ஒருமுறை கைலாயத்திலே சுக்ல சதுர்தியில் சிவபெருமானை துதி பாடிக் கொண்டிருந்த பெரிய விழா நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அனைத்து தேவர்களும் முனிவர்களும் கூடி இருந்தார்கள். சிவபெருமான் என்றால் சிவபெருமானும் முருகனும் இல்லாமலா விழா நடக்கும். ஒவ்வொருவரும் தமக்கே தெரிந்தவகையில் ஆடிப்பாடி சிவபெருமானை மகிழ்வித்த வண்ணம் இருக்க வினாயகருக்கும் தானும் நடனமாட வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஆகவே அவரும் எழுந்து சபை நடுவே சென்று நடனம் ஆடத் துவங்கினார்.

என்ன இருந்தாலும் வினாயகர் குட்டையானவர், தொப்பை உள்ளவர், சிறிய கால்களும், சிறிய கைகளையும் கொண்டவர் என்பதினால் அவர் ஆடிய ஆட்டம் விநோதமாக இருந்தது. ஆகவே அவர் தொந்தியும் தொப்பையுமாக குலுங்கிக் குலுங்கி ஆடத் துவங்கியதும் அனைவருக்கும் சிரிப்பு வந்தது. அனைவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள் என்றாலும் சந்திரபகவானால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை, சிரித்து விட்டார்.  மற்றவர்களும் அதை கண்டு சிரித்தார்கள். அதைக் கண்ட வினாயகர் அவமானம் அடைந்து நாட்டியத்தை நிறுத்திக் கொண்டாலும் வினாயகருக்கு கோபம் வந்துவிட அவர் சந்திரனை சபித்தார். சந்திரன் சிரித்ததால்தானே அனைவரும் தன்னை  பார்த்து கேலியாக சிரித்தார்கள் என்பதினால் இனி பூலோகத்தில் சந்திரனை யாரும் வழிபட மாட்டார்கள் என்று சாபமிட்டு விட சந்திரன் வருத்தம் அடைந்தார்.

அடுத்த வினாடி சந்திரன் தனது ஒளிமயமான முகத்தின் களையை இழந்தார், மற்றவர்களும் வருத்தமுற்றார்கள். ஆகவே அனைவரும் வினாயகரிடம் சென்று வருத்தம் தெரிவித்து விட்டு அவர் கோபத்தை குறைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டு சந்திரனை மன்னித்து அவருக்குக் கொடுத்த சாபத்தை விலக்குமாறும்  வேண்டினார்கள். ஆனால் ஒருமுறை கொடுத்த சாபத்தை தெய்வங்களினால்  திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதினால் வினாயகரும் அவர்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, அதே சமயம் அப்படி சபையில் ஒருவரை அவமானப்படுத்துவது தவறு என்பதை உணர்த்தும் வகையில் இனி ஒவ்வொரு வளர்பிறையின் சுக்ல சதுர்தியிலும் சந்திரனது உருவைக் காண்பவர்கள் அபவாதத்தை (பழிச் சொல்) அடைவார்கள். ஆனால் வருடத்தில் ஒரே ஒரு நாள் அதாவது ஆவணி மாதம் சுக்ல சதுர்தியில் விரதம் இருந்து வினாயகரை பூஜித்து வழிபட்டால்   சுக்ல சதுர்தி அபவாதங்கள் அனைத்தும் நீங்கும் எனவும் சாபத்தை மாற்றி அமைத்தார்.

அதனால்தான் வளர்பிறையில் சதுர்தியில் வானத்தில் சந்திரனை யாரும் பார்க்க மாட்டார்கள். அப்படி தப்பித் தவறி பார்த்து விட்டாலும் அந்த பாவத்தை விலக்கிக் கொள்ள ஆவணி மாதம் சுக்ல சதுர்தியில் விரதம் இருந்து வினாயகரை பூஜித்து அந்த பாவத்தைப் போக்கிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.