அத்தியாயம் – 48

சித்தமுனிவர் கூறிய கதையை கேட்ட நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார்  ‘சித்த முனிவரே. எனக்கு மனதில் ஒரு சின்ன சந்தேகம். எதற்காக ஸ்வாமிகள்  கனக்பூரில்  தங்க முடிவு செய்தார்?

அதற்கு சித்த முனிவர்  கூறலானார் ”ஒரு நாள் தன்னுடைய சிஷ்யர்கள் மற்றும் கிராமத்தினரை அழைத்த ஸ்வாமிகள் அனைவரையும் உடனடியாக  புனித யாத்திரை மேற்கொள்ளத் தயாராக இருக்குமாறு கூறினார். அதற்கு அவர்கள் ‘ஸ்வாமி  வெளியூருக்குச்  செல்வதென்றால்  எங்களுக்கு சிறிது நேரம் வேண்டுமே. நாங்கள் வீட்டுக்குச் சென்று பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு, துணிமணிகளை எடுத்து வர வேண்டும்’ என்றதும்  ஸ்வாமிகள் கூறினார் ‘எதற்காக நீங்கள் துணிமணிகளை எடுத்துக் கொண்டு வர வேண்டும்? கங்கை, பிரயாகை, கயா என்ற மூன்றும் சங்கம் எனும் பெயரில் இங்கேயே உள்ள நிலையில் அந்த நதிக்கு சென்று குளிக்கவே நான் புனித யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்றபோது நீங்கள் எதற்காக வெளியூர் பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்?’ என்று கூறிவிட்டு வீட்டுக்குச் செல்லக் கிளம்பியவர்களை  தடுத்து நிறுத்தினார்.

அவர்கள் ஆச்சர்யத்துடன் கேட்டார்கள் ‘ஸ்வாமி  கங்கை, பிரயாகை, கயா என்ற அந்த மூன்று புனித நதிகளும் இங்கேயே சங்கத்தில் உள்ளதா? அதெப்படி?’ என்று கேட்க ஸ்வாமிகள் கூறினார் ‘இங்குள்ள சங்கம் என்பது பிரயாகை ஆகும். பீமா நதி அங்கு வடக்கு நோக்கி ஓடுகிறது. கங்கை மற்றும் யமுனையைப் போல அமர்ஜா சங்கமும் இங்கு உள்ளன.  அவற்றைத் தவிர சுமார் எண்பது புனித தீர்த்தங்கள் இதை சுற்றி உள்ளன’ என்றார்.

அதைக் கேட்டவர்கள் ‘ஸ்வாமி, இதுவரை நாங்கள் அமரஜா நதியைப் பற்றிக் கேள்விப்பட்டதே  இல்லையே. தயவு செய்து அந்த நதியைப் பற்றிய விவரங்களை எங்களுக்குக் கூறுவீர்களா?’ என்று ஆவலுடன் கேட்க ஸ்வாமிகள் கூறினார் ‘முதலில் அனைவரும் என்னுடன் வந்தால் சங்கத்தில் குளித்து விட்டு வரலாம். அதற்குப் பிறகு நான் உங்களுக்குக் கதையைக் கூறுகிறேன்’ என்ற பின் அனைவரும் ஸ்வாமிகளுடன்  கிளம்பிச் சென்று சங்கத்தில் குளித்து விட்டு வந்தார்கள்.  அதன் பின் அனைவரும் ஸ்வாமிகள் முன் தரையில் அமர்ந்து கொள்ள ஸ்வாமிகள் கதையைக் கூறலானார்:

‘ஒரு முறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூண்டது. அவர்களின் தலைவனான ஜலதாரா என்ற அசுரன் தேவர்களுக்கு பெரும் தொல்லைகளை தந்து கொண்டு இருந்தான். அவனை எளிதில் தேவர்களால் வெல்ல முடியவில்லை. அவனது தாக்குதலைக் தாங்க முடியாமல் போன தேவர்களின் தலைவனான இந்திரன் கைலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டான். அசுரர்களுடன்  நடக்கும் யுத்தத்தில் அசுரர்கள் ஒவ்ஒருவரின் உடலில் இருந்தும் சிந்தும் ஒவ்ஒரு துளி இரத்தமும் புதிய அசுரர்களை  உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது என்றும் யுத்தம் மூன்று லோகங்களுக்கும் பரவி விட்டதினால் பல கடவுட்கள்  கூட கொல்லப்பட்டு விட்டார்கள் எனவும், தான் என்ன செய்வது என்றே தெரியாமல் முழிப்பதாகவும்  கவலையுடன் கூறினார்.

அதைக் கேட்ட சிவபெருமான்  பெரும் கோபம் அடைந்தார்.  தாமே அந்த யுத்தத்தில் கலந்து கொண்டு ராக்ஷசர்களை அழித்து விடுவதாகக் கூறி அவர்களுடன் புறப்பட அதைக் கேட்ட தேவர்கள் அவர் அதில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக வேறு ஏதும் உபாயம் இருந்தால் அதைக் கூறுமாறும் கேட்டார்கள். அதனால் சிவபெருமானும் தேவேந்திரனுக்கு தானே மந்தரித்த ஒரு குடம் அமிர்தத்தைக் கொடுத்து அதை இறந்து போன தேவர்கள் மீது தெளித்தால் அவர்கள் பிழைத்து எழுவார்கள் என்று கூறினார். இந்திரனும் அதைக் கொண்டு போய்  இறந்து கிடந்த தேவர்கள் மீது தெளிக்க அவர்கள் உயிர் பிழைத்து எழுந்தார்கள். அதன் சக்தியினால் அதிக பலம் பெற்ற தேவர்கள் அசுரர்களை அழித்தனர்.

சிவபெருமான் கொடுத்த அமிருதத்தை இந்திரன் கொண்டு சென்றபோது அதில் இருந்து  சில  சொட்டு அமிர்தம் பூமியில் விழுந்தது. அது விழுந்த இடத்தில்தான் அமரஜா நதி உற்பத்தி ஆகி ஓடியது. அந்த நதியில் குளித்தால் அனைத்துப்  பாபங்களும் விலகி விடும், பக்தர்களுடைய வேண்டுகோள் பலிக்கும் என்பது ஐதீகம் ஆயிற்று. முக்கியமாக விசேஷ தினங்களில் அந்த நதியில் குளித்தால் பெரும்  புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம் ஆயிற்று’.

இப்படியாகக் கூறிய பின் ஸ்வாமிகள் அனைவரிடமும் கூறினார் ‘நீங்கள் இனிமேல் அதோ தெரிகிறதே கருநெல்லி மரம். அதை வணங்கி துதித்தப்  பின் மூன்று முறை அதை  பிரதர்ஷணம் செய்ய வேண்டும். உங்களுக்கெல்லாம் நான் ஒரு உண்மையை இன்று கூறப்போகிறேன். இந்த மரத்தில்தான் தத்தாத்திரேயர் எப்போதும் வந்து அமர்ந்து இருப்பார். நானும் அவரது அவதாரமாக உள்ளதினால் இந்த மரத்தில்தான் என்னுடைய ஆத்மா வாசம் செய்கிறது.  என்னை சந்திக்க முடியாதவர்கள் இந்த மரத்தை மூன்று முறை பிரதர்ஷணம் செய்தபின் என்னிடம் இந்த மரத்தடியில் நின்று கொண்டு மனதார வேண்டிக் கொண்டால் நான் அவர்களது குறைகளை தீர்ப்பேன்’ என்று கூறிவிட்டு அவர்களை அழைத்துக் கொண்டு சங்கமேஸ்வரர் ஆலயத்துக்கு சென்றார். அங்கு சென்று சிவபூஜையை எப்படி செய்வது என்பதை அவர்களுக்கு கற்றுத் தந்தார்.

ஸ்வாமிகள் கூறினார் ‘இந்த சங்கமேஸ்வரர் ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுனனுக்கு சமமானவர். முதலில் இங்குள்ள நந்தியின் கொம்புகளை கையினால் பிடித்துக் கொண்டு அதை வணங்கித் துதித்தப்  பின் சிவலிங்கத்தை பிரதர்ஷணம் செய்ய வேண்டும். இப்படியாக மூன்றுமுறை நந்தியையும் சிவபெருமானையும் வணங்க வேண்டும்’. அதைக் கூறிய பின்னர் ஸ்வாமிகள் அடுத்து வாரணாசி தீர்த்ததை பற்றிய பெருமையைக் கூறலானார்  
‘வாரணாசிக்கு அருகில் இருந்த மணிகர்ணா என்ற இடத்தில் பாரத்துவாஜ கோத்திரத்தைச் சார்ந்த பிராமணன் ஒருவன் இருந்தார். அவருக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு. அவர் தத்தாத்திரேயரின் பெரும் பக்தர். என்பதினால் தத்தரைப் போலவே சம்சாரத்தில் பட்டற்ற நிலையில் ஒரு அவதூதரைப் போலவே தன் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தார். அவருக்கு உடை எப்படி உடுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் கூட அக்கரை இருந்தது இல்லை. சில சமயங்களில் நிர்வாணமாவே நடந்து செல்வார். அப்போது அவருடைய சகோதரர்கள் ஓடி வந்து அவருக்கு வேட்டியை உடுத்தி விடுவார்கள். ஒரு முறை அவருடைய சகோதரர்கள் அவரை காசிக்குச் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு வரலாம் என்று புனித யாத்திரைக்கு அழைத்தார்கள். ஆனால் அவரோ காசிக்குச் சென்று காசி விஸ்வேஸ்வரரை  தரிசிக்க வேண்டி அவசியம் இல்லை என்றும், காசி விஸ்வேஸ்வரர் அந்த ஊரிலும் தங்கி உள்ளார் என்பதினால் தான் காசிக்கு அவர்களுடன் செல்ல விரும்பவில்லை என்று கூறி விட்டார்.

அதைக் கேட்ட அவருடைய சகோதரர்கள் ‘பைத்தியக்கார சகோதரரே, காசி விஸ்வநாதர் காசியில்தான் உள்ளார் என்பது இந்த ஜகத்துக்கே தெரியும். அது போல கங்கையும் அங்குதான் ஓடுகிறது என்பதும் அனைவரும் அறிந்த விஷயம். ஆகவே உன் எண்ணத்தை  மாற்றிக் கொண்டு எங்களுடன் வா. அப்படி வர விருப்பம் இல்லை என்றால் எங்கே, இந்த ஊரில் காசி விஸ்வநாதர் தங்கி உள்ளார் என்கிறாயே, அவரை எங்களுக்கும் காட்டேன்’ என்று அவரை கேலி செய்தார்கள்.

ஆகவே  தனது சகோதரர்களுக்கு தன் நம்பிக்கையை வெளிக் காட்ட வேண்டும் என்று விரும்பிய பிராமணன் ‘சரி நீங்கள் என் முன் அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு காசி விஸ்வநாதர் இங்கு இருப்பதை நிரூபிக்கிறேன்’ என்று அவர்களிடம் கூறிவிட்டு ‘சிவபெருமானே நீ உண்மையில் என்னுடைய பக்தியை ஏற்றுக் கொண்டால், நான் உன்னுடைய உண்மையான பக்தன் என்பது உண்மை என்றல், நீ இந்த ஊரிலேயே எழுந்தருளி என்னுடைய சகோதரர்களின் மூடத்தனத்தை போக்க வேண்டும்’ என்று வேண்டியவாறு தவத்தில் அமர்ந்து கொண்டார்.

அவ்வளவுதான் அடுத்த சில மணி நேரத்திலேயே  அந்த மணிகர்ணாவில் காசியைப் போலவே ஒரு நதி ஓட, அவர்கள் இருந்த இடத்திலேயே காசி விஸ்வனாதரைப் போன்றே பெரிய சிவலிங்கமும் தோன்றியது. அதைக் கண்ட அந்த பிராமணர்கள் திடுக்கிட்டு வெளியில் ஓடிச் சென்று பார்த்தபோது மணிகர்ணா சிறிய காசி பட்டணத்தைப் போலவே மாறி இருந்ததைக் கண்டார்கள். அவற்றைக் கண்டவர்கள் தமது மூடத்தனத்தை எண்ணி அவமானம் அடைந்து தமது சகோதரர் கால்களில் விழுந்து காசி விஸ்வனாதரின் மகிமையை தாம் தவறாக எடைப் போட்டு அவரை கேலி செய்ததற்கு தம் சார்ப்பில் தமது சகோதரரே காசி விஸ்வநாதரிடம் தம்மை மன்னிக்குமாறு வேண்டுகோள் வைக்க வேண்டும் என கதறினார்கள். இப்படியாக மனிகர்ணா தோன்றியது’ என்று ஸ்வாமிகள்  அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில் ஸ்வாமிகள் அங்கு தங்கி இருந்ததைக் கேள்விப்பட்ட ரத்னாபாய் எனும் அவரது சகோதரி அங்கு வந்து ஸ்வாமிகளின்  கால்களில் விழுந்து வணங்கி தான் மிகவும் துன்பத்தில் உழன்று கொண்டு உள்ளதாகவும் அதற்குக் காரணம் மற்றும் அதை விலக்கிக்  கொள்ள பரிகாரமும் கூற  வேண்டும் என அவரிடம் கெஞ்சினாள்.

அதைக் கேட்ட ஸ்வாமிகளும்  அவளுடைய பூர்வஜென்ம பாபத்தை அவளுக்கு விளக்கிக் கூறினார்  ‘அம்மணி, பூர்வ ஜென்மத்தில் உன் வீட்டின்  பின்புறத்தில் பெரிய அடுப்பை பூமியில் தோண்டி வைத்து இருந்தாய். அதில்தான் விறகுகளைப் போட்டு அதற்கு தீமூட்டி அண்டாவை வைத்து குளிப்பதற்கு வெந்நீரை சுட வைப்பாய். ஒருமுறை குளிர் காலத்தில்  உடலுக்கு இதமாக சூட்டை தந்தவண்ணம்  இருந்த அந்த அடுப்பின் அருகில் ஒரு இரவில் வந்த ஒரு பூனை தனது ஐந்து குட்டிகளுடன் வந்து படுத்துக் கொண்டு உறங்கி விட்டது. அதை விடியற்காலை கவனிக்காத நீயும் எரியும் கட்டையை எடுத்துக் கொண்டு வந்து அந்த அடுப்பில் போட்டு கட்டைகளை அடுக்கினாய். அந்த தீயில் வெந்து விட்ட அந்த பூனைகள் அப்படியே துடிதுடித்து மரணம் அடைந்து விட்டன. அப்போது அவை கொடுத்த சாபம் பல ஜென்மங்களுக்கு உன்னை வாட்டுவதாக அமைந்தது. நீ  அறியாமலேயே செய்த பாவம்தான் அது என்றாலும், அவற்றின் சாபம் உனக்கு இந்த ஜென்மத்தில் துன்பத்தைக் கொடுத்து உள்ளது. ஆகவே நீ அந்த சாபங்கள் அனைத்தையும் இந்த ஜென்மத்திலேயே கழித்து விட விரும்புகிறாயா, இல்லை அடுத்தடுத்த சில ஜென்மங்களுக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறாயா என்பதை கூறினால் அதற்கேற்ப பாப விமோசனத்தை உனக்குக் கூறுவேன்’ என்றார்.

அதைக் கேட்ட ரத்னாபாயும் இந்த ஜென்மத்தில் தமக்கு வழிகாட்டியாக ஸ்வாமிகள் உள்ளதினால் அந்த நம்பிக்கையில் தான் இந்த ஜென்மத்திலேயே அந்த சாபத்தைக் களைந்து கொள்வதாக ஸ்வாமிகளிடம்  கூறினாள். அப்படிக் கூறியதுமே அவள் உடம்பெங்கும் குஷ்ட நோய் பற்றிக் கொண்டது. ஸ்வாமிகள் அவளிடம் கூறினார் ‘ரத்னாபாய், நீ தினமும் சங்கத்தில் குளித்து விட்டு அங்குள்ள கருநெல்லி மரத்தை மூன்று முறை பிரதர்ஷனம் செய்து வா. உனது பாபங்கள் இந்த ஜென்மத்துடன் விலகிவிடும்’ என்றார். அவர் கூறியதைப் போலவே ரத்னாபாயும் அங்கேயே தங்கி இருந்தவாறு தினமும் சங்கத்தில் குளித்துவிட்டு கருநெல்லி மரத்தை பிரதர்ஷணம் செய்து  கொண்டு இருந்தாள். காலப்போக்கில் அவளுடைய வியாதியின் கடுமை குறைந்தாலும் அவள் குஷ்டரோக வியாதியுடனேயே இருந்து மரணம் அடைந்து மோட்ஷத்தை அடைந்தாள்.

அடுத்து தன்னுடன் வந்த பக்தர்களை அங்கிருந்த கோடி தீர்த்தத்திற்கு அழைத்துச் சென்று அதன் மகிமையையும் எடுத்துரைத்தார். அதன் பின் அதை சுற்றி இருந்த எட்டு புனிதத் தலங்களான ருத்திர தீர்த்தம், மன்மத தீர்த்தம், சக்கர தீர்த்தம், கல்லேஸ்வரர் ஆலயம் போன்ற இடங்களுக்கும் அழைத்துச் சென்று அவற்றின் பெருமைகளை விளக்கிக் கூறினார். இப்படியாக ஸ்ரீ நருசிம்ம  ஸரஸ்வதி ஸ்வாமிகள் அந்த ஊரில் இருந்த அனைத்து மக்களுக்கும் அந்த ஊரின் பல மகிமை வாய்ந்த  செய்திகளைக் கூறி ஆசிர்வதித்தார்” என்று சித்த முனிவர் நமத்ஹரகாவுக்குக் கூறினார் (இத்துடன் அத்தியாயம்-48 முடிவடைந்தது).

……….தொடரும்