மாயவரம் அருகில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மூவலூர் எனும் தலத்தில் உள்ளதே மார்க்கசஹாயேஸ்வரர் எனும் சிவன் ஆலயம். இந்த ஆலயம் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதாக தெரிகிறது. இருதய நோயினால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் நோயின் தாக்கம் குறைவதாகக் கூறுகிறார்கள்.  இங்குள்ள சிவபெருமான் ஸ்வயம்புவாக அவதரித்தவராம். இந்த ஆலயத்தின் இன்னொரு அற்புதம்  சன்னதியின் நுழை வாயிலில் நான்கு பக்கங்களையும்  நோக்கி நான்கு நந்தி தேவர்கள் அமர்ந்து உள்ளார்கள்.

 மகிஷாசுரமர்த்தினி எனும் துர்கா தேவி, அந்த அசுரனை வதம் செய்த பின் தனது அழகிய கோலத்தை இழந்து கோபக்கனலான உருவை பெற்றாள். ஆகவே அவள் தனக்கு மீண்டும் அழகிய வதனம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்து சிவபெருமானை வேண்டி பூஜித்து தனது பழைய அழகிய உருவை பெற்றுக் கொண்டதாக இந்த ஆலயத்தின் ஒரு வரலாறு கூறுகிறது. அவள் இங்கு வந்து தங்கி இருந்தபோது அங்கிருந்த ஒரு தீர்த்தத்தில் தினமும் ஸ்நானம் செய்து வழிபாட்டு வந்ததினால் புனிதம் அடைந்த தீர்த்தத்தின் பெயரை துர்கா புஷ்கரணி என அழைக்கிறார்கள். துர்கையும் பார்வதியே என்பதினால் தோஷம் விலகிய பார்வதி இங்கு சௌந்தர்ய நாயகி (அழகிய வதனத்தைப் பெற்றவள்) எனும் பெயரில் அமர்ந்துள்ளாள்.
அது போலவே பல காரணங்களினால் தோஷங்களைப் பெற்று இருந்த பிரும்மா, விஷ்ணு மற்றும் ருத்திரன் (சிவபெருமானின் இன்னொரு அம்சம்) எனும் மூவரும் தேவலோகத்தில் இருந்து ஒன்றாகவே கிளம்பி இங்கு வந்து தவத்தில் இருந்து சிவபெருமானை வழிபாட்டு, அவரை பூஜித்து தமது தோஷங்களை விலக்கிக் கொண்டார்கள்.  அவர்களுக்கு சிவபெருமான் ஸ்வயம்புவாக இங்கு எழுந்தருளி காட்சி தந்து அருள் புரிந்தாராம். அந்த இடமே ஆலயம் ஆயிற்று. அதனால்தான் இந்த ஆலயம் உள்ள இடம் மூவலூர், அதாவது மூவரும் வந்த ஊர் எனும் பெயரை அடைந்தது.
இங்குள்ள ஆலயத்தில் குடி உள்ள சிவபெருமான் தோஷமற்ற வாழ்வு கிடைக்க அருள் புரிந்து வழிகாட்டுபவர் என்பதினால் இவரை மார்க்க சஹாயேஸ்வரர் அதாவது நாம் வேண்டி நிற்கும் மார்க்கத்தை அடைய வழிகாட்டுபவர் என்ற பெயரில் அழைக்கிறார்கள். இந்த ஆலயத்தில் சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவி இரண்டு ரூபங்களில்- மங்களாம்பிகை மற்றும் சௌந்தர்யா நாயகி எனும் பெயர்களில்- இரண்டு தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகிறாள். ஆகவே சிவபெருமானை வணங்கித் துதித்தப் பின்னர் மங்களாம்பிகை (மங்களத்தை தருபவள்) மற்றும் சௌந்தர்யா நாயகி ( அழகிய வதனத்தை அதாவது ஆரோக்கியத்தை மீட்டுத் தருபவள்) எனும் இருவரையும் வணங்கித் துதித்தால் மட்டுமே ஒருவர் வேண்டிய எண்ணம் நிறைவேறுமாம்.
பிப்பல முனிவர் 
ஒருமுறை பல சாபங்களைப் பெற்று இருந்து உடல் ரோகத்தைப் பெற்ற பிப்பல முனிவர் என்பவர் உலகில் இருந்த பல ஆலயங்களுக்கும் சென்று வழிபாட்டு உடல் உபாதை நிவாரணம் பெற வேண்டியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. முடிவாக அவர் இங்கு வந்து சிவபெருமானை வேண்டித் துதித்ததும் அவருடைய அத்தனை பிணிகளும் மறைந்து போயினவாம். அதனால் அவருக்கும் இங்கு சிலை வைக்கப்பட்டு உள்ளது. அது போலவே காஷ்மார்ஜுன முனிவரும் இங்கு வந்து தவம் செய்ததாகக் கூறுகிறார்கள்.

இப்படிப்பட்ட பல பெருமைகளைக் கொண்ட இந்த அற்புதமான ஆலயம் அதிக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மாயவரம் -குற்றாலம் பேருந்து பாதையில் சென்றால் மாயவரத்தில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் இடதுபுறத்தில் இந்த பெரிய ஆலயத்தைக் காணலாம். இது ஆதீனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிகிறது.

பிற படங்கள்