{மேலே உள்ள சிவலிங்கம் போர்துகீசியரால் 1595 ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட ஆலய இடிபாடுகளின் இடையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு வெளிசுவற்றில் 1900 ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இதையும், ஆலய இடிபாடுகளையும் ஆராய்ந்து பார்த்ததில் 1505 ஆம் ஆண்டு ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னரே இந்த ஆலயம் இருந்துள்ளது என்பதை உறுதிபடுத்துகின்றது. 

Photo Courtesy:- By flickr Ed – http://www.flickr.com/photos/plonker/3864975820/, CC BY-SA 2.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=8715666}

இந்தியாவும் ஸ்ரீலங்காவும் ஒரு காலத்தில் ஒரே பகுதியாக இணைந்து இருந்தன. அதனால் இந்துக்களின் பல பிரசித்தி பெற்ற ஆலயங்களைப் போல ஸ்ரீலங்காவிலும் பல புகழ் பெற்ற சைவ ஆலயங்கள் இருந்துள்ளன. ஒரு விதத்தில் ஸ்ரீலங்காவை சைவ பூமி என்று கூறினாலும் கூட சரியாகவே இருக்கும். அதற்குக் காரணம் சக்தி வாய்ந்த பல சிவாலயங்களும், முருகன் ஆலயங்களும் அந்த நாட்டில் உண்டு. ஸ்ரீலங்காவில் உள்ள புகழ் மிக்க பல ஆலயங்கள் ராமாயணக் காலத்துடன் சம்மந்தப்பட்ட இடமாகும். ஸ்ரீலங்காவை ஆண்ட சிவபக்தனான ராவணன் பல சிவாலயங்களில் சென்று வணங்கி பூஜித்து உள்ளார்  என்பதினால் அங்கு சிவாலயங்கள் பெருமளவில் இருந்துள்ளன என்பதாக  நாடோடி நம்பிக்கைக் கதைகள் உண்டு. இலங்கையில் ஐந்து மகிமை வாய்ந்த சிவாலயங்கள் உள்ளன. அவற்றை ‘பஞ்ச ஈஸ்வரங்கள்’ என்று குறிப்பிடுகிறார்கள். அந்த ஐந்து சிவ ஆலயங்கள் நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம் மற்றும் தொண்டீஸ்வரம் என்று கூறப்படுகின்றது.

போர்த்துகீசியர் ஸ்ரீலங்கா மீது படையெடுத்து அதை ஆக்ரமித்துக் கொண்டபோது அங்கிருந்த ஆலயங்களை உடைத்து, அழித்து நாசம் செய்தபின் அந்த ஆலயங்களில் இருந்த விலை உயர்ந்த பொருட்களையும் அவர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு சென்றார்கள். வரலாற்று முக்கியமும், சரித்திர முக்கியத்துவமும் வாய்ந்த, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு இருந்த ஆலயங்களையும் விட்டு வைக்காமல் அவற்றை சரி செய்யவே முடியாத வகையில் அழித்து விட்டுச் சென்றார்கள். முன்னேஸ்வரம் ஆலயத்தையும் அவர்கள் இரண்டு முறை இடித்துவிட்டு அதை கிருஸ்துவ தேவாலயங்கள் நிறுவ கொடுத்தார்கள். அதை  ஒரு கிருஸ்துவ தொழுகை நடத்தும் இடமாக்கினார்கள் என்றாலும், பின்னர் கிருஸ்துவ  தேவாலயத்தை ஹிந்து சமயத்தினர் இடித்து விட்டு மீண்டும் ஆலயத்தை சீரமைத்தார்கள்.

போர்துகீசியரைத் தொடர்ந்து ஸ்ரீலங்காவைக் கைப்பற்றிய பறங்கியர் எனும் ஐரோப்பியர்களும் (டட்ச்) பல இந்து ஆலயங்களை குறிவைத்து இடித்து அழித்தார்கள். ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்கள் சிதைக்கப்பட்டன, ஆலயங்களின் செல்வங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. ஆகவே எப்போது எல்லாம் வெளிநாட்டினரின் ஆதிக்கம் துவங்கியதோ அப்போதெல்லாம் உள்ளூர் பக்தர்கள் விரைவாக செயல்பட்டு பல ஆலயங்களில் இருந்த மூல விக்ரகங்களையும் சிலைகளையும் எடுத்து அங்காங்கே காடுகளிலும், குளங்களிலும் ஆலய கிணறுகளிலும் மறைத்து வைத்து விட்டார்கள். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபோது பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பல ஆலய விக்ரகங்கள் கண்டெடுக்கப்பட்டு அதே ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூற்றின்படி ஸ்ரீலங்கா ஒரு காலத்தில் மிகப் பெரிய பூமியாக இருந்தது என்றும், ஆனால் காலப்போக்கில் அங்கு ஏற்பட்ட மூன்று கடல் கொந்தளிப்பில் தற்போது உள்ள இலங்கையின் அளவை விட இரண்டில் மூன்று மடங்கு அளவிலான பூமி நீரில் மூழ்கி அழிந்து விட்டதாகக் கூறுகிறார்கள்.  அழிந்து விட்ட அந்த பெரும் பகுதிகளே ராவணன் ஆண்டு வந்த இலங்கை என்றும், அவன் ராஜ்யத்திற்குப் போகும் முன்னால் தற்போது கடலில் முழுகிவிட்டதாக கூறப்படும் பகுதிகள் வழியேதான் செல்ல வேண்டி இருந்ததாகவும், இந்தப் பகுதிகளில் நிறைய ஆலயங்கள் முக்கியமாக பஞ்ச சிவாலயங்கள் இருந்துள்ளது என்றும் நம்புகின்றார்கள். ஆனால் அந்த ஐந்து ஆலயங்களும்  இயற்கையின் சீற்றத்தில் இருந்து தப்பி கடலுக்குள் மூழ்கி அழியாமல் இருந்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.

அந்த கால கட்டத்தில் சீதையை கடத்திக் கொண்டு ராவணன் இலங்கைக்குச் சென்றதும் அங்கு சென்று ராவணனுடன் போர் புரிந்து சீதையை மீட்டு  வந்த ராமபிரான் அந்த வெற்றி கிடைக்க அருள் புரிந்த சிவபெருமானுக்கு நன்றி கூற  முன்னேஸ்வரம் ஆலயத்திலும் வந்து வழிபட்டதாக காலம் காலமாக நம்பப்பட்டு வரும் கதையும் இந்த நாட்டில் உள்ளது. யுத்தத்திற்கு செல்லும் முன்னர் ஆலயத்தில் வந்து சிவபெருமானை பூஜித்த ராமபிரானுக்கு யுத்தத்தில் வெற்றி பெற சிவபெருமான் அருள் புரிந்தார் என்பதினால் சிவபெருமானுக்கு தனது நன்றியை செலுத்த யுத்தம் முடிந்த பின் ராமபிரான்  அங்கு மீண்டும் வந்து பூஜை செய்தார் என உள்ளூர் நம்பிக்கை உள்ளது. ராவணன் சிவ பக்தன் என்பதினால் இலங்கையில் உள்ள மகிமை வாய்ந்த ஐந்து சிவாலயங்களும் அவரால் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இன்றைய ஸ்ரீலங்கா நாட்டின் யாழ் பகுதியில் உள்ள சவக்கச்சேரி எனும் இடத்தில் உள்ள முன்னேஸ்வரம் ஆலயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் என்று கூறப்பட்டாலும், கர்ண பரம்பரைக் கதைகளை நோக்கும் போதும், ராமாயண காலத்துடன் இணைத்துப் பேசப்பட்டதில் இருந்தும் இந்த ஆலயம் எழுந்த காலத்தைக் கணக்கிட்டுக் கூற முடியாது என்று கூறுவதே உண்மையாக இருக்கும். பல ஆண்டுகளாக நடைபெற்று வந்திருந்த உள்நாட்டு யுத்தத்தினால் ஆலயம் சற்றே சேதம் அடைந்து இருந்தாலும், அந்த சேதங்கள் ஆலய கட்டிடங்களுக்கு ஏற்பட்டதே அன்றி அந்த ஆலயத்தின் மகத்துவத்திற்கோ அல்லது மகிமைக்கோ அல்ல. அந்த ஆலயம் மகத்தானது. சக்தி வாய்ந்த சுயம்பு லிங்கம் தோன்றிய ஆலயம் ஆகும். போர்த்துகீசியர்கள்  மற்றும் டட்ச் (பறங்கியர் எனப்பட்டவர்கள்) நாட்டவர்கள் ஸ்ரீலங்காவில் நாசப்படுத்தி இருந்த பல இந்து ஆலயங்கள்  ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புதுப்பிக்கப்பட்டன.

இந்த ஆலய மகிமையை குறித்து முதன் முதலில் நைமிசாரண்யா வனத்தில் அமர்ந்து கொண்டு இருந்த முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் பல்வேறு புராண மகிமைகளைக் கூறி வந்திருந்த ஸூதக  முனிவரே  கூறியதாக நம்புகின்றார்கள்.  ஸூதக முனிவர் கூறிய விரிவானக் கதையை நான் சுருக்கி எழுதி உள்ளேன். காரணம் ஸூதக முனிவர் ராமாயணத்தை விரிவாக எடுத்து உரைத்தார். ராமாயணத்தைப் பலரும் படித்ததுதான். ஆகவே அவர் கூறிய ராமாயணக் கதையை மீண்டும் விவரமாக எழுதாமல் சுருக்கமாக விளக்கி விட்டு அவர் கூறிய சிவாலயத்தின் மையக் கதையை மட்டும் எழுதுகிறேன். ஸூதகர் முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் நைமிசாரண்யத்தில் கூறிய முன்னேஸ்வரம் ஆலயக் கதை இது.   ஸூதகர்  கூறினார்:

”இந்த ஆலயம் ராமாயணம் மற்றும் மகாபாரதத்துடன் சம்மந்தப்பட்டது ஆகும். சீதையை ராவணன் கடத்திச் சென்றதும் ராமபிரான் அவளைத் தேடி அலைந்தார். அவருக்கு பலரும் உதவினார்கள். அதில் ஜடாயு உயிர் இழந்தார். சீதையைக் கண்டு பிடிக்க ஹனுமார் உதவினார். சுக்ரீவன் தனது படையினருடன் ராமபிரானுக்கு உதவினார். அதில் சுக்ரீவருடைய சகோதரரும் பலசாலியான வாலியும் மடிய நேர்ந்தது. அவர்கள் அனைவரின் உதவியினாலும் இலங்கை மீது படையெடுத்த ராமபிரான் ராவணனையும் அவர் கூட்டத்தினரையும் கொன்று சீதையை மீட்டு வந்தார். இப்படியாக பலரையும், முக்கியமாக சிவபக்தரும், பெரிய பண்டிதரான ராவணனைக் கொன்றதில் அவருக்கு பிரும்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

ஆகவே பிரும்மஹத்தி தோஷத்தை களைந்து  கொள்ள ராமபிரான் பல ஆலயங்களுக்கும் சென்று சிவபெருமானை துதித்து வழிபட வேண்டி இருந்தது. மேலும் யுத்தத்திற்கு செல்லும் முன்னால் யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என விரும்பிய ராமபிரான் இலங்கைக்கு வந்து முன்னேஸ்வர ஆலயம் இருந்த இடத்தில் சிவபெருமானை வணங்கித் துதித்து அவரது அருளையும் ஆசியையும் வேண்டினார். முன்னேஸ்வரம் ஆலயம் அப்போது கட்டப்பட்டு இருந்திருக்கவில்லை. வெட்டவெளியில் அந்த இடத்தில் சிறிய சிவலிங்கம் இருந்தது.  ராமபிரான் பகவான் விஷ்ணுவின் ஒரு அவதாரம், அவர் அந்த அவதாரத்தை எடுத்து பூமியிலே சில காரியங்களை செய்ய வேண்டும் என்ற விதி இருந்தது  என்பதினால் ராமபிரான் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் அவருக்கு அங்கே காட்சி தந்து  ராவணனுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு பல வகைகளிலும் சக்தி கொடுத்து அருள் புரிந்தார்.

சிவபெருமான் கொடுத்த அருளினால் மன அமைதி பெற்ற ராமபிரானும் யுத்தம் செய்து சீதையை மீட்டுக் கொண்டு ஊருக்கு திரும்பும் வழியில் இருந்த பல சிவாலயங்களுக்கும் சென்று வழிபட்டுக் கொண்டே மீண்டும் முன்னர் அவர் வணங்கிய முன்னீஸ்வர ஆலய இடத்தையும் வந்தடைந்தார். அங்கு அவர் பூஜித்து விட்டுச் சென்ற சிவலிங்கத்தைக் காணவில்லை என்றாலும் ராமபிரான் முன்னேஸ்வரம் ஆலயம் இருந்த பூமிக்கு வந்த உடனேயே பிரும்மஹத்தி தோஷத்தின் ஒரு பகுதி மறைந்து விட்டதை உணர்ந்து அதிசயித்தார்.  என்னே சிவபெருமானின் மகிமை என வியந்தார். ஆகவே எந்த இடத்தில் அவர் முன்னர் பூஜித்துவிட்டு சிவபெருமானின் அருளை பெற்றுக் கொண்டு சென்றாரோ, அதே இடத்தில் மண்ணினால் ஆன ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து சிவபெருமானை பூஜித்து வணங்கினார். அவர் முன் காட்சி தந்த சிவபெருமானும் ராமபிரானின் பிரும்மஹத்தி தோஷத்தின் ஒரு பகுதியே அங்கு விலகி உள்ளதாகவும், மீதம் உள்ள தோஷத்தைக் களைந்து கொள்ள ராமபிரான் நான்கு திசைகளிலும் சிவலிங்கங்களை ஸ்தாபித்து தன்னை வழிபட வேண்டும் என்றும், அப்போதுதான் பிரும்மஹத்தி தோஷத்தின் பாபம் முழுமையாக விலகும் என்றும் கூறினார். அதன் காரணம் என்ன என்றால் ராவணனுடன் ராமபிரான் யுத்தம் செய்தபோது ராமபிரானை நான்கு புறமும் ராவணனின் சேனைகள் சூழ்ந்து கொண்டு தாக்கியவண்ணம் இருந்தது. ஆகவே ராமபிரான் நான்கு திசைகளிலும் இருந்தவர்கள் மீது அம்பெய்து பலரையும் கொன்றார் என்பதினால் நான்குபுறங்களிலும் ஏற்பட்டு இருந்த பிரும்மஹத்தி தோஷத்தை களைந்து கொள்ள நான்கு திசைகளிலும் சிவலிங்கத்தை ஸ்தாபித்து சிவபெருமானை வணங்கி துதிக்க வேண்டி இருந்தது. அப்படி செய்யாவிடில் எந்த திசையில் அவர் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபடவில்லையோ அந்த திசையிலான தோஷம் அவரை விட்டு விலகாது என்பது விதியாக இருந்தது.

அதை ஏற்றுக் கொண்டு நான்கு திசைகளிலும் சிவலிங்கங்களை ஸ்தாபனம்  செய்தபின்  முன்னீஸ்வரத்தை வந்தடைந்த ராமபிரான் அங்கேயே மண்ணினால் ஆன ஒரு சிவலிங்கத்தை மீண்டும் ஸ்தாபித்து சிவபெருமானை பூஜித்து வணங்கினார். அவர் முன் தோன்றிய சிவபெருமானும் ராமபிரானை மீண்டும் ஆசிர்வதித்து விட்டு மறைந்தார். ராமபிரான் மண்ணினால் ஸ்தாபனம் செய்த சிவலிங்கம் இருந்த அந்த இடத்தில் பல காலத்துக்கு முன்னரே சிவபெருமான் ஒரு சிவலிங்க உருவில் எழுந்தருளி இருந்தார். அது ராமர் முன்னர் பூஜை செய்த இடத்தின் அடியில் புதைந்து கிடந்தது.  யுத்தத்திற்கு போகும் முன் அங்கிருந்த ஸ்வயம்பு சிவலிங்கத்திற்கு ராமபிரான் தன்னை அறியாமலேயே பூஜை செய்தபோது அந்த சிவலிங்கத்தில் இருந்து சிபவபெருமான் வெளிவந்து ராமருக்கு காட்சி கொடுத்ததினால் அந்த சிவலிங்கம் ஜீவன் பெற்ற லிங்கமாயிற்று. இந்த ஆலயத்தில் வடிவாம்பிகை சமேதராக முன்னேஸ்வர ஈசன் எழுந்தருளி பக்தர்களை ஆசிர்வதிக்கின்றாள்.

ரிஷி முனிவர்கள் ஆர்வத்துடன் ஸூதக முனிவர் கூறிய கதையை கேட்டவாறு அமர்ந்து இருந்தார்கள். ஸூதகர் தொடர்ந்து கூறும் முன் ஆர்வத்தினால் சில முனிவர்கள் அவரிடம் கேட்டார்கள். ” ஸ்வாமி அவள் (வடிவாம்பிகை) எப்படி இங்கு எழுந்தருளினார் என்ற கதையையும் எமக்கு விளக்கிக் கூற வேண்டும் ” சூதகர் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக சிரித்துக் கொண்டே கதையைத் தொடரத் துவங்கினார்.

”கல்ப காலத்தில் இந்த ஆலயம் உள்ள தலத்தில் செம்படவன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவன் தினமும் ஆலயத்தின் அருகில் இருந்த ஒரு பெரிய ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டு வந்து அதை விற்று ஜீவனம் செய்து வந்தான். இப்படியாக வாழ்வை ஓட்டிக் கொண்டு இருந்த செம்படவன் ஒருநாள் மீன் பிடிக்கச் சென்றபோது சற்று தொலைவில் ஆற்றின் கரையில் ஒரு சிறுவனும் சிறுமியும் விளையாடிக் கொண்டு இருந்ததைக் கண்டான். அவர்கள் உடலே பளபளத்தது. அந்த இரண்டு சிறுவர்களுமே அழகாக இருந்தார்கள். இத்தனை ஏழ்மை நிலையில் உள்ள இந்த ஊர் மக்கள் மத்தியில் இப்படி அழகான சிறுவர்களா? நமக்குத் தெரிந்த வகையில் அப்படி எந்த சிறுவர்களும் இந்த ஊரில் உள்ளதாகத் தெரியவில்லையே, அவர்கள் யாராக இருக்கும் என எண்ணியவாறு அவர்கள் யார் என்பதைக் கேட்ட அவர்கள் விளையாடிக் கொண்டு இருந்த இடத்தை நோக்கி நடந்தான். அவன் அவர்கள் அருகில் வருவதைக் கண்ட சிறுவர்களோ அவன் எதிரிலேயே மாயமாக மறைந்து விட்டார்கள். செம்படவன் குழம்பினான். தான் கண்டது கனவா, கானல் நீரைப் போன்றதா? உண்மை என்றால் அவர்கள் எப்படி மறைந்து விட்டார்கள்?! ஒரு வேளை  பேய், பிசாசு ஏதாவது இருக்குமோ?!! அவனுக்கு விடைக் கிடைக்கவில்லை. குழப்பத்துடன் வீட்டிற்குச் சென்றவன் தன் மனைவியிடமும் நடந்தவற்றைக் கூறினான்.

மறுநாள் நடந்த சம்பவத்தை மறந்து விட்டு மீண்டும் அவன் மீன் பிடிக்கச் சென்ற போது முதல் தினம் நடந்த அதே நிகழ்ச்சி தொடர்ந்தது. அவர்களின் அருகில் அவன் சென்றால் அவர்கள் மறைந்து விடுவார்கள். இப்படியாக இரண்டு மூன்று நாட்கள் அதே விளையாட்டு தொடர்ந்ததினால் இனி அவர்கள் யார் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும் என ஆவலுற்றான். அவர்கள் ஏன் தன்னைக் கண்டு ஓடி ஒளிய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்களை ஏதாவது உபாயம் செய்தே பிடிக்க வேண்டும் என எண்ணியவன் ஒரு நாள் அவர்களைப் பிடித்தே ஆகவேண்டும் என்ற முடிவுடன் ஒரு மரத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இருந்தான். இரவு நேரம் நெருங்கியது. வெகு நேரம் பொறுத்து அந்த சிறுவர்களும் அங்கு விளையாட வந்தார்கள் மரத்தின் மறைவில் பதுங்கி இருந்த செம்படவன் ஓடிப் போய் அவர்களைப் பிடித்து விட்டான். அந்த சிறுவனோ அவனைத் தள்ளி விட்டு தப்பி ஓடி ஆற்று நீரில் குதித்துவிட்டு மறைந்தும் போய் விட்டான். ஆனால் அதிசயமாக செம்படவன் கையில் சிக்கிக் கொண்ட சிறுமியோ அடுத்த நிமிடமே ஒரு சிலையாகி விட்டாள்.

அந்த சிலையை எடுத்துக் கொண்டு வீடு சென்றான். மறுநாள் அது குறித்து யாரையாவது கேட்கலாம் என எண்ணி இருந்தான். அன்று இரவில் தூங்கிக் கொண்டு இருந்தவன் கனவில் தோன்றிய பார்வதி தேவி தானே அந்தப் பெண் சிலை என்றும் தன்னை வணங்கி வழிபட்டால் நாட்டில் நிலவி வரும் குழப்பங்கள் தீரும் என்றும் கூறினாள் .

அதைக் கண்டு அதிர்ந்து போன செம்படவனும் காலையில் எழுந்ததும் ஊருக்குள் சென்று அந்த நிகழ்ச்சியை அனைவரிடமும் கூறினான். அந்த சிலையை எங்கு வைப்பது எனக் குழம்பினான். கட்டுத் தீயைப் போலப் பரவிய அந்த செய்தி மன்னனின் காதிலும் சென்று விழுந்தது. ஏற்க்கனவே பல பிரச்சனைகள் இருந்த குழப்பமான நிலையில் இது என்ன புதிய குழப்பம் என எண்ணிய மன்னன் செம்படவனை அந்த சிலையை எடுத்துக் கொண்டு தனது அரண்மனைக்கு வருமாறு ஆணையிட்டான்.

ஸூதகர் கதையைத் தொடர்ந்து கூறினார் ”அரண்மனைக்கு வந்த செம்படவன் கூறியதைக் கேட்ட மன்னனால் அதை நம்பவே முடியவில்லை. இப்படியும் இருக்குமா என வியப்பு அடைந்தான். ஆகவே செம்படவன் கூறுவது உண்மையா, பொய்யா என்பதை சோதனை செய்து பார்க்க விரும்பியவன் அந்த சிலையை அரண்மனைக்கு எடுத்து வரச் சொல்லி அதை அங்கேயே வைத்து விட்டுச் செல்லுமாறும் நான்கு நாட்கள் பொறுத்து அதை எடுத்துச் செல்லுமாறும் ஆணையிட்டார்.

பின்னர் இரண்டே நாளில் அதைப் போலவே நூறு சிலைகளை செய்யச் சொல்லி அதன் இடையே அந்த உண்மையான சிலையையும் வைத்து செம்படவனை அழைத்து அதில் அவனுக்கு கிடைத்த உண்மையான சிலை எது என்பதைக் கண்டு பிடித்து கூறுமாறு ஆணையிட்டான். அப்படி செம்படவன் உண்மையான சிலையைக் கண்டு பிடித்து விட்டால் மட்டுமே அவனை தான் நம்புவேன் என்றும், இல்லை என்றால் தெய்வீகத்தை கொச்சைப்படுத்துவதைப் போல பொய்யை கூறி வதந்தியைப் பரப்பியவனை ஆயுள் முழுவதும் சிறையில் வைத்து விடுவேன் என்றும் அறிவித்தான்.

மறுநாள் அந்த செம்படவன் அரண்மனைக்குச் சென்று எது உண்மையான சிலை என்பதைக் கண்டு பிடித்துக் காட்ட வேண்டும். இல்லை என்றால் சிறைவாசம் நிச்சயம் என்ற நிலை. பயத்துடன் தூங்கிக் கொண்டு இருந்தவன் கனவில் மீண்டும் தேவி பிரசன்னமாகி அவனை தைரியப்படுத்தினாள். அவன் அரண்மனைக்குச் சென்று சிலைகளைப் பார்க்கும்போது அந்த சிலைகளில் எந்த சிலையின் வலது கால் அசையுமோ அதுவே உண்மையான தன் சிலை என்று கூறினாள்.

மறுநாள் அரண்மனையில் சபை கூடியது. நிறைய மக்கள் அங்கு வந்து கூடி இருந்தார்கள். அந்த சிலைகளில் உண்மையான சிலை எது என்பதை எளிதில் கண்டு பிடிக்க இயலாத அளவு அனைத்து சிலைகளுமே ஒன்று போலவே இருந்தன. செம்படவனும் வந்து அந்த சிலைகளை பார்த்தான். மனதார தேவியை வணங்கினான். சிலைகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தவன் கண்களுக்கு மட்டுமே தெரியும் வகையில் ஒரு சிலையின் வலது கால் ஆடியது. ஓடிச் சென்று அதை எடுத்தவன் அதுவே தனக்குக் கிடைத்த சிலை என்று மன்னனிடம் காட்டினான். அதன் அடியில் மன்னன் ஒரு அடையாளக் குறி செய்து வைத்து இருந்ததினால் அவன் கண்டு பிடித்ததே சரியான சிலை என்பதை உணர்ந்த அனைவரும் பிரமித்தார்கள். மன்னன் மீண்டும் மீண்டும் பல முறை சிலைகளை ஒன்றாக்கி வைத்து விட்டு உண்மையான சிலையை அடையாளம் காட்டுமாறு கூறினாலும் ஒவ்வொரு முறையும் தனது வலது காலை அவன் கண்களுக்கு மட்டுமே தெரியுமாறு காட்டிய தேவியின் திருவிளையாடலினால் எத்தனை முறை மாற்றி மாற்றி வைத்தாலும் செம்படவன் அந்த உண்மையான சிலையை கண்டு பிடித்து எடுத்தான்.

அதைக் கண்டு மகிழ்ந்து போன மன்னனும் அந்த சிலையை பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைக்க முடிவு செய்து அதை அரண்மனையிலேயே வைத்துக் கொண்டு அந்த செம்படவனுக்கு நிறைய பொருள் கொடுத்து அனுப்பினான். அடுத்து ராஜ குருக்களின் ஆலோசனைப்படி நல்ல நாளும், நேரமும் பார்த்து அந்த சிலையை புனித சடங்கு செய்து பூஜித்து ராஜ உபசாரத்துடன் தற்போது இந்த ஆலயம் உள்ள இடத்தில் சென்று அங்கிருந்த லிங்கேஸ்வரருடன் சேர்த்து பிரதிஷ்டை செய்தார். இன்றும் கர்பக்கிரகத்தில் உள்ள தேவியின் சிலை செம்படவனுக்குக் கிடைத்த அதே சிலை என்கிறார்கள்.

இப்படியாக அந்த  ஆலயத்தின் ஈசனின் பெயர் முன்னைனாதப் பெருமான் எனவும் அவருடன் உள்ள தேவிக்குப் பெயர் வடிவாம்பிகா தேவி என்ற பெயரும் வந்தது. சிவபெருமான் ஏற்கனவே அதே  பூமியில் சிவலிங்க உருவில் பூமிக்கு அடியில் மறைந்து இருந்தபோது தன்னை அறியாமலேயே ராமபிரானும் சிவபெருமானுக்கு அங்கு பூஜை செய்திருந்தார் என்பதினால் இது இராமாயண காலத்துடன் சம்மந்தப்பட்டது ஆகும்.  அதை போலவே ராமாயணத்தை  எழுதிய வியாச முனிவரும் அங்குள்ள ஆலயத்தில் வந்து சிவபெருமானுக்கு பூஜை செய்து வணங்கி உள்ளார். பித்ருக்களுக்கு அங்கு நேர்த்திக் கடன்களை செய்தால் அவை நிச்சயம் நிறைவேறும். பாப விமோசனமும் செய்து கொள்ளலாம். நல வாழ்வு பெறவும், அடுத்தப் பிறவியில் நல்ல பிறவி கிடைக்கவும் அங்குள்ள ஈசனை வணங்கினால் போதும்.  நிச்சயம் அது கிடைக்கும்” என்று மாமுனிவரான ஸூதகர் கூறி முடித்ததும் அனைத்து முனிவர்களும் கலைந்து சென்றார்கள்.

ஒருகாலத்தில் ஸ்ரீலங்காவை அரசாண்ட விஜயன் என்பவர் சீரழிந்த அந்த ஆலயத்தை சீரமைத்தார். 17 ஆம் நூற்றாண்டில் ஆண்டுவந்த வைஷ்ணவ பிரிவை சார்ந்த ராஜ சின்ஹம் எனும் அரசர் ஆலய சீரமைப்பிற்கு உதவ தனது நாட்டில் இருந்து சிற்பிகளை அனுப்பி வைத்தார். தக்ஷிண கைலாயம் எனும் நூலில் இந்த ஆலயம் குறித்த மேன்மை விளக்கப்பட்டு உள்ளது என பண்டிதர்கள் கூறுகின்றார்கள். ஆலயத்தில் மூன்று பிராகாரங்கள் உள்ளன. அவை- உள் வீதி, ராஜ வீதி மற்றும் மாட வீதி எனும் பெயரில் அமைந்து உள்ளன. கொலம்போவில் (Colombo) இருந்து 82 கல் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது.

இந்துக்களை பொறுத்தவரை முன்னீஸ்வரம் ஆலயம் சிவபெருமானின் ஆலயம் என்பதாகும். ஆனால் அங்குள்ள சிங்கள புத்த மதத்தினரோ அந்த ஆலயம் காளி தேவியின் ஆலயம் என்பதாக கூறுகின்றார்கள். ஒருகாலத்தில் இலங்கையில் இருந்த பட்டினி எனும் பெண் தேவதை, காளிதேவியை சந்தித்து, மனிதர்களை உண்ணும் பழக்கத்தை விட்டு விடுமாறு வேண்டிக் கொள்ள காளி  தேவியும் மனிதர்களை உண்பதை நிறுத்திவிட்டு முன்னீஸ்வரம் ஆலயத்தில் வந்து குடியேறியதான கிராமியக் கதை ஒன்றைக் கூறுகின்றார்கள்.

இந்த ஆலயத்தை குளக்கோட்டன் எனும் மன்னனும், ராஜ சின்ஹம் எனும் மன்னனும் சீரமைத்ததாகவும் சிலர் நம்பிக்கை கொண்டு உள்ளார்கள். அவர்கள் இருவரும் தோல் சம்மந்தப்பட்ட நோயினால் அவதிப்பட்டபோது இந்த ஆலயத்துக்கு வந்து சிவபெருமானை வழிபட்ட பின் ஆலயக் குளத்தில் குளித்ததும் அவர்கள் தோல் வியாதி விலகியதினால் அவர்கள் அந்த நன்றிக்கு கடனை செலுத்த ஆலய சீரமைப்புக்கு உதவினார்கள் என்ற கிராமியக் கதையும் உள்ளது. ஆனால் எதற்குமே எழுதி வைக்கப்பட்டு உள்ள வரலாற்று செய்திகள் இல்லை, வாய் மொழி வார்த்தைகள் மூலமே அனைத்தும் கூறப்பட்டு வருகின்றது என்பதினால் ஆலய வரலாற்றைப் பற்றி எழுதப்பட்டு உள்ள சிங்கள மற்றும் தமிழ் பக்தர்களின் கருத்துக்கள் முரண்பட்டு உள்ளன.