ஆரண்ய

சுந்தரேஸ்வரர் ஆலயம்

-சாந்திப்பிரியா

திருவெண்காடு மேல கோபுர வாசலில் இருந்து ஒன்று அல்லது இரண்டு கிலோ தொலைவில் உள்ள சிறு கிராமமே ஆரண்யேஸ்வரம் அல்லது திருக்காட்டுப்பள்ளி என்பதாகும். அங்கு உள்ளது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆரண்ய சுந்தரேஸ்வரர் ஆலயம். இந்த இடம் சீர்காழியில் இருந்து சுமார் 14 கிலோ தொலைவில் உள்ளது.  ஆரண்யேஸ்வரம் செல்ல வேண்டும் எனில் திருவெண்காடு சென்ற பின் அங்கிருந்து அண்ணன்பேட்டை சாலையை சென்றடைந்து, அங்கிருந்து ஆரண்ய சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்கு செல்லலாம்.

ஆரண்ய சுந்தரேஸ்வரர் ஆலயம் மிகப் பெரிய ஆலயம் அல்ல. இந்த ஆலயத்தில் மற்ற அனைத்து ஆலயங்களில் உள்ளதை போல ராஜ கோபுரம் இல்லை. ஆலய வளாகத்துக்குள் செல்ல மேற்கு திசையில் ஆலய வாயில் உள்ளது. அதன் மீது மேல்வளைவு கொண்ட தோரணவாயில் சிற்பங்களுடன் காணப்படுகின்றது.

இந்த ஆலயத்தில் சிவபெருமான் மேற்கு நோக்கி ஒரு கருவறையில் அமர்ந்து இருக்க, ஆலய நாயகியான அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கி உள்ள சன்னதியில் காணப்படுகிறாள். ஆலயத்தின் வெளியில் நான்கு மூலைகளில் நான்கு தீர்த்தங்கள் உள்ளனவாம். முன் ஒரு காலத்தில் இந்த ஆலயம் இருந்த அனைத்துப் பகுதியும் காட்டுப் பகுதியாக இருந்ததினால் காடு என்பதைக் குறிக்கும் வகையில் இந்த இடம் ஆரண்யேஸ்வரம் என அழைக்கப்பட்டதாம். காட்டுக்குள் இந்த ஆலயம் இருந்ததினால் காட்டுக்குள் உள்ள ஆலயம் என்பதைக் குறிக்கும் வகையில் இதை ஆரண்யேஸ்வரர் ஆலயம் என அழைத்தார்களாம்.

இன்னொரு கதையின்படி, முன் ஒரு காலத்தில் சிவபெருமானை துதித்தபடி ஆரண்யா எனும் மாமுனிவர் தவத்தில் இருந்தாராம். அவர் மஹா காலாம்பிகை எனும் தேவதையை துதித்து தான் தவத்தில் இருக்கும்போது தன் தவத்துக்கு மிருகங்களும், அசுரர்களும் இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவள் தனக்கு காவலாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள, மஹா காலாம்பிகையும் அவர் தவம் முடியும்வரை அவருக்கு காவலாக இருந்தாளாம். முனிவர் இங்கு தவம் இருந்ததைக் குறிக்கும் வகையிலும் கூட இந்த இடம் ஆரண்ய முனிவரைக் குறிக்கும் விதத்தில் ஆரண்ய ஈஸ்வரன் அதாவது ஆரண்யேஸ்வரம் என அழைக்கப்பட்டு இருக்கலாம் என பண்டிதர்கள் கூறுகின்றார்கள். அவர்களைக் குறிக்கும் விதத்தில் ஆலய சுவற்றில் ஒரு முனிவரும் ஒரு தேவதையும் உள்ள காட்சி செதுக்கப்பட்டுள்ளது. அதை ஆரண்ய முனிவர் மற்றும் மஹா காலாம்பிகையின் உருவம் என்கின்றார்கள்.

இன்னொரு கதை என்னவென்றால், முன் ஒரு காலத்தில் விசுவரூபன் எனும் அசுரன் ஆரண்யேஸ்வரத்தில் இருந்த தேவதைகளையும், தேவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களை அடியோடு அழிப்பதற்காக ஒரு யாகத்தையும் செய்யத் துவங்கினான். அதனால் மிரண்டுபோன தேவர்கள் அனைவரும் தேவேந்திரனிடம் சென்று முறையிட அவரும் பெரும் சேனையுடன் இங்கு வந்து விசுவரூபனுடன் யுத்தம் செய்து அவனைக் கொன்றார். அதனால் கோபமுற்ற அசுரர்களின் குருவான துவட்டா எனும் முனிவர் ஒரு பெரிய அக்னிகுண்டம் வளர்த்து அதில் யாகம் செய்து, அக்னிகுண்டத்தில் இருந்து இருந்து விருத்ராசுரா எனும் இன்னொரு அசுரனைப் படைத்து அவனை தேவேந்திரனுடன் யுத்தம் செய்ய அனுப்பினார். அக்னியில் இருந்து வெளிவந்த விருத்ராசுரன் தன்னை தாதிஸீ முனிவரால் மட்டுமே கொல்ல முடியும் என்ற வரத்தையும் பெற்றுக் கொண்டு வந்திருந்தான் என்பதினால் அவனை இந்திர பகவானினால் வெல்ல முடியாமல் போயிற்று. ஆகவே தேவேந்திரன் தாதிஸீ முனிவரின் முதுகு எலும்பை பெற்றுக் கொண்டு வந்து, அதை ஆயுதமாக மாற்றி அதன் மூலம் விருத்ராசுரனை வதம் செய்தார். இதனாலும், நவக்கிருகத்தில் ஒருவரான குருபகவானை ஒருமுறை தேவேந்திரன் அவமதித்ததினால் ஏற்பட்ட சாபத்தினாலும்  பிரும்மஹத்தி தோஷம் தேவேந்திரனை பிடித்துக் கொள்ள, தேவேந்திரனின் தேவலோக தலமைப் பதவி பறிபோயிற்று.

பதவி பறிபோனதினால் பதற்றம் அடைந்த தேவேந்திரன் உடனடியாக பகவான் பிரம்மாவிடம் சென்று, தான் பறிகொடுத்த தலைமை பதவியை மீண்டும் பெற என்ன செய்யலாம் என உபாயம் கேட்டபோது, பகவான் பிரம்மனும் அவரை பூலோகத்துக்குச் சென்று, எங்கெல்லாம் சிவபெருமான் ஸ்வயம்புவாக அவதரித்து உள்ளாரோ, அங்கெல்லாம் அவரை வழிபட்டு வேண்டினால் அவர் எந்த இடத்திலாவது காட்சி தந்து அவரது சாபத்தை விலக்குவார் என்பதாக கூறினார். தேவேந்திரனும் பூலோகத்துக்கு வந்து சிவபெருமான் எங்கெல்லாம் ஸ்வயம்புவாக அவதரித்து இருந்தாரோ அங்கெல்லாம் அவரை வழிபட்டு வேண்டி வரலானார். கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைப் பகுதிகளில் பல இடங்களில் தேவேந்திரன் பூலோகத்துக்கு வந்து சிவபெருமானை வழிபட்ட வரலாற்று செய்திகள் பல ஆலயங்களுடைய வரலாற்று செய்திகளில் காணப்படுகின்றன. இப்படியாக வழிபட்ட தேவேந்திரன் ஆரண்யேஸ்வரத்துக்கு வந்து சிவபெருமானை துதித்து வணங்கினார்.

அதற்கு முன்பாகவே பகவான் பிரும்மாவும் ஆரண்யேஸ்வரத்தில் பத்து சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்திருந்த காலத்தில் சிவபெருமான் ஆரண்யேஸ்வர ஆலயத்திலும் ஸ்வயம்புவாக அவதரித்து இருந்தார் என்பது சில பண்டிதர்களின் கூற்று. இங்கு வந்த தேவேந்திரன் கடுமையான தவம் செய்து சிவபெருமானின் தரிசனத்தை பூலோகத்தில் பெற்று, அவர் அருள் மூலம் பிரும்மஹத்தி தோஷத்தை விலக்கிக் கொண்டு தேவலோகப் பதவியை மீண்டும் அடைந்தாராம். பிரும்மா பிரதிஷ்டை செய்து பூஜித்த சிவலிங்கங்களில் ஒரே பாதையில் உள்ள தச லிங்கங்கள் எனப்படும் ஏழு சிவலிங்கங்கள் ஒவ்வொன்றும் வேறு தோற்றத்தில் காணப்படுகின்றன. பகவான் பிரும்மா ஸ்தாபித்ததாக கூறப்படும் ஒரு சிவலிங்கம் பிரம்மேஸ்வரர் என அழைக்கப்படுகின்றது. அந்த பிரம்மேஸ்வரர் சிவலிங்கத்தை தரிசனம் செய்து வணங்குவதில் மூலம் ஒருவருடைய அனைத்து பிரும்மஹத்தி தோஷங்களும் விலகுகின்றன என்பது ஐதீகமாக உள்ளது. முக்கியமாக இங்குள்ள பிரும்மேஸ்வரரை வணங்கித் துதிப்பது ஆயிரம் அஸ்வமேத யாகங்களை சென்று பூஜித்த பலனைத் தருமாம். மேலும் இந்த ஆலயத்தில் உள்ள ஏழு சிவலிங்கங்களும் வெவ்வேறான தோற்றத்தில் உள்ளது ஒரு அதிசயிக்க வைக்கும் காட்சியாகும்.

இந்த ஆலயத்தில் முனீஸ்வர் மற்றும் பிரும்மேஸ்வர் எனக் கூறப்படும் இரட்டை சிவலிங்கத்தில் உள்ள சிவபெருமான் தானே விரும்பி, அனுமதி கொடுத்தால்தான் இந்த ஆலயத்தில் வந்து அவரை பூஜிக்கும் பாக்கியம் இருக்கும் என்ற ஐதீகம் உள்ளதினால் எத்தனை முயற்சி செய்தாலும் அங்கு வரும் சில பக்தர்களுக்கு ஆலய தரிசனம் கிடைப்பது இல்லை என்பதை பல பக்தர்களின் கூற்றுக்கள் மூலம், தாம் கண்கூடாக கண்டுள்ளதாக ஆலய பண்டிதர் கூறினார். தாம் இழந்த செல்வாக்கையும், மரியாதையையும் மீண்டும் பெறவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், அனைத்து தோஷங்களையும் களைந்து கொள்ளவும் பக்தர்கள் இங்கு வந்து வேண்டுதல் செய்கின்றார்கள். 

இந்த ஆலயத்தின் இன்னொரு அதிசயம் என்ன என்றால் ஆலய வளாகத்துக்குளேயே அமைந்து உள்ள சிறு ஆலயத்தில் உள்ள சன்னதியில் வினாயகப் பெருமான் மூஞ்சூருக்கு பதிலாக  நண்டு ஒன்றின் மீது அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். முன் ஒரு காலத்தில் இந்த வனப்பகுதியில் இருந்த தேவதை ஒன்று அதற்கு ஏற்பட்டு விட்ட சாபத்தினால் நண்டாக மாறிவிட்டது. அதை நிவர்த்தி செய்துகொள்ள பகவான் வினாயகரை வணங்கித் துதிக்க வேண்டும் என அதற்கு சாபமிட்ட முனிவர் கூறி விட, நண்டாக மாறி இருந்த தேவதையும் இந்த ஆலய பகுதியில் வினாயகப் பெருமானை துதித்து வணங்கி அவர் அருளை பெற்றுக் கொண்டு சாப விமோசனம் அடைந்ததாம். சாப விமோசனம் பெற்ற அந்த நண்டு அந்த ஆலய வளாகத்துக்குள் தானே அவரது வாகனமாக இருக்க வேண்டும் என வினாயகரிடம் வேண்டிக் கொள்ள, பகவான் வினாயகரும் அதை ஏற்றுக் கொண்டு அந்த ஆலயத்தில் நண்டையே தமது வாகனமாக வைத்துக் கொண்டதாக வரலாறு உள்ளத்தினால்தான் ஆலயத்தில் உள்ள வினாயகர் தமது வாகனமாக நண்டை வைத்துக் கொண்டு அதன் மீது அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். ஆகவே இந்த ஆலயத்தில் உள்ள பகவான் வினாயகரை நண்டு வினாயகர் என அழைக்கின்றார்கள்.

இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் என்ன என்றால் பகவான் தக்ஷிணாமூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சன்னதியில் எப்போதும் கடல் ஓசைப் போன்ற சப்தம் கேட்டவண்ணமே உள்ளதுதான். அங்கு சுவற்றில் ஒரு பெண் தேவதையின் உருவச் சிலை காணப்படுகின்றது. அந்த சிலையின் தொப்பிள் பகுதியில் காதை வைத்துக் கேட்டால் கடல் ஓசை போன்று ஓசை வருவதைக் கேட்கலாம். அதை போலவே இங்குள்ள பகவான் தக்ஷிணாமூர்த்தியை சுற்றி, பகவானின் பாதத்தில் இருவர், இரு பக்கத்திலும் இரண்டு இரண்டு முனிவர்கள் என ஆறு முனிவர்கள் காணப்படுகின்றனர். மற்ற ஆலயங்களில் பகவான் தக்ஷிணாமூர்த்தியை சுற்றி நான்கு முனிவர்களை மட்டுமே காண முடியும். அதனால்தான் இங்குள்ள பகவான் தக்ஷிணாமூர்த்தியை ராஜ தக்ஷிணாமூர்த்தி என அழைக்கின்றார்கள்.

ஆலய படங்கள்