2

காத்ரு பல விதங்களிலும் வினிதாவுக்கு தொல்லைகளை தந்தாள். ஒருமுறை அவளை தன்னுடைய ஆயிரம் நாகக் குழந்தைகளையும் தன்னையும் தூக்கிக் கொண்டு கடலுக்குள் சென்று அங்கு விட வேண்டும் என்று ஆணையிட்டாள். வேறு வழி இன்றி சுமக்க முடியாமல் அந்த நாகங்களை சுமந்து கொண்டு அதை வினிதா செய்ய வேண்டியதாயிற்று. தன் தாயாரின் கஷ்டத்தை கண்ட கருடன் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என நினைத்தார்.  தன்னுடைய தாயாரை அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்யுமாறு காத்ருவிடம் கேட்க அதற்கு காத்ரு ஒரு நிபந்தனை போட்டாள். கருடன் தேவலோகத்துக்குச் சென்று அங்கிருந்து அமிர்தத்தைக் கொண்டு வந்து தந்தால் அவருடைய தாயாரின் அடிமைத்தனத்தை விலக்குவதாக வாக்கு கொடுத்தாள். ஆகவே கருடன் தேவலோகத்துக்குச் சென்று அமிர்தத்தைக் கொண்டு வரக் கிளம்பினார்.

கருடன் தனது தாயாரிடம் சென்று தனக்கு ஆசி கூறுமாறு கேட்டார். ஆகவே அவருடைய தாயார் அவருக்கு ஆசிர்வாதம் அளித்து சந்திர சூரியர்களை அவருக்கு உதவுமாறு வேண்டிக் கொள்ள, அவர்களும் (சந்திர சூரியன்கள்) கருடனின்  இரண்டு இறகுகளுக்கும்  பாதுகாப்புக் கொடுப்பார்கள் என்றும், அது போலவே கழுத்து மற்றும் முகத்துக்கு வாயு பகவானும், கீழ் உடம்பிற்கு அக்னி மற்றும் பிற தெய்வங்கள் பாதுகாப்பு தருவார்கள் என்றும் ஆனால் தேவ லோகத்துக்குப் போவதற்கு முன்னால் அவர் நிஷாதலையா எனும் பகுதியில் இருந்த அரக்கர்கள்  அனைவரையும் கொன்றுவிட்டு அவர்கள் உடலை தின்று விட்டுச் சென்றால்தான் அந்த காரியம் முடியும் என்றும், அதை செய்யாதவரை அவரால் தேவலோகம் செல்ல முடியாது என்றும் கூறினாள். மேலும் கூறுகையில் கருடன் தவறுதலாக அங்கு உள்ள பிராமணர்களை தின்று விட்டால் அது அவருடைய தொண்டையில் வலியை ஏற்படுத்தும் என்றும் கூறினாள். அது மட்டும் அல்ல தேவ லோகம் செல்லும் முன் வழியில் தவத்தில் இருக்கும் காஷ்யப முனிவரை தரிசனம் செய்து அவருடைய அறிவுரையும் கேட்டுக் கொண்டு செல்லுமாறுக் கூறினாள்.
தாயாரின் அறிவுரையை ஏற்று கருடன் உடனே தனது சிறகுகளை படபடவென அடித்துக் கொண்டு வானில் பறந்தார். அவர் சிறகுகளுக்கு சந்திர சூரியர்கள் பலம் தந்து இருந்ததினால் அவர் ராக்கைகள் படபடவென அடித்தபடி வானில் சென்றபோது வானமெங்கும் பெரும் சப்தமாக இருந்தது.
முதலில் தாயார் கூறி இருந்தபடி தன்னுடைய தந்தையான காஷ்யப முனிவர் இருந்த இடத்துக்குச் சென்று அவருடைய ஆசிகளை வேண்டினார். காஷ்யப முனிவரும் அவருக்கு ஆசிகளை வழங்கியப் பின் கருடனிடம் கூறினார் ”இங்கிருந்து நீ கிளம்பிச் சென்றால் பத்து யோசனை தூரத்தில் உள்ள ஒரு குளத்தைக் காண்பாய். அந்த குளத்தில் ஒரு பெரிய ஆமையும், யானையும் இருக்கும். அவை இரண்டையுமே கொன்று தின்றப் பின்னரே நீ மேலே உன் பயணத்தைத் தொட வேண்டும்.
அந்த ஆமையும் யானையும் சகோதரர்களாக இருந்தவர்கள். பெற்றோர் இறந்தப் பின்னர் சொத்து ஆசையில் இருவரும் சண்டைப் போட்டுக் கொண்டார்கள். அப்போது அவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதினால் இருவருமே மரணம் அடைந்தார்கள். அப்போது மரணத்தருவாயில் பெரியவன் சிறியவனுக்கு நீ யானையாகப் பிறக்கக் கடவது என சாபமிட, சிரியவனோ பெரியவனை நீயும் நான் உள்ள வனத்திலேயே ஆமையாக வந்து பிறக்க வேண்டும் என சாபமிட்டுக் கொண்டார்கள்.
அவர்கள் இருவரும் மரணம் அடைந்தப் பின்னர் யானையும், ஆமையுமாக பிறந்து தற்போதுள்ள குளத்தில் வந்து தங்கினார்கள். அங்கும் சண்டை தொடர்ந்ததினால் அதில் வனத்தில் உள்ள முனிவர்கள் சென்று குளிக்க முடியாமல் தவிக்கிறார்கள். அந்த யானையையும் ஆமையும் என்னுடைய சந்ததியினரால் மட்டுமே கொல்ல முடியும் என்ற விதி உள்ளதினால் அவர்கள் இருவரையும் நீ கொன்றுவிட்டு அவர்களை தின்று விடு. அப்போதுதான் இந்த வனத்தில் அமைதி பிறக்கும். முனிவர்களும் கவலை இன்றி அந்த குளத்தில் குளிக்க முடியும்” என்றார்.
மேலும் ”அதை நீ செய்து முடித்தப் பின் உனக்கு விஷேஷ சக்தி இன்னும் கை கூடும். தடங்கல் இன்றி தேவலோகம் செல்வாய்” என்று அருள் புரிந்தார். கருடனும் காஷ்யபர் கூறியதைப் போலவே அந்த யானையையும் ஆமையையும் கொன்று அவர்களை தூக்கிக் கொண்டு போகையில் அவர்களை எங்கு வைத்துக் கொண்டு உண்ணுவது என்று யோசனை செய்தது.
அப்போது அது ஒரு வனப்பகுதியில் பறந்து சென்று கொண்டு இருந்தபோது ஒரு பெரிய மரத்தைப் பார்த்தது. அதன் கிளை மீது அமர்ந்து கொண்டு அவற்றை தின்னலாம் என முடிவு செய்து அதன் மீது சென்று யானையையும், ஆமையையும் வைத்து விட்டு அமர்ந்தபோது கருடனின் பாரத்தை தாங்காமல் அந்த மரம் கீழே முறிந்து விழ இருந்த நிலையில் அதில் பல முனிவர்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தவத்தில் இருந்ததைக் கண்டது. ஆகவே அவர்கள் விழுந்து விட்டால் அவர்கள் இறந்து விடுவார்கள். அந்த பாவம் தனக்கு வந்துவிடுமே என பயந்த கருடன் அந்த மரத்தை அப்படியே தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் பறந்து கொண்டு இருக்க அந்த களேபரத்தினால் முனிவர்கள் தவம் கலைந்து எழுந்தார்கள்.
அவர்கள் தவம் களைந்து எழுந்து விட்டதைக் கண்ட கருடன் அந்த மரத்தோடு மீண்டும் காஷ்யப முனிவரிடம் சென்று ஆகாயத்தில் இருந்தவாரே அவரிடம் தன்னுடைய  இக்கட்டான நிலையைக் கூற காஷ்யப முனிவரும் தன் தவ வலிமையினால் அந்த மரத்தின் மீது சென்று கருடனின் செயலினால் அங்கிருந்த முனிவர்களின் தவம் கலைந்து போனதற்காக மன்னிப்பைக் கேட்டார். அதன் பின் கருடன் என்ன காரியத்தை முடிப்பதற்காக செல்கிறார் என்பதையும் கருடன் மூலம் இந்திரனுடனான அவர்களுடைய பழைய பகையை தீர்த்துக் கொல்ல முடியும் என்றும் அவர்களுக்கு விளக்கியபோது அந்த முனிவர்கள் சினம் தணிந்தது.
………………3