தத்தாத்திரேய அவதாரங்களாக பல மகான்கள் அவதரித்து உள்ளார்கள். மும்மூர்த்திகளின் அவதாரமான தத்தாத்திரேயர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்  இந்த பூமியில் ஒரு அவதூதராக அவதரித்தார். அவர் அதி சக்தி பெற்றவர். அவரைப் பற்றி விவரங்கள் மற்றும் அவரை ஆராதிப்பது போன்றவை மராட்டிய மற்றும் கர்நாடக மானிலங்களில் மட்டுமே மிக அதிகமாக உள்ளது. அதற்குக் காரணமும் இந்த இரண்டு மானிலங்களில் மட்டுமே தத்தாத்திரேய அவதாரங்களாக பல மகான்கள் இருந்துள்ளார்கள் என்பதே. எங்கெல்லாம் மராட்டிய மக்கள் அதிகம் வசிப்பார்களோ அங்கெல்லாம் தத்தர் வழிபாடு அதிகம் உள்ளன. கால ஓட்டத்தில் மெல்ல மெல்ல தத்தர் வழிபாடும், அவருடைய சக்தியும் பிற மானிலங்களிலும் பரவலாயிற்று.  ‘தத்த பரம்பரா’ என்பதில் ஸ்ரீபாதவல்லபா மற்றும் ஸ்ரீ ந்ருசிம்ம சரஸ்வதி ஆகிய இரு சத்புருஷர்களும் மிக முக்கியமாக மற்றும் மேன்மையானவர்களாக கருதப்படுபவர்கள். ஏன் ஷீரடி சாயி பாபா கூட தத்தரின் அவதாரமே என்கிறார்கள்.  இந்த நிலையில் மக்கள் மிக அதிகமாக போற்றிப் படிக்கும்  குரு போதனைகள் அதாவது ‘குருசரிதம்’ என்ற புத்தகம் தத்தரின் பக்தர்களினால் வேத புத்தகமாகவே படிக்கப்பட்டு வருகிறது.  அதைப் பாராயணம் செய்வதினால் தத்தாத்திரேயர் அருள் கிடைத்து புத்திர பாக்கியம், செல்வம், வளமான வாழ்க்கை என அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பரவலான நம்பிக்கை.  குரு சரித்திரம் என்பது சுமார் 600 அல்லது 700  ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இந்த மூல புத்தகம் சமஸ்கிருதம் மற்றும் மராட்டிய மொழிகளில் இரு மொழிகளைக் கலந்து எழுதப்பட்டு உள்ளதாக  கூறுவார்கள்.   இந்த புத்தகம் பல பாகங்களாக எழுதப்பட்டு உள்ளது.  ஞான காண்டம், கர்ம காண்டம் மற்றும் பக்தி காண்டம் என மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டு எழுதப்பட்டு உள்ள  இந்த புத்தகம்   ஸ்ரீ நரசிம்ஹ சரஸ்வதி ஸ்வாமிகளின் சீடரான ஒரு சித்தர் ஸ்ரீ நரசிம்ஹ சரஸ்வதி ஸ்வாமிகளின் பெருமைகளை அவருடைய ஒரு பக்தரான நமத்ஹரகா என்பவருக்கு விளக்கிக் கூறியதான கதையை உள்ளடக்கி எழுதப்பட்டு உள்ளது .
இனி குரு சரிதாவை படிப்போம்:
அத்தியாயம் – 1

நமத்ஹரகா எனும் அந்தணர் ஸ்ரீ நரசிம்ஹ ஸ்வாமிகளின் மகிமைகளைப் பற்றிக் கேட்டறிந்திருந்தார். அவர் அந்தணர் அல்ல, துவஜகுலா எனும் குலத்தில் பிறந்தவர் என்றும் ஒரு கதை உண்டு. அவர்களும் பிராமணர்களைப் போல பூணூல் தரிப்பவர்களே ஆவார்கள். ஆகவே தமது சமய முறைக்கு ஏற்ப எட்டு வயதிலேயே பூணூல் அணிந்து கொண்டவர். ஸ்ரீ நரசிம்ஹ ஸ்வாமிகளின் மகிமைகளைப் பற்றிக் கேட்டறிந்திருந்த அவர் தானும் அவருடைய சீடராக வேண்டும் என்ற எண்ணத்துடன் குருவைத் தேடி அலையத் துவங்கினார். அவருக்கு தம்முடைய குரு எங்கிருப்பார் என்பது தெரியவில்லை. அப்போது ஸ்ரீ நரசிம்ஹ ஸ்வாமிகள் கர்நாடகத்தில் இருந்த கனகபுரா எனும் ஊரில் இருந்தார். அதைக் கேள்விப்பட்டவர் உடனடியாக தனது குருவை தேடியவாறு தலையில் சிறு மூட்டையில் தனக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு எங்கு போகின்றோம் என்பது கூடத் தெரியாமல் நெடிய பயணத்தைத் துவக்கினார்.

நடந்து கொண்டே சென்றவர் வழி நெடுக தனது குருநாதரை அடையாளம் காட்டுமாறு தன் மனதில் தோன்றிய தெய்வங்களை வேண்டிக் கொண்டே சென்று கொண்டு இருந்தார். ‘ தெய்வமே, மும்மூர்த்திகளின் அவதாரமே, அனைவருக்கும் கருணைக் காட்டுபவரே, உமது பாதங்களை தரிசித்தமட்டிலேயே அனைத்து பாபங்களும் விலகும் என்கிறார்களே, நான் ஒரு அனாதை. எனக்கு வேறு யாருமே இல்லை. பசியால் அழும் குழந்தை அழுது கொண்டே இருக்கட்டும் என்று எந்த தாயாவது மெளனமாக அதைப் பார்த்துக் கொண்டு இருப்பாளா? அது போலத்தான், எனக்கு அன்னை, பிதா, தெய்வம், உற்றார், உறவினர் என இந்த அனாதைக்கு அனைவருமாக உள்ள நீங்களே இத்தனை நாளாகியும் இந்த ஆதரவற்ற அனாதைக்கு காட்சி தராமல் ஏன் ஏமாற்றுகிறீர்கள்? நான் செய்த பிழைதான் என்ன? நான் என்னை அறியாமலேயே தவறு ஏதும் செய்திருந்தால் என்னை மன்னித்து விட்டு, எனக்கு காட்சி தர வேண்டும் என மனப்பூர்வமாக உம்மை வேண்டுகிறேன்.  உம்மை தரிசிக்காவிடில் நான்  இல்லாமல் போய்விடுமே, உம்மைக் காண, உங்கள் எண்ணங்களோடு உம்மைக் தேடிக் கொண்டு நடக்கும் என் மனக் குறையை விரைவில் தீர்த்து வையுமையா” என கண்களில் நீர் ஓட குருநாதரை நினைத்து அழுதபடி மனம் ஒடுங்கிப் போனவர் ஒருநாள் களைப்படைந்து வழியில் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு இருந்தபோது அப்படியே உறங்கி விட்டார். அப்படி ஆழ்ந்து உறங்கிக் கொண்டு இருந்தவர் கனவில் ஒரு மகான் அவருக்குக் காட்சி தந்தார்.  அவரைக் கனவிலே கண்டவர் கனவிலேயே அவரை பூஜித்து, அவர் கால்களில் விழுந்து, விழுந்து வணங்கினார். அந்த மஹான் வேறு யாரும் அல்ல, அவர் தேடிப்போய் கொண்டு இருந்த அதே ஸ்ரீ நரசிம்ஹ ஸ்வாமிகள்தான்! நமத்ஹரகாவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!!

….தொடரும்