சித்தாடி ஆளும் காத்தாயீ அன்னையே,
எம் குடும்பத்தை எந்நாளும்
காத்தருள்வாய் குல தெய்வமே

குல தெய்வம்

ஆராய்ச்சிக் கட்டுரை

-சாந்திப்பிரியா-

சில வருடங்களாக நான் குலதெய்வம் மற்றும்  இடையே தங்களால் குல தெய்வமாக வழிபடப்பட்டு வரும் பிற தெய்வங்கள் என்பது குறித்து அனைத்தையும் அறிந்து கொள்ளும் முயற்சியாக ஒரு ஆராய்ச்சியையே மேற்கொண்டு உள்ளேன். அனைவருமே குலதெய்வம் மற்றும் அவர்களால்  வணங்கப்படும்  பிற தெய்வங்களின் உண்மையான சக்தியையும் குல தெய்வத்தை உதாசீனப்படுத்துவதின் விளைவுகளையும் அறிந்து கொள்வது அவசியம் என்பதினால் அவ்வப்போது பல குறிப்புக்களை படித்து வந்தேன்.  நான் செல்லும் ஆலயங்களில் உள்ள பண்டிதர்களிடமும் அது குறித்து அவ்வப்போது கேட்பதுண்டு.  இந்த விஷயம் ஓரிரு நாட்களில் விடை தரப்படும் அளவில் குறுகியது அல்ல என்பதை தெரிந்து கொண்டதினால் அவ்வப்போது சில கட்டுரைகளை குல தெய்வம் எனும் தலைப்பில் எழுதி வந்தேன். அதை படித்தப் பின் நான் பண்டிதர் என நினைத்து சிலர் என்னிடம் குல தெய்வம் குறித்து சந்தேகங்களையும் கேட்கத் துவங்கினார்கள். குலதெய்வம் குறித்து அனைத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து  எழுதினால்  பலருக்கும் பலன் அளிக்கும் என்பதாக அபிப்பிராயம் தெரிவித்தார்கள். என்னால் அவர்கள் எழுப்பிய கேள்விகள் சிலவற்றுக்கு உடனடியாக பதில் தர இயலவில்லை. ஆனால் அவற்றில் சிலவற்றுக்கு  தற்போது எனக்கு விடைகள் கிடைத்து உள்ளன.

முக்கியமாக தொலைபேசி மூலம் இரண்டு   வாசகர்கள் என்னை பாராட்டியதும் இல்லாமல் மேலும்   எழுப்பிய சில கேள்விகள்  முக்கியமானவைகளாக இருந்தன.  தற்போது எழுதி  உள்ள பல குல தெய்வத் கட்டுரைகளை இணைத்து பொதுவான ஒரு கட்டுரை எழுதி மேலும் சில சந்தேகங்களை விளக்கினால் நலமாக இருக்குமே என்றார்கள். சிறு குறிப்புப் புத்தகமாக எழுதி வெளியிட்டால்  நன்றாக இருக்குமே என்றும் கூறினார்கள். அந்த இருவருமே முதியவர்கள். அவர்களைத் தவிர வேறு பலரும் கூட என்னுடைய குலதெய்வம் குறித்த கட்டுரைகளை பாராட்டி எழுதினார்கள்.

மூன்றாவதாக திருநெல்வேலி  மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் (அவரது பெயரையும், ஊரையும் தவிர்த்து உள்ளேன்), முன்னோர் காலத்தில் வேறு மதத்துக்கு மாறி இருந்தவர், பேசியபோது அவர் குடும்பத்தில் தமது பாட்டனார் காலம் முதல் வேறு மதத்தை தழுவியவர் என்றும், என் கட்டுரைகளை படித்தப் பின் எதோ தூண்டுதலால் தம்முடைய பாட்டனார்கள் காலத்தில் குலதெய்வமாக எந்த தெய்வத்தை  வணங்கி வந்தார்கள், ஏன் மதம் மாறினார்கள் என்பதை புரிந்து கொள்ள தமது மூதையார்களின் சில   உறவினர்களை தொடர்பு கொண்டு, ஆராய்ச்சி செய்து தங்களுடைய குலதெய்வத்தைக் கண்டுபிடித்து விட்டதாகவும், தற்போது அந்த குல தெய்வத்தை வணங்கி வந்து கொண்டு இருப்பதாகவும், அது முதல்  தனக்கு நிலவி வந்திருந்த சில தீராத பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறி எனக்கு நன்றி தெரிவித்தார். குல தெய்வம் குறித்த சில சந்தேகங்களைக் கேட்டு அறிந்து கொண்டார்.

  • குலதெய்வம் எனும் கோட்பாடு எங்கிருந்து எப்படி துவங்கியது, அவற்றின் சக்தி என்ன?
  • தமது குலதெய்வத்தை ஒரு குடும்பம் எப்படி தேர்ந்து எடுத்தார்கள்?
  • ஒரு தெய்வத்தை குலதெய்வமாக ஏற்றுக் கொண்ட பின் இன்னொரு தெய்வத்தை  குல தெய்வமாக ஏற்றுக் கொள்ள என்ன வேத வழி  முறைகள் உள்ளன
  • ஏற்கனவே உள்ள குல தெய்வங்களைத் தவிர  புதிய குல தெய்வங்கள் தோன்றி உள்ளன எனும்போது அவற்றுக்கு எங்கிருந்து தெய்வீக சக்திகள் கிடைக்கின்றன ?

அவை அனைத்தையும்  விளக்கும் வகையில் எனக்கு தெரிந்த விஷயங்களை  கட்டுரையாக எழுதுவதாக என்னை அணுகியவர்களிடம் கூறினேன். விரைவில் அந்தக் கட்டுரையை துவக்க எண்ணி உள்ளேன். அவை அனைத்துமே நான் கற்றறிந்த பண்டிதர்கள், ஆலய பண்டிதர்கள் போன்றவர்களிடம் இருந்து கேட்டறிந்தவை, பிரசங்கங்களில் கேட்டவை, பல இடங்களில் படித்தவை என்பதை அடிப்படையாகக் கொண்ட கட்டுரையாகவே இருக்கும். அடுத்த வாரம் முதல் அந்தக் கட்டுரையை துவக்க எண்ணி உள்ளேன்.  என் கட்டுரை ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதப்பட உள்ளது.