குல தெய்வங்கள்

தோன்றிய வரலாறு

-சாந்திப்பிரியா-

-5-

10 மனித குலத்தில் பிறந்த அனைவருக்கும் குலதெய்வங்கள் இருக்க முடியாது என்பது பிரும்ம நியதி என்பதினால் யாருக்கெல்லாம் குலதெய்வம் இருந்ததோ  அவர்கள் அதை வழிபட, மற்றவர்கள் பலதரப்பட்ட பிற தெய்வங்களை வணங்கி வருகின்றார்கள்.

பிரபஞ்சத்தையும் பூமியையும் பிரும்மா படைத்ததும், பல பிரிவிலான உயிரினங்கள் தங்க வேண்டும் என்பதற்காக உலகெங்கும் உள்ள பூமியை  பல  தன்மை கொண்டவைகளாக  பிரித்து வைத்தார். வேண்டும் என்றே அவர் அனுப்பிய ஆத்மாக்களை  அவரவர்களுக்கு விருப்பமான இடத்தில் சென்று தங்கவும்  அனுமதித்தார்11. பிரும்மா பிரித்து வைத்த பூமி  ஒவ்வொன்றும் எத்தனை பரப்பளவைக்  கொண்டதாக, எத்தனை ஜனத்தொகையைக் கொண்டவையாக  இருந்தன என்ற கணக்கு தெரியவில்லை. ஆனால் அப்படி பிரித்து வைக்கப்பட்டு இருந்த இடங்கள் மலைகள், நதிகள், அடர்ந்த காடுகள் விலங்குகள் என்பவற்றை உள்ளடக்கி இருந்தன என்பதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள்.

பிரும்மாவினால் பிரிக்கப்பட்ட பூமியின் பகுதிகள்  தெய்வீக  மனநிலைக் கொண்ட புனித பூமிகள்,  பாவாத்ம  பூமிகள்,  மன உறுதி இல்லாமல் அலைபாயும் எண்ணங்களைக் கொண்டவை மற்றும்  அவற்றின் இடையிலான பல குணங்களையும் கலந்து வைத்திருந்த  பூமி என்ற உணர்வுகளுடன் பிரித்து வைக்கப்பட்டன. 11அப்படியான குணாதிசயங்களைக் கொண்டு அமைந்து இருந்த பூமிக்கு சென்று தங்கிய ஆத்மாக்கள், அந்தந்த பூமியின் தன்மைகளை உள்ளடக்கிக்  கொண்டவைகளாக ஆயின.  தெய்வீக மனநிலைக் கொண்ட புனித பூமியில் ரிஷி முனிவர்கள், தெய்வ சிந்தனைக்கு கொண்ட ஆத்மாக்கள் மனிதர்களாக சென்று தங்கினார்கள். பிற இடங்களில் சென்று தங்கிய ஆத்மாக்கள் அந்தந்த இடங்களின் தன்மைகளைக் கொண்டவர்களாக ஆயினர். அப்படி பூமியை பல்வேறு தன்மைகளைக் கொண்டவையாக பிரித்து அதில் சென்று தங்கிய மனிதர்கள் மனநிலையையும் அதை போன்ற தன்மையுடன் கொண்டவர்களாக மாற்றி அமைக்கவில்லை என்றால் நன்மை மற்றும் தீமைகளுக்கு இடையிலான வித்தியாசங்களை மனிதர்களால் அறிந்து கொண்டிருக்க முடியாது என்பதினால்தான் இந்த  பிரும்ம நியதி இருந்தது. அவை அனைத்துமே பிரும்மாவின் செயல் வடிவ திட்டத்தின்படியே நடந்தது.

பிரும்மா படைத்த ஆத்மாக்கள்  பூமிக்கு செல்லுவதற்கு முன்பே, பரபிரும்மன் படைக்க இருந்த தெய்வங்களை  சில குறிப்பிட்ட தன்மைகளைக் கொண்டவையாக பிரித்துப் படைத்து  அவர்களை தனது செயல் திட்டப்படி, தான் வடிவமைத்துக் கொடுத்த இடங்களில் அவதரித்து, மற்றவர்களின் கண்களுக்குப் புலப்படாமல் அங்கு தங்கி இருக்கவும், தக்க நேரத்தில் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளுமாறும் இருக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். பிரும்மாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பரப்பிரும்மனும்  தன்   மூலம் படைக்கப்பட  இருந்த தெய்வங்களை பிரதான  தெய்வம், பிரதான தெய்வங்களின் சக்திகதிர்களில் இருந்து வெளிவந்த முதல்நிலை தெய்வங்கள் மற்றும் இரண்டாம் நிலை  தெய்வங்கள் என்ற அவதார தன்மைகளைக்  கொண்டவையாக  பிரித்து அதன்படி அவற்றை அவதரிக்க ஏற்பாடு செய்தார். காலப்போக்கில் முதல்நிலை தெய்வங்களில் சில குலதெய்வம் எனவும், இஷ்ட தெய்வங்கள் எனவும் ஆயின.  இரண்டாம் நிலை தெய்வங்கள் பெரும்பாலானவை குலதெய்வங்கள் ஆயின.  அதே சமயத்தில் பரபிரும்ம லோகத்தில் இருந்து பூமிக்கு செல்ல இருந்த  சில தேவகணங்களை மூன்றாம் நிலைக் கடவுட்களான கிராம தேவதைகள், எல்லைக் காக்கும் தேவதைகள்  மற்றும் நன்மை தரும் தேவ-தேவதைகள்  என  பிரும்மா மாற்றி அமைத்தார். அவை அனைத்தும் இரண்டாம் நிலை தெய்வங்களுக்கு உதவிடும் வகையில் அமைக்கப்பட்டன. அவர்களைத் தவிர பல்வேறு தீய பூத கணங்கள், தீய ஆவிகள் மற்றும் தீமை செய்யும் தெய்வப் பிறவிகள் என்ற ஒரு பிரிவையும் பரமாத்மாவின் கணங்களில் இருந்து தனது விசேஷ சக்தியைக் கொண்டு பிரும்மா மாற்றி அமைத்து பூமிக்கு அனுப்பினார். அதன் காரணம் பின்னர்12.    

இப்படியாக வெளியான மூன்றாம் நிலை தெய்வங்கள் இரண்டாம் நிலை தெய்வங்கள் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்பை பாதுகாத்துக் கொண்டும், அந்த தெய்வங்களுக்கு உதவிக் கொண்டும் இருக்குமாறு படைக்கப்பட,  இரண்டாம் நிலை தெய்வங்களோ பிரதான தெய்வங்களின் சக்திகதிர்களில் இருந்து வெளிவந்த மாயபிம்பங்களே ஆகும். ஆகவே அவை பிரதான தெய்வங்களுக்கு கட்டுப்பட்டவை என்றாலும்  கூட அந்த இரண்டாம் நிலை தெய்வங்கள் தமக்கு தரப்பட்டு இருந்த தெய்வீக சக்திகளை தனித்தன்மையோடு பிரயோகித்துக் கொண்டு தமது கடமைகளை செய்ய அதிகாரம் தரப்பட்டு இருந்தார்கள்.

பிரும்மாவின் வேண்டுகோளின்படி ஒவ்வொரு யுகத் தோற்றத்திலும், அதாவது சத்ய யுகம் முதல் கலியுகம்வரை, மேலும் மேலும் அதிக எண்ணிக்கையிலான தெய்வங்கள் தோன்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பிரும்மா படைத்த நான்கு யுகங்களில்   நான்காம் யுகமான கலியுகம் பிறக்கையில்  முதல் யுகத்தில் புனிதமான தன்மையுடன் இருந்த மனிதகுலம்   முற்றிலும் சீரழிந்த நிலையை  எட்டி இருக்கும்  என்பது பிரும்மாவின் செயல் திட்ட வடிவமைப்பின்  ஒரு அங்கமாகும்.  ஆகவே ஒவ்வொரு புதிய யுகத் துவக்கத்திலும் அதிக எண்ணிக்கையிலான தெய்வங்கள் தோன்றினால்தான் மேலும் மேலும் சீரழிந்த மனநிலையுடன் வாழ இருந்த   மனித வர்க்கங்களின் தன்மையை மாற்றி, அவர்களைக் கட்டுப்படுத்தி வைக்க முடியும். இந்த ரகசியங்கள் அனைத்தையும் பிரும்மாவே தான் படைத்திருந்த ரிஷி முனிவர்களுக்கு  கூறினாராம்.  அதன் காரணம் காலப்போக்கில்  அந்த பிரும்ம நியதி செய்திகள் மெல்ல மெல்ல வாய்மொழி செய்திகளாக  பரவலான மனித இனங்களை சென்றடைய வேண்டும் என்பதேயாகும்.

பிரதான தெய்வங்கள் மற்றும் முதல் நிலை தெய்வங்களுக்கு (முதல் நிலை தெய்வங்கள் எனப்படுபவை அனைத்துமே பிரதான தெய்வங்களின் சக்திக்கதிர்களில் இருந்து வெளிவந்த பிரதான தெய்வங்களின் மாய ரூபங்கள்தான். அந்த ரூபங்களை சில காரணங்களுக்காக பிரதான தெய்வங்கள் எடுக்க வேண்டி இருந்தன) தரப்பட்டு இருந்த தெய்வீக சக்திகள் அபரீதமானவை. அவற்றினால் எங்கு வேண்டுமானாலும் சென்று எந்த  உருவிலும் அவதரிக்க முடியும், சக்தி பிரயோகம் செய்ய முடியும். அவர்களுடைய சக்தி பிரயோகம் இத்தனை பரப்பளவில்தான் நடைபெற முடியும் என்ற கட்டுப்பாடு கிடையாது. தம்மை முழுமையான பக்தியோடு வேண்டி நின்றாலும்,  வணங்கித் துதித்தாலும், அவை  உண்மையான பக்தியினால் வேண்டப்படுபவை எனக் கருதினால் அவர்களுக்கு அருள் தர இயலும். அவர்கள் வேண்டுகோட்களை நிறைவேற்ற முடியும். தேவர்களையும் தேவலோகங்களையும் துன்புறுத்தும் எந்த அரக்கர்களையும் அசுரர்களையும், எந்த உருவம் வேண்டுமானாலும் எடுத்து யுத்தம் செய்து அழிக்க முடியும். அதே போல மனிதகுலத்துக்கு ஆபத்து ஏற்படும்போது தம் உதவி நாடி வேண்டுதல்கள் எழுந்தால், ஆகாயமோ. பூமியோ அல்லது பாதாளமோ,  எந்த உருவம் வேண்டுமானாலும் எடுத்து, அங்கெல்லாம் சென்று சென்று அவர்களுக்கு  நிவாரணம் அளிக்க முடியும். ஆனால் அவை அனைத்துமே பிரும்மனால் வரையறுக்கப்பட்ட செயல் திட்டத்தின் அடிப்படையில்தான் செய்ய முடியும்.  அதைப்போல குலதெய்வங்களைக் கொண்டுள்ளவர்கள், சில விசேஷ வேண்டுகோட்களை வைத்து தம்மை வேண்டி துதிக்கும் போதும் அவர்களுக்கு அருள் புரிந்திட முடியும் என்றாலும், அப்படி செய்கையில் அது குலதெய்வங்களின் தெய்வீக சக்தியை, உரிமையை பறித்திடும் வகையில் இருக்கக் கூடாது என பிரதான தெய்வங்களினாலும் மீற முடியாத ஒரு நியதி மறைந்து இருந்தது. அந்த மீற முடியாத நியதியின் முக்கியத்துவம் என்ன13?

அதை போலவே இரண்டாம் நிலை கடவுட்களுக்கும் பிரதான தெய்வங்களைப் போல அபரிதமான தெய்வ சக்திகள் இருந்தன. குலதெய்வங்களை போலவே பிற முதல்நிலை தெய்வங்களுக்கும் பல தெய்வ சக்திகள் உண்டு. இரண்டாம் நிலை தெய்வங்களில் பெரும்பாலானவை பலருக்கு குலதெய்வங்களாக இருந்தவை. அந்த தெய்வங்கள் தமது தெய்வ சக்திகளை தம்மை குலதெய்வங்களாக ஏற்றுக் கொண்டுள்ள மக்களுக்கு, அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை காப்பாற்ற, அவர்களுக்கு அருள் புரிய மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற அடிப்படை நியதி இருந்தாலும் அதிலும் சிறிய துணை விதி இருந்தது. அதன்படி அந்த தெய்வங்களை குலதெய்வமாக ஏற்றுக் கொள்ளாத பக்தர்களும், அவர்களை ஒரு தெய்வமாக வேண்டித் துதிக்கும்போது அந்த பக்தர்களுக்கும் தேவையான அருள் புரிய முடியும். குலதெய்வங்கள் தமது தெய்வீக சக்தியை பிற பக்தர்களுக்கும் பிரதான தெய்வங்களை போல பயன்படுத்த முடியும் என்றாலும் அந்த துணை நியதியிலும் இன்னொரு இன்னொரு துணை நியதி இருந்தது. அதன்படி ஒருவரது குலதெய்வத்தை குலதெய்வமாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் பக்தி சிரத்தையுடன் அந்த தெய்வத்தை ஆராதித்து துதித்து வேண்டுதல் செய்கையில், அந்த வேண்டுதல் நிறைவேறினால் தம்மைக் குலதெய்வமாக ஏற்றுக்கொண்டுள்ள குடும்பத்திற்கு தீங்கு நேரும் என்றால் அந்த வேண்டுகோட்களை குலதெய்வங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதும், அப்படி கொடுத்தாலும் அந்த பலன் நிறைவேறாது என்பதும் நியதியாக இருந்தது. அதேசமயம் குலதெய்வங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்ள குடும்பம் எந்த ஒரு நிலையிலும் குலதெய்வங்களை அலட்ஷியப்படுத்தும்13a விதங்களில் நடந்து கொள்ளாமல் இருந்தால்தான் குலதெய்வங்கள் அவர்களைக் காப்பாற்ற முடியும், அந்த குடும்பங்களுக்கு எந்த ஒருவர் பிரார்த்தனையும் கேடு செய்ய முடியாது என்பதும் நியதியாக இருந்தது. குலதெய்வத்தைக் கொண்டுள்ள குடும்பத்தினர் வேறு எந்த தெய்வத்தையும் இஷ்ட தெய்வமாக கூட ஏற்றுக் கொண்டு ஆராதித்து துதிக்கலாம், வேண்டுதல் செய்யலாம். அதற்குத் தடை இல்லை. முதல்நிலை தெய்வங்கள் சிலவற்றின் தெய்வீக சக்தி குறித்து முரண்பட்ட செய்திகள் உள்ளன என்பதின் காரணம் அவற்றில் சில முக்கியமான தெய்வங்கள் மனித ரூபத்தில் வாழ்ந்திருந்த அந்த ரூபத்திலேயே மறைந்து விட்டதுதான்14.

மூன்றாம் நிலை கடவுட்கள் என்பது இரண்டாம் நிலை கடவுட்களுக்கு உதவிடும் ஊர் எல்லைக் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தேவதைகள்15 என்பவை ஆகும்.  அவற்றில் பெரும்பாலானவை பரப்ரும்ம லோகத்தில் இருந்தபோது பெரும் அளவிலான சாபம் பெற்று இருந்தவை. சாப விமோசனத்திற்காக பூமிக்கு வந்திருந்த தேவ கணங்கள்.  அதை போலவே பூர்வ ஜென்மங்களில் செய்திருந்த புண்ணியங்களின் விளைவாக சில மனிதப் பிறவிகள் தேவ கணங்களாக15a மாற்றப்பட்டன.  அவை அனைத்தும் ஊர் எல்லைக் காவல் தெய்வங்களாக உருவெடுத்து கிராம தேவதைகளுக்கு உதவியாக இருக்கவும், அவர்கள் அவதரித்து இருந்த ஊர் எல்லைகளைக்  காக்கும் தேவதைகளாகவும்  ஆயின.  கிராம தேவதைகள் யார் என்றால் பரபிரும்மலோகத்தில் இருந்த சாபம் பெற்று இருந்தசில தெய்வங்கள் மற்றும்  தேவகணங்கள் ஆகும். சாப விமோசனம் பெற  அவர்கள் பூமிக்கு வந்து இரண்டாம் நிலை தெய்வங்களுக்கு உதவியாக இருந்து அவர்கள் அவதரித்து இருந்த  ஊர்களில் இருந்தவர்களை பாதுகாத்து வரவேண்டும் என்ற கடினமான   பணி தரப்பட்டு இருந்தது. அது மட்டும் இல்லாமல் மனிதர்களை பயமுறுத்தியும், தொல்லை கொடுத்தும் வந்த தீய ஆவி, பேய் மற்றும் பிசாசு போன்றவற்றை விரட்டி அடித்து ஊர் மக்களையும், ஊரையும் பாதுகாக்கும் பொறுப்பும் இருந்தது.

15சாபவிமோசனம் பெற பூமிக்கு வந்த அந்த கிராம தேவதைகள்  தமக்கு இடப்பட்டு இருந்த பணிகளை திறமையாக சில பரப்பிரும்ம வருட காலம் செய்து  முடித்தப் பின் அதே யுகத்தில், அல்லது அடுத்த யுகங்களில் அடுத்த நிலையான குலதெய்வங்களாக மாறுகின்றன. இதற்கு உதாரணமாக ஒரு காலகட்டத்தில் கிராம தேவதைகளாக இருந்த அய்யனார், முனீஸ்வரர், பல ரூபங்களிலான மாரி அம்மன்கள்  என்ற தெய்வங்கள்  இன்று பல கிராமங்களில் குலதெய்வங்கள் என ஏற்பட்டுள்ளது கவனிக்க வேண்டியது ஆகும்.   ஒரு பரப்பிரும்ம வருடம் என்பது என்ன கணக்கு என்பது நமக்குத் தெரியவில்லை. அதை போலவேதான் ஊர் எல்லைக் காவல் தேவதைகளும்   தமக்கு இடப்பட்டு இருந்த பணிகளை திறமையாக சில பரப்பிரும்ம  வருட காலம் செய்து  முடித்தப் பின் அடுத்த நிலையான கிராம தேவதைகளாக ஒன்று அதே யுகத்தில், அல்லது அடுத்த யுகங்களில் மாறுகின்றன.

       

15aஇதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன என்றால் ஊர் எல்லைகாவல் தேவதைகளாக அங்கீகாரம் பெற்ற மனிதப் பிறவிகள் என்பது முதல் யுகத்தில் கிடையாது. அதன் காரணம் முதல் யுகத்தில்தான் மனிதப் பிறவிகள் படைக்கப்பட்டார்கள். அந்த யுகத்தில் செய்த புண்ணிய காரியங்களின் விளைவாக சில மனிதப் பிறவிகள் பின் அடுத்து வந்த யுகங்களில் தேவகணங்களாக மாற்றப்பட்டு எல்லைக் காவல் தேவதைகளாக அங்கீகாரம் பெற்றார்கள். அப்படிப்பட்ட மானிடப் பிறவிகளின் மறு பிறப்பு மானிடர்கள் அல்லது விலங்குகளாக இருக்காது. அடுத்த யுகத்தில் தேவகணங்களாக மாற்றப்பட்டவை பூமிக்கு செல்கின்றன. அந்த தேவகணங்கள் ஏதாவது ஒரு மனித அல்லது விலங்குகளின் உடலுக்குள் புகுந்து கொண்டு விடும். அந்தந்த ரூபங்களில் மறைந்து இருந்த அந்த தேவகணங்கள் தனது மகிமை மூலம் ஊருக்கும் மக்களுக்கும் பல நன்மைகளை செய்து அவர்களை பாதுகாக்கின்றன. அதனால் அங்குள்ள மக்கள் அப்படிப்பட்டவர்களை அமானுஷ்ய சக்தியுள்ள தேவதை, மோகினி என்று கருதத் துவங்கி அவர்களை மரியாதை செய்து வணங்குவார்கள். அவர்கள் மரணம் அடைந்தபின் அவர்களது உடலை ஊர் எல்லைகளில் புதைத்து வைத்து அதன் மீது ஒரு குத்துக் கல்லை நட்டு அல்லது சிலை வைத்து தமது ஊரைக் காப்பாற்றுமாறு அவற்றை வேண்டிக் கொள்வார்கள். குத்துக் கல்லை சுற்றி ஆலயம் அமைத்து வழிபடுவார்கள். இப்படியாக ஏதாவது ஒன்றில் மறைந்து இருக்கும் அந்த தேவகணகள் அதே ரூபங்களில் ஊர் எல்லை காவல் தெய்வங்களாகிவிடும். அடுத்த முறை இன்னொரு கிராமத்தில் சென்று தமது மகிமையை வெளிப்படுத்தும், ஊருக்கும் மக்களுக்கும் நன்மை செய்யும். இப்படியாக பல பரப்பிரும்ம வருடங்கள் சேவை செய்தபின் அவர்களது சேவையை மனதார பாராட்டி அவற்றை கிராம தேவதைகள் எனும் அந்தஸ்த்துக்கு பரப்பிரும்மன் உயர்த்துகிறார் என்பது நம்பிக்கை. இப்படியாக எல்லைக் காக்கும் தேவதைகள் மற்றும் கிராம தேவதைகளாக மாற்றப்படுபவற்றின் தெய்வ சக்தி எந்த அளவிலானது, அவற்றின் சேவைகள் என்ன என்பதையும், தீய மற்றும் துஷ்ட ஆவிகள், பேய் பிசாசுகளின் தோற்றம் போன்றவற்றையும் அதன் காரணத்தையும் பின்னர் விளக்குகிறேன்15b.

…………தொடர்கிறது : 6