குல தெய்வங்கள்

தோன்றிய வரலாறு

-சாந்திப்பிரியா-

-7-

பல நூல்களில் காணப்படும் இந்து தெய்வங்களின் துவக்கம் மற்றும் அவற்றின் வழிபாட்டு முறைகளை படித்தோம் எனில் நான் முன்னர் ஆறு பாகங்களில் குறிப்பிட்டு உள்ள பண்டிதர்களின் கூற்று உண்மையே என்பது புரியும். அவற்றில் காணப்படும் கூற்றின்படி ஆரியர்கள் வருகை தருவதற்கு முன்னரே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜாதிபேதம், மதம் போன்றவை இல்லாமல் இருந்திருந்த, பண்டைய கால மக்கள் எதோ ஒரு தெய்வத்தை, அது  என்ன என்றே புரியாமல் வழிபட்டு வந்துள்ளார்கள். ஆரியர்கள் இந்தியாவுக்கு வருகை தந்த பின்னரே மானிடர்களில் இனப் பிரிவும் ஏற்பட்டுள்ளது. தம்முடைய சக்திகளுக்கு மீறிய எதோ ஒரு ஒரு சக்தி உள்ளது என்பதாக நினைத்த மக்கள் கண்களுக்குப் புலப்படாத பல்வேறு இயற்கை சக்திகளை வணங்கி வந்துள்ளார்கள். பண்டைய  கால மக்களால் கண்களுக்குப் புலப்படாத சக்திகள் வணங்கப்பட்டு வந்தாலும், மெல்ல மெல்ல நாகரீகம் வெளிப்படத் துவங்கியதும் கண்களுக்குப் புலப்படாத சக்திகளுக்கு ஒரு உருவம் கொடுத்து அவற்றை தெய்வீக ஆவிகளாக, தேவதைகளாக எண்ணி வணங்கி வரலானார்கள். இன்னும் சில நூற்றாண்டு காலம் கடந்தவுடன் அவற்றுக்கு சில வடிவங்களும், உருவங்களும் தரப்பட்டு கிராமங்களைக் காக்கும் தெய்வங்களாகவும், தேவதைகளுமாக வணங்கப்பட்டன.

அவை அனைத்தும் குலதெய்வ வழிபாட்டு முறையை பூமியில் துவக்க முடிவு செய்து இருந்த பிரும்மாவின் செயல் திட்டத்தின்படி நடைபெற்றன. அவை நடந்தால்தான் பரபிரும்மலோகத்தில்   தவறு செய்து விட்டு அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள பூமிக்கு வர இருந்த சில தேவ மற்றும் தெய்வ கணங்களை16 அவற்றின் தண்டனைக் காலம் முடிந்ததும் குலதெய்வங்களாக மாற்ற முடியும் என்பது பிரும்மாவின் கணக்கு ஆகும்.  தண்டனைக் காலத்தில், அவர்களுக்கு இருந்த சில தெய்வீக தன்மைகள் அகற்றப்பட்டு விடுவதினால், எந்த சக்தியும் இன்றி குலதெய்வங்களுக்கு உதவி தேவதைகளாக இருந்து பாவத்தைக் களைந்து கொண்டால்தான் அவற்றில் சில கணங்கள் மீண்டும் தெய்வ கணங்களாக உருவெடுக்க முடியும் என்பது பிரும்ம நியதியாகும். தண்டனைக் காலத்தில் அவை குலதெய்வங்களாகவும், பிற சிறு தெய்வங்களாகவும் உருவெடுக்கத் தேவையான போதனைகளையும் பெற முடியும் என்பது  பிரும்மனின் கணக்கு ஆகும். பூமியிலே மனித குலத்தை காத்தருள குலதெய்வங்கள் முதல் யுகத்திலேயே அனுப்பப்பட்ட பின்னரும், இன்னும் எதற்காக அதிக எண்ணிக்கையிலான கிராம தேவதைகள்17, எல்லைக் காவல் தேவதைகள்17a, நல்ல ஆவிகள், தீய ஆவிகள்16a  மற்றும் பேய் பிசாசுகள்16b போன்றவற்றையும் பிரும்மா உருவாக்க வேண்டும்?

நான்  முன்னர் எழுதியது போல இந்த பிரபஞ்சத்தை பிரும்மா படைத்தபோது பூமியை பல குணாதிசயங்களைக் கொண்ட பூமியாக தோற்றுவித்தார். அவற்றின் குணாதிசயங்கள் ஒரே மாதிரியாக அமைந்து இருக்கக் கூடாது என்பதிலும் கவனமாக செயல்பட்டார். அந்த தன்மைகள் நல்லவை மற்றும் தீயவை என்ற குணாதிசயங்களை தனித்தனியே கொண்டிருந்த உணர்ச்சிக் கதிர்களாக இருந்தன. பூமிக்கு அனுப்பப்பட்ட ஆத்மாக்கள் முதலில் எங்கு சென்று தங்க வேண்டுமோ அங்கு தங்கிக் கொள்ள சுதந்திரம்  அளித்திருந்ததை போலவே, இதிலும் எந்தக் கட்டுப்பாட்டையும் வைக்காமல், வேண்டும் என்றே பூமிக்கு  செல்லும் ஆத்மாக்கள் தமக்கு பிடித்த உணர்வுகளை தம்முள் அடக்கிக் கொண்டு இருக்க நியதியை பிரும்மா வைத்து இருந்தார். இங்குதான் ஒரு சூட்ஷமமும் இருந்தது. வேண்டும் என்றே ஒவ்வொரு ஆத்மாவும் எத்தனை அளவிலான உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ள வேண்டும் என்ற எல்லையை வகுக்கவில்லை. பூமியிலே வந்து இறங்கிய ஆத்மாக்களில் பரபிரும்ம லோகத்தில் பாபம் செய்த தேவகணங்களும் ஆத்மாக்களாக அனுப்பப்பட்டன. அவை பூமிக்கு சென்று தமது பாவங்களை கழித்தால் மட்டுமே மீண்டும் தேவகணமாக முடியும் என்ற நியதியினால் அவை அனுப்பப்பட்டன. ஆகவே பூமிக்கு வந்த தேவ கணங்களில் சாபம் பெற்றவை மற்றும் பாபம் செய்தவை என்ற இரண்டு பிரிவுகளிலான தேவ கணங்கள் இருந்தன. 

15b(ref:Part-5),16a and 16b   பாபங்களை சுமந்து கொண்டு பூமிக்கு வந்த தேவகணங்கள் பூமியில் இருந்த தீய உணர்வுகளை தமக்குத் தெரியாமலேயே தம் தேவைக்கு அதிகமாக உறிஞ்சிக் கொள்ள அவை உடனடியாக தீய உணர்வுகளைக் கொண்ட பேய் பிசாசுகளாக மாறின. வெளியில் தெரியாமல் பிரும்மா வைத்து இருந்த சூட்ஷமத்தின்படி ஒரு ஆத்மாவுக்குத் தேவையான அளவை மீறி  எந்த ஒரு ஆத்மா அதிக அளவிலான தீய உணர்வுகளை தம்முள் அடக்கிக் கொள்ளுமோ அவை உடனடியாக தீய ஆவிகளாக உருமாறி விடும். அதுமட்டும் அல்ல அவற்றுக்கு உருவமும் இருக்காது, அந்தரத்தில் சுற்றிக் கொண்டு அலைய வேண்டி இருக்கும். பூமிக்கு சென்று பாபதோஷங்களை விலக்கிக் கொள்ள அனுப்பப்பட்ட சில தேவகணங்கள் இப்படியாகவே தீய ஆவிகளாக மாறின.  பூமியிலே மானிடப் பிறவிகளுக்கு சேரும் பாவ முட்டைகளும், பரபிரும்ம  லோகத்தில் தேவகணங்கள் பெறும் பாவ முட்டைகளும் வேறுபட்டவை. அங்கு அவற்றுக்கு ஏற்படும் பாவங்கள், வேண்டும் என்றே கவனக் குறைவாக இருந்து தத்தம் வேலைகளை சரிவர செய்யாமல் போனதினால் ஏற்பட்ட நீண்ட கால தோஷம் ஆகும். அது சாபம் பெற்ற நிலைக்கும் மேலான குற்றம் ஆகும். ஆகவே அவை பூமிக்கு சென்று உருவமில்லாத நிலையில் இருந்து கொண்டு மானிடர்கள் மற்றும் தெய்வங்களுக்கு இடையே கஷ்டங்களுடன் பல காலம் இருக்கும்போது அவர்கள் பெற்ற  தண்டனை போதுமானது  எனக் கருதும் ஏதாவது ஒரு தெய்வம் அவர்களுடைய பாவ மூட்டைகளை எரித்து விட்டு அதே யுகத்திலோ அல்லது வேறு யுகத்திலோ அவற்றுக்கு மீண்டும் தேவதைகளுக்கான உருவம் கொடுத்து அவர்களை காவல் தெய்வம் எனும்  நிலைக்கான மனிதர்களாக உருமாற்றம் செய்யும் என்பது பிரும்ம நியதியாக இருந்தது. இப்படியாக ஏற்பட்டவையே தீய ஆவிகள் மற்றும் பேய், பிசாசுகள் என உலாவிக் கொண்டு, மனிதர்களால் வெறுக்கப்பட்டு,  கஷ்டப்பட்ட  தீய ஆவிகள், பாப விமோசனம் பெற்ற எல்லைக் காவல் தெய்வங்களின் கதை.

பூமியிலே நல்ல மற்றும் தீய குணங்களைக் கொண்ட மனிதர்கள் இடையே வாழ அனுப்பப்பட்ட தீய ஆவிகளும், பேய்களும்  தெய்வமாக அனுப்பப்பட வேண்டியவை. ஆனால் அவை சாபங்களை பெற்று இருந்ததினால் முதலில் அந்த சாபங்களை விலக்கிக் கொள்ளாவிடில் அந்த நிலையை எட்ட முடியாது என்பதினால் பூமிக்குச் சென்று முதலில் குலதெய்வங்களுக்கு பணிவிடை செய்யும் கணங்களாக அவை அனுப்பப்பட்டன. பல்வேறு குணாதிசயங்களைக் கொண்ட மனிதர்களோடு இருந்து கொண்டு, அவர்களுக்கு தொல்லை தந்து கொண்டு இருந்த பல்வேறு தீய குணங்களை கொண்ட பேய், பிசாசுகளை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்ற பிற கடமைகளையும் குலதெய்வங்கள் செய்ய வேண்டி இருந்தால், குலதெய்வங்களுக்கு மேலும் அதிக சுமைகளைக் அவை கொடுக்கும் என்பது மட்டும் இல்லாமல் அவை தமது சக்திகளை இழக்க நேரிடும் என்பதாக பிரும்மன் கருதியதினால் அந்த கடமைகளை குலதெய்வங்கள் கீழ் நிலை உதவி தேவதைகள் மூலம் நடத்திக் கொள்ளட்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டன கிராம தேவதைகள் மற்றும் எல்லைக் காவல் தெய்வங்கள். அந்த கீழ் நிலை உதவி தேவதைகள், மனித உருவங்களில் வாழ்ந்து கொண்டு குலதெய்வங்கள் தமது கடமைகளை நிறைவேற்றும் தருமணங்களில் தமது சக்திகளுக்கு உட்பட்ட அனைத்து காரியங்களையும் குலதெய்வங்களின் சார்பில் செய்து கொடுக்கும். இது பிரும்ம நியதி.

15a (ref:Part-5) and 17பாவங்களை செய்த தேவகணங்கள் பூமிக்கு அனுப்பப்பட்டு பூதங்களாகவும், தீய ஆவிகளாகவும் மாற்றப்பட்டதை போல, பரபிரும்மலோகத்தில் சாபம் பெற்று இருந்த தெய்வங்களும், தேவ கணங்களும் பூமிக்கு வந்து கிராமதேவதைகள் எனும் பெயரில் உருவெடுத்து, குலதெய்வங்களுக்கு  பணிவிடை செய்து சாப விமோசனம் பெற வேண்டும் என்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டன. அந்த தெய்வங்களும், கணங்களும் பூமிக்கு வந்து தமக்கு தரப்பட்ட கடமைகளை நிறைவாக செய்து, தண்டனைக்கு காலம் முடிந்தவுடன், அவரவருக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நியதிப்படி தேவலோக இருப்பிடங்களுக்கு திரும்பச் சென்றன, அல்லது அவை அந்த இடங்களிலேயே குலதெய்வங்கள்18ஆயின. பாபம் செய்த மற்றும் சாபங்களை பெற்று பூமிக்கு வந்திருந்த தேவகணங்களுக்கு யார் சாப விமோசனம் தந்தார்கள்?  

சாபம் பெற்று பூமிக்கு வந்து கிராம தேவதைகளாகவும், தீய ஆவிகள், பிசாசுகளுமாக மாறியவைகளுக்கு, அவர்கள் எந்த குலதெய்வத்தின் கீழ் பணிவிடை செய்தார்களோ அந்த குலதெய்வம் மூலம் மட்டுமே சாப விமோசனம் கிடைக்கும் என்பது பிரும்ம நியதியாகும். அது எப்படி நடந்தது ?

சாபம் பெற்று இருந்த தெய்வங்களும், தேவகணங்களும் பூமிக்கு வந்த பின் எப்படி கிராம தேவதைகள் ஆயின? பூமிக்கு வந்த சாபம் பெற்ற தெய்வங்களும், தேவகணங்களும் தமக்கு ஒதுக்கப்பட்டு இருந்த இடங்களை சென்றடைந்து அங்கிருந்த குலதெய்வங்கள் கட்டளைகளை ஏற்று அவற்றை மனித உருவங்களில் இருந்தவாறு செய்தன. பூமிக்கு வந்தவை தக்க நேரத்தில் குறிப்பிட்ட சிலரது உடலில் புகுந்து கொண்டு, முக்கியமாக பெண்களின் உடலில் புகுந்து கொண்டு, அவர்களை தம் கட்டளைக்கு ஏற்ப ஆட வைத்தன. அப்படி ஒருவர் உடலில் புகுந்து கொண்ட கணங்களுக்கு சில சக்திகளை குலதெய்வம் தந்தது. அந்த சக்திகளை கொண்டு மனித உடலில் இருந்த தேவகணங்கள் அந்த ஊரில் மக்களின் துயரங்களை போக்கும் பல சாகசங்களை செய்தன. அதனால் மக்களிடையே மனித உருவில் உலவிவந்த கணங்கள் பிரபலமாகி பெருமைகளை பெற்றன. தேவகணங்கள் உட்புகுந்திருந்த அந்த மனிதப் பிறவிகள் மறைந்த பின் அவர்களை ஊரில் இருந்த ஏதாவது இடங்களில் புதைத்து சமாதி எழுப்பினார்கள். தம்மையும், தமது ஊரையும் பல நேரங்களில் பாதுகாத்த மனிதர் என்ற எண்ணத்தில் அவர்களுடைய சமாதிகளுக்கு மக்கள் மரியாதை செய்யத் துவங்கினார்கள்.

இப்படியாக புகழ் பெற்ற, கண்களுக்கு தெரியாமல் மறைந்து இருந்த தேவகணங்கள் தமக்கு உத்தரவு இட்ட குலதெய்வங்கள் கட்டளைப்படி பலரது கனவுகளில் தோன்றியும், விழாக் காலங்களில் ஸ்வாமி ஆடிய பக்தர்கள் மூலமும் தான் இன்ன கடவுள் என்றும், இன்ன தோற்றத்தில் உள்ள தன்னை  சமாதியில் வந்து வணங்கினால் அவர்களது துயரங்களை தீர்ப்பேன் என்றும் கூறலாயின. அதற்கு முன்னோடியாக, போலியாக சிலருக்கு துன்பங்களையும், துயரங்களையும் தந்தன. ஊருக்கும் பல ஆபத்துக்களை ஏற்படுத்தின. ஆகவே பயந்து போன மக்கள் வேறு எங்கு சென்றும் நிம்மதி கிடைக்காமல், கனவில் வந்த தேவதையின் கட்டளைப்படி அந்தந்த சமாதிகளுக்கு சென்று வழிபட அவர்களின் துன்பங்களையும், துயரங்களையும் தமது பிரதான குருவான குலதெய்வங்கள் மூலம் சமாதியில் மறைந்து இருந்த அமானுஷ்ய கணங்கள் தீர்த்து வைத்தன. ஆகவே தமக்கும், தமது ஊர்களுக்கும் பாதுகாப்பைத் தந்த அந்த இறந்து போன மனிதர்களின் பெருமையை நிலைநாட்டும் விதத்தில் அந்த அமானுஷ்ய கணங்கள் கூறிய உருவிலான சிலைகளை அங்கு பிரதிஷ்டை செய்து, அதையே தமது கிராமத்தைக் காக்கும் தேவதை எனக் கருதி வணங்களாயினர். இப்படியாக கிராம தேவதைகள் ஒரு வடிவம் பெற்ற பின் தமக்கு குலதெய்வ அங்கீகாரம்18a கிடைக்கும் என்ற நம்பிக்கையில், குலதெய்வ கட்டளைகளை நிறைவேற்றியவண்ணம்  தமது கடமைகளை செய்து வந்தன.

கிராம தேவதைகளாக மாறிய அந்த தேவதைகளுக்கு சில பொறுப்புக்களும் சக்திகளும் தரப்பட்டன. அந்த சக்திகளைக் கொண்டு அவற்றால் யாருடைய வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டு தனிப்பட்ட எந்த பலன்களையும் தர இயலாது என்றாலும்,  அவற்றை தனது ஆசானான குலதெய்வங்கள் மூலம் நிறைவேற்றியும், அதே நேரத்தில் அந்த உண்மை மனிதர்களுக்குத் தெரியாமல் இருக்குமாறும் பார்த்துக் கொண்டன. ஆனால் அவற்றுக்கு கொடுக்கப்பட்டு இருந்த சக்திகள் தீய ஆவிகளையும், பேய் பிசாசுகளையும் ஊருக்குள் நுழைய முடியாமல் துரத்தி அடிக்கும் வல்லமை  கொண்டவை, கிராமங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்களை தடுக்க வல்லவை. பேய் பிசாசுகள் போன்றவற்றை அவர்களால் அழிக்க முடியாது என்பதின் காரணம் அவை பிரம்மனால் அனுப்பப்பட்டவை, அவற்றை அழிக்கும் தன்மை  தெய்வங்களுக்கும் கிடையாது. வெளிப்படையாக அழிப்பது போலத் தோன்றினாலும் அவர்கள் அழித்தது அவற்றை  தாங்கி வந்த உடலை மட்டுமே, எந்த உடலில் அவை புகுந்து இருந்தனவோ, அவை அழிக்கப்பட்ட பின்னர் அதனுள் உள்ள தீய ஆத்மாக்கள் தண்டனை காலம் முடிந்து மேலுலகம் சென்று விடும்.

15(ref:Part-5) and 17a அதேபோல கிராம தேவதைகளுக்கு உதவியாக இருக்க தேவையான முதல் நிலை ஊர் காவல் தெய்வங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அவை யார் ? அவை எப்படி ஒரு உருவம் பெற்றன என்றால் பாபங்களை விலக்கிக் கொள்ள பூமிக்கு வந்து மனித உடலில் புகுந்து கொண்டு சாகசங்களை  நிகழ்த்தி வந்த தேவகணங்களில் அதிக பாப மூட்டையை சுமந்து வந்த கணங்களே முதலில் ஊர் எல்லைகளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றன. அந்த பொறுப்பில் அவை தமது கடமைகளை நிறைவாக செய்தால் மீண்டும் தேவலோகம் சென்று விடும்.  இல்லை எனில் அப்படியே பல யுகங்களிலும் மனிதர்கள் உருவில் இருந்தபடி கிராம தேவதைகளுக்கு பணி  புரிய வேண்டி இருக்கும்.

இப்படியாக தமக்கு ஒரு உருவத்தை ஏற்படுத்திக் கொண்ட கிராம தேவதைகள் புகழ் மெல்ல மெல்ல ஊருக்குள் பரவத்  துவங்க, மக்களது  துயரங்களும் அழியத்  துவங்க, தம்மை வழிபாடு செய்பவர்கள் கனவுகளில் அந்த தேவதைகள் தோன்றி தம்மை அவர்களது  தெய்வமாக ஏற்குமாறு கட்டளை இட  ஆரம்பிக்கும். அதை ஏற்றுக் கொண்டு அந்த கிராம தேவதைகளை வழிபட துவங்கும் அந்த  குடும்பத்தினர் அடைந்த தொல்லைகளை குலதெய்வங்கள் மூலம் கிராமதேவதை தடுத்து நிறுத்த, மெல்ல மெல்ல அந்த ஊரில் இருந்தவர்கள் அந்த கிராம தேவதை தமது ஊரையே பாதுகாக்கும் தேவதை என்பது மட்டும் அல்ல, தமது குடும்பத்தையும் பாதுகாத்து அருள் புரியும் கடவுள் என்று கருதி குலதெய்வங்கள் மற்றும் பிற தெய்வங்களுடன் சேர்ந்து அவர்களையும் வழிபடுவார்கள். 18 and 18aகாலப்போக்கில் பல நூற்றாண்டுகள் கிராமதேவதைகளாக இருந்த  தேவதைகளை சில குடும்பத்தினர் தமது குடும்பத்தின் தெய்வமாகவே கருதி தொடர்ந்து வழிபாடு செய்தபடி இருக்க, அவற்றுக்கு மேலும் மேலும் குலதெய்வ தெய்வீக சக்திகள் பிரும்மாவினால் தரப்பட்டன. அந்த கிராம தேவதைகளும் சில குடும்பங்களின் குலதெய்வங்கள் ஆயின. 

ஒவ்வொரு ஊரிலும்  எத்தனை கிராம தேவதைகள் இருக்கலாம் என்பதற்கான நியதி உள்ளதா என்றால்  முதலில் இதை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிலப் பகுதியிலும் உள்ள மனிதகுலத்துக்கும்  இத்தனை இத்தனை குலதெய்வம், தெய்வங்கள் மற்றும் கிராம தேவதைகள் இருக்க வேண்டும் என்பதை பிரும்மா தீர்மானித்தே அவர்களை  அங்கெல்லாம் அனுப்பினார். அதன் விவரங்கள் அனைத்தையும் பண்டிதர்களால் கூற இயலவில்லை. ஆனால் பொதுவாக நம்பப்படுவது என்ன என்றால் ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் (கிராமம்) ஒன்று அல்லது இரண்டு கிராம தேவதை, ஒரு காவல் தெய்வம், ஒரு குலதெய்வம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு பிற தெய்வங்களும் இருக்க வாய்ப்பு உள்ளதாக கருத்து உள்ளது.

…………..continued : 8