குல தெய்வங்கள்

தோன்றிய வரலாறு

-சாந்திப்பிரியா-

-6-

13பிரம்ம நியதியின்படி குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள மக்களை பாதுகாத்து அருள் புரிய அனுப்பப்பட்ட குல தெய்வங்கள் தமது கடமைகளை நிறைவேற்றும் நேரத்தில் வேறு எந்த தெய்வங்களின் குறுக்கீடும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுவதற்கு, பிரதான தெய்வங்களுக்கு இணையான அபரிதமான அதிகாரங்களும் தெய்வ சக்தியும் தரப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் அவர்கள் தம்முடைய தெய்வீக சக்திகளை பயன்படுத்தும்போது பிரும்ம நியதியை மீறாமல் இருக்க வேண்டும் என்பதும் நியதியாகும்.

உதாரணமாக நீலமங்கலா எனும் ஒரு கிராமத்தில் 200 குடும்பங்கள் உள்ளன என்றும் அந்த பூமியில் உள்ளவர்களை பாதுகாத்து அங்குள்ளவர்களுக்கு அருள்புரிய ஐந்து குல தெய்வங்களை பிரும்மா அனுப்பி உள்ளார் என்றும் வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு குலதெய்வமும் 25 முதல் 30 குடும்பங்களைக் தன் பாதுகாப்பில் வைத்துக் கொள்ள, மீதமுள்ள குடும்பங்கள் எந்த தெய்வத்தையும் குலதெய்வமாக ஏற்றுக் கொண்டிருக்கவில்லை என்ற நிலைமை இருந்தது என்றும் வைத்துக் கொள்வோம். குல தெய்வங்களைக் கொண்டிராத குடும்பங்கள், ஊருக்குள்ளேயே அல்லது ஊருக்கு வெளியே கூட வேறு ஏதாவது தெய்வத்தை ஆராதித்து வணங்கி வந்திருக்கலாம்.

ஒரு காலகட்டத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்டிருந்த பகையின் காரணமாக குல தெய்வம் இல்லாத குடும்பத்தை சேர்ந்த சிலர் (அவர்களை ‘A’ குடும்பம் என அழைப்போம்) குலதெய்வத்தைக் கொண்டுள்ள இன்னொரு சில குடும்பங்களுக்கு (அவர்களை ‘B’ குடும்பம் என அழைப்போம்) தீங்கு விளைவிக்கும் வகையிலான பூஜைகளையும், யாகங்களையும் வேறு பல தெய்வங்களை வேண்டிக் கொண்டு நிறைவாகவே செய்வதாக வைத்துக் கொள்வோம்.

அந்த நிலையில் எத்தனை தெய்வீக சக்தி கொண்ட பிரதான தெய்வமாக இருந்தாலும்,  அங்குள்ள குலதெய்வங்கள் தன்னுடைய கட்டளையின் கீழ் உள்ள தெய்வமே என்றாலும் கூட  குலதெய்வ வழிபாட்டை நிறைவாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கும்  ‘B’ குடும்பத்தை அழிப்பதற்காக,  ‘A’ குடும்பத்தினரால் செய்யப்படும் வழிபாடு மற்றும் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டு ‘B’ குடும்பத்தார் துயருறும் வகையில்  வரங்களை அளித்து   உதவ முடியாது. அதற்கு சில பிரும்ம விதி கட்டுப்பாடுகள் உள்ளன.

குல தெய்வங்களுக்கு உரிய மரியாதை  கொடுத்து அவர்களை ஆத்மார்த்தமாக வேண்டி வரும் ‘B’ என்ற குடும்பத்தின் அழிவிற்கு ‘A’ குடும்பத்தினரால் செய்யப்படும் வழிபாடு மற்றும் பிரார்த்தனை ஒருவகையில் காரணமாக இருந்துவிடும் என பிரதான தெய்வம் கருதினால், ‘A’ போன்ற குடும்பங்களின் பிரார்த்தனை நிறைவேறும் வகையில் அந்த வரங்களை தர முடியாது.  அதே விதி பிற தெய்வங்களுக்கும் பொருந்தும். குல தெய்வங்களை கலந்தாலோசிக்காமல் எந்த தெய்வம் வரங்களை தந்தாலும் பிரும்ம நியதியின்படி அது குலதெய்வங்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாக கருதப்பட்டு  அந்த தெய்வங்களின் வரன்கள் பலன் இன்றிப் போய்விடும். ‘A’ குடும்பத்தினரால் செய்யப்படும் பூஜைகளும் யாகங்களும் தாற்காலிகமாக பயன் தருவது போல மாயையாக தோன்றினாலும் உண்மையில் அவை நிறைவேற முடியாது. ஆகவே குலதெய்வத்தை கொண்டுள்ளவர்கள் தமது குலதெய்வத்தை உதாசீனப்படுத்தாமல் முறையான ஆராதனை செய்து வந்தால் அது அவர்களை கவசம் போல பாதுகாக்கும்.

இதிலும் சில பிரும்ம விதி கட்டுப்பாடுகள் உள்ளன. தெய்வங்கள் உலகத்தில் தெய்வ சத்தியத்தை நிலைநாட்டி மானிடர்கள் இடையே அன்பை தழைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்பதினால் ‘B’ குடும்பத்தார் ஒருவேளை ‘A’ குடும்பத்தினருக்கு வேண்டும் என்றே தீங்கு விளைவித்து இருந்தால், தெய்வ நீதியை நிலைநாட்ட குல தெய்வங்கள் தமது பாதுகாப்பு வளையத்தை ‘B’ குடும்பத்தார் மேல் இருந்து தற்காலிகமாக விலக்கி வைத்து, பிற தெய்வங்கள் தரும் தண்டனைக்கான பலன்கள் நிறைவேற ஏற்பாடு செய்யும்.

பிற தெய்வங்கள் தரும் தண்டனை எப்படி ஒருவரை ஆக்ரமிக்கின்றது? தெய்வங்கள் தரும் தண்டனை தெய்வீக சக்திக் கதிர்களாக வெளிப்பட்டு தண்டனைப் பெற வேண்டியவர்களை கண்களுக்குத் தெரியாத கணங்களாக சுற்றிக்கொண்டு கஷ்டங்களைத் தரத் தொடங்கும். ‘B’ குடும்பத்தினருக்கு தண்டனைக்கேற்ப சொல்லொண்ணா துன்பங்களும் துயரங்களும் தொடரும்.

ஒருவர் ஒரு குலதெய்வத்தை ஏற்றுக் கொண்ட உடனேயே அவர்களை சுற்றி அந்த குலத்தெய்வங்களின் சக்திக் கதிர்களைக் கொண்ட வளையத்தை வைத்து விடுவதினால் அந்த மனிதர்களை வேறு தெய்வங்களின் சக்திக் கதிர்கள் அணுகும்போது அவை குல தெய்வ பாதுகாப்பு வளையங்களினால் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால்தான் பிற தெய்வங்களின் தெய்வீக தண்டனை சக்திக் கதிர்கள், குல தெய்வங்களின் சக்திக் கதிர்களைக் கொண்ட பாதுகாப்பு வளையத்தில் உள்ளவர்களை நேரடியாக தாக்கி அழிக்க முடியாது. குல தெய்வங்களின் பாதுகாப்பில் உள்ளவர்களை தண்டிக்க குல தெய்வங்களின் அனுமதி தேவை என்ற பிரும்ம கட்டுப்பாடு உள்ளது.

இப்படியாக குல தெய்வங்களின் முக்கியத்துவத்தையும், அவர்களுடைய தெய்வீக பலத்தையும் குறைக்க விரும்பாத பிரும்மன் பல நியதிகளை ஏற்படுத்தினார். அதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் உள்ளது. குல தெய்வங்கள் யார்? அவர்கள் அனைவரும் பிரதான தெய்வங்களின் சக்திக் கதிர்களில் இருந்து வெளிவந்தவர்கள், அவர்களுடைய ஒரு அங்கம் ஆவார்கள். எனவே குல  தெய்வங்களின் மதிப்பைக் குறைப்பது அவர்களை வெளிப்படுத்திய பிரதான தெய்வத்தின் மரியாதையை குறைக்கும் செயல் என்பதை பிரும்ம உணர்ந்திருந்தார் என்பதே அதன் மறைவில் உள்ள சூத்திரம் ஆகும்.

தமக்கு திடீர் என ஏற்பட்டுள்ள கஷ்டங்களுக்கான காரணம் புரியாமல், தமது கஷ்டங்களை விலகுமாறு ‘B’ குடும்பத்தினர் குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு ஆராதிக்கும்போது குல தெய்வங்களும் தவறு செய்து தண்டனைப் பெற்று துயரத்தில் உள்ள தம் பக்தர்களை மன்னித்து அருள் புரியும் வகைக்கான சக்திகள் தரப்பட்டு உள்ளன. தவறுக்கு ஏற்ற தண்டனைகளை ‘B’ போன்ற குடும்பத்தினர் ஏற்கனவே பெற்று விட்டார்கள் என குல தெய்வங்கள் கருதினால் அவர்களை  மன்னித்து விட முடியும் என்றாலும், அதற்கு முன் தண்டனையை தந்த தெய்வத்திடமும் தனது முடிவைக் கூறி அனுமதி பெறவேண்டும் என்பது நியதியாகும. இப்படியாக தெய்வங்களுக்கு இடையிலான சக்திகளை நியாயமான முறையில் நிறைவேற்ற நமக்கு புரியாத பல நியதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளுக்குள் உள்ளேயே வைக்கப்பட்டு உள்ளன என்பது ஆச்சர்யமான விஷயம் ஆகும். இதுவே குலதெய்வத்தை எந்த விதத்திலும் உதாசீனப்படுத்தாமல் இருக்கும் நிலைக்கான பலன் ஆகும்.

14மனிதப் பிறவிகளில் பிறப்பு எடுத்து  இருந்த தெய்வங்களின் தெய்வீக சக்தி குறித்த அடுத்த முக்கியமான செய்தி என்ன என்றால் தமது சாபங்களை விலக்கிக் கொள்ள பூமிக்கு வந்து சில கடமைகளை செய்து வந்த மனிதப் பிறவியில் இருந்த தெய்வங்கள், மனித உருவில் வாழ்ந்து வந்ததினால் அவற்றின் வாழ்க்கையில் தமது தெய்வீக சக்திகளை ஓரளவு மட்டுமே பயன்படுத்த முடிந்தது. தெய்வீக சக்திகளை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை என்பதின் காரணம் அவர்கள் எந்த சக்திக் கதிர்களில் இருந்து வெளி வந்தார்களோ அதே சக்திக் கதிர்களில் தமது தெய்வீக சக்திகளை வைத்து விட்டு மானிட வாழ்வுக்குத் தேவையான சிறிய அளவிலான தெய்வீக சக்திகளை மட்டுமே தம்முடன் எடுத்துச் செல்ல பிரும்ம நியதி அமைந்து இருந்தது. அதன் காரணம் தெய்வீக சக்தியை பயன்படுத்தி சாப விமோசனங்களை எளிமையாக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நியதிகள். மனிதர்கள் எப்படி துயரங்களை சுமந்து கொண்டு தமது கர்மாக்களை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டுமோ, அதே போலவேதான் சாபம் பெற்று இருந்த தெய்வங்கள் பூமியில் வந்து கஷ்டங்களை அனுபவித்து சாப விமோசனம் பெற வேண்டும் என்பது தெய்வ நியதியாக இருந்தது.

இதை ஆன்மீகவாதிகள் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கின்றார்கள் என்றால்  பரப்பிரும்மலோகத்தில் இருந்த தெய்வங்கள் சில காரணங்களுக்காக சின்ன சின்ன சாபங்களை பெற்று இருந்திருக்கலாம். அவற்றை நிவர்த்தி  செய்து கொள்ள  பூமிக்கு மனித உருவில் வந்தபோது அந்த மனித உருவத்துக்கு தேவையான அளவில் மட்டுமே தெய்வ சக்திகளை எடுத்து செல்லவேண்டும், மீதி சக்திகள் அவற்றை எந்த பிரதான தெய்வம் வெளிப்படுத்தினவோ அவற்றின் சக்திக்  கதிர்களில் வைத்து விட்டு செல்ல வேண்டும் என்பது பரப்பிரும்மனின் நியதியாக இருந்திருக்கலாம் என்கின்றார்கள். இதனால்தான் மனித உருவிலேயே மனிதர்களுடன் வாழ்ந்து கொண்டிருந்த அந்த முதல்நிலை தெய்வங்களினால் கூட தமது முழு அளவிலான தெய்வீகத்தை வெளிப்படுத்த இயலவில்லை. அதே காரணத்தினால்தான் அந்த தெய்வங்கள் பூமியிலே தோன்றியபோது குலதெய்வங்களாகவும், பிற தெய்வங்களாகவும் பிரம்மனால் அமைக்கப்படவில்லை, மனிதர்களாகவே கருதப்பட்டு வைக்கப்பட்டு இருந்தார்கள். அவர்கள் அதே உருவில் இருந்து மறைந்த பின்னரே அவர்களுக்கு அந்த கெளரவம் கிடைத்தது. இவற்றுக்கு உதாரணமாக முருகன், ராமர், பரசுராமர், கிருஷ்ணர், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, சீதை மற்றும் முருகனின் மனைவியான வள்ளி தேவியைக் கூறலாம். ஆனால் அதில் கூட அந்த கெளரவம் முருகனின் இன்னொரு மனைவியான தேவானைக்கு கிடைக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும். தேவானை முருகப் பெருமானுடன் சேர்த்தே, அதை போலவே ராமபிரானுடன் சேர்ந்தே சீதையும் பெருமைப் பெற வேண்டி இருந்தது.

பூமிக்கு வந்து மனித உருவில் தங்கி இருந்த பல தெய்வங்கள் தாம் மறைந்து போகும்வரை தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் தமது மனித உடல்களை பூமியிலும் நதிகளிலும் மறைத்து விட்டுச் சென்று, பல்லாயிர ஆண்டுகளுக்குப் பிறகே அவை இருந்த இடங்களையும், தம்மைப் பற்றியும் சிலரது கனவுகளில் கூறி தம்மை வெளிப்படுத்திக் கொண்டன. வெகு காலத்துக்குப் பிறகு அப்படி வெளி வந்த  பல தெய்வங்களும் குலதெய்வங்களாயின. அதன் காரணமும் இரு வகையானது. முதலாவதாக அந்த தெய்வங்கள் முதலில் குலதெய்வங்களாக அவதரிக்க இருந்தவை. ஆனால் அதற்கு முன்னரே பரபிரும்ம லோகத்தில் சில காரணங்களினால் சாபம் பெற்றுவிட, குலதெய்வம் ஆகும் முன் முதலில்  சாபங்களை விலக்கிக் கொள்ள பூமிக்கு வந்து திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அதன் பின்னரே அவை தம்மை யார் என வெளிப்படுத்திக் கொண்டு தெய்வங்களாகவும், குலதெய்வங்களாகவும் மாறின. இதில் உள்ள இன்னொரு புரியாத புதிர் என்ன என்றால் பெரும்பாலான குலதெய்வங்கள் கிராமங்களில்தான் தோன்றி உள்ளன. அவற்றிலும் பெரும்பாலானவை பெண் தெய்வங்களே. அவற்றின் காரணம் என்னவாக இருக்க முடியும்?

……..தொடர்கிறது : 7