பெங்களூர்  மத்திய
பகுதியில்  காவல் தெய்வங்கள்
மற்றும் கிராம தேவதை 
ஆலயங்கள்
 
சாந்திப்பிரியா

தெற்கு பெங்களூரில் உள்ள சில முக்கியமான பகுதிகளே பிலகஹல்லி, ஹுலிமாவு, அரிக்கரே, பொம்மனஹல்லி மற்றும் பேகூர் போன்ற பகுதிகள் ஆகும். இவை அனைத்துமே சுமார் ஐந்து கிலோ மீட்டர் பரப்பளவில் ஒன்றுடன் ஒன்று இணைந்து உள்ளன. முன் ஒரு காலத்தில் இவை அனைத்துமே கிராமமாக இருந்துள்ளன. அதற்கு பல காலத்துக்கும் முன்னால் இவை அனைத்துமே பெரிய வனப் பிரதேசமாகவே இருந்துள்ளது என்கிறார்கள். பின்னர் காடுகள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு கிராமங்கள் ஆயின. தற்போது கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குள் இந்தப் கிராமப் பகுதிகள் பிரபலமாகி நகரத்துடன் இணைந்துள்ளன.

இந்தப் பகுதிகள் கிராமமாக இருந்தபோது அந்த கிராமத்து மக்கள் குடும்பம் குடும்பங்களாக வழிபட்டு வந்துள்ள பல கிராம தேவதை மற்றும் காவல் தெய்வங்களின் வழிபாட்டுத் தலங்கள் அங்குமிங்குமாக இருந்துள்ளன. இப்படியாக சுமார் இருபது முதல் முப்பதுக்கும் மேற்பட்ட கிராம தேவதை மற்றும் காவல் தெய்வங்களின் வழிபாட்டுத் தலங்கள் இன்றும் அழியாமல் காப்பாற்றப்பட்டு வந்துள்ளது மட்டும் அல்லாமல், அவற்றில் சில சிறு ஆலயங்களாகவும் உருவெடுத்து உள்ளன. அந்த கிராம ஆலயங்களில் வழிபட்டு வந்துள்ளவர்கள் வேறு சில இடங்களுக்கு சென்று வாழ்ந்து கொண்டிருந்தாலும் இன்றும் அவர்கள் முன்னர் வழிபட்டு வந்திருந்த அந்த கிராம தேவதை ஆலயங்களுக்கு சென்று வழிபடுகிறார்கள். இதுவே பக்தி மார்கத்தின் அடையாளம். இந்தப் பகுதிகளில் காணப்படும் கிராம தேவதை மற்றும் காவல் தெய்வங்களில் முக்கியமான சில :

1) மாரியம்மனின் பல்வேறு அவதார அம்மன்கள்
2) முனீஸ்வரர்
3) வீரபத்திரர்
4) ராகு மற்றும் கேது
5) நாகம்மா எனப்படும் பாம்புப் புற்றுக்கள்

இங்குள்ள பகுதிகளில் காணப்படும் அம்மனை சார்ந்த கிராம தேவதை ஆலயங்கள் பெரும்பாலும் மாரியம்மனை சார்ந்த எல்லம்மா, முனியம்மா, லகுவம்மா, கெம்பம்மா, சௌடேஸ்வரி, நாகம்மா மற்றும் நாடம்மா என்ற பெயர்களில் உள்ளன. அம்மன் அவதாரத்தை சார்ந்த அந்த கிராம தேவதை மற்றும் காவல் தெய்வங்கள் அனைவரது தலையிலும் நாகங்கள் படமெடுத்து குடை பிடித்து நிற்கும் காட்சி உள்ளது .

அது போல ஆண் கிராம தெய்வங்களில் பெரும்பாலானவை முனீஸ்வரர் மற்றும் வீரபத்திரராக உள்ளதும் நாக உருவுடன் கூடிய ராகு மற்றும் கேதுவும் காணப்படுகின்றன. முனீஸ்வரர் வழிபாடு உள்ள வீடுகளில் எந்தவிதமாக ஏவல் மற்றும் பில்லி சூனியங்களின் பாதிப்பு இருக்காது என்பது நம்பிக்கை. அதனாலோ என்னவோ முனீஸ்வரர் வழிபாடு இந்தப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

இந்த ஐந்து பகுதிகளிலும் உள்ள கிராம தேவதை மற்றும் காவல் தெய்வங்களின் வழிபாட்டு தலங்களில் பாறையில் நாக உடலுடனான ராகு மற்றும் கேதுவின் உருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. ராகு மற்றும் கேதுவின் சிலை இல்லாத தலமே இல்லை என்பதைக் காணும்போது வியப்பாக இருந்தது. அது மட்டும் அல்லாமல் அங்காங்கே பல அரச மரங்களின் அடியில் ராகு மற்றும் கேதுவின் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளதும் ஒரு காலத்தில் ராகு மற்றும் கேதுவின் வழிபாடு இந்த கிராமங்களில் மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது. சாதாரணமாக அரச மரத்தின் அடியில் வினாயகர் வழிபாட்டுத் தலங்கள் அதிகம் இருக்கும் என்பார்கள். ஆனால் இங்கோ ராகு மற்றும் கேதுவின் வழிபாட்டுத் தலமே பெருமளவில் அரச மரங்களின் அடியில் காணப்படுகிறது. அது மட்டும் இல்லை, அந்த ராகு மற்றும் கேதுவின் வழிபாட்டுத் தலங்களில் பாம்புப் புற்றும் வழிபடப்பட்டு வருகிறது. ராகுவையும் கேதுவையும் வணங்கும்போது அந்த புற்றுக்கும் பாலூற்றி, மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு அந்த புற்றையும் சேர்த்தே பூஜிக்கிறார்கள்.

அதைக் குறித்து ஒரு பண்டிதரிடம் கேட்டபோது அவர் இவ்வாறாகக் கூறினார் ”ஒரு காலத்தில் பிலகஹல்லி முதல் அரேகேரே, ஹுலிமாவு, பொம்மனஹல்லி போன்ற அனைத்து இடங்களும் அடர்ந்த காட்டுப் பகுதிகளாக இருந்ததினால் வனத்தில் நாகங்கள் மிகவும் அதிகம் இருந்தன. அவை பலவும் புற்றில் வசித்து வந்தன. அப்படி புற்றுக்களில் வசித்த நாகங்கள் வெறும் பாம்புகள் இல்லை. அவற்றில் பெரும்பாலானவை நாக தேவதைகள். தமக்கு கிடைத்த சாபங்களுக்கு விமோசனம் பெறுவதற்கு பூலோகத்துக்கு வந்து அடர்ந்த வனப்பிரதேசங்களில் தங்கி இருந்த அம்மன் ரூபிணி தெய்வங்களுக்கு துணையாக இருக்க பூமிக்குள் இருந்த நாக லோகங்களில் இருந்து வெளி வந்து பூலோகத்தில் வந்து தங்கி இருந்தவை அந்த நாக தேவதைகள். அதனால்தான் இந்தப் பகுதிகளில் பாம்பு கடித்து இறந்தவர்கள் மிகவும் அரிதாகும். நாகதேவதைகளை அதிகம் ஆராதிக்கும் இடங்களில் நாகங்கள் மனிதர்களை சீண்டுவது இல்லை”.

பண்டிதர் தொடர்ந்து கூறினார் ”இரண்டாவதாக ராகுவும், கேதுவும் விஷ்ணுவினால் பாம்பு வடிவம் பெற்று கிரக அந்தஸ்தை அடைந்தவை என்றாலும் அவை நாக வடிவமும் பெற்று இருந்ததினால் பூலோகத்தில் பாம்புப் புற்றுக்களையே தமக்கு வசிக்கும் இடமாக வைத்துக் கொண்டார்கள். எப்படி நாக அம்மன் (மாரியம்மன் குடும்ப அவதாரங்கள்) அவதாரங்களுக்கு பாம்புப் புற்று அவை வசிக்கும் இடமாயிற்றோ அது போலவேதான் ராகு மற்றும் கேதுவும் பாம்புப் புற்றில் வசித்ததினால் ராகு மற்றும் கேதுக்களின் தோஷத்திற்கு பரிகாரம் செய்ய பாம்புப் புற்றுகளில் பால் ஊற்றுவதும், புற்றை வலம் வந்து வழிபட்டதும் நாகதோஷங்களை விலக்கிக் கொள்ள செய்யப்பட்டு வந்திருந்த வழிபாடாயிற்று. எந்த பாம்புப் புற்றில் ராகு மற்றும் கேது இருந்தார்களோ, எந்த பாம்புப் புற்றில் அம்மனும் நாக தேவதைகளும் வசித்தார்கள் என்பதும் எவருக்கும் தெரியாது என்பதினால் பொதுவாக பாம்புப் புற்றின் வெளியில் ராகு மற்றும் கேதுவுக்கு சிலைகள் வைக்கப்பட்டு அங்கேயே அவையும் வழிபடப்பட்டு வந்துள்ளன.

மேலும் அம்மன் அவதாரங்கள் அனைத்துமே பார்வதியின் பல்வேறு ரூப அவதாரங்களே என்பதினால், அந்த அவதாரங்களில் பாம்புப் புற்றில் வந்து வசிக்கும் பார்வதிக்கு காவல் தெய்வமாக, ஷேத்திர பாலகர்களாக ராகுவும் கேதுவும் புற்றுக்களின் வெளியில் காணப்படுகின்றனர் என்பதும் இன்னொரு நம்பிக்கையாக இருந்துள்ளது. இதன் விளைவாகவே அரச மரங்களின் அடியில் காணப்படும் பாம்புப் புற்றுக்களும், அவற்றின் வெளியில் வைக்கப்பட்டு உள்ள ராகுவும் கேதுவும் ஊர் காக்கும் கிராம தேவதைகளாக, காவல் தெய்வங்களாக பார்க்கப்பட்டு, வணங்கப்பட்டு வந்துள்ளன. காலம் காலமாக வாய்மொழியாகவே கூறப்பட்டு வரும் இந்த உண்மைகளை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. யாராருக்கு பிராப்தம் உள்ளதோ அவர்கள் மட்டுமே இவற்றை யார் மூலமாவது கேட்டு அறிந்து அதை பிறருக்கும் கூற முடியும் என்பதே இதன் தேவ ரகஸ்யமாகும்”. அந்த பண்டிதர் இப்படியாக தீர்கமாகக் கூறியது என் மனதில் ஆழப்பதிந்தது. காலம் காலமாக வாய்மொழி வழியாக கூறப்பட்டு வரும் இப்படிப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையிலான செய்திகள் எந்த அளவுக்கு உண்மையோ, ஆனால் அந்தப் பண்டிதர் கூறியவற்றில் பல விஷயங்கள் நம்மை சிந்திக்க வைப்பவை, நமக்கு தெரியாமல் உள்ளவை என்பது உண்மை ஆகும்.

சில பிரிவினருக்கு சில கிராம தேவதைகள் குல தெய்வமாகவும் இருந்துள்ளது. இங்குள்ள பல கிராம தேவதை ஆலயங்களின் பின்னணியில் பெரிய வரலாறு எதுவும் இல்லை, அவற்றின் காலமும் தெரியவில்லை என்றாலும், அந்த கிராம தேவதைகளை இனம் தெரியாத அளவு பக்தியோடு அங்கு வந்து மக்கள் வணங்குவதைக் காணும்போது ஆச்சர்யமாக உள்ளது. காலம் தெரியாமல் வணங்கப்பட்டு வந்திருந்த அந்த கிராம தேவதை மற்றும் காவல் தெய்வங்களை அவை எங்கு முதலில் இருந்தனவோ அங்கேயே அவற்றுக்கு கடந்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஆலயங்களை எழுப்பி பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

இதில் இன்னொரு முக்கியமான செய்தியும் கூற வேண்டி உள்ளது. அந்த கிராம தேவதை ஆலயங்களில் இன்று சிலை வடிவில் உள்ள பல தேவதைகள் ஒரு கல் உருவிலேயே அந்தக் காலத்தில் இருந்துள்ளன. அவற்றுக்கு வெகு காலத்துக்குப் பின்னரே வடிவம் தரப்பட்டு சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இந்த நிலை இல்லை. சில வழிபாட்டுத் தலங்கள் ஆலயங்களாக உருவெடுத்தப் பின்னரும் எந்தக் குத்துக் கல் தெய்வமாக வழிபடப்பட்டதோ அதை மாற்றாமல் அதன் மீது அந்த தெய்வத்தை பிரதிபலிக்கும் உருவம் கொண்ட கவசத்தை போட்டு ஆராதிக்கிறார்கள். இன்னும் சிலவற்றில் முதலில் ஆராதிக்கப்பட்டு வந்திருந்த அந்த பிரதான தெய்வக் கல்லின் மேல்பகுதியில் அந்தக் கடவுளின் வடிவச் சிலையை வடிவமைத்து பிரதிஷ்டை செய்து இரண்டையும் சேர்த்தே பூஜிக்கிறார்கள்.

அதன் விளக்கத்தை அந்தப் பண்டிதரிடம் கேட்டபோது அந்தப் பண்டிதர் கூறினார் ”அதன் காரணம் அந்தக் குத்துக் கல்லில் உள்ள தெய்வத்தின் சக்தியை வெளியில் எடுக்க இயலாது என்பதினால் அதன் உருவச் சிலைக்கு பூஜை செய்து அந்த சிலைக்கும் மந்திர சக்தியை மெல்ல மெல்ல ஏற்றுகிறார்கள். இதன் அடிப்படைக் காரணம் பூஜிக்கப்படும் கடவுளை ஒரு உருவ வடிவில் பார்க்கும்போதுதான் வணங்குபவர்களுக்கும் தாம் யாரை வணங்குகிறோம் என்பது புரியட்டும், அவர்கள் மனதில் அந்தக் கடவுளின் பிம்பமும் பதிகிறது என்பதற்காக பிற்காலத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள்”.

இன்னும் சில கிராம தேவதைகளை எந்த மாறுதலுக்கும் உட்படுத்தாமல் அவற்றை சுற்றி சுவர் மட்டுமே எழுப்பி வழிபாட்டுத் தலங்களை அமைத்து உள்ளார்கள். சிலவற்றை அவை குடியிருந்த அதே மரங்களின் அடியில் எந்த மாறுதலுக்கும் உள்ளாக்காமல் அவற்றை சுற்றி சுவர் கூட எழுப்பாமல் திறந்த வெளியில் அப்படியே வைத்திருந்து வழிபடுகிறார்கள். வெயில், மழை என எந்த காலத்திலும் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இதில் அந்த தலங்களில் புற்றுக்களாக உள்ள நாகம்மாவும் அடக்கம்.

மரத்தடியில் உள்ள கிராம தேவதைகளையோ, காவல் தெய்வங்களையோ அல்லது பாலூற்றி வணங்கப்பட்டு வந்துள்ள புற்றுக்களையோ அப்புறப்படுத்தினாலோ அல்லது அவற்றை மாறுதலுக்கு உட்படுத்தினாலோ அவற்றில் குடி உள்ளதாக நம்பப்படும் தெய்வங்கள் அவற்றை ஏற்காது, மாறாக அவற்றின் சக்தியை இழந்து விடும், நாக தோஷம் வந்து சேரும் என்பதான நம்பிக்கையும் உள்ளது. ஆனால் அவற்றில் சில கிராம தேவதைகள் ஆலயங்களாக உருவெடுக்கக் காரணம் அந்த தேவதைகள் தனக்கு ஆலயம் அமைக்குமாறு தம்மை வணங்கி வந்திருந்த சிலருக்கு கனவில் வந்து கூறியதின் பேரில், ஊர் சாமியாடிகள் மூலம் கூறப்பட்ட செய்திகள் மூலம் அமைக்கப்பட்டவை என்பதான கதையையே பெரும்பாலும் பலரும் கூறுகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைந்ததுள்ளதுதான் பிலகஹல்லியின் உள்பகுதியில் அமைந்துள்ள பட்டாளத்தம்மன் ஆலயமும். ஒரு காலத்தில் பட்டாளத்தம்மன் ஆலயப் பகுதியை சுற்றி இருந்த இடத்தில் குடி இருந்த ஆண்குடியினர் பலர் ராஜாங்கங்களில் பட்டாளத்தில் போர் வீரர்களாக இருந்ததாகவும், அவர்கள் போரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக போருக்கு செல்வதற்கு முன்னால் இங்கிருந்த கிராம தேவதையான அம்மனை வழிபட்டு வந்திருந்ததாகவும், வெற்றி பெற்று திரும்பி வந்ததும் இந்த அம்மனுக்கு காணிக்கை செலுத்தியதாகவும், அதனால்தான் இங்குள்ள அம்மன் பட்டாளத்தம்மன் என்ற பெயரைப் பெற்றுள்ளதாகவும் கிராமக் கதைக் கூறுகிறார்கள். முன்னர் மேற்கூரை இல்லாத சின்ன வழிபாட்டு தலமாக இருந்த பட்டாளத்தம்மன் இன்று பெரிய ஆலயமாக உருவெடுத்துள்ளது என்றாலும் இந்த ஆலயம் அதிகம் வெளித் தெரியாமலேயே இருக்கிறது.

அது போலவேதான் பிலகஹல்லியின் உட்புறத்தில் உள்ள திரௌபதி ஆலயமும். பெங்களூரின் மத்தியப் பகுதியில் உள்ளதும், வருடாந்திர கரக ஆட்டத்துக்கு புகழ் பெற்றதும், மிகவும் பிரசித்தமானதுமான தர்மராஜா ஆலயத்துடன் சேர்ந்த சிறு ஆலயமே இதுவும் என்கிறார்கள். திரௌபதியை பராசக்தியின் அவதாரமாகவே கருதி தர்மராஜாவின் வழிவந்தவர்கள் அவளைக் கொண்டாடுகிறார்கள். இந்த ஆலயமும் பிலகஹல்லியின் பிரதான சாலையில் இருந்து வெளித் தெரியாமல், உட்புறப் பகுதியில் சின்ன சாலைக்குள் அமைந்துள்ளது. இந்த வருட மார்ச் மாதம் நான்காம் தேதியன்று இந்த ஆலயத்தில் கரகம் எடுத்து விழா நடைபெற உள்ளதாக கூறினார்கள்.

தர்மராஜா ஆலயத்தின்  சன்னதியில் 
திரௌபதி அம்மன் , தர்மராஜா  மற்றும் கிருஷ்ணர்

பிலகஹல்லியில் உள்ள இந்த ஆலயத்தின் அருகில் உள்ள இன்னொரு சிறிய சந்தில் உள்ளது கெம்பம்மா ஆலயம். அவளை பெல்லிகேரம்மா என்றும் கூறுவார்கள். சிறிய சந்தில் இருந்தாலும், கெம்பம்மாவின் ஆலயம் பெரிய அளவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த ஆலயத்தில் கெம்பம்மாவின் இரு பக்கத்திலும் உள்ள தனித் தனி சன்னதிகளில் பரசுராமரும், மாரியம்மனும் அழகாக காணப்படுகிறார்கள். நான் சென்று இருந்த வேளையில் கெம்பம்மாவுக்கு அபிஷேகம் நடைபெற்று முடிந்து அற்புதமாக அலங்கரித்துக் கொண்டு இருந்தார்கள்.

மாரியம்மன் குடும்பத்தை சார்ந்த அவதாரமான கெம்பம்மா தேவியை தொட்டம்மா, சுகஜம்மா, கங்கம்மா, எல்லம்மா மற்றும் லகுவம்மா என்ற பெயர்களில் அழைத்தாலும் அந்த காலத்தில் அவள் ஊருக்கு காவல் தெய்வமாக, கிராம தேவதையாக கருதப்பட்டு வணங்கப்பட்டவள். பொதுவாகவே அம்மன்கள் குடிகொண்டிருக்கும் ஊரில் உள்ள அம்மனை அவர்கள் அம்மை நோயில் இருந்து காப்பாற்றுபவள், ஊரைக் காக்கின்றாள், பஞ்ச காலத்தில் மழையைப் பொழிய வைக்கின்றாள், குழந்தைப் பேறு தருகின்றாள், குடும்பத்தைக் காக்கின்றாள், நோய்களை விரட்டுகின்றாள் என பலவாறாக கூறி ஆராதிப்பார்கள்.

ஒரு கட்டத்தில் பல இடங்களிலும் குத்துக் கல் உருவிலேயே வழிபடப்பட்ட கிராம தேவதைகளின் வழிபாட்டுத் தலங்களில் பின்னாளில் அவற்றுக்கான உருவங்களுடன் கூடிய சிலைகளும் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டன. இப்படியாக எழுந்துள்ளது கெம்பம்மாவின் இன்னொரு ஆலயம் ஹுலிமாவு எனும் பகுதியில் உள்ளது. ஆடி அமாவாசை தினங்களில் ஹுலிமாவுவில் உள்ள கெம்பம்மாவின் ஆலயத்தில் தீ மிதித்து கெம்பம்மாவை வழிபடுகிறார்கள். நவராத்திரி தினங்களில் ஒன்பது நாளும் அவளுக்கு விதவிதமான அலங்காரம் செய்து வழிபடுகிறார்கள்.

ஹுலிமாவுவில் உள்ள இன்னொரு ஆலயமான பகவதி ஆலயத்திலும் பாம்புப் புற்றுக்கு பூஜை செய்கிறார்கள். இந்த ஆலயத்தில் கொடுங்கல்லூர் பகவதி எனும் பெயரில் ஒரு காவல் தெய்வம் உள்ளது. பகவதி தேவியை விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான பகவான் பரசுராமர், அவருக்கு தொல்லை தந்து வந்திருந்த தாருகா எனும் அசுரனை அழிக்க தோற்றுவித்ததாகவும், அவளுடைய பரிவார தேவதைகளில் ஒருவளே கொடுங்கல்லூர் பகவதி என்பவள் எனும் கதை உள்ளது.

பகவதி தேவிக்கு யுத்தத்தில் உதவுவதற்காக உருவானவளே கொடுங்கல்லூர் பகவதி எனும் காவல் தேவதை என்றும் அவளை ஆலயத்துக்குள் சன்னதி அமைத்து அதில் வைத்து பூஜிக்கக் கூடாது, அவளுக்கு பக்தர்கள் நேரடியாக பூஜை செய்யலாம், ஆனால் பகவதி ஆலயத்து பண்டிதர்கள் அவளுக்கு பூஜைகளை செய்யக் கூடாது என்பது ஐதீகம் என்பதினால் ஆலயத்தின் வெளிப்புறத்தில் பகவதி அம்மனுக்கு காவல் தெய்வமாக கொடுங்கல்லூர் பகவதியை வைத்து உள்ளார்கள்.

ஹுலிமாவுவின் உள்பகுதியில் காணப்படுவது இன்னும் இரண்டு கிராம தேவதை மற்றும் காவல் தெய்வ ஆலயங்கள். ஹுலிமாவுவின் கடைவீதியின் மத்தியில் உள்ளது பிடரி அம்மன் ஆலயம். இவளை நாடம்மா என்று அழைக்கிறார்கள். இவளை காளியின் அவதாரம் என்கிறார்கள். அவளுக்கு பக்கத்து சன்னதியில் உள்ளது மாரம்மாவின் வழிபாட்டு தலம். மாரம்மாவின் வழிபாட்டுத் தலம் மேற்கூரை இல்லாமல் உள்ளது. மாரம்மாவின் சிலை இல்லாமல் கல் ஒன்றையே மாரம்மாவாக கருதி வணங்குகிறார்கள். நாடம்மாவைப் பொருத்தவரை மூன்று சிறிய கற்களை மட்டுமே நாடம்மாவின் மூன்று கண்களாக பாவித்து அதை வணங்குகிறார்கள். தமிழ்நாட்டில் பிடாரி அம்மனை வழிபடுவது போல இந்த வழிபாட்டு தலத்தில் அவளை வந்து வழிபாட்டு வேண்டுபவர்கள் அதிகம் உண்டாம். ஒரு காலத்தில் இந்த பகுதி கிராமமாக இருந்தபோது அதன் காவல் தெய்வமாக நாடம்மா வழிபாட்டுத் தலம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். இந்த அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்ற கோழி பலியும் தரப்படுவதாக கூறுகிறார்கள். மனதார வேண்டினால் அதை தருபவள் இந்த நாடம்மா என்றும், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், அடைக்கலம் தேடும் அபலைகள், திருமணம் ஆகாத பெண்கள், விதவைகள் போன்றவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறாள் இந்த நாடம்மா எனும் எல்லை பிடாரி அம்மன் என்பது நம்பிக்கை. இந்த இரண்டு வழிபாட்டுத் தலங்களும் எந்த காலத்தில் அமைக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும், குறைந்தது அவை நூறு வருடங்களுக்கு முன்னர் இருந்தே வழிபடப்பட்டு வந்துள்ளவை என்கிறார்கள்.

ஹுலிமாவுவின் உள்புறத்து பகுதியில் காணப்படுவது இன்னொரு ஆலயமான முன்னர் கிராமத்தின் காவல் தெய்வமாக குடி இருந்த தொட்டம்மாவின் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாறு குறித்து அங்கிருந்த ஒரு பண்டிதர் கூறிய கதை இது.

”முன் ஒரு காலத்தில் இந்தப் பகுதிகள் முழுவதுமே அடர்ந்தக் காடுகளாக இருந்துள்ளன. அப்போது பல முனிவர்களும், ரிஷிகளும் இந்தக் காடுகளில் தவம் இருந்துள்ளார்கள். அங்காங்கே நாகம்மாவின் உருவில் நாக தேவதை தமது பரிவாரங்களுடன் குடி இருந்துள்ள இடம் இந்த பகுதிகள் அனைத்தும் ஆகும். அதனால்தான் இந்தப் பகுதிகள் முழுவதிலுமே அங்காங்கே பாம்புப் புற்றுக்கள் நாகம்மாவாக பூஜிக்கப்படுகின்றன. சில புற்றுக்களில் வாழும் நாகங்களும் உள்ளன. அவை பாம்பு அவதாரம் எடுத்து வந்துள்ள தேவதைகள். யாருக்கும் தீங்கு விளைவிக்காது. ஆனால் எவர் கண்களுக்கும் புலப்படாமல் சுற்றித் திரிபவை”.

பண்டிதர் தொடர்ந்தார் ”தொட்டம்மா தேவி எனும் அவதாரம் மகாலஷ்மி, சரஸ்வதி மற்றும் பார்வதி தேவி எனும் மூவரும் சேர்ந்துள்ள அவதாரம். முன்னொரு காலத்தில் அதாவது தற்போது ஆலயம் உள்ள இந்த இடத்தில் உள்ள அரச மரத்தின் அடியில் பாம்புப் புற்றின் அருகில் சாப விமோசனம் பெற தொட்டம்மா தேவி குடி கொண்டு இருந்தாளாம். தொட்டம்மா பலருக்கும் இந்த மரத்தின் அடியில் நின்று கொண்டு நேரடியாக தரிசனம் தந்து இருக்கிறாளாம். காடுகள் மெல்ல மெல்ல அழிந்து கிராமங்கள் தோன்றியபோது மரத்தடியில் இருந்த அந்த இடத்தையே தமது கிராமத்தைக் காத்தருளும் காவல் தெய்வமான தொட்டாமாவின் வழிபாட்டு தலமாக அமைத்து விட்டார்கள். ஒருநாள் இந்த மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த தொட்டம்மாவை ஒருவர் நேரடியாக கண்டாராம். அன்று இரவு அவருடைய கனவில் மீண்டும் வந்து தரிசனம் கொடுத்த தொட்டம்மா தனக்கு அதே இடத்தில் ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என அவருக்கு கட்டளை இட அதன் காரணமாக இந்த ஆலயமும் எழுந்தது”.

பண்டிதர் மேலும் கூறினார் ”இதில் ஒரு வேடிக்கை என்ன என்றால் இந்த ஆலயத்தைக் கட்டியவர் அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கூட வழி இல்லாமல் இருந்தவராம். ஆனால் ஆலயம் அமைக்க அவருக்கு கட்டளைக் கிடைத்ததும், எங்கிருந்தெல்லாமோ அவர் கேட்காமலேயே பணம் வந்து குமிய அவரும் கோடீஸ்வரர் ஆனார். அவருக்குக் கிடைத்தக் கட்டளையின்படி ஆலயம் அமைத்ததும் தாமாகவே கேட்காமல் கிடைத்து வந்த அனைத்து நன்கொடைகளும் நின்றன. இத்தனை அதிசய சக்தியைக் கொண்டது முன்னர் கிராம காவல் தெய்வமாக இருந்த இன்றைய தொட்டம்மாவின் ஆலயம் ஆகும். இன்றும் கூட தொட்டம்மாவை நாம் எந்த தேவியாக கருதி பார்ப்போமோ அந்த தேவியாக காட்சி தாது நமது பூஜைகளை அவள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம் உள்ளது. தொட்டம்மாவின் காவலுக்கு அவள் சன்னதியின் நுழை வாயிலில் இரண்டு வேதாளங்கள் நிற்கின்றன. அவற்றுக்கு இன்றும் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் இரவு சரியாக பன்னிரண்டு மணிக்கு பூஜை செய்து அன்னம் படைக்கப்படுகிறது. காலமில்லாக் காலத்தில் இருந்தே இந்த தேவி இங்கு குடி இருக்கிறாள்”. இவை அனைத்தையும் பண்டிதர் கூறியதைக் கேட்ட எனக்கு வியப்பாக இருந்தது.

ஹுலிமாவுவின் வெளிப் பகுதியில் காணப்படும் இன்னொரு ஆலயம் சௌடேஸ்வரி ஆலயம் ஆகும். முன் ஒரு காலத்தில் நாக தேவதையான நாகம்மாவின் வழிபாட்டுத் தலமாக இது இருந்துள்ளது. பெரிய அரச மரத்தின் அடியில் இருந்த பெரிய பாம்புப் புற்றை கிராம மக்கள் நாகம்மாவாக பல காலத்துக்கு வழிபட்டு வந்துள்ளார்கள். பிற்காலத்தில் அந்த புற்றை சுற்றி ஆலயம் எழுப்பி அந்த நாகம்மா எனும் அம்மனான சௌடேஸ்வரிக்கு அங்கேயே சிலை அமைத்து, ஆலயம் எழுப்பி பூஜிக்கத் துவங்கினார்கள். இன்றும் அந்த பாம்புப் புற்றை நாகம்மாவாக வழிபட்டு வேண்டுதலுக்காக வளையல் அடுக்கி பூஜிக்கிறார்கள்.

நிற்க, பிலகஹல்லி கெம்பம்மாவின் ஆலயத்தின் எதிரில் அதே சாலையில் உள்ளது லகுவம்மா ஆலயம். லகுவம்மாவின் ஆலயத்தின் உள்ளே தனி சன்னதியில் நாகம்மாவின் புற்றும் வழிபடப்பட்டு வருகின்றது. அதில் ஒரு வாழும் நாகமும் உள்ளதாகக் கூறுகிறார்கள். தொட்டி நாயக்கர்களின் பிரிவான ராஜகம்பளத்தார்களின் குலதெய்வம் லகுவம்மா. இவர்கள் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுபவர்கள். இந்த சமூகத்தினரே லகுவம்மாவை தாம் தங்கி இருந்த கிராமப் பகுதியின் காவல் தெய்வமாக ஆராதித்து வந்திருக்க வேண்டும். அதன் பின்னர் ஆலயத்தை எழுப்பி இருக்க வேண்டும். கம்பளத்தார் முதலில் ஆந்திராவை ஆண்டு வந்த யாதவ அரசர்களின் படைவீரர்களாகவும் பின்னர் விஜயநகரப் பேரரசின் படைவீரர்களாகவும் இருந்தவர்கள் என்கிறார்கள். ஆகவே இவர்களும் பட்டாளத்தம்மனை இந்தப் பகுதியில் வழிபட்டிருக்க வேண்டும்.

இப்படியாக அங்காங்கே உள்ள அன்றைய கிராம வழிபாட்டுத் தலங்கள் சில சாலை ஓரங்களில் அமைந்துள்ளன. இன்னும் சில அங்காங்கே கட்டப்பட்டு உள்ள குடியிருப்புக்களின் நடுப்பகுதிகளில் வெளித் தெரியாமல் அமைந்துள்ளன. ஆலயத்தில் உள்ள தேவதைகளின் சிலையை குங்கும, சந்தன, மஞ்சள் கலவையினால் அழகூட்டி, பூக்களால் ஆன மாலைகளைக் கொண்டு அலங்கரித்து, தீபங்கள் ஏற்றி அவற்றை பயபக்தியோடு பூசிப்பது காணக் கண்கொள்ளாக் காட்சியாகவே உள்ளது.

பிலகஹல்லியில் பட்டாளத்தம்மனின் ஆலயத்தின் அருகில் உள்ளது முனீஸ்வரர் ஆலயம். அதுவும் பட்டாளத்தினரால் (படை வீரர்கள்) வழிபடப்பட்டு வந்திருக்க வேண்டும் என்பதின் காரணம் இதன் கதையும் பட்டாளத்தம்மன் ஆலயக் கதையைப் போலவே உள்ளது. போரில் தமக்கு பாதுகாப்பாக முனீஸ்வரர் இருப்பார் என்பது அந்த காலத்து படை வீரர்களின் நம்பிக்கையாக இருந்துள்ளதாம். இந்த வழிபாட்டுத் தலத்தின் ஆலய மேற்கூரையில் ராணுவ சிப்பாய்களின் உருவமும் சிலையாக காணப்படுவது இந்த நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது. இந்த ஆலயத்தின் ஒரு பக்கத்தில் பாம்புப் புற்று உள்ளது. ஆனால் மேலும் எந்த விவரமும் இதைக் குறித்து கிடைக்கவில்லை. முன்னர் வழிபாட்டுத் தலமாக இருந்துள்ள இடத்தில் முனீஸ்வரரின் புதிய சிலையும் ஆலயக் கட்டிடமும் கடந்த பத்து ஆண்டுகளுக்குள் வந்திருக்கின்றன.

இதே போல பிலகஹல்லியில் இருந்து தேவசிக்கனஹல்லிக்கு செல்லும் வழியில் பிலகஹல்லியிலேயே உள்ள சிறு சனீஸ்வரர் ஆலயமும் புகழ்பெற்று விளங்குகிறது. அந்த சனிபகவான் ஆலயத்தில் ஒரு பெண்மணியே அர்ச்சகராக உள்ளார். மரத்தடியில் அமைந்துள்ள சனி பகவானின் ஆலயம் எந்த காலத்தை சேர்ந்தது என்பது தெரியவில்லை. ஒரு பெரிய அரச மரத்தின் அடியில் சிறிய அளவில் காணப்படும் சனி பகவானின் சன்னதிக்கு முன்னால் ராகு மற்றும் கேதுவின் உருவம் கொண்ட மூன்று சிலைகள் பாறையில் செதுக்கப்பட்டு உள்ளன. முன் ஒரு காலத்தில் அந்த மரத்தின் அடியில் இருந்த ராகுவும் கேதுவும் கிரஹ தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ள வழிபடப்பட்டு வந்துள்ளார்கள். அப்படி வழிபடப்பட்டு வந்துள்ள அந்த ராகு மற்றும் கேதுவிற்கு பின்னால் சனி பகவானுக்கும் சின்ன சிலை வைக்கப்பட்டு அவரும் வழிபடப்பட்டு வந்துள்ளார். பின்னர் அதுவே சனி பகவான் ஆலயமாக உருமாறி உள்ளது என்கிறார்கள். அந்த மரத்தடி சனி பகவான் பிலகஹல்லி பகுதியில் சக்தி உள்ள சனி பகவானாகவே அந்தப் பகுதி மக்களால் பார்க்கப்படுகிறார். சனிபகவானின் இந்த ஆலயத்தைக் குறித்த தகவல்கள் வேறு எதுவும் கிடைக்கவில்லை.

இதே இடத்தில் சனி பகவான் ஆலயத்தின் நேர் எதிரில் வீரபத்திரர் ஆலயமும் உள்ளது. வீரபத்திரரை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு அவரை குல தெய்வமாக வழிபடுபவர்கள் வீரமுஷ்ட்டி அல்லது வீரமுட்டி என்று அழைக்கப்படுவார்கள். அந்த வீரமுட்டி இனத்தவர் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பரவலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அதனால்தான் வீரபத்திரர் வழிபாடும் கர்னாடகாவில் அதிகம் உள்ளது. வீரபத்திரர் சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவர் என்ற நம்பிக்கை உள்ளதினால் பொதுவாகவே பல சிவன் ஆலயங்களிலும் வீரபத்திரர் சிவபெருமானின் துணைத் தெய்வமாக கருதப்பட்டு தனி சன்னதியில் வழிபடப்படுகிறார். பிலகஹல்லியில் உள்ள வீரபத்திரர் ஆலயத்தில் வீரபத்திரரே பிரதான மூர்த்தி ஆவர். முன் காலத்தில் இதுவும் இந்த கிராமத்து காவல் தெய்வ வழிபாட்டு தலமாக மரத்தடியில் இருந்து இன்று அதே இடத்தில் மேற்கூரை எழுப்பப்பட்டு அமைந்துள்ள சிறிய அளவிலான ஆலயமாக மாறி உள்ளது என்பதற்கு சாட்சியாக உள்ளே உள்ள மூர்த்திகளின் சிலை அமைப்பும், ஆலய அமைப்பும் காட்டுகின்றன.

தற்போது பிலகஹல்லி, ஹுலிமாவு மற்றும் அரேகேரே போன்ற இடங்களை சுற்றி காணப்படும் சில ஆலயங்களில் உள்ள கிராம தேவதைகளை, காவல் தெய்வங்களின் ஆலயங்களை வெளியிட்டு உள்ளேன். மற்ற பகுதிகளில் உள்ளவை பிறகு வெளியாகும்.