கும் நிறைந்திருக்கும் வாசுதேவப் பெருமானை வணங்குகிறேன்; சிவபெருமானின் வடிவமான வாமதேவனை வணங்குகிறேன்; வேதங்களில் வல்லவர்களையும், வேதங்களின் தத்துவங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன்; பக்தர்களின் சித்தத்தை ஈர்த்துத் தன்பால் நிறுத்துபவர்கள் அவர்களே ஆவார்கள்; அசுர சக்திகளை அழித்தொழிப்பவர்களும் அவர்கள்தான்;அனைவரையும் அச்சத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுவிப்பவர்களும் அவர்களே ; துயரங்களைக் கடந்து செல்லத் துணை நிற்பவர்களும் அவர்களே; ஓ இலக்குமி தேவியின் அன்பிற்குரிய நாதனே, உம்மிடம் சரண் அடைந்தவர்களை நேசிக்கும் மாதவனே, ஆடம்பரமற்ற எளியோரின் தோழனே, சிவ பெருமானாலும் பிரம்ம தேவனாலும் போற்றப்படும் கேசவனே, அடியேனையும் உயர்த்தி அருளுவாயாக; என் உள்ளத்தில் பக்திப் பெருக்கை பெருகச் செய்வாயாக ||77||
அசுரர்களுக்குத் துன்பத்தை விளைவிப்பவன் நீயே; உளமாரத் திருந்துவோரைப் புனிதப்படுத்துபவன் நீயே; பிறருக்குத் தீங்கு விளைவிப்போர் அனைவரையும் அழித்தொழிப்பவன் நீயே; கொடிய பாவம் புரிவோரைத் தன் சீற்றத் ஜிவாலைகளினால் சூழ்ந்து கொண்டு தண்டிப்பவன் நீயே ||78||
ஓ இறைவா, என் உள்ளுக்குள்ளேயே என்னைச் சுட்டெரிக்கும் இந்தத் தீவிர ஏக்கத் தீயிலிருந்து என்னை விடுவித்தருள்வாயாக; பாவச் செயல்கள் அனைத்தையும் அடக்கி ஒடுக்குவதில் புகழ்பெற்ற சிவபெருமானே, இந்த உடலெடுத்த ஆத்மா வானது, உன்னுடைய திருவடிகளிலேயே அடைக்கலம் புகுகிறது; எனது மனதை அமைதிக்குள்ளாக வை ||79||
ஓவிப்* பாடல்: இறைவா,நீயே சத்-சித்-ஆனந்தம்; அதாவது, இருப்பு-அறிவு-பேரானந்தம் ஆகியவற்றின் முழு வடிவமாய் இருப்பவன் நீயே; இறைவா, உள்ளதெல்லாம் நீயே; அனைத்தினுள்ளும் பிரிக்க முடியாத அந்தராத்மாவாக வீற்றிருப்பவனும் நீயே; வேத சாஸ்திரங்கள் உன்னை இவ்வாறே போற்றிப் புகழ்கின்றன; நீ எத்துணை பரந்து விரிந்தவன் என்பதை நான் இப்போதுதான் முழுமையாக உணர்கிறேன்’
{*ஓவி (Ovi) என்பது மகாராஷ்டிராவின் பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல் வடிவமாகும், இது முக்கியமாக பெண்கள் தானியம் அரைக்கும்போது அல்லது அன்றாட வேலைகளைச் செய்யும்போது பாடும் பக்திப் பாடல்கள்; இவை வித்தலா மற்றும் அபங்ஸ் (Abhangs) பாரம்பரியத்தில் வேரூன்றி, அன்றாட வாழ்க்கை மற்றும் ஆன்மீகத்தை இணைக்கின்றன} ||80||
இறைவா, அனைத்திற்கும் காரணமாய் இருப்பவனும், அனைத்தையும் தாங்கி நிற்பவனும் நீயே; மனித வடிவத்தை நீயே விரும்பி ஏற்றுக் கொண்டாய்; உன் சர்வஞானத்தின்படியே நீ உன்னை வழி நடத்திக் கொள்கிறாய்; சாதாரண மனம் மற்றும் மொழிக்கு எட்டாத உயரத்தில், அவற்றிற்கு அப்பாற்பட்டவனாய் நீ திகழ்கிறாய்||81||
பிரம்மா அல்லது ஈஸ்வரன் என உன் வடிவங்களைப் போற்றுவது கூட, உன் மாயா சக்தியின் ஒரு வெளிப்பாடாகவே தோன்றுகிறது; ஜீவன் மற்றும் அந்தராத்மா ஆகியவற்றின் முழுமையான வடிவங்களை பார்க்க இயலாததின் இன்னொரு வடிவமே இது ஆகும் ||82||
அறியாமை மற்றும் மயக்கத்திலிருந்து விடுபட நீ அருள் புரியும் அந்தத் தருணத்தில், ஜீவனுக்கும் பரம பொருளுக்கும் இடையிலான நுட்பமான வேறுபாடு கூட உண்மையில் மறைந்து விடுகிறது; அத்துணை இணையற்றதாகவும், ஒன்றிணைந்ததாகவும் உன் விரிந்து படர்ந்துள்ள தன்மை திகழ்கிறது ||83||
மங்கலான ஒளியில், சுருண்டு கிடக்கும் ஒரு கயிற்றைப் பார்த்து அதை ஒரு பாம்பு என்று தவறாக எண்ணுவது போலவே, இவ்வுலக விவகாரங்களும் அமைந்துள்ளன; அவை உன்னிடத்தில் முழுமையாக இருப்பதாகத் தோன்றினாலும், மெய் ஞானம் கை கூடியதும், அந்தத் தோற்றங்கள் அனைத்தும் மறைந்து, பொருளற்றவையாகி விடுகின்றன||84||
கடந்த காலத்தில் எது இல்லையோ, அது நிச்சயமாக எதிர் காலத்திலும் இருக்கப் போவதில்லை; இடைப்பட்ட நிகழ் காலத்தில் மட்டும் ஏதேனும் ஒன்று இருப்பதாகத் தோன்றினால், அது ‘சத்தியம்’ எனும் உண்மையை போலக் காலத்தின் மூன்று நிலைகளிலும் நிலைத்து இருக்கும் என்று கூற இயலாது ||85||
சமஸ்கிருத செய்யுள் : ‘ஆதாவந்தே ச யன்னாஸ்தி வர்த்தமானே-அபி தத்ததா’ மொழிபெயர்ப்பு: ‘ஆதியிலும் (தொடக்கத்திலும்) அந்தத்திலும் (முடிவிலும்) எது இல்லையோ, ஆனால் இடைப்பட்ட நிகழ் காலத்தில் மட்டும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதோ, அதனை மிகத் தெளிவாகவும் நுட்பமாகவும் புரிந்து கொள்ள வேண்டும்; சுருக்கமாகச் சொன்னால், ‘எது என்றும் நிலையானதோ அதுவே உண்மை; எது வந்து போகிறதோ அது வெறும் தோற்றமே’ என்பதே இதன் சாரம். ||86||
நான் தவறான புரிதலால் ஆட் கொள்ளப்பட்டிருந்தபோது, இவ்வுலக விவகாரங்களையே முழுமையான உண்மை என்று கருதினேன்; ஆனால் இப்போது, உமது அருளாலேயே அந்த ஞானத்தைப் பெற்ற பிறகு , அந்தப் பழைய எண்ணங்கள் அனைத்தும் எவ்வளவு பயனற்றவை என்பதை நான் உணர்கிறேன் ||87||
இறைவா, நீர் என்மீது கருணைப் பார்வை வீசியபோது, நான் உண்மையிலேயே பூரணத்துவம் அடைந்ததாக உணர்கிறேன்; எனக்குப் பெருமை சேர்கிறது; நான் ஒரு உடலைத் தாங்கிய ஆத்மா ’ என்ற எனது பழைய அடையாள உணர்வு அனைத்தும் இப்போது மறைந்து விட்டது; நான் உமது எங்கும் நிறைந்திருக்கும் தெய்வீகத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகவே திகழ்கிறேன் ||88||
இறைவா, முழுமையான தெய்வீகத்தின் வடிவமாகத் திகழ்பவர் நீரே; நான் இப்போது உன்னை அவ்வாறே உணர்வு பூர்வமாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்; தூய ‘அத்வைதத்தின்’ உட்பொருள் என்ன என்பதை நான் இப்போதுதான் அனுபவபூர்வமாக உணர்கிறேன்; ‘நீ-நான்’ அல்லது ‘நான்-அவர்கள்’ என்ற வேறுபாடுகள் இப்போது என்னிடம் இல்லை||89||
இருப்பினும், உன்னை வழிபடும் அந்த பக்தி உணர்வு மட்டும் என்னிடம் இன்னும் நிலைத்திருக்கிறது; இந்த வேறுபாடு கூட உனது திருவுள்ளத்தாலேயே ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்ட எனது மனம், தொடர்ந்து உனது சேவையிலேயே ஆழ்ந்திருக்கும்||90||
ஆகவே இறைவா, எனது இந்த நிலையை ஏற்றுக் கொள்வாயாக. நான் ஒரு உடலைத் தாங்கிய ஆத்மா வாக இருந்தாலும், உனது ஒரு பகுதியே ஆவேன்; எங்கும் நிறைந்திருக்கும் சிவமே, நான் ஒரு பக்தன்; உன்னிடம் மட்டுமே நான் முழுமையாகச் சரணடைந்துள்ளேன்; இந்த பக்தி உணர்வு என்னுள் மேலும் மேலும் செழித்து வளர அருள்வாயாக ||91||
இத்தகைய புனிதமான பக்தி உணர்வுடனேயே, நான் பக்திப் பேரின்பத்தை அனுபவிக்கப் போகிறேன்; அந்தப் பேரின்பத்தால் விளையும் மகிழ்ச்சியைச் சொற்களால் எவ்வாறு விவரிப்பது?; இந்த பக்தி உணர்வற்றவர்கள், அதன் ஆழத்தையும் சிறப்பையும் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? ||92||
அத்தகைய ஆழ்ந்த அன்புடனேயே, நான் எங்கு இருந்தாலும் உனக்குச் சேவை செய்ய விரும்புகிறேன்; தியானிப்பவன், தியானம் மற்றும் தியானிக்கப்படுபவன் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை மறந்து விட்டு, எனது மனம் உனது தெய்வீகத்தில் உணர்வு பூர்வமாக ஒன்றிப் போய் நிலைத்திருக்கட்டும்||93||
சிறிது நேரம் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்த பிறகு, மீண்டும் இந்த பூத உலகிற்கும் அதன் நிகழ்வுகளுக்கும் நான் விழித்தெழுகிறேன்; பின்னர் மீண்டும் அந்த ஆத்மார்த்தமான வழிபாட்டுச் செயலை செய்யத் தொடங்குகிறேன்; உமது தெய்வீகத் தன்மையில் திளைத்து, என் உள்ளத்தை நான் மகிழ்வித்துக் கொள்கிறேன்||94||
அத்ரி முனிவரின் தெய்வீகப் புதல்வனாகப் போற்றப்படுபவரும், ஆறு திருக் கரங்களுடன் விளங்கும் புகழ்பெற்ற கடவுளுமான அந்தத் திருவுருவமே என் இதயத்தை முழுமையாகக் கவர்ந்துள்ளது; வேதங்கள் அவரை எவ்விதம் வேண்டுமானாலும் போற்றிப் புகழட்டும் ||95||
வானுலகத் தெய்வீகப் பண்புகளை ஏற்றுக் கொண்டு, இதோ என் கண் முன்னே காட்சியளிக்கும் அந்த வேதமூர்த்தியே நீ; உமது பண்புகளில் ஒன்றைக் கூட முழுமையாக அறிந்து கொள்ள யாரால் இயலும்?; உமது எல்லையற்றத் தன்மை அத்தகைய வியக்கத் தக்க விதத்தில் விதத்தில்தான் காட்சியளிக்கிறது||96||
சில நேரங்களில் நீர் ஒரு குழந்தையைப் போலவும், வேறு சில நேரங்களில் கற்றறிந்த அந்தணரைப் போலவும் தோன்றுகிறீர்; சில சமயங்களில் ஷத்ரிய வீரரைப் போலவும், சில சமயங்களில் வைசியரைப் போலக் கூர்மையான வணிகத் திறன்களுடனும், சில சமயங்களில் சூத்திரரைப் போலச் சேவகம் செய்பவராகவும் காட்சியளிக்கிறீர்; பல நேரங்களில், பல்வேறு வர்ணங்களின் கலவையாகவும் நீர் தோன்றுகிறீர் ||97||
ஒரு குழந்தையாகவோ, முதியவராகவோ, இளைஞராகவோ, அல்லது பழுத்த அனுபவம் வாய்ந்த ஞானியாகவோ உருவெடுத்து, சில சமயங்களில் எல்லாம் அறிந்தவராகவும், வேறு சில சமயங்களில் மந்த புத்தி கொண்டவராகவும் உம்மை நீர் வெளிப்படுத்திக் கொள்கிறீர்; உம்மை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, உம் அடியார்களிடம் நீர் மேற்கொள்ளும் இச்செயல்கள் எத்துணை மர்மமானவை!||98||
பல நேரங்களில் நீர் புலனின்பங்களை நாடுபவராகவும், வேறு சில நேரங்களில் எதன் மீதோ ஆழ்ந்த பற்று கொண்டவராகவும் தோன்றுகிறீர்; ஆனால் வேறு சில சமயங்களில், துறவுக்கும் பற்றின்மைக்கும் உருவமாகவே நீர் திகழ்கிறீர்; மிக அரிதாகவே, தேர்ந்த யோகிகளின் வடிவை நீர் ஏற்கிறீர் ||99||
இறைவா, புண்ணியமோ அல்லது பாவமோ எவையும் உம்மைத் தீண்டுவதில்லை; ஆயினும், சில நேரங்களில் நீர் களங்கமுற்றவரைப் போலவும், வேறு சில நேரங்களில் தூய்மையிலும் தூய்மையான ஞான ஒளியாகவும் உம்மை வெளிப்படுத்திக் கொள்கிறீர்; இதற்கு நேர்மாறாக, சில சமயங்களில் எதையும் அறியாதவராகவும், உணராதவராகவும் நீர் தோன்றுகிறீர் ||100||
இவ்வாறு, உம்முடைய மாயா சக்திக்கெல்லாம் தலைவனாகத் திகழ்பவர் நீரே; அனைத்துப் புலன்களுக்கும், அனைத்து அனுபவ அறிவுகளுக்கும் தலைவன் நீரே; ஆயினும், மற்ற சாதாரண உயிர்களைப் போலவே, நீரும் பிறவற்றைச் சார்ந்திருப்பவரைப் போல உம்மை வெளிப்படுத்திக் கொள்கிறீர் ||101||
உமது ஆனந்த மயமான, எவ்வித முயற்சியுமற்ற திருவிளையாடல்கள் நிகழ்வது இவ்வாறே நிகழ்கின்றன ; பிரம்மதேவன் உள்ளிட்ட தேவர்கள் கூட உம்மை மெய்யாகவே உணர்ந்து அறிவதில் திகைத்து நிற்கின்றனர்; ஓ முடிவற்ற அளவில் எங்களை காப்பவனே, ஓ சர்வ ஞானியே, பணிவுடன் நான் உமக்குச் சமர்ப்பிக்கும் இத் தொடர் வணக்கங்களை ஏற்று அருளுக ||102||
உமது முன்னிலையில் இத்தகைய நிலையில் வீற்றிருப்பதே எமக்குக் கிடைத்த முக்தியாகும்; வேதங்கள் போற்றிப் புகழும், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தத் தெய்வீகப் பரம்பொருளே, இக்கணமே இங்கே எமக்குக் கண் கூடாகத் தோன்றி, நாங்கள் உணர்வு பூர்வமாக அனுபவிக்கும் பேறை அளிக்கின்றீர்கள் ||103||
சுருதி நூல்கள் போற்றிப் பாடுவது உம்மையே; ஓ இறைவா, தர்மத்திற்கும், அதற்கு எதிரான அதர்மத்திற்கும் அப்பாற்பட்டு விளங்குபவர் நீரே, ஓ இறைவா, எங்கள் அனைவருக்கும் கண் கூடான அமிர்தமாகத் திகழ்பவரும் நீரே; முப்பெரும் உண்மைகள் மும்முறை உறுதிப்படுத்தப்பட்டவையாகும் ||104||
ஒரு மனிதனாக நான் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்து முடித்தேன்; ஒரு மனிதனாக நான் அடைய வேண்டிய பேறுகள் அனைத்தையும் அடைந்தேன்; ஒரு மனிதனாக நான் காண வேண்டிய காட்சிகள் அனைத்தையும் கண்டேன்; ஒரு மனிதனாக நான் அனுபவிக்க வேண்டிய அனுபவங்கள் அனைத்தையும், உமது திருவருளால் முழுமையாக அனுபவித்தேன்
||105||
இப்பொழுது, ‘நான்’ என்றும் ‘நீ’ என்றும் தனித்தனியான இரு பொருட்கள் உள்ளன என்று எந்த ஞானிதான் நம்புவான்? தூய அத்வைத நிலையையும், இறை சங்கல்பத்தால் ஏற்பட்ட பேதங்களையும் அறிந்து கொள்ள இனி யார் தான் முயற்சி செய்வார்?; விதியின்படி நிகழ வேண்டியவை நிகழ்ந்து முடிவதற்காகவே, நான் இன்னும் சில வார்த்தைகளை கூற விரும்புகின்றேன் ||106||
நீர் எனக்குச் செய்யுமாறு பணித்த அனைத்தையும், நான் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன்’; இவ்வாறு தான் தேடிய இறைவனைப் போற்றியவனாய், அலர்கன் மீண்டும் ஒருமுறை பணிவுடன் அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான் ||107||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் முப்பத்தி ஏழாவது (37) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை:107
முதலாவது அத்தியாயம் முதல் முப்பத்தி ஏழாவது (37) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
107+ 3892 =3999
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -11, அத்தியாயம் 37 முடிவடைந்தது
அத்தியாயம் 38 தொடர்கின்றது