ரகுவம்சம்-8
– சாந்திப்பிரியா – 

விஸ்வாமித்திர முனிவர் நடத்திய யாகமும்   சீதையின் ஸ்வயம்வரமும்

நால்வரும் வளர்ந்து பெரியவர்களானவுடன் ஒருநாள் ராஜகுரு விஸ்வாமித்திரர் தசரதரின் அரண்மனைக்கு வந்து தசரதனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். தான் செய்யும் ஒருயாகம் அசுரர்களால் இடையூறு செய்யப்பட்டு தடுக்கப்பட்டுக் கொண்டே இருப்பதினால் தன்னால் யாகத்தை சரிவர செய்ய இயலவில்லை என்றும், அதனால் யாகம் நடந்து முடியும்வரை யாகத்துக்கு காவலாக இருக்க ராமனையும் லஷ்மணரையும் தன்னுடன் அனுப்புமாறு கேட்க தசரதர் தயங்கினார். தனக்கே வெகு காலத்துக்குப் பிறகே புத்திர பாக்கியம் கிடைத்திருக்கையில் யாகத்துக்கு காவலாக இருக்கும் நேரத்தில் அந்த அசுரர்களின் மூலம் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என பயந்து போன தசரதன் விஸ்வாமித்திரர் வேண்டுகோளை ஏற்கத் தயங்கினார். ஆனாலும் சற்றே சுதாகரித்துக் கொண்டு ராம லஷ்மணர்களுக்கு பதில் தனது படைகளை யாகத்துக்கு  காவலாக இருக்க அனுப்புவதாக கூற,  அதை ஏற்க விஸ்வாமித்திரர் மறுத்து விட்டதுடன், தான் கேட்டபடி ராம லஷ்மணரை தனது யாகத்துக்கு காவலாக இருக்க அனுப்ப முடியவில்லை என்றால்  தனக்கு வேறு எந்தப் படையும் தேவை இல்லை என கோபமாகக் கூறி விட்டு கிளம்பிச் செல்லத் துவங்கியதும் அங்கிருந்த வசிஷ்ட முனிவர் அவர்களை சாந்தப்படுத்தி  விஸ்வாமித்திரர் கேட்டபடியே அவர் யாகத்துக்கு காவலாக இருக்க ராமனையும் லஷ்மணரையும் அனுப்புமாறும், அது நன்மைக்கே என்றும் தசரதனுக்கு எடுத்துரைக்க, வேறு வழி இன்றி தசரதனும்  தனது இரண்டு புத்திரர்களான ராமனையும் லஷ்மணரையும்  விஸ்வாமித்திரர் நடத்தும் யாகத்துக்கு காவலாக இருக்க அவருடன் அனுப்பி வைக்க சம்மதித்தார்.

ராம லஷ்மணர்கள் விஸ்வாமித்திரருடன் கிளம்பிச் சென்று கொண்டு இருந்தபோது வழியில் தாடகை எனும் அரக்கி இருந்த வனப்பகுதி வந்தது. அவள் கொடூரமான குணத்தையும் முகத்தையும் கொண்ட அரக்கியாவாள். அவள் பலத்தையும், பயங்கரத்தையும் விஸ்வாமித்திரர் ராம லஷ்மணர்களுக்கு  எடுத்துரைத்தார். அவர்கள் விஸ்வாமித்திரருடன் வந்து கொண்டிருந்ததைப் பார்த்து விட்ட அரக்கியோ அவர்களைக் கொல்ல ஆவேசமாக அவர்களை நோக்கி வந்தபோது  பெண் என்பதினால் அவளுடன் சண்டைப் போட முதலில் ராமன் சற்றே  தயங்க, விஸ்வாமித்திரர் பல கதைகளை எடுத்துக் கூறி அவளைக் கொல்லாவிடில் தமது யாகம் நடைபெறாது என்ற காரணத்தையும்  கூற, ராமனும் சற்றும் தயங்காமல் அவள் மீது பாணம்  ஒன்றை விட, அந்த அம்பும் அவளது மார்பை துளைத்துக் கொண்டு வெளியேறிச் செல்ல அவள் மலையைப் போல அப்படியே சாய்ந்து வீழ்ந்தாள். அவள் கொல்லப்பட்டதைப் பார்த்த மாரீசனும், சுவாகு எனும் அரக்கர்களும்  பெரும் சேனையுடன் வந்து ராம-லஷ்மணருடன் யுத்தம் செய்யலானார்கள்.  அவர்களது சேனையையும் மாரீசன் மற்றும் சுவாகு இருவரையும் ராம லஷ்மணர்கள் பல பாணங்களை வீசி கொன்று தீர்த்தார்கள். அந்த அரக்கர்கள் அனைவரும் அழிந்தப் பின் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்ற விஸ்வாமித்திரர் தாம் பாதியில் நிறுத்தி வைத்திருந்த தமது யாகத்தைத் மீண்டும் துவக்கி  முடித்துக் கொண்டார். யாகம் நடந்து முடியும்வரை யாகசாலையின் அனைத்துப் பக்கங்களிலும் நடந்து கொண்டே இருந்தவாறு கண் அயராமல் யாகத்துக்கு காவலாக நின்றார்கள் ராம லஷ்மண சகோதரர்கள்.

அந்த யாகம் நல்ல முறையில் நடந்து முடிந்ததும் மனம் மகிழ்ந்து போன விஸ்வாமித்திர முனிவர் அவர்களுக்கு தமது பரிபூரண ஆசிகளை வழங்கினார்.  அந்த நேரத்தில் அவருக்கு மிதிலை மன்னன் ஜனகரிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது.  அந்த அழைப்பில் அவர் தனது நாட்டில் தனதி எனும் யாகத்தை நடத்த உள்ளதாகவும் அதில் பங்கேற்று அங்குள்ள சிவதனுஷ் எனும் வில்லை தூக்கி அம்பை எய்பவர்களுக்கு தனது மகளை விவாஹம் செய்து கொடுப்பதாக முடிவு செய்து உள்ளதினால், அந்த நிகழ்ச்சி நல்ல முறையில் நடைந்து முடிந்திட அவர் தன்  நாட்டுக்கு வந்து தம்மை ஆசிர்வதிக்க வேண்டும் எனவும்  அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக் கொண்ட விஸ்வாமித்திரரும் தம்முடன்  ராம லஷ்மணர்களையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

அவர்களும் செல்லும்போது வழியிலே கௌதம முனிவரின் சாபத்தினால் கல்லாகிக் கிடந்த அவரது மனைவியான அகலிகை மீது ராமனின் கால்கள் எதேற்சையாகப் பட்டு விட கல்லாகிக் கிடந்த அவள் உயிர் பெற்று எழுந்தார். ராமரின் கால் பட்டதும்  அவள் சாபம் நீங்கி உயிர் பிழைத்து எழுந்த காரணத்துக்கான சாபம் குறித்து ராமனுக்கு விஸ்வாமித்திரர் எடுத்துரைத்தார்.  விஸ்வாமித்திரர்  ‘கல்லாகிக் கிடந்த  அகலிகை கௌதம முனிவரின் தர்ம பத்தினியாக இருந்தவள். ஆனால் அவள் தேவலோக அதிபதியான இந்திரனின் அழகில் ஒரு நாள் சற்றே மயங்கி விட்டதால் அவளைக் கல்லாகப் போவது என அந்த முனிவர் சபித்து விட்டாலும்  எப்போது  ராமனின் கால் சிலையாக கிடக்கும் அவள் மீது  படுமோ அப்போது அவள் உயிர் பெற்று எழுவாள் என்று தெய்வ நியதி உள்ளது’ என்றுக் கூறினார். அந்த நிலையிலும் ராமர் தெய்வ அவதாரமே என்பதை அவரும் உணரவில்லை, ராமனுக்கும் தெரியவில்லை. உயிர் பிழைத்து எழுந்த அகலிகையை ராம லஷ்மணர்கள் வணங்கி  எழுந்தப் பின், அவளை அழைத்துக் கொண்டு அவளுடன் துணையாகச் சென்று  கௌதம  முனிவரிடம் அவளை பத்திரமாக ஒப்படைத்தப் பின் அங்கிருந்து மீண்டும் கிளம்பி விஸ்வாமித்திரருடன் மிதிலைக்கு செல்லத் துவங்கினார்கள்.

விஸ்வாமித்திரர் மிதிலைக்கு வந்து கொண்டிருந்த செய்தியைக் கேட்ட ஜனகர் பெரும் மகிழ்ச்சி அடைந்து  அவர் வந்து கொண்டிருந்த வழியை நோக்கிச் சென்று வழியிலேயே அவரை சந்தித்து, அவரை விழுந்து வணங்கி அவருக்கு அர்க்கியமும் தந்து அவர்களை தனது அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் அவருடன் இருந்த இரண்டு இளைஞர்களான ராம லஷ்மணர்களைக்  குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். ராமனின் வீரம், தீரம் மற்றும் பல்வேறு மேன்மையான குணங்களைக் கேட்டறிந்த ஜனகரும் ராமனையும் அந்த யாக முடிவில் நடைபெற இருந்த வில் போட்டியில் பங்கேற்குமாறு அழைப்பு  விடுத்தார்.

ராமன் எதுவும் கூறும் முன்னரே அவர் சார்பில் விஸ்வாமித்திரர் அந்த அழைப்பை ராமர் சார்ப்பில் தானே ஏற்றதாகக் கூறி விட்டு மறுநாள் அந்த போட்டியில் பங்கேற்க ராம லஷ்மணர்களை அரச சபைக்கு அழைத்துச் சென்றார். போட்டி துவங்கும் முன்னர் மன்னன் அனைவருக்கும்  கூறினார்  ‘இங்கு கூடி உள்ள அனைவருக்கும் வந்தனம். இந்த வில்லும் அம்பும் சிவபெருமான் கொடுத்ததாகும்.  ஏர்  உழும்போது பூமியில் இருந்து எனது மகளான சீதை கிடைத்ததால் இந்த வில்லையும் அம்பையும் யார் தூக்குவார்களோ அவர்களுக்கே சீதையை மணமுடித்துக் கொடுப்பதாக  முடிவு செய்திருந்தேன். அதன்படி இந்த வில்லையும், அம்பையும் யார் தூக்குவார்களோ அவர்களில் ஒருவரே சீதைக்கு கணவராக தேர்வு செய்யப்படுவார்’. இப்படியாகக் கூறி விட்டு, அங்கு கூடி இருந்த அனைவருக்கும் சபை நடுவே வைக்கப்பட்டு இருந்த வில்லையும் அம்பையும் காட்டினார்.
தொடரும்………..9