அத்தியாயம் – 9

நமத்ஹரகா சித்த முனிவரிடம் மீண்டும் பணிவுடன் கேட்டார் ”சித்த முனிவரே, இந்த சம்பவத்தைத் தவிர ஸ்ரீ பாத வல்லபா வேறு ஏதும் மகிமைகளை நடத்திக் காட்டி உள்ளாரா? அப்படி என்றால் அதைக் குறித்து எனக்கும் கூறுவீர்களா?” என ஆவலுடன் கேட்க சித்த முனிவர் மீண்டும் கூறலானார்.

”நமத்ஹரகா  காலத்தில் குருபுரம் என்ற ஒரு ஊர் இருந்தது. அங்கிருந்த நதியில் தினமும் ஒரு வண்ணான் வந்து துணிகளை துவைத்து எடுத்துச் செல்வது வழக்கம்.  அப்போது ஸ்ரீ பாத வல்லபா அவர்களும் அந்த ஊரில் இருந்தார்கள்.  அந்த வண்ணானுக்கு ஸ்வாமிகளிடம் பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு என்பதினால் அவருக்கு  எந்த விதத்திலாவது சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆகவே ஸ்வாமிகள் நதியில் குளிக்கச் செல்கையில் தானும் அவர் பின்னால் சென்று அவர் குளித்தவுடன் அவரது துணிகளை துவைத்துக் கொடுப்பான்.  அது மட்டும் அல்லாமல் அவருடைய  குடிலுக்கும் சென்று அவர் சமையல் பாத்திரங்களை துலக்கிக் கொடுப்பதும், குடிலை பெருக்கி சுத்தப்படுத்திக் கொடுப்பதையும் ஒரு வாழ்கை முறையாகவே வைத்து இருந்தான்.  ஸ்ரீ பாத வல்லபா அவர்களுக்கு எந்த ஜாதி துவேஷமும் இல்லை என்பதினால் அந்த வண்ணான் செய்து வந்த பணிவிடைகளை  மனதார ஏற்றுக் கொண்டார்.

இப்படியாக அந்த வண்ணான் பல காலம் அவருக்கு பணிவிடைகளை செய்து வந்தபோது ஒரு நாள் அந்த நதியில் ஒரு முஸ்லிம் மன்னன் தனது படையினருடன்  நூற்றுக்கணக்கான கப்பல்களில் அந்த வழியே பயணம் செய்து கொண்டு இருந்ததைக் கண்டான். அந்த மன்னனின் கழுத்திலும், உடம்பிலும் ஆபரணங்கள் மின்னின. அவ்வப்ப்போது படைவீரர்கள் வந்து அவருக்கு ஏதேதோ பணிவிடை செய்தவண்ணம் இருந்தார்கள், உண்பதற்கு பல்வேறு பழங்கள் மற்றும் உணவுகளையும் கொண்டு வந்து தந்தார்கள். அதைக் கண்ட வண்ணான் மனதில் நினைத்தான் ‘ஆஹா… மன்னன் என்றால் இப்படித்தான் சேவகம் செய்வார்கள் போலும்! இத்தனை  சுகமாக இருக்க  அருள் புரியும் எந்தக் கடவுளை அந்த மன்னன் வணங்கித் துதிக்கிறான் என்று தெரியவில்லையே’.

அன்று தனக்கு பணிவிடைகளை செய்ய வந்த வண்ணானின் மனதில் இருந்த அந்த ஏக்கத்தை ஸ்வாமிகள் புரிந்து கொண்டார். அவனிடம் அவர் கேட்டார் ‘குழந்தாய் (பெரியவர்கள் தம்மைவிட சிறியவர் எத்தனை வயதானாலும் அவர்களை உரிமையோடு குழந்தாய், மகனே, அம்மணி மற்றும் மகளே என்றே அழைப்பார்கள். இந்தப் பழக்கத்தை  சாதாரணமாக அனைவரும் கடைபிடித்தார்கள்), உனக்கும் அந்த மன்னனைப் போல அத்தனை சுகபோகமாக வாழ ஆசையாக உள்ளதா?’. வண்ணன் கூறினான் ‘ஸ்வாமி, உங்களுக்கு சேவகம் செய்வதை பெரும் பாக்கியமாக நான் கருதினாலும், உள்ளுக்குள்ளே நான் ஏழை என்ற ஏக்கம் என்னை விட்டு அகலாமல் உள்ளது. அதனால்தான் இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டால் என்னை அறியாமல் என் மனதிலும் ஆசை துளிர் விட்டு விடுகிறது. அதற்கு நீங்கள் என்னை மன்னித்து விட வேண்டும்’. அதைக் கேட்ட ஸ்வாமிகள்  அவனுக்கு ஆறுதல் கூறினார்  ‘குழந்தாய் இதில் உன் தவறு ஏதும் இல்லை.  இது இயற்கை ஆகும். உன்னுடைய நல்ல குணத்தினால் நீ என்னிடம் மறைக்காமல் உன் மனதில் இருந்ததை கூறி விட்டாய். கவலைப் படாதே. நீ அடுத்த ஜென்மத்தில் பீதார் எனும் நகரில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து அந்த நாட்டின் மன்னனாக இருப்பாய். அப்போது நானும் உன்னை வேறு அவதாரத்தில் வந்து சந்திப்பேன். கவலைப்படாதே. உன்னுடைய இந்த ஜென்ம அனைத்து ஆசையும்  அடுத்த ஜென்மத்தில் நிறைவேறும்’ என்று கூறி அவனை ஆசிர்வதித்தார்.

அப்போது அந்த வண்ணான் பணிவாக அவரிடம் கேட்டான் ‘ஸ்வாமி , நீங்கள் எனக்குத் தந்த இந்த ஆசிகளே எனக்கு போதுமானது. ஆனால் ஒருவேளை நான் அடுத்த ஜென்மத்தில் நீங்கள் அருள்புரிந்தபடி முஸ்லிம் மன்னனாக ஆகிவிட்டாலும், உங்களுக்கு எந்த விதத்திலாவது பணிவிடை செய்யும் நிலையில்தான் இருக்க வேண்டும். அப்போது இந்த ஜென்மத்தின் வாழ்வை நான் அறிந்து கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. அதற்கும் நீங்கள் அருள் புரிய வேண்டும்’ .

அவன் கூறியதைக் கேட்டு மனம் மகிழ்ந்த ஸ்ரீ பாத வல்லபா அவனிடம் கூறினார் ‘குழந்தாய், நீ நிச்சயம் அடுத்த ஜென்மத்திலும் எனக்கு சேவகம் செய்யும் வாழ்க்கையுடன் இருப்பாய். அப்போது உனக்கும் பூர்வ ஜென்ம வாழ்கை, அதாவது இந்த ஜென்ம வாழ்கை நினைவில் இருக்கும் வகையில் நீயும் இருப்பாய்’.

விரைவில் அந்த வண்ணானும் இறந்து போனான். பீதார் நகரில்  ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து மன்னனாகவும் ஆகிவிட்டான். அதற்கு இடையில் குருபுரத்தில் தங்கி இருந்த ஸ்ரீ பாத வல்லபா அவர்களும் நதியின் உள்ளே நடந்து சென்று போய் அங்கிருந்து அப்படியே மறைந்து விட்டார். அவர் கரையில் விட்டுச் சென்ற பாதுகைகளையே  இன்றும் குருபுரத்தில் உள்ள ஆலயத்தில் பக்தர்கள் வணங்கி வருகிறார்கள். அந்த இடம் இன்றும் புனித ஷேத்திரமாக கருதப்பட்டு வருகிறது  (இத்துடன் அத்தியாயம் -9 முடிந்தது).

 ……..தொடரும்