குல தெய்வங்கள்

தோன்றிய வரலாறு

-சாந்திப்பிரியா-

-2-

குல தெய்வம் குறித்து பல்வேறு கட்டுரைகளும் செய்திகளும் வெளி வந்துள்ளன. புராண, இதிகாச, வேத நூல்களை படித்தோம் எனில் வேத காலம் முதலே குல தெய்வ வழிபாடு இருந்துள்ளது என்பது புலனாகும். குல தெய்வங்கள் தோன்றிய வரலாறு குறித்து படிப்பதற்கு முன், யுக யுகமாக இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட மூல தத்துவம் குறித்தும், அதில் இருந்து வெளி வந்த குல தெய்வங்கள் குறித்தும் அறிந்து கொள்வது அவசியம். புராண வேத நூல்களின் கருத்தின்படி இந்த பிரபஞ்சத்தை உருவாக்க நினைத்த பரப்பிரம்மம் (சிவசக்தி) தன் சக்திக் கதிரலையில் இருந்து சிவன், விஷ்ணு மற்றும் பிரும்மா1 எனும் மூன்று மூல தெய்வங்களை படைத்தார். அதில் தோன்றிய ஒரு தெய்வமான பிரும்மா அசையும், அசையா ஆத்மாக்களை படைத்து அந்த அசையும் ஆத்மாக்களில் இருந்து முதலில் ஏழு ரிஷிகளை படைத்தார். அதன் பின் அந்த அசையும் ஆத்மாக்களைக் கட்டுப்படுத்தி நல்வழிப்படுத்த வேண்டியது அவசியம் ஆயிற்று.  அதன் காரணம் என்ன என்பதை பின்னர் கூறுகின்றேன்2.

முதல் யுகத்தின் படைப்பிலேயே தெய்வங்களும், அவதாரங்களும், குலதெய்வங்களும் படைக்கப்பட்டன என்பதின் காரணம் பெரும்பாலான அசையும் ஆத்மாக்கள் மானிடப் பிறவி எடுத்து இருந்தன என்பதே.  பிரும்ம நியதியின்படி குலதெய்வங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆத்மாக்கள் அடுத்தடுத்த யுகங்களிலும் ஜனனம் மற்றும் மரணம் எனும் நியதிக்கு உட்பட்டவை ஆகும். ஆகவே முதல் யுகத்தில் அவற்றை தமது கட்டுப்பாட்டில் வைத்து இருந்த குலதெய்வங்கள், அந்த ஆத்மாக்களின் அடுத்த பதிமூன்று சந்ததி ஆத்மாக்களையம் நல்வழிப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்ற நியதியும் வரையறுக்கப்பட்டது. பதிமூன்று சந்ததியினர் எனும் கோட்பாடு குறித்து பின்னர் விளக்குகிறேன்3. பரபிரும்ம நியதியின்படி, பிரம்மனால் படைக்கப்பட்ட ஆத்மாக்கள் நான்கு யுகங்களிலும் பயணித்து, ஜனனம் மற்றும் மரண நிலைகளை அடையும் காலகட்டத்தில், எந்த ரூபத்தில் இருந்து மரணம் அடைந்ததோ அதே ரூபத்தில் மீண்டும் பிறப்பு எடுப்பது இல்லை. அவை உலகில் செய்யும் நல்ல, தீய காரண காரியங்களுக்கு ஏற்ப அவற்றுக்கு மறு பிறவியில் அதற்கேற்ப ஒரு உருவம் கிடைக்கும் என்பது நியதி.  அது மனிதராகவோ, விலங்காகவோ இல்லை செடி கொடியாகவோ கூட இருக்கலாம். அதேபோல பிரும்மாவினால் படைக்கப்பட்ட சில மனித ஆத்மாக்கள் பல்வேறு யுகங்களில் அவை செய்யும் புண்ணிய காரியங்களின் பயனாக தேவகணமாகவோ, குலதெய்வமாகவோ மாறி தேவலோகம் செல்ல முடியும் என்ற பரமாத்மனின் நியதியும் இருந்தது.  இங்கு ஒரு முக்கியமான கேள்வி எழுகின்றது. முதல் யுகத்தில் வெளிவந்த குலதெய்வங்கள் அந்த யுகத்தில் படைக்கப்பட்ட ஆத்மாக்களுக்கு அதிபதியாகியவுடன், யுக முடிவில் அதே ஆத்மாக்கள் அடுத்த யுகத்துக்கு சென்றபின் அந்த யுகத்திலும் அதே குலதெய்வங்கள்தான் அந்தந்த ஆத்மாக்களுக்கு அதிபதியாக இருக்குமா, இல்லை புதிய குல தெய்வங்கள் அடுத்த யுகத்தில் தோன்றி அவர்களை பாதுகாக்குமா? இன்னும் எதேர்சையாக சில குல தெய்வங்களின் கட்டுப்பாட்டில் கடந்து போன யுகத்தில் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த அதே ஆத்மாக்கள் இருக்க முடியுமா ?

எந்த ஒரு புராணங்களிலும் இவைக் குறித்த முறையான விளக்கம் காணப்படவில்லை. அப்படி என்றால் முதல் யுகத்தில் பல ஆத்மாக்களை தம் கட்டுப்பாட்டில் வைத்து இருந்த குலதெய்வங்களின் நிலைமை அடுத்த யுகத்தில் என்னவாக இருக்கும்? ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் அடுத்த யுகத்துக்கு சென்று பிறப்பு எடுக்கும் ஆத்மாக்களுக்கு, பூர்வ யுகத்தில் எந்த குலதெய்வத்தின் கட்டுப்பாட்டில் அவை இருந்தனவோ, அதே குலதெய்வங்கள்தான் மீண்டும் குலதெய்வங்களாக இருக்குமா, இல்லை என்றால் புதிய யுகத்தில் பிறப்பு எடுக்கும் அதே ஆத்மாக்களுக்கு புதிய குலதெய்வங்கள் படைக்கப்படுமா?  இந்தப் புதிருக்கு மறைமுகமாக விளக்கம் தருவது போல பண்டைய கால மூல நூல்களான விஷ்ணு புராணம் மற்றும் தேவி பாகவதத்தில் சில கருத்துக்கள் கூறப்பட்டு உள்ளன. அந்த நூல்களின்படி ஒவ்வொரு சதுர் யுகத்தின் துவக்கத்திலும் பிரும்மா அவருடன் தேவேந்திரன், மற்றும் அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு சிவசக்தி எனும் பரபிரும்மனின் சக்திகதிர்களில் கலந்து மறைந்து விட்டு மீண்டும் மறுபிறவி எடுக்கின்றார். இந்த மறைமுகக் குறிப்பு எடுத்துக் காட்டுவது என்ன என்றால் சதுர்யுகம் துவங்கும்வரை முதல் யுகத்தில் படைக்கப்பட்ட குலதெய்வங்கள் உட்பட எந்த தெய்வ அம்சங்களுக்கும் அழிவு இல்லை. ஆகவே அதே தெய்வ அம்சங்கள்தான் ஒவ்வொரு யுகத்திலும் அதே நிலையில் அல்லது மாறுபட்ட அவதாரங்களில் தொடர்கின்றன என்பதே.

தேவ நூல்களின் கருத்தின்படி எந்த யுகத்திலும் குல தெய்வங்கள் தமக்கு தோன்றியவாறு வெவ்வெறு ரூபங்களையோ அல்லது வெவ்வெறு இடங்களுக்கோ சென்று தமது இச்சைக்கு ஏற்ப அவதாரங்களையோ எடுக்க முடியாது என்பது அடிப்படை நியதியாகும். அவற்றுக்கு அந்த சக்திகள் கிடையாது. எந்த தெய்வம், எந்த ரூபத்தில், எந்த இடத்தில், என்ன நேரத்தில் அவதரிக்க வேண்டுமோ அவை அனைத்துமே பிரும்ம படைப்பின் நியதியில் எழுதப்பட்டு உள்ள நியமங்களுக்கு ஏற்பவே நடைபெற முடியும் என்பது மாற்ற முடியாத நியதி ஆகும் என்ற கருத்தை கற்றறிந்த பண்டிதர்கள், ஆன்மீக மகான்கள், மாபெரும் தெய்வீக மகான்கள் போன்றவர்கள் கூறி உள்ளார்கள்.

பிரும்ம நியதி குறித்த அனைத்து செய்திகளும் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் பனை ஓலைகளில் எழுதப்பட்டு இருந்ததாகவும், அவற்றில் மிக முக்கியமான செய்திகள் அடங்கி இருந்த பலவும் காலப்போக்கில் என்ன காரணத்தினாலோ வெளி உலகம் அறிந்து கொள்ள முடியாத வகையில் காணாமல் போய் விட்டதாகவோ அல்லது அழிந்து விட்டதாகவோ கூறுகின்றார்கள். அதனால்தான் இந்த செய்திகள் அனைத்துமே யுக யுகமாக வாய்மொழிச் செய்திகளாக பரவி வந்துள்ளன என்று ஆய்வாளர்கள் கூறி உள்ளார்கள். கிடைக்காமல் போய்விட்ட அந்த தகவல்களை கொண்ட சுவடிகள் ஒருபுறம் இருக்க அதே செய்திகளை தெய்வங்களே பல ரிஷி முனிவர்களுக்கு நேரில் தோன்றி கூறியதாகவும், அதனால்தான் அவை அனைத்தும் பல்லாயிரம் வருடங்களாக வாய்மொழி வார்த்தைகளாக பரவி வந்துள்ளதாகவும் பண்டிதர்கள் கூறுகின்றார்கள். இந்தக் கருத்துக்களை பல்வேறு ஆன்மீக, சமய மையங்கள் மற்றும் பிரும்ம குமாரி சமாஜ், காயத்ரி பரிவார், தத்தாத்திரேய பரிவார், திகம்பராக்கள், சாதுக்கள், சன்யாசிகள், மஹரிஷிகள் போன்றவர்களின் பிரசங்கங்களில் மற்றும் உபதேசங்களில் கேட்க முடியும்.  பரபிரும்மனின் படைப்பைக் குறித்து அனைத்து ரகசியங்களையும் நாரத முனிவருக்கு ஸ்ரீமான் நாராயணன் எனும் விஷ்ணு பகவான் எடுத்துரைத்ததாக வேதகால போதனை நூலான ‘ரஹஸ்யஸ்துதி’ எனும் ஒரு நூலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இந்த பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட அனைத்திற்குமே ஜனன, மரண நியதிகள் உண்டு எனும்போது அந்த நியதி பிரபஞ்சத்தில் வெளிவந்த குலதெய்வங்கள் உட்பட பிற தெய்வங்களுக்கும் பொருந்துமா? குல தெய்வங்கள் அழிவற்றவையா? முதல் யுகத்தில் எந்த காரணத்துக்காக அவை படைக்கப்பட்டனவோ அடுத்தடுத்த யுகங்களிலும் அவை அதே உருவில் அவதரித்து அதே கடமைகளை செய்தபடி இருக்குமா என்ற கேள்விக்கு பண்டைய கால நூல்களான கருட புராணம், விஷ்ணு புராணம் மற்றும் தேவி பாகவதத்தில் சில கருத்துக்கள் உள்ளதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள். அந்த நூல்களின் கூற்றின்படி சிவசக்தியான பரபிரும்மன் ஒருவர் மட்டுமே அழிவற்றவர் என்றும் குல தெய்வங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் ஜனன மரண நியதிக்கு உட்பட்டவர்கள். அவ்வளவு ஏன் இந்த உலகைப் படைத்த பிரம்மனுக்கும் ஜனன மரண நியதி உண்டு என்பது விளங்கும். அப்படி என்றால் பல காலகட்டங்களில் பகவான் கிருஷ்ணரும் மேலும் பல தெய்வங்களும் தாம் அழிவற்றவர்கள் என்பதாக கூறி உள்ளனர் எனும்போது அவற்றின் அர்த்தம் என்ன என்ற கேள்வி எழ முடியும். அவர்களுடைய ஆழமான கூற்றை சரிவர புரிந்து கொண்டால் அவர்கள் கூறியது உண்மைதான் என்பது புரியும். பகவான் கிருஷ்ணர் முதல் அனைத்து கடவுட்களுமே பரப்பிரும்மன் எனும் மூல சக்திக்கதிர்களில் இருந்து வெளிவந்த பிரதான தெய்வங்களின் சக்திக்கதிர் மற்றும் அவர்களுடைய துணை, இணை சக்திக்கதிர்களில் இருந்து வெளிவந்து பல உருவம் கொண்ட தெய்வங்கள். அவை தமக்கு இட்ட பணியை நிறைவேற்றிய பின் அவர்களது ஆத்மன் எனும் ஆத்மாவை அல்ல, உருவம் எனும் தோற்றத்தை மட்டுமே துறந்து விட்டு செல்லும்போது அவர்களது ஆத்மாக்கள் எந்த சக்திக் கதிர்களில் இருந்து  வெளி வந்தார்களோ அவற்றிலே மீண்டும் கலந்து விடுகின்றார்கள். அந்த சக்திக்கதிர்கள் அனைத்துமே அழிவற்ற பரப்பிரும்மனின் சக்திக்கதிரில் சென்று மறைந்து விடுவதினால் அவர்களது ஆத்மா அழிவற்றது எனும் உட்கருத்தைக் கொண்ட அவர்களின் கூற்று உண்மையே.

தேவி பாகவதம் மற்றும் விஷ்ணு புராணங்களின்படி ஒவ்வொரு எழுபத்தி ஒன்றாவது சதுர் யுகத்தின் துவக்கத்திலும் பிரும்மா தன்னுடன் தேவேந்திரன், மற்றும் அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு பரபிரும்மனின் சக்திகதிர்களில் கலந்து மறைந்து விட்டு மீண்டும் மறுபிறவி எடுப்பாராம். நான்கு யுகங்கள் நான்கு முறை மீண்டும் மீண்டும் தோன்றி மறையும் காலத்தின் இறுதியே ஒரு சதுர் யுகம் என்பதாகும். அதாவது அந்த காலம் 120,960,000 மனித வருடங்கள் ஆகும். சத்ய யுகத்தின் ஆயுள் 1,728,000 மனித வருடங்கள், திரேதா யுகத்தின் ஆயுள் 1,296,000 மனித வருடங்கள், துவாபர யுகத்தின் ஆயுள் 864,000 மனித வருடங்கள் மற்றும் கலி யுகத்தின் ஆயுள் 432,000 மனித வருடங்கள். ஆகவே பிரும்மா மறைந்து மீண்டும் அவதரிக்கும் காலமான ஏழு சதுர் யுகம் என்பது 4,320,000 x 4 = 17,280,000 x 7 = 120,960,000 மனித வருடங்கள் ஆகும்.

சிவசக்தியான பரபிரும்மன்

பிரும்மாவின் ஜனன- மரணம் எப்படி நிகழ்கின்றது ? சதுர் யுகம் துவங்கியதும் கடல் வெள்ளத்தினால் ஏற்படும் பெரும் பிரளயத்தில் உலகமே மூழ்கி விடும் என்பது பரபிரும்மனின் நியதி ஆகும். அந்த கட்டத்தில் பிரும்மாவும் அவருடன் தோன்றிய அனைத்து தெய்வங்களும் பரபிரும்மனின் சக்திக்கதிரில் கலந்து மறைந்து விடுகிறார்களாம். அதன் பின் பரப்பிரும்மன் மீண்டும் இன்னொரு படைப்பை துவக்குகிறார். அப்படி என்றால் பிரம்மனால் படைக்கப்பட்டதாக கூறப்படும் கடலும் நிலமும் என்னவாகும்? உண்மை என்ன என்றால் கடலும் நிலமும் பிரம்மனால் படைக்கப்பட்டவை அல்ல. அவை பரப்பிரும்மனின் சக்திக் கதிர்கள், கண்களுக்குத் தெரியாமல் பரப்பிரும்மனுடன் கலந்திருந்தவை என்பதினால் பரப்பிரும்மன் பிரும்மாவைப் படைத்ததும் அதுவரை கண்களுக்கு புலப்படாமல் இருந்த கடலையும் நிலத்தையும் பிரும்மா மூலம் பரப்பிரும்மன் வெளிப்படுத்தி, பிரும்மா மூலம் அதன் மீது உலகைப் படைக்க வைக்கின்றார். அப்படி உலகையும் பிற ஆத்மாக்களயும் பிரும்மா படைத்தப் பின் அவை எங்கெங்கு இருக்க வேண்டும், அவற்றின் செயல்பாடுகள் என்ன, எங்கு, எந்த நிலையில், எந்தெந்த தெய்வங்கள் வெளிப்பட வேண்டும் என அனைத்தையும் அதி நுண்ணிய செயல் திட்டமாக வடிவமைத்து அந்த செயல் திட்டத்தை வெளிப்படுத்துகின்றார். அந்த செயல் திட்டத்திற்கு ஏற்பவே குலதெய்வங்கள் வெளிப்பாடு உட்பட அனைத்து நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

அப்படி என்றால் குலதெய்வங்கள் பிரம்மனால் படைக்கப்பட்டதாக கருதலாமா என்ற கேள்வியும் எழும். அதற்கான பதில் ‘இல்லை’ என்பதே. தெய்வங்களை பொறுத்தவரை குல தெய்வம் உட்பட, எந்த எந்த தெய்வத்தையும் படைக்கும் உரிமை பிரும்மாவிற்கு கொடுக்கப்படவில்லை. அவை எங்கெங்கு இருக்க வேண்டும், அவற்றின் செயல்பாடுகள் என்ன, எங்கு, எந்த நிலையில், எந்தெந்த தெய்வங்கள் வெளிப்பட வேண்டும் என்ற அதி நுண்ணிய செயல் திட்டத்தை மட்டுமே வடிவமைத்து அந்த செயல் திட்டத்தை அவரால் அமல்படுத்த முடியும். குலதெய்வம் உட்பட, அனைத்து தெய்வங்களும் பரபிரும்மனின் ஒரு பாதியான சிவன் எனும் சக்திக் கதிரில் இருந்து வெளியான மூன்று பிரதான தெய்வங்களில் இரண்டு தெய்வங்கள், மற்றும் சக்தி பாகத்தில் இருந்து வெளியான ஒரு பெண் தெய்வம் மற்றும் அதே பெண் தெய்வத்தினால் வெளிப்படுத்தப்பட்ட இரண்டு துணை பெண் தெய்வங்களில் ஒரு துணை தெய்வம் என்ற நான்கு தெய்வ சக்திக் கதிர்களில் இருந்து வெளிப்பட்டவை ஆகும். இதிலும் ஒரு விளங்காத தத்துவம் மறைந்து உள்ளது. பரப்பிரும்மனின் சக்திக்கதிர்களில் இருந்து முதலில் ஆறு தெய்வங்கள் தோன்றி இருக்கையில் எதனால் அவற்றில் நான்கு தெய்வங்களுக்கு மட்டும் குலதெய்வம் உட்பட அனைத்து பிற தெய்வங்களையும் வெளிப்படுத்தும் சக்தி தரப்பட்டு உள்ளது ?

 

பரப்பிரும்மன் எனும் சிவசக்தியின் சிவ பாகத்தில் இருந்து சிவன்,
மஹாவிஷ்ணு மற்றும் பிரும்மா வெளிவர சிவசக்தியின் சக்தி
பாகத்தில் இருந்து பார்வதி எனும் பெண் தெய்வம் வெளி வந்தாள்
 

பரப்பிரும்மன் பிரபஞ்சத்தை வெளிப்படுத்தியபோது அவர் சக்திக்கதிர்களில் இருந்து முதலில் சிவன், விஷ்ணு மற்றும் பிரும்மா என மூன்று தெய்வங்கள் வெளிவந்தார்கள். அவர்களில் என்ன காரணத்தினாலோ பிரும்மாவைத் தவிர்த்து சிவபெருமான் மற்றும் விஷ்ணு பகவானுக்கு மட்டுமே அசுரர்கள் மற்றும் அரக்கர்களை அழிக்க வேண்டிய நிலைகளில் பல்வேறு துணை தெய்வங்களையும், பல்வேறு அவதாரங்களையும் வெளிப்படுத்த அதிகாரம் தரப்பட்டு உள்ளது. அதற்கான மூல காரணம் என்ன என்பதை எவராலும் இதுவரை சரியாக கணிக்க முடியவில்லை. எந்த புராணத்திலும், வேத நூல்களிலும் பிரும்மா இன்னின்ன அவதாரங்களை எடுத்தார் என்றோ, இன்னின்ன அவதாரங்களை படைத்தார் என்ற செய்திகளோ காணப்படவில்லை என்பதில் இருந்தே அவருக்கு அந்த அதிகாரம் இருந்திடவில்லை என்பது புரியும். பிரும்மாவுக்கு ஆத்மாக்களை படைக்கும் மற்றும் அவதாரங்களை எடுத்த, எடுக்க இருந்த தெய்வங்களின் நிலைப்பாடுகளை நிர்ணயிக்கும் செயல் திட்டத்தை மட்டுமே செயல்படுத்த அதிகாரம் தரப்பட்டு உள்ளது. ஆனால் அதே சமயம் பிரும்மா தலையீட்டினால் அசுரர்கள் மற்றும் தேவர்கள் இடையே நடைபெற்ற பல போர்களிலும் அசுரர்களை அழிக்க நடந்த நிகழ்வுகளிலும் பல அவதாரங்கள் வெளியாகி உள்ளன. 1மனு எனும் முனிவரால் இயற்றப்பட்டு உள்ள மனுஸ்ம்ருதி எனும் நூலின் முதல் பாகத்தில் காணப்படும் செய்தியின்படி பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது விஷ்ணுவின் தொப்பிள் கொடியில் இருந்து பிரும்மா வெளிப்பட்டார் என்பது தெரிகின்றது. ஆகவே அவர் விஷ்ணுவின் சக்திக்கதிரில் இருந்து வெளியான துணை தெய்வம்தான் என்றும், அதனால்தான் பிரும்மா படைத்ததை காக்கும் பொறுப்பு விஷ்ணுவிற்கு தரப்பட்டு உள்ளது என்றும் காக்கும் பொறுப்பு என்பதினால் படைக்கப்பட்டவை துயரத்தில் இருந்தபோது அவற்றைக் காப்பாற்ற பல அவதாரங்களை படைக்க வேண்டி இருக்கலாம் என்பதினால் அவருக்கு அந்த சக்தி தரப்பட்டு இருந்திருக்கலாம் எனக் கருத இடம் உள்ளது.

அதுபோல பிரும்மன் படைப்பின்போது பரப்பிரும்மனின் இன்னொரு பாகமான சக்தியில் இருந்து பார்வதி தேவி எனும் ஒரு பெண் தெய்வம் வெளிப்பட்டபின், உடனடியாக பார்வதி தேவியின் சக்திக் கதிர்களில் இருந்து மஹாலக்ஷ்மி மற்றும் சரஸ்வதி எனும் இரு பெண் தெய்வங்கள் வெளிப்பட்டார்கள். பார்வதியின் சக்திக் கதிர்களில் இருந்து வெளிவந்த மஹாலக்ஷ்மி மூலமும் துணை, இணை, புதுப்புது அவதாரங்கள் வெளிவராத துவங்க, பார்வதியின் சக்திக் கதிர்களில் இருந்து வெளிவந்த சரஸ்வதியால் அப்படி செய்ய முடியவில்லை. ஆனால் அவர் சில நிகழ்வுகளில் வெவ்வேறு ரூபங்களை எடுத்து உள்ளார் என வேத நூல்களின் செய்திகள் மூலம் அறிய முடிகின்றது. இதற்கான காரணமும் விளங்கவில்லை. இவை அனைத்தையும் பார்க்கும்போது என்ன தெரிகின்றது என்றால் இந்த பிரபஞ்சத்தில் தோன்றிய குலதெய்வங்கள் உட்பட பலநிலைப்பட்ட அனைத்து தெய்வங்களும் பரப்பிரும்மன் மூலம் வெளியான மூன்று ஆண் தெய்வங்களில் இருவர், மற்றும் சக்திப் பகுதியில் இருந்து வெளியான இரண்டு பெண் தெய்வங்களின் சக்திக்கதிரலைகளில் இருந்தே வெளியானவர்கள் என்பது புலனாகும். பரப்பிரும்மன் எனும் சிவசக்தியும் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியும் வெவ்வெறானவர்கள்.

 


பரப்பிரும்மன் எனும் சிவசக்தியின் சக்தி பாகத்தில் இருந்து
வெளிவந்த பார்வதியின் சக்திக்கதிரலைகளில் இருந்து மஹாலக்ஷ்மி
மற்றும் சரஸ்வதி எனும் இரண்டு பெண் தெய்வங்கள் வெளிவந்தார்கள்
இப்படியாக பரப்பிரும்மனின் ஒருபக்கம் மூன்று ஆண் தெய்வங்களும், இன்னொரு பக்கத்தில் மூன்று பெண் தெய்வங்களும் உருவானவுடன் அந்த தெய்வங்கள் பார்வதி -சிவன், லட்சுமி-மஹாவிஷ்ணு மற்றும் சரஸ்வதி- பிரும்மா என்ற தெய்வீக ஜோடிகளாக ஒன்றிணைந்தன. அந்த மூவரில் பார்வதி -சிவன் மற்றும் லட்சுமி-மஹாவிஷ்ணு எனும் ஜோடிகளின் சக்திக்கதிர்கள் மூலம் பல்வேறு துணை, இணை, புதுப்புது அவதாரங்கள் பிரும்மாவின் செயல் திட்டத்தின்படி தோற்றம் எடுக்காத துவங்க அவற்றில் பல தெய்வங்கள் குலதெய்வங்களாயின. இப்படியாக பிரபஞ்சம் தோன்றியவுடன் பல்வேறு தெய்வீக அவதாரங்கள் வெளிவரத் துவங்கின.

பரப்பிரும்மன் எனும் சிவசக்தியில் இருந்து வெளிவந்த சிவன்,
மஹாவிஷ்ணு மற்றும் பிரும்மா, பார்வதி மற்றும் மஹாலக்ஷ்மி
மூலம் குலதெய்வங்கள் உட்பட லட்ஷக்கணக்கான ஆண் மற்றும்
பெண் தெய்வங்கள் வெளிவந்தார்கள்.

………….  தொடர்கிறது : 3