சாந்திப்பிரியா 

12

 

 

196) பல காலமாக போதிக்கப்பட்டு  வந்திருந்த தர்ம சாஸ்திர நெறி முறைகளை ஆராய்ந்து அவற்றை தொகுத்து அளித்திருந்ததில் காலம் காலமாக முன்னோடியாக காட்டப்படுவது கிரந்த மொழியில் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படும்  ‘வைத்தியநாத  தீக்ஷிதீயம் ஆசௌச  காண்டம்’ என்பதாகும். 

  • அதைத் தவிர  17 ஆம் நூற்றாண்டில்தமிழாசுர முனிவர் என்பவர் எழுதி உள்ள ‘ஆசௌச தீபிகை’
  • 1882 ஆம் ஆண்டில் யாழ்பாணத்தை சேர்ந்த வண்ணை மா. வைத்தியலிங்க பிள்ளை வெளியிட்டு உள்ள ‘ஆசௌச தீபிகை‘,
  • எழுநூறு வருடங்களுக்கு முன்னர் சிதம்பரத்தில் வாழ்ந்த அகோர சிவாச்சாரியார் என்பவரினால் ஆகம நூல்களில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டு எழுதப்பட்ட ‘அகோர சிவ பத்ததி’ என்னும் சைவ சமயக் கிரியைகளுக்கான கை நூல்
  • மஞ்சன்குடி வெங்கடராம சாஸ்திரிகள் எழுதிய ‘ஸம்க்ஷேப தர்ம சாஸ்திரம்’
  • நித்யகாம்ய மஹாயக்ஞ சமிதியின் ‘ஆசௌசச் சுருக்கம்’
  • 1933 ஆம் ஆண்டு திருவையாறு ஸ்ரீநிவாஸ பிரஸ் வெளியீடான ‘அபிநவாசௌச ஸங்கரஹம்’
  • ஸ்ரீ ஜகத்குரு டிரஸ்ட் வெளியீடான ‘இறப்பு தீட்டு’
  • 1937ல் தஞ்சை மாவட்டம் பாபனாசம் தாலுகா கீழவிடயல் கிராமம் ஸ்ரீ ஆர். முத்துசாமி அய்யர் எழுதி வெளியிட்டுள்ள ‘வர்ணாஸ்ரம தர்ம சாஸ்திரம்’
  • கொக்குவில் வைதீககிரியாரத்னம் மயிலணி பிரும்மஸ்ரீ சோமாஸ்கந்த குருக்கள் எழுதி உள்ள ‘சிரார்த்த நியமங்கள்’ மற்றும் 
  • சென்னை திருவல்லிக்கேணி காரிமாறன் கலைகாப்பகம் வெளியிட்டு உள்ள ‘சூதகமும் ஆசௌசமும்’ எனும் புத்தகம் போன்றவற்றில் மரணத் தீட்டு மற்றும் அதன் சடங்குகள் பற்றிய பல அரிய செய்திகள் உள்ளன.

இந்த பகுதியில் கூறப்பட்டு உள்ள ஜனன தீட்டு, பிறப்பு தீட்டு காலம் மற்றும் அந்த திட்டுக்களை யார் கடைபிடிக்க வேண்டும் போன்ற விவரங்களை மேல் கூறிய நூல்களில் காணப்பட்ட செய்திகளின் அடிப்படையில் தொகுத்து எழுதி உள்ளேன். பண்டை காலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள புத்தகங்களில் காணப்படும் பல செய்திகள் எளிதில் பாமர மக்களுக்கு விளங்காத பண்டைக்கால பிராமணீய தமிழ் மொழியில் எழுதப்பட்டு உள்ளதினால், பல வார்த்தைகளுக்கான விளக்கத்தை அகராதிகளில் தேடித் பார்த்து என்னால் முடிந்தவரை அவை அனைத்தையும் விளக்கி உள்ளேன் என்பதினால் இவற்றில் குறை அல்லது தவறு இருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே அப்படிப்பட்ட பிழைகளை சுட்டிக் காட்டினால் அவற்றை மாற்றி அமைக்க உதவும்.

197) தீட்டு யாருக்கு எத்தனை நாட்கள் ?

தீட்டு என்பது என்ன, அவற்றின் பொது விதி முறைகள் என்பவை அனைத்தையும் ஏற்கனவே முந்தைய பாகங்களில் விளக்கி உள்ளேன். குழந்தை பிறந்தால் அதனால் ஏற்படுவது ஜனன அல்லது பிறப்பு தீட்டு எனப்படும். மரணத்தினால் ஏற்படும் தீட்டு இறப்பு தீட்டு என்றும் கூறப்படும்.

198) ஜனன தீட்டு அல்லது பிறப்பு தீட்டு காலம்:-

பங்காளிகளில் (ஸபிண்டர்கள்’அல்லது ‘க்ஞாதி’அல்லது ‘தாயாதிகள்’என்பார்கள்) ஒருவர் வீட்டில் பிள்ளை பிறந்தால் பங்காளிகள் அனைவருக்கும் விழுப்பு தீட்டு என்பது உண்டு. அவர்கள் வீட்டில் சமைத்து சாப்பிடலாம். ஆனால் பூஜைகளும் புனஸ்காரங்களை செய்ய முடியாது. அந்த பத்து நாள் தீட்டு இடைவெளியில் சிரார்த்தம் வந்து விட்டால் தீட்டுக் காலமான பத்து நாட்கள் முடிந்தது பதினோராவது நாள்தான் சிரார்த்தம் செய்யலாம்.

198.1) தீட்டு போகும் நாளில் எட்டரை மணிக்கு மேல்தான் ஸ்நானம் செய்ய வேண்டும். அதற்கு முன் ஸ்நானம் செய்தால்   தீட்டு விலகாது.

199) கீழ்கண்டவர்களுக்கு பத்து நாட்கள் பிரசவ தீட்டு உள்ளது .

  • சிசுவின் தந்தை, தாய் 
  • சிசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் அவர்களது மனைவிகள்
  • சிசுவின் தந்தையின் அனைத்து மனைவிகளுக்கும் *(*சிசுவை பெற்றவளைத் தவிறஇளையாள் மற்றும் மூத்தாள் எனப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை வைத்திருந்தால்) பிறந்த மகன்கள் (ஒன்றுவிட்ட சகோதரர்கள்) மற்றும் அவர்களது மனைவிகள்
  • சிசுவின் தந்தையின் சகோதரர்கள் (சிசுவின் பெரியப்பா மற்றும் சித்தப்பா)
  • சிசுவின் தந்தையின் தந்தை (பிதாமஹர்) அவர்  மனைவி (பிதாமஹீ)
  • தந்தையின் மாற்றாம் தாய்க்கு பிறந்த ஆண்கள் (தந்தையின்‘பின்னோதர சகோதரர்கள்’) மற்றும் அவர்களது மனைவிகள்
  • குழந்தை பெற்றவளின் பெற்றோருக்கு 3 நாள் தீட்டு
  • யாருடைய வீட்டிலோ அல்லது அவர்களது செலவிலோ பிரஸவம் நடந்தால் அப்படி செலவு செய்தவர்களுக்கு ஒரு நாள் தீட்டுண்டு.
  • பெண் குழந்தையைப் பெற்றவளுக்கு 40 நாட்கள் தீட்டு
  • ஆண் குழந்தையைப் பெற்றவளுக்கு 30 நாட்கள் தீட்டு
  • வீட்டில் உள்ள கன்னி பெண்களுக்கும், பிரும்மச்சாரிகளுக்கும், உபநயனம் ஆகாத பிள்ளைகளுக்கும் தீட்டு கிடையாது

200) மரண தீட்டு  காலம்:-

200.1) பத்து   நாள் தீட்டு (ஒரு குடும்பத்தினருக்கு)

ஒரு குடும்பத்தினருக்கு கீழ் கண்டவர்களின் மரணத்தினால் பத்து நாட்கள் தீட்டு உண்டு.

  • தந்தை, தாய்
  • உடன் பிறந்த சகோதரர்கள்(ஸமானோதர சகோதரர்கள் என்பார்கள்), அவர்களது மனைவிகள்
  • உடன் பிறந்த சகோதரர்களின் ஏழு வயதுக்கு மேல் ஆன ஆண் மகன்கள்
  • உடன் பிறந்த திருமணம் ஆகாத சகோதரிகள்
  • தந்தைக்கு எத்தனை மனைவிகள் (‘ஸபத்னீமாதா’க்களின்) இருந்தாலும் அவர்களுடைய மகன்கள் (அவர்களை ‘பின்னோதர சகோதரர்கள்’ அதாவது தனது தந்தை மூலம் மாற்றாம் தாய்க்கு பிறந்த ஆண்கள் என்பார்கள்)
  • தந்தையின் தாய் மற்றும் தந்தை (தந்தை வழி பாட்டி மற்றும் தாத்தா)
  • தந்தையின் சகோதரர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் (பெரியப்பா,பெரியம்மா, சித்தப்பா மற்றும் சித்தி)
  • தந்தை வழி பெரியப்பா மற்றும் சித்தப்பாவின் மகன்களும் (பின்னோத்ரன் அல்லது ஒன்றுவிட்ட சகோதரர்கள்  என்பார்கள்) அவர்களது மனைவிகளும்
  • தந்தை வழி பெரியப்பா மற்றும் சித்தப்பாவின் மகன்களின் மகன்கள் (பேரன்கள் அதாவது பெளத்ரன் என்பார்கள்) மற்றும் அவர்களது மனைவிகள்
  • தந்தை வழி பெரியப்பா மற்றும் சித்தப்பாவின் திருமணம் ஆகாத மகள்கள்(ஒன்று விட்ட சகோதரிகள்)
  • குடும்பத்து ஆண்களுக்கு பிறந்து ஏழு வயதுக்கு மேல்  ஆன ஆண் குழந்தை
  • குடும்பத்து ஆண்களுக்கு பிறந்து ஏழு வயதுக்கு கீழ் உள்ள பூணூல் போட்ட ஆண் குழந்தை (ஏழு வயதுக்கு கீழ் உள்ள  பூணூல் போடாத  ஆண் குழந்தை இறந்தால் தீட்டு கிடையாது. ஸ்னானம் மட்டுமே உண்டு)
  • 7 தலை முறை தந்தை வழி பங்காளிகள்  (ஒரு ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள், அந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக வரும் சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள *ஆண்கள் அனைவரும் ‘ஸபிண்டர்கள்’அல்லது ‘க்ஞாதி’அல்லது ‘தாயாதிகள்’எனப்படுவர்).

பத்து நாள் தீட்டு செய்தியை பத்து நாட்களுக்குப் பிறகு அடுத்த மூன்று மாதங்களுக்குள் கேட்டால் அந்த மரணத்திற்கு மூன்று நாள் தீட்டு மட்டுமே உண்டு. அதே மரண செய்தியை ஆறு மாதங்களுக்கு பிறகு கேட்டால் ஒரு நாள் தீட்டு மட்டுமே உண்டு. அதே செய்தியை ஒரு வருடத்துக்கு பிறகு கேட்டால் தீட்டே கிடையாது. ஸ்நான தீட்டு மட்டுமே உண்டு.

தாயார் மற்றும் தந்தையின் தீட்டை ஒரு வருடத்துக்குப் பிறகும் எப்போது கேட்டாலும் மூத்த மகனுக்கு மட்டும் பத்து நாள் தீட்டு உண்டு. அதை போலவேதான் கணவர்  தீட்டை ஒரு வருடத்துக்குப் பிறகும் எப்போது கேட்டாலும்  மனைவிக்கு பத்து நாள் தீட்டு உண்டு.

200.2) பத்து   நாள் தீட்டு (ஸ்வீகாரம் போன ஆண் மகனுக்கு)

  • ஒரு குடும்பத்து ஆண் மகன் இன்னொருவருக்கு ஸ்வீகாரமாகி விட்டால் ஸ்வீகாரம் போன ஆண் மகனுக்கும் அவனது மனைவிக்கும் ஸ்வீகரித்த தந்தை மற்றும் ஸ்வீகரித்த தாயாரின் மரணம். (குறிப்பு:- ஒருமுறை இன்னொருவருக்கு ஸ்வீகாரம் போய் விட்டால் சாஸ்திரங்களின்படி ஸ்வீகாரம் எடுத்தவர்களே அவர்களுடைய தாயார் மற்றும் தந்தை ஆவார்கள்)
  • 7 தலை முறை ஸ்வீகரித்த  தந்தை வழி பங்காளிகள் (ஒரு ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள், அந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக வரும் சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள*ஆண்கள் அனைவரும் ‘ஸபிண்டர்கள்’  அல்லது ‘தாயாதிகள்’ அல்லது ‘க்ஞாதி’அல்லது ‘பங்காளிகள்’ எனப்படுர்).

200.3) பத்து   நாள் தீட்டு (குழந்தை மரணம்)

ஒரு குடும்பத்து ஆண்களுக்கு பிறந்து பத்து நாட்களே ஆன ஆண் குழந்தை அல்லது மணமாகாத பெண் குழந்தை என எந்த குழந்தை இறந்தாலும் கீழ்கண்டவர்களுக்கு மட்டும் பத்து நாள் தீட்டு.

  • இறந்த குழந்தையின் தந்தை, தாய், மற்றும் மணமான சகோதரர்கள் மற்றும் பின்னோதர சகோதரர்கள் (அதாவது தனது தந்தை மூலம் மாற்றாம் தாய்க்கு பிறந்த ஆண்கள் என்பார்கள்)

200.4)  மூன்று நாள் தீட்டு (குடும்பத்து ஆண்கள் மற்றும் திருமணம் ஆகாத பெண்களுக்கு)

ஒரு குடும்ப ஆண்கள் மற்றும் திருமணம் ஆகாத பெண்களுக்கு கீழ் கண்டவர்களின் மரணத்தினால் மூன்று நாட்கள் தீட்டு உண்டு.

  • தாயின் தந்தை (தாத்தா or மாதாமஹர் என்பார்கள்)
  • தாயின் தாய் (பாட்டி or மாதாமஹீஎன்பார்கள் )
  • தாயார் வழி மாமா, மாமி (தாயாரின் சகோதரர்களை மாதுலன் என்பார்கள், அவர்களின் மனைவிகளை  ‘மாதுலானி’ என்பார்கள்)
  • தந்தையின் சகோதரிகள் (அத்தை)
  • மாமனார், மாமியார்
  • தாயின் சகோதரிகள் (சித்தி, பெரியம்மா மற்றும் அவர்களின் கணவர்கள்)
  • விவாகமான சகோதரிகள்.
  • சகோதரியின் பூணூல் போட்ட மகன் (மருமகன்)
  • மகளின் உபநயனம் ஆன பேரன் (அவனை  ‘ தௌஹித்ரன் ‘ என்பார்கள்)
  • திருமணம் ஆன மகள்கள்
  • சகோதரர்களை அந்த குடும்பத்தில் இருந்து இன்னொரு குடும்பத்திற்கு ஸ்வீகாரம் போன ஆண் மகன்
  • பங்காளிகளின் (‘ஸபிண்டர்கள்’அல்லது ‘க்ஞாதி’அல்லது ‘தாயாதிகள்’என்பார்கள்)  திருமணம் ஆகாத பெண்கள்.
  • பங்காளிகளின் பூணூல் போட்டாலும் போடாவிடிலும் ஏழு வயதான பிள்ளைகள்
  • ஏழு வயதுக்குள், உபநயனம் ஆகாத  மகன் மரணம்.  -பெற்றெடுத்த தாய் மற்றும் தந்தைக்கு மட்டும் தீட்டு
  • பல் முளைக்காத சிசு மரணம். -பெற்றெடுத்த தாய் மற்றும் தந்தைக்கு மட்டும் 3 நாட்கள் தீட்டு

மூன்று நாள் தீட்டு செய்தியை மூன்று  நாட்களுக்குப் பிறகு அடுத்த பத்து நாட்களுக்குள் கேட்டால் ஒரு நாள் தீட்டு மட்டுமே உண்டு.  அதே செய்தியை பத்து நாட்களுக்குப் பிறகு கேட்டால் தீட்டே கிடையாது. ஸ்நான தீட்டு மட்டுமே உண்டு.

200.5) மூன்று நாள் பிறந்த வீட்டு தீட்டு (ஸ்வீகாரம் போன ஆண் மற்றும் பெண்)

  • ஒரு குடும்பத்து ஆண் மகன் இன்னொருவருக்கு  ஸ்வீகாரமாகியிருந்தாலும், ஸ்வீகாரம் போன ஆண் மகனை பெற்றெடுத்த தாயார் (ஜனநீ என்பார்கள்), தகப்பனார் (ஜனக பிதா என்பார்கள்) மரணத்தில் ஸ்வீகாரம் போன அந்த ஆண் மகனுக்கு மூன்று நாள் தீட்டு உண்டு.
  • ஒரு குடும்பத்து பெண் இன்னொருவருக்கு ஸ்வீகாரமாகியிருந்தாலும், ஸ்வீகாரம் போன பெண்ணை பெற்றெடுத்த தாயார் (ஜனநீ என்பார்கள்) மரணத்தில் ஸ்வீகாரம் போன அந்த பெண்ணிற்கு மூன்று நாள் தீட்டு உண்டு.
  • வேறு கோத்திரத்தில் வேறு யாருக்காவது தத்புத்திரியாக ஸ்வீகாரமாக கொடுக்கப்பட்ட பெண் ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டு விட்ட வீட்டிற்கு சென்றாலும், சில காரணங்களினால் பிறந்த வீட்டிலேயே தங்கி இருந்தாலும் அவளுக்கு திருமணம் ஆகும்வரை மட்டுமே தன்னை பெற்று எடுத்திருந்த தாயார் (ஜனநீ) மற்றும் தந்தை (ஜனக பிதா) மற்றும் சகோதர சகோதரிகளின் மரணத்தில் மூன்று நாட்கள் தீட்டு அவளுக்கு ஸ்வீகாரம் தரப்பட்ட வீட்டில் இருந்து திருமணம் செய்து தரப்படும்வரைதான் உண்டு.
  • ஸ்வீகாரம் தரப்பட்ட வீட்டில் இருந்து திருமணம் ஆகிச் சென்று விட்டால் அவளுக்கு பிறந்த வீட்டின் மரணங்களில் செய்தி கேட்டதும் பந்து எனப்படும் உறவினர் ஸ்நானம் மட்டுமே உண்டு. வேறு எந்த தீட்டும் கிடையாது. ஆனால் ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டுள்ளவர்களின் குடும்பத் தீட்டுக்கள் அனைத்தும் உண்டு.

200.6) மூன்று நாள் பிறந்த வீட்டு தீட்டு (திருமணம் ஆகி சென்று விட்ட பெண்களுக்கு) 

மணமாகி விட்ட பெண் புகுந்த வீட்டுக்குச் சென்றதும் அவர்கள் கோத்திரத்தை சார்ந்தவள் ஆகி விடுவதினால்  அவர்களுக்கு பிறந்த வீட்டின் ஒரு சில தீட்டுக்கள் மட்டுமே உண்டு. திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு சென்று விட்ட பெண்களுக்கு  பிறந்த வீட்டில் கீழ் கண்டவர்கள் மரணத்தினால் மூன்று நாள் தீட்டு உள்ளது.

  • உடன் பிறந்த சகோதரன்(ஸமானோதர சகோதரர்கள் என்பார்கள்)
  • உடன் பிறந்த சகோதரனின்(ஸமானோதர சகோதரர்கள் என்பார்கள்) பூணூல் போட்ட மகன் (மருமகன்)
  • தனது தந்தையின் இளையாள் மற்றும் மூத்தாள் எனப்படும் பிற மனைவிகள் (ஸபத்னீ மாதா என்பார்கள்)

புகுந்த வீட்டுக்கு சென்று விட்ட திருமணம் ஆன பெண்ணுக்கு மேல் கூறப்பட்டு உள்ள பிறந்த வீட்டு மூன்று தீட்டுகளைத் தவிர, புகுந்த வீட்டின் ஒன்று முதல் பத்து நாட்களுக்கான  அனைத்து தீட்டுகளும் உண்டு.

200.7) பக்ஷிணீ  தீட்டு (ஒன்றரை  நாள்) :-

பக்ஷிணீ என்பது 90 நாழிகைகள் கொண்ட காலம். அதாவது 36 மணி நேர காலம் ஆகும். நாழிகை என்பது பண்டைய கால சாஸ்திர அளவாகும். ஆனால் தற்காலத்தில் அவை நிமிடங்களாக கூறப்படுகின்றது. பண்டைய கால அளவின்படி பகல் பொழுது என்பது முப்பது நாழிகை மற்றும் இரவு என்பது முப்பது நாழிகை ஆகும். ஆகவே பகலும் இரவும் சேர்ந்து அறுபது நாழிகைகள், அதாவது 24 மணி நேரம் ஆகின்றது.

பக்ஷிணீ தீட்டு காலம் என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம் ஆகும். பக்ஷிணீ தீட்டிற்கு சாஸ்திர விதி நேரத்தை கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை. இரவு அல்லது பகல் என்ற கணக்கையே வைத்து வந்தார்கள். ஆகவே பகலிலோ இரவிலோ எப்போது மரண செய்தி கிடைத்தாலும், பக்ஷிணீ தீட்டு உள்ளவர்களுக்கு அந்த தீட்டு காலம் 36 மணி நேரம் மட்டுமே ஆகும். ஆனால் சாஸ்திரங்கள்படி இரவில் தீட்டு போகாது என்பது நியமம் என்பதினால், பக்ஷிணீ தீட்டு உள்ளவர்களுக்கு காலையில் மரண தீட்டு கிடைத்தால் ஒரு இரவு அதிகம் தீட்டு காக்க வேண்டி உள்ளது. கீழுள்ள படம் இரு வகையிலான பக்ஷிணீ தீட்டு காலத்தை விளக்கும்.

பக்ஷிணி  தீட்டை  36  மணி நேரத்துக்குப் பிறகு பத்து நாட்களுக்குள் கேட்டால் ஒரு  பக்ஷிணி காலமே தீட்டு உண்டு. அதாவது காலையில் கேட்டால் ஒரு பகல் தீட்டு , இரவில் கேட்டல் ஒரு இரவு தீட்டு. இரண்டுமே மறுநாள் காலை குளித்தால் விலகிவிடும்.  ஆனால் பத்து நாட்களுக்குப் பிறகு கேட்டால் ஸ்நான தீட்டு மட்டுமே உண்டு.

200.8) ஒன்றரை  நாள் பக்ஷிணீ  தீட்டு (குடும்பத்து ஆண்கள் )

  • (a) அத்தையின் பிள்ளை அல்லது பெண்
  • (b) மாமனின் பிள்ளை அல்லது பெண்
  • (c) தாயின் சகோதரியின் (சித்தி மற்றும் பெரியம்மாவின்) பெண்கள் மற்றும் பிள்ளைகள்
  • (d) தன் உடன் பிறந்த சகோதரனின்(ஸமானோதர சகோதரர்கள் என்பார்கள்) மணமான பெண்
  • (e) தன் உடன்பிறந்த சகோதரியின் பெண் (மருமாள்)
  • (f) தன் பிள்ளையின் மகள்  (பௌத்ரீ- பேத்தி என்பார்கள்)
  • (g) பெண் வயிற்றுப் பெண்  (தௌஹித்ரி-பேத்தி என்பார்கள்)
  • (h) பெண்ணின் உபனயனமாகாத மகன் (தௌஹித்ரன்-பேரன் என்பார்கள்)
  • (i) தன் சகோதரியின் உபனயனமாகாத மகன் (மருமான்).

200.9) ஒன்றரை  நாள் பக்ஷிணீ  தீட்டு (பெண்கள்):-

  • தந்தை வழி பெரியப்பா மற்றும் பெரியம்மா
  • தந்தை வழி சித்தப்பா மற்றும் சித்தி
  • தாய் வழி சித்தப்பா மற்றும் சித்தி
  • தாய் வழி பெரியப்பா மற்றும் பெரியம்மா
  • மாமன் (தாயின் சகோதரர்)
  • மாமி (தாயின் சகோதரரின் மனைவி)
  • அத்தை ( தந்தையின் சகோதரி)
  • அத்தையின் மகன்களும், மகள்களும்
  • மாமனின் மகன்களும், மகள்களும்
  • தாய் வழி சித்தி மகன்களும், மகள்களும்
  • தாய் வழி பெரியம்மா மகன்களும், மகள்களும்
  • தந்தை வழி சித்தி மகன்களும், மகள்களும்
  • தந்தை வழி பெரியம்மாவின் மகன்களும், மகள்களும்
  • தந்தையின் தந்தை (பிதாமகன்)
  • தந்தையின் தாய் (பிதாமஹீ)
  • தாயின் தந்தை (மாதாமஹன்)
  • தாயின் தாயார் (மாதாமஹீ)
  • தன்னுடன் பிறந்த சகோதரிகள் மற்றும் அவர்களின் கணவர்கள் 
  • சகோதரியின் பெண்கள்
  • சகோதரனின் மகன்கள் (மருமான்)

புகுந்த வீட்டுக்கு சென்று விட்ட திருமணம் ஆன பெண்ணுக்கு 200.6 பத்தியில் கூறப்பட்டு உள்ள பிறந்த வீட்டு மூன்று தீட்டுகளைத் தவிர, புகுந்த வீட்டின் ஒன்று முதல் பத்து நாட்களுக்கான தீட்டுக்கள் மட்டுமே உண்டு.

200.10) ஒரு  நாள் தீட்டு (ஆண்கள்):-

  • தனது மனைவியின் சகோதரர்கள் (மைத்துனர்கள் என்பார்கள்)
  • மனைவி இறந்து விட்டால் மாமனார் மற்றும் மாமியார்
  • பங்காளிகளின் (க்ஞாதி, ஸபிண்டர்கள் மற்றும் தாயாதி என்றும் கூறுவார்கள்) இரண்டு வயதுக்கு மேல் ஆறு வயதுக்குள் ஆன திருமணம் ஆகாத மகன்கள்.
  • ஸபத்னீ மாதாக்களின் சகோதரர்கள் (தந்தைக்கு எத்தனை மனைவிகள் இருந்தாலும் அந்த இளைய, மூத்தாள், தாயார்களுக்கு ஸபத்னீ மாதாக்கள் என்று பெயர்)
  • ஸபத்னீ மாதாக்களின்  சகோதரரின் மகன்கள்
  • ஸபத்னீ மாதாக்களின்  சகோதரரின்  மகள்கள்
  • ஸபத்னீ மாதாக்களின்  சகோதரிகள்
  • ஸபத்னீ மாதாக்களின்  சகோதரியின்  மகன்கள்
  • ஸபத்னீ மாதாக்களின்  சகோதரியின்  மகள்கள்
  • ஸபத்னீ மாதாக்களின் மகள்கள் (தனக்கு ஒன்று விட்ட சகோதரி)
  • ஸபத்னீ மாதா வழி ஒன்றுவிட்ட சகோதரியின் மகன்கள் மற்றும் மகள்கள்
  • ஸபத்னீ மாதாக்களின் மகன்கள் (தனக்கு ஒன்று விட்ட சகோதரன்)
  • ஸபத்னீ மாதாக்களின் தாய் மற்றும் தந்தை

200.11) ஒரு நாள் தீட்டு (ஸ்வீகாரம் போன ஆண் மகனுக்கு)

  • ஒரு குடும்பத்து ஆண் மகன் இன்னொருவருக்கு ஸ்வீகாரமாகி விட்டாலும் தன் உடன் பிறந்த சகோதரனின் (பூர்வ கோத்திர சகோதரன்) மரணத்துக்கு ஒரு நாள் தீட்டு உண்டு 

200.12)ஒரு  நாள் தீட்டு (பெண்களுக்கு) :-

மணமாகி விட்ட பெண் புகுந்த வீட்டுக்குச் சென்றதும் அவர்கள் கோத்திரத்தை சார்ந்தவள் ஆகி விடுவதினால்   பிறந்த வீட்டின் ஒரு சில தீட்டுக்கள் மட்டுமே உண்டு. திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு சென்று விட்ட பெண்களுக்கு  பிறந்த வீட்டில் கீழ் கண்டவர்கள் மரணத்தினால்  ஒரு  நாள் தீட்டு உள்ளது.

  • தந்தை வழி பெரியப்பா மற்றும் சித்தப்பா (பித்ருவ்யன் என்பார்கள்)
    தந்தை வழி அத்தை (தந்தையின் சகோதரியை அத்தை அதாவது பித்ருபகிநீ என்பார்கள்)
  • தந்தை வழி பெரியப்பா மற்றும் சித்தப்பா மகன்கள் மற்றும் மகள்கள்
  • தந்தை வழி அத்தை மகன்கள் மற்றும் மகள்கள்
  • ஸபத்னீ மாதாக்களின் மகன்கள் (அவர்களை ‘பின்னோதர சகோதரர்கள்’ அதாவது தனது தந்தை மூலம் மாற்றாம் தாய்க்கு பிறந்த ஆண்கள் என்பார்கள்)
  • ஸபத்னீ மாதாக்களின் மகள்கள் (அவர்களை ‘பின்னோதர சகோதரிகள்’ அதாவது தனது தந்தை மூலம் மாற்றாம் தாய்க்கு பிறந்த பெண்கள் என்பார்கள்)
  • ஸபத்னீ மாதாவின் சகோதரர்கள்
  • ஸபத்னீ மாதாவின் சகோதரிகள்
  • ஸபத்னீ மாதாவின் மகன்களின் மகன்கள் மற்றும் மகள்கள்
  • ஸபத்னீ மாதாவின் மகள்களின் மகன்கள் மற்றும் மகள்கள்
  • ஸபத்னீ மாதாவின் சகோதரிகளின் மகன்கள் மற்றும் மகள்கள்
  • ஸபத்னீ மாதாவின் சகோதரர்களின் மகன்கள் மற்றும் மகள்கள்
  • ஸபத்னீ மாதாக்களின் தாய் மற்றும் தந்தை

200.13) ஸ்நானத் தீட்டு

  • சகோதரியின் கணவர்கள் மரணம் அடைந்தால் அந்த சகோதரியின் சகோதரர்களுக்கு ஸ்நானத் தீட்டு
  • அதே போல சகோதரியின் சகோதரிகள் மரணம் அடைந்தாலும் அந்த சகோதரியின் சகோதரர்களுக்கு ஸ்நானத் தீட்டு
  • ஒருவர் வீட்டு மாப்பிள்ளை இறந்தால் மாமனார் மற்றும் மாமியாருக்கு ஸ்நானத் தீட்டு
  • அத்தையின் கணவர் இறந்தால் (அத்திம்பேர்) மருமகன்களுக்கு (அத்தையின் சகோதரர்களது மகன்கள்) ஸ்நானத் தீட்டு
  • மாமாக்களின் (தாயாரின் சகோதரர்கள்) மகன்கள் இறந்தால் மருமகன்களுக்கு ஸ்நானத் தீட்டு
(கட்டுரை முடிந்தது)