குல தெய்வங்கள்

தோன்றிய வரலாறு

-சாந்திப்பிரியா-

-3-

நான்கு முகங்களுடன் பிரும்மா தோன்றியவுடன் அவர் முகத்தில் இருந்து லட்ஷக்கணக்கான உயிரினங்கள் வெளிப்பட்டன. அதைத் தொடர்ந்து பரப்பிரும்மனிடம் இருந்தும் பல தெய்வங்கள் வெளிவந்தன. பிரும்மா நான்கு முகங்களுடன் வெளிவந்தபோது முதல் முகத்தில் இருந்த கண்கள் திறந்து இருக்கையில், அடுத்த மூன்று திசைகளை நோக்கி இருந்த முகங்களின் கண்கள் மூடி இருந்தன4.

நான்கு முக பிரும்மா

முதலில் பிரபஞ்சத்தில் படைத்த உயிரினங்களில் ஏழு ஆன்மாக்களை மஹரிஷிகளாக உருமாற்றிய பிரும்மா, உயிரினங்களின் வாழ்வாதாரத்தையும் துவக்கி வைத்தார். அதற்கு முன்பாக அவை அனைத்தும் இயங்குவதற்காக அதுவரை பரமாத்மாவின் சக்திக்கதிர்களில் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து இருந்த ஒரு பூமியை வெளிக்கொண்டு வந்தார். பிரும்மா முதலில் உருமாற்றிய ஏழு மஹரிஷிகளைக் குறித்து சற்றே முரண்பட்ட செய்திகள் உள்ளன. ஜைமினியா உபநிஷத் எனும் எனும் சமிஸ்கிருத நூலின்படி (जैमिनीय उपनिषद्-ब्राह्मण) அந்த ஏழு மஹரிஷிகள் அகஸ்தியர், அத்ரி, பாரதிவாஜா, கவுதம், ஜமதக்கினி, வசிஷ்டர், விசுவாமித்திரர் என்பவர்கள் ஆவர். ஆனால் பிரஹதாரண்ய உபநிஷத்தில் ஏழாவது மகரிஷியாக அகஸ்தியருக்கு பதில் பிருஹு முனிவரின் பெயர் காணப்படுகின்றது. அதை போல வேறு பல நூல்களிலும் முரண்பட்ட பெயர்கள் காணப்படுகின்றன.

பரபிரும்மனின் சக்திக்கதிர்களில் இருந்து முதலில் வெளிவந்த தெய்வங்கள் ஆண் மற்றும் பெண் என இருந்ததினால் பிரும்மாவும் தான் படைத்த உயிரினங்களை ஆண் மற்றும் பெண் என்ற பிரிவுகளில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் படைத்தார். ஆனால் அதன் விவரம் தெரியவில்லை. அவர்கள் இரு வேறுபட்ட தோற்றங்கள் மற்றும் குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்திக் காட்டவே அந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இங்கு ஒரு கருத்தை தெளிவுபடுத்த வேண்டி உள்ளது. பிரும்மாவுக்கு தெய்வங்களை வெளிப்படுத்தும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை என்றாலும் அவருக்கு மட்டுமே ஆகாயத்தின் மேல் பிரும்ம லோகம், தேவலோகம், போன்ற பல தெய்வீக லோகங்களை உருவாக்கி, அங்குள்ள கடவுட்களுக்கு உதவிடும் வகையிலான தேவ கணங்கள் அனைவரையும் படைக்கும் சக்தி தரப்பட்டு இருந்தது. பூலோகத்தில் தெய்வீகத்தைப் பரப்பி, நன்னெறிமுறைகளை மனித குலத்தில் அமல்படுத்த இரண்டாம் கட்ட கடவுட்கள் தேவைப்பட்டன. ஆகவே பிரதான நான்கு தெய்வங்களும் பரப்பிரம்மனால் படைக்கப்பட்ட பின்னர், அடுத்த நிகழ்வாக விநாயகப் பெருமான், தேவேந்திரன், இந்திரன், யமதர்மராஜர் மற்றும் மனித வாழ்வின் நல்ல, தீய நிலைகளை நிர்ணயிக்கும் ராகு, கேது, புதன், சந்திர சூரியர்கள் போன்ற தெய்வங்களும், அக்னி, வாயு சனி , மற்றும் வருண பகவான்கள் போன்றவர்கள் பரபிரும்மனின் சக்திக்கதிர்களில் இருந்து தோற்றுவிக்கப்பட்டனர். துவக்கத்தில் மனிதர்களுக்கு தெய்வங்களின் மீது நம்பிக்கை எற்படக் காரணமாக இருந்த தெய்வங்கள் அக்னி, வாயு மற்றும் வருண பகவான்கள் ஆவார்கள்5.

ஏழு மகரிஷிகளும் பிரும்மாவின் முன் தாம் எதற்காக படைக்கப்பட்டோம் என்பது தெரியாமல் நின்றார்கள். அவர்களை தமது நேரடித் தூதர்கள் எனக் கூறிய பிரும்மா, உலகில் படைக்கப்பட்டவை எத்தனை ஜனன மரண நிலைகளைக் கொண்டிருக்கும், ஆண் பெண் தத்துவம், குழந்தைகள், வாழ்வு நெறிமுறைகள், நல்லவை, தீயவை, தெய்வங்கள் வெளிப்பட்ட வரலாறு, தெய்வீகம், இறை வழிபாடு, பிரும்ம நியதி போன்றவை அனைத்தையும் விரிவாக எடுத்துரைத்தப் பின் அவர்கள் பூலோகம் சென்று அனைவரும் அவற்றை அறிந்திடும் வகையில் போதனைகளை செய்து பரப்புமாறு ஆணையிட்டார்.

ஏழு மகரிஷிகள்

அதேபோல அந்த மஹரிஷிகள் பூமியிலே தமக்கு சிஷ்யர்களை உருவாக்கிக் கொண்டு அவர்கள் மூலம் குரு சிஷ்ய பரம்பரைத் தத்துவம் மற்றும் பிற தத்துவங்களையும் பரப்ப வேண்டும் என்றும், மனிதகுலத்தை நல்வழிப்படுத்தி தூய்மைகளைக் கடைப்பிடிக்க வழிகாட்டி அவர்களைக் காத்தருள தெய்வங்கள் எந்த நேரத்தில் எங்கெங்கு அவதரிக்க உள்ளார்கள் என்பதையும் குலதெய்வம் எனும் கருத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.

அனைத்தும் முடிந்த பின் அந்த முனிவர்கள் அனைவரும் அவரவருக்கு தோற்றுவிக்கப்பட்ட பெண்களை மணந்து கொண்டு பிரும்ம தத்துவங்களை பரப்பிட பூலோகத்துக்கு சென்றார்கள். அங்கு சென்றவர்கள் ஒரே குழுவாக தங்கிடாமல் பல்வேறு இடங்களில் சென்று தங்கி, தமக்கு சில சிஷ்யர்களை உருவாக்கிக் கொண்டார்கள். அதே நேரத்தில் மனிதப் பிறப்பு எடுத்து இருந்த ஆத்மாக்களும் சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சென்று தங்கும் நிலையில் பிறப்பு எடுக்கப்பட வைக்கப்பட்டார்கள். அந்த மனிதப் பிறவிகள் மனதில் முதலில் பயம் எனும் உணர்வை ஏற்படுத்தினார்கள். அப்போதுதான் பய உணர்வில் அவர்கள் அங்கு அவதரிக்க உள்ள தெய்வங்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களிடம் சென்று சரணடைய முடியும் என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு அது.

உலகம் படைக்கப்படப் பின்னர் மனித பிறப்புக்கள் இலக்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் இருந்த மலை அடிவாரங்கள், நதிக்கரை, சுற்றிலும் மரங்கள், செடிகள் நிறைந்த இடங்களில் சென்று வாசிக்கலானார்கள். அவர்கள் இடையே ரிஷி முனிவர்கள், சாது சந்யாசிகள் என்ற உருவங்களில் சில தெய்வங்களும் அங்கங்கே அவதரித்து தங்கினார்கள். மனித பிறவிகள் என்ன மொழியை பேசினார்கள், அவர்களின் உருவங்கள் என்ன, அவர்களின் வாழ்க்கை முறைகள் என்ன, அவர்கள் வணங்கிய தெய்வங்கள் என்னென்ன என்பவற்றைக் குறித்த செய்திகள் தெரியவில்லை. பிரபஞ்ச தோற்றத்தின் நிலைகள் குறித்த செய்திகள் அனைத்தையும் ஆராய்ந்து வரும் ஆராய்ச்சியாளர்களையும் பண்டிதர்களையும் குழப்ப வைப்பது என்ன என்றால் “உலகம் தோன்றியவுடன் குரங்குகளாக இருந்தவர்களே காலப்போக்கில் மனிதர்களாக மாறினார்கள் என்றும், மெல்ல மெல்லத்தான் நாகரீகம் பரவி வந்தது என்றும் விஞ்ஞானிகள் கூறி வருகையில், முதல் யுகத்திலே அவதரித்ததாக கூறப்படும் சப்தரிஷிகளான அத்ரி, விசுவாமித்திரர், காஷ்யபர், வசிஷ்டர், அங்கீரஸ, அத்ரி மற்றும் பிருகு போன்றவர்களின் மாபெரும் சக்திகளையும், அபாரமான ஞானத்தையும், வாழ்க்கை நெறிமுறைகளையும், போதனைகளையும், சாதனைகளையும் நோக்குகையில் அந்த யுகத்தில் வாழ்ந்திருந்த மனிதப் பிறவிகளுக்கும் அதீத அறிவு இருந்திருக்க வேண்டும் என்றே கருத முடியும். இல்லை என்றால் அவர்களால் அந்த முனிவர்களின் தெய்வீக, ஆன்மீக தத்துவார்த்த போதனைகளை கிரகித்துக் கொண்டு இருக்க முடியாது. இராமாயண, மஹாபாரத நிகழ்வுகள் அந்த யுகத்தில்தான் நடந்தவையா? இராமாயண, மஹாபாரத கால கட்டத்தில் இருந்த மக்கள் எந்தெந்த தெய்வங்களை வணங்கி வந்திருந்தார்கள்?”  இந்த குழப்பத்துக்கு வலு சேர்க்கும் வகையிலான விளக்கங்கள் இன்னும் தெளிவாக கிடைக்கவில்லை. காலம் காலமாக அனைத்துமே நம்பிக்கையின் அடிப்படையில் நம்பப்பட்டு வந்துள்ளது என்பதே உண்மை.

இயற்கை சீற்றங்களில் பயமுறுத்தும் வகையிலான உருவங்கள் தெரிந்தன.

மனிதப் பிறவிகள் வாழாத் துவங்கிய இடங்களில் பிரும்ம நியதிப்படி சில தெய்வங்கள் அவதாரம் எடுத்துத் தங்கினார்கள். 5அந்த தெய்வங்களின் தோற்றம் சிலரது கண்களுக்கு தெரிந்தவாறும், மற்றவர்களது கண்களுக்கு புலைப்படாமலும் காணப்பட்டன. மேலும் அப்படி அவதரித்த தெய்வங்கள், காதுகளைக் கிழிக்கும் வகையிலான இடி மின்னலுடன் கூடிய பேய் மழை, வெள்ளம், சூறாவளி, போன்ற இயற்கை சீற்றங்களை உருவாக்கி அவற்றின் இடையே அவதரித்தார்கள். அவற்றைக் கண்டு அச்சம் கொண்ட மனிதப் பிறவிகள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள புதியதாக அங்கு வந்த, சில நேரங்களில் கண்களுக்கு புலப்பட்டு பல நேரங்களில் மறைந்து இருந்த தெய்வங்களிடம் சரண் புகுந்தார்கள், அவர்களைத் தேடி அலைந்தார்கள். அங்கங்கே குழுக்களாக தங்கி இருந்த மனிதப் பிறவிகள், புதிதாக அவதரித்த தெய்வங்களை தமது பாதுகாவலர்களாக கருதத் துவங்கினார்கள். ஒவ்வொரு பிரிவை சேர்ந்த மனிதக் குழுவினரும் அவரவர்கள் பகுதியில் தோன்றிய அவதாரங்களை ஏற்றுக் கொள்ளாத துவங்க இப்படியான சூழ்நிலையில் இறை வழிபாட்டு முறையும் , குலதெய்வ வழிபாடும் துவங்கின.

பூமியிலே தங்கி இருந்த மகரிஷிகளும் தமது சீடர்கள் மூலம் அவ்வப்போது ஏற்பட்ட இயற்கை சீற்றங்களை அமானுஷ்ய ஆவிகளாக காட்டி, அவை மனிதப் பிறவிகளைவிட சக்தி மிக்க ஆத்மாக்களால் இயக்கப்படுகின்றன என்று கூறி, புதியதாக அவதரித்த தெய்வங்களுடன் அவற்றை சம்மந்தப்படுத்தி சில கதைகளைக் கூறி அவர்களை வழிப்பட்டால் அந்த சீற்றங்களில் இருந்து தப்ப முடியும் என்ற பிரமையை ஏற்படுத்தி வந்தார்கள். ஆனால் இவை எதற்கும் ஆதாரபூர்வமான சான்றுகள் இல்லை என்றாலும், வாய்மொழிக் கதைகளாக பல்லாயிரம் ஆண்டுகளாக பரவி வந்துள்ளன.

யுகம் எனப்படும் முதல் நிலைப் படைப்பில் பல லட்ஷக்கணக்கான உயிரினங்கள் படைக்கப்பட்டு ஆட்டி வைக்கப்பட்ட பின் 1,728,000 மனித ஆண்டுகள் கழிந்து விடும். அந்த ஆத்மாக்களுக்கு இன்னும் நான்கு நிலை மரண ஜனன நியதி உள்ளதே என்பதினால் அவற்றை எங்கு அனுப்புவது என யோஜனை செய்த பிரும்மா உடனடியாக அந்த ஆத்மாக்கள் செல்ல நான்கு யுக தளங்களை உருவாக்க முடிவு செய்தார். அப்போதுதான் முதல் யுகத்தில் இருந்து  நான்கு யுகத்திற்கும் அந்த ஆத்மாக்கள் அவற்றின் விதிப்படி செல்ல முடியும் என்பதையும் உணர்ந்தார்.

பிரும்மாவின் நான்கு முகங்களில் இருந்தும், நான்கு திசைகளிலும் படைத்தவை வெளிவந்தன

4இப்படியாக நான்கு யுக தளத்தை உருவாக்கத் துவங்கியதும் தமது முதல் முகத்தின் கண்களை மூடிக்கொண்டு இரண்டாம் முகத்தின் கண்களைத் திறந்து பார்க்க அதில் இருந்து இரண்டாம் யுக தளம் வெளிப்பட்டது. முதல் யுகத்தின் முடிவில் அந்த யுகத்தின் ஆத்மாக்கள் இங்கு வந்தவுடன் என்னென்ன நிகழ்வுகள் அதில் நடைபெற வேண்டும் என்று அந்த தளத்தில் சக்தியூட்டிய பின் அதை கண்களுக்குப் புலப்படாமல் மறைத்து வைத்தார். இப்படியாக அவர் முதல் யுகத்தைத் தொடர்ந்து பிற மூன்று பக்கங்களிலும் மேலும் மூன்று யுக தளங்களை படைத்தவுடன் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றி முந்தைய யுகத்தின் ஆத்மாக்களை சுவீகரித்துக் கொள்ளும் என்ற நிலையையும் உருவாக்கி, அவற்றையும் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து இருக்க வைத்தார்.

முதல் யுகத்தின் முடிவில் தோன்ற இருந்த ஒவ்வொரு யுகத்துக்கும் தனித்தனியான காலகட்டம் வரையறுக்கப்பட்டது. அந்தந்த யுகங்களுக்கு ஏற்ப சில தன்மைகளும் சக்தியூட்டப்பட்டு அவற்றுக்கேற்ப அவற்றில் தோன்ற இருந்த மனிதர்கள் தூய எண்ண அலைகளில் இருந்து மெல்ல மெல்ல தீய எண்ணங்களைக் கொண்டவர்களாக மாறும் வகையில் அமைத்தார்.

சத்திய நெறிகளை பிரதானமாகக் கொண்ட முதல் யுகமான சத்ய யுக முடிவைத் தொடர்ந்து வெளிவர இருந்த அடுத்தடுத்த யுகங்களில் தூய்மையான எண்ணங்களைக் கொண்ட மனிதப் பிறவிகளின் தன்மைகள் மெல்ல மெல்ல மறைத்து தீய தன்மைகளைக் கொண்டவையாக மாறிக்கொண்டு வரும் என்பதினால் அந்த மனிதப் பிறவிகளை ஒழுங்குபடுத்தி வைக்க அதிக தெய்வங்களின் தோற்றம் தேவை என்பதை உணர்ந்தார்.

2ஒவ்வொரு புதிய யுக தோற்றத்திலும் குல தெய்வங்கள் உட்பட பல தெய்வ அவதாரங்கள் வெளிப்பட்டு வந்துள்ளன என்பது தெளிவாக தெரிகின்றது. கல்கி யுகத்தில்தான் மிக அதிகமான தெய்வங்கள் தோன்றி உள்ளதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள். வேத காலம் முதல் இராமாயண, மஹாபாரத நிகழ்வு நடைபெற்ற காலங்களில் தோன்றிய காலங்களை ஒப்பிட்டுப் பார்த்தாலும் இந்த உண்மை விளங்கும்.

ஒவ்வொரு புதிய யுக தோற்றத்திலும் அதிக எண்ணிக்கையிலான குல தெய்வங்கள் உட்பட பல தெய்வ அவதாரங்கள்  வெளிப்பதின் அவசியம் என்ன என்பதற்கு காரணம் கீழுள்ளவையாக இருக்கலாம் :

  • முதல் யுகத்தில் சத்தியத்தைக் கடைப்பிடித்து தூய்மையுடன் இருந்த பிறவிகள் அடுத்தடுத்த யுகங்களில் அந்த தூய தன்மைகளை இழந்து தீய தன்மைகளைக் கொண்டவர்களாக மாறி வந்தார்கள். அவர்களை ஒழுங்கீனப்படுத்த அதிக தெய்வங்கள் தேவைப்பட்டன.
  • முதல் யுகத்தில் பிரும்மாவினால் படைக்கப்பட்ட அனைத்து ஆத்மாக்களுமே பிறவி எடுக்கவில்லை. அப்போது பிறப்பு இருந்த ஜனத்தொகை மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. பிறப்பு எடுக்காமல் இருந்த மற்றவை விண்வெளியில் மிதந்தபடியே இருந்தன. அடுத்தடுத்த யுகங்களில் அவை அனைத்தும் பிறவிகளை எடுக்கத் துவங்க, பிறவிகளின் எண்ணிக்கை இரு மடங்கு, மூன்று மடங்கு என பெருகிக் கொண்டே சென்ற நிலையில், தூய்மை அழித்தவாறு இருக்க, அவற்றை ஒழுங்கீனப்படுத்த அதிக தெய்வங்கள் தேவைப்பட்டன.
  • முதல் யுகத்தில் இருந்த பிறவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவை வாழ்ந்த இடங்களும் விரிவடைந்து கொண்டே செல்ல, அத்தனை இடங்களிலும் இருந்தவர்களை பாதுகாத்து, வழிநடத்த அதிக தெய்வப் பிறவிகள் தேவைப்பட்டன.
  • புராண இதிகாசங்களை படித்தோம் எனில் வேத கால துவக்கத்தில் குல தெய்வ வழிபாடு துவங்கி உள்ளது என்பதும், அப்போது ஜாதி பேதம் இன்றி அனைவருமே ஒரே தெய்வத்தை வணங்கி வந்துள்ளார்கள் என்பதும் தெரிகின்றது. இராமாயண மஹாபாரத காலங்களிலும் ஜாதி பேதம் இருந்திடவில்லை, ஆனால் படைப்பு ரகசியத்தின்படி பிரும்மாவின் மூலமே நான்கு தொழில்களை செய்யும் நான்கு பிரிவு மனிதப் பிறவிகள் தோன்றியதாகவும், அதுவே பிற்காலகட்டங்களில் பல பிரிவுகளைக் கொண்ட ஜாதிகளாக படர்ந்து விரிந்துள்ளன என்றும் அதனாலும் அந்தந்த பிரிவினர் வழிபடும் வகையில் அவரவர் பிரிவுக்கு ஏற்ப அதிக அவதாரங்கள் வெளிவந்துள்ளன. இதுவும் அதிக எண்ணிக்கையிலான தெய்வங்கள் வெளிப்பாடாக காரணமாக இருந்துள்ளன. 

வேத காலம் என்பது முதல் யுகமா இல்லை, எந்த யுகத்தில் அது தோன்றியது என்பது தெரியவில்லை. ரிக் வேத கால மனிதர்கள் இயற்கையை உருவமற்ற தெய்வங்களாக வழிபட்டு வந்துள்ளார்கள். இயற்கையின் சீற்றத்தைத் தணிக்க அங்கங்கே இருந்த மக்கள் ஒன்று கூடி தம்மைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டு வெற்று இடங்களில் நின்று பிரார்த்தனை செய்துள்ளார்களாம். அந்த இடங்களே பின்னர் ஆலயம் எனும் வழிபாட்டுத் தலங்கள் என ஆயின. ரிக் வேத காலத்தில் சிவன், பார்வதி, விஷ்ணு, கிருஷ்ணர் போன்றவர்கள் அந்தந்த உருவங்களில் வழிபடப்பட்டதாக தெரியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் எதோ ஒரு வகையிலான உருவ வழிபாடு இருந்துள்ளதான மறைமுக செய்திகள் உள்ளதெனவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.

………………தொடரும்: 4