அத்தியாயம் -27

அப்பொழுது அந்த வழியே எதேற்சையாக  சென்று கொண்டு இருந்த கீழ் ஜாதியை சேர்ந்தவன் எனக் கருதப்படும் ஒரு சண்டாளன் அங்கு இருந்த  குருதேவரை பார்த்தவுடன் ஓடி வந்து அவரை நமஸ்கரித்தான். அவர் முன் கைகளைக் கூப்பிக் கொண்டு நின்றவனிடம் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் தம்முடன் தர்க்கம் செய்து கொண்டு இருந்த அந்த பண்டிதர்கள் எதிரிலேயே  கேட்டார் ‘அப்பனே நீ யார், எங்கு வசிக்கின்றாய்?’

அதற்கு அந்த சண்டாளன் கூறினான் ‘மகாதேவா, நான் மாதங்கா என்ற கீழ் ஜாதியை  சேர்ந்தவன். காட்டில்  வசிக்கிறேன்’ என்று கூறியதும் குருதேவர் தம்முடைய  சிஷ்யரை அழைத்தார். அவரிடம்  கை தடி எனும் தண்டத்தை தந்தவர் அந்த சண்டாளன் முன் ஒவ்வொரு கோட்டுக்கும் நிறைய இடைவெளி விட்டு  ஏழு கோடுகளை போடும்படிக் கூறினார். அதன் பின் அந்த சண்டாளனை  அந்த ஏழு கோடுகளையும் ஒவ்வொரு கோடாக தாண்டுமாறு  கூறினார். குருதேவர் ஆணையிட்டது போல முதல் கோட்டை அவன் தாண்டியதும் குருதேவர் ‘இப்போது நீ யார்’ என்று கேட்டதும், அவன் கூறினான் நான் ‘கிராட் என்பவன்’.  அடுத்தக் கோட்டை அவன் தாண்டியதும் முன் போலவே ‘நீ யார்’ என்று  கேட்டார். இப்படியாக ஒவ்வொரு கோடாக தாண்டியதும் குருதேவரும்  அவனிடம்’ நீ யார்’ என்று  கேட்டபடி இருக்க அவனும் தன்னை ஒரு  வேடன், மீனவன், சூத்திரன், வைஷ்யா, ஷத்ரியா  எனக் கூற ஏழாவது கோட்டைத் தாண்டியதும் தான் ஒரு பிராமணண் என்றான்.

அந்த ஏழாவது கோட்டைத் தாண்டியதும், தன்னை பிராமணன் என்று கூறியதும்  குருதேவர் சில மந்திரங்களை உச்சரித்தப் பின்  சிறிது  வீபுதியை அவன் மீது தூவினார். அதன் பின் கேட்டார் ‘இப்போது நீ யார்?’  அவன் தன்னை முன் பிறவியில் வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்த ஞான பண்டிதர் என்று கூறியதும், குருதேவர் அவனை தன் முன் நின்று இருந்த பண்டிதர்களிடம் அவனைக் காட்டி ‘இனி நீ இவர்களுடன் வேத சாஸ்திரங்களில் தர்க்கம் செய்’ என்றார். வந்திருந்த பண்டிதர்கள் இவனுடனா தர்க்கம் செய்ய வேண்டும் என்றார்கள். குருதேவர் கூறினார் ‘யாராக இருந்தால் என்ன? வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்த எவரும் உங்களுடன் தர்க்கம் செய்யலாம். இந்த மனிதன் பிறப்பால் சண்டாளன் என்றாலும், பூர்வ ஜென்மங்களில் ஞான பண்டிதனாக இருந்தவன். முடிந்தால் இவனுடன் தர்க்கம் செய்து வெற்றிப் பெற்றுக் காட்டுங்கள். இல்லை என்றால் இவனிடம் தோற்று விட்டதாக எழுதிக் கொடுத்து விட்டுப் போகலாம்’ என்று ஒரு அர்த்தமுள்ள புன்சிரிப்புடன் கூறினார்.

வந்தவர்கள் இறுமாப்பு கொண்டவர்கள் என்பதினால் இவனை ஒரே கேள்வியில் வீழ்த்துகிறோம் பாருங்கள் என்று சூளுரைத்து நிற்க தர்க்கம் துவங்கியது.  பல்வேறு தர்ம சாஸ்திர, வேத சாஸ்திரங்களை குறித்துக் கேள்வி மேல் கேள்வி எழுப்ப அத்தனை கேள்விகளையும் நொடியில் தவிடு பொடியாகும் அளவில் உதாரணங்களைக் காட்டி தர்க்கம் புரிந்தான் அந்த சண்டாளன். வந்திருந்த பண்டிதர்களால் குருதேவரினால் ஞானம் தரப்பட்ட சண்டாளனுக்கு  ஈடு கொடுக்க முடியாமல் திணறிப் போயினர். அதற்கு மேலும் தர்க்கம் புரிய முடியாத நிலைக்கு சென்று விட்டப் பின் வந்தவர்கள் தாம் அனைவரும் தோற்றுப் போனதை ஒப்புக் கொண்டு குருதேவர் முன்னால்  தலையை குனிந்து கொண்டு அவமானத்துடன் நின்றார்கள். குருதேவரின் கால்களில் விழுந்து வணங்கி தங்களுடைய தவறை மன்னித்து விட்டு தமக்கும் அருள் புரியுமாறு கேட்டார்கள்.

ஆனால் குருதேவர் கூறினார் ‘பண்டிதர்களே உங்களுடைய ஆணவத்தினால் நீங்கள் திருவிக்கிரமபாரதியை  அவமதித்தீர்கள். ஆகவே நீங்கள் அதற்கான  தண்டனையை பெற்றே தீர வேண்டும். அதனால்  நீங்கள் பிரும்ம இராட்சசர்களாக ஆகப் போகின்றீர்கள் என்பதில் ஐயம் இல்லை. உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்க வேண்டிய நேரத்தில்  சுகநாராயணன்  என்ற பெரிய மகான் உங்கள் முன் வருவார். அவர் வந்து உங்களது சாபத்தை தீர்ப்பார். ஆகவே நீங்கள் இங்குள்ள நதியில் சென்று குளித்து விட்டுச் செல்லுங்கள்’ என்றார். அவர்களும் குருதேவரின் ஆணையை ஏற்றுக் கொண்டு நதியில் குளித்து விட்டு எழுந்தார்கள். அவ்வளவுதான் நதியில் குளித்து விட்டு எழுந்தவர்கள் அப்படியே பிரும்ம ராக்ஷசர்களாகி விட்டார்கள்.

அனைத்தையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்த பிராமணணாக மாறிய சண்டாளன் குருதேவரிடம் கேட்டான் ‘மகாத்மா, பூர்வ ஜென்மத்தில் பிராமணனாக இருந்த நான் ஏன் இந்த ஜென்மத்தில் சண்டாளனாகப் பிறந்தேன்?’ (இதனுடன் அத்தியாயம் -27 முடிவடைந்தது) .
———————-
சிறு விளக்கம் :- 

மேலே இதை தொடரும் முன் வாசகர்களுக்கு இங்கு சின்ன விளக்கத்தைக் கொடுக்க வேண்டி உள்ளது. இதற்கும் குரு சரித்திரத்துக்கும் தொடர்ப்பில்ல. ஆனால் இது அந்த நூலில் கூறப்பட்டு உள்ள சில செய்திகளின் விளக்க உரை ஆகும்.

இந்த குரு சரித்திரத்தைப் படிப்பவர்கள் ஒன்றை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜாதி பேதங்களை எடுத்துக் காட்டும் விதத்தில் இது அமைந்துள்ளதாகக் கருதி, இது என்ன உயர் ஜாதியினரை மட்டும் உயர்த்திக் காட்டும் புத்தகமா, அப்படி என்றால் தாழ்ந்த ஜாதியினரை  கீழ்த்தரத்தில் காட்டும் இதை படிப்பதினால் என்ன பயன் பெற முடியும் ? கீழ் ஜாதியினருக்கு தெய்வ அருள் கிடைக்காதா போன்ற சந்தேகங்கள் நிச்சயமாக எழும். ஆகவேதான் இங்கு இந்த விளக்கத்தை தர வேண்டி உள்ளது.

அங்காங்கே  பிராமணர்கள் என்றும் சண்டாளன் என்றும் இந்த நூலில் கூறப்பட்டு உள்ளது. அந்த காலத்தில் இப்படியாக குறிப்பிடப்பட்டு உள்ளவை  ஜாதியை அடிப்படையாக கொண்டு கூறப்பட்டவை அல்ல. ஆகவே நாம் சில உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏன் என்றால் இந்த வேத நூலை யார் வேண்டுமானாலும், எந்த ஜாதியை சேர்ந்தவர் வேண்டுமானாலும் படிக்கலாம். அதற்கேற்ப பலன்களை அவர்கள் நிச்சயமாக அடைய முடியும் என்பதே என் திடமான கருத்தாகும்.

ஸ்வாமியின் போதனையில் அங்காங்கே சண்டாளர்கள் என்றும் சூத்திரர்கள் என்றும் கூறப்படும் வார்த்தைகள் ஜாதியைக் குறித்து கூறப்பட்டவை அல்ல. சண்டாளன் என்று அவர் கூறும்போது அவர் எந்த ஜாதியையும் குறிப்பிடவில்லை என்பதே உண்மை நிலை. ஒரு  சண்டாளன்தானே ஆதி சங்கருக்கே ஜாதிகள் தெய்வீகத்திற்கு அப்பாற்பட்டது என்பதை உணர்த்தியவன். தத்தாத்திரேயர் ஒரு சண்டாளன் உருவில் இருந்தவாறு அல்லவா தன்னை யார் என்று காட்டி ஒரு மன்னனுக்கு  போதனைகளை செய்தார். தெய்வங்களே சண்டாளர்கள் உருவில் வந்தது ஏன்?   ஆகவேதான் கூறுகிறேன் சண்டாளன் என்பது மாயையான உருவகமே தவிர ஜாதி அல்ல.  
 

தீய செயல்களைப் புரிபவர்கள் சண்டாளர்களாக பிறப்பு எடுப்பார்கள் என்ற வார்த்தை சமுதாயத்தில் மிக மிக ஏழ்மை நிலையில் இருந்து கொண்டு, உண்ணவே வழி இன்றி, அங்காங்கே உணவு உண்டவர்களின் இலைகளில் மீந்து கிடக்கும் உணவுகளை உண்டு கொண்டு, தங்க இடம் இன்றி, குப்பைக் கூளங்கள் இருந்த இடங்களில் தங்கிக் கொண்டு, மாற்று துணிக் கூட உடுத்த உடை இன்றி, தாங்க முடியாத ஏழ்மை நிலையில் இருப்பார்கள் என்பதைக் குறிக்கும் வகையிலேயே அந்த நிலையில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை சண்டாளன் என்று நாமகரணம் செய்திருக்க வேண்டும். ஏன் எனில் அந்தப் பிரிவினர் அதாவது சண்டாளர்கள் என்பவர்கள் உண்ணவே வழியற்று இருந்ததினால் கல்வி அறிவு பெற முடியாத நிலையில் இருந்தவர்கள். அவர்கள் அசுத்தமான இடங்களில் வாழ்ந்து கொண்டு இருந்ததினால் கிட்டே வந்தாலே நாற்றம் அடிக்கும் நிலை. அவர்களுக்கு எந்த விதமான செல்வமும் இல்லை என்பதினால் அவர்களால் சுத்தமாக இருக்க முடியவில்லை. அந்த அசுத்த நிலையில் வாழ்ந்தவர்களை ஆலயங்களுக்கு விட மறுத்தார்கள். மற்ற ஜாதியினர் அவர்களிடம் பழகவில்லை. அத்தனை கொடுமையான வாழ்க்கையில்  அவர்கள் இருந்து வந்ததினால்தான் அவர்களை வாழ்க்கையில்  தீர்க்க முடியாத கொடுமைகளை அனுபவிப்பவர்கள்  என்று கூறி அந்த வாழ்க்கையில் உழன்று கொண்டிருந்தவர்களின் பெயரை சண்டாளன் என வைத்தார்கள்.  சண்டாளர்கள் என்பதற்கு குப்பைக் கூளத்தில் உள்ளவர், தீயவர், கொலைஞர், பேய், கொடுமை செய்தவன் போன்ற அர்த்தங்கள் பலவும் உள்ளன. 
 

இவற்றை எல்லாம் பார்க்கும்போது சண்டாளன் என்ற நாமகரணம் எந்த ஜாதியையும் குறிக்கவில்லை. பூர்வ ஜென்மத்தில் செய்த பாவங்களினால் அடுத்த ஜென்மத்தில் நரக வேதனையைத் தரும் கொடுமையான வாழ்க்கையில் வாழ்பவராக பிறக்க வேண்டும், பொருளாதாரத்தில் மிகக் கீழ் நிலையில் உள்ளவர்களாகப் பிறக்க வேண்டும் என்பதையே சண்டாளனாக பிறப்பார்கள்  என்ற பெயரில் சாபமிட்டார்கள். இந்த உண்மையான பின்னணி பின்னர் மருவி ஜாதி பேதங்களில் கொண்டு விட்டுள்ளது என்பது வேறு கதை .

அது போலவே பிராமணன் என்பது அந்தணர்கள் அனைவரையும் குறிக்கும் சொல் அல்ல. பிராமணர்கள் என நாமகரணம் பெற்றவர்கள் அந்தணர் பிரிவில் ஒரு பிரிவினர் ஆகும். அந்தணர்களில் வேதம் ஓதியபடி, மந்திரங்களை ஓதியபடி, பூஜை புனஸ்காரங்களை செய்தபடி, வீடுகளில் சென்று பிட்ஷை  எடுத்து, வைதீக காரியங்களில் தமக்குக் கிடைக்கும் தான தர்மங்களைக் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் வேத பிராமணர்கள் எனப்பட்டார்கள். அதுவே மருவி பொதுவாக பிராமணர் என்று ஆயிற்று. அவர்களால் வேறு வேலைகளுக்கு செல்ல முடியவில்லை. பெரும்பாலும் குருகுலவாசத்தில் இருந்து கொண்டு வேதங்களைப் பயின்றார்கள், மந்திரங்களை பயின்று அவற்றை ஓதி யாகங்கள், யக்யங்கலை செய்து அதில் கிடைத்த தானங்களை பெற்று வாழ்கையை ஓட்டினார்கள். அவற்றைத் தவிர புரோகிதத் தொழிலிலும் ஈடுபட்டார்கள். அப்படிப்பட்ட பிராமணர்கள் தங்களுடைய தின வாழ்வில் அனுஷ்டிக்க வேண்டிய கடுமையான நடைமுறைகள், வாழ்க்கை நெறி முறைகள் போன்றவை ன்னென்ன என்று பராசர முனிவர் ரிஷி முனிவர்களுக்கு கூறியவற்றை   ஸ்வாமிகள்   பிராமணனாக மாறிய ஒரு சண்டாளனுக்கு  எடுத்துக் கூறியவை  இந்த நூலில்  உள்ளன .

ஆனால் இன்றைய நிலைமை என்ன? அந்தணர்களில் பிராமணர்களில் பலர் பல்வேறு வேலைக்குச் சென்று பிழைக்கிறார்கள். புரோகிதம் செய்பவர்களின் வீடுகளிலேயே அவர்கள் பிள்ளைகள் படித்து வேறு வேலைகளுக்குச் செல்கிறார்கள். அவர்களால் இந்த வேத நூலில் கூறப்பட்டு உள்ளது போல தினமும் மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்து கொண்டும், குடுமி வைத்துக் கொண்டும், கடுமையான ஆசாரங்களை அனுஷ்டித்துக் கொண்டும், கடுமையான விரதங்களை அனுஷ்டித்துக் கொண்டும் இருக்க முடியுமா? அவர்களும்  பண்டைய கால வேத பிராமணர்களாகவே இருக்க முடியுமா?  வேத தர்மங்களை நிலைநாட்ட அந்த தொழிலை செய்யும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் -வேத பிராமணர்கள்- இப்படியாக வாழ வேண்டும் என்ற போதனைகள் தரப்பட்டு உள்ளன.
 

இந்த காலத்தில் இன்னமும் மிக மிகச் சிறிய அளவிலேயே அதுவும் கிராமப்புறங்களில் மட்டுமே இத்தகைய வாழ்கையை வாழும்  வேத பிராமணர்கள் இருக்கிறார்கள். அதை பிராமண தர்மம் என்றும் கூறிக் கொள்வார்கள். அந்த நடைமுறைகளை மீறி நடந்தால் அடுத்த பிறவியில் கொடுமையான வாழ்க்கையில் வாழ்பவராக, பொருளாதாரத்தில் மிகக் கீழ் நிலையில்  உள்ளவர்களாக  அதாவது  சண்டாளனாக   பிறப்பார்கள்  என்று  கூறினார்கள். அது போல குறிப்பிட்ட தீய செயல்களை செய்வது அடுத்தடுத்த பிறவிகளில் என்னென்ன பிறவிகளைக் கொடுக்கும் என்பதையும் இந்த நூலில் ஸ்வாமிகள் கூறி உள்ளார்.   மானிடப் பிறவியிலேயே மிக கொடுமையான வாழ்க்கையில் உள்ள நிலையில் பிறப்பதையே சண்டாளப் பிறவி என்று கூறுகிறது. ஆகவே ஜாதியை மனதில் கொண்டு இந்த நூலை பாராயணம் செய்வதை மனதில் இருந்து தவிர்க்க வேண்டும், கொடுமையான வாழ்கையை அனுபவித்துக் கொண்டு பொருளாதாரத்தில் மிகக் கீழ் நிலையில் உள்ளவ சண்டாளர்கள் எனப்படுபவர்கள் கூட இந்த நூலினை பாராயணம் செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது இதன் சாரம் ஆகும் .

இந்த குரு சரித்திரத்தை பிராமணர்கள் அல்லது உயர்சாதியினர் மட்டுமா படித்து பாராயணம் செய்ய வேண்டும் என்றால் நிச்சயமாக அது இல்லை எனலாம். அன்று சண்டாளர்கள் என்று அன்று கூறப்பட்டவர்களில் பலர் இன்று படித்து கல்வி அறிவு பெற்று நல்ல நிலையில் வாழ்கிறார்கள். அவர்கள் ஆலயங்களுக்கு செல்லவில்லையா, பூஜை புனஸ்காரங்களை செல்லவில்லையா? ஆகவே வாழ்க்கையில் மேல் நிலையை அடைய நினைக்கும் அனைவருமே ஜாதி பேதம் இன்றி  இதைப் பாராயணம் செய்யலாம்.  இந்த நூல் அனைவருக்கும் பொதுவான நூல் என்பதே எனது கருத்து .   – சாந்திப்பிரியா 

…………தொடரும்