ரகுவம்சம்-2

– சாந்திப்பிரியா – 

அதைக் கேட்ட திலீபனும் தான் தெரியாமல் செய்து விட்ட தவறை எண்ணி வருந்தினார். ‘குருவே, அந்த சாபம் விலக நான் இப்போது என்ன செய்ய வேண்டும். எனக்கு நீங்கள்தான் வழிகாட்டி உதவ வேண்டும்’ என்று கேட்க வசிஷ்ட முனிவர் கூறினார் ‘ திலீபா, அந்த சாபம் விலக வேண்டும் எனில் நீ செய்ய வேண்டியது அந்த காமதேனு பசுவின் கோபத்தைக் குறைப்பதுதான். ஆனால் இப்போது அந்த காமதேனுப் பசுவும் தேவலோகத்தில் இல்லை. அது வருண பகவான் செய்யும் ஒரு யாகத்தில் கலந்து கொள்ள பாதாளத்துக்கு சென்றுள்ளது. இப்போது அதன் மகளான,  சின்னக் கன்றுக் குட்டியாக உள்ள நந்தி எனும்  பசு தாய் காவல் இன்றி அங்கும் இங்கும் அலைந்தவாறு தனியாக தேவலோகத்தில் தவித்தபடி உள்ளது.  ஆகவே நீ தேவலோகத்துக்கு கிளம்பிச் சென்று காமதேனுப் பசு திரும்பி வரும்வரை அதன் கன்றான நந்தினிக்கு  சேவை செய்து கொண்டு அதற்கு பாதுகாப்பாக இருந்து வரவேண்டும். அப்போது காமதேனு பசு வந்து அந்தக் காட்சியை கண்டு மனம் மகிழ்ந்து உனக்கு புத்திர பாக்கியம் கிடைக்க அருள் புரியும். ஆகவே உடனடியாக நீ தேவலோகத்துக்கு சென்று நந்தினிக்கு சேவை செய்ய வேண்டும். இதில் இன்னொரு நிபந்தனையும் உள்ளது. நீ அங்கிருக்கும்வரை தினம் தினம் நந்தினியை வனத்துக்கு அழைத்துச் சென்று அங்கு புல்லை மேய விட வேண்டும். அதற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். காமதேனு திரும்பி வந்ததும் அதை உன் மனைவி வரவேற்று வழிபட வேண்டும். மற்றபடி நீ பரிபூரண சுத்தத்துடன் இருக்க வேண்டும். நல்ல உணவை அருந்தாமல் வனங்களில் கிடைக்கும் காய், கனிவகைகளை உண்டபடி தர்பை பாயில் படுத்துக் கிடக்க வேண்டும். இப்படி எல்லாம் செய்தால் உனக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்’ என்றார்.

அதைக் கேட்ட திலீபனும் அவரை வணங்கி துதித்து விட்டு, அவரது ஆசிகளையும் பெற்றுக் கொண்டு சற்றும் தயங்காமல் மறுநாள் விடியற்காலை எழுந்து குளித்தப் பின் தனது மனைவியுடன் தேவலோகத்துக்கு கிளம்பிச் சென்றார். தேவலோகத்தை அடைந்த திலீபன் அங்கு நந்தினி இருந்த இடத்தை அடைந்து அதற்கு பணிவிடை செய்யலானார். வனத்துக்கு அழைத்துச் சென்று புல் மேயவிட்டு மாலை திரும்ப அழைத்து வந்தார். வனத்தில் புல் மேய்ந்தப் பின்னர் மாலையில் அந்த கன்று வந்ததும் அதை அன்புடன் வரவேற்ற திலீபனின் மனைவி சுடாக்ஷிணா அதற்கு தண்ணீர்க் கொடுத்து, தடவிக் கொடுத்து அதை வணங்கி துதித்தாள். இப்படியாக சில நாட்கள் சென்றது. தெய்வப் பசு காமதேனுவின் கன்றான நந்தினிக்கு தெய்வீக சக்தியினால் அவர்கள் அங்கு வந்து தமக்கு சேவை செய்வதின் காரணமும் தெரிந்திருந்தது. ஆகவே அது திலீபனின் உண்மையான பக்தியை சோதனை செய்து பார்க்க எண்ணியது.

ஒருநாள் நந்தினியை வனத்துக்கு   ஓட்டிக் கொண்டு சென்ற திலீபன் அதை புல் மேய விட்டப்பின்  சற்றே திரும்பி இயற்கையின் அழகை ரசிக்கலானார். அப்போது நந்தினி ஒரு குகைக்குள் நுழைந்தது.  அது குகைக்குள் நுழைவதை திலீபனும் சற்று தொலைவில் இருந்து பார்த்தார். அப்போது திடீர் என எங்கிருந்தோ பாய்ந்து வந்த சிங்கம் ஒன்று குகைக்குள் புகுந்து நந்தினியை தனது வாயில் கௌவ நந்தினி அப்படியே சுருண்டு விழுந்தது.  ஒருகணம் அதைக் கண்டு திகைத்துப் போன திலீபன்  அடுத்த வினாடியே அந்த சிங்கத்தைக் கொல்வதற்கு  தனது வில்லையும் அம்பையும் எடுக்க கைகளை  உயர்த்தினார். ஆனால் இரண்டு கைகளும் அசைக்க முடியாமல் அந்தரத்தில் அப்படியே நின்றன. எத்தனை முயன்றும்   வில்லையோ அல்லது அம்பையோ அவரால்  எடுக்க முடியவில்லை. என்ன செய்வதென திகைத்து நின்ற அரசனை நோக்கி அந்த சிங்கம் பேசத் துவங்கியது.  சிங்கம் ஒரு மிருகம் எனும்போது மனித பாஷையில் எப்படி பேசுகிறது என அந்த மன்னன் இன்னும் திகைத்து நின்றான்.

சிங்கம் கூறியது  ‘மன்னா, நான் உண்மையில் சிங்கம் இல்லை. நான் சிவபெருமானுக்கு சேவை செய்து வரும் கும்போதரன் எனும் பூதத் தலைவனாகும். சிவபெருமானின் சேவகர்களில் ஒருவரான நிகும்பாவின் நண்பன் நான். இதோ என் அருகில் உள்ள தேவதாரு எனும் இந்த மரத்தைப் பார். இது சிவபெருமானின் பத்தினியான உமா தேவி ஆசையுடன் வளர்த்து வந்த மரமாகும்.  ஆனால் ஒருநாள் இந்த மரத்தருகில்  காட்டு யானைகள் வந்து இதன் பட்டைகள் மீது தமது உடலை தேய்த்து தேய்த்து சொறிந்து கொள்ள இந்த மரத்தின்  மரப்பட்டைகள் அங்காங்கே வெட்டுப்பட்டு காயமுற்றன. அந்த வேதனையினால் இந்த மரம் முனகிக் கொண்டு  கிடக்க, அந்த சப்தத்தைக் கேட்ட உமா தேவி அங்கு ஓடோடி வந்து யானைகளை துரத்திய பின்னர் மரத்தைத் தடவிக் கொடுத்து ஆறுதல் கூறினாள்.  தன் பிள்ளையைப்  போல வளர்த்து வந்திருந்த மரத்தின் மரப்பட்டைகள் பெயர்ந்து கிடந்ததைக் கண்டு,   மதம் பிடித்த யானைகள் அந்த மரத்தை படுகாயப்படுத்தி விட்டனவே  என வருந்திய  பார்வதிதேவி அழுது கொண்டே சிவபெருமானிடம் ஓடினாள்.

சிவபெருமானிடம் சென்ற உமா தேவி அவரிடம் நடந்த அந்த சம்பவத்தைக் கூறி தான் ஆசையுடன் வளர்த்து  வரும் அந்த மரத்தைப் பாதுகாக்க தக்க ஏற்பாடுகளை செய்யுமாறு வேண்டிக் கொண்டாள். ஆகவே சிவபெருமானும் என்னை ஒரு சிங்கத்தின் உருவில் இந்த வனத்தில்  இருந்தவாறு இந்த மரத்தைக் காப்பாற்றுமாறு ஆணையிட்டதினால்  நான் இங்கு சிங்கமாக வந்திருந்து இரவு பகலாக இந்த மரத்துக்குக் காவலாக இருக்கிறேன். ஆனால் என் நிலையைப் பாருங்கள்.  இந்த வனத்தில் தொலைதூரம்வரை எந்த பிராணியுமே வருவதில்லை.  எப்போதாவது அத்தி பூத்தாற்போல வரும் பிராணிகளே எனக்கு இரையாகக் கிடைக்கிறது.  மற்றபடி எனக்கு உணவு சரிவரக் கிடைப்பது இல்லை. எத்தனை நாட்கள்தான் இங்கிருந்தபடியே புல்லையும் காயையும், கனியையும் உண்டு இருந்தபடி வாழ்வது? அதனால்தான் என் பலமும் குறைந்து கொண்டே போகிறது. ஆகவேதான் இன்று எனக்கு எதேற்சையாக   கிடைத்துள்ள இந்த பிராணியை உண்ணலாம் என்று பார்த்தால் என்னைக் கொல்ல வில்லையும் அம்பையும் நீ எடுத்தால் அதை நான் அனுமதிக்க முடியுமா?  ஆகவே மீண்டும் உன் கைகள் சாதாரண நிலையை அடைய வேண்டும் என்றால், இங்கிருந்துக் கிளம்பிச் சென்றுவிடு. நான் இந்த பிராணியை உண்டு விட்டு ஒய்வு எடுக்க வேண்டும்.’ என்று கூற, திலீபனும் அதனிடம் வேண்டலானார்.

‘சிங்கமே, நான் சொல்வதைக் கேள்.  இப்போது வேண்டுமானால் நான் உன்னை ஒன்றும் செய்ய முடியாதவனாக உனக்கு தோன்றலாம்.  ஆனால் என் குருநாதர் வணங்கித் துதிக்கும் தெய்வம் இந்த உலகையே உருவாக்கி அழிக்கும் வல்லமையும் படைத்த சக்தி கொண்டது. அவரை வணங்கும்  என் குருநாதருக்கு எந்த இடைஞ்சலையும் நான் ஏற்படுத்தக் கூடாது என்பதினால் உன்னிடம் வேண்டுகிறேன், சிங்கமே, என்னுடைய குருநாதரின் ஆஸ்ரமத்துக்கு பால் தரும்  இந்த பசுவை விட்டு விடு.  அதனால் உனக்கும் பங்கம் ஏற்படாது.  என் குருநாதருக்கும் இடைஞ்சல் இராது.  அந்தப் பசுவை விட்டு விட்டு அதற்கு பதிலாக என்னை உணவாக ஏற்றுக் கொள். பசு இங்கிருந்து போகட்டும்’ என்று கூறினார்.

அதைக் கேட்ட சிங்கம்   சிரித்தது.  மன்னனிடம் கூறிற்று ‘மன்னா, நீ ஏன் அறிவை இழந்து பேசுகிறாய் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த பசு இறந்தால்  உன் குரு ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் இழப்பு இல்லை.  அவருக்கு அந்த பசுவிற்கு பதிலாக நீ ஆயிரம் பசுக்களை தானமாகக் கொடுத்து அவர் துயரை தீர்க்க முடியும்.  ஆனால் ஒருகணம் சிந்தித்துப் பார். நீ இறந்தால் உன்னால் பாதுகாக்கப்படும் உன் நாட்டின் அனைத்து மக்களும் அல்லவா சங்கடத்துக்கு ஆளாவார்கள். அவர்களுக்கு அதன் பின் பதவிக்கு வருபவர் பாதுகாப்பு  கொடுப்பார் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கும்?  நன்கு யோசனை செய்து பார்.  ஆகவே இந்த பசுவை உண்ணுவதற்கு  என்னை  அனுமதித்து விட்டு  உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீ  திரும்பிச் சென்று விடு’.

அதைக் கேட்ட திலீபன் அதனிடம் கூறினார் ‘சிங்கமே , நீ என்னை தவறாக நினைத்து விட்டாய்.  இந்த உலகில்  ஒரு முதுமொழி உண்டு.  எவன் ஒருவன் தன் மீது நம்பிக்கை வைத்துள்ளவருக்கு  துரோகம் செய்வானோ, அவன் மரியாதை இழந்து  நம்பிக்கை துரோகி ஆகி விடுவான்.  உன்னை நம்பி இந்த மரத்தைப் பாதுகாக்க  உன்னை இங்கு அனுப்பி உள்ள சிவபெருமானை  ஏமாற்றி விட்டு மரத்தைப்  பாதுகாக்காமல் எங்காவது அலைந்து திரிந்து கொண்டு மீண்டும் அதன் மரப்பட்டைகளை விலங்குகள் நாசப்படுத்துவதை  தடுக்காமல் இருப்பாயா?  அது போலத்தான்  என்னை நம்பி இந்தப் பசுவை ஒப்படைத்து உள்ள என் குருநாதரும் இந்த பசுவிற்கு பதிலாக நான் எத்தனை ஆயிரம் பசுக்களை தந்தாலும் அதை நிராகரித்து விடுவார். அவருக்கே உரித்தான பசுவிற்கு பதிலாக அவர் ஏன் வேறு பசுக்களை  ஏற்க சம்மதிப்பார்?  மற்ற பசுக்கள் இந்த பசுவிற்கு ஈடாகிவிடுமா?   இந்தப் பசு இல்லாமல் அவர் முன் நான் சென்று எப்படி நிற்பேன் ? ஆகவே என் நண்பன் சிங்கமே என்னைப் பற்றிக் நீ  கவலைப்படாதே. உனக்கு பசிக்கிறதென்றால் என்னை உணவாக்கிக் கொண்டு இந்தப் பசுவை விட்டு விடு.  சிவபெருமானின் சேவகனே உன்னை என்னுடைய நல்ல நண்பனாகக் கருதி உன்னிடம் இதை நான் வேண்டுகிறேன். அந்தப் பசுவை விட்டு விடு’.

அதைக் கேட்ட சிங்கமும் ‘சரி, அப்படி என்றால் உன் ஆயுதங்கள் அனைத்தையும் பூமியிலே போட்டுவிட்டு, நிராயுதபாணியாக நீ என் அருகில் வந்து நில், இந்தப் பசுவை விட்டு விடுகிறேன்’ என்று கூற   திலீபனின் கைகள்  சுய இயக்கத்தைப் பெற்றது. திலீபனும் சற்றும் தயங்காமல் தனது ஆயுதங்கள் அனைத்தையும்  எடுத்து பூமியிலே போட்டு விட்டு சிங்கத்தின் முன்னால் சென்று ‘என்னை உணவாக்கிக் கொள்’  என்று கூறிவிட்டு அதன் காலடியில் நமஸ்கரிப்பது போல படுத்தார்.

அடுத்தகணம் தேவலோகத்தில் இருந்து அவர் மீது பூமாரி பொழிந்தது. ‘திலீபா எழுந்திரு’ என்றக் குரலைக் கேட்ட திலீபன் திகைத்துப் போய் எழுந்திருக்க அவன் முன் சிங்கம் காணப்படவில்லை. மாறாக அங்கே  நின்று கொண்டு இருந்த நந்தினி கூறியது ‘மன்னா, உன்னுடைய குருபக்தியை சோதிக்கவே  இந்த நாடகம் அனைத்தையும் நான் நடத்தினேன். உன்னுடைய குரு பக்தியும், என்னிடம் நீ காட்டிய சிரத்தையும் எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது.  உனக்கு என்ன வேண்டும் என என்னிடம் கேள். என்னை சாதாரண பசு என்று யோசிக்காதே. காமதேனுப் பசுவின் சந்ததி நான். உனக்கு என்ன வரம் வேண்டும், அதைக்  கேள் ‘ என்றதும் மன்னன் கூறினான் ‘ அம்மா, எனக்கு என் குலம் தழைக்க, எனக்கு வாரிசாக உருவாக எனக்கு  ஒரு மகன் வேண்டும்’.

அதைக் கேட்ட நந்தினி கூறியது ‘நீ கேட்ட வரத்தை உனக்கு தருகிறேன் மன்னா, உனக்கு நல்லதொரு மகன் பிறப்பான். கவலைப்படாதே.  அதை  அடைய என் மடியில் இருந்து சுரக்கும் பாலை ஒரு தொன்னையில் கொண்டு சென்று அதை நீயும் உன் மனைவியும் குடிக்க வேண்டும்’ என்று கூறியதும் நந்தினியின் மடியில் இருந்த  பால் சுரக்கும் சுரப்பியில் இருந்து பால் கொட்டத் துவங்கியது. நந்தினி  கூறியது போல திலீபனும் சற்றும் தயங்காமல் இலையால் அவசரவசரமாக ஒரு தொன்னை செய்து அதில் அந்தப் பாலைப் பிடித்துக் கொண்டான். அவன் பாலை தொன்னையில் பிடித்துக் கொண்டதும் பால் சுரப்பது நின்றது.  திலீபன் நந்தினியை வணங்கித் துதித்தார்.  அதன் பின் திலீபனும் நந்தினியும் வசிஷ்ட முனிவரின் ஆஸ்ரமத்துக்கு திரும்பினார்கள்.  தனது மனைவியை அழைத்துக் கொண்டு முனிவரை வணங்கிய திலீபன்  நடந்தது அனைத்தையும் அவரிடம் கூறி விட்டு அந்தப் பாலை அருந்த அவரிடம் அனுமதி கேட்டார்.  அவரும் திலீபனது குரு பக்தியை மெச்சி அவர்களை ஆசிர்வதித்தப் பின் அவர்கள் அரண்மனைக்கும் திரும்பிச் செல்ல அனுமதி தந்தார்.  அரண்மனைக்கு திரும்பிய திலீபனும் அவரது மனைவி  சுடாக்ஷிணாவும் மகிழ்ச்சியோடு அந்தப் பாலைக் குடித்தார்கள்.

தொடரும்……3