-1-

1) குல தெய்வம் என்பது நமது முன்னோர்கள் தொடர்ந்து வணங்கி, பூஜித்து, ஆராதித்து வந்திருந்த குறிப்பிட்ட ஒரு மூல ஆண் அல்லது பெண் தெய்வம், அல்லது துணை தெய்வங்கள் ஆகும். பெரும்பாலும் கிராமப்புறங்களில் வசித்து வந்திருந்த ஒவ்வொருவருடைய பரம்பரையினரும் பிரதான தெய்வமாக அவர்களது வீடுகளில் வணங்கி வந்திருந்த தெய்வமே குல தெய்வம் ஆகும். ஒரு பரம்பரையை சேர்ந்த குடும்ப தெய்வ ஆராதனையை அந்தந்த குடும்பங்களில் உள்ள ஆண் மகன்கள் மூலம் அடுத்த பரம்பரையினர் தொடர்ந்து வழிபட்டு வந்தார்கள். குல தெய்வங்கள் ஒரு குடும்பத்தினருடைய துயரங்களையும், துன்பங்களையும் களைந்து அவர்களது வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாக இருந்து வருவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.
2) நீண்ட காலமாக நான் குலதெய்வம் அல்லது குலதேவதா என அழைக்கப்படும் குலதெய்வ வழிபாட்டு முறையின் ஆழமான தத்துவத்தை புரிந்து கொள்ள முயற்சித்தேன். அதன் விளைவாக நகர மற்றும் கிராமப்புறங்களில் பரவலாக பரவி உள்ள குலதெய்வ வழிபாடு குறித்து ஆலய பண்டிதர்கள், முன்காலத்து மூதையோர் மற்றும் சாமானியர்கள் என பலரிடமும் பேசி அதை புரிந்து கொள்ள ஒரு வகையிலான ஆராய்ச்சியை மேற்கொண்டேன். மிக ஆழமான இந்த வழிபாட்டின் தத்துவத்தை புரிந்து கொள்ள நான் மேற்கொண்ட முயற்சி அத்தனை எளிதானது அல்ல என்பது எனக்கு தெரிந்தாலும், அந்த முயற்சியில் இருந்து பின்வாங்க விரும்பாமல் ஆராய்ச்சியை தொடர்ந்தேன்.
3) கடந்த சில ஆண்டுகளாக, நான் கற்றறிந்த ஆலய பண்டிதர்கள், ஜோதிடர்கள், முதியோர்கள் மற்றும் சோழி போட்டு மற்றும் பிற கலைகளை பயன்படுத்தி எதிர்காலத்தை கணிப்பவர்கள் போன்றவர்களை சந்தித்து அவர்களுடைய கருத்துக்களையும் கேட்டேன். அவர்களைத் தவிர குலதெய்வ வழிபாட்டை கடைபிடிக்கும் சில முதியவர்களிடமும் பேசினேன். அவர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த சில செய்திகள் நான் அதுவரை அறிந்திடாதவை. நான் அவர்களிடம் இருந்து பெற்ற செய்திகள் பல வகைகளிலும் மாறுபட்டவை. நான் இதற்கு முன்பு குலதெய்வங்களைப் பற்றிய சில கட்டுரைகளை எழுதியிருந்தேன், அதை படித்த பல வாசகர்களிடமிருந்து சுவாரஸ்யமான கேள்விகள் வந்தன. அவர்களின் சில கேள்விகளுக்கான விளக்கங்களை என்னால் தர முடிந்தாலும், சில கேள்விகளுக்கு உடனடியாக என்னிடம் பதில் இல்லை என்பதினால் அவற்றுக்கான பதில்களை தெரிந்து கொள்ள எனது தேடலைத் தொடர்ந்தேன். எனது இணையதளத்தில் எனது புனைப்பெயரான ‘சாந்திப்பிரியா’ என்ற பெயரில் கட்டுரைகளை வெளியிட்டு வந்தேன்.
4) இரண்டு மூன்று முகம் தெரியாத முதியவர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் எழுதிய குல தெய்வம் பற்றிய கட்டுரையில் இருந்த தகவல்களுக்கு என்னை பாராட்டினார்கள். அவர்கள் மேலும் சில விஷயங்களைக் குறித்து விவாதித்தார்கள். அது எனக்கு உற்சாகத்தை கொடுத்தது. என்னுடன் பேசியவர்கள் நான் எழுதி வந்த குலதெய்வ வழிபாடு கட்டுரைகளை ஆங்கிலத்தில் வெளியிட்டால் குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரும் புரிந்து கொள்ளலாமே என்று பரிந்துரைத்தனர். குலதெய்வங்கள் பற்றிய எனது கட்டுரைகளைப் படித்த பலரும் என்னைப் பாராட்டினர்.
5) என்னுடைய இந்த தேடலில் இரண்டு சுவாரஸ்யமான நிகழ்வுகளை சந்தித்தேன். முதலாவது திருநெல்வேலி மாவட்டத்தை (இந்தியா) சேர்ந்தவரும் வேறொரு மதத்திற்கு மாறியவருமான ஒரு அன்பர் என்னை ஒருநாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசினார். சில காரணங்களுக்காக அவரது முழுமையான விவரங்களை நான் வெளியிடவில்லை. குலதெய்வம் குறித்த என்னுடைய கட்டுரையை படித்தவர், ஈமெயில் மூலம் முதலில் செய்தி அனுப்பிய பின்னர் தொலைபேசியில் என்னை தொடர்ப்பு கொண்டு, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பின் நீண்ட நேரம் என்னிடம் பேசினார். தனது முன்னோர்கள் மதம் மாறி இருந்ததினால் தனக்கு தன்னுடைய குல தெய்வம் யார் என்பது தெரியவில்லை என்றும், அதனால் தனது குலதெய்வ வழிபாட்டை தொடர முடியாமல் உள்ளதாக வருந்தி, அவரது குலதெய்வத்தைக் கண்டு பிடிக்க உதவுமாறு கேட்டார். மதம் மாறி இருந்தாலும் அவர் குலதெய்வத்தை தேடி அலைந்ததின் காரணம், பல்வேறு குடும்ப பிரச்சனைகளினால் அவர் மிக்க மன உளைச்சலில் ஆளாகி இருந்தபோது, அந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர சில ஜோசியர்களை அணுக  அவர்கள் அனைவருமே அவரது அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் அவரது குலதெய்வ வழிபாட்டை கைவிட்டதுதான் என்றும், அவர் குலதெய்வ வழிபாட்டை மீண்டும் மேற்கொண்டால்தான் அவரது பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் கூறி விட்டதினால் என்னை அவர் தொடர்ப்பு கொண்டதாகவும் கூறினார்.
6) தனது குலதெய்வத்தை எப்படி கண்டு பிடிப்பது என்பது புரியாமல் குழம்பி இருந்தவருக்கு அவருடைய நண்பர்கள் மீண்டும் குறி சொல்பவர்கள் மற்றும் வேறு சில முறைகள் மூலம் பிற்காலத்தை கணிக்கும் ஜோதிடர்களை அணுகி அவரது குலதெய்வம் யார் என்பதை கண்டு பிடித்துத் தருமாறு கேட்கலாம் என்று கூறியதினால் அது குறித்து என்னுடைய ஆலோசனையைக் கேட்க என்னை தொடர்ப்பு கொண்டதாக கூறினார்.
சாதாரணமாக குலதெய்வத்தைக் கண்டு பிடிக்க செய்யப்படும் சில முறைகள்

(a) ஜோதிடத்தில் அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களால் ஜாதகத்தை வைத்துக் கொண்டு குலதெய்வத்தை கண்டு பிடிக்க முடியும். ஆனால் ஜாதகம் பிழை இன்றி இருக்க வேண்டும்.
(b) இடது கை கட்டைவிரல் ரேகையைக் கொண்டு நாடி ஜோசியம் எனும் முறையில் குலதெய்வத்தை கண்டு பிடிக்க முடியும். ஆனால் அது கண்டிப்பாக சரியாக இருக்கும் முடியாது.
(c) மூன்றாவது முன்னோர்களின் ஆவிகளுடன் பேசி அதை கண்டு பிடிக்கலாம் என்பார்கள். ஆனால் இந்த முறையில் தேடுதலை செய்தவர்கள் அனுபவபூர்வமாக தமக்கு ஏற்பட்ட தோல்விகளையும் சங்கடங்களையும் கூறினார்கள்.
(d)நான்காவதாக நமது முன்னோர்களின் உறவினர்களை தேடித் கண்டு பிடித்து அவர்கள் மூலம் உண்மை கொள்ள வேண்டும் என்பார்கள். நான் இந்த விஷயத்தில் நிபுணத்துவம் வாய்ந்தவன் அல்ல என்றாலும் ஜோசியர்களினால் குலதெய்வத்தை எளிதில் அடையாளம் கண்டு பிடிக்க முடியாது என்றும், ஆகவே ஜோதிடர்களை அணுகும் முன் முதலில் அவருடைய தாத்தா வழி சந்ததியினர் யாராவது இருந்தால் அவர்களை தொடர்ப்பு கொண்டு அவர்கள் முன்னோர்கள் வணங்கிய தெய்வம் எது, எதனால் அவர்கள் மதம் மாறினார்கள், எதனால் குலதெய்வ வழிபாட்டை கைவிட்டார்கள் என்பதை கேட்டு அறிவதே பலன் அளிக்கும் என்று ஆலோசனை கூறினேன்.
7) சில நாட்களுக்குப் பிறகு அவர் தொலைபேசியில் மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டு நான் கொடுத்த ஆலோசனைக்கு நன்றி தெரிவித்தார். அவரது முன்னோர்கள் வழிபட்ட தெய்வத்தின் பெயர் மற்றும் மற்றும் அதன் இருப்பிடம் ஆகியவற்றை அறிய அவரது மூதாதையரின் உறவினர்களில் ஒருவரை எப்படியோ கண்டு பிடித்ததாகவும், அவர் மூலம் அவரது முன்னோர்கள் வழிபட்டு வந்திருந்த குல தெய்வம் குறித்த சில தகவல்களைப் பெற்றதாகவும் எனக்குத் தெரிவித்தார். அவர் மதம் மாறிய பின் வழிபட்டு வந்திருந்த அதே வழிபாட்டு தலத்தின் பின்புறம் அதன் சுவரை ஒட்டி, பலமுறை அவர் நடந்து சென்ற அதே பாதையில் அவரது முன்னோர்கள் வழிபட்ட தெய்வம் மூன்று பக்கங்களிலும் சுவர் எழுப்பப்பட்டு இருந்த ஒரு சிறிய அறை போன்ற வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்ததை கேள்விப்பட்ட அவர் வியப்பு அடைந்தாராம். அதைக் கூறிய அவரது உறவினர் அவருக்கு அந்த சிறு வழிபாட்டு தலத்தின் உள்ளே இருந்த ஒரு மாரியம்மன் சிலையைக் காட்டி (அவர் குறிப்பிட்ட அந்த தெய்வத்தின் சரியான பெயரை நான் மறந்துவிட்டேன்) அதைத்தான் அவரது முன்னோர்கள் குலதெய்வமாக வணங்கி வந்திருந்தார்கள் என்றும் மதம் மாறிய பின்னர் அந்த குல தெய்வ வழிபாட்டை நிறுத்தி விட வேண்டியதாயிற்று என்று கூறினார்களாம்.
8) அந்த சிறிய வழிபாட்டு தலத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும் அவர் அந்த தெய்வத்திற்கு வழிபாடு செய்யத் துவங்கினாராம். அதே சமயத்தில் அவர் மாறிய மதத்தின் வழிபாட்டு தலத்தில் வழிபடுவதையும் சில சமூக காரணங்களினால் நிறுத்த முடியாமல் உள்ளது என்றார்.
9) இப்படியாக அவர் தனது மூதையோர் வழிபட்டு வந்திருந்த குலதெய்வ வழிபாட்டை மீண்டும் தொடரத் துவங்கியதும் அவருடைய வாழ்கையில் நிலவிய வந்திருந்த பல பிரச்சனைகள் மெல்ல மெல்ல மறையத் துவங்கியதாம். அவரைத் தொடர்ந்து அவருடைய சில உறவினர்களும் அந்த மாரியம்மன் வழிபாட்டு தலத்தில் வழிபாடு செய்யத் துவங்கியதாகவும் குறிப்பிட்டார். அந்த வழிபாட்டு தலத்தில் வழிபட வேண்டிய வழி முறைகளைப்பற்றி சில விளக்கங்களை என்னிடம் கேட்டு அறிந்து கொண்டார். குரல் தழுதழுக்க அவர் எனக்கு பலமுறை மீண்டும், மீண்டும் நன்றி கூறி, அந்த தெய்வத்திற்கு தம்மால் ஆன ஏதாவது உதவி செய்ய விரும்புவதினால் என்ன செய்யலாம் எனக் கேட்டபோது, அந்த வழிபாட்டு தலத்தில் ஏற்றப்படும் எண்ணைக்கான செலவை ஏற்குமாறு கூற அதைக் கேட்ட அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
10) அதை போலவே இன்னொரு நிகழ்ச்சி நடந்தது. பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்மணி (அவர் 2020 ஆம் ஆண்டில் மறைந்து விட்டார்) ஒருமுறை என்னைத் தொடர்பு கொண்டு, எங்களது முதல் சந்திப்பிலேயே நான் அவருடைய நெருங்கிய நண்பரைப் போலவே கருதி தனக்கு நேர்ந்த சில சோதனைகளை விவரமாக விரித்தபடி என்னிடம் நீண்ட நேரம் பேசினார். அவருக்கு அவருடைய முன்னோர்கள் வணங்கி வந்திருந்த குலதெய்வமான தஞ்சம்மா தேவி எனும் தெய்வம் எந்த ஆலயத்தில் உள்ளது என்று தெரியவில்லை என்றும், காஞ்சீபுரத்தில் அருகில் உள்ளதாக கூறப்படும் அவரது குல தெய்வமான தஞ்சம்மா தேவி வீற்றிருக்கும் ஆலயத்தைக் கண்டுபிடிப்பதில் அவருடைய கணவனுக்கு விருப்பமில்லாததால், அவரது குடும்ப தெய்வமான தஞ்சம்மாவிற்கு அவரால் வழிபாடு செய்ய முடியவில்லை என்றும், அவளுடைய குலதெய்வ ஆலயம் எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிய என் உதவியை நாடியதாகவும் குறிப்பிட்டார். அவரது முன்னோர்கள் சிலர் தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகிலுள்ள காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்தனர் என்ற செய்தியையும் கூறி அந்த பெண்மணியின் முன்னோர்கள் வழிபட்டு வந்திருந்த குலதெய்வத்தைப் பற்றிய சில குறிப்புகளை அவள் எனக்குக் கொடுத்தாள். அவளுடைய குடும்பப் பிரச்சனைகள் அனைத்திற்கும், குலதெய்வ வழிபாட்டை நிறுத்தியதே முக்கியக் காரணம் என்று அவருக்கு ஜோதிடர்கள் கூறியதால், அவளது குலதெய்வ ஆலயம் எங்குள்ளது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தாள். கடைசி நிலை புற்று நோயால் அவதிப்பட்டு வந்திருந்த அந்த பெண்மணி அவருக்கு எதுவும் ஆகி விடும் முன் அவரது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று வழிபட்டு விட வேண்டும் என்ற ஆவலில் இருந்தார். அந்த பெண்மணியின் நிலையைக் கேட்ட எனக்கு பரிதாபமாக இருந்ததினால் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தஞ்சம்மா அம்மன் வீற்றிருக்கும் ஆலயம் எங்குள்ளது என்று வலைதளத்தில் பல வழிகளில் தேடிப் பார்த்தேன். இரண்டு அல்லது மூன்று இடங்களில் மட்டுமே இருந்த, எனக்கு கிடைத்த தஞ்சம்மா ஆலயம் பற்றிய சொற்பமான தகவல்களை அவளிடம் கொடுத்தேன். ஆனால் அவர் குறிப்பிட்ட ஆலய விவரம் எதிலும் பொருந்தவில்லை என்றாலும் அதில் ஒரு ஆலயம் மட்டும் ஓரளவு அவர் கூறிய தகவலின் அடிப்படையில் இருந்தது போல உணர்ந்தேன்.
11) சில நாட்களுக்குப் பிறகு அந்த பெண்மணி மீண்டும் என்னை தொடர்பு கொண்டு ஆச்சர்யமாக பெங்களூரில் இருந்த ஒரு கார் பழுது பார்க்கும் கடையின் அடையாளப் பலகையில் இருந்த பெயர் மூலம், அவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் தனது குலதெய்வ ஆலய இருப்பிடத்தை அறிந்து கொண்டதாக கூறினார். அதே கடையை அவள் பல முறை பார்த்திருந்தும் முன்னர் அவர்களை கேட்கத் தோன்றவில்லை என்று அவள் எனக்கு போன் செய்தாள். அவரது குலதெய்வ தேடுதல் கதை சுவாரஸ்யமாக இருந்ததால், அவரது அனுமதியுடன் அவரது கதையை தமிழில் ‘குலதெய்வத்தை தேடி – ஒரு உண்மைக் கதை’ (Link : https://santhipriya.com/2019/03/tanjamma-kuladevathai.html) என்ற தலைப்பில் என் இணைய தளத்தில் வெளியிட்டேன். அவர் கேட்டுக் கொண்டபடி அவரது உண்மையான பெயர் மற்றும் அவருடைய எந்த தகவலையும் வெளியிடவில்லை.
12)எனது இணையதளத்தில் அந்த தெய்வத்தின் கதை வெளியான பின்னர் அதே தஞ்சம்மா தேவியை குலதெய்வமாக கொண்டிருந்த மேலும் சிலர் என்னை தொடர்பு கொண்டு தஞ்சம்மா தேவி ஸ்தாபனம் செய்யப்பட்டு உள்ள பிற ஆலயங்கள் பற்றிய தகவல்களை கேட்டார்கள். அவர்களுக்கு தஞ்சம்மா தேவியின் ஆலயங்கள் உள்ள இடத்தின் விவரம் கிடைக்கவில்லை என்பதினால் என்னை அணுகினார்கள். சில பக்தர்களுடன் நான் நடத்திய உரையாடல் மூலம் தொலை தூரத்தில் இருந்த அதே தெய்வத்தின் மேலும் சில ஆலயங்கள் உள்ள இருப்பிடங்கள் தெரிந்தன. ஒவ்வொரு ஆலயத்திலும் இருந்த தஞ்சம்மா தேவியை குறிப்பிட்ட பரம்பரையினர்தான் வழிபட்டு வந்திருந்தது தெரிய வந்தது. ஒவ்வொரு பரம்பரையை சேர்ந்தவர்களும் அவர்களின் முன்னோர்கள் வழிபாடு செய்து வந்திருந்த குறிப்பிட்ட தஞ்சம்மா தேவி ஆலயத்தில் மட்டுமே வழிபாடு செய்து வந்துள்ளதும் தெரிந்தது.
தங்கள் குலதெய்வங்களைப் பற்றி ஆலோசனைகளை கேட்டு வெளிநாடுகளில் இருந்தும் அஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் சிலர் என்னை தொடர்ப்பு கொண்டபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். தமது குலதெய்வத்தை எப்படி கண்டுபிடிப்பது என்று பல அன்பர்களிடம் இருந்தும் எனக்கு தொடர்ந்து கேள்விகள் வந்ததால், அடையாளம் தெரியாத தமது குலதெய்வத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பதற்காக பண்டை காலத்தில் இருந்தே பலரும் கடைப்பிடித்து வந்திருந்த ஒரு நடைமுறையை ஒரு கட்டுரை மூலம் வெளியிட்டேன்.(இணையதளம்: https://santhipriya.com/2018/04/ritual-to-find-o…e-tutelary-deity.html). பலரும் தமது குல தெய்வத்தை கண்டு பிடித்துக் கொள்ள அந்த கட்டுரை மிக்க பயன் உள்ளதாக இருந்தது எனக் கூறி என்னுடைய கட்டுரைக்கு நன்றி தெரிவித்தனர்.
13) இப்படிப்பட்ட அனுபவங்கள் என்னுடைய ஆய்வுக் கட்டுரைக்கான கூடுதல் தகவல்களைத் தேட என்னைத் தூண்டியது என்பதினால் கீழுள்ள கேள்விகளுக்கு பதில் காண விருப்பம் கொண்டு மேலும் பல தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தேன்.
• பொதுவான தெய்வ வழிபாடு மற்றும் குல தெய்வ வழிபாடு என்கின்ற கருத்து எப்படி, எங்கிருந்து தோன்றியது?
• எப்படி ஒவ்வொரு குடும்பத்தினரும் குறிப்பிட்ட குல தெய்வ வழிபாட்டை மேற்கொண்டார்கள் ?
• ஒரு பரம்பரையை சேர்ந்தவர்களது சந்ததியினர் அவர்களது குல தெய்வத்தை மாற்றியமைக்க எதுவும் சடங்கு உள்ளதா ?
• உலகில் காணப்படும் பெருவாரியான குலதெய்வங்கள் எங்கிருந்து வந்திருக்க முடியும் ?
• மேலும் மேலும் புதிய குல தெய்வங்கள் வெளிப்பட்டபோது அவற்றுக்கான தெய்வீக சக்திகள் எங்கிருந்து அவர்களுக்கு கிடைத்தன மற்றும்
• ஒருவர் தமது குலதெய்வத்தை தனது விருப்பத்துக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ள முடியுமா? அதற்கான ஏதேனும் சடங்கு முறை அல்லது கட்டுப்பாடு உள்ளதா?
14) என்னைத் தொடர்பு கொண்ட அனைவரிடமும் எனது அறிவுக்கு எட்டியவரை குலதெய்வ வழிபாடு குறித்த அனைவரது சந்தேகங்களையும் விளக்கும் ஒரு விரிவான கட்டுரையை எழுதுவதாக உறுதியளித்தேன். வேத கால சில புராண நூல்களில் குல தெய்வம் பற்றி சில குறிப்புகள் மட்டுமே உள்ளன என்றாலும் எனது கட்டுரையில் காணப்படும் செய்திகள் பல இணைய தள செய்திகள், பல்வேறு ஆலய பண்டிதர்களுடன் நடத்திய விவாதங்கள், அவர்களிடம் இருந்து கேட்டுப் பெற்ற தகவல்கள், பல வழிகளில் எனக்கு கிடைத்த வாய்மொழி கதைகள், சொற்பொழிவுகள், தனிப்பட்ட பெரியவர்களுடன் நடத்திய விவாதங்கள், மற்றும் பல்வேறு காலகட்டங்களில் நான் நேரில் சேகரித்த பிற செய்திகளை அடிப்படையாக கொண்டது ஆகும். இதற்கான பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அனைத்துமே வாய் மொழிக் கதையாக உள்ளது. அவற்றின் அடிப்படையில்தான் வேறு பலரும் குலதெய்வம் பற்றி எழுதி உள்ளார்கள்.
15) குலதெய்வ தோற்றம் பற்றி நிறைய கருத்துக்களும் விவாதங்களும் உள்ளன. வேத காலத்தில் எழுதப்பட்டதாக கூறப்படும் புராணங்கள் மற்றும் இதிகாச நூல்களைப் படித்தால், வேத காலத்தில் கூட தெய்வ வழிபாடு இருந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஒரு நாட்டுப்புறக் கதையின்படி , பகவான் கிருஷ்ணர் பாண்டவ சகோதரர்களில் ஒருவரான யுதிஷ்டரிடம் அவர்களது குலதெய்வம் உஜ்ஜயினியில் நல்கேடா எனும் கிராமத்தில் உள்ள பகலாமுகிதேவி என்றும், யுத்தத்தில் தமக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என அங்கு சென்று வேண்டிக் கொள்ளுமாறு கூறியதினால் பகலாமுகி ஆலயத்திற்கு வந்து யுதிஷ்டர் வணங்கியதாக கூறப்படுகிறது. (அந்த தேவியின் கதையை எனது இணையதளத்தில் படிக்கவும்: https://santhipriya.com/2012/05/ujjain-bagalamuki-temple.html) ஆகவே குல தெய்வ வழிபாடு என்பது , 3500 ஆண்டுகள் அல்லது 7000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், துவாபர யுக முடிவில் நடந்திருந்ததாக கூறப்படும் மகாபாரதப் போர் காலத்திலும் இருந்துள்ளது தெரிகின்றது. அந்த காலகட்டத்தில்தான் பகவான் கிருஷ்ணர் தனது உடலை விட்டு வெளியேறினார் என்றும் புராணக் கதைகளில் கூறப்படுகின்றது.

        தொடர்கிறது …..2

—————————————————-

அடிப்படை ஆதாரம் :- மேற்கண்ட கட்டுரையில் காணப்படும் சில செய்திகள் கீழ்கண்ட இணையதளங்கள், கிராமியக் கதைகள், ஆலய பண்டிதர்கள் மூலம் கிடைத்த செய்திகள் மற்றும் சில மூத்த குடிமகன்கள் மூலம் கிடைத்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும்.

1) https://navrangindia.blogspot.com/2018/04/twenty-important-facts-about-worshiping.html
2) https://www.wisdomlib.org/definition/kuladevata
3) http://vaisshnav.blogspot.com/2015/12/kula-deivam-do-we-need-to-pray-to-kula.html
4)https://www.scribd.com/document/401113410/Cowrie-Astrology
5)https://indusladies.com/community/threads/want-to-know-about-your-kuladevatha-post-here.159893/page-26
6)https://www.wattpad.com/1003664371-the-forbidden-princess-of-madurapuri-chapter-3
7) https://en.wikipedia.org/wiki/Tutelary_deity
8) https://www.myindiamyglory.com/2018/07/06/mahabharata-war-7500-years-ago-what-astronomical-calculations-say/
9) https://thevedicfoundation.org/bhartiya_history/mahabharat.htm
10) https://www.indiatvnews.com/lifestyle/books-culture-maa-baglamukhi-temple-all-about-ujjain-mandir-where-pandavas-worshipped-to-win-back-their-kingdom-739317

———————————–
நன்றி: அமெரிக்க நாட்டில் வசிக்கும் எனது நண்பரானவரும், மருத்துவ தொழிலில் உள்ளவருமான திரு Dr V. சங்கர் குமார் என்பவர் எனது கட்டுரையை ஆய்வு செய்தபின் அதில் இருந்த தவறுகளை சரி செய்த பின் சில செய்திகளை திருத்தி அமைக்க ஆலோசனை வழங்கி உதவி செய்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன். அவர் பல இணைய தளங்களில், முக்கியமாக சீரடி ஸ்ரீ சாயிபாபா தளத்தில் தமிழ் கட்டுரைகளை எழுதி உள்ளார், ஆங்கில கட்டுரைகளை பெயர்த்து உள்ளார். (https://shirdisaibabatamilstories.blogspot.com/-) — N.R. Jayaraman (nrj1945@gmail.com).