குலதெய்வ வழிபாடு

சாந்திப்பிரியா

3

மகாபாரத காலத்தைப் போல அல்லாமல் இராமாயண காலத்திலும் சிவ வழிபாடுகள் இருந்துள்ளன. அதனால்தான் ராமபிரான் ராமேஸ்வரத்தில் வந்து கடற்கரையில் சிவபெருமானை பூஜித்ததான புராணக் கதைகள் உள்ளது.

இந்த வழிபாட்டில் ஒரு முக்கிய செய்தியை   கவனிக்க வேண்டும். சிவபெருமானை ராமபிரான் பூஜித்தது என்பது சிவபெருமானின் உருவத்தைக் காட்டும் சிலையை அல்ல. சிவபெருமானை பிரதிபலிக்கும் சிவலிங்கத்தை ராமபிரான் மண்ணினால் செய்து கடற்கரையில் பிரதிஷ்டை செய்து லிங்க வடிவிலான சிலையை பூஜித்தாராம். ஆனால் எந்த புராணங்களிலும் சிவபெருமானை வேறு எந்த உருவவிலும்  வழிபாடு செய்துள்ளதாக செய்திகள் கிடையாது. ராமபிரான் மட்டும் அல்ல  கிருஷ்ணர், ஹனுமான், விஷ்ணு, பிரும்மா, போன்ற பல தெய்வங்கள் கூட சிவபெருமானை லிங்க உருவில் பூஜித்ததான கதைகள் பல புராணங்களில் உள்ளன. அந்த தெய்வங்கள் அப்படி வழிபட்டதிற்கு  ஒரு அடிப்படை காரணம்   உண்டு.

”சிவபெருமானே பரப்பிரும்மன் எனும் சக்தியில் இருந்து வெளி வந்தவர். அவர் தனிப்பட்ட சக்தியைக் கொண்டு அவதரிக்கவில்லை. அவர் பரப்பிரும்மனின் சக்தியுடன் வெளி வந்தவர். அதே சமயத்தில்  அவர் பரப்பிரும்மனின்  ஆத்மா போன்றவர் ஆகும்.

பரப்பிரும்மம் என்பது சிவனும் சக்தியும் இணைந்த, ஆணும் பெண்ணும் இணைந்துள்ள உருவமே. ஒருவர் இன்றி மற்றவர் அல்ல என்பதை வெளிப்படுத்தும் தத்துவமே சிவலிங்க வடிவம் என்பது மட்டும் அல்ல. தேவலோகத்தினர் கீழிறங்கி பூமிக்கு  வந்து மனித குலத்துடன் வாழ்ந்து கொண்டு அவர்களை வழி நடத்திச் செல்லும்போது  அவர்களுக்கு மேலும் மேலும் சக்தி தேவையாக  இருக்கும். அப்படிப்பட்ட சக்தியை அவர்களுக்குள் (தேவபுருஷர்களுக்கு) கொடுக்க பரப்பிரும்மமான சிவபெருமானே தேவலோகத்தில் இருந்து கீழிறங்கி வந்து அவர்களுக்குள் புகுந்து அவர்களுக்கு சக்தியைத் தரும் தன்மையைக் காட்டுவதும் அதன் உருவமாகும். ஆகவே அனைத்து தெய்வங்களையும் வெளிப்படுத்திய அந்த பரப்பிரும்மத்தை (சிவலிங்கம்) வழிபட்டால் மட்டுமே மானிட உருவில் இருந்த தெய்வங்களின் சங்கடங்களை  அகற்றி  அவர்களுக்கு அந்த அவதாரத்தில் இன்னும் அதிக சக்தியை   அதே  பரப்பிரும்மம் தரும்” .

ஆகவேதான் சிவபெருமானுக்கு என்று தனிப்பட்ட வேறு எந்த உருவமும் அந்த காலத்தில் தரப்பட்டிருக்கவில்லை. மகாபாரதத்திலும், ராமாயணத்திலும் காட்டப்பட்டுள்ள ராமபிரானோ, கிருஷ்ணரோ, அனுமானோ, சீதையோ யாரானாலும் சரி அவர்கள் யாருமே தெய்வமாக பூஜிக்கப்படவில்லை. முதலில் பூஜிக்கப்பட்டது  பரப்பிரும்மமான சிவலிங்க உருவில் இருந்த சிவபெருமானே. அனைத்து தெய்வங்களும் சிவனின் உள்ளேயேதான் அடக்கம், அனைத்து தெய்வங்களும் வெளி வந்தது பரப்பிரும்மனில் இருந்துதான் என்ற உண்மையை இது காட்டுவதினால்,  தாம் எந்த  ஆத்மாவில் இருந்து வெளிவந்தோமோ அந்த ஆத்மாவை வணங்கித் துதிப்பதே முறை என்று தெய்வங்கள் கருதியதினால், அந்த உண்மையை மனித குலத்துக்கு உணர்த்த வேண்டும் எண்ணியதினால்  சிவலிங்க வழிபாடு அந்தந்த யுகங்களில் அவதரித்த தெய்வ அவதாரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது.

அனைத்து அவதாரங்களும், தேவதைகள், தேவ கணங்கள்   
மற்றும்  பிற கணங்களும் , தெய்வங்களும் பரமாத்மன் 
முதலில் படைத்த  சிவன் ,விஷ்ணு, பிரும்மா என்பவர்களில் 
இருந்து தோன்றியவையே

அடுத்தது விஸ்வரூப தரிசனம் காட்டப்பட்டது பற்றியது. அது நிகழ்ந்தது மகாபாரத யுத்தத்தில். அது வேத காலத்துக்கு முற்பட்ட காலம் ஆகும். யாகங்களை, வேள்விகளை நடத்திக் கொடுத்த மகாபாரத காலத்தை சேர்ந்த மா முனிவர்கள் மற்றும் ரிஷிகளின்  வழி வந்தவர்களே ஆரியர்கள் என்கிறார்கள். மகாபாரதம் நடைபெற்றது குருஷேத்திரத்தில். அது இருந்த இடமும் இந்தியாவின் வடக்கு பகுதியில்தான். ஆகவேதான் அங்கிருந்த ஆரிய வம்சத்தினர் வேத பாடங்களைக் கற்றரிந்தபோது, தெய்வங்களின் உருவ அமைப்பும் அவர்களுக்கு  கிடைத்துள்ளன.

இன்னும் ஒரு படி மேலே சென்று பார்த்தால் அகஸ்திய முனிவரைத் தவிர அனேகமாக அனைத்து மாமுனிவர்களும், ரிஷிகளும் வடநாட்டின் இமயமலைப் பகுதியில்தான் தவம் இருந்து தெய்வ தரிசனத்தைப் பெற்று உள்ளார்கள். அகஸ்திய முனிவர் கூட சில காலம் அங்குதான் இருந்துள்ளார். அவருக்கும் சிவபெருமான் திருமணம் மூலம் அங்கிருந்த பிற தெய்வங்களின் தெய்வ தரிசனமும்  கிடைத்தது. அவர் தென் பகுதிக்கு வந்தபோது முருகப் பெருமானின் தரிசனமும் கிடைத்தது. சிவபெருமானின் ஆணையின்பேரில்தான்  அவர் தென் பகுதிக்கு வந்தார்.

வேத காலத்தில் ரிஷி முனிவர்களுக்கு பெருமளவிலான தெய்வங்கள் – ஆண் பெண் என அனைத்து தெய்வங்களுமே- காட்சி தந்துள்ள கதைகளும் வட இந்திய நிலங்களை சுற்றியே அமைந்து உள்ளது.  அப்படி காட்சி தந்த தெய்வங்களும் பெரும்பாலும் சிவன், பார்வதி, பார்வதியின் பல அவதார ரூபங்களான தேவிகள், விஷ்ணு, கிருஷ்ணர் போன்றவர்களே. இதனால் இந்தியாவின் வட பகுதிகளில் பரவலாக சிவன் ஸ்தலங்களும், சக்தி ஸ்தலங்களும் அமைந்திருந்தன.

அதே நேரத்தில் ஆச்சர்யமாக இந்தியாவின் தென் பகுதி முதல் இலங்கை வரை என்று பார்த்தால் முருகன் தலங்களும், அவர் சம்மந்தப்பட்ட கதைகளும், குடும்பமும் மட்டுமே முன் காலத்தில் இருந்துள்ளன என்பதும் உண்மையாக உள்ளது. இதில் ஒரு சின்ன விளக்கம். தென் பகுதியின் சில இடங்களில் விஷ்ணு பகவானும் சம்மந்தப்பட்டுள்ளார் என்பதின் காரணம் அவர் பார்வதியின் சகோதரர் என்பதினால் அவரும் சிவபெருமானின் குடும்பத்தை சேர்ந்தவராகவே பார்க்கப்பட்டுள்ளார் என்பதே.

நிற்க, அனைத்தையும் பார்க்கும்போது இந்தியாவின் வட பகுதியில் உருவ வழிபாடு துவங்கக் காரணமாக இருந்துள்ளவர்கள் கி.மு 1500 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் தென் பகுதிக்கு வந்த ஆரியர்களே என்பதாகக் நம்ப வேண்டி உள்ளது. ஆரியர்களை இமய மலை அடிவாரத்தில் இருந்தவர்கள், அங்கிருந்து வந்தார்கள் என்கிறார்கள். இமய மலை சிவபூமி என்பதினால் அவர்கள் சைவ உணவை உண்பவர்களாக இருந்திருக்கலாம். சமிஸ்கிருத மொழியை பேசி வந்த ஆரியர்கள் வேத வழிமுறைகளைக் கொண்டவர்கள், காமதேனு என்பதாக பசுவை வணங்கியவர்கள், அஸ்வமேத யாகம் போன்றவற்றை செய்தவர்கள் என்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இன்னும் சிலரோ துவக்க கால இரான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆரியர்கள் என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள்.  உண்மையில் ஆரியர்கள் யார் என்பதோ அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதோ சரிவரத் தெரியவில்லை. அது சர்ச்சைக்குரிய விஷயமாகவே உள்ளது. ஆனால் ஆரியர்களின் வருகைக்குப் பிறகே பல வகைகளிலான தெய்வங்களின் உருவ வழிபாடு வெளி வந்துள்ளது என்பதில் அநேகமாக அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒருமித்தக் கருத்துடன் இருக்கிறார்கள். இந்த செய்திகளின் அடிப்படையில் இனி அந்த தெய்வங்கள் எப்படி படிப்படியாக வளர்ந்து, அவற்றில் சில எப்படி குல தெய்வங்கள் ஆயின என்ற கதையைப் பார்க்கலாம்.

ஆரியர்கள் இந்தியாவுக்குள் வந்தப் பின் தென் இந்தியப் பகுதிகளில் சேர, சோழ பாண்டிய மற்றும் சடவாகன மன்னர்கள் போன்றவர்கள் ஆட்சியில் இருந்துள்ளார்கள். தென் பகுதியை ஆண்ட மன்னர்களின் ஆட்சி காலத்தில் தெய்வ வழிபாடுகள் செழித்திருந்தன. ஆலயங்கள் எழுந்தன. பெரும்பாலும் தென் பகுதியில் இருந்தவர்கள் தமிழ் மொழியைப் பேசினார்கள்.

ஆரியர்களின் வருகையினால் வேத வழிமுறைகள் பரவத் துவங்க மெல்ல மெல்ல பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதவர்கள் என்ற பேதமும் தோன்றத் துவங்கிற்று. அன்று ஆண்ட மன்னர்களும் பிராமணர்களை ஆதரித்தார்கள். ஆலயங்களிலும் வேத மந்திரங்களிலான பூஜை முறைகள் மெல்ல மெல்லத் தோன்றலாயின. அதன் பிறகு அந்தணர்கள் இடையே கூட சைவ மற்றும் வைஷ்ணவர்கள் என்ற பிளவு தோன்றியது.

பொதுவாக பலரும் ஆதிசங்கரர் சைவ மதத்தை சார்ந்த ஆச்சார்யார் என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அவர் சைவ மதத்தை மட்டும் சார்ந்தவர் அல்ல, மாறாக அப்போது இந்தியா மட்டும் அல்லாது பல இடங்களிலும் வேகமாக பரவி வந்திருந்த பௌத்த மற்றும் ஜைன மதங்களின் தாக்கத்தினால் இந்து மதம் நலிந்து விடக் கூடாது என்ற சிந்தனையில் பல பிளவுகளாக இருந்த இந்து மதத்தை சைவம், வைஷ்ணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம் என வகைப்படுத்தி அவற்றில் ஒற்றுமையை ஏற்ப்படுத்தி அவற்றின் மூலம் பல வகைகளிலான பக்தி போதனையை வலுப்படுத்த எண்ணினார். அதனால் அவருக்கு ஷண்மத ஸ்தாபனாச்சார்யர் என்று நாமகரணம் சூட்டி இருந்தார்கள்.

ஆதி சங்கரர் காலத்தில் இந்து மதத்தில் எழுபதுக்கும் அதிகமான பிரிவுகள்  இருந்ததாகக் கூறுகிறார்கள். அப்போது இந்து மதத்திலேயே அரசல்புரசலாக தனித்தனியே தோன்றி இருந்த சிவ- விஷ்ணு வழிபாடுகள், ஆதி சங்கரர் மற்றும் ராமானுஜர் என்ற இரு மகான்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலினால் பெரும் பிளவை அந்தணர்களிடையே (சைவ மற்றும் வைஷ்ணவ பிரிவிகளாக) தோற்றுவித்திருந்தன.  இத்தனைக்கும் ஆதி சங்கரர் எந்த விதத்திலுமே விஷ்ணுவை இரண்டாம் நிலைக் கடவுளாக கூறவில்லை. மாறாக விஷ்ணுவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்குக் கூட பாஷ்யம் எழுதி உள்ளார். ஆதி சங்கரர் மற்றும் ராமானுஜருக்கு ஏற்பட்ட பிளவு கொள்கை சம்மந்தப்பட்டதே தவிர தனிநபர் விரோதத்தினால் ஏற்பட்ட பிளவல்ல.   வைஷ்ணவர்கள் பிரிவில் விஷ்ணுவும், விஷ்ணுவின் அனைத்து அவதாரங்களும் சேர்க்கப்பட்டன. சைவப் பிரிவிலோ சிவன், முருகன், மற்றும் சிவபெருமானின் அவதாரங்களும் சேர்க்கப்பட்டன.

இந்நிலையில் தமிழ் மன்னர்கள் தென் பகுதியை ஆண்ட காலத்தில் வடநாட்டில் ராமாயணம் மற்றும் மகாபாரத காலத்தில்  எப்படி ராமரும், கிருஷ்ணரும் மனிதப் பிறவிகளாக அவதரித்தார்களோ அப்படியே முருகப் பெருமானும் தென் பகுதியில் மனித உருவிலே அவதரித்தார். அப்படி வந்தவர் வனப் பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டு இருந்தார். முருகப் பெருமான் பார்வதி மற்றும் சிவபெருமானுக்கு மகனாக பிறந்தாலும் (அது தனிக் கதை) அவர்களது ஜீவ அணுக்களில் இருந்த அவருடைய பிறப்பு பூமியிலே நிகழ்ந்தது.  பூமியிலே பிறந்த அவர் சூரபத்மனை யுத்தம் செய்து அழித்தப் பின் வனப்பிரதேசத்தில் இருந்தார். அந்த வனப்பிரதேசம் இலங்கை பகுதியில் தமிழ்நாட்டை ஒட்டி இருந்த கதிர்காமத்தில் இருந்ததாக கூறினாலும் அதற்கான சரியான விளக்கம் இன்னும் தெரியவில்லை. ஆனால் அவர் வாழ்ந்திருந்தது இலங்கையில் இருந்த கதிர்காமத்தில் என்பதாக ஐதீகம் உள்ளது. அங்குதான் அவர் வள்ளி தேவியை காதலித்து மணம் புரிந்து  கொண்டாராம்.

வட பகுதியில் இருந்தவர்கள் ராமரையும், கிருஷ்ணரையும் வழிபட்டதைப் போல தென் பகுதியில் இருந்த மக்களினால் பூமியிலே அவதரித்து இருந்த முருகப் பெருமானும்  வணங்கப்படலானார். தென் பகுதியில் மட்டுமல்லாமல், தென் பகுதியின் கலாச்சாரத்துடன் சற்றே ஒத்து இருந்த ஒரிஸ்ஸா மற்றும் மேற்கு வங்கத்தில் கூட  ஸ்கந்த-கார்த்திகேய வழிபாட்டை ஆரியர்கள் கடைப் பிடித்து உள்ளார்கள்.  ஆனால் ஆரியர்கள் ஸ்கந்த-கார்த்திகேய வழிபாட்டை துவங்கியதற்கு வெகு காலம் முன்னரே தென் பகுதியில் இருந்த தமிழர்கள் முருக வழிபாட்டைக் தொடர்ந்து கொண்டு இருந்துள்ளனர். சங்க காலத்தில் குறிஞ்சி மலையில் இருந்த திணை எனக் கூறப்பட்ட நிலப்பரப்பில் முருகனே முதற் கடவுள் எனப் போற்றப்பட்டு வந்துள்ளார்.

……தொடரும்