பகவான்

ஆதிவைத்தீஸ்வரர்

ஆலயம்

பலர் அறிந்திடாத உண்மைகள்

-சாந்திப்பிரியா-

பகவான் ஆதிவைத்தீஸ்வரர் ஆலயம் குறித்து பலருக்கும் தெரிந்திடாத சில செய்திகள் உள்ளன. சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலின் அருகில் உள்ள பகவான்  வைத்தீஸ்வரர் ஆலயத்தைத் தவிர ஆறு ஆதிவைத்தீஸ்வரர் ஆலயங்களும் பிற இடங்களில் உள்ளன என்பதே அந்த செய்தியாகும். அவற்றில் முதலாவது நாகப்பட்டினம் மாவட்டத்தில், சீர்காழி தாலுக்காவில் உள்ள பகவான்  வைத்தீஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் ஆறு கி.மீ. தொலைவில் உள்ள மண்ணிப்பள்ளம் எனும் கிராமத்தில் உள்ள பகவான் ஆதிவைத்தீஸ்வரர்  ஆலயம் ஆகும்.  அந்த ஆலயத்தில்தான் முன்னர்  தற்போது பகவான் வைத்தீஸ்வரர் கோவிலில் உள்ள பிரதான தெய்வம் இருந்ததாக கூறுகின்றார்கள்.  அதுவே பகவான்  வைத்தீஸ்வரர் ஆலயத்தின் மூத்த ஆலயமாம். செவி வழிக் கதையின்படி தற்போதைய  வைத்தீஸ்வரர் கோவிலில் உள்ள பகவான்  வைத்தீஸ்வரனுக்கு மூத்தவர் மாயவரத்தில் இருந்து 10 கி.மீ தூரத்தில் அமைதியான சூழ்நிலையில் இருக்கும் பாண்டூர் எனும் ஒரு கிராமத்தில் இரண்டாவது ஆலயத்தில் அமர்ந்து உள்ளார் என்கின்றார்கள். பாண்டூர் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 2000 ஆகும். பகவான் ஆதிவைத்தீஸ்வரருடைய மூன்றாவது ஆலயம் மணல்மேடு என்று அழைக்கப்படும் ஒரு கிராமத்திற்கு அருகிலுள்ள ராதாநல்லூர் எனும் இடத்தில் உள்ளது.  நான்காவது ஆலயம் மண்ணிப்பள்ளம் கோவிலில் இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வடகரை எனும் ஒரு கிராமத்தில், ஒரு மரத்தின் கீழ் உள்ளது என்கின்றார்கள். ஆனால் அதன் இடத்தை எவராலும் சரிவரக் கூற முடியவில்லை. அதை தேட வேண்டும் என்கின்றார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தின் செம்பனார் கோவில் அருகில் உள்ளதே வடகரை கிராமம். பகவான் ஆதிவைத்தீஸ்வரனின் ஐந்தாவது  ஆலயம் சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள காட்டூர் எனும் கிராமத்தில் உத்திர வைத்தியலிங்கேஸ்வர் எனும் பெயரில் உள்ளது.  சீர்காழி அருகில் உள்ள பிரம்மாண்டமான பகவான்  வைத்தீஸ்வரர் ஆலயத்துக்கு செல்ல முடியாதவர்கள், தமது அங்கார தோஷத்தை அகற்றிக் கொள்ள இந்த ஆலயத்தில் வந்து வழிபாடு செய்தால் போதும் என்பது ஐதீகம். ஏன் எனில் மூல ஆலயத்தில் உள்ள பகவானும், இங்குள்ள பகவானும் ஒருவரே என்கின்றார்கள். எவ்வாறாயினும், சீர்காழிக்கு அருகில் உள்ள பகவான்  வைத்தீஸ்வரர் ஆலயத்தை குலதெய்வ ஆலயமாக கொண்டு உள்ளவர்கள் தமது பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ள சீர்காழியில் உள்ள மூல பகவான்  வைத்தீஸ்வரர் ஆலயத்துக்குதான் செல்ல வேண்டும் என்பதும் அடிப்படை நியதி ஆகும். பகவான் ஆதிவைத்தீஸ்வரருடைய ஆறாவது ஆலயம் விருதுநகரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் எனும் இடத்தில் இருந்து ஒரு கிலோ தொலைவில் உள்ள மடவர் விலகம் எனும் கிராமத்தில் உள்ளது.

ஒருவரது ஜாதகத்தில் செய்வாய் தோஷம் எனப்படும் தோஷம் இருந்தால் அவர்கள் பலவிதமான தொல்லைகளை அனுபவிப்பார்கள். பண விரயம், உடலில் பலத்த காயங்கள் ஏற்படும் அல்லது ஜெயில் வாசம் கூட அனுபவிக்க நேரிடும். ஆகவே வைத்தீஸ்வரர் ஆலயத்துக்கு செல்பவர்கள் தமது உடல் உபாதைகள் முக்கியமாக தோல் மற்றும் வயிறு சம்மந்தமான நோய்கள் விலக மட்டும் வேண்டிக் கொள்ளாமல் செய்வாய் தோஷம் விலகவும் பிரார்த்தனைகளையும், பூஜைகளையும் செய்வதுண்டு.

 

ஆதி வைத்தீஸ்வரர் ஆலயம்,

மண்ணிப்பள்ளம்

மண்ணிப்பள்ளத்தில் உள்ள பகவான் ஆதி வைதீஸ்வரன் ஆலய வரலாறு சுவையானது. இங்குள்ள ஆதிவைத்தீஸ்வரர் ஆலயம் மற்ற ஆதி வைதீஸ்வரன் ஆலயங்களுக்கும் முற்பட்டது, அதாவது  ஆதி வைத்தீஸ்வரரர் ஆலயங்களின் தாய் கோவில் என்று நம்பப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்னர் அந்த கிராமத்தில் குடியேறியவர்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்த நிலப்பகுதியில் சிதைந்த நிலையில் இருந்த இந்த ஆலயத்தை மீட்டெடுத்து ஆலயத்தை மீண்டும் நிர்மாணிக்க அங்கிருந்த ஸ்ரீ ரமேஷ் மற்றும் ஸ்ரீ பராமானந்தன் எனும் இரு அன்பர்கள் கடுமையாக போராட வேண்டி இருந்ததாம். திரு ரமேஷின் கூற்றுப்படி ஒரு காலத்தில் இந்த கிராமம் பிராமணர்களின் பிரதானமாக குடியேற்ற பகுதியாக இருந்தது. அவர்களுக்காக தனி சுடுகாடு கூட இருந்ததாம்.

கோயில் வரலாறு குறித்து கூறப்படும் நாட்டுப்புறக் கதைகளின்படி மருந்துகளின் தலைவராக இருந்த தன்வந்தரி பகவான் ஒரு காலத்தில் மகரிஷி உருவில் இந்த ஆலயத்தில் வசித்து வந்தாராம். அந்தப் பகுதியை சேர்ந்த மன்னர் ஒருவர் மகரிஷிவைச் சந்திக்க விரும்பி அவரது அரண்மனைக்கு தன்வந்தரி மகரிஷியை அழைத்து வரும்படி தமது தூதர்களை அனுப்பினார். ஆனால் தன்வந்தரி மகரிஷி அவர்களுடன் செல்ல மறுத்து விட்டார். அவர்களுடைய மன்னன் தன்னை  பார்க்க விரும்பினார் என்றால் அவர்தான் ஆலயத்துக்கு வந்து தன்னை பார்க்க வேண்டும் என்று பதில் அனுப்ப, அதனால் கோபமுற்ற மன்னன் தனது படைகளை அனுப்பி, மகரிஷியை தீயில் போட்டு எரித்து விடுமாறு கட்டளையிட்டார். ஆனால் தீயில் போடப்பட்ட மகரிஷி அந்த நெருப்பில் இருந்து ஒன்றும் ஆகாமல் வெளியில் வந்ததும் இல்லாமல் அதே இடத்தில் மீண்டும் தன்னுடைய மருத்துவப் பணியினை தொடர்ந்தார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த மன்னன் அந்த ஆலயத்தையே அழித்து விடுமாறு கட்டளையிட்டப் பின் மண்ணிப்பள்ளத்தில் இருந்த ஆலயத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில்  உள்ள புகழ்பெற்ற வைதீஸ்வரர் பகவான் ஆலயத்தைக் கட்டினார் எனக் கூறப்படுகிறது.

1920 ஆம் ஆண்டில், அன்றைய பீடாதிபதியான காஞ்சி மஹாபெரியவா தமது பாத யாத்திரையின்போது இந்த கிராமத்தை கடந்து சென்றபோது பாழடைந்த கோயிலுக்குச் சொந்தமான ஐந்து நீர்நிலைகளில் ஒன்றான ‘தைலக்குட்டி ‘ எனும் குளத்தில் நீராடியபின் சிதைந்து இருந்த ஆலயத்தில் இருந்த  ஆதி வைத்தியநாத பகவானின் தரிசனம் பெற்றார் எனப் பெருமையாக கூறுகின்றார்கள். அவரே அங்குள்ள சிலைகள் தெய்வீக கணங்களினால் நிறுவப்பட்டது என்று குறிப்பிட்டார் எனக் கூறுகிறார்கள்.

பல்லவ மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட இரு பக்தர்களும் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீண்டும் ஆலயத்தை நிர்மாணிக்க முயன்றபோது ஆலயம் அமைக்கக் கூடாது என விரும்பிய சில விஷமிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலானார்கள். ஆலயத்தை மீண்டும் கட்ட முயன்ற பக்தர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன. மேலும் சிலர் ஆலய பணியில் இருப்பது போல காட்டிக் கொண்டு உள்ளிருந்து கொண்டே சிக்கல்களை உருவாக்கினார்கள்.

இத்தகைய குழப்பங்களின் நடுவில் அங்கு நிலவிய சூழ்நிலையை திசை திருப்பும் வகையில் ஒரு தெய்வ நிகழ்வு நடந்தது. ஆலயத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில், மஞ்சள் நிற பூசணிக்காய் ஒன்று  ஐந்து தலை நாக உருவில்  விளைந்தது. காட்டு  தீப்போல அந்த செய்தி பரவியபோது, தொலைதூர இடங்களிலிருந்தும் பல மக்கள் சாரி சாரியாக அந்த அரிய காட்சியைப் பார்வையிட அங்கு வந்தனர். அந்த மக்கள் அப்படிப்பட்ட உருவம் கொண்ட பூசணிக்காய் தோன்றியது நாகராஜரின் ( நாகங்களின் தலைவர்) தெய்வீக செயல் என்று கூறினர். மேலும் அந்த பூசணிக்கு வழிபாடு செய்யத் தொடங்கினர். அந்த நிகழ்விற்குப் பிறகு ஆலய கட்டுமானத்திற்கு இடையூறு விளைவிப்பதில் முன்னணியில் நின்றவர்கள் உட்பட அனைவரும் ஆலய நிர்மாணப் பணிக்கு தடங்கல் விளைவிப்பதை நிறுத்திக் கொண்டார்கள்.

ஆலயத்தை சுற்றி ஒரு சுவர் எழுப்பப்படாவிட்டால், கோவில் கட்டுமானம் சுறுசுறுப்பாக நடைபெறாது என ஆரூடம் கூறிய ஒரு பண்டிதர் குறிப்பிட்டத்தைப் போலவே ஆலயத்தை சுற்றி ஒரு சுவர் எழுப்பப்பட்ட பின்னரே அவர்களால் ஆலய கட்டுமானத்தை நிறைவாக துவக்க முடிந்தது. அதுவரை பல தடைகள் மற்றும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இருப்பினும் 12 வருடங்கள் போராடி வெற்றி கொண்டு அனைத்து தடைகளையும் மீறி ஆலய பணி வெற்றிகரமாக நிறைவு அடைய 2013 ஆம் ஆண்டில் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. நடந்தவை அனைத்துமே ஆதி வைத்தியநாத பகவானின் மேன்மையை எடுத்துக் காட்டுவதற்கு செய்யப்பட்ட தெய்வீக நாடகம் என அனைவரும் நம்பினார்கள். மேலும் அந்த ஆலயத்தில் துவஜஸ்தம்பம் (கொடி மரம்) மற்றும் பிற தெய்வ சன்னிதானங்கள் அமைக்கும் பணி தொடர்கிறது. திரு ரமேஷின் கருத்துப்படி, மண்ணிப்பள்ளத்தில் உள்ள தற்போதைய ஆலயமே பிரதான வழிபாட்டுத் தலமான வைதீஸ்வரன் கோயிலின் தாய் கோவிலாகும்.

தொல்லியல் துறை தொல்பொருள் வல்லுவரான  குடவாயில் பாலசுப்ரமணியம் என்பவரின் கூற்றின்படி மணிப்பள்ளத்தில் உள்ள இந்த ஆலயமே சீர்காழியில் உள்ள மூல வைத்தீஸ்வர பகவான் என்றும்  மற்றும் பிற இடங்களில் உள்ள வைதீஸ்வர பகவான் ஆலயங்களை விட இது முதன்மையானது என்பதாகும். 1300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் இருந்த வைத்தீஸ்வர பகவான் ஆலயம் பல மைல் சுற்றளவில் கட்டப்பட்டு இருந்துள்ளது என்பதற்கு சான்றாக ஆலயத்தின் சிதைபாடுகள் தொலைதூர அளவுக்கு  பல இடங்களில் கிடைத்துள்ளனவாம். இந்த கிராமத்தில் கண்டு பிடிக்கப்பட்ட உடைந்த கட்டமைப்புகள் மற்றும் தெய்வங்களின் சிலைகள், உடைந்த நிலையில் இருந்த சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் சிலவும் இன்னும் அவர்களது கூற்றை பலப்படுத்தியுள்ளன. இங்கிருந்த பல சிலைகள் கேரளாவைப் போன்ற இடங்களுக்கு திருட்டுதனமாக கொண்டு செல்லப்பட்டு விட்டன என்று சிலர் கூறுகிறார்கள்.  மேலும் சில சிலைகளை அருகில் இருந்த கிராமத்தினர் எடுத்துக் கொண்டு சென்று ஆலயங்களை அமைத்துக் கொண்டார்களாம். மொத்தத்தில் ஆலய பகுதியில் இருந்த பழுதடைந்த மற்றும் சிதைந்த சிலைகளை மட்டுமே அங்கு விட்டுச் சென்று இருந்தார்கள். அந்த ஆலய வளாகத்தில் பாறையில் செதுக்கப்பட்ட மூன்று அல்லது நான்கு கல்வெட்டுக்கள் கிடைத்தனவாம். ஆனால் அவற்றின் தொடர் கல்வெட்டுக்கள் கிடைக்கவில்லை. அவற்றையும் எவராவது கட்டுமானப் பணிகளுக்கு எடுத்துக் கொண்டு சென்று இருக்கலாம் என நம்புகின்றார்கள். 

ஆரம்பத்தில் தற்போது பிரதான சன்னதி உள்ள இடத்தின் மீது சாறை சாரையாக பாம்புகள் உலாவிக் கொண்டு இருந்ததினால் அதன் அருகில் செல்ல எவருக்கும் துணிவில்லாமல் இருந்ததாம். திரு. ரமேஷின் கருத்துப்படி, முதலில் இருந்ததாக நம்பப்படும் மிகப் பெரிய கோயிலின் அழிவுக்கான காரணங்கள் கண்டு பிடிக்கப்படவில்லை என்றும், அதன் ஆராய்ச்சி தொடர்கிறது என்றும் கூறினார். தன்வந்திரி மகரிஷியை சந்திக்க முடியாமல் போன கோபத்தில்  மன்னன் இந்த ஆலயத்தின் மூல சிலைகளை எடுத்துச் சென்று தற்போது சீர்காழி அருகில் உள்ள வைத்தீஸ்வர பகவான் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து இருக்கலாம் என்று நம்புகின்றார்கள். பல இடங்களிலும் புதிய வைத்தியநாத ஸ்வாமியின் ஆலயங்களை எழுப்பியவர்கள் இங்கு வந்து ஆலய நிலத்தில் இருந்து ஒரு கைப்பிடி மணலை எடுத்துச் சென்று பூமி பூஜையில் பயன்படுத்துவதாக திரு ரமேஷ் கூறினார். 

ஆலயத்தின் பிரதான நுழைவாயில் கிராம பகுதியில் சிறிய சந்தில் உள்ளது. கோவில் வளாகம் சற்றே பெரியதாக கட்டப்பட்டு உள்ளது.  சன்னதியில் உள்ள சிவலிங்கம் ஆதி வைத்தியநாதர் என அழைக்கப்படுகின்றார். இந்த மிக நீளமான சிவலிங்கம் ஆழமாக புதைக்கப்பட்டு உள்ள நிலையில் காணப்படுகின்றது. சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவி தையல்நாயகி எனும் பெயரில் தனி சன்னதியில் உள்ளார். விநாயகர் சன்னதி தென்கிழக்குப் பகுதியில் இருக்க தெய்வங்களான முருகப் பெருமான் மற்றும் தன்வந்தரி மகரிஷிக்கும் தனி சன்னதிகள் உள்ளன. அதை போல தெய்வங்களான சந்திரன், சந்திரன், பைரவர் ஆகியோரும் வெளியே கூரை வேய்ந்த குடிசையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆதி வைத்தியநாதரின் சன்னதி கிழக்கே பார்த்தபடி இருக்க தையல்நாயகி தெற்குப் பக்கத்தை நோக்கி பார்த்தபடி பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார்கள்.

சிவலிங்கத்தின் உயரம் 7 அடி சுற்றளவு 3.5 அடி ஆகும். ஆவுடையாரின் சுற்றளவு பத்து அடி  ஆகும். அதன் முன் நாம் நின்றால்  நமது பிம்பம் திரும்ப பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது. கும்பகோணம் செல்லும் பஸ்கள் இந்த ஆலயம் உள்ள தடத்தின் வழியே செல்கின்றன. ஆனால் மிகக் குறைந்த அளவே பஸ்கள் செல்வதகினால் ஆடோ அல்லது தனி நபர் கார்கள் மூலம் இங்கு செல்லலாம்.

  • இந்த ஆலயத்துக்கு ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. அவை : –
  • தைல தீர்த்தம்
  • சடையார் தீர்த்தம்
  • ஹோம தீர்த்தம்
  • வெட்டு ருண தீர்த்தம் மற்றும்
  • தெய்வ தீர்த்தம் என்பன

ஆலயத்தின் படங்கள் கீழே உள்ளன.

மண்ணிப்பள்ளம் ஆலய தொடர்ப்பு  முகவரி :
திரு ரமேஷ்:  +91 9842188063
திரு பரமநாதன் : +91 9444526253

பிற வைத்தீஸ்வர பகவான் கோயில்களின் விவரங்கள் அடுத்த பாகத்தில் வரும்.