சீவக சிந்தாமணி என்ற நூல் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகும். சீவகன் என்ற அரசன் ஒருவனது வாழ்கையை அடிப்படையாகக்  கொண்டு  3145 பாடல்களாக எழுதப்பட்டு உள்ள இந்த நூலை கி.பி. இரண்டு மற்றும் ஏழாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் இயற்றியது சோழர் குலத்தை சார்ந்த திருத்தக்கதேவர் என்ற ஒரு சமண முனிவர் ஆவார். இந்த நூல் இயற்றப்படுவதற்கு முன்னால் எழுதப்பட்டவை சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை போன்றவை ஆகும். இந்த மூன்று காப்பியங்களும் எழுதப்பட்டப் பின்னர் வளையாபதி மற்றும் குண்டலகேசி என்ற நூல்கள் இயற்றப்பட்டு உள்ளன. இப்படியாக ஐந்து முக்கியமான காவியங்கள் எழுந்துள்ளன.

அவர் வாழ்ந்திருந்த காலத்தில் மதுரை  புலவர்கள் மற்றும் பண்டிதர்களைக் கொண்ட இடமாக இருந்தது.  தமிழ் ஆழ்வாளர்களும்  அதிகம் உண்டு.  அந்த நகரில் அடிக்கடி கற்றறிந்த பண்டிதர்களிடையே போட்டிகளும், விவாதங்களும்  நடைபெறும். அதனால் மதுரை பண்டிதர்களிடையே பெரும் சிறப்பைப் பெற்று இருந்தது. அப்படிப்பட்ட மதுரை நகருக்கு ஒருமுறை திருத்தக்க தேவர் சென்று இருந்தபோது தமிழ் சங்கத்திலிருந்த பண்டிதர்கள் அவரை ஏளனம் செய்தார்கள். ‘சமண முனிவர்களால் சமயத்தைப் பற்றி மட்டுமே பாடல்களை இயற்ற முடியும் என்றும், அவர்களால் அகப்பொருளுடன்  கூடிய இன்பத்தைத் தரும் கருத்துக்  கொண்ட பாடல்களையோ அல்லது காவியங்களையோ இயற்ற முடியாது ‘ என்று கேலி செய்ய அதனால் மன வருத்தம் அடைந்த திருத்தக்க தேவர் ஊர் திரும்பி வந்ததும் அதைக் குறித்து தன்னுடைய ஆசானிடம் தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தினர். அதன் பின் அவருடைய ஆசானின் கட்டளைப்படி முதலில் ‘நரி விருத்தம்’ என்னும் அற்புதமான ஒரு சிறு நூலை இயற்றினார். திருத்தக்கதேவரின் கற்பனைத் திறனைக் கண்டு வியந்த அவருடைய ஆசானின் ஆணைப்படி பின்னர் திருத்தக்க தேவர்  இந்த காவியத்தை இயற்றியதாக கூறுகிறார்கள்.

அந்த காவியத்தை இயற்றிய  திருத்தக்கதேவர் மன்னன் பாடியனின் அரண்மனையில் தமது காவியத்தை அரங்கேற்றினார்.  அவர் இயற்றிய காவியத்தின் நடை, அழகு, அமைப்பு, சுவைகள் ஆகியவற்றைக் கண்டு சில புலவர்கள் வியந்து பாராட்டினாலும் பொறாமைப் பிடித்த சில பண்டிதர்கள் காமச்சுவை கொண்ட பாடல்களைப் கொண்ட அந்த நூலை இயற்றி உள்ள திருத்தக்கதேவருக்கு  காமக் கலையில் முன் அனுபவம் இருந்திருக்க வேண்டும் என்று தங்களது சந்தேகத்தை வெளிப்படுத்த திருத்தக்கதேவரோ தான் அப்பழுக்கற்றவர் என்றும், எந்த ஒரு பெண்ணையும் தான் ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்று சத்தியமும் செய்து அதை நிரூபிக்க பழுக்கக் காய்ச்சிய இரும்பை தனது கையில் ஏந்திக் கொண்டு காட்டினார்.

இந்த நூலின் கதாநாயகன் ஒரு நாட்டை ஆண்டு வந்த சீவகன் என்பவர் ஆவார். அவர் எட்டு பெண்களை மணந்து கொண்டு இருந்தாலும் அவரைக் காமுகனாக காட்டாமல் நல்ல ஒழுக்கமான வாழ்வைக் கொண்டவராகவே காட்டி உள்ளார் நூலின் ஆசிரியர். முதலில் உலக வாழ்க்கையில் இருந்த மன்னன் தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை எதிர்க் கொண்டப்பின் இறுதியில் துறவறத்தை மேற்கொள்கிறார்.