தெய்வீக அன்னை

மாயம்மா

-சாந்திப்பிரியா-

(மேலே உள்ள இரு படங்களையும் இன்று (08 -10 -2018 )கன்யாகுமரியில் இருந்து அனுப்பியவர் திரு நாகராஜன் அவர்கள்.  அவருக்கு நன்றி)

பொதுவாக சாதுக்கள் மற்றும் சன்யாசிகளில் ஆண் மற்றும் பெண்  என இரு பிரிவினரும் உண்டு.  தெய்வீக அவதாரங்கள் மற்றும் ஆன்மீக குருமார்களிலும் இந்த இரு பிரிவினரும் உண்டு. நாம் வாழ்ந்து வரும் காலத்தில் வாழ்ந்தவர்களில் சீரடி சாயிபாபா, ரமண மகரிஷி, சேஷாத்திரி மஹான், காஞ்சி பரமாச்சார்யா, ராமகிருஷ்ண பரமஹம்சர், அரபிந்தோ, ஆனந்தமாயி மா, பாண்டி அரபிந்தோ அன்னை, காரைக்கால் அம்மையார், ராமலிங்க அடிகளார், உபாசினி மஹராஜ், ஸ்வாமி சமர்த், அன்னை சாரதா தேவி, சிவம்மா தாயீ  மற்றும் மாயம்மா போன்றவர்கள் மிக எளிய வாழ்க்கையில் வாழ்ந்து  லௌகீக மற்றும் உலக இன்பங்களை துறந்த நிலையில் வாழ்ந்தவர்கள். தம்மை நாடி வந்த பக்தர்களுக்கு அருள் செய்து, நன்மை செய்தவர்கள்.  அவர்கள் பல்வேறு நிலைகளில் வெளித் தெரியாமல் உண்மையான மாயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்தி தமது பக்தர்களுக்கு மட்டும் இல்லாமல் தம்மை தேடி வந்த பிற மக்களின் உண்மையான, நியாயமான வேண்டுகோட்களையும்  நிறைவேற்றித் தந்தவர்கள்.

பல வருடங்களாக என் மனதில் ஒரு பெண் சித்தர் அல்லது அவதூரரைக் குறித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. என் மனதில் அந்த விதை விழுந்ததில் காரணம் நான் பல வருடங்களுக்கு முன்னர் உத்தியோகத்தில் இருந்து ஒய்வு பெறுவதற்கு  ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் என் மனைவி மற்றும் ஒரு  நண்பரின் குடும்பத்துடன் ஹரித்துவாருக்கு சென்று இருந்தபோது அங்கு கண்ட ஆனந்தமாயி எனும் அன்னையின் அற்புதமான சமாதி ஸ்தலம்தான். அந்த சமாதி ஆலய விஜயம் என்னை அறியாமலேயே  என் மனதிற்கு மிக நிறைவாக அமைந்து இருந்தது. அந்த நினைவு இன்னமும் என் மனதில் பசுமையாக உள்ளது. அத்தனை அமைதி,  அத்தனை மன இன்பம் அங்கு கிடைத்தது. அதன் பின் அப்படிப்பட்ட ஆழ்ந்த மன அமைதி தரும்  தெய்வீக பெண்மணிகள், அல்லது பெண் சித்தர்கள் உள்ளனரா என பல வருடங்கள் யோஜனை செய்து பார்த்திருக்கின்றேன். அவர்களில்  அன்னை சாரதா தேவி, மாயம்மா  மற்றும் சிவம்மா தாயீ போன்ற உண்மையான தெய்வீக அன்னையினர்  என் மனதில் வந்தார்கள். அவர்கள் உண்மையான துறவற வாழ்வை மேற்கொண்டு இருந்துள்ளவர்கள். ஆடம்பரமான வாழ்வில் தம்மை இணைத்துக் கொள்ளாமல் வாழ்ந்திருந்தவர்கள்.   உலக சுகங்களில் தம்மை இணைத்துக் கொள்ளாமல் உண்மையான தெய்வீகத் தன்மை கொண்டிருந்தவர்கள் என்பதை முற்றிலும்   உணர முடிந்தது. 

சித்தர்கள் பலரும் தாம் யார் என்பதை எப்போதுமே அடையாளம் காட்டிக் கொள்ளவில்லை. அதனால்தான் அவர்களது பிறப்பு குறித்த வரலாறு மறைந்துள்ளது.  அந்த வகையில் சித்த புருஷரான ஷீர்டி சாயிபாபாவின் பூர்வீகம் இதுவரை வெளித் தெரியாமல் மர்மமாகவே இருந்து வருகின்றது. அதே போலத்தான் பெண் சித்தராக உலா வந்துள்ள தெய்வீக அவதாரமான, பராசக்தி மற்றும் கன்யாகுமரி அம்மன் எனக் கருதப்படும் மாயம்மாவும் ஒருவர் ஆவார்.  மாயம்மா குறித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே எனக்குள் எழுந்தது. அவருடைய சமாதி ஆலயத்துடன் தொடர்ப்பு கொண்டேன். அவர்கள் எனக்கு நான் எதிர்பார்த்த அளவிற்கான செய்திகளை தரவில்லை என்பதினால் மௌனமாகி விட்டேன். அதுவும் எதோ காரணத்தினால் இருந்திருக்கலாம். ஆனால் இந்த வருடம் செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் நான் திருமதி கீதா கணேஷ் எனும் ஆன்மீக நண்பருடன் பேசிக் கொண்டு இருக்கையில், அவர்  தனக்கு  மாயம்மா மீது அதிக ஈடுபாடு உண்டு என்பதை பேச்சுவாக்கில் குறிப்பிட்டபோது மீண்டும் என் மனதை  மாயம்மா ஆக்ரமித்துக் கொள்ள அதன் விளைவு  கட்டுரையும் எழுந்தது.  ஆகவே இந்த கட்டுரையின் புண்ணியம் திருமதி கீதா கணேஷ் அவர்களையே போய் சேரும்.

மாயம்மா யார் என்பது குறித்து அதிக  தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவர் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா எனும் ஆலயத்தில் இருந்து தேவி காமாக்கியா எனும் பராசக்தியாக வெளிவந்தார் என்பதாக பரவலான நம்பிக்கை உள்ளது. ஆனால் அவர் மக்களிடையே பிரபலமடைந்து  வெளித் தெரிய ஆரம்பித்தது  கன்யாகுமரி மாவட்டத்தில்தான். மாயம்மா எப்பொழுது அஸ்ஸாமில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தார் என்ற விவரமோ,  இல்லை அவர் எப்படி இங்கு வந்தார் என்பதோ எவருக்கும் தெரியவில்லை. அவருடைய பெற்றோர்கள் குறித்த  தகவலும் எவருக்கும் கிடைக்கவில்லை. இன்னொரு செய்தியின்படி, மாயம்மா அவர்கள் முன் பிறவியில் பெரிய சித்தராக இருந்து திபெத், நேபாளம்  மற்றும் காசி போன்ற இடங்களில் பல காலம் தவம் இருந்தப் பின் 1920 ஆம் ஆண்டு வாக்கில் கடைசி பிறப்பு எடுத்து கன்னியாகுமரிக்கு வந்து தவத்தில் இருந்தார் என்பதாக கூறப்படுகின்றது.

முதலில் அவர் சித்தர் என்பதோ அல்லது தெய்வீக அன்னை என்பதாகவோ யாருக்கும் தெரியாமல்தான் இருந்துள்ளது. பிச்சைக்காரி போல அழுக்கான, கிழிந்து இருந்த ஆடைகளுடன், அருவருப்பான வெளித்  தோற்றத்தில் கன்யாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலும் கடற்கரையில் அவர் உலவுவதை கவனித்து இருக்கின்றார்கள். அவருடன் எப்போதுமே பல நாய்கள் சுற்றிக் கொண்டே இருக்கும்.  கடற்கரையில் காலை, மாலை, இரவு என எந்நேரமும் படுத்துக் கிடப்பாராம். தாகம் பசி என எதுவுமே கிடையாதாம். யாராவது உணவு கொடுத்தால் உண்பாராம், இல்லை எனில் நாள்  கணக்கில் பட்டினியாகவே இருப்பாராம்.  தங்க வீடும் இருந்ததில்லை. எங்கு இருப்பாரோ அங்கேயே உறங்குவாராம்.  யாராவது உணவு கொடுத்தால் தேவை எனில் அதை பெற்றுக் கொண்டு உணவு  அருந்துவாராம். அப்படி உணவு அருந்தும்போது அவர் கூடவே என்றும் சுற்றிக் கொண்டு இருக்கும் நாய்களுக்கு  தனது உணவில் இருந்து சிறிது போடுவாராம். உணவு கிடைக்கவில்லை என்றால் சாப்பிடாமலேயே பல நாட்கள் பட்டினியாகவே இருப்பாராம். அதனால் அவர் சோர்வு அடைந்ததும்  இல்லை. எந்த சித்தர்களை சுற்றி நாய்கள் திரிந்து கொண்டே இருக்குமோ அவர்கள் கால பைரவரின் அவதாரங்கள், இல்லை என்றால் கால பைரவரின் சக்திகளை முழுமையாக கொண்டு  இருந்தவர்கள் என்பார்கள்.

பல நேரங்களில் அவர் கடற்கரையின் ஓரத்தில் உள்ள கடல் பாறைகள் மீது அமர்ந்த கொண்டு இருப்பதையும், கடலுக்குள் மூழ்கி கடல் பாசிகளையும், குப்பைகளையும் வெளியில் எடுத்து வந்து அவற்றை கடற்கரையில்  கொட்டி தீ மூட்டி விடுவதையும் மக்கள் பார்த்து உள்ளார்கள். எப்படி அவரால் வெறும் கையினால் தீ மூட்ட முடிந்தது என்பதோ  எதற்காக தீ மூட்டினார் என்பதோ யாருக்கும் புரியாமல் இருந்துள்ளது. ஆனால் சித்தர்கள் தாம் எங்கெங்கு தவத்தில் இருப்பார்களோ அங்கெல்லாம் தீ மூட்டி ஹோமம் வளர்த்து தவத்தில் இருந்துள்ளார்கள், எங்கெங்கு தவம் இருப்பார்களோ, அங்கெல்லாம் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பது உண்டு என்பதினால் ஒருவேளை அன்னை மாயம்மா கன்யாகுமரி கடற்கரையில் ஹோமம் வளர்த்து பாறைகள் மீது தவத்தில் இருந்திருக்கலாம் என்பதாகவே நினைக்கத்   தோன்றுகின்றது.  அதற்கான உண்மையான காரணம் தெய்வீக அன்னை மாயம்மாவுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு தெய்வம் என்பது அருவருப்பான, அகோர தோற்றத்தில் பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்க முடியுமா? அதற்கும் ஒரு பின்னணி  கதையைக் கூறுகின்றார்கள். காமாக்யா ஆலயத்தில் இருந்து வெளிவந்த மாயம்மா முதலில் அழகிய தோற்றம் கொண்டவராக இருந்தாராம். ஆனால் கன்னியாகுமரியின் சில இடங்களில் பெண் பித்தர்கள் அனாதைபோல  சுற்றிக் கொண்டு இருந்த அவளிடம் தவறாக நடக்க முனைந்தபோது அவர் தன்னுடைய தோற்றத்தை ஒரே நாளிலேயே அகோரமாக மாற்றிக் கொண்டாராம். அதனால்தான் அவர் பிச்சைக்காரியைப் போன்ற தோற்றத்தில் காட்சி அளித்து வந்தாராம். தனது உருவத்தை இப்படி எல்லாம்  நினைத்தபடி மாற்றிக் கொள்ள முடியுமா என யாரும் நினைக்கலாம்.  அது முற்றிலும் முடியும் என்பதே  பதில் ஆகும். தத்தாத்திரேயர் சரித்திரத்தைப் படிப்பவர்கள் அவர் வேண்டும் என்றே பிச்சைக்காரரைப் போன்ற தோற்றத்தில் உலவி வந்ததையும், மொடாக் குடிகாரனைப் போல உருவை மாற்றிக் கொண்டு இறைச்சிகளை உண்டபடி இருந்து கொண்டு  காட்சி அளித்து வந்ததையும், ஆனாலும் அவரை முழுவதுமாக புரிந்து கொண்டு அதே கோலத்தில் சுற்றித் திரிந்தவரை தொடர்ந்து சென்று வணங்கி வந்த உண்மையான மக்களுக்கு தன்னுடைய தெய்வ அவதாரத்தைக்  காட்டி காட்சி அளித்து உள்ளதையும் அவர் சரித்திரத்தில் படித்து இருக்கலாம். அதே  போலவேதான் உண்மையான பராசக்தி மாயம்மாவும் முற்றிலும் அலங்கோலமான  காட்சியில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டாலும், அவரிடம் சரணடைந்த, உண்மையான ஆன்மீக பக்தர்களுக்கு அவர் பராசக்தியாகவே தோற்றமும் தந்து உள்ளார் என்பதும் உண்மையே.  இன்னும் சிலர் அவரை கன்யாகுமரி அம்மன் என்றும், மஹாலக்ஷ்மியே அவர் என்றும் கூறி உள்ளார்கள். அந்த இரு தெய்வங்களும் அன்னை பராசக்தியின் தெய்வீகக் கதிர்களில் இருந்து வெளிவந்த அவதாரங்கள் என்பதினால் தேவி பராசக்தியும் அவர்களும் ஒருவரே ஆகும்.

மாயம்மாவின் தெய்வீக சக்தி வெளித் தெரிந்த கதை தனியானது. கன்யாகுமரி  கடற்கரையில் சுற்றிக் கொண்டு இருந்தவரை, அருவருப்பான கோலத்தில், கிழிந்த மற்றும் அழுக்கான துணிமணிகளை அணிந்து கொண்டு சுற்றித் தெரிந்த அவரை முதலில் ஒரு பைத்தியக்கார பிச்சைக்காரி என்றே அனைவரும் நினைத்து வந்தார்கள். அவள் யாராவது ஒருவர் அருகில் சென்றாலே அவர்கள் அவளை விட்டு விலகிச் செல்வார்களாம். அவர் ஒரு மாபெரும் சித்த புருஷினி என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர் கன்னியாகுமரிக்கு  1920 ஆம் ஆண்டுவாக்கில் வந்திருக்க வேண்டும் என்று நம்பப்படும் அந்த காலகட்டத்தில்தான் அவரை  முதலில் பெரும்பாலும் மீனவர்கள் பார்த்து இருக்கின்றார்கள், 1925 ஆம் ஆண்டு வாக்கில்தான் அவள் புகழும் கன்யாகுமரியில் பரவலாயிற்று என்று கூறுகின்றார்கள்.

ஒரு நாள் வெளியூரில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஊர்தி ஒன்று தெருவில் சென்று கொண்டிருந்த ஒரு நாய் மீது வண்டியை ஏற்றிவிட்டு சென்று விட்டது. நாயின் வயிறு கிழிந்து குடல் வெளியே வந்து சரிந்து விழுந்திருக்க, அதன் துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல், சாலையில் விழுந்து கிடந்த அந்த நாயை கண்ட மக்கள் முகம் சுளித்தார்கள். அதற்கு உதவி செய்ய அதன் அருகில் செல்லவே இல்லை. அப்போது அந்த பக்கமாக நடந்து சென்று கொண்டு இருந்த மாயம்மா எந்த விதமான சலனத்தையும் வெளிக் காட்டாமல்  மெல்ல நடந்து சென்று இறந்து விட்டதை போல கிடந்த அந்த நாயை  எடுத்து தனது மடியிலே  வைத்துக் கொண்டு  அதன் குடலை அதன் வயிற்றுக்குள்  தள்ளிவிட்டு சாலையில் கிடந்த மெல்லிய குச்சிகளை கிழிந்த பகுதியை சேர்த்து தையல் போடுவது போல அதன்  உடலில் செருகி வைத்தாள். கையில் சிறு பிடி மணலை எடுத்து அதை தடவிக் கொடுக்கலானாள்.  அதைக் கண்ட மக்கள் அருவருப்பான நிலையில், குடல் வெளியே வந்து விழுந்திருந்த இறந்த நாயை மடியிலே வைத்துக் கொண்டு  தடவிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறாளே பைத்தியக்காரி என அருவருப்பாக பார்த்துக் கொண்டே சென்றார்கள். எதையும் சட்டை செய்யாமல் மாயம்மா அதே சாலையின் ஓரத்தில் அந்த நாயை வைத்து விட்டுச் சென்றாள். இறந்து போக இருந்த நாயும் அங்கேயே கிடந்தது.

என்ன ஆச்சர்யம் மறு நாள் காலையில் இறந்து கிடந்த அந்த நாய் கண்களை திறந்து பார்த்தது,  காதுகளை அசைத்தது.  அதன் பின் அது எழுந்து ஓடலாயிற்று. அதைக் கண்ட மக்கள் அதிர்ந்து நின்றார்கள். குடல் வெளியில் வந்து சிதைந்து கிடந்த உடலில் காயம் பட்ட வடு கூட காணவில்லை. இதென்ன மாயம் ? குடல் சரிந்து  இறந்து கிடந்த அதே நாய் உயிர் பெற்று  ஓடுகின்றதே என்பதைக் கண்ட  மக்கள் அவள் எதோ தெய்வ சக்தி கொண்ட பெண்மணி என்பதாக புரிந்து கொண்டு  அவளை கனிவோடு  பார்த்தார்கள். மெல்ல மெல்ல அவள் யார் என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்தார்கள், கன்யாகுமரி கடற்கரையிலே உலவி வந்திருந்த மாயம்மா  கடல் மீது நடந்து செல்வதைக் கண்டார்கள்.  தரை மீது நடப்பது போல கடல் மீதும் நடந்து  சென்று விட்டு கடல் நடுவே சற்று நேரம் இருந்துவிட்டு  திரும்புவதைக்  கண்ட மக்கள் நிச்சயம் அவள் தெய்வீக பெண்மணியே என்பதை உணரலானார்கள்.  அது முதல் கன்யாகுமரி மக்கள் மாயம்மாவை மரியாதையோடு நடத்தி நல்ல உணவும்   தந்தார்கள். தங்கி கொள்ள ஒரு இடமும் தந்தார்கள் என்றாலும் அவர் எங்கும் நிரந்தரமாக தங்கவில்லை.  கன்யாகுமரி கடற்கரை அருகில் உள்ள கடைவீதியில்  இருந்த ஒரு பிள்ளையார் கோவிலில் வெளி தாவாரத்தில்தான் அவர் இரவில் தங்கி இருப்பாராம். ஒரு விதத்தில் பார்த்தால் அந்த அன்னை கடல் நீரின் மீதே வாழ்ந்திருக்கின்றாள் என்பதாகவே கருதுகின்றார்கள்.

வீதியிலே நடந்து கொண்டே இருப்பவர் திடீர் என ஏதாவது உணவகத்திலோ அல்லது கடையிலோ சென்று உணவு கேட்டு எடுத்துக் கொள்வாராம். தன்னை கூப்பிட்டால் அந்த கடைக்கு அவர் செல்ல மாட்டாராம்.  தான் எந்த கடையை விரும்புவாரோ அந்தக் கடையில்தான் நுழைவாராம்.  அன்று முதல் அவருக்கு உணவு தந்தவர்கள் கடையில்  அமோகமாக விற்பனை ஆகும். ஆகவே கடைக்காரர்கள்  தமது கடையில் அன்னை நுழைய மாட்டாரா என வேண்டிக் கொண்டு தவம் இருப்பார்களாம். தனக்கு கிடைக்கும் உணவில்  சிறிது கையில் எடுத்துக் கொண்டு திடீர் நாய்களுக்கு ஊட்டி விட்ட பின், அதே கையுடன் சுற்றி உள்ளாவார்களுக்கும் வாயில் ஊட்டி விடுவாராம். அதை அறுவறுப்பாக பார்த்த சிலர் விலகிச் சென்றார்கள் என்றாலும், அதை பெற்றுக் கொள்வதை பாக்கியமாகவே பல மக்கள் கருதினார்கள். ஆனால் தினமும் அதை மாயம்மா செய்தது  இல்லை. அவருக்கு என்று தோன்றுமோ அன்றைய தினத்தில் மட்டுமே அதை செய்வாராம்.  

அது மட்டுமா? மீனவர்கள் அதிகம் வாழ்ந்த அந்த ஊர் மக்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்வார்கள். திடீர் திடீர் என கடலில் சீற்றங்கள் ஏற்பட்டபோதெல்லாம் கடலில் விழுந்து தத்தளிக்கும் அவர்களை வெளியே இழுத்து வந்து கரையில் சேர்ப்பாளாம்  மாயம்மா. பல மீனவர்ளுக்கும் இந்த அனுபவம் ஏற்பட அவையும் வெளியிலே தெரியத்  துவங்கியது.  கடலுக்குள் சுமார் 35 அல்லது 40 கிலோமீட்டர்வரை உள்ளே சென்று மீன் பிடிக்க வந்திருக்கும் படகுகளின் நடுவே நீச்சல் அடித்துக் கொண்டு இருப்பாராம். அந்த நிலையில்  கொந்தளிக்கும் கடலில் நீந்திக் கொண்டு இருக்கும் அவளை பார்த்து பரிதவிக்கும் மீனவர்கள் தங்கள் படகில் ஏறிக்கொண்டு கரைக்கு வருமாறு அழைத்தாலும் மாயம்மா அதில் ஏறிக்  கொள்ள மாட்டாராம்.  மீன் பிடித்த பின் படகுகள் கரைக்கு திரும்பும்போது அவர்களுடன் நீந்தியபடியே கரைக்கு திரும்பும் மாயம்மா திடீர் என  நீருக்குள் சென்று மறைந்து விடுவாராம். அவளைக் காணாமல் மூழ்கி விட்டாரோ என பயந்தபடி, பரிதவித்துக் கொண்டு கரைக்கு திரும்பினால் மாயம்மா அங்கு கரையில் சிரித்தபடி அமர்ந்து இருப்பாராம்.

மெல்ல மெல்ல உள்ளூர் ஜனங்கள் அவளை பக்தியுடன் வணங்கினார்கள். ஆனால் அவளோ அவர்களுடன் ஒரு தோழமையோடுதான் பழகி இருந்திருக்கின்றார். பலரது தீராத வியாதிகளும் துயரங்களும் மாயம்மாவினால் விலகி உள்ளன. இத்தனைக்கும் மாயம்மா பேசியது இல்லை. ஒலி ஓசை போன்றவற்றை வாயினால் எழுப்பி அதன் மூலமே மாயம்மா தமது மாயங்களை வெளிக்காட்டி உள்ளார். மெல்ல மெல்ல மாயம்மா தெய்வமே என்பதை உணர்த்திய பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.  தமக்கு துன்பங்களும் துயரங்களும் ஏற்பட்டபோதெல்லாம் அவளிடம் சென்று அதைக் கூற அவர்களை வெறும் கையாலேயே ஆசீர்வதிப்பார் மாயம்மா. பலரது நியாயமான துன்பங்களும் துயரங்களும்  தீரலாயின.

1970 ஆம் ஆண்டு வாக்கில் மாயம்மா கன்யாகுமரியில் இருந்தபோது, தன்னையே அறியாமல், மாயம்மா ஒரு தெய்வப் பிறவியாகவே இருக்க வேண்டும் என்ற எதோ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதினால் அவரை தொடர்ந்து கண்காணித்தபடி திரு ராஜேந்திரன் எனும் அன்பர் ஒருவர் இருந்துள்ளார்.  மாயம்மா கடற்கரை மணலில் வெய்யில், காற்று, மழை என எதையும் பொருட்படுத்தாமல்  படுத்துக் கிடப்பதையும், தண்ணீர் அருந்தாமல் மற்றும் உணவு கூட உண்ணாமல் பல நாட்கள் பட்டினியாக இருந்ததையும், அடிக்கடி நீரில் சென்று நீச்சல் அடித்துக் கொண்டு இருப்பதையும் கண்டார். அவரை சுற்றி எந்நேரமும் பல நாய்கள் சுற்றித் திரிந்ததையும்  கண்டார்.  தனக்கு கிடைக்கும் உணவில் அவற்றுக்கும் உணவு போட்டபின் மாயம்மா உணவு  உண்பதைக் கண்டார்.  மாயம்மாவை சந்தித்துவிட்டு சென்ற பலரையும் கவனித்தார். ஆகவே அவர் பிச்சைக்காரியாக இருக்க முடியாது என்பதை மனதார உணர்ந்தார். எதோ தெய்வ சக்தி கொண்டிருக்க வேண்டும் என நினைத்தார். திரு ராஜேந்திரன் எனும் அந்த அன்பர்  துவக்கத்தில் வடலூர் வள்ளலாளர் ஸ்வாமிகளின் பக்தராக இருந்தவர். 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மாபெரும் துறவியான வடலூர் வள்ளலாளர் ஸ்வாமிகள்  இறைவன் தீபத்தின் ஒளி வடிவமானவர் என்ற தத்துவத்தை போதனை செய்தவர். தீப ஒளி விளக்கை வழிபடுமாறு கூறியவர். அவர் சிறுவயதில் ஒரு ஆலயத்தில் பண்டிதர் தீபாராதனை செய்தபோது, அந்த விளக்கின் ஒளியில் ஞானம் பெற்றவர். அவர் மறைவும் அசாதாரணமானது. பூட்டிய அறைக்குள் இருந்தவர் அப்படியே காற்றில் கரைந்து  சமாதி அடைந்தார். அவரையே தமது குருவாகக் கருதிய திரு ராஜேந்திரன் ஆன்மீக வழியில் நாட்டம் கொண்டு குடும்ப வாழ்வில் அக்கரை  காட்டாமல் ஒதுங்கி இருந்தார்.  அவர் ஒருமுறை யாரோ ஒருவர் கன்யாகுமரியில் ஒரு குரு இருக்கின்றார் என்று பேசிக் கொண்டு இருந்ததைக் கேட்டு அங்கு செல்ல நினைத்தார். அதற்கு ஏற்றார் போலவே அவருக்கு 1970 ஆம் ஆண்டு கன்யாகுமரியில் வேலைக்கு கிடைத்து அங்கு சென்றார். அங்கு சென்றதும்தான் கடற்கரையில் மாயம்மாவை பார்த்து இருக்கின்றார்.  மாயம்மா எங்கு சென்றாலும் அவர் அவரை பின் தொடர்ந்து சென்று அவருக்கு பணிவிடைகள் செய்யலானார். இப்படியாக சுமார் 13 வருடங்கள் மாயம்மாவை பின் தொடர்ந்து சென்று அவருக்கு பணிவிடைகளை செய்தபடி இருந்தவர் சில காலத்திலேயே அவர் அவருடைய தீவிரமான சிஷ்யர் ஆகி விட்டார். அவரே  மாயம்மாவை சேலத்துக்கு அழைத்து வந்தவர். மாயம்மா இறுதிவரை வாழ்ந்திருந்தபோது அவருக்கு பணிவிடை செய்து வந்தவர், மாயம்மாவின் ஆஸ்ரமத்தை அங்கு எழுப்பி அங்கேயே தங்கி உள்ளவர் திரு ராஜேந்திரன்.

மாயம்மா கன்யாகுமரியில் வாழ்ந்து கொண்டு இருக்கையில் அவரைத் தேடி பல மெய்ஞானிகளும், மகான்களும் அங்கு வந்துள்ளார்களாம்.  1980 ஆம் ஆண்டு வாக்கில் மாயம்மா தெய்வீக பிறவி என்ற செய்திகள் அந்த காலத்தில் பிரபலமாக இருந்திருந்த பூண்டி மஹா ஸ்வாமிகள், கோடி ஸ்வாமிகள், குத்தாலம் மௌன ஸ்வாமிகள், காசவனப்பட்டி மௌன ஜ்யோதி ஸ்வாமிகள், திருக்கோவிலூர் ஞானானந்த கிரி ஸ்வாமிகள், மருத்துவா  மலை நயினார் ஸ்வாமிகள் மற்றும் யோகி ராம் சூரத் குமார் ஸ்வாமிகள்  போன்றவர்கள் மூலம் பல பக்தர்களுக்கும் தெரியத்  துவங்கின. அவர்கள் அனைவருமே மாயம்மாவை போற்றித்  துதித்துள்ளதாக செய்திகள் உள்ளன. அது மட்டும் அல்ல முன்னாள் பிரதமர், ஜனாதிபதி மட்டும்  ஆன்மீகத்திலும், பிற துறைகளிலும் இருந்த பல பிரபலமான நபர்கள் மாயம்மாவின் பக்தர்களாக இருந்துள்ளார்கள். கன்யாகுமரியில் மாயம்மா இருந்தபோது அவரை பலமுறை அங்கு சென்று தரிசனம் பெற்று வணங்கி ஆசி பெற்று வந்துள்ளார்கள். பூண்டி ஸ்வாமிகள் தமது பக்தர்களிடம் மாயம்மாவை கன்யாகுமரி அம்மனை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள் என்று கூறி அவரிடம் அனுப்புவாராம்.  அதே போல  ஞானானந்த கிரி  ஸ்வாமிகளும் தமது பக்தர்களிடம் மாயம்மா வாழும் பராசக்தி என்று கூறி அவரிடம் ஆசி பெறுமாறு அனுப்புவதுண்டாம். திருக்கோவிலூர் ஞானானந்த கிரி ஸ்வாமிகள், பூண்டி மஹான், யோகிராம் சூரத் குமார் ஸ்வாமிகள் போன்றவர்கள் தமது பக்தர்கள் சிலரை மாயம்மாவின் ஆசி பெற்றுக் கொண்டு வருமாறு அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்களாம்.  அவர்களே மாயம்மாவைக் குறித்து பலருக்கும் தெரியப்படுத்தி வந்துள்ளார்கள். மாயம்மாவின் வயதைக் குறிப்பிடுகையில் பூண்டி ஸ்வாமிகள் அவருடைய வயது 470 முதல் 485  ஆண்டுகள் எனக் கூறினாலும், பல ஆன்மீக குருமார்கள் பொதுவாக நம்பியது அவர் 300 ஆண்டுகளைக் கடந்தவர் என்பதே.

ஆனால் என்ன காரணத்தினாலோ மாயம்மாவின் பெருமை பரவலாக விளம்பர படுத்தப்படவில்லை. அதை மாயம்மா விரும்பியதும் இல்லை. சில வருடங்கள் கடந்தன. மாயம்மா கன்னியாகுமரியின்  நடமாடும் தெய்வமாகவே இருந்திருக்கிறாள். ஒரு நாள் அந்த ஊரில் இருந்த மாயம்மாவைக் காணவில்லை. அந்த அம்மையார்  திரு ராஜேந்திரனுடன் சேலத்துக்கு சென்று அங்கேயே தங்கி விட்டதான தகவல் மட்டும் கிடைத்தது.  ஆனாலும் சேலத்தில் தங்கி இருந்த மாயம்மா கன்னியாகுமரியின் பல பாகங்களில்  அவ்வப்போது தென்பட்டு வந்துள்ளார். பக்தர்களுக்கு தரிசனமும் தந்து உள்ளார். அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார்.

ஒருமுறை ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் பெண் பக்தை ஒருவர் தனக்கு பராசக்தியின் தரிசனம் கிடைக்க வேண்டும்  என்ற தமது ஆசையை தெரிவித்து அதற்கு என்ன செய்யலாம் எனக் கேட்டாராம். உடனே ஞானானந்த கிரி ஸ்வாமிகள் அவரை கன்யாகுமரி சென்று அங்குள்ள ஆலயங்களை தரிசிக்குமாறும் அங்கு அவளுக்கு பிராப்தம் இருந்தால் பராசக்தியின் நேரடி தரிசனம் கிடைக்கும் என்று கூறி அனுப்பினாராம்.

அந்த பெண்மணியும் கன்னியாகுமரிக்கு சென்று சில நாட்கள் தங்கி இருந்து பல ஆலயங்களுக்கும் சென்று உள்ளார். ஆனாலும் அவருக்கு பராசக்தி தரிசனம் கிடைத்த மனதிருப்தி ஏற்படவில்லை என்பதினால் மீண்டும் ஞானானந்த கிரி ஸ்வாமிகள் அவர்களை சந்தித்து, ‘ஸ்வாமி நானும் நீங்கள் கூறி இருந்தபடி பல ஆலயங்களுக்கும் சென்றேன், ஆனால் எனக்கு பராசக்தியின் தரிசனம் கிடக்கவில்லையே எனக் கூறி வருத்தப்பட்டாளாம். அதைக் கேட்ட  ஸ்வாமிகளோ ‘அம்மணி நீ நேராக பராசக்தியின் தரிசனத்தைப் பெற்றாய். உனக்கு அந்த பராசக்தியே உணவை வாயில் ஊட்டி விட வந்தார். ஆனால் நீதான் பெற்றுக் கொள்ளாமல் இருந்து விட்டாய். உனக்கு பராசக்தியின் தரிசனம் கிடைத்தும் அதை உணர முடியாமல் போனது உனக்கு பராசக்தியின் அருள் பெறும்  பிராப்தம் இல்லை என்பதே காரணம்’ என்று கூறினாராம்.

அதைக் கேட்ட பெண்மணி திகைத்துப்  நின்ற பின் சற்று நேரம் நிதானமாக யோஜனை செய்தபோது கன்யாகுமரியில் அவளுக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் நினைவில் வந்ததாம். ஆலயங்களுக்கு சென்று விட்டு  கன்யாகுமரி கடற்கரையில்  நின்று கொண்டு இருந்தபோது அழுக்கான உடையில் இருந்த மாயம்மா தன்  கையில் இருந்த உணவை எடுத்து அங்கிருந்த நாய்களுக்கும் நின்றிருந்த மற்றவர்களுக்கும் வாயில் சிறிது ஊட்டி விட்டாராம். இந்த பெண்மணிக்கு வாயில் ஊட்ட வந்தபோது அருவருப்பாக உள்ள யாரோ ஒருவள் எல்லோருக்கும் வாயில் ஊட்டி விட்ட உணவை நமக்கும் தருகிறாளே  என முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து சென்று  விட்டாராம்.  அந்த சம்பவம் நினைவுக்கு வர ஸ்வாமிகளிடம் சென்று தனக்கு கிடைக்க இருந்த நன்மையை தானே கெடுத்துக் கொண்டு விட்டேனே என வேதனைப்பட்டாராம். ஸ்வாமிகள் அந்த அம்மையாரிடம் மாயம்மா பராசக்தியின் வடிவமான கன்யாகுமரி அம்மனே என்று கூறினாராம். 

இன்றைக்கும் கன்யாகுமரி மாவட்டத்தில் காணி மடம் எனும் இடத்தில் மாபெரும் தபஸ்வியாக  உள்ளவர் திரு பொன்  காமராஜர் என்பவர். சட்டத்  தொழிலில் இருந்திருக்க வேண்டியவர். ஆனால் மாயம்மா அவரை யோகிராம் குமார் சூரத் அவர்களிடம் சென்று பணி புரியும் வகையில் அவர் வாழ்க்கையை மாற்றி அமைத்து விட்டாராம்.  அவருக்கு ஒருமுறை பெரிய கட்டி ஒன்று தொடையில் வந்து அவரை வாட்டியது. மருத்துவர்கள் கைவிட்டு விட்டார்கள். அவருடைய ஆயுளும் ஏழு நாட்கள்தான் இருக்கும் என்ற உணர்வையும் தந்திருந்தார்கள். ஆனால் யாரோ சொல்லி அவர் மாயம்மாவிடம் செல்ல மாயம்மா அவர் தொடையில் பழுக்கக் காய்ச்சிய கம்பியை ஒரு முனையில் குத்தி மறுபுறத்தில் அதை எடுத்து விட அலறியபடியே மயக்கம் அடைந்து விட்டாராம். நோயும்  அதிசயமாக குணமாகி விட்டதாம். அதன் பின் அவரை வழக்கறிஞ்சர் தொழிலை துறந்து விட்டு, மன அமைதியும், நிம்மதியையும் கொடுத்து கடவுளுடன் நேரடி தொடர்ப்பு கொள்ளும் ஆன்மீக போதனா வழிமுறைகளை கற்றறியுமாறு கூறி  ஆன்மீக குருவான யோகிராம் குமார் சூரத் அவர்களிடம்  மாயம்மா அனுப்பி விட, தபஸ்வி பொன் காமராஜர் அவர்களும் ஆன்மீக போதனைகளை பெற்று தபஸ்வியாக மாறிவிட்டார். அவர் இன்று கன்யாகுமரி மாவட்டத்தில் காணி மேடம் எனும் இடத்தில் உள்ள யோகிராம் குமார் சூரத் ஆலயத்தை நிர்வாகித்து வருகிறாராம். திரு பொன் காமராஜ் அவர்களுக்கு மாயம்மா தேவி பராசக்தி உருவத்தில்  விஸ்வரூப தரிசனம் தந்துள்ளாராம்.

உச்சநீதிமன்றத்தில்  சட்ட வல்லுனராக உள்ள  திரு சுந்தரம் எனும் சட்ட வல்லுநர் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி ஒன்பதாம்  தேதி சேலத்திற்கு   வந்து மாயம்மாவின் குரு பூஜையில் கடந்த 23  வருடங்களாக கலந்து கொள்கிறாராம்.  இந்த பூஜையில் கலந்து கொண்டு மறுநாள் தியானம் செய்யும் போது அவருக்கு வினோத ஒளி மற்றும் அமானுஷ்ய ஒலி செய்கைகள் மூலம் மாயம்மா  அவருடைய வாழ்வில் அடுத்த ஒரு வருடத்தில் என்னென்ன நிகழ்வுகள் நடக்க உள்ளது என்பதை சூசகமாகக் எடுத்துக் கூறி அவரை வழி நடத்தி வருகிறாராம். நித்தம் நித்தம்  சண்டை மற்றும் சச்சரவுகள்  என முன்னர் வாழ்ந்திருந்த தறிகெட்ட வாழ்க்கையில் இருந்து விலகி இன்று ஒரு அமைதியான வாழ்க்கையில் இருக்கின்றார் என்றால் அதன் காரணம் மாயம்மாவின் வழிகாட்டுதல்தான் என்று மனதாரக் கூறுகின்றார் அந்த அன்பர்.  அதேபோலவேதான் முன்னர் பல குழப்பங்களுடன் வாழ்ந்து வந்திருந்த  சபரிநாதன் எனும் பக்தர் இன்றும் மாயம்மாவின் சமாதிக்கு வந்து தியானம் செய்து  தியானத்தில் இருக்கும்போது கிடைக்கும் மாயம்மாவின் அமானுஷ்ய ஒளி மற்றும் ஒலி  மூலம் தனது வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை அடைந்து மன நிம்மதியுடன் வாழ்வதாகக் கூறி உள்ளார்.

பகவான் தத்தாத்திரேயரின் அவதாரம் எனக் கருதப்படும் பகவான் சீரடி சாயிபாபா மட்டுமே கண்ட யோகம் என்ற யோகக் கலையை கடைப்பிடித்து வந்ததாக படித்து உள்ளோம். பகவான் தத்தாத்திரேயரே யோகக் கலைகளின் குரு என்பார்கள். கண்ட யோகம் என்பது உடலின் அனைத்து பாகங்களையும் தனித்தனியே பிரித்து எடுத்து பல இடங்களில் வைத்திருந்த பின் மீண்டும் அணிவதாகும். அதன் தாத்பர்யம் என்ன என்றால் பல பிறப்புகளிலும் சில காரணங்களுக்காக உடலை விட்டு வெளியேறி விட்ட ஆத்மாவுடன் சிறு அளவில் ஒட்டிக் கொண்டே ஒருவரை தொடர்ந்து கொண்டு வந்திருந்த ஆசை மற்றும் பாசங்கள் அனைத்தையும் அவ்வப்போது அழித்து விட வேண்டும். அப்போதுதான் அந்த ஆத்மா மீண்டும் வெளியேறும்போது  கடைசி ஜென்ம ஆசாபாசங்கள் அவற்றுடன் ஒட்டிக்கொள்ளாமல் அந்த ஆத்மாவிற்கு மோட்ஷம் கிடைக்கும்   என்பதே ஆகும். தச மஹாவித்யா எனப்படும் ஆன்மீக மார்க முறையில் ஞானம் பெறும் பத்து தேவிகளில் ஒருவரான சின்னமஸ்தா எனும் தேவியின் அவதார கோலமும் கண்ட யோகத்தை ஓரளவு பிரதிபலிக்கின்றது. அனைவராலும் கடைபிடிக்க முடியாத அந்த யோகக் கலையை மாயம்மாவும் செய்து வந்ததாக சிலர் தெரிவிக்கின்றார்கள். இதில் இருந்தே மாயம்மா பராசக்தியின் அவதாரமாக இருந்துள்ளார் என்பது விளங்கும்.

மாயம்மா ஜீவ சமாதி அடைய வேண்டும் என்ற எண்ணத்தை 1986 ஆம் ஆண்டிலேயே திரு ராஜேந்திரனிடம் எடுத்துக் கூறி, எங்கு ஜீவ சமாதி அடைய வேண்டும் என்ற இடத்தையும் கூறினார். ஆகவே அந்த இடம் இருந்த சேலத்திற்கு திரு ராஜேந்திரன்  மாயம்மாவை அழைத்து வந்தார்.  மாயம்மா கூறி இருந்த இடமோ பொட்டைக் காடாக இருந்தது. ஆனாலும் மாயம்மா கூறிய குறிப்பிட்ட இடத்தின் மரத்தடியில் ஒரு குடிசைப் போட்டு தங்கி இருந்தார்கள். அப்போதெல்லாம் மாயம்மாவைப் பார்க்க அங்கிருந்தும், இங்கிருந்தும் பக்தர்கள் சிறிய அளவில் வந்து கொண்டுதான் இருந்தார்களாம். பலருக்கும் மாயம்மா சேலத்திற்கு வந்தது பிடிக்கவில்லை. ஏன் எனில் வருடா வருடம் தவறாமல் பெய்யும் மழை ஒரு சொட்டு கூட மாயம்மா வந்த ஆண்டில் பெய்யவில்லை. தெய்வம் என்பவள் இங்கு வந்த பின் மழை கூட பெய்யாமல் பூமி வறண்டு விட்டது. ஆகவே அவளை மறுநாள் இங்கிருந்து துரத்த வேண்டும் என ஊர் மக்கள் பேசிக்கொண்டதை திரு ராஜேந்திரன் கேட்டுவிட்டு  மாயம்மாவிடம் அதைக் கூறி வருந்தினாராம். அதைக் கேட்ட மாயம்மா ஒன்றுமே கூறவில்லை. அன்று இரவு எங்கிருந்து வந்ததோ மழை மேகங்கள் எனது தெரியாத அளவில் மழை கொட்டி ஏரிகள், குளங்கள் என அனைத்தும் நிரம்பியது. அடுத்த ஆண்டுவரைத் தேவையான தண்ணீர் நிரம்ப மாயம்மாவைக் குறை  கூறியவர்கள் மனம் வருந்தி அவளிடம் சென்று மன்னிப்பு கோரினார்கள். மெல்ல மெல்ல சேலத்தை  சேர்ந்த இன்னும் சிலரும் மாயம்மாவிற்கு பணிவிடை செய்ய அங்கு வந்து போய் கொண்டு இருந்தார்கள்.

ஒருநாள் ஆறு அன்பர்கள் பாண்டிச்சேரியில் இருந்து அம்மாவைப் பார்க்க அங்கு வந்தார்கள். அவர்களில் ஒருவர் எதோ தீராத வியாதியினால் பீடிக்கப்பட்டு இருந்தவர். அவர்கள் மாயம்மாவை கண்டதும் விழுந்து வணங்கி விட்டு எழுந்திருக்க அவர்களை அவர் தனது கையால் வருடி விட்டாராம். ஆனால் அதில் வியாதி வந்திருந்த பெண்மணியை அவர் தொடக் கூட இல்லை. அன்னையின் கால்களில் விழுந்து வணங்கிய பெண்மணி திடீர் என அவர் தொடையில் முகத்தை வைத்துக் கொண்டு விக்கி விக்கி அழைத்த துவங்கினாள்.  ஆனாலும்  மாயம்மா அவளை தொடக்க கூட இல்லை. அவளை விலக்கி  விட முயற்சிப்பது போல பாவனை செய்து ஆஹ், ஊ எனக் கத்தினாராம்.  மாயம்மா யாருடனும் பேசுவதில்லை. அனைத்தும் செய்கை மூலமே காட்டுவார்.  இதனால் அவள் கத்திக் கொண்டு இருந்ததைக் கண்ட எல்லோரும் பிரமித்து நிற்கையில்  அடுத்த சில வினாடி மாயம்மாவின் முகத்தில் புன்னகை. சிரித்தபடி அந்த பெண்மணியின் தலையை வருடிவிட்டு  எழுப்பினாராம். அந்த பெண்மணிக்கு மருத்துவர்களாலும்  தீர்க்க முடியாத நோய்  இருந்துள்ளது. மருத்துவர்கள் கைவிட்டு விட்டார்களாம்.   மாயம்மாவை சென்று அவரது அருளை பெற்றுக் கொண்டால் நோய்  தீரும் என்று அவருக்கு கூறப்பட்டு இருந்துள்ளது.  அதனால்தான் அவர்கள் மாயம்மாவை வந்து சந்தித்து உள்ளார்கள். அதன் பின் மன நிறைவோடு வீடு திரும்பினார்கள். அந்த பெண்மணி முற்றிலும் குணம் அடைந்து விட்ட தகவல் பின்னர் கிடைத்தது.

மாயம்மா சேலத்தில் வந்தவுடன் அவருக்கு அங்கு வந்து சேவை செய்து கொண்டிருந்த பெண்மணிகளின் ஒருவர் லதா மங்கேஷ்கர் என்பவர். அவர் திருச்சியில் ஆசிரியையாக இருந்தவர்.  அங்கிருந்து வந்து சேலத்தில் தங்கி மாயம்மாவிற்கு பணி  புரிந்து வந்தவரே மாயம்மா ஜீவ சமாதி அடைந்ததும், அன்று இரவு முழுவதும் அவரது உடலுக்கு அருகிலேயே அமர்ந்து இருந்தவர். அவர் மெய் சிலிர்க்கக் கூறினாராம் ‘உட்கார்ந்த நிலையில் வைக்கப்பட்டு இருந்த  உடலின் அருகில் இரவு முழுவதும் நான்   அமர்ந்து இருந்தேன். திடீர் திடீர் என அம்மாவின் உடலில் இருந்து வியர்வை வழிந்தோடும். அதை இரவு முழுவதும் தூங்காமல் இருந்து  துடைத்து விட்டேன். நிறைய துணிகள் ஈரமாகி, அம்மாவின் தலையாணி கூட ஈரமாகிவிட்டது. கைகளில் வழிந்த நீரை துடைக்கையில் அம்மா கையை தூக்குகின்றீர்களா என மனதில் கூறிக்கொண்டே கையை தூக்கினால்  அது நான் நினைத்தபடியே கையை தூக்கியது. அம்மாவின் உடல் இறந்தவர்கள் போல விறைத்து இருக்கவில்லை. உயிருள்ள உடலைப் போலவே அசைந்து கொண்டிருந்தது. ஆகவே அம்மா உயிரோடுதான் சமாதி அடைந்து இருக்க வேண்டும். சமாதியில் வைத்து மூடிய பின் அங்கேயே அம்மா அவர்கள் எனக்கு பளீர் எனும் ஒளி வெளிவந்ததை போல ஒரு பெரும் ஒளி வெள்ளமாக காட்சி கொடுத்தார்’.   மாயம்மா அவர்கள்  09-02-1992 அன்று சமாதி அடைந்தார்கள்.

மாயம்மா ஆலயம்
5/184, சாந்தி நகர்  
சின்னகொல்லப்பட்டி
சேலம் -636008

கன்யாகுமரியில் மாயம்மா ஆலயம்

சேலத்தில் மாயம்மாவின் சமாதி