மயில் ராவணன்

-சாந்திப்பிரியா

ஆதி காலத்தில் இருந்தே கூறப்பட்டு வரும் இந்தக் கதையை நாரத முனிவர் கௌதம ரிஷிக்கு சொன்னதாக நாட்டுப்புறக் கதையில் கூறப்பட்டு வருகிறது. காலம் காலமாக நாட்டுப்புறங்களில் வாய்மொழிக் கதையாக கூறப்பட்டு வந்துள்ள மயில் ராவணனின் கதை முதன் முதலில் 1868 ஆம் ஆண்டில்தான் சிறுகதை நூலாக அச்சில் வெளியிடப்பட்டது என்கிறார்கள்.

ராமாயணத்தில் வரும் ராவணனையும் அவன் சந்ததியினரையும் பற்றிய கதைகள் பலவும் மயில் ராவணன் கதை என்றும் சதகண்ட ராவணன் அல்லது விதுர ராவணன் என்ற பெயரிலும் காலம் காலமாக நிலவி வருகின்றன. ராமாயணத்தைத் தவிர பின்னர் கூறப்பட்டு உள்ள அந்த இரண்டு கதைகளும் நாட்டுப்புறக் கதைகளாக அறியப்பட்டு வந்துள்ளன. புராணங்களில் அவற்றைப் பற்றிய செய்திகள்  காணப்படவில்லை. அவை பெரும்பாலும் பாவைக் கூத்து எனும் தோல் பொம்மைகளைக் கொண்டு நடத்தப்படும் பொம்மலாட்ட நிகழ்ச்சியாகவும், தெருக்கூத்தாகவும் நடத்தப்பட்டு வந்துள்ளன. மயில் ராவணனைக் குறித்த செய்திகள் அங்காங்கே சில புராணங்களில் காணப்பட்டாலும் சதகண்ட ராவணனைக் குறித்த செய்திகள் புராணங்களில் காணப்படவில்லை. சதகண்ட ராவணனின் கதையில்  சீதை ஒரு புஷ்ப விமானத்தில் சென்று போர் புரிந்து சதகண்ட ராவணனை அழித்ததாக கூறப்பட்டு உள்ளது.

தந்தைக்கு கொடுத்திருந்த வாக்கை காப்பாற்ற ராமர் தனது சகோதரர் லஷ்மணன் மற்றும் மனைவி சீதையுடன் வனவாசத்தை மேற்கொண்டிருந்தார். வனவாசத்தில் இருந்த ஸ்ரீ ராமரின் மனைவி சீதையை ராவணன் கடத்திக் கொண்டு போய் இலங்கையில் சிறை வைத்து விட்டான். அவளை மீட்பதற்காக தனக்கு துணையாக தனது சகோதரன் லஷ்மணனை அழைத்துக் கொண்டும் சுக்ரீவனின் தலைமையிலான எழுபது வெள்ளம் அளவிலான வானர சேனைகளையும் திரட்டிக் கொண்டு ராமபிரான் சேது சமுத்திரத்தில் அணைக் கட்டி அதன் மீது ஏறி இலங்கைக்கு சென்றார். அங்கு ராவணனின் படையினருக்கும் ராமரின் படையினருக்கும்  பயங்கரமான  யுத்தம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அந்த யுத்தத்திலே அலையலையாக வந்த ராவணனது படையினரும், அவனது உறவினர்களும், உடன் பிறந்தோரும் ராம-லஷ்மணர்களின் படை வீரர்களை எதிர் கொள்ள முடியாமல் மாண்டு கொண்டே இருந்தார்கள்.

யுத்தத்திலே மாண்டு கொண்டே இருந்த சொந்த பந்தங்களின் நிலையைக் கண்ட ராவணன் நிலைக் குலைந்தான். ‘ஐயோ என் சொந்தபந்தங்களின் கதியைப் பாரய்யா, அவர்களின் நிலையைப் பாரய்யா’ என சுற்றி இருந்தவர் முன் அழுது புலம்பினான். அழுதழுது அந்த பராக்கிரம வீரனும் அப்படியே மூர்ச்சையானான். ராவணனும் மிக்க பலசாலி என்றாலும், அவனுக்கும் பாசம் இருந்தது. சொந்தபந்தங்களும், சொந்த மகன்களும் இறந்தால் அவனால் தாங்க முடியுமா?  ‘நான் இனி எப்படி தனியே ஆட்சி செய்வேன்?’ என புலம்பித் தீர்த்தபோது,  அவன் மந்திரிமார்கள் அவனை தேற்றினார்கள்.

மந்திரிமார்கள் கூறினார்கள் ‘இலங்கேஸ்வரா, நீங்களே இப்படி மனம் ஒடிந்து நின்றால் எமக்கு எங்கிருந்து தைரியம் வரும்? உம்மிடமோ லட்ஷ, லட்சக்கணக்கான யானை, குதிரை, ஒட்டகம் போன்ற மிருகப் படைகளும் மனிதப் படைகளும் உள்ளன. அவற்றை அழைத்துக் கொண்டு போய் யுத்தகளத்தில் கர்ஜனை செய்வீர்களாக. உம்முடைய படையினரைக் கண்டாலே வெறும் குரங்குகளை சேனையாகக் அழைத்து வந்துள்ள ராமனும், லஷ்மணனும் அலறி ஓட மாட்டார்களா? தைரியம் கொள்வீர். கர்ஜனை செய்வீர்’ என அவருக்கு தைரியம் சொன்னார்கள்.

அதைக் கேட்ட ராவணனும் மீண்டும் தைரியம் அடைந்து அடுத்த நாள் காலையிலேயே லட்சக்கணக்கான யானை, குதிரை, ஒட்டகம் போன்ற மிருகப் படைகளுடன் யுத்தகளத்துக்குச் கிளம்பிச் சென்று ஆக்ரோஷமாக யுத்தம் செய்தான். ஆனாலும்  ராமனும், லஷ்மணனும் எய்த பாணங்களில் ராவணனின் பாதி சேனை அழிந்து போக துயரம் கொண்ட ராவணன் அரண்மனைக்கு திரும்பினான். தனியே துக்கத்தோடு அமர்ந்திருந்த ராவணனிடம் வந்தான் பிரகஸ்தன் என்ற மந்திரி. அவன் கூறினான் ‘ஸ்வாமி, பராக்கிரமசாலியான நீரே இப்படி துயரில் இருக்கலாமா? கவலைக் கொள்ள வேண்டாம். யுத்தத்தில் எதிர்கொள்ள வேண்டிய வழி முறைகள் மூன்று உண்டு. ஒன்று நேரடியாக உக்ரஹமாக யுத்தம் செய்து வெல்ல வேண்டும். இல்லை என்றால்  வஞ்சகத்தினால் எதிரியை வெல்ல வேண்டும். மூன்றாவதாக இரண்டு வழியிலும் தோல்வி பெற்றால் கௌரவமாக சரண் அடைய வேண்டும்’.

ராவணன் கேட்டான்  ‘அடே மந்திரி, சரண் அடைய வேண்டும் என்ற வார்த்தையே என் அகராதியில் இடமில்லை. யுத்தம் செய்தேன், என் சேனைகள் அழிந்து கொண்டு இருக்கின்றன. இன்னும் அவர்களுக்கு பூரண வெற்றி வரவில்லை. எனக்கு துணையாக இருந்த இந்திரஜித், நிகும்பன், அகம்பன், கும்பகர்ணன் என அனைத்து யுத்த சிங்கங்களுமே இன்று  என்னை தவிக்க விட்டு மேலே அல்லவா போய் விட்டார்கள். இந்த நிலையில்தான் என்னால் எதையும் யோஜனை செய்ய இயலாமல் தவிக்கின்றேன். என்ன செய்வது என ஒன்றும் புரியவும் இல்லை. மந்திரியாரே,  இந்த மன நிலையில் எப்படி  யுத்தம் செய்வது?  சூழ்ச்சி செய்து யுத்தத்தில் ஜெயிப்பது என்று யோசனை செய்யக் கூட புத்தி வேலை செய்யவில்லை எனும்போது நானென்ன செய்வது என்பதை முதலில் எனக்குக் கூறும் மந்திரியாரே’ என்று அழுது புலம்பினான்.

அதைக் கேட்ட பிரகஸ்தன் கூறினான்  ‘ஐயா சுவாமி, நான் கூறுவதை தயை செய்து காது கொடுத்து நன்கு கேளும். உமக்கொரு தாயாதி வழி வந்த உறவினன் பாதாளத்தில் உள்ளதை மறந்து விட்டாயா? அவன் கபட நாடகத்தில் வல்லவன். சூதும் வாதும் அவனுக்கு அத்துப்படி…… அதி மாயாவி. வானம் முதல் பாதாளம் வரை அத்தனை மாயக் கலையையும் கரைத்துக் குடித்தவன். இத்தனையும் கொண்டவன் அதி பராக்கிரசாலியும் கூட. அவர் உதவியை ஏன் நீர் இன்னும் நாடவில்லை?’ என்று கூறி முடிக்கும் முன்னே ராவணன் பதைபதைத்துக் கேட்கிறான் ‘ஐயா மந்திரிமாரே , சொல்லைய்யா, விரைந்தே சொல்லையா ..யாரவன் ?…..யாரந்த தாயாதி ?’

பிரகஸ்தன் சொன்னான் ‘ஐயா ஸ்வாமி, உமக்கென்ன ஆயிற்று? உமக்கு எத்தனை தாயாதி உள்ளார்கள் என்று கூட நினைவில்லாமல் இப்படிக் கேட்கின்றீர்கள்? பாதாள இலங்கையில் உமக்குள்ளவன் மயில் ராவணன் ஒருவன்தானே. அவனே உமக்கு தாயாதி முறை சகோதரன். அவனை அழைத்தால் அவன் யுத்தம் செய்தும், தந்திரம் செய்தும் ராம-லஷ்மணர்களின் படைகளை துவம்சம் செய்து விடுவான். அவனை வெல்ல இன்னும் யாரும் பிறக்கவில்லை. ஜெயிக்க வேண்டும் எனில் ஜெயித்தே காட்டுவான் ஐயா ….அவன் ஜெயித்தே காட்டுவான். உடனே மயில் ராவணனை அழைப்பீராக’ என்று தூபம் போட்டான்.

பிரகஸ்தன் அப்படிக் கூறிய உடனேயே ராவணன் நினைத்தான் ‘அடடா…இந்த யோசனை எனக்கேன் மனதில் வரவில்லை? மயில் ராவணன் அசாத்திய சூரனாயிற்றே!… இந்த யோசனை நல்ல யோசனைதான். போகட்டும், மயில் ராவணா, நான் உன்னைப் பார்க்க வேண்டுமே’ என மனதார அவனை நினைத்தான். மனதில் நினைத்தால் போதும், மயில் ராவணனுக்கு அங்கே ராவணன் தன்னை நினைத்தது தெரிந்து விடும். அவன்தான் மாயாவி ஆயிற்றே. மயில் ராவணன் யோசனை செய்தான் ‘இதென்ன திடீர் என என்னை என் தமயன் ராவணன் என்னை நினைக்கிறான்? தீர்க்க முடியாத கஷ்டம் இல்லை ஏதாவது  ஆபத்து என்றால் தவிர என்னை நினைக்க மாட்டனே. அப்படி அவனாலேயே தீர்க்க முடியாத என்ன ஆபத்து அவனுக்கு வந்திருக்கும்? இனி தாமதிக்கலாகாது…யோசனையும் செய்யக் கூடாது’ என நினைத்தவன் பாதாளத்தில் இருந்து சூறாவளிக் காற்றைப் போல கிளம்பி ராவணனைப் பார்க்க இலங்கைக்குச் வந்தான்.

இலங்கைக்கு வந்தவன் உடனடியாக ராவணனை சந்தித்தான். சகோதரன் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக அவனை தெண்டனிட்டு நமஸ்கரித்தப் பின் மயில் ராவணன்  கேட்டான் ‘இதென்ன தமயனாரே, என்ன ஆயிற்று உமக்கு? நான் வரும் வழியெல்லாம் பார்த்தேன் …..நாடெல்லாம் நிர்மூலமாகிக் கிடக்குது? இலங்கை முழுதுமே அங்கங்கே பிணைக்க குவியலும், நாற்றமும் தாங்க முடியவில்லையே……என்ன நடந்ததென விவரம் கூறுவீர்’. அவனை அன்போடு எதிர்கொண்டழைத்த ராவணன் அவனுக்கு பதில் தந்தான் ‘வாரும் தம்பியாரே, வாரும். உம்மைதான் பாழாய் போன நான் நினைத்துக் கொண்டே இருந்தேன். தசரதனின் பிள்ளைகள் ரெண்டுபேர் தண்டகாரண்யம் என்ற காட்டில் இருந்தார்கள். அங்கு சென்ற நம் தங்கை சூர்பணகையை லஷ்மணன் மானபங்கம் செய்து காயப்படுத்தினான். அவளும் என்னிடம் வந்து முறையிட்டாள். அதனால் கோபமுற்ற நானும் அவர்களுக்கு பாடம் புகட்ட சீதையை களவாடிக் கொண்டு வந்து சிறையிலிட்டேன். ஆனால் அந்த ராமனோ சீதையை தேடிக் கொண்டு ஒரு வானரத்தை இலங்கைக்கு அனுப்ப, வந்த குரங்கும் நகரெங்கும் தீ வைத்து நாசப்படுத்தி விட்டுப் போயிற்று. அது போனதும் ராமனும் லஷ்மணனும் பெரும் சேனையுடன் வந்து நம் மீது போர் புரிகிறார்கள். நம் சந்ததியினர் அனைவரையும் அழித்து விட்டார்கள். சேனையிலும் பாதி அழிந்து விட்டது. நானென்ன செய்வது என்று தெரியாமல் நிலை குலைந்து நின்ற வேளையிலே பிரகஸ்தன் உம்மை நினைவு படுத்தினான். அவர்களை அழித்திட நீரே எமக்கு உதவிட வேண்டும். ராம லஷ்மணர்களுக்கு ஆத்ம பலத்தை விட வேறேதோ பலமும் உள்ளது. அது என்ன என்பதே தெரியலே. அதனால்தான் அவர்களை மாயத்தாலேயே அழிக்க முடியும் என நினைத்தேன். மாயாஜால, மந்திர சக்தி உள்ள, ஜெகத்ஜால கில்லாடியான நீரே ராம லஷ்மணர்களையும், வானர சேனைகளையும் அழித்து என்னைக் காப்பாற்ற வேண்டும் ’.

அதைக் கேட்ட மயில் ராவணனும் நிலை குலைந்து போய் அழுது புலம்பினான். ‘பெரிய தாயாதியாரே, உம நிலை என்னையே நிலைகுலைய வைக்குதையா. உமக்கேன் சோதனை? வீரன் நீர்….சூரனும் நீர்….உமக்கா இந்த கதி? நெஞ்சே பதறுதையா….நீர் என்னை முதலிலேயே அழைத்திருக்கலாமே. நான் இப்போது என்ன செய்ய வேண்டும்  என்று கூறுமையா…..அதை உடனே செய்கிறேன்’ என்று கண்கள் சிவக்க கத்திக் கொண்டு ஆக்ரோஷத்தோடு எழுந்து நின்றான்.

அவனைக் கட்டி அணைத்து கண்ணீர் விட்டழுத ராவணன் சொன்னான் ‘சகோதரா, நிதானம்……. நிதானம். நீர் நினைப்பது போல ராமனும் லஷ்மணனும் சாமான்யமானவர் அல்ல. மிக்க பலசாலிகள். அவர்களுக்கு எதோ தெய்வ அனுக்ரஹம் உள்ளது என நினைக்கிறேன். அதனால்தான் நம் சேனைகளை காட்டிலே மரத்துக்கு மரம் தாவி பழம் தின்னும் வானரங்களைக் கொண்டே நிர்மூலப்படுத்தி விட்டார்கள். ஆகவே அவர்களை தந்திரம் செய்தே  அழிக்க வேண்டும். அதற்கு நல்லதொரு வழியை யோசி அப்பா’ என்று கூறினான்.

அதைக் கேட்ட மயில் ராவணனும் கூறினான் ‘ஐயனே, கவலை வேண்டாம். அவர்களை மாயம் செய்து, தந்திரம் செய்து பாதாளத்துக்கு கொண்டு போய் என் காளிக்கு பலி தருவேன். இது காளிக்கு சத்தியம்’ என சூளுரைத்தான். ராவணன் ஆறுதல் அடைந்தான். ராம லஷ்மணர் அழிவு உறுதி என மனக் கணக்கு போட்டான். சூளுரைத்துச் சென்றவன் மயில் ராவணன் ஆயிற்றே! காளிக்கு பலி தருவேன் என்று அவன் சூளுரைத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. அத்தனை சக்தி மயில் ராவணன் பூஜித்து வந்த காளி தேவிக்கு. இதுவரை அவளுக்கு பலி தருவேன் என மயில் ராவணன் சூளுரைத்தால் அந்த பலியை ஏற்காமல் விட மாட்டாள் அந்த அதள பாதாளத்தில் உள்ள உக்ரஹ காளி. அப்படியொரு சக்தி கொண்டவள் சிவபெருமானின் அருளினால் அவனுக்குக் கிட்டியிருந்த அந்தக் காளி தேவி.

அதன் பின் சிறிது நேரம் அனைத்து சம்பவங்களையும் கேட்டுக் கொண்ட மயில்ராவணன், ‘அண்ணா, நான் உனக்கு நிச்சயம் உதவுவேன். அந்த பொடியன்களை வசியம் செய்து பாதாளத்துக்கு கொண்டு போய் காளிக்கு பலி தர ஏற்பாடுகளை செய்து விட்டு நொடியில் திரும்ப வருவேன். இது காளி மீது சத்தியம். கவலை வேண்டாம்’ எனக் கூறிவிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்ய பாதாளத்தில் இருந்த தன் அரண்மனைக்கு துரிதமாகக் கிளம்பிச் சென்றான். பாதாளத்து காளிக்கு பலி தரும் முன் அவளுக்கு சங்கல்பம் செய்து கொண்டு, யாரை பலி தரவேண்டுமோ அப்படி பாவிக்கப்பட்ட பதுமைகளின் உருவங்களை காளியின் காலடியில் வைத்து அவர்களைக் கொண்டு வந்தவுடன் அவர்களை ஏற்க வேண்டும், அவர்களைக் கொண்டு வர அவள் சக்தி கொடுக்க வேண்டும் என பதுமைகள் மீது ரத்தத்தையும் சொட்டி, சத்தியமும் செய்து கொடுக்க வேண்டும். அதற்கான காரியத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதால் அதி விரைவாகச் சென்றான்.

ராவணனும், மயில் ராவணனும் பேசிக் கொண்டிருந்ததை விபீஷணனின் பெண்ணான திரிசடை ஒட்டுக் கேட்டு விட்டாள். மயில் ராவணன் அங்கு வந்தபோதே அவளுக்கு சந்தேகம். ‘என்றைக்கும் இல்லாமல் இன்று எதற்கு இங்கு வந்துள்ளான்’ என்பதை அறிந்து கொள்ளவே அவள் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டாள். அவர்கள் பேசியதைக் கேட்டு விட்ட திரிசடை மிக்க வேதனையையும் கவலையையும் அடைந்தாள். அதற்குக் காரணம் பாதாளக் காளி படு மூர்கமானவள். அவளை ஆராதித்து வேண்டினால் அனைத்தையும் தருவாள் அந்த சக்தி வாய்ந்தவள் என்பதினால்தான் மயில் ராவணன் அவளை ஆராதித்து வந்தான். அதனால்தான் மயில் ராவணனுக்கு அத்தனை சக்தி! மாயாஜாலங்கள் அனைத்துமே அவன் உள்ளங்கையில் இருந்தது. திரிசடை மனதுக்குள் நினைத்தாள் ‘அய்யய்யோ, இதென்ன நிலைமை இப்படி வந்து விட்டது. என் தந்தையோ ராமனிடம் சரணாகதி அடைந்து அவருடன் இருக்கிறார். அவர் ஆலோசனைப்படித்தானே ராமனும் இந் நாள்வரை ராவணனின் பலவீனத்தை அவ்வப்போது அறிந்து கொண்டு ராவணனின் சேனைகளை அழித்து வருகிறார். இந்த தகவலை என் தகப்பனுக்கு எப்படி  சொல்வேன்? இந்த மயில் ராவணன் யுத்தத்தில் சேருவது ராமனுக்கு தெரியவில்லை என்றால் காளியின் சக்தியைக் கொண்டு மாயாஜாலம் பண்ணி மயில் ராவணன் ராம லஷ்மணனை வதம் பண்ணி விடுவானே!!. அய்யோ ……….அய்யய்யோ. அப்படி  ஆகக் கூடாதே’ என வினசப்பட்டாள்.

அப்போது அந்த பக்கமாக வாயு பகவான் சென்று கொண்டு இருந்தார். இலங்கை மீது செல்லும்போது அவருக்கு வானத்தில் பறந்து செல்லும் சக்தி மட்டுமே உண்டு. வேறேதும் சக்தி கிடையாது. அதனால்தான் சீதைக்கு அவரால் எந்த வழியிலும் உதவி செய்ய  முடியவில்லை. ஆனால் வாயு பகவானைக் பார்த்து விட்ட திரிசடை அவரைக் கூவி அழைத்து, கீழே வந்தவரிடம் மயில் ராவணன் சூளுரைத்துச் சென்ற அனைத்து சேதியையும் விலாவாரியாக சொன்னாள்.

திரிசடை அவரிடம் மேலும் கூறினாள் ‘ஸ்வாமி, வாயு பகவானே, உடனே கிளம்பிச் சென்று இந்த செய்தியை என் தந்தை விபீஷணரிடம் கூறி தக்கதொரு மாற்று உபாயத்தை செய்யச் சொல்லும். ….ஐயா…தாமத்திக்காதேயும்…… உடனே கிளம்பிச் செல்லும். இன்றிரவு பதினைந்து நாழிகைக்கு மேல் மயில் ராவணன் ராம லஷ்மணர்களை கடத்திக் கொண்டு போய் பாதாளத்தில் காளிக்கு பலியாக்க பிரதிக்ஞை கொண்டுள்ளான். அவன் பெரும் மாயாவி. எளிதில் அனைவரையும் ஏமாற்றி விடுவான். காளியின் அருளினால் நினைத்ததை நடத்தி விடுவான். அதனால்தான் சொல்கிறேன், உடனே செல்லும்…..என் தந்தையிடம் விஷயம் பூராவும் சொல்லும்’

வாயு பகவானும் ‘அம்மணி, உனக்கு பெரும் நன்றி …நல்லவேளை சேதியை என்னிடம் சொன்னாய். இப்போதே போய் இந்த செய்தியை  உன் தந்தையிடம் சொல்வேன்…இதோ கிளம்பினேன்’ என்று கூறி விட்டு விரைந்து  சென்று விபீஷணனை சந்தித்து தான் கேட்ட செய்தியை  சொன்னார். ‘விபீஷணா, நான் சொல்வதைக் காது கொடுத்துக் கேளும். இன்று பின்னிரவு பதினைந்து நாழிகைக்கு மேல் மயில் ராவணன் ராம லஷ்மணர்களை கடத்திக் கொண்டு போய் பாதாளத்தில் காளிக்கு பலியாக்க பிரதிக்ஞை செய்துள்ளான். அதென்ன திட்டம் என்று தெரியவில்லை. இந்த செய்தியை  உம் மகள் திருச்சடை ஒட்டுக் கேட்டு என்னிடம் கூறி, உமக்கு சேதி கூறுமாறு அனுப்பினாள். தாமதம் செய்யாதேயும். என்ன மாற்று உபாயம் செய்ய வேண்டுமோ அதை உடனே செய்யவும். உம்மாலே மட்டுமே தக்க உபாயம் செய்து அந்த காரியத்தை நிறுத்த முடியும். விபீஷணரே நான் சொல்வதெல்லாம் உமக்குப் புரிந்ததா?  நீர் என்ன செய்யப் போகிறீர் ?’ என்று கவலையோடு வாயு பகவான் கேட்க விபீஷணர் சொன்னார் ‘ஐயா, வாயு பகவானே, நீர் என்னிடம் கூறி விட்டீர். என்ன செய்வதென இனி நான் யோசிப்பேன். கவலைக் கொள்ள வேண்டாம். மயில் ராவணனின் காரியத்தை முறியடிப்பேன் என்பதை மட்டும் உறுதி எழுதிக் கொள்ளும்’ என்று கூறிவிட்டு உடனே கிளம்பி ராமனைப் பார்க்கச் சென்றார். அங்கு ராமபிரானுக்கு முன்னால் சுக்ரீவன், அங்காதன், நீலன் என அனைவரும் முட்டி மடித்து அமர்ந்து கொண்டு இருந்தார்கள்.

தன் முன் வந்து நின்ற விபீஷணரின் முகம் கறுத்து அம்மாவாசைப் போல இருந்ததைக் கண்ட ராமபிரான் அவரிடம் கேட்கலானார் ‘என்ன விபீஷணரே, இன்று உம் முகம் வாடி வதங்கி உள்ளது? உமக்கென்ன ஆயிற்று இன்று?’ என்று கேட்க அரண்டு போய் நின்றிருந்த இருந்த விபீஷணர் ராமபிரான் காதில் மட்டும் கேட்குமாறு வாயு பகவான் மூலம் தனக்கு கிடைத்த சேதி அனைத்தையுமே அவருக்குக் கூறினார்.

அதைக் கேட்ட ராமபிரான் விபீஷணனிடம் கூறினார் ‘விபீஷணா, இதென்ன பெரிய விஷயம்? இதற்கென்ன கவலை??! மயில் ராவணன் மாயாவியாயிருந்தால் நமக்கென்ன?? கவலை வேண்டாம். இதை சுக்ரீவனிடமும் ஜாம்புவானிடமும்  கூறி அவர்களுடைய ஆலோசனைக் கேட்டறியலாம். அவர்கள் நல்ல உயபாயம் சொல்லக் கூடியவர்கள். இப்போது எமக்குக் கூறும். யார் அந்த மயில் ராவணன்? அவனுக்கென்ன பலம் என்பதை இவர்களுக்கு கூறுவீராக’ என்று கூறியதும் விபீஷணர் சுக்ரீவனிடம் கூறலானார்.

‘ஐயா, ராமதூதர்களே …..ஐயா, வானர சேனைகளே, ஐயா சத்ய புத்ரர்களே.  அனைவரும் இங்கு வாரும். இங்கு வந்தமர்ந்து நான் கூறுவது அனைத்தையும் காது கொடுத்துக் கேளும். மயில் ராவணன் அதள பாதாளத்தில் வசிப்பவன். அங்கு அவனே அதிபதி. அங்கு செல்வது எளிதல்ல. சமுத்திரத்திலே, ஒரு இடத்திலே பல்லாயிரக்கணக்கான தாமரை செடிகளுண்டு. அதிலே மிகப் பெரிய தாமரை செடி ஒன்றின் தண்டின் மூலமே அந்த லோகத்துக்கும் செல்ல முடியும். அது பல அரண்மனைகளை ஒன்றன் பின் ஒன்றாக கொண்டு அமைந்த லோகமாகும். செங்கல், பித்தளை, தாமிரம், இரும்பு, செம்பு, தங்கம் என அடுக்கடுக்காய் உள்ள கோட்டைகளுக்குள் மயில் ராவணனும் வாசம் செய்வான். அந்த கோட்டையை எல்லாம் பல லட்சக்கணக்கான ராட்சஷர்கள் காவல் காத்து நிற்ப்பார்கள். அந்த மயில் ராவணன் தாயாதி வழி முறையில் ராவணனுக்கு சகோதரன். மகா மாயாவி, சூத்ரதாரி, தந்திரக்காரன். எந்த ரூபத்தையும் எடுத்து வருவான். ஏமார்ந்தால் போதும், நினைத்ததை நடத்திக் காட்டி விடுவான்.

இன்னும் கேளுங்கள் வானப் படைகளே, அவனுக்கு உலகில் உள்ள அத்தனை யுக்திகளும் அயோக்கியத்தனமும் அத்துப்படி. அவனுக்கு இஷ்ட தெய்வமும், அவன் வழிபடுவதும் உக்ரஹ காளி தேவதயையே. அவள் மஹா சக்திசாலி. சிவபெருமானின் அருளினால் அவன் பெற்றுள்ள அந்த காளியின் அருள் இருந்தால் அனைத்துமே நடக்கும். அதனால்தான் அவளுக்கு ராம லஷ்மணர்களை பலி தந்து காளியின் பலத்தை ராவணனுக்கு கொடுக்க சூளுரைத்திருக்கிறான் அந்த மயில் ராவணன். இரவு பதினைந்து நாழிகைக்கு அவன் கையில் ராம லஷ்மணர்கள் கிடைத்து விட்டால் அதன் பின் அவர்களை அவன் பாதாளத்துக்கு கொண்டு போய் விடுவான். அப்புறம் அவர்களை மீட்பது கடினம். அதை அனுமானால் மட்டுமே தடுக்க முடியும் என்று சோழியும் சாஸ்திரமும் பட்ஷி ஜோசியமும் சொல்கின்றது  என்பதால் உடனே சென்று அவரை அழைத்து வாருங்கள். ராம லஷ்மணர்களை எப்படிக் காக்கலாம் என்று அவர் ஆலோசனையும் நாம் கேட்கலாம்’ .

அனைவரும் தடால், துடாலேன ஓடிப் போய் அனுமானை அழைக்க அவரும் தாமதிக்காமல் ஓடோடி வந்தார். துள்ளி குதித்து வந்தவர் அப்படியே ராமனின் காலில் விழுந்து வணங்கி ‘ஐயனே. எம்மை ஏன் அழைத்தீர். நானென்ன செய்ய வேண்டும்?’ என்று பவ்யமாக கேட்க அங்கிருந்த சுக்ரீவரும் நடந்ததனைத்தையும் அவருக்கு விவரம் கூற யோசனையில் அமர்ந்தார் அனுமார். ‘இன்று இரவை எப்படி கடப்பது ? அதைக் கடந்து விட்டால் சூளுரைத்தவனின் சபதம் அழிந்து போகுமே. அதுகென்ன செய்யலாம்?’

அனைவரும் அதையே யோஜிக்க ‘வந்ததையா ஒரு யோசனை….வந்ததையா நல்லதொரு யோசனை’ என சுக்ரீவரும், சாம்பவானும் ஆர்பரித்து எழுந்து வந்தவர்கள் அனுமானுக்கொரு உபாயத்தை சொன்னார்கள் ‘இன்று இரவு  முழுதும் உம்முடைய வாலினாலே அனைவரையும் சுற்றி கோட்டை மாதிரி சுற்றிக் வைத்து விட்டால் யாரும் உள்ளே நுழைய முடியாது. மீறி வந்தால் வெட்டியும் சாய்க்கலாம். உயிரோடும் புதைக்கலாம். உம்மால் மட்டுமே வாலினால் ஆகாயத்தைத் தொட்டமாதிரியும், பூமிக்குள் புதைந்த மாதிரியும்  கோட்டையைக் கட்ட முடியும். நீரே அதை செய்ய வேண்டும் ….ராமனின் பக்தனே …நீரே அதை செய்ய வேண்டும்’ எனக் கூறினார்கள்.

அதைக் கேட்ட அனுமானும் ‘சுக்ரீவரே, நல்ல யோசனை தக்க சமயத்திலும் தந்தீரே. நான் அதை செய்ய முடியாதென  சந்தேகப்பட வேண்டாம் ?  நிச்சயம் செய்வேன்? பழுதில்லாமல் செய்வேன்… .நான் அதை இப்போவே செய்வேன். கவலை வேண்டாம். நான் கட்டும் வால் கோட்டைக்கு என் வாயில் புகுந்து காது வழியேதான் செல்ல முடியும் எனும் வகையில் கோட்டையையும் இன்றே கட்டுவேன்’ என சூளுரைத்தார்.

அடுத்து காரியம் மளமளவென ஆரம்பம் ஆயிற்று. ராமனின் எழுபது வெள்ள சேனைகளையும், ராம லஷ்மணர்களையும் சுற்றி தன் வாலினால் ஆகாயத்தையும் பூமியையும் தொடும் அளவு கோட்டை ஒன்றை  கட்டினார் அனுமார். அந்த கோட்டைக்குள் போக வேண்டும் என்றால் அனுமானின் வாயில் புகுந்து காது வழியே வெளியேறி உள்ளே செல்ல வேண்டும்.  ஈயும் எறும்பும் கூட உள்ளே நுழைய முடியாது. அத்தனை நெருக்கமாக, இடைவெளி இல்லாமல்  சுருட்டிக் கட்டப்பட்டிருந்த வால் கோட்டை அது.

உள்ளே பர்ணசாலையில் ராம லஷ்மணர் படுத்திருக்க விபீஷணரோ அங்கும் இங்கும் அலைந்து கொண்டு ‘ஐயனே அங்கு காவல் இரு….ஐயனே இங்கு காவல் இரு…அப்பனே உறங்கிடாதே….அடே சேனைகளே, ஆடல் பாடலை பாடிக் கொண்டு நித்திரையை அழித்துக் கொண்டு காவல் இருங்கள்…..நாலு ஜாமமும் ஜாக்கிரதையாக கண் விழித்து இருங்கோ…கவனமா இருங்கோ…ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொருத்தர் காவல் இருங்கோ’ என கூவிக்கொண்டே அங்கும் இங்கும் ஓடியபடி அங்கதன், நீலன், சாம்புவன், குமுதன் போன்றவர்களுக்கு கட்டளை தந்து கொண்டு தானும் முழித்திருந்தார்.

நாரதர் தொடர்ந்து கூறினார். ‘இதெல்லாம் ராமனை சுற்றி இருந்தவர்களின் நிலைமை. இப்போ மயில் ராவணன் என்ன செய்தான் என்ற அந்த பக்கத்துக் கதையை கேளுங்கள்’ என்று கௌதம முனிவருக்கு கூறிவிட்டு அந்த கதையை கூறத்  துவங்கினார்.

பாதாள இலங்கையில் இருந்த மயில் ராவணன் தனது ஆலோஜனையாரை, மந்திரிமார்களை, மாய விநோதர்களை அழைத்து, ராக்ஷஸ பிராம்மணர்களை தருவித்து சாஸ்திரமும் போட்டுப் பார்த்தான். சோழியும் போட்டான்…..பட்ஷி கூவல் சாஸ்திரமும் பார்த்தான். எல்லாமே அவனுக்கு சாதகமாகவே இருந்தது என்று அவன் ஆலோசகர்கள் கூறினார்கள். ஆனால் கூறிய அத்தனையுமே அவனிடம்  இருந்த பயத்தில் வெளி வந்த பொய்யே என்பதும் சத்தியம். ராத்திரி பதினைந்து நாழிகளில் நடைபெற்ற ஆலோசனைகளைப் கேட்டப் பின் சதுரன், சாத்திரன், சகல பிராவணன் மற்றும் மாய வினோதன் எனும் நான்கு படை வீரர்களை அழைத்துக் கொண்டு ராம லஷ்மணர்களை கடத்தி வரக் கிளம்பியபோது, அபசகுனம் போல ஓவென என ஆர்பரித்துக் கொண்டே வந்த அவனது  மனைவி  வர்ணமாலி அங்கு வந்து அவனை வழி மறித்தாள்.

‘பிராணநாதா, நீவீர் எங்கே செல்கிறீர்?’ என மயில் ராவணனைக் கேட்கவும் முகம் சுளுக்கிய மயில் ராவணனும் கூறுகிறான் ‘அன்பே, ஒரு முக்கிய காரியத்துக்கு கிளம்பும்போது இப்படி அபசகுனமாக  வந்து புலம்பலாமா? இது ஒரு மனைவிக்கு அழகா? என் தாயாதி சகோதரன் ராவணனை இரண்டு மானிடர்கள் அவமானப்படுத்தி,  அவன் சந்திதியினரையும், சேனைகளையும் நிர்மூலமாக்கி விட்டார்கள். அவன் என்னை தனக்கு உதவ அசாஹித்து உள்ளான். அவனுக்கும் உதவி செய்வதாக வாக்கும் கொடுத்தேன். என் தாயாதி அல்லவா? அவனுக்கு  ஒரு துன்பம் என்றால் அது நம் வம்சத்துக்கும் துன்பம் இல்லையா? எம் சந்ததியினருக்கு தீங்கு செய்த அந்த இரண்டு மானிடர்களையும் காளிக்கு பலியிடுவதாக சங்கல்பம் செய்துள்ளேன். அதற்காகவே இப்போ போகிறேன்….என்னைத் தடுக்காதே….பெண்னே என்னை தடுத்து நிறுத்தாதே’ என்று கூறியவுடன் வர்ணமாலி  கூறத் துவங்கினாள்.

‘பிராணநாதா, நான் சொல்வதையும் சற்றே கேளுங்கள். அந்த ராம-லஷ்மணர்கள் சாமான்யமானவர்கள் அல்ல என்று கேள்வி. அவர்கள் தெய்வத்தின் அம்சங்களாம். அதையும் பலரும்  சொல்லக் கேட்டேன். அதை ஆகாசவாணியும் கூட நான் காளிக்கு பூஜை செய்யப் போனபோது வழி நெடுக என் காதில் வந்து கூறியது.  உமது தாயாதி சகோதரன் ராவணனுக்கு பொல்லாத காலம் வந்துள்ளது என நினைக்கின்றேன். அதனால்தான் அவர் அபலைப் பெண்ணான சீதையை பேடி போல  தனியா இருக்கையில் தூக்கிக் வந்து அதனால் ஏற்பட்ட பின் விளைவினாலே புத்திர, மித்ரர்களையும் சேனைகளையும் அழித்துக் கொண்டுள்ளார்.

நாதா அதனால்தான் உமக்கு மீண்டும் மீண்டும் நான் கூறுகிறேன். அதை காது கொடுத்துக் கேளும். உமது தாயாதியார் செய்த காரியம் தீய காரியம் என்பதால்தான் அவர் உடன் பிறந்த விபீஷணரும் ராமரை சரணடைந்து, சகோதரனுக்கு புத்தி சொல்லிப் பார்த்து சண்டையை தடுக்கப் பார்த்தார். அவரையும் ராவணன் லட்சியம் செய்யாமல் புத்தி சொன்னவனையும் விலக்கினார். அதன் பலனே தன் சுற்றத்தாரையும் யுத்தத்திலே இழந்து அவரும் நிர்கதியா நிற்கிறார். அதனால்தான் கூறுகிறேன், நீர் ராம-லஷ்மணர்களை பிடித்து வந்து பாவ காரியத்தை சுமக்காதீர். அது உமக்கு வேண்டாமையா. ராம-லஷ்மணர்களை உம்மால் வெல்ல முடியாது. அதனால் நீரும் உமது தாயாதி வழியில் நாசமாகி விடுவீரே என அஞ்சுகிறேன்’ என அழுது புலம்பி அவன் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு கதறினாள்.

அவள் எத்தனையோ எடுத்துக் கூறியும் மயில் ராவணனும் கேட்கவில்லை, சுற்றி இருந்த மந்திரிமாறும் அவளை கேவலமாக பார்த்தார்கள். ‘புத்தி பேதலித்தவள் புலம்பிக் கொண்டே இருக்கட்டும்’ என அவளை உதாசீனப்படுத்தி விட்டு சதுரன், சாத்திரன், சகல பிராவணன் மற்றும் மாய வினோதன் எனும் நான்குபேரும் பாதாளத்தின் அடியில் இருந்த அரண்மனையை விட்டு பெரும் படையோடு வெளிக் கிளம்பி அக்னிக் கோட்டையைத் தாண்டி சமுத்திரத்தின் மேலே வந்து அதன் கரையில் நின்றார்கள்.

மயில் ராவணன் தனது சேனாதிபதிகளிடம் கேட்டான் ‘இப்போ சொல்லுங்கோ, யார் அந்த ரெண்டு பேரையும் பிடித்து வர முதலில் போவீர்கள்?’. பட்டென எழுந்தான் சதுரன். ‘சுவாமி, நானிருக்க, மற்றவரை நீர் ஏன் கேட்கணும். என்னை அனுப்பினால் அந்த எழுபது வெள்ள சேனையையும் நொடிப் பொழுதில் கொன்று தின்று வருவேன். என்னை முதலில் அனுப்புமையா’ என்று கூற மயில் ராவணனின் முகமும் மலர்ந்த தாமரைப் போல ஓடோடி வந்து சதுரனை கட்டிப் பிடித்து பாக்கும் வெற்றிலையும் மடித்துக் கொடுத்து ‘சென்று வாருமையா’ என சந்தோஷமாக அவனை வழி அனுப்பி வைத்தான்.

மயில் ராவணன் தன்னை வெற்றியோடு வழி அனுப்பியதைக் கண்டு மகிழ்ந்து போன சதுரன் இருட்டிலே மெல்ல மெல்ல அனுமான் வாலினால் கட்டி இருந்த கோட்டையை அடைந்தான். சுற்றி சுற்றிப் பார்த்தான். உள்ளே நுழைய வழியே தெரியவில்லை. ‘அண்ணாந்து பார்த்தா ஆகாயம் மட்டும் தெரியுது. கீழே பார்த்தா வாலும் பூமிக்குள்ளே போகுதே!!!’ இப்படியாக வாலைக் கொண்டே கட்டப்பட்டு இருந்த கோட்டைப் பார்த்து மனதிலே வியந்தவன் ‘இதென்னடா, புதுமாதிரி இருக்கு? நான் என் வாழ்நாளிலேயே இப்படி ஒரு கோட்டையை கண்டதில்லையே. பாதாளம் முதல் ஆகாயம்வரை படந்திருக்கும் இதில் வாசலும் காணோம், வழியும் காணோம்! வாசல் கதவு எது என்று பார்த்தா அது கூட புரியலயே. இதென்னடா புது தினுசுக் கோட்டை? இதிலெல்லாம் ஒருவராலும் நுழைய முடியாது’ என குழப்பமுற்று ஓடோடி மயில் ராவணன் முன்னால் சென்று தலை குனிந்து நின்றான்.

‘வாருமையா தீரரே, ஆச்சூ, போச்சூனு ஓடினீரே, போன காரியம் என்னவாச்சு? தலை குனிந்து நிற்கிறீரே….போன காரியம் என்ன ஆச்சு?’ என மயில் ராவணன் கேட்க சதுரன் தலை நிமிராமல் தான் கண்ட அதிசயத்தைக் கூறி ‘அதுக்குள்ளப் போக நம்மால முடியாது சாமி’ என்று கூற ‘ வாயை மூடும் மூடரே ….வாயை மூடும். உம்மால் முடியலேன்னா, நான் போய் அதை செய்து காட்டுவேன் பாரும்’ என சூளுரைத்தான் பக்கத்திலிருந்த சாத்திரன்.

அவனும் போன வேகத்தோடே திரும்பி வந்து சதுரன் சொன்னதையே வெட்கி, நாணி சொன்னான். சாத்திரன் பிழைத்தோம், தப்பித்தோம் என்று உடம்பெல்லாம் காயம்பட்டு ஓடி வந்திருந்தான். வாலுக்குள்ளே நுழைய முயன்றவனை வாலினாலேயே எலும்பு நொறுங்கும் அளவு பூமியில் தேய்த்து தேய்த்து சதை எல்லாம் பிய்ந்தே போகுமளவு அனுப்பி இருந்தார் அனுமான். அடுத்தடுத்து போன மற்ற இருவரும், அதாவது சகல பிராவணன் மற்றும் மாய வினோதன் என்ற இரண்டு பேர்களுமே மற்றவர் சொன்னதையே வந்து வெட்கத்தோடும், பயத்தோடுமே கூறினார்கள்.

அவர்களனைவரும் வந்து சொன்ன செய்தி அனைத்தையும் கேட்ட மயில் ராவணன் யோசனை செய்தான். ‘இனி இவர்களை நம்பிப் பிரயோஜனமில்லை. நான்தான் போய் தந்திரமோ, மந்திரமோ, மாயமோ எதேகிலும் செய்து கச்சிதமாக காரியத்தை முடிக்கணும். வேறு வழி இல்லே’. இப்படி எண்ணியவன் அனைவரையும் பத்திரமாக அங்கேயே தான் வரும்வரை காத்து இருக்க சொல்லி விட்டு அங்கிருந்துக் கிளம்பிச் சென்றான். வால் கோட்டை அருகே வந்ததும் தன்னை விபீஷணன் போல உருமாற்றிக் கொண்டான். வெற்றிலையில் மையையும் தடவிப் பார்த்து அனுமானின் முகம் எங்குள்ளது என்பதைக் கண்டு பிடித்தும் விட்டான். அவன்தான் மாயாவி ஆயிற்றே.

மெல்ல மெல்ல அனுமானின் காதருகில் சென்று ‘ஐயா அனுமனே, பத்திரம்….பத்திரம்….எச்சரிக்கை……ரொம்பவே எச்சரிக்கையாக இரும் …. பதினைந்து நாழியாகப் போகிறது. கோட்டைக்கு வெளியே எல்லாமே சரியா இருக்கு. அனைத்தையும் பார்த்துட்டேன். எல்லாமே சரியாக இருக்கு. நல்ல வேளை ….உள்ளே நுழைய வந்த களவாணி எல்லாருமே ஓடி விட்டார்கள் உள்ளே எல்லாம் சரியா இருக்கான்னு பாக்குறேன். வழியை விடுங்கோ ?’

அதைக் கேட்ட அனுமார் விபீஷணனே கூறுகிறார் என நினைத்து வாயை திறக்க அவர் வாயில் புகுந்து  செல்ல அந்த வழி காதின் வழியே செல்வதைக் கண்டு கொண்டான். காதில் இருந்து வெளியில் வந்தவன் கோட்டைக்குள் புகுந்து தனது மாயத்தால் அங்கிருந்த அனைவரது புத்தியையும் ஷண நேரத்துக்கு கட்டி வைத்து விட்டு, அது முடியும் முன்னேயே உள்ளே ராம லஷ்மணர்கள் படுத்திருந்த பர்ணசாலையை அடைந்து மாய வினோதம் செய்து காளியின் அருளால் ராம லஷ்மணர்களை கைவிரல் அளவிலாக்கி, மயக்கமாக்கி, ஒரு சின்ன பெட்டிக்குள் அடைத்து உள்ளே போனது போலவே வெளியிலும் வந்து பாதாள இலங்கையை அடைந்து அவர்களை காளி கோவிலில் பத்திரமாக பூட்டியும் வைத்து விட்டான். அவர்களால் இனி அங்கிருந்து தப்ப முடியாது.

அனுமானின் வாய் வழியே வெளியில் வந்து திரும்பிப் போனபோதும் ‘ஐயா அனுமனே, உள்ளே அனைத்தும் சரியாகவே இருக்கு. பதினைந்து நாழிகைக்கு இன்னும் பத்து சொட்டு நாழிதான் பாக்கி. மயில்ராவணன் எந்த உருவிலும் வருவான்….பார்த்து….கவனமாக இரும். நானும் வெளியில் சுற்றிக் கொண்டே இருந்து கண்காணிப்பேன்’ என்று கூறி விட்டே ஒன்றும் தெரியாதவன் மாதிரி சென்றான். அனுமாரும் தன்னிடம் பேசிக் கொண்டு இருந்தது விபீஷணனே என்றே நினைத்திருந்தார்.

மயில் ராவணன் ராம-லஷ்மணர்களை கடத்திக் கொண்டு சென்றபோது ஆகாயத்தில் இருந்து ஆகாசவாணி கூவியது ‘அடே பாதகா, மயில் ராவணா, நீயெல்லாம் செய்வது நல்லதல்ல….வைகுண்டநாதர் அவதாரங்களை ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டு போகிறாயே, உனக்கு அழிவு காலம் வந்து விட்டதடா….நீர் அழிவது நிச்சயம். ..போ…போ…. இத்தனை சிரமப்பட்டு ராவணனுக்காக இதை செய்கிறாயே. அவனும் ராஜ்யத்தை இழக்கப் போறான். நீயும் ராஜ்யத்தை இழக்கப் போகிறாய் …. மூர்கனே, உன் சகோதரி தூம்ரதண்டியின் பிள்ளை உன் சிம்மாசனத்தில் அமரப் போகிறான்…. இந்த சத்திய வாக்கை  நீயும் பார்ப்பாய்….உன் சந்ததியினரும் பார்பார்கள்…போடா மூடனே….போ.  போகுமுன் ஒரு ஷணம் யோசனை செய்….ராம லஷ்மணர்களை விடுவித்து உன் தமையனிடம் கூறி சீதையையும் விடுதலை செய். இருவரும் ராமனிடம் சரண் அடையுங்கள். அப்போது நீயும் தப்புவாய். உன் தமையனும் கெளரவம் பெறுவான்…அதை செய்யாவிடில்  உம் இருவருக்கும் அழிவு நிச்சயம்…அழிவு சத்தியம்’

ஆகாசவாணி கூறியது மயில்ராவணன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. அவன் யோஜித்தான் ‘அப்படியா சங்கதி….என் தங்கையின் பிள்ளை ஆட்சியை என்னிடமிருந்து பறிக்க உள்ளானா? அப்படியா சங்கதி?? அடடே ஆகாசவாணி….அவனை என்ன செய்கிறேன் என்று பார்’ என கருவியவன் ராஜ்ஜியம் சென்ற உடனே ராம-லஷ்மணர்களை பாதுகாப்பாக அடைத்து வைத்தான். அடுத்த வேலையாக தூம்ரதண்டியையும் அவள் பிள்ளையையும் சிறையில் அடைத்து கைவிலங்கு, கால் விலங்கு, மார் விலங்கு என அனைத்து விலங்கையும் போட்டு, ஒரு அறையிலே வைத்து அந்த அறையையும் பூட்டி அதற்கிருந்த கதவுக்கெல்லாம் நாலு பக்கமும் நானூறு பூட்டும் போட்டு உணவு கொடுக்க மட்டும் சிறு ஓட்டைப் போட்டு அறையை சுற்றி சுண்ணாம்பு சுவரும் எழுப்பி விட்டான். ‘இப்போ பார்க்கலாம் எப்படி அவன் என் சிம்மாசனத்தில் அமருவான்னு?’ என்று கருவியபடி நிம்மதியாக சென்றான்.

நிலைமை அங்கே அப்படி இருக்க  ராம லஷ்மணர்களையும் அவரது சைனியங்களையும் தனது வாலினால் சுற்றிக் கட்டி இருந்த கோட்டையில் பாதுகாப்பாக வைத்திருந்த அனுமாருக்கு ராம லஷ்மணர்களை மயில் ராவணன் கடத்திக் கொண்டு போய் விட்டது தெரிந்திருக்கவில்லை. அந்த வாலின் கோட்டைக்கு உள்ளே அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த விபீஷணன் அனுமாரின் அருகில் சென்று ‘ஐயா, அனுமாரே அனைத்தும் பத்திரமாகத்தானே உள்ளது ?’ என்று கேட்க அனுமார் கூறினார் ‘ வாருமையா விபீஷணரே. இப்போத்தானே அரை நாழிக்கு முன்னால என் வாயில் புகுந்து வெளி வந்தீர். எப்படி எனக்கே தெரியாமல் இப்போ மீண்டும் உள்ளே சென்றீர்?’ என்று கேட்க பகீர் என்றது விபீஷணருக்கு. ஏமார்ந்து விட்டோமோ எனப் பதறியவாறு, ‘ஒரு நிமிடம், வந்து விட்டேன்’ எனக் கூறி விட்டு உள்ளே ஓடிப் போய் பார்த்தால் அங்கு ராம லஷ்மணர்களைக் காணோம்!!!.

‘ஐயோ மோசம் போய்டோமே’ எனக் கதறியவாறு அனுமானிடம் வந்து ‘உள்ளே பாதுகாப்பாக இருந்த ராம லஷ்மணர்களைக் காணலை. நீர் யாரை உள்ளே விட்டீர். நான் கூறியது போலவே ஆகிவிட்டதே  ….மயில் ராவணன் மாயாவி என்றேனே….ஏமார்ந்து விட்டீரே அனுமானே….அவன் என் உருவில் வந்து உம்மை ஏமாற்றி ராம லஷ்மணர்களை கடத்திட்டுப் போயிட்டான்  . இப்போ என்ன செய்யர்தூன்னு புரியலயே? ‘ என்று கூறி கோவென அழத் துவங்க அதைக் கேட்டு அப்படியே மூர்ச்சையானார் அனுமார். மூர்ச்சை தெளிந்ததும் நடந்ததையெல்லாம் ஒருவருக்கொருவர் கூறிக் கொள்ள ‘ஏமார்ந்து விட்டோமே. விபீஷணன் உருவில் மயில் ராவணன் வந்து தந்திரம் பண்ணி சொன்னபடி, சொன்ன நேரத்துக்குள் ராம லஷ்மணர்களை கடத்திச் சென்று விட்டானே. இப்போதென்ன செய்வது ?’ என யோஜிக்கலானார்கள். அவர்களுக்கு எந்த உபாயமும் தெரியவில்லை என்பதினால் அனுமார் விபீஷணனிடம் கூறினார் ‘ஐயா, விபீஷணரே, நான் செய்த தவறை நானே நிவர்த்திக்கிறேன். நீர் எமக்கு பாதாள இலங்கைக்கு செல்லும் வழி மட்டும் கூறுவீராக’ என்று கேட்டார்.

விபீஷணர் கூறினார் ‘ஐயா அனுமந்தரே, பாதாள இலங்கைக்கு போவது அத்தனை எளிதல்ல. அது ரொம்பவே கடினம் என்பதால் நானொரு உபாயம் சொல்கிறேன்……..கேளுமையா. நடு சமுத்திரத்திலே லட்ஷக்கணக்கான கடல் தாமரை படர்ந்திருக்கும். அவற்றில் ஒரு தாமரை பெரியதாகவுமிருக்கும். சரீரத்தை சுருக்கிக் கொண்டு அதன் தண்டுக்குள்ளே புகுந்து சென்றால் பாதாள இலங்கையின் அக்னிக் கோட்டை முதலில் தென்படும். அந்த கோட்டையின் உச்சியிலே மச்சவல்லனெனும் ஒரு ராட்ஷசன் இருப்பான். அவன் மகா பலசாலி. அவனை வெல்வது கடினம். அவனோடு ரெண்டரை லட்சம் சேனைகள் உண்டு. அவர்கள் ஒவ்வொத்தரும் ஒவ்வொரு விதத்தில் பலசாலிகள். தந்ரசாலிகள். அந்த கோட்டைகுள்ளே போனால் குளம் ஒன்று இருக்கும். அந்த ஊர் ஜனங்கள் எல்லாம் அந்த குளத்தில் இருந்துதான் பூஜைக்கு நீர் கொண்டு போவார்கள். அதையும் தாண்டிப் போனால் அந்த ஊரில் உள்ள அனைத்து கட்டடங்களும் அரண்மணை போலத்தான் இருக்கும். அங்கே போனால்தான் மயில் ராவணனின் அரண்மனை எதுன்னு கண்டு பிடிக்க முடியும்.  ஏனெனில் அவன் தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருப்பான். எது உண்மையான அரண்மணை என யாருக்கும் தெரியாது’

அதைக் கேட்ட அனுமரோ ‘இனியும் தாமதம் செய்வதில் பலனில்லை. உடனே கிளம்பணும்’ என தீர்மானம் பண்ணிக் கொண்டு பாதாள இலங்கையை தேடிக் கொண்டு கிளம்பினார். நடு சமுத்திரத்துக்கு சென்றவர் அங்கு ரெண்டு லட்சம் தாமரைகள் இருப்பதைக் கண்டு அவற்றில் பெரிய தாமரை செடியை தேடினார். அதை கண்டு கொண்டதும் தனது சரீரத்தை சுருக்கி வைத்துக் கொண்டு தாமரைத் தண்டில் உள்ளே ஒரு புகைப் போல புகுந்து சென்று பாதாள இலங்கையையும் அடைந்தார்.

அவர் அங்கு போனதுமே ‘இதென்ன நம் ஊரில் புதிய குரங்கு ஒண்ணு வந்துள்ளது’ என அனுமானை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டு இருந்த ராக்ஷசர்கள் அனுமானை சூழ்ந்து கொண்டு அவரை பிடித்துத் தாக்கப் பாய்ந்தார்கள். தன்னைப் பிடிக்க வந்த அனைவரையும் தாக்கிய அனுமான்  விஸ்வரூபத்தை எடுத்து அனைவரையும் தனது வாலில் சுற்றி கீழே அடித்தார். ராட்ஷசர்களை அவர் அடித்து அடித்து துவம்சம் செய்யத் துவங்க அந்த நேரம் பார்த்து அங்கு மச்சவல்லபனும் வந்து சேர்ந்தான். மச்சவல்லபனென்பவன் மயில் ராவணனின் நம்பிக்கைக்குரிய தளபதி. அந்த கோட்டையை பாதுகாக்க அவனை மயில் ராவணன் அமர்த்தியிருந்தான்.

அங்கு வந்த ஒரு வானரம் தம் வீரர்களை வெட்டி சாய்க்கிறதே என்று கோபம் கொண்டு ‘ஹேய் குரங்கே, நீ யாரடா இங்கு வந்து என் வீரர்களை அடிப்பது…..வா….வந்து என்னுடன் மோதடா’ என கோபமாக கத்திக் கொண்டே வந்து அவனும் அனுமாருடன் போர் செய்யலானான். இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டாலும், அனுமானால் மச்சவல்லபனைக் வெற்றி கொள்ள முடியவில்லை. மச்சவல்லபனாலும் அனுமாரை எளிதில் வெல்ல முடியவில்லை. ‘ஹைய் ….பூய் ….ஹூ…..ஹா…….ஹூ…ஹூ…..’ என இருவருமே கத்திக் கொண்டே முஷ்டியினால் இருவரும் ஒருவரையொருவர் அடித்தடித்துக் கொண்டு களைத்து விழுந்தார்களேயோழிய யாருக்கும் வெற்றி  கிட்டவில்லை.

அதைக் கண்ட அனுமானுக்கு ஓரே ஆச்சர்யம். அனுமார் நினைத்தார் ‘நான் இத்தனைபேரை அலட்சியமாக வென்றேன், கொன்றேன். இவனை ஜெயிக்க முடியவில்லையே. யார் இவன் இத்தனை பராக்கிரமசாலியா இருக்கான்?’. ……..மூச்சிரைத்து எழுந்திருக்க முடியாமல் இருவரும் கீழே வீழ்ந்து கிடக்க மச்சவல்லபனிடம் அனுமான் கேட்டார் ‘பிள்ளாய், நீர் யார்? இத்தனை பலசாலியான உம்முடைய தாயாரும் தந்தையும் யார் என்பதை நான் உமக்கு எதிரியானாலும் எனக்கும் கூறுவீரா?’.

அதைக் கேட்ட மச்சவல்லபன் ‘…வானரமே…..வாரும்….நீர் யார் என்னைக் கேள்வி கேட்க? நானெதற்கு உமக்கு பதில் கூற?.  குலம் கெட்டவனே, சண்டை  செய்ய வக்கில்லாமல் என்ன திசை திருப்பு முயல்கிறாயா….வா….எழுந்து வா…சண்டையிடுவோம்’ என ஆக்ரோஷமாகக் கூறி எழுந்திருக்க முயல, அவனாலும் எழுந்திருக்க முடியாமல்   கீழே விழுந்து கிடந்தான்.

அதைக் கேட்ட அனுமார் மீண்டும் கேட்டார் ‘இளம் பிள்ளாய் நீ என்ன சொன்னாலும் எனக்கு கோபம் வரவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை.  நான் சொல்வதைக் சற்றே காது கொடுத்துக் கேளு. ஜாதி குலம் கெட்டவனே என்று எம்மைக் கூறினீரே. நான் என்ன குலம் என்பதயும் பின்னர் சொல்லறேன். முதலில் இதைக் கேளும்……….. நான் உம்மிடம் தோற்று விட்டேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். நான் மூன்று உலகிலும் பலருடனும்  சண்டைப் போட்டு அவர்களை எல்லாம் பந்தாடி துவம்சம் செய்திருக்கிறேன். அதென்ன பாவமோ உம்மை என்னால் வெல்லவும் முடியவில்லை. கொல்லவும் முடியலே. நான் வானரமாவே இருக்கேன். ஆனாலும் என் பேரில் தயை செய்து நான் இங்கிருந்து போகும் முன் நீர் யார் என்பதையும், இத்தனை பராக்கிரமசாலி நீர் ஏன் மயில் ராவணனிடம் சேவகம் செய்கிறீர் என்பதையும்  கூறையா’ எனக் கைகளைக் கூப்பிக் கேட்டார்.

நல்லதொரு வீரன் நம்பிக்கை இழந்தவனைக் கொல்ல மாட்டான் என்பதை நன்கே அறிந்திருந்த மச்சவல்லபன் நெஞ்சில் ஈரம் பூத்தது. ராட்ஷசனாக இருந்தாலும் சாஸ்திரமும் தெரிந்தவன். பண்பும் கொண்டவன். விதியாலே இங்கு சேவகம் பண்ண வந்து விட்டவன். கைகூப்பிக் கேட்பவரை கொல்வது மகாபாபம் என்பதை அறிந்தவன். அவனுக்கிருந்த அந்த நல்ல குணத்துக்கெல்லாம் கூட ஒரு காரணம் இருந்தது. அவன் வந்த கோத்திரம் அப்படி. அவனும் பிறவியிலேயே ராட்ஷனும் இல்லை, அசுரனும் இல்லை,

அவன் யார்? மச்சவல்லபன் தன்னைப் பற்றி சொல்லலானான் ‘வானவ  புருஷரே, உம்மைப் பார்த்து பரிதாபம் அடைகிறேன். உம்மைக் கொல்ல என் மனது இடம் கொடுக்கவில்லை. அதற்கான காரணம் எனக்கும் தெரியலே. என் அப்பன் யார் என்று கேட்கிறீரே, அதையும் சொல்றேன். செவி மடக்கிக் கேளும். என் தகப்பன் மும்மூர்த்திகளையும் ஒத்த பலமுடையவர். சுத்த வீரர், பராக்கிரமசாலி. ராம நாமத்தை தவிர வேறெதுவும் சொல்லாதவர் என்று கேள்வி. அவர் பெயரை அனுமன் என்கிறார்கள். என்னோட தாயாரும் திமிதி என்ற மீன் ஆவாள். அவள் இந்த சமுத்திரத்துலேதான் இருந்தாள். இப்ப எங்கேன்னு தெரியலே. என் பாட்டனார் வாயு பகவான் என்று கேள்வி. என்னை மச்சவல்லபன் என்று அழைப்பார்கள்’

மச்சவல்லபன் கூறியதைக் கேட்ட அனுமார் திடுக்கிட்டார் ‘அய்யய்யோ…, இதென்னடா கூத்து? நான் இவனோட தந்தையா? என் தந்தை வாயுவும் இவனுக்கு பாட்டனா? இதென்ன கூத்து? இதென்ன புதுக்கதை? இல்லை……..இருக்காது………. என் தந்தைக்கு  என்னைப் போலவே இன்னொரு பிள்ளையும் இருக்கானா? அவர் பெயரும் அனுமனா? நான் மட்டும்தானே அனுமார்!!!! எங்கிருந்தையா வந்தார் இன்னொரு அனுமார் ……..எங்கிருந்து வந்தார்? நானோ இதுவரைக்கும் கட்டை பிரும்மச்சாரி. திமிதி என்பவளை என் மனைவி என்கிறானே. நான் இலங்கைக்கு சென்று இருந்தபோது அங்கு பல ஸ்த்ரீகளும் தாறுமாறாக கிடந்தபோதும் யாரையுமே ஏறெடுத்தும் பார்க்காத நானா திருமணம் ஆனவன்? இதென்ன கோலம்….ஹே…….ராமா…என் பிராணநாத..’ என தன்னுள்ளேயே குழம்பித் தவித்தவர் மச்சவல்லபனிடம் மீண்டும் கேட்டார்.

‘எழுந்து நில்லும் பிள்ளாய் ….இவன்  திரும்பத் திரும்ப கேட்கிறான் என கோபிக்காதேயும்…பொய் எதையும் சொல்லாதீர் ….வேறெந்த கதையும்  கூறாதேயும் …..எனக்கொரு விஷயம் தெளிவாய் கூறுவீரா. உம்முடைய தந்தை யாரோ அனுமன், அனுமான் என்கிறீரே, யாரைய்யா அந்த அனுமன்? அவர் இப்போ எங்கிருக்கிறார்? யாருக்கு சேவகம் செய்யறார்? நீர் ஏன் அவரை விட்டுட்டு இங்கு வந்து விட்டீர்? எதையும் ஒளிக்காமல்   சொல்லுமையா ?’

மச்சவல்லபன் கூறலானான் ‘அட வானரேஸ்வரா, உமக்கு என் மீது சந்தேகமா? நானொண்ணும் பொய்யை கூறல ….கதையை கூறல. உண்மைதான்  சொல்லறேன். அதையும் கேளும். என் அப்பன் ராம லஷ்மணர்களுக்கு சேவகம் செய்கிறார். சுக்ரீவருக்கு அவரும் ஒரு மந்திரியாவார்’ என்று கூற அனுமார் மீண்டும் அவனை சீண்டும் விதத்தில் சொன்னார் ‘பிள்ளாய், நீர் மூட்டை மூட்டையாய் பொய் மட்டுமே கூறுறீர். நான் அனுமானை அறியாதவனென நினைத்தாயா? அவர் கட்டை பிரும்மச்சாரி ஆச்சே. அவருக்கு  மனைவி எது ? மனைவி இல்லாதவருக்கு பிள்ளை எங்கிருக்கும்? உண்மையைக் கூறு. சத்தியமாகக் கேட்கிறேன்…உண்மையை மட்டுமே சொல்லோணும்’ என்று கூற பொங்கி எழுந்தார் மச்சவல்லபன்.

‘ஒய் …..வானரமே ….என் பொறுமையை சோதிக்க வேணாம். நான் பொய் சொல்றேன் என நினைத்தீரோ ? ராமனின் மனைவி சீதையை ராவணன் தூக்கி  சென்ற  பின் சீதையைக் காணாமல் அனைவரும் தேடிக் கொண்டு இருந்தபோது, என் தந்தை  அனுமானும் தன் பங்குக்கு சீதையை தேடி சமுத்திரத்தின் மீது வியர்க்க வியர்க்க பறந்து கொண்டு இருந்தபோது அவர் உடம்பில் இருந்து வழிந்த வேர்வை சமுத்திரத்தில் மீனாக இருந்த என் தாயார் திமிதியின் வாயில் வந்து விழ அவள் அதை முழுங்கினாள். அதனாலே கர்பமுற்ற அவளுக்கு  நானும் அனுமானின் மகனாகப் பிறந்துட்டேன். நான் பிறந்ததும் என்னை சமுத்ர கரையிலே விட்டுட்டு அவளும் போயிட்டா.

அப்போ சமுத்ர கரையிலே கிடந்த என்னை அந்த பக்கமா போன என் பாட்டனார் வாயு பகவான் பார்த்துட்டு கீழே வந்து என்னை உச்சி மோர்ந்து கொஞ்சினார். என்னோட அங்க லட்ஷணத்தையும் பார்த்த  அவரும் என்னை அவர் பேரன் என்பதை புரிந்து கொண்டு எனக்கு என்ன வேணும்னு கேட்க நானும் என் அப்பனைப் பார்க்கோணும் என்று கேட்டேன். அதுக்கும் மேலே என் அப்பனுடைய பலத்துக்கு குறையாத பலம் வேண்டும் என்றும் கேட்டேன். அதற்கு அவரும் ‘உன் தந்தையும் சில காலம் பொறுத்தே உனக்கு கிடைப்பார். அவர் சீதையை தேடி இலங்கைக்கு சென்றுள்ளார்’ என்ற விவரம் கூறினார். அதையே கூறிட்டு என் அப்பனாருக்குரிய பலத்தையும் எனக்கும் தந்தார். இப்போ புரியுதா என் அப்பனார் யார் என்று? நான் சொன்னதெல்லாம் உண்மை வானரமே’ இப்படியாக மச்சவல்லபன் சொல்லவும் அனுமன் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதபடிக் கூறலானார்.

‘மகனே, நான்தானடா உன் அப்பன் ……நானேதாண்டா அந்த அனுமன்’ என்று கூற மச்சவல்லபன் திகைபுற்றான். வெட்கம் கொண்டு அடங்கி நின்றான். ‘ நீரா என் தந்தை?. அதெப்படி’ என ஆச்சர்யத்தோடு கேட்க அவனை வாரி எடுத்து உச்சி மோர்ந்து தலையைக் கோதி விட்டபடி கண்ணீர் விட்டார் அனுமன். ‘குமரா, நான் உன்னை இந்தக் கையாலா அடித்து விட்டேனடா… ரொம்ம வலிக்குதா குமரா’ என ஆறுதல் கூறினார். அதன் பின் இருவரும் குசலம் பரிமாறிக் கொண்டு தத்தம் கதையைக் கூறிக் கொண்டப் பின்னர் அங்கு தான் வந்தக் கதைக்கான காரணத்தையும் அனுமார் மச்சவல்லபனுக்கு சொல்லத் தொடங்கினார்.

‘என் பிள்ளாய்….நான் உனக்கொரு உண்மையை சொல்றேன். கேளும். நான் வணங்கும் நாயகனின் மனைவியை பத்து தலை ராவணன் தூக்கிப் போய் சிறையில் வைத்தான். அவளை விடுதலை செய்து அழைத்துப் போக ராமன் தன் சகோதரன் லஷ்மணனையும் சுக்ரீவன் சேனையையும் அழைத்து வந்து இலங்கையில் யுத்தம் செய்தார். அதிலே பத்து தலை ராவணனின் சைனியங்கள் நிர்மூலமாகி, அவன் சந்ததியினரும் அழிந்து போக, அவனும் தனது தாயாதியான மயில் ராவணனின் உதவியை நாடினான். மயில் ராவணனும் தன் தாயாதிக்கு அநீதி வந்துதுட்டதென நினைத்து ராம லஷ்மணர்களை கொன்று பழி வாங்குவதாக சபதமும் செய்து, அவர்களை வஞ்சகமாக இங்கே கொண்டு வந்துட்டான். அவர்களை காளிக்கும் பலி தரப்போறானாம். நியாயமில்லாத, நேர்மை இல்லாத பத்து தலை ராவணனுக்காக அவன் தாயாதி மயில் ராவணன் ராம லஷ்மணர்களை கொல்வதும் நியாயமில்லையே. ஒருவன் மனைவியை இன்னொருத்தன் அபகரிப்பது தர்ம சாஸ்திரத்திலுண்டா? நீரே சொல்லும் பிள்ளாய்………தர்மம் பேசும் நீரே சொல்லும். அதனால்தான் உள்ளே போய் மயில் ராவணனைக் கொன்று ராம லஷ்மணர்களை மீட்கோணும் என்று நான் வந்திருக்க என்னை தடுப்பது உனக்கே நியாயமாப்படுதா ‘ என்றார்.

அதைக் கேட்ட மச்சவல்லபனும் நிலை குலைந்து போய் கூறுகிறான் ‘எனக்கு தந்தையானவரே, நீர் கூறியது என் மனதுக்கும் புரிகிறது. ஆனால் என் நிலையைப் பாருமையா? நானும் தர்மம் காப்பவன். அதை மீறாதவன். என்னை பெற்றெடுத்தவள் என்னை சமுத்ரகரையிலே விட்டு சென்ற  பின்னே சமுத்ரத்தைத் தாண்டி வேட்டையாட வந்த மயில் ராவணன் என்னைப் பார்த்தார். அவனுக்கோ பார்த்த மட்டிலேயே ஜாதகம் பூராவும் புரிந்திடும். அத்தனை வித்தை, அத்தனை சக்தி உள்ளவன். என்னப் பார்த்ததும் ‘அடே பொடிப்பயலே…… உன்னை யாரும் ஒண்ணும் பண்ணிட முடியாது. நீயொரு பராக்கிரசாலி, உன்னை யாரும் ஜெயித்திட முடியாது’ என்று கூறியவன் நான் சிறுவனென்றும் பார்க்காமல் என் முன்னே தண்டனிட்டு அமர்ந்து என் காலையும் தொட்டு வரம் ஒண்ணு கேட்டான்.

இதென்னடா, இவன் போய் என் காலில் விழுகிறானே, என்னிடம் போய் வரமும் கேட்கிறானே என்றெண்ணி ‘ஐயா பெரியவரே சிறுவன் என் காலில் நீர் ஏன் விழுகிறீர்?’ என்று கேட்டபோது, அவர் கூறினார் ‘நான் ஆளும் பாதாள இலங்கையை பாதுகாக்க பராக்கிரமசாலி ஒருவனை தேடினேன். வாயு பகவான் ஆசிர்வாதம் கொடுத்த நீதானப்பா அதற்கு ஏற்ற ஆள் என என் மனது கூறுது. அதான் நீ வந்து என் அரண்மணைய காக்கோணும்’ என்று கேட்க நானும் இங்கு வந்து சிறு வயது முதலே என் சேவகத்தை மயில் ராவணனுக்கும் செய்கிறேன். அதனால்தான் இதுவரை என் முகம் கோணாமல், எனக்கு வலி இல்லாமல், நோவு இல்லாமல், சோறு போட்டு வளர்த்தவனுக்கு நன்றியோடு இருக்கிறேன். அதனால் உம்மை எப்படி ஐயா நான் உள்ளே விடமுடியும்? அது என் மன சாட்சிக்கு விரோதம் இல்லையா? தர்ம நெறிக்கு முரணானது இல்லையா? நான் உயிருடன் இருக்கும்போது எனக்கு சோறு போட்டவனுக்கு துரோகம் செய்வது சரியா?’ என்றும் கூற இருவரும் இருவர் பக்கமும் நியாயம் இருந்ததால், இருவரும் தர்ம நெறியை மீறக் கூடாது என்பதால் வேறென்ன வழி செய்யலாம் என யோசனை செய்தார்கள்.

சற்று நேரம் பொறுத்து மச்சவல்லபனே மௌனம் கலைத்துச் சொன்னான் ‘பிதாவே, உங்களுக்கு அபகீர்த்தி என்றால் எனக்கும் அது வந்து சேருமல்லவா. நான் உயிரோடு இருக்கும் வரையில் மயில் ராவணனுக்கு துரோகம் செய்ய மாட்டேன். அதை செய்வது தர்ம நெறிக்கு முரணானது. மயில் ராவணனது அந்தரங்க விஷயங்களை நான் கூறுவது அதை விட பெரிய துரோகம், அதை விட பெரும் பாபமாகும். தாமரை மலர்த்தண்டில் நீர் புகுந்து வந்தபோது அதைக் காத்து நின்ற  இரண்டரை லட்சம் அசுரர்களை கொன்று விட்டுத்தானே இங்கு வந்தீர்கள். ஆனால்  இங்கு நானினிருக்கும் வரை என்னையும் உம்மால் கொல்லவும் முடியாதென்பதற்கு காரணம் எம் பாட்டனாரும் உம் பிதாவும் ஆன் வாயு பகவான் கொடுத்த வரமல்லவா. அதனாலே உம்மால் என்ன ஜெயிக்க முடியாது. ஆகவே அதற்கொரு ஒரு காரியம் பண்ணினால்தான் நீங்கள் கோட்டைக்குள் நுழைய முடியும். என்  உயிர் நிலை நடு மார்பில்தான் உள்ளது. ஆகவே ஓங்கி ஒரு குத்து என் நடு மார்பில் விட்டால் நான் மூர்ச்சை ஆகி விடுவேன். அதன் பின் நீங்கள் சாவகாசமாக உள்ளே சென்று காரியத்தை முடிக்கலாம். அதை தடுக்க நானும் இருக்க மாட்டேன்’ என்று கூற அனுமார் கண்ணில் நீர் கொட்டியது

‘என்னே உன் சாமர்த்தியம் என் புத்திசாலிப் புத்திரனே, நான் என்ன சொல்வதென்று எனக்கே புரியவில்லை. உன்னை நான் எப்படிக் கொல்வேன்?. புத்திர சோகம் மகா சோகம் அல்லவா ? நன்னெறியை கடைபிடிக்கும் தர்ம துரையான பிள்ளையை தகப்பன் கொல்லலாமா? இது தர்மமாகுமா’ எனக் கூற மச்சவல்லபன் கூறினான் ‘பிதாவே, தர்மமும் நியாயமும் பேசும் நேரமல்ல இது. அதனாலேதான் கூறுகிறேன்  பிதாவே…… இப்போது அது நடைமுறைக்கு ஆகாது. நீர் நேரம் கடத்தினால் நீர் வந்த காரியமும் ஆகாது. இப்போ மயில் ராவணன் ராம லஷ்மணர்களை பலி தர ஏற்பாடுகளை செய்யவும் ஆரம்பித்திருப்பான்.  மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு என் நடு மார்பிலே குத்துவீராக. அப்படிக் குத்தினால் நான் இறந்து போக மாட்டேன். ஐம்பது ஜாமமும் மயங்கி மட்டுமே கிடப்பேன். அதன் பின் பாதாள இலங்கைக்குச் சென்று ராம லஷ்மணர்களை காப்பாற்றும்’ என்று கூற அனுமானும் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு தனது ஐந்து விரல்களையும் மடக்கி வைத்துக் கொண்டு, ஓங்கி ஒரு குத்தை மச்சவல்லபனின் நடு மார்பில் விட அப்படியே மயங்கி சாய்ந்தான் மச்சவல்லபன்.

இனி அடுத்த ஐம்பது ஜாமத்துக்கும் அவன் விழிக்கவே மாட்டான். மயங்கியே கிடப்பான். மயங்கிக் கிடந்த மச்சவல்லபனும் மனதுக்குள்ளேயே நினைத்தான் ‘நான் முழிக்கும் முன்னேயே மயில் ராவணனை வதம் பண்ணி, ராம லஷ்மணர்களை மீட்டுக் கொண்டு என் தந்தை  வந்துடலாம். அப்படி வரும்போது நானும் அவர்களுடைய ஆசிகளை பெற்றுக் கொண்டு இத்தனைனாளும் நான் செய்த பாவத்துக்கெல்லாம் பரிகாரமும் பெறலாம்’.

வேற வழியே இல்லை என்பதால் அனுமான் மச்சவல்லபனை மயக்கமடையச் செய்த பின்னால் அடுத்து அவன் காவல் காத்திருந்த கோட்டைக்குள் குதிக்க அந்தக் கோட்டையோ செங்கலினால் கட்டப்பட்டு இருந்ததைக் கண்டார். ‘அட….இது வெறும் வெறும் செங்கல் கோட்டைத்தானே இது என நினைத்து அதன் அருகில் சென்றால் அதை சுற்றி நாலாயிரம் லட்ஷ வீரர்கள் காவலில் இருந்ததைக் கண்டார். அத்தனை பேரையும் ஒரேடியாகக் கண்ட அனுமானுக்கு வேர்த்து வியர்த்தது. ‘இதென்னடா, இத்தனை பேரையும் சமாளித்து உள்ளே போவதற்குள் காரியம் கேட்டுடுமே’ என நினைத்தவர் கண்ணில் அரண்மனை உயரத்துக்கு அங்கிருந்த பிரும்மாண்டமான பெரிய மரம் ஒன்று கண்ணில் பட்டது. ‘இது போதும் நமக்கு’ என எண்ணிக் கொண்டே விஸ்வரூபம் எடுத்து அந்த மரத்தை வேரோடு பிடுங்கி அசுரர்கள் சுதாரிக்கும் முன்னேயே அவர்களை அதைக் கொண்டு அவர்களை தாக்கத் துவங்க அங்கிருந்த பாதி அசுரர்களும் அடுத்தகணமே மாய்ந்து வீழ்ந்தார்கள். மிச்சமிருந்த அசுரர்கள் வாளையும், கதையையும், ஈட்டியையும் கொண்டு வந்து அனுமானை தாக்கத் துவங்க அத்தனை பேரையும் அந்த மரத்தாலேயே நாலு பக்கமும் தாக்கிக் தாக்கி அழித்தார். அவர்களை சமாளிப்பதற்குள் அறுபது லட்சம் யானை, அறுபது லட்சம் குதிரை, நூறாயிரம் லட்சம் சேனைகள் என பலதும் கடல் அலைப் போல வந்து கொண்டே இருக்க நாலு பக்கமும் சுழன்று, சுழன்று மரத்தாலே அடித்த அடியில் அத்தனைபேரும் கொத்துக் கொத்தாய் செத்து விழுந்தார்கள். எங்கிருந்து வந்ததோ பலம் அனுமனுக்கு! அத்தனை வேகமாக சுற்றி, சுற்றி ஒரு சூறாவளிக் காற்றுப் போல அடிக்க அடிக்க அனைவரும் செத்து விழுந்தார்கள். அவர்கள் அனைவரும் யமலோகம் போனதும் அரண்மனைக்குள் நுழைந்தால் அடுத்து தென்பட்டது பித்தளையிலான கோட்டை!!

அதை சுற்றியும் லட்ஷ லட்சமாக அசுர சேனை. அடுக்கடுக்காக ஆயுதம் பலவற்றையும்  தலையாணி போல தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு காவலில் இருக்க அவர்களையும் சமாளிக்க வேண்டி இருந்தது அனுமனுக்கு. அடுத்து சில நொடிகளில் சுழன்று, சுழன்று அத்தனை பேரையும் துணியைக் கிழிப்பது போல கந்தல் கந்தலாக்கி அழித்தப் பின் உள்ளே சென்றால் அங்கு செப்பிலான உலோகத்தில் கட்டப்பட்டு இருந்த கோட்டை வந்தது. ‘இதென்னடா அடுத்தடுத்து உலோகக் கோட்டையாக இருக்கிறதே’ என நினைத்தவாறு அதையும் நோக்கிச் சென்றால் அங்கு இருபது லட்சம் அசுரப் படையினர் காவலில் இருப்பதைப் பார்த்தார். மெல்ல மெல்ல நகர்ந்து போய் தொப்பென அவர்கள் மத்தியில் குதித்தவர் விஸ்வரூபம் எடுத்து அனைவரையும் மிதித்தே அழித்தார். அவராலே அடிக்கடி விஸ்வரூபம் எடுக்க முடியாது. நிஜமான காரணம் இருந்தால், அதிலே நியாயமும் இருந்தால் மட்டுமே விஸ்வரூபத்தை எடுக்க முடியும் என்ற விதியும் அவருக்கிருந்தது. அதனாலேதான் நிஜமாவே தேவை என்றால் மட்டுமே விஸ்வரூபத்தை எடுக்க முடியும் என்பதால் அதுவரை அவர் விஸ்வரூபத்தை எடுக்கவில்லை. களைத்துப் போய் இருந்ததினாலேயும், அடுத்தடுத்து லட்ஷ அரக்கர்களைக் கொன்றதினாலும்  உடல் பலமும் குறைந்திருந்ததாலும்  அவருக்கு தேவையாயிருந்தது விஸ்வரூபம். ஆகவேதான் அதை எடுத்து அசுரர்களை எளிதாக அழித்து விட்டு இன்னும் உள்ளே செல்லலானார்.

அடுத்து வந்த வெங்கலக் கோட்டையில் காவலில் இருந்த இருபத்தி எட்டு லட்சம் அசுரப் படையினரையும் அவ்விதமே துவம்சம் செய்தப் பின் சென்றால் வந்தது பொன் கோட்டை. இப்படி அடுக்கடுக்காய் கோட்டை வந்து கொண்டே இருக்க அங்கிருந்த காவலர்களைக் கொன்று விட்டு உள்ளே சென்ற அனுமானும் களைத்தே போனார். பொன் கோட்டைக்குக் காவலில் இருந்ததோ அறுபது லட்சம் அரக்கர்கள். அவர்களையும் அழித்தப் பின் வந்த பவழக் கோட்டையில் இருந்த முப்பது லட்சம் அசுரர்களையும் கொன்று குவித்தப் பின் சென்றால் தூரத்தில் தெரிந்தது தங்கக் கோட்டை.

பவழக் கோட்டைக்கு தள்ளி பல கஜதூரத்தில் ஒரு நந்தவனத்தின் மத்தியில் இருந்தது அந்த தங்கக் கோட்டை. அதற்குள்ளே  மயில் ராவணனும் இருந்தான். காளி பீடமும் இருந்தது. கோட்டையை சுற்றி வெளிப்புறத்தில் நந்தவனம். மனதுக்கே ரம்யமாக இருந்த அதில் ஒரு மரத்தின் உச்சியில் சென்று சிறு உருவில் அமர்ந்து கொண்டார் அனுமார். அந்த கோட்டைக்குள் நுழைவது அத்தனை எளிது அல்ல. அங்கிருந்த அரக்கர்கள் சாமர்த்தியசாலிகள். கோட்டை வாசலிலும் பல மந்திர யந்திரங்களும் வைக்கப்பட்டு இருந்தன. அந்த வனம் முழுவதுமே தந்திர மந்திர சக்திகளால் படைக்கப்பட்டு இருந்தன போலும். அதனால்தான் அனுமானுக்கும் தனது சக்தி குறைந்து உள்ளது தெரிந்தது. அங்கு தம்மால் அசுரர்களை நேரடியாக மோதி யுத்தம் செய்ய முடியாது என்பதும் அரண்மனைக்குள் சென்று அங்கிருந்து அவர்களை பின்புறமாக தாக்கினால் மட்டுமே அவர்களைக் கொல்ல முடியும் என்பதையும், அதற்குக் காரணம் அரண்மனையின் வெளிப்புறத்தில் இருந்த பூமி முழுவதும் மந்திரங்களினால் கட்டி வைக்கப்பட்டு உள்ளது என்பதினால் அதில் காலை வைத்தாலே பாதி பலமும் போய் விடும் என்பதையும் முதலிலேயே மச்சவல்லபன் ஜாடைமாடையாகக் கூறி இருந்தது மூலம் அறிந்திருந்தார். ஆகவே அரண்மனைக்கு உள்ளே எப்படி செல்லலாம் என யோசனை செய்யலானார்.

பவழக் கோட்டைக்கு உள்ளே இருந்து வெளியே வந்த ராக்ஷசர்கள் எல்லாமே சரியாக இருக்கிறதா எனப் பார்த்தப் பின் தாரை தம்பட்டங்களை அடித்து வெளியில் காவலில் இருந்தவர்களுக்கு எச்சரிக்கை தந்தப் பின் மீண்டும் கோட்டைக்குள் சென்று விட்டார்கள். அவர்கள் சென்றப் பின் யாருமில்லை என்பதை அறிந்து கொண்டவுடன் அனுமார் நந்தவனத்தில் இருந்த மரத்தில் இருந்து கீழிறங்கி வந்து நாலாபுறமும் பார்த்தார்.

அனுமான் நின்றிருந்த இருந்த இடங்களேல்லாமே மந்திர சக்தியால் கட்டப்பட்டு இருந்ததால் அவருடைய பலமும் அங்கே குறைந்து இருந்தது. அதே சமயத்தில் மயில் ராவணன் தன் சேனைகளுக்கெல்லாம் சக்தி உள்ள தாயத்தைக் கட்டி இருந்ததால் அவர்களுடைய பலம் குன்றவில்லை. தாயத்தில்லாத யாரேனும் இருந்தால் அவர்களது பலத்தில் பாதி குறைந்திடும். அதனால்தான் இத்தனைக் கட்டுக் காவலை மீறி எப்படி உள்ளே செல்வது என்ற யோசனையில் அனுமான் இருந்தபோது அரண்மனைக்குள்ளே ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தது.

அரண்மனையிலே மனைவியோடு படுத்திருந்து நித்திரையில் இருந்த மயில் ராவணன் ‘நேரமாச்சே’ என நினைத்துக் கொண்டு அவசரம் அவசரமாக எழுந்தான். ‘நாழிகையும் ஆச்சே. இன்னும் இரண்டு ஜாமமே பாக்கி. அதற்குள் ஆகவேண்டிய காரியத்தையும் பண்ணிட்டு ராம-லஷ்மணர்களை காளிக்கு பலி தரோணும்’ என நினைத்தவன் ‘அபிஷேகத்துக்கு தண்ணி கொண்டு வரணுமே. அதுக்கு தமக்கையை அனுப்பணும்னு அல்லவா விதி இருக்கே’ என்று எண்ணி  காவலில் கை விலங்கோடு கட்டி வைத்திருந்த தூம்ரதண்டியை அழைத்து வரச் சொல்லி அவளிடம் ஒரு தங்கக் குடத்தையும் தந்து ‘சீக்கிரமா போய் உத்தியான வனத்திலிருந்து ஒரு குடம் தண்ணி கொண்டுவாடி’ என ஆணையிட்டான்.

தூம்ரதண்டியும் ‘இத்தனை நாளும் நம்மை கையிலும், காலிலும், மார்பிலும் விலங்கு கட்டி பூட்டி இருந்தான். ஒருவேளை இன்னிக்கு என்னையும், என் பிள்ளையையும் காளிக்கு பலி தரப்போறானோ? அதனால்தான் என்னை தண்ணி கொண்டு வா என்று அனுப்புறானோ? போகட்டும். என்னிக்காவது ஒருநாள் செத்துத்தானே ஆகணும். கைவிலங்கோடு, கால் விலங்கோடு நாள்பூர அவதிபடுவதை விட இப்போவே செத்து தொலைக்கலாம்’ என மனதில் துக்கப்பட்டுக் கொண்டே இருக்க அவள் மனதிலே ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களை நொடிப் பொழுதில் அறிந்து கொண்டுவிட்ட மேதாவி மயில் ராவணன் அவளிடம் கூறினான்

‘அடியே தூம்ரதண்டி , உங்கள் இருவரையும் வெட்டிக் கொல்ல கண்சிமிட்டே போதுமடி எனக்கு. அதை இப்போவே கூட செய்ய முடியுமே. ஆனால் நீ நினைக்கற மாதிரி ஒங்க ரெண்டுபேரையும் காளிக்கு பலி கொடுக்க தண்ணி கொண்டு வரச் சொல்லலேயடி ….. நான் முதலில் அந்த ராம லஷ்மணர்களை காளிக்கு பலி தரணும்டீ. அதனால்தான் சொல்லறேன் , போ….போய் யாருக்கும் இதைக் சொல்லாம சீக்கிரமா கிளம்பி குளத்துல இருந்து தங்க குடத்துல தண்ணீ கொண்டு வா’ என அவளை விரட்டினான்.

‘ஐயோ….அண்ணா…நீ ராம லஷ்மணர்களை காளிக்கு பலி கொடுக்கப் போறியா? இந்த பாவ காரியத்தைப் பண்ண நானா உனக்கு கிடைத்தேன்? நான் இந்த பாவ காரியத்தைப் பண்ணப் போகமாட்டேன் அண்ணா’ எனக் கதறியவளை நோக்கி உருவிய தன் வாளை காட்டி ‘ போ…போய் சீக்கிரமா தண்ணீ கொண்டு வா….. இல்லேன்னா உன்ன வெட்டமாட்டேண்டீ…அதுக்கு பதிலா உன் பிள்ளைய வெட்டி கண்ட துண்டமாக்கி மிருகத்துக்கு போட்டுடுவேண்டீ’ என்று கோபமாக மயில் ராவணன் கூறினான்.

அதைக் கேட்டவள் ‘ஐயோ அண்ணா….அப்படியெல்லாம் செய்துடாத …..கொல்லர்தூன்னா என்னையும் சேத்தே கொன்னுடு’ என்று சொல்ல ‘அப்படீன்னா போ…போய் சீக்கிரமா தண்ணீ கொண்டு வா…’ என்று அவளிடம் கூற அவளும் பயந்து போய் நந்தவனத்துக்கு வந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண்ணீர் விட்டு அழத் துவங்கினாள்.

‘ஐயோ ஆத்தாடி….இப்படி ஒரு பாபத்தைப் பண்ண நானா கெடச்சேன்? ரெண்டு புண்ணிய புருஷனுக்கும் இப்படியொரு நிலைமை வரணுமா? ஆத்தாடி…என் அண்ணன் செய்வது தப்படி…..  நான் யாருகிட்ட இதைக் கூறி அழுவேன்? வாலினாலே கோட்டைக் கட்டி அத்தன பேரையும் காத்து நின்ற அந்த வானரக் குரங்கு அனுமார் இங்கு வந்து என் அண்ணனைக் கொன்று அந்த புண்ணிய புருஷர்களை மீட்காதோ. நானென்ன செய்வேன்? ………..இதை செய்யலேன்னா என் பிள்ளையும் வெட்டிடுவேன்  இந்த மகாபாவி ……… மகா பாவி சுகமா இருப்பானா? ……..அவனுக்கும் கேடு வாராதோ’ எனப் பலவாறாக புலம்பினாள். பூமியிலே புரண்டு புரண்டு அழுதாள்.

அவள் ஏன் அப்படி அழுது கொண்டிருக்கிறாள் என்பது அனுமானுக்கு புரியவில்லை. ஆனால் நடப்பது அனைத்தையும் மரத்தின் மீதிருந்த அனுமார் பார்த்துக் கொண்டே இருந்தார். அவர் கவலையெல்லாம் கோட்டைக்கு உள்ளே எப்படிப் போவது? உள்ளே போனால்தானே வெளியில் உள்ள அசுரர்களை அழிக்க முடியும். அவர் மனதுக்குப் புரிந்தது வெளியில் வந்து புலம்பிக் கொண்டிருக்கும் பெண்மணி கெட்டவள் அல்ல என்பது. ‘இவள் மூலமாவது நமக்கு ராம லஷ்மணர்கள் சிறை வைக்கப்பட்டு உள்ள இடம் தெரியவாராதோ. இவளை நம் கைக்குள் போட்டுக் கொண்டு காரியத்தை முடிக்கலாமே’ என எண்ணிக் கொண்டு மரத்தின் மீதிருந்து ஆசிரி கூறுவது போல அவளுக்கு மட்டுமே கேட்கும்படி கூறலானார்.

‘இங்கே பாரும் பெண்ணே….அபலைப் பெண்ணே, நீ ஏன் வருந்தி அழுகிறாய்? அழுதழுது ஏன் வாடி வதங்குறே? உன்னையும் சேர்த்தே  உன் மகனையும் காப்பாற்றலாம். அதற்கும் உபாயமுள்ளது. அதுக்கும் நீ சரீன்னு சொன்னா அதையும் நாம் செய்வோம். ஆனா அதுக்கு உன் உதவியும் தேவையாகுமே’ என்றார். ‘இதென்ன மனிதக் குரலா இருக்குதே. ஒருவேளை மயில் ராவணனே என்னை சோதிக்க இப்படி ஒரு நாடகம் ஆடுவானோ? சரி நமக்கேன் வம்பு. தண்ணீ கொண்டு போய் கொடுத்து விட்டு பரிகாரமாக என் மகன் உயிரையாவது விட்டுடூன்னு கேட்கலாம்’ என்று எண்ணியவளாக தண்ணீர் எடுக்க தங்கக் குடத்தோடு குளத்தில் இறங்க அதுதான் தக்க தருமணம் என நினைத்த அனுமாரும் ஓடிப்போய் அவளருகில் நின்று கொண்டு கூறலானார் ‘அபலைப் பெண்ணே…உனக்கென்னம்மா அத்தனை சோகம்? ஆசிரி குரலில் உன்னிடம் பேசியதும் நாந்தானம்மா……ராம-லஷ்மணர்களைக் காப்பாற்ற வந்துள்ள நீ நினைக்கும் அந்த அனுமானும் நானேதானம்மா …… தயை செய்து இப்போ கூறு, ராம லஷ்மணர்களை மயில் ராவணன் எங்கே ஒளிச்சு வச்சிருக்கான்?. அங்கே எப்படிப் போவது என்று உனக்கு வழி தெரிந்தா அதையும் தயை செய்து கூறி அவர்கள் உயிரைக் காப்பாற்ற சீக்கிரமா உதவம்மா’ எனக் கெஞ்சினார்.

அவர் தன் அருகில் வந்து நின்றதுமே அவள் பயந்து போனாள். ‘வானரமே, நீர் யாரையா? மனிதக் குரலில் பேசுகிறீர்கள்…உம்மை மயில் ராவணன் அனுப்பி என்னை சோதிக்க சொன்னாரோ?’ ஆனால் அவள் பயத்துடன் தன்னைக் கேட்டதை அனுமான் தவறாக நினைக்கவில்லை. அவர் சொன்னார் ‘பெண்மணி….நீயும் நல்ல அம்மணிதான்…. நான்தானம்மா அந்த ராமதூத அனுமான். இதுவும் சத்தியம்….என்னை நம்பம்மா….அவர்களை மீட்கவே நான் இங்கு வந்தேன். கோட்டைக்குள் போகணும்….. மயில் ராவணனையும் தேடணும்……அதான் அந்த இடத்தை தேடி அலையறேன். அதனால்தானம்மா உன்னிடமும் இத்தனையும் கேட்கறேன்’

ஆனால் அவளோ அவரை இன்னமும் நம்பாதது மாதிரி சிறுது நேரம் அவரையே உற்று உற்றுப் பார்த்தப் பின் அனுமாரிடம் கூறலானாள் ‘வானரமே, நீர் உம்மை ராம தூதனான அனுமான் என்கிறீர். நீரோ குரங்காக இருக்கையில் மனிதக் குரலில் பேசுவதெப்படி சாத்தியமாகும் என்பதினால்தான் நான் உம்மையும் சந்தேகப்படுகிறேன். உம்மை மயில் ராவணன் மாற்று உருவில் என்னை வேவு பார்க்கவே அனுப்பி உள்ளதாகவே நினைக்கிறன். அதனால் முதலில் குரங்கான நீர் எப்படி மனிதக் குரலில் பேசுகிறீர் என்பதை எனக்கு தெளிவு படுத்தி, உம்முடைய உண்மையான உருவைக் காட்டும். அனுமானாக இருந்தால் நீர் விஸ்வரூபமும் எடுத்து அனுமான் சொரூபத்தையும் காட்ட முடியும் அல்லவா?’.

அதைக் கேட்ட அனுமானும் கூறினார் ‘அபலைப் பெண்ணே, ராக்ஷசர் வம்சத்தில் அவதரித்த நல்ல குணவதியே. எனக்கு மனித குரலில் பேச மட்டும் அல்ல எனக்கு அனைத்து சாஸ்திரங்களும், அறுபத்தி நாலு பாஷையும், நீதி நூலின் தர்க்கமும், ஈ எறும்புகளின் பாஷைகளும் கூட புரியும் அம்மா. இப்போ அதெல்லாம் கூற எனக்கும் நேரமில்ல. என் நிஜ சொரூபத்தைப் பார்த்தால் நீ பயந்துடுவாய் என்பதால்தான் உனக்கு அதைக் கட்ட தயக்கமாக உள்ளது. ஆகவே முதலில் ராம லஷ்மணர்கள் எங்கு உள்ளார்கள் என்பதை விரைவாகக் கூறம்மா’ என்று சொன்னதும் தூம்ரதாண்டி அவரை இன்னும் நம்பாமல் கூறினாள் ‘வானரமே, நீர்தான் உண்மையான ராம தூதன் என்ன்பதை எனக்குக் காட்டினால்தான் நான் மேற்கொண்டு பேச முடியும். எனக்கும் நேரமாகி விட்டது. அதிக நேரமானால் அங்கே மயில் ராவணனும் என்னை சந்தேகிப்பான்’ என்று கூற வேறு வழி இன்றி அனுமான் தன் சுய ரூபத்தை அவளுக்குக் காட்ட அவள் அவர் கால்களில் விழுந்து நமஸ்காரம் பண்ணி தன்னை மன்னிக்குமாறு கூறி விட்டு, அவரிடம் முகமெல்லாம் ஆறு போல கண்ணீர் வழிய தன் கதையையும் சொல்லலானாள்.

‘அனுமானே, என்னை முதலில் மன்னியும். என் கதையைக் கூறரேன் கேளும். காலதத்தன் என்பவனே என் புருஷன். மயில் ராவணன் என் புருஷன் காலதத்தனை கொன்று விட்டு என்னையும், நீல மேகன் என்ற என் ஒரே பிள்ளையையும் சிறையில் அடைத்து விலங்கு போட்டு பூட்டி வைத்து உள்ளான். அதற்கான காரணம் ஒன்றுண்டு. முன்னாலே என் புருஷன் மயில் ராவணனுக்கு அனைத்து விதத்திலும் நம்பிக்கையானவராக  இருந்தார். அதுக்கு காரணம் மயில் ராவணன் எனக்கு உடன் பிறந்த அண்ணன் முறை. மயில் ராவணன் தும்பினால் என் கணவர் இருமுவார். மயில் ராவணன் ‘ஹா’ என்றால் என் கணவர் ‘ஈ’ என்பார். அத்தனை நெருக்கம் இருவருக்கும் உண்டு.

தூம்ரதண்டி தொடர்ந்து கூறலானாள் ‘நீலமேகன் எனக்கு பிறந்தபோது மயில் ராவணனுக்கு ரூபவதி என்ற பெண்ணும் பிறந்தாள். ஆகவே வயதுக்கு வந்ததும் ரூபவதிக்கும் என் பிள்ளை நீலமேகனுக்கும் கல்யாணம் செய்து வைக்கலாமென ஏற்பாடு செய்தான். கலியாணம் செய்ய தேதி குறிக்கும்போது அசிரி ஒன்று கத்தியது ‘மூடனாகப் பிறந்து விட்ட மயில் ராவணா…….நடத்து ….இருவருக்கும் திருமணத்தை நடத்து. அந்த நீலமேகனே இந்த பாதாள இலங்கைக்கு அதிபதியாகி நிலையா இருக்கப் போகிறான். நீயும் வதமாகப் போகிறாய்.. இதை மனதில் வைத்து திருமணத்தை விரைவாகவே நடத்து’ என்று கூறிவிட்டு சென்று விட்டது.  அதனால்  திருமண எண்ணத்தையும்  நிறுத்தி விட்டான். எங்களையும் அரண்மனையில் இருந்து துரத்திட்டான்.

எமக்கு போறாத காலம். மயில் ராவணன் ராம லஷ்மணர்களை தூக்கி வந்தபோதும் வழியிலே இன்னொரு ஆகாசவாணியும்  ‘அடே பாதகா, மயில் ராவணா, நீயெல்லாம் செய்வது நல்லதல்லடா…. வைகுண்டநாதர் அவதாரங்களை களவாடிக் கொண்டு பெட்டியில் வைத்துக் கொண்டு போகிறாயே, உனக்கு அழிவு காலம் வந்து விட்டதடா….நீர் அழிவது நிச்சயம். ..போ…போ….நீர் இத்தனை சிரமப்பட்டு ராவணனுக்காக இதை செய்கிறாயே. அவனும் ராஜ்யத்தை இழக்கப் போறான். நீயும் ராஜ்யத்தை இழக்கப் போறே. மூர்கனே, உன் சகோதரி தூம்ரதண்டியின் பிள்ளை உன் சிம்மாசனத்தில் அமரப் போகிறான். இந்த சத்திய வாக்கை நீயும் பார்ப்பாய்….உன் சந்ததியினரும் பார்பார்கள்…போடா மூடனே….போ’ என்று கூறியது .

இரண்டாம் முறையாக என் பிள்ளை சிம்மாசனத்துல அமரப் போகின்றான் என்பதைக் கேட்டு  ஆக்ரோஷம் கொண்ட மயில் ராவணனும் உடனே என் கணவரை வரச் சொல்லி காரணமே இல்லாமல், என் எதிரிலேயே அவர் கழுத்தை அறுத்துக் கொன்று போட்டான். அது மட்டும் அல்ல என் பிள்ளயையும் அவன் கொல்ல வந்தபோது ‘தங்கை நான் கெஞ்ஜறேன் ….அவனை விட்டுடூன்னு’ அழுதேன். அதனால என் பிள்ளையையும் என்னையும் ஆயிரம் கனம் கொண்ட விலங்கை காலிலும் கையிலும் மாட்டி ஒரு சிறையிலே தள்ளி வருஷ வருஷமாக கொடுமையில் வைத்து விட்டான். இன்று ராம லஷ்மணர்களை கொல்ல தங்கக் குடத்தில் தண்ணீர் வேணும்னு எனக்கு சிறிது விடுதலை தந்துள்ளான். அதை நான் கொண்டு தந்தால் அந்த பாவம் எனக்கும் சேருமாம். அவனுக்கு அந்தப் பாவம் வராதாம். அந்த பாவம் எனக்கு வந்ததும் என்னையும் பின்னர் கொன்று குழி தோண்டி புதைத்து விடுவானாம்.

ஆஞ்சனேயா, ஆபத்சகாயா, ராம லஷ்மணரைக் காப்பாற்றிய பின் என்னையும், எம் பிள்ளையையும் நீர்தான் காப்பாற்றணும். அதை செய்வேன்னு சத்தியம் தரணும்’ என அனுமாரிடம் வேண்டிக் கொள்ள அதைக் கேட்ட அனுமானும் அவள் உள்ளக்கையில் ஒரு சத்தியம் செய்து தந்தார். ‘அம்மணி, நீ கவலைப்படாதே. நான் உனக்கு சத்தியம் செய்து தந்தது போல அந்த மயில் ராவணனை வதம் செய்து உம் குடும்பத்தையும் விடுதலை செய்து உம் மகனை முடிசூட்டி அழகு பார்க்க வைப்பேன். நீ இப்ப எனக்கு உதவி செய். மயில் ராவணன் பலமென்ன? இப்ப ராம லஷ்மணர் எங்கு உள்ளார்கள்? அதையெல்லாம் எனக்கு விவரமாக் கூறு’  என்று தைரியம் சொன்னார்.

அதைக் கேட்ட தூம்ரதண்டி கூறலானாள் ‘ அனுமானே, அந்த மயில் ராவணனை சாதாரணமாக எடை போடாதேயும். அவன் பரமேஸ்வரனிடமிருந்து மூவேறு தலைமுறைக்கும் வேண்டுமான பலமும் பெற்று உள்ளவன். பராக்கிரமசாலி. தந்திரக்காரன். மாயக்காரன். அவன் கோட்டையின் நுழை வாசலிலே பல துலா யந்திரங்களை மாட்டி வைத்திருக்கான். அது யார் வருவாரோ, யார் போவாரோ அது அவனுக்கு விரோதியா, நண்பனா என்பதைக் காட்டிடும் யந்திரமாகும். அத்தனை மந்திர சக்தி உள்ளதது. உள்ளே போறவன் சத்ரு என்றால் அங்குள்ள இருபது லட்சம் வீரனும் ஒருசேர அங்கு வந்து சத்ருவை துவம்சம் செய்து விடுவார்கள். அதனால் நீர் மிக்க கவனமாக இருக்கோணும்’.

அதைக் கேட்ட அனுமானும் ‘பெண்ணே நீ எனக்கொரு ஒரு உபாயம் சொல்லோணும். நான் கோட்டைக்குள்ளே அந்தப் பக்கம் நுழைந்து விட்டால் அத்தனை அசுரர்களையும் வதம் பண்ணும் அளவுக்கு எனக்கு பலம் வந்துடும். அதனால் எப்படியாவது கோட்டை மதிலுக்கு அந்தப் புறம் செல்ல ஏதேனும் ஒரு உபாயம் சொல்லோணும்’ என்றவுடன் தூரதண்டி கூறத் துவங்கினாள் ‘வாயுபுத்ரா, எனக்கெந்த யோசனையும் வரலே. ஆனால் நான் ஒரு விஷயம் சொல்வேன். நீ அதைக் கேட்டு உள்ளே செல்ல அந்த உபாயம் சரியானதான்னு முடிவு செய்யோணும். நான் தங்கக் குடத்தில் தண்ணீர் மொண்டு அதன் மீது ஒரு கொத்து மாவிலையும் வைத்துக் கொண்டு செல்லணும். அதையும் அந்த துலா யந்திரம் துருவித் துருவி பார்க்கும். அதனால் நான் குளத்தில் இறங்கி தண்ணீர் மொள்ளும் முன்னேயே ஏதும் உபாயத்தை சேர்த்து வைத்துக் கொள்ளும்’ என்று கூறி விட்டு குடத்திலே தண்ணீர் எடுக்கச்  சென்றாள்.

ஒரு ஷணம் யோசனை செய்த அனுமானுக்கு மனதில் ஒரு உபாயம் மின்னலைப் போல வந்தது. தூம்ரதண்டி தண்ணீர் எடுத்த குடத்தில் மாவிலைக் கொத்தை வைத்ததுமே அதில் சிறு பூச்சி போல தன்னை உருமாற்றிக் கொண்டு அமர்ந்து கொண்டு அவளிடம் சொன்னார் ‘அடியே பெண்ணே , நீ எந்த சந்தேகமும் இல்லாமல் தண்ணீரை எடுத்துக் கொண்டு உள்ளே போய் விடு. வாசலில் யாரேனும் தடுத்தால் தடுக்கி விழுந்தது போல விழுந்து அரண்மனை நுழை வாயிலின் உள்ளே தண்ணீர் குடத்துடன் மாவிலையையும் சேர்த்துக் கொட்டிடு. அதுக்குப் பின்னே நான் பார்த்துக் கொள்கிறேன்’ என யோசனைக் கூற தூம்ரதண்டியும் பயத்துடனே தடுமாறிக் கொண்டு மாவிலைக் கொத்தில் சிறு பூச்சியாக அனுமான் அமர்ந்திருக்க தண்ணீர் நிறைந்திருந்த அந்த அந்த தங்கக் குடத்தையும் தன் தலை மீது வைத்துக் கொண்டு அரண்மனைக்கு திரும்பிச் சென்றாள். நுழை வாயிலில் இருந்த துலாயந்திரத்தின் அருகில் வந்ததும் அது யாரோ சத்ரு உள்ளே வரவுள்ளதைக் காட்டியது.

‘யாரவன் வருகிறான், உள்ளே ஓடுடி பெண்ணே… சீக்கிரமா ஓடி வந்துடுடி ‘எனக் கத்திக் கொண்டே பாய்ந்தது பாய்ந்து ராக்ஷசர்கள் வாயிலுக்கு வருவதற்கு முன் தூம்ரதண்டியும் அனுமான் கூறியது போலவே குடத்துடன் இருந்த மாவிலைக் கொத்தோடு நுழை வாயிலின் உள்ளே தடுக்கி விழுவது போல பாசாங்கு செய்தாள். அவ்வளவுதான். அரண்மனைக்கு உள்ளே சென்று விழுந்த மாவிலைக் கொத்தில் சிறு பூச்சியாக இருந்த அனுமானும் மாவிலையில் இருந்து வெளியில் குதித்து, தன் விஸ்வரூபத்தை எடுத்து அதி பலம் கொண்டு அத்தனை வீரர்களையும் அடித்து, துவைத்து துவம்சம் செய்து கொன்றார். பாதாளத்திலே நடந்ததையெல்லாம் ஆனந்ததுடனே வானத்தில் இருந்த தேவர்கள் பிரமித்தபடி பார்த்து, பார்த்து பரவசம் அடைந்து மகிழ்ந்தார்கள். ‘ ராம லஷ்மணர்களை அனுமான் காப்பாற்றி விடுவார்’ என்ற நம்பிக்கை அவர்களுக்கெல்லாம்  வந்து விட்டது.

அதையெல்லாம் பார்த்த தூம்ரதண்டி பெரும் மகிழ்ச்சி அடைந்து ‘ஐயா அனுமனே இப்போ நீங்கள் செய்ய வேண்டியது கடகன் மற்றும் விருசிமுகன் என்ற இரண்டு அசுரர்களையும் அழிக்க வேண்டும். அவர்களே காளி கோவிலுக்கு காவலில் உள்ள பெரும் தளபதிகள். அவர்களை வதம் பண்ணாலே பாதி காரியம் ஆனது போலாகிடும். அதோ தெரிகிறதே அதுதான் கடகன் வீடு. அதுக்கு பக்கத்தில் உள்ளதுதான் விருசிமுகன் வீடும்’ என்று அவர்கள் வீட்டை அனுமானுக்குக் காட்டிவிட்டு அங்கிருந்து வேக வேகமாக சென்று விட்டாள். அவளை அங்கு பார்த்து விட்டால் உடனே தயங்காமல் மயில் ராவணன் அவளையும் அவள் பிள்ளையும் வெட்டிப் போட்டு விடுவான்.

தூம்ரதண்டி அடையாளம் காட்டிய வீட்டை அனுமானும் அதி வேகமாக சென்றடைந்து அந்த இருவரும் தத்தம் மனைவிகளுடன் சல்லாபித்துக் கொண்டு இருக்கையிலேயே தன் வாலை அவர்கள் வீட்டுக்குள் செலுத்தி அவர்கள் படுத்திருந்த கட்டிலோடு சேர்த்து வாலால் அவர்களைக் கட்டி வெளியில் இழுத்து துவம்சம் செய்தார். விருச்சிமுகனோ  ‘சுவாமி என்னை விட்டுடு….என்னை விட்டுடு.. இத்தனையும் செய்தது அந்த மகாபாவி மயில் ராவணன்தான்….அதோ அங்குள்ள வீட்டில் அவன் இருக்கான். அவனை வதம் செய்யுங்கோ…அவனை செய்யுங்கோ’ என அலறினாலும் அவனையும் அனுமான் அழித்தார். ஆனால் அந்த குழப்பத்தில் கடகன் மட்டும், தப்பித்தோம் பிழைத்தோம் என எப்படியோ தப்பியோடினான்.

அதெல்லாவற்றையும் ஆனந்ததுடனே பார்த்துக் கொண்டிருந்த தூம்ரதண்டியை அழைத்துக் கொண்டு சென்ற அனுமானும்   அவள் பிள்ளை விலங்கிட்டு வைக்கப்பட்டு இருந்த வீட்டையும் அடைந்து அவன் விலங்குகளையும் ஒடித்து அவனையும் விடுதலை செய்தப் பின் அவனுக்கு உறுதி மொழி கொடுக்கலானார். அவனோ பயந்து நடுங்கியபடி ‘ஐயகோ…யாரிவர் இங்கு வந்து என் கால் விலங்கை, கை விலங்கை, மார் விலங்கை ஒடித்து உள்ளார்? வந்துள்ளவர் மயில் ராவணனின் ஆளோ? என்னை வெட்டி காளிக்கு பலி கொடுக்க வந்துள்ளாரோ என்றெல்லாம் பீதியோடு நடுங்கி அனுமனைக் கண்டு ஓடி ஓடி ஒளியத் துவங்க அனுமானும் கூறினார் ‘இளம் பிள்ளாய், உடனே இங்கிருந்து கிளம்பி வா….நானுனக்கு பட்டம் சூட்டரேன். என்னைப் பார்த்து பயப்படாதே. இங்கு உன் தாயோடுதான் வந்திருக்கேன்’ என கூறி விட்டு அவன் தாயாரான தூம்ரதண்டியை அழைக்க உள்ளே வந்த அவளும் தன் மகனிடம் சொன்னாள் ‘நீலமேகா, என் அருமை புத்ரனே, இன்றோடு நம் துயருக்கு விடுதலை தர ராம தூதரான இவர் வந்திருக்கார். சீக்கிரமா வெளியில் வாடா. இல்லைனா மயில் ராவணன் வந்து உன்னை வெட்டிடப் போறான்’ என்று கூற பயம் தெளிந்த நீலமேகன் வெளியில் வந்தான்.

தாயும் மகனும் அனுமார் காலில் வீழ்ந்து ‘ஐயா, ராமபக்தரே, தயை செய்து நீங்கள் இங்கிருந்து ராம லஷ்மணர்களை விடுதலை செய்து கொண்டு போகும் முன் என் மாமன் முறை மயில் ராவணனையும் வதம் செய்துவிட்டுப் போங்களேன். இல்லை எனில் அவன் வந்து எங்களை சுக்குநூறாக் கிழித்துப் போட்டு ஹிம்சை செய்து கொலை பண்ணிடுவானையா …எங்களை நீர்தான் காப்பாத்த வேணுமையா’ என கண்ணீர் விட்டழுதுக் கேட்டப் பின் அவர் ஆசிகளை வாங்கிக் கொள்ள அனுமானும் ‘நீங்கள் எங்காவது பத்திரமா இருங்கோ. ஆபத்து என்றால் என்னை உரத்த குரலில் அழைத்தால் எங்கிருந்தாலும் அது எனக்குக் கேட்டகும். உடனே வந்து உம்மைக் காப்பாற்றுவேன். கவலை கொள்ள வேண்டாம்.. என் வேலையை முடித்து விட்டு உன் மாமா மயிலையும் வதம் செய்து விட்டு உனக்கு முடி சூட்டுறேன்’ என்று கூறி விட்டு அங்கிருந்து கிளம்பி காளி கோவிலுக்குப் போனார்.

இதெல்லாம் அரண்மனைக்கு வெளியே நடந்து கொண்டிருந்தபோது அது எதுவுமே தெரியாத மயில் ராவணன் அதி பாதாள லோகத்தில் தன் மனைவியுடன் அதி உல்லாசத்தில் இருந்தான். அவன் மனைவியிடம் கூறிக் கொண்டிருந்தான் ‘அடியே காமுகி, இப்பத்தான் நான் என் தங்கை தூம்ரதண்டியை பூஜைக்கு தண்ணீர் கொண்டு வர அனுப்பி விட்டு வந்துள்ளேன். அவள் வர இன்னும் ரெண்டு ஜாமமாகும். அதற்குள் நான் உன்னோடு லீலைகளை செய்துட்டு, குளித்துவிட்டு பூஜைக்கு தயாராகணும். அடியே என் செல்லக் கிளியே அருகில் வந்து அமருடி’ என மனைவியுடன் உல்லாசமாக இருந்து கொண்டிருந்தான்.

ராட்ஷசர்களை துவம்சம் செய்தப் பின் அங்கே அனுமார் காளி கோவிலுக்குச் சென்று பார்த்தால் அந்தக் கதவும் மூடி இருந்தது. அனைத்திடங்களிலும் இருந்தவர்களை துவம்சம் செய்து மரண யாத்திரைக்கு அனுப்பி விட்டதினால் அங்கு அக்கம் பக்கம் கூட சப்தம் எதுவும் இல்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர யாரும் கூட இல்லை. மயில் ராவணனும் மனைவியுடன் உல்லாசம் செய்த பிறகு பூஜைக்குத் தயாராக அங்கிருந்து பல காத தூரத்தில் அடி பாதாளத்தில் எந்த சத்தமுமே கேட்காத தூரத்தில் இருந்த குளம் ஒன்றில் குளிக்கச் சென்று விட்டான். பார்த்தார் அனுமார். காளியும் பார்வதியின் அவதாரந்தானே என்றேண்ணியவர் ‘அம்மா, என்னை மன்னித்தருள். இதுவும் உன்னையே வேண்டிக் கொண்டுதான் செய்கிறேன்’ என்று மனதில் காளியை வழிபட்டுக் கொண்டே இரு கை முட்டியையும் ஒன்று சேர்த்து கதவை ஓங்கி ஒரு குத்து விட அது அப்படியே பெயர்ந்து விழுந்தது.

உள்ளேயோ அடுக்கடுக்காய் மண்டபங்கள். ஆயிரம் கால் மண்டபம், அபிஷேக மண்டபம், எண்ணை மண்டபம், வண்ண மண்டபம், கல் மண்டபம், கல்யாண மண்டபம், புஷ்ப மண்டபம், வைர, வைடூரிய, பவள, தவழ, மகர மண்டபங்கள் என அடுக்கடுக்காக மண்டபங்கள் இருக்க அத்துணையையும் அரை நாழிகையில் தாவித் தாவிச் சென்று காளி சன்னதியை அனுமார். அங்கிருந்த காளியும் அகோர உருவமாயிருந்தாள். பார்க்கவே பயங்கரம். பல் ஒவ்வொன்றும் நூறு விரல் நீளம், ஜடையோ பின்னி பின்னி ராஜநாகம் போலவே காணப்பட, வாயோ பலி வேணும், பலி வேணும் எனக் கூவுவது போல காட்சி தந்தது. அந்தக் காளியைக் கண்டாலே யாருமே பயந்து நடுங்குவர். அந்த காளிக்கு முன்னாலே ஒரு பெட்டி வைக்கப்பட்டு இருந்தது.

அனுமாருக்கு நீலமேகன்தான் காளிக்கு முன்னால் வைக்கப்பட்டு உள்ள ஒரு பெட்டியில் ராம லஷ்மணர்களை பூட்டி வைத்துள்ள கதையைக் கூறி இருந்தான். அதனால் அனுமாருக்கு ராம லஷ்மணர்களை கண்டுபிடிப்பதில் அதிக சிரமம் ஏற்படவில்லை. காளிக்கு முன்னால் ஒரு பெட்டி இருந்ததைக் கண்ட அனுமார் ஆடாமல், அசையாமல் மெல்ல மெல்ல அந்தப் பெட்டியை திறந்து பார்த்தார். அதை திறந்ததும் அப்படியே திடுக்கிட்டார். அவர் கண்களில் நீர் வழிந்தது. காரணம் அதில் மயில் ராவணன் போட்டு இருந்த மாய சூத்திரம் மற்றும் மந்திரக் கட்டினால் ராமரும் லஷ்மணரும் ஆடாமல் அசையாமல் அதில் மயங்கிக் கிடக்க அவர்களுக்கு ஸ்மரணை இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க அவர்களை தடவிக் கொடுத்தார். அது மட்டும் அல்ல அவர்கள் கண் விழிக்க வேண்டும் என அவர் தோத்திரம் செய்யத் துவங்கினார். பல கடவுளையும் அழைத்து துதி பாட ராமபிரான் மெல்லக் கண் விழித்தார்.

அதன் பின் கேட்டார் ‘வாரும் அனுமாரே, இப்போ நாம் எங்கே இருக்கோம்? நான் ஏன் இந்த பெட்டியில் கிடக்கிறேன்? இதென்ன தேசம்? இதென்ன ஊர்’ எனக் கேட்டபடி எழுந்திருக்க முயல, அவரால் எழுந்திருக்க முடியவில்லை. அதைக் கேட்டதும் அனுமானுக்கு கண்களில் தண்ணீர் குளம் போல வந்து விழ, அவரும் கூறினார் ‘ஹே ராமச்சந்திர மூர்த்தியானவரே, ஜகத் குருவே, என்னை ஏமாற்றி உம்மை மயில் ராவணன் இங்கே கொண்டு வந்து வைத்து மாயக் கட்டும் போட்டு விட்டான். உங்களை மீட்டு அழைத்துக் கொண்டு போகவே நானும் இங்கே வந்துள்ளேன். கவலை வேண்டாம். முதலில் அவனைக் கொன்று விட்டு உங்களை மாயக்கட்டில் இருந்து விடுவிப்பேன். அவன் வருவதற்குள் உங்களை இங்கிருந்து வேறு இடத்துக்கு கொண்டு சென்று விடுவேன். அதுவரை பத்திரமாக இதில் இருங்கள்’ என்று அழுகையினூடே கூறியவர் காளியை வேண்டிக் கொண்டார்.

அவர் மீண்டும் பெட்டியை பார்த்தபோது ராமர் கண்களை மூடியபடியே இருந்தார். அவரால் கண்களையும் முழுவதாக திறக்க முடியாமல் மயில் ராவணனின் மாயக்கட்டு அவருடைய கண்களையும் மூட வைத்திருந்தது. இனி தாமதிக்க வேண்டாம் என எண்ணியவர் காளியை நூறுதரம் வணங்கி எழுந்தார் ‘தாயே, இவரை நீதானம்மா காப்பாற்றணும்’ என்று வேண்டிக் கொண்டு அந்த பெட்டியை அப்படியே தூக்கிக் கொண்டு அங்கிருந்து என்பது கோட்டை தாண்டி இருந்த ‘அங்கனமிருக்கா’ எனும் மலையில் இருந்த குகையில் அதை கொண்டு போய் பத்திரமாக வைத்து விட்டு வந்தார்.

அந்த மலையும் பாதாள லோகத்தில்தான் இருந்தது. மயில் ராவணனை அழிக்காதவரை பாதாளத்தில் இருந்து ராம லஷ்மணர்களை அங்கிருந்து தாமரத் தண்டின் வழியே எடுத்துச் செல்ல முடியாது. அதனால்தான் அவர்களை பாதாள லோகத்திலேயே பூமா தேவியின் பொறுப்பில் மறைத்து வைக்க வேண்டி இருந்தது.

அப்போது பூமாதேவியிடம் அனுமான் வேண்டினார் ‘அம்மா, பூமா தேவி, நான் வரும்வரை இவர்களை நீதானம்மா பத்திரமா காப்பாத்தணும். உன் தங்கை இலங்கையிலே அசோகவனத்திலே ஒரு மரத்தடியில் ராவணனின் பிடியில் சிக்கி இருக்கிறாள். இவர்களையும் மயில் ராவணன் மாயக் கட்டு போட்டு கட்டி வைத்திருக்கான். நான் சென்று மயில் ராவணனைக் கொன்று மாயக்கட்டின் சூத்திரத்தையும் உடைத்து இங்கு வந்து இவர்களை எழ வைப்பேன். அதுவரை நீங்கதான் அம்மா இவர்களை காத்து நான் வந்ததும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும்’ என வேண்டினார்.

பூமா தேவியும் அதை ஆமாதிப்பது போல படீர் என தன்னுள் ஒரு வெடிப்பை ஏற்படுத்த அந்த பெட்டியை அந்த வெடிப்புக்குள் வைத்து விட்டு அனுமார் கிளம்பிச் சென்றார். அவர் கிளம்பிச் சென்றதும் வெடிப்பும் தானாகவே மூடிக் கொண்டது.

இப்படியாக அனுமார் ஒரு பக்கத்தில் வேலைகளை செய்து கொண்டிருக்க, இன்னொர் பக்கம் அனுமாரிடம் இருந்து தப்பி ஓடிச் சென்ற கடகன் ஓடோடிச் சென்று மயில் ராவணனின் இருப்பிடத்தை அடைந்தான். மயில் ராவணனின் அரண்மனைக்கு வந்தபோது அங்கே பன்னிரண்டாயிரம் கோடி அரக்கர்கள் ஆயுதங்களை தமக்கு தலையணி போல வைத்துக் கொண்டு உறங்குவதைக் கண்ட கடகன் அனைவரையும் சப்தம் போட்டு எழுப்பினான். ‘அசுரர்களே… அனைவரும் எழுந்திருங்கள். அந்த வானரம் வந்து விட்டால் உங்கள் அனைவரையும் நொடியில் துவம்சம் செய்திடும்’ என உரக்கக் கத்தியவாறே, ‘சுவாமி…சுவாமி…எழுந்திரும். உமக்கொரு முக்கியமான விஷயம் கொண்டு வந்திருக்கேன். அதைக் கேட்டாலே உமக்கு தலையே சுற்றும் ஐயா’ எனக் கூவிக் கொண்டே மயில் ராவணனின் அரண்மனையில் புகுந்து அவனுடைய அறைக்கு முன்னாலே சென்று நின்று கொண்டான்.

அங்கே மயில் ராவணன் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்து கொண்டிருந்த வேளையில் அங்கு சென்ற கடகன் படபடவென அவன் அறைக் கதவைத் தட்டி அறைக்குள்ளிருந்து எழுந்து வந்த மயில் ராவணனிடம் நடந்த அனைத்தையும் விலாவாரியாகக் கூறினான். அதைக் கேட்டு வெகுண்டெழுந்த மயில் ராவணனை ஆஸ்வாசப்படுத்தி விட்டு கடகன் சொன்னான் ‘சுவாமி, இந்த விஷயத்தை சற்று நிதானமா கேளுமையா…. அனைவரையும் துவம்சம் செய்த அந்த வானரம் காளி கோவிலுக்கு பக்கத்தில் ஓடினதாக செய்தி கிடைத்ததால்  இங்கு வந்து உம்மிடம் கூறினேன்’ என்று கூறவும் ‘அடே நாராசப் பயலே, உடனே காளி கோவிலுக்குச் சென்று அந்த பெட்டி பத்திரமாயிருக்கான்னு பார்த்து விட்டு வா……..நானும் இந்த வாளுடன் கிளம்பி வருகிறேன்’ என்று கூறிவிட்டு காளி கோவிலுக்கு ஓடிச் சென்று பார்த்தால் காளிக்கு முன்னாலிருந்த பெட்டி காணாததைக் கண்டு வெகுண்டெழுந்தான். ‘ஏமார்ந்துட்டோம்….கடகா…. ஏமார்ந்துட்டோம்…..அந்த வானரம் வந்து பெட்டியை தூக்கிண்டு போயிட்டுதே ‘ என கோபத்தில் குதித்தான்.

‘கடகா, இப்போ என்ன செய்யறது? அந்த வானரம் பெட்டியில் இருந்த ராம லஷ்மணர்களை கொண்டு சென்று விட்டதே. அவரோடு காளியும் சேர்ந்து போய் விட்டாளா எனத் தெரியலயே ….இவள் முகத்தைப் பார்த்தாலே அவளும் சந்தோஷமாக அவருடன் சேர்ந்து போய்விட்டது போலத் தோணுதே. இப்போ என்ன பண்ணலாம்? அந்த வானரம் இங்கே வந்துடுத்தூன்னா அதுக்குக் காரணம் தூம்ரதண்டியாத்தான் இருக்கும். அவள்தானே தண்ணி எடுக்க வெளியில் போனா. அப்போது அந்த வானக் குரங்கை அழைத்து வந்திருப்பாளோ. இப்போதே போய் அவளை வெட்டிக் கொன்று விட்டு வா’ என கடகனுக்கு மயில் ராவணன் ஆணையிட்டான். அனுமார் அடித்த அடியில் உடம்பெல்லாம் ரணமாகிருந்த கடகனும் ஒளிந்து ஒளிந்து கொண்டு தூம்ரதண்டியை பார்க்கப் போனான். எங்காவது அனுமானின் கண்ணில் பட்டுவிட்டால் தன்னை இன்னும் அடித்து துவைத்து விடுவார் என பயந்தான். போகும் போது வழியில் தனக்கு துணையா இருக்க ஆளும் சேர்த்துக் கொண்டு சென்றான்.

தூம்ரதண்டியின் வீட்டை அடைந்ததும் அங்கே தூம்ரதண்டியும் அனுமானும் நீலமேகனுடன் பேசிக் கொண்டு இருந்ததைக் கண்டு வந்த வேகத்திலேயே ஓடிப் போய் மயில் ராவணனிடம் ‘ஐயா சுவாமி அங்கு அந்த வானரம் தூம்ரதண்டியோடும், நீலமேகனோடும் கூடிக் கூடிக் குலாவி பேசிக் கொண்டிருக்கிறார்’ என்று விஷயம் கூற அந்த சங்கதியைக் கேட்ட மயில் ராவணன் தன் சேனையின் பல்லாயிரம்பேரை உடனே அங்கு அனுப்பி அந்த வானரத்தைக் கொன்று விட்டு வாருங்கள் என அனுப்பினான். அந்த வீரர்களும் அனுமானைக் கொல்ல கத்தி, கபடா, ஈட்டி, கதை என அனைத்து ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு செல்ல சற்று நேரத்திலேயே அவர்களும் போன வேகத்திலேயே திரும்பி ஓடி வந்தார்கள். பல்லாயிரம் பேர் சென்ற பட்டாளத்தில் பத்து பேர் மட்டுமே உயிருடன் திரும்பி வந்தார்கள். அவர்கள் வந்ததும் இன்னும் பெரும் சேனையை கதாசிங்கன் எனும் அரக்கன் தலைமையில் மயில் ராவணன் அனுப்பி வைக்க அவர்கள் வந்து அனுமான் மீது பாணங்களை மழைபோல பொழிந்தார்கள். நொடியிலே கதாசின்கனும் மடிந்து விழ அவனை தொடர்ந்து வித்யாசிம்மன் களத்துக்கு வர, அவனும் காலும் கையும் வெட்டப்பட்டு அழிந்தான்.

இனி அவர்களையெல்லாம் துரத்திச் சென்று மயில் ராவணனுடன் நேரிலே மோதணும் என எண்ணிய அனுமானும் அடுத்தடுத்த வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த அரக்கர்களை அழித்த வண்ணம் சென்றார். வழியிலே ரத்தம் கக்கி கடகரோமான் என்பவன் மாண்டான். அவனை தொடர்ந்து காலதேஷன் என்பவனும் மாண்டான். அவர்கள் அனைவரும் மூர்கமான அரக்கர்கள். மயில் ராவணனின் படையில் முக்கிய தளபதிகள். அடுத்தடுத்து முக்கிய தளபதிகள் உக்ரசேனன், வக்ரசேனன், தீரசிம்மானவன், வெம்புலியான், சம்புலியான் மற்றும் அநேக லட்ஷ அரக்கர்களைக் கொன்று குவித்த அனுமனுடன் நேரிலே மோத தன்னை சுற்றி நின்றிருந்த அரக்கர் சேனையோடு மயில் ராவணனே நேரில் சென்றான்.

குதிரைகள் தடதடென நடக்க, படையினர் படபடவென குதித்தோடிவர ……..ஹூ….ஹா… ஹோய்….ஹோய்…என சப்தமிட்டபடி பல்வேறு ஜனங்களும் சேர்ந்தோடிவர மயில் ராவணன் மழைபோல விட்ட அம்புகளையும் அஸ்திரங்களையும் நொடிப் பொழுதில் அனுமன் பொடிப்பொடியாக்கி விட மயில் ராவணன் யோசனை செய்யலானான் ‘அடடா…என் பத்தினி வர்ணமாலி அன்று சொன்னது நடந்து விடும் போலிருக்கே. நான்தான் தப்பு செய்துட்டேனோ ? அனாவசியமா அத்தனை சேனையும் இழந்து தசமுக ராவணனைப் போலாகி விட்டேனோ? இவனை எப்படி ஜெயிப்பது? எத்தனை அஸ்திரமானாலும் அஸ்க், புஸ்க் என்று அடித்து நொறுக்குறானே’.

யுத்தம் தொடர அனுமான் வந்து மயில் ராவணனின் முதுகிலே தனது இரண்டு கை முஷ்டியினாலும் பலமாகத் தாக்கினார். அடுத்தகணம் அதே குத்து தன் முதுகிலும் விழுதே என அனுமார் திரும்பினால் அங்கே திடகார்த்தமாக அக்ரோஷத்துடனே மயில் ராவணன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தார். இரண்டு பேரும் மாறி மாறி அடித்துக் கொண்டே இருக்க அனுமார் மயில் ராவணனை கீழே தள்ளி கொன்று சுக்குநூறா அவன் உடலைக் கிழித்து நாலாபக்கமும் சதைகளை வீசி எறிந்துவிட்டு ‘அப்படா ஒருவழியா மயில் ராவணனை கொன்று விட்டேன்’ என சந்தோஷப்பட்டுக் கொண்டே ‘ராமச்சந்திரா’ என பிராத்தனையை செய்ய பல நூறு யோஜனைக்கப்பால் விழுந்த அத்தனை சதைகளும் காற்று போல பறந்து வந்து யுத்தகளத்திலே மீண்டும் மயில் ராவணனாகி நின்றிருப்பதைப் பார்த்த அனுமார் குழம்பியே போனார்.

‘இதென்னடா சாமி இவன் வலிமை….இவன் மாயம்? இவனுக்கென்ன இத்தனை தவ வலிமை? எத்தனை அடித்தாலும் என்னையும் அடிக்கிறான். உடம்பை சல்லடயாக்கிப் போட்டால் மீண்டும் மீண்டும் ஒன்றுமாகாதது போல திடகார்த்த உடம்போடு திரும்பித் திரும்பி வந்து யுத்தமும் செய்கிறான். இவனை நானெப்படி ஜெயிப்பது? தெரியலயே …இதெல்லாம் நமக்கு விபீஷணனும் சொல்லலயே……..இவன் மர்மத்தை எனக்கெவர் விளக்குவார்?’ என வினசத்துடன் தலை மீது தன் கையை வைத்துக் கொண்டு யோசனை செய்து கொண்டிருந்தவர் பொறி தட்டினாற்போல தூம்ரதண்டியை இதைக் குறித்துக் கேட்டுப் பார்க்கலாம் என்றெண்ணி அவளைப் பார்க்கச் சென்றார்.

அதற்கு ஏதுவாக இருக்குமாறு முதலில் அனுமான் மயில் ராவணனை தனது வாலினால் நன்றாகக் கட்டி, ஆகாயத்தில் பறந்து சென்று நாலு சுற்று சுற்றி தூக்கி தூரத்தில் விழுமாறு எறிந்தார். அவனும் நூறு யோசனை தூரத்தில் போய் விழுந்தவுடன் மீண்டும் அதே பலத்துடன் எழுந்து வரலானான். அதைதான் அனுமானும் விரும்பி இருந்தார். அவன் எழுந்து வருவதற்குள் தூம்ரதண்டியிடமோ, நீலமேகனிடமோ சென்று மயில் ராவணனை கொல்வது எப்படி என்பதை கேட்டு விட்டு வரலாம் என்று அந்த அவகாசத்துக்காக அப்படி செய்திருந்தார். அவசரவசரமாக தூம்ரதண்டியை சந்திக்கச் சென்றார். அவர் வந்ததும் தன்னால் மயில் ராவணனைக் கொல்ல முடியலையேன்னும் எத்தனை தடவை அவனைக் கொன்றாலும் அவன் பிழைத்து வந்து விடுகிறானே என ஆதாங்கப்பட்டு அவனைக் கொல்ல உபாயம் ஏதும் உண்டா எனக் கவலையோடு அவளைக் கேட்டார்.

அவளும் அனுமானிடம் தனக்கு உண்மையிலேயே மயில் ராவனனை பற்றிய விவரம் அதிகம் தெரியாது எனவும், ஆனால் தன் கணவன் உயிரோடு இருந்தபோது ஒருமுறை மயில் ராவணன் தன் வீட்டுக்கு உணவு அருந்த வந்தான் என்றும் அப்போது தன்னுடைய உயிர் ஸ்தானம் எங்கு உள்ளது என்பதை கள்ளம் கபடமில்லாமல் கூறினான் எனவும் கூறினாள். அந்த விவரத்தை அவள் இப்படியாக அனுமானுக்கு கூறத் துவங்கினாள் ‘ஐயா ராமதாசா, அவன் கூறிய விசித்திர விஷயத்தை நான் அப்படியே உமக்கும் கூறுகிறேன், கேளும். ஒரு முறை மயில் இராவணன் பிரும்மாவை வேண்டிக் கொண்டு உடலையும் வருத்திக் கொண்டு தன்னையே அழித்துக் கொள்ளுமளவு கடுமையான தவம் இருந்தான். அவனுக்கு முன்னால் பிரும்மா தோன்றியபோது, அவன் ஒரு வரம் கேட்டான்.

அந்த வரம் என்ன என்றால், அவன் யாருடன் சண்டை போட்டாலும் அவனுக்கே (மயில் ராவணனுக்கு ) வெற்றி கிட்ட வேண்டும். அந்த யுத்தத்தில் அவன் உயிர் இழந்தாலும் மீண்டும் மீண்டும் அவன் பிழைத்து எழ வேண்டும்’. பிரும்மா அவனுக்குக் அதைக் கொடுப்பது கடினம் என்றும் அதன் காரணம் ஒருமுறை உயிரை விட்டால் உடலில் உள்ள பஞ்ச பூதமும் உடலில் இருந்து வெளியேறி விடும் என்பதினால் அதைத் தர முடியாது என்றார். அவனும் விடாக்கண்டன் கொடாக் கண்டன் அல்லவா. அவன் பிரும்மாவிடம் கூறினான் அப்படி என்றால் என் உடலில் உள்ள பஞ்ச பூதங்களும் பாதாள இலங்கையில் இருந்து மூவாயிரம் யோசனை தூரத்தில் உள்ள பர்வதம் ஒன்றில் ஐந்து குகையில் ஐந்து வண்டுகளாக இருக்க வேண்டும். அவற்றை ஒருசேரக் கொன்றால் மட்டுமே என் உயிரும் போகும் என்பதான வரத்தைத் தாரும். இல்லை என்றால் என் உயிரை இப்போதே நான் எடுத்துக் கொள்வேன் என்று தன் வாளை உருவினான்.

எந்த தெய்வமுமே தவத்தினால் மகிழ்ந்து அவர்கள் முன் தோன்றிவிட்டால் அவர்களை சாக விடாது. பிரும்மாவும் யோசனை செய்தார். இவனுக்கு வரம் தந்தாலும் அவன் அட்டகாசம் அடங்கப் போவது இல்லை. இவனை வரம் தராமலும் சாகடிக்க முடியாது. அது தனது சக்தியை குறைத்து விடும். ஆகவே ஏதாவது சமயோசிதமாக உபாயம் செய்தே இதை சமாளிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு அவனுக்கு அந்த வரம் தர சம்மதித்தாலும் ஒரு சின்ன பொடியை அதில் வைத்து இருந்தார். அவர் அவனிடம் பஞ்ச பூதங்களையும் ஐந்து வண்டில் தனித் தனியாக வைத்தாலும், மயில் ராவணனைக் கொல்ல வருபவர்கள் அவன் மீது காலை வைத்துக் கொண்டு, அவனை பூமியில் அழுத்திக் கொண்டு, அந்த ஐந்து வண்டுகளையும் பிடித்து தன் உள்ளங்கையில் வைத்து அவற்றை நசுக்கிக் கொன்றால் மட்டுமே அவன் உயிரும் பிரியும் என்று வரம் கொடுக்க அவனும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டான். ஏன் எனில் யாரால் அவனை பூமியில் அழுத்தி வைத்துக் கொண்டு மூவாயிரம் யோசனை தூரத்தில் உள்ள குகையில் இருக்கும் வண்டுகளைப் பிடித்து நசுக்கிக் கொல்ல முடியட்டும்? அத்தனை பெரிய உருவம் படைத்தவர் எவருமில்லையே என்று நினைத்தான். அப்போது அவனுக்கு மனதில் தோன்றவில்லை, எந்த தெய்வமாவது ஆகாயத்துக்கும் பூமிக்கும் அளவிலான விஸ்வரூபத்தை எடுத்து விட்டால் அதையும் செய்யலாமே என்று’. இதைக் கூறியவள் ‘இதை விட வேறேதும் எனக்குத் தெரியாது சுவாமி’ என்றாள் .

அவள் கூறியதைக் கேட்டுக் கொண்ட அனுமான் ‘இந்த செய்தி மட்டுமே போதும் அம்மணி…இது எனக்கு உதவியா இருக்கும். அந்த மலையும் எங்குள்ளது என்றாவது தெரியுமா?’ என்று கேட்க அவளும் அது உள்ள திசையைக் கூறி அதன் மீது ஒரு வெள்ளி மண்டபம் இருக்கும். அதுவே அந்த மலை என்பதின் அடயாளம்’ என்றாள். அனுமானும் அதைக் கேட்டு தாமதிக்காமல் உடனடியாக யுத்தகளத்துக்குச் சென்றார். அங்கு மயில் ராவணன் அனுமானை தேடிக் கொண்டு இருந்தான். அவரைக் கண்டதும் அவன் கூவினான் ‘ஹே வானரமே, உன்னைத்தான் நான் இத்தனை நேரமாகவும் தேடிக் கொண்டிருக்கிறேன். நீ எங்கே சென்று ஒளிந்து கொண்டாய்? என் மாயத்தைப் பார்த்து பயந்து ஓடி விட்டாயா? வா….உன்னை எமலோகத்துக்கு அனுப்ப ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். சீக்கிரம் வா…’ என சூளுரைத்தான்.

அவன் உயிர் நிலை எங்குள்ளது என்பதை அறிந்து கொண்டு விட்ட அனுமாரோ முன்னைவிட அதிக உற்சாகத்தோடு யுத்தம் செய்யக் கிளம்பினார். ‘வாருமையா ராட்சசப் பதரே, உம்மை வதைக்கவே நானிங்கு வந்துள்ளேன். யுத்தம் செய்வீர்’ எனக் கொக்கரித்தபடி யுத்தம் செய்து கொண்டே மெல்ல மெல்ல மயில் ராவணன் உயிர் நிலை இருந்த மலை அருகில் வரை ஓடி ஓடி சென்று யுத்தம் செய்தார். மயில் ராவணனும் தனத்கு உயிர் நிலை உள்ள மலையை மறந்தே இருந்ததால் அனுமானை துரத்திக் கொண்டு ஓடினான். அதுதானே அனுமானும் எதிர்பார்த்ததும். அனுமானின் மன நிலையை அறியாத மயில் ராவணன் அவரது கண்களையும் கவனத்தையும் பலவாறு திசை திருப்பும் வண்ணம் மந்திர மற்றும் மாயாஜாலங்களை செய்தது அவரை தடுமாற்றினான். அவற்றை கண்ட அனுமார் உள்ளுக்குளே நிஜமாகவே தடுமாறினார். ஒருவிதத்தில் பயமும் கொண்டார். ‘இதென்னெடா, இந்த மாயாஜாலக்கரன் என்னென்னமோ செய்கிறான்’ என நினைத்துக் கொண்டே அவனிடம் கூறலானார்.

‘பாதகனே, இதோ பார் நீங்களெல்லாம் செய்யும் பாவச் செயல்களை. உன்னுடைய தாயாதி தசகண்ட ராவணன் ராமனின் மனைவியை களவாடிக் கொண்டு வந்து இலங்கையில் சிறை வைத்துள்ளான். அவளை மீட்க வந்த ராமனை நீ சிறை பிடித்து வைத்துள்ளாய். உனக்கு துரோகம் செய்தவனை மட்டுமே நீ தண்டிக்கலாமே தவிர உனக்கு சம்மந்தமில்லாத விஷயத்தில் நீ ஏன் தலையிடுகிறாய்? ராமன் உனக்கென்ன பாவம் செய்தார்? தர்ம சாஸ்திரம், நீதி நெறி இவற்றை அறிந்துள்ளவன் என மார் தட்டிக் கொள்ளும் நீ கோழைப் போல மாயாஜாலத்தைக் காட்டி போரிடுவது என்ன நியாயம்? நீ வீரனாக இருந்தால், தைரியசாலியாக இருந்தால், பலசாலி என நினைத்தால், வா நேருக்கு நேர் வந்து மோது. மூடனே, இதை மட்டும் அவசியம் நினைவில் வைத்துக் கொள். இன்னும் சிறிது நேர அவகாசம் தருகிறேன், நியாயத்தை உணர்ந்து ராம லஷ்மணர்களை எம்மிடம் ஒப்படைத்து விடு. இல்லையேல் உன் மீது நின்று கொண்டு நான் உன் உயிர் நிலைகளை கொல்ல  உள்ளேன் என்பதை மறவாதே’ எனக் கூற மயில் ராவணன் சற்றே கலக்கமுற்றான்.

அனுமானோ ராம லஷ்மணர்களை பெட்டியோட எங்கோ கொண்டு சென்று மறைத்தும் வைத்து விட்டார். இருந்தாலும் மயில் ராவணனிடம் ஏன் அவர்களை விடுவிக்குமாறு கூற வேண்டும்?  அதற்கும் ஒரு காரணம் உண்டு. பிரும்மாவிடம் இருந்து வரம் பெற்றுள்ள மயில் ராவணன் நிறைய புண்ணியமும் காளி பூஜையும் செய்துள்ளான் என்பதனால் அவனுக்கு சொர்கத்துக்கு செல்ல வாய்ப்பும் உள்ளது. இப்போ தன் தப்பையும் உணர்ந்து வைகுண்டரின் அவதாரமான ராம லஷ்மணர்களையும் விடுதலை செய்து இன்னொரு நல்ல காரியத்தை செய்தால் அவன் செய்த அனைத்து பாபங்களும் அழிந்து போக ஒரு வாய்ப்பும் இருக்கும். வைகுண்டமும் அவனுக்குக் கிடைக்கும். அதுக்காகவே அவர் அப்படியொரு வாய்ப்பையும் அவனுக்குக் கொடுத்தார்.

அதற்கிடையில் மயில் ராவணன் யோசனை செய்தான் ‘இதென்னடா சாமி, நம் ரகசியம் யாருக்கும் தெரியாதேன்கிறபோது இந்த வானரத்துக்கு எப்படி தெரிந்தது? யார் சொல்லி இருப்பா? ஒருவேளை நான் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டு விட்ட அந்தப் பாதகி தூம்ரதண்டி தண்ணீர் எடுக்கப் போகும்போது இவருக்கு கூறி விட்டாளோ ?  இனி தாமதித்தால் இந்த வானரம் நம்மைக் கொன்று விடும்’ என யோசனை செய்தவன் இன்னொன்றையும் அப்போதுதான் கவனித்தான். ‘அடடா யுத்தம் செய்து கொண்டே இந்த வானரம் ஓடிக் கொண்டே இருக்க அதனை துரத்திக் கொண்டு என் உயிர் நிலை மறைந்துள்ள இந்த மலைக்கருகே அல்லவா அந்த வானரம் என்னை அழைத்து வந்துவிட்டது. இங்கிருந்து முதலில் என் அரண்மனைப் பகுதிக்கே செல்வோம்’ என யோசனை செய்து கொண்டிருந்தபோதே அவன் மனதில் உள்ளதை உணர்ந்து கொண்ட அனுமான் ஆகாயத்துக்குச் பறந்து சென்று அங்கிருந்து மயில்ராவணன் எதிர்பாராத நேரத்திலே அவர் மீது தொப்பென குதித்து அவனை பூமியோடு அழுத்தினார். ஆனால் அதி மாயாவியான மயில் ராவணனோ இனியும் தாமதிக்கலாகாது என மனதில் முடிவு செய்து அங்கிருந்து மாயமாகிப் போய் முதலில் ராம லஷ்மணர்களை கொல்லும் காரியத்தை செய்யலானான். ‘முடிவா என்னிடமுள்ள கடைசி அஸ்த்ரமான வீராண யாகம் செய்து அதில் வெளி வரும் பூதத்தையும் ஏவினால் அது அனுமானையும் கொன்று போடும். ராம லஷ்மணர்கள் எங்கிருந்தாலும் அவர்களும் அப்படியே மாண்டு போவார்கள் என எண்ணினான்.

‘இதென்னடா மீண்டும் அவனைக் காணோம் . எங்கே மாயமாகி விட்டான்?’ என எண்ணியவாறு அனுமார் அவனைத் தேடத் துவங்க தூரத்தில் தெரிந்த ஒரு வனத்தில் சில காரியங்கள் நடைபெறுவதைப் பார்த்தார். ஒரு பெரிய ஆலமரம் தெரிந்தது. அதன் அடியில் பத்து பதினைந்து புரோகிதர் போன்ற உருவில் இருந்த ராக்ஷச பிராம்மணர்கள் சென்று கொண்டு இருந்தார்கள். கையில் பூக்கூடை, எண்ணை, நெய், சமித்துக்கள், சின்ன சின்ன மரக்கட்டைகள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு அந்த மரத்தில் அருகில் இருந்த பொந்துக்குள் அவசரமவசரமாக நுழைவதைக் கண்டார். ‘ஓஹோ…எதோ விசித்திரம் அங்கு நடக்குது. …அதுவும் மயில் ராவணனின் அரண்மனைக்கருகில் அவனுக்கு தெரியாமல் நடக்க இயலுமா?’ என நினைத்தவர் தன்னை சிறு பிராணியாகிக் கொண்டு தானும் ஓடோடிச் சென்று அந்த பொந்துக்குள் என்ன நடக்கிறதெனப் பார்க்கலானார்.

அத பொந்துக்குள் சில யாக காரியங்கள் நடந்து கொண்டிருந்ததைக் கண்டார். முக்கோண வடியில் யாக குண்டம். யாக குண்டத்தின் அனைத்து மூலையிலும் எருமை மாட்டின் கபாலம் தொங்கியது. யாக குண்டத்தில் நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது. கபாலத்தின் மூலம் நெய்யும் ஊற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறது. யாக குண்டத்தின் எதிரிலே இடுப்பிலே ஈர வஸ்திரத்துடன் மயில் ராவணன். யாக குண்டத்திலே நவதானியங்களையும் நெய்யையும் ஊற்றிக் கொண்டு ‘ப்லீம்…க்லீம் …ஓம்…ப்லூம்ம்…பும்…….பும்…ப்ரும்……கிலும் ‘ என சப்தமிட்டபடி எதோ மந்திர உச்சாடனயையும் செய்து கொண்டிருந்தான். தன் கையில் வாளினால் வெட்டிக் கொண்டு அதில் இருந்து வழிந்த ரத்தத்தையும் அதிலே வழிய விட்டான். புஸ்ஸ்….பூச்ச்ஸ்.. ஓஹ்ஹாக்கோ………. ஒஹூஒ….ஒஹோ என எதோ கத்தியவாறே அந்த அக்னி குண்டத்தில் இருந்து பெரிய பூதம் ஒன்று வெளி வந்தது. அந்த பூதத்திடம் மயில் ராவணன் கூறலானான் ‘ஹே பூதமே….நானுன்னை இப்போ படைத்திருக்கேன். நீ எனக்கு சேவகன். அதனால தாமதிக்காம போய் என்னை அழிக்க வந்த வானரத்தை அழித்து விட்டு வா…நானுனக்கு விடுதலை தருவேன்’ என்று கூறவும் பூதமும் கொக்கரித்தது ‘ மன்னா….நானுனக்கு அடிமையே….உம்மை வதம் செய்ய வந்துள்ள அந்த அனுமன் எனும் வானரத்தை இதோ போய் நொடிப் பொழுதில் வதம் செய்து அதன் தலையைக் கொண்டு வந்து இந்த குண்டத்தில் போடுகிறேன்… ’ என்று கூவி விட்டு வெளியே ஓடியது.

‘அடே பூதமே, என்னய்யா கொல்ல வந்தாய்?…… நானுன்னை முதலில் கொல்வேன்’ என சூளுரைத்த அனுமான் ஓடோடி வெளியில் வந்து பூதத்துடன் சண்டையிடலானார். அந்த பூதமோ நெருப்பை வாயில் இருந்து கக்கத் துவங்க அந்த அக்னியின் சுவாலை தாங்க முடியாமல் தவித்த அனுமார் அக்னி தேவனை தோத்திரம் செய்யத் துவங்கினார்’

அக்னி பகவானும் அனுமானின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அருள்புரிய அனுமானின் உடல் சூடு குறைந்து அமைதியாயிற்று. அனுமான் உடனே கிளம்பி மீண்டும் தூம்ரதண்டியை சந்தித்து அவளிடம் தற்போது அவருக்குள்ள பிரச்னைக்கு வேறேதும் உபாயம் கூற முடியுமா என்று கேட்க அவளும் தனக்கேதும் அது குறித்து தெரியாதே என்று கை விரித்து விட்டு அதைக் குறித்து தர்ம தேவதைகளிடம் ஆலோசனை பெறுமாறு சொன்னாள். ஆகவே அனுமானும் தரும தேவதையிடம் அந்த பூதத்தை அழிக்க ஏதேனும் உபாயம் உள்ளதா என்று கேட்க அவள் கூறினாள் ‘ராமபக்தனே, உம்மால் முடியாததில்லை எனும் அளவு இந்நாள்வரை நீரும் உம்மால் ஆன அனைத்து உக்திகளையும் கைகொண்டு அரக்கர்களை அழித்துள்ளீர். ஆனால் இப்போதுள்ள இந்த பூதமானது மயில் ராவணனால் அக்னியில் இருந்து பெறப்பட்ட பூதம் என்பதால் அவன் தற்போது செய்து வரும் அக்னி யாகத்தை அழிப்பது மூலமே அந்த பூதத்தையும் அழிக்க முடியும். அந்த யாகம் அழியும்வரை நீரும் அந்த பூதத்தைக் கொல்ல முடியாது. அப்படியொரு வரம் அதுக்குள்ளது. அதை வேறெந்த உபாயத்தாலும் அழிக்க முடியாது.   நாம் ஒரு மர்மத்தை மட்டும் இப்போ உமக்கு சொல்ல முடியும். இப்போ மயில் ராவணனும் தங்கக் கோட்டைக்கும் வெள்ளிக் கோட்டைக்கும் இடையிலே உள்ள பகுதியில் ஒரு மரப்பொந்தில் வீரணா என்ற யாகம் ஒண்ணு செய்யறான். அதுல அதர்வண வேதத்தையும் ஓதிக்கொண்டிருக்கான். அதனால்தான் இப்படி ஒரு பயங்கர பூதத்தையும் அவனால படைக்க முடிந்தது. இப்போவும் அந்த யாகத்தை அவன் தொடர்ந்து கொண்டிருக்கான். அவன் அதை முடிக்கும் முன் அங்கு சென்று அதில் விக்னத்தை எற்படுத்துவீரானால் இந்த பூதமும் தன்னால அழிந்து விடும். வேறேதும் இதுக்கு வழியில்லை சுவாமி’ என்று கூறினாள்.

அவள் கூறியதைக் கேட்ட அனுமானும் ஆகாயம் மூலமாக உடனே கிளம்பிச் சென்று அந்த இடத்தை தேடத் துவங்கினார். மாயாஜாலன் மயில் ராவணனும் தான் யாகம் செய்யும் முன் பல்லாயிரம் இடங்களை ஒரே மாதிரி தோற்றம் தருமாறு பிரமிக்க வைத்திருந்தான். அதானால் அவனை கண்டு பிடிப்பது அனுமாருக்கு கடினமாயிற்று என்றாலும் தனது விடா முயற்சியினால் வாயு பகவானின் அருளைக் கொண்டு அந்த நிஜ யாக சாலையைக் கண்டு பிடித்து அந்த யாக குண்டத்தை விக்னப்படுத்தி விட பூதமும் அழிந்து போயிற்று. மயில் ராவணனும் அனுமான் தன் தந்திரங்கள் அனைத்தையும் எப்படியோ தவிடு பொடியாக்கி விட்டு வந்துடராரே என பயந்து அங்கிருந்து மாயமாகிப் போனான். அனுமானுக்கு இப்போ மயில் ராவணனை கண்டு பிடிக்க வேண்டியது அடுத்த வேலையும் ஆயிற்று. மீண்டும் மீண்டும் மாயமாகிக் கொண்டே இருப்பவனை எப்படி பிடிப்பது என்பதே கவலையாயிற்று. அங்கிருந்து மாயமாகிப் போன மயில் ராவணன் அனுமான் தன்னைக் கண்டு பிடிக்க முடியாதபடி வெகு தூரத்துக்கு இருந்த மலை பகுதியிலே வெள்ளியாங்கிரி எனும் மலையை உருவாக்கி கொண்டு அதற்குள்ளே பதுங்கிக் கொண்டான்.

ஊர்பூரா தேடியும் மயில் ராவணனைக் காணாத அனுமானும் மீண்டும் தூம்ரதண்டியிடம் சென்று யோசனைக் கேட்டார். அவளும் சொன்னாள் ‘ராம பக்தரே, மயில் ராவணன் ஒரு மாயாவி என்று நானும் முன்னர் சொன்னேனே. அது போலத்தான் அவனும் ஏதாவது மாய சொரூபத்தில் இருப்பான்’.

‘சரி இப்போ என்ன செய்யலாம்?’ என அனுமானும் கேட்க இருவரும் சற்றே சர்ச்சை செய்தப்பின் அனுமார் கூறினார் ‘அம்மணி அப்போது எனக்கோர் காரியத்தை நீ செய்யோணும். பழசும் புதுசுமான இடம் அனைத்தும் உனக்கு அத்துப்படி என்பதானால நீ அறியாத புது இடம் கண்டால் எனக்கு காட்டோணும். அதுக்கு நீ எனக்கு வழிகாட்டியபடி வந்து இந்த ஊரிலுள்ள அனைத்திடங்களையும் எனக்கு காட்டோணும். அப்படியொரு புதுயிடமிருந்தா அங்கதான் அவனிருப்பான்னு நெனைக்கறேன்.’ என்று கூறி அவளை துணைக்கழைத்துக் கொண்டு இடமிடமாக சென்றார். மயில் ராவணனும் வெள்ளியான்கிரி மலைக்குள்ளே இருந்து கொண்டு ராம லஷ்மணர்களை அழிக்க வேத மந்திரத்தையும் ஓதிக் கொண்டிருந்தான்.

இப்படி இருக்கையில் தூரத்தில் இருந்த வெள்ளியான்கிரி மலையைக் கண்ட தூரதண்டி சந்தேகம் கொண்டு அனுமானிடம் கூறினாள் ‘சுவாமி, இதுக்கு முன்னால நானிந்த மலையை பார்த்ததே இல்லை. இப்போது புதியதாக வந்திருக்க வேண்டும். அதனால்தான் தகதகன்னு தகிக்குது’ என்று சந்தேகமாகக் கூற, அனுமானும்  அதன் அருகில் சென்று பார்க்க அதிலிருந்து வந்துகொண்டிருந்த மந்திர ஒலியைக் கேட்டு அதுக்குள்ளே யாரோ ஒருவன் இருக்கார்ன்னு முடிவு பண்ணினார். சரி வரட்டும் பார்க்கலாம்னு அதன் மீது தனது முஷ்டியினால் ஓங்கிக் குத்து ஒன்றை விட தவிடு பொடியான அந்த மலை உள்ளிருந்து மயில் ராவணனும் வெளிப்பட்டு அனுமானைக் கண்டு பயந்து தப்பி ஓடத் துவங்கினான். இப்போ மயில் ராவணனையும் அனுமார் கண்டு பிடித்து விட்டார். அவனை பிடிக்க அவனை துரத்திக் கொண்டு அவன் பின்னால ஓடினார்.

மயில் ராவணன் மாய உருவங்களை எடுத்து கடைசி கட்டமாக சிவபெருமான் தனக்களித்திருந்த மந்திர சக்தி வாய்ந்த தன்னுடைய அஸ்திரங்களை எல்லாம் வீசத் துவங்கினான். அனுமானும் சளைக்கவில்லை, அவரும் பதிலுக்கு தன்னிடம் இருந்த ஆயுதங்களுக்கு தூப தீப ஆராதனைக் காட்டி இன்னொரு சிவாஸ்திரத்தையும் கஜாஸ்திரத்தையும் செலுத்தி மயில் ராவணனின் அனைத்து அஸ்திரங்களையும் தவிடு பொடியாக்கினார். இப்படியாக இருவரும் மாறி மாறி பல நாழிகையாக அஸ்திரங்களை ஏவிக் கொண்டிருக்க இருவரும் களைத்தார்கள். அப்போது அனுமானின் காதில் ஆகாசவாணி கூறிற்று ‘வாயு புத்திரனே இனியும் தாமதிக்காதே அவன் தப்பிக்கும் முன் அவனை தீர்த்துக் கட்டு’ .

அவ்வளவுதான் அதைக் கேட்ட அனுமானின் இருபுஜங்களும் துடி துடிக்க, பற்களை நரனரவெனக் கடித்துக் கொண்டு மயில் ராவணன் அமர்ந்திருந்த தேருக்கு அருகில் சென்று அதன் மீது ஏறி அதை அப்படியே கீழே தள்ள சுக்கு நூறாக பொடிப்பொடியாக்க தேரில் இருந்த மயில் ராவணன் கீழே விழுந்தான். அதை அவன் சற்றும் எதிர்பாராத நிலையில் இருந்தபோது தாமதிக்காமல் அவன் மீது தன் காலை வைத்து அவனை பூமியோடு அழுத்தி தன் விஸ்வரூபத்தை எடுத்து அவன் உயிர் நிலைகள் இருந்த மலையின் குகையில் கையை விட்டு ஐந்து வண்டுகளையும் எடுத்து தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு அவற்றை நசுக்கிக் கொல்ல மயில் ராவணனும் உயிர் துறந்தான்.

அப்போது அவனுக்கு ஞானோதயம் ஏற்பட்டது. அவன் வாயும் தன்னை அறியாமலேயே அனுமானை தோத்திரம் செய்யத் துவங்கிற்று.’ஆஞ்சனேயா, வாயுபுத்ரா, ராமதூதா, கருணாகரா….அறியாமையால் செய்த எம் பிழையை மன்னித்து எம்மைக் காத்தருள் ஸ்வாமி’ எனப் பலவாறு அவரை துதித்தான். அடுத்த சில நாழிகையில் தேவலோகத்தில் இருந்து ஒரு புஷ்ப விமானம் ஒன்று அங்கு வந்திறங்க அதிலேறிக் கொண்ட மயில் ராவணனும் ஆஞ்சனேயரை வணங்கி விட்டு தேவலோகத்துக்குச் சென்றான்.

வந்த காரியம் முடிந்ததும் அனுமார் ஓடோடி ராம லஷ்மணர்களை எவ்விடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தாரோ அங்கே சென்று பூமாதேவியிடம் அவர்களை தமக்கு திருப்பித் தருமாறு கேட்டார். பூமாதேவியும் பூமியைப் பிளந்து தன்னிடம் பத்திரமாக வைத்திருந்த ராம லஷ்மணர்களை அனுமாரிடம் ஒப்படைத்தாள். அந்த பெட்டியை பாதாளத்தை விட்டு வெளியில் சென்ற பின்னரே திறக்க வேண்டும், அப்போதுதான் மாயக்கட்டும் விலகும் என அறிந்திருந்ததினால் அனுமானும் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு அவசரமவசரமாக அதே தாமரைத் தண்டின் வழியே பாதாளத்தை விட்டு வெளியேறிச் சென்றார். சமுத்திரக் கரையை அடைந்ததும் வாயு பகவானின் முன்னிலையில் அந்தப் பெட்டியை அவர் திறந்தவுடன் அதற்குள் இருந்த ராம லஷ்மணர்கள் தூக்கத்தில் இருந்து எழுவது போல எழுந்தார்கள்.

அவர்களைக் கண்ட அனுமானும் ஓடி வந்து அவர்கள் காலில் விழுந்து வணங்கினார். அவர்களை விடுவிக்க பாதாள இலங்கைக்கு அனுமான் சென்றபோது அவருடைய புத்திரன் மச்சவல்லபன் ராம லஷ்மணர்கள் விடுதலை ஆகி செல்லும்போது அவர்களது ஆசிகளை தமக்கும் தந்து விட்டுச் செல்ல வேண்டும் என விரும்பி இருந்தான். அவனும் அங்கே அவர்கள் தரிசனத்தைப் பெறுவதற்காக அங்கே காத்திருந்தான். ராம லஷ்மணர்கள் பெட்டியை விட்டு வெளியில் வந்ததும் அவர்கள் கால்களில் விழுந்து வணங்கி ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டு மீண்டும் தன்னுலகத்துக்குச் செல்லக் கிளம்பினான்.

அவனையும் தம்மோடு வருமாறு அழைக்க மச்ச வல்லபன் சொன்னான் ‘நான்தான் வாயு புத்திரனின் பிள்ளையின் பிள்ளை என்பதை யாருக்கும் தெரிவிக்க விரும்பவில்லை. அதைக் கேட்டால் தனக்கு அது பற்றி அனுமான் கூறவில்லையே என்று அவர் மீது சுக்ரீவரும் கோபம் கொள்வார்.  அனுமானின் வியர்வையை விழுங்கி என்னை பெற்றேடுத்தவளை அனுமான் பார்த்தது கூட இல்லை என்பதால் மணம் செய்து கொண்ட பாத்தியதையும் இல்லை. ஆகவே பிரும்மச்சாரியான அனுமானின் புகழை நான் யார் என்பதை வெளியில் காட்டி கெடுக்க விரும்பவில்லை. ஆகவே நான் உங்கள் அனைவரது பூரண ஆசியுடன் என்னுலகம் சென்று அங்கு ஆனந்தமாக உங்களையும் துதித்தபடி வாசம் செய்வேன். என்னை ஆசிர்வதியுங்கள்’ என்று கூறிவிட்டு அனுமானின் கால்களில் விழுந்து வணங்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

இனியும் தாமதிக்கலாகாது என்று எண்ணியவர்கள் அனைவரும் இலங்கைக்கு சென்றார்கள். அவர்கள அனைவரும் திரும்பி வருவதை ஒற்றர் மூலம் அறிந்து கொண்ட ராவணன் கர்ஜித்தான் ‘ஐயகோ…என்ன காரியம் ஆகிவிட்டது? அத்தனை கோடிக் கோடிலட்சம் படையினரையும், மாயா ஜாலத்தையும் வைத்திருந்த தாயாதி மயில் ராவணனையுமா வதம் செய்து விட்டு இங்கு வருகிறார்கள்? இதை நானெப்படி தாங்குவேன்? என் துயரத்தை யாரிடம் சொல்வேன்? போகட்டும், போனதெல்லாம் போகட்டும். எனக்குள்ளதும் ஒரு உயிர்தானே. என் சந்ததியினர் அனைவரையும் இழந்து நிற்கும் நானே இப்போ யுத்தத்துக்குப் போய் என்னால் முடிந்ததைப் பார்க்கிறேன். ஒன்று ராம லஷ்மணர்கள் வதமாக வேண்டும். இல்லை நானும் என் சந்ததியினரிடம் போய் சேர வேண்டும். கொண்டு வாங்கடா என் தேரையும் ஆயுதங்களையும்…..நடந்கடா என்னோட’ என கர்ஜித்துக் கொண்டே தேரில் ஏறி ராமனுடன் யுத்தம் செய்யக் கிளம்பிச் சென்றான்.

கடுமையான யுத்தமும் நடந்து முடிய ராவணனும் வதம் ஆயினான் . அடுத்து அவனுக்கு பதிமூன்று நாள் கருமாதியையும் விபீஷணன் செய்து முடித்தவுடனேயே ராமனும் தனது மனைவி சீதையை மீட்டுக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டும் தம்மை புனிதம் படுத்திக்கொண்டு அங்கிருந்து அனைவரும் கிளம்பி வனத்துக்குச் சென்று பரதனை அழைத்தார்கள். அங்கு வந்த பரதனும் அவர்களை முறையோடு நாட்டுக்கு அழைத்துச் செல்ல அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அனைவருக்கும் கூறினார்கள். ராமனும் அனுமாரைக் கட்டிப் பிடித்து ‘இனி நீ எங்களுடனேயேதான் இருக்கோணும்’ என்று கூற ஆகாயத்தில் இருந்து தேவர்கள் புஷ்பமாரிப் பொழிந்தார்கள்.