1

நான் போன வருடம் கும்பகோணத்தில் நாச்சியார் கோவிலுக்குச் சென்று இருந்தபோது ஒரு அதிசயமான விஷயத்தைக் கேள்விப்பட்டேன். அங்குள்ள கருடப் பெருமானை கல் கருடன் என்று கூறுகிறார்கள். திருவிழாக் காலங்களில் ஊர்வலத்தில் ஸ்வாமி புறப்படுவதற்கு முன்னால் அந்த கல் கருட வாகனத்தை நான்கு பேர் மட்டும் சுமந்து கொண்டு செல்வார்களாம். நடக்க நடக்க அதை நான்கு பேர் சுமக்க முடியாமல் போய் விடுவதினால் இன்னும் இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து ஆறு பேர், ஏழுபேர் அதை தூக்குவார்களாம். எப்படி அந்த வாகனம் மேலும் எடையை அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது அதிசயம். அது முதலே கருடனைக் குறித்து எழுத நினைத்திருந்து இப்போதுதான் அதற்கு வேளை வந்துள்ளது.

கருடனின் பிறப்பு விசித்திரமானது. பிரும்மாவின் பேரரான காஷ்யப முனிவருக்கு வினதா மற்றும் காதரு என்பவர்கள் தொண்டு புரிந்து வந்தார்கள். சில புராணங்களில் அவர்களை கஷ்யபரின் மனைவிகள் என்றும் கூறி உள்ளார்கள். அவர்களது சேவையைக் கண்டு மகிழ்ந்த காஷ்யபர் அவர்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க காதரு தனக்கு ஆயிரம் நாகங்கள் (பாம்புகள்) பிறக்க வேண்டும் என்று கேட்க, வினதாவோ தனக்கு அந்த ஆயிரம் நாகங்களைவிட அதிக பலமிக்க இரண்டு மகன்கள் வேண்டும் என்று கேட்டாள்.
சில நாட்களில் காத்ரு ஆயிரம் முட்டைகளை இட்டாள். வினிதா இரண்டு முட்டைகளை இட்டாள். அவை 500 வருடங்களுக்குப் பிறகு அவற்றில் அவர்கள் கேட்ட குழந்தைகள் பிறக்கும் என்பது வரமாக இருந்தது. அதன்படி காத்ருவின் முட்டைகள் ஆயிரம் நாகங்களை பிறக்க வைக்க அவள் தனது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுவதை ஏற்றுக் கொள்ள முடியாத வினிதா தன்னுடைய இரண்டு முட்டைகளில் இருந்தும் எதுவும் வரவில்லையே என மனம் வருந்தி ஒரு முட்டையை எடுத்து உடைக்க அதில் இருந்து பாதி உடம்போடு இருந்த அருணன் என்ற ஆன் மகன் வெளி வந்தான். அவசரத்தினால் தன்னை பாதி உருவுடன் படைத்து விட்டாளே என்பதினால் கோபமடைந்த அருணன் தன்னுடைய தாயாரான வினதா அவனுடைய மாற்றாம் தாயான (சித்தி) காத்ருவிற்கு அடிமையாக வேண்டும் தனது தாயாருக்கே சாபம் தந்தான். இந்த நிலையில் கருடன் இன்னும் பிறக்காமல் இருந்தார். அப்போதுதான்  கடலைக் கடைந்து தேவர்களும் அசுரர்களும்  அமிர்தத்தை எடுத்துக் கொண்டு இருந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அமிர்தத்தை எடுக்கக் கடலைக் கடைந்தபோது அதில் இருந்து முதலில் ஒரு குதிரை வெளி வந்தது. இந்திரனின் குதிரையான அந்த குதிரையின் வால்  கறுப்பா இல்லை  வெள்ளையா என்று வினிதா மற்றும் காத்ருவுக்கு இடையே சச்சரவு ஏற்பட காத்ரு அதை கறுப்பு என்று கூற வினிதாவோ அதை வெள்ளை என்று கூறினாள். ஆனால் அதை பார்த்தபோது அதன் வால்  கருப்பாக இருந்ததினால் காத்ருவே வெற்றி பெற்றாள் என்பதினால் அருணன் சாபமிட்டபடி காத்ருவிற்கு வினிதா அடிமையாக வேண்டி இருந்தது.
 
சிறு விளக்கம்: இங்கு ஒரு சின்ன விளக்கம் தர வேண்டி உள்ளது. மகாபாரத ஆதி பர்வத்தில் அவர்கள் இருவரும் முட்டை இட்டே பிள்ளைகளைப் பெற்றதாக கூறப்பட்டு உள்ளது. மனிதர்கள் முட்டை இட முடியுமா என்ற கேள்வி எழலாம். ஆனால் அதற்கு அர்த்தம் வேறு. உண்மையில் காஷ்யப முனிவர் பிரும்மாவின் மூன்றாம் மகனாக வெளி வந்தவர் என்கிறார்கள். அவருக்கு இருந்த பல விசேஷமான சக்திகளினால் மனிதர்கள் மட்டும் அல்ல விலங்குகள் பறவைகளும் அவருக்கு தொண்டு புரிந்தன. மனைவிகளாகவும் இருந்தன. அப்படி தொண்டு செய்தவர்களில் பறவை இனத்தை சேர்ந்த வினிதாவும், பாம்புகளின் இனத்தை சேர்ந்த காத்ருவும் அடக்கம் என்பதினால் அவர்கள் முட்டை இட்டே பெண்-பிள்ளைகளை ஈன்று எடுத்தார்கள்.
வினதா போட்டு இருந்த இன்னொரு முட்டையில் இருந்து கருடன் பிறந்தார். அதன் பின்னர் அவளுடைய முதல் மகனான அருணன் கொடுத்த சாபத்தின்படி வினதா பல வருடங்கள் காத்ருவிற்கு அடிமையாக இருந்து வர வேண்டி இருந்தது. அடிமையாக இருக்கும்போது வினிதா சொல்லொண்ணாத் துயரங்களையும், கொடுமைகளையும் அனுபவிக்க வேண்டி இருந்தது.அவை அனைத்தையுமே குழந்தைப் பருவத்தில் இருந்த கருடனும் பார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டி இருந்தது. ஆனால் அவர்கள் ( தேவ பிறவிகள் ) சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதினால் கொடுத்த வாக்கை மீற முடியாமல் அடிமைத்தனத்தில் வாழ வேண்டி இருந்தது.
………..தொடரும் : 2