என்னே இறைவன் கருணை!

நமக்கு உயிரையும் உடலையும்
மற்று அனைத்தையும் கேளாமலே
தந்ததுமட்டுமல்லாமல்
அவைகளை நாம் அனுபவிக்க மனதையும்,
துன்பத்திலிருந்து காத்துக்கொள்ள அறிவையும்
அளித்த இறைவனுக்கு ஒவ்வொரு கணமும்
நாம் நன்றி செலுத்த வேண்டும்.

அதற்க்கு நாம் செய்ய வேண்டியது
ஒன்றும் இல்லை.

இறைவனை நாம் நாள்
தவறாமல் பூசிக்க வேண்டும்.

அவனை பூசிப்பதர்க்கு பெரிய ஆடம்பரங்கள்
தேவையில்லை என்று கண்ணனே
கீதையில் சொல்லிவிட்டான்.
ஒரு பூ,ஒரு இல்லை(துளசி),நீர் (தீர்த்தம் )போதும்
என்று சொல்லிவிட்டான்.

சிவபெருமானோ ஒரு வில்வ பத்ரமே போதும்
என்று சொல்லிவிட்டான்.லிங்கம் போதும்
ஆடம்பரமான கோயில்கள் ஏதும்
தேவையில்லை என்று இருந்துவிட்டான்.

அவன் மைந்தன் விநாயகனோ
இன்னும் எளிமையாக்கி விட்டான் வழிபாட்டை.
மண்ணினால் பிடித்து வைத்தாலும்,பசும் சாணத்தினால்,அல்லது மஞ்சளில் பிடித்து அதில் அருகே முளைத்திருக்கும் இரண்டு அருகம்பில்லை என் மீது போட்டால் போதும் அதுவே எனக்கு பரம திருப்தி என்கிறான்.
உடனே அதில் நான் பிரசன்னமாகிவிடுவேன் என்கிறான்.

முருகப்பெருமானோ குவலயத்தில் குன்றுகளின் மீதும்
பக்தர்கள் குடியிருக்கும் இடங்களிலும் வேலுடன் நின்றுகொண்டு நம் வினைகளை தீர்க்கக் காத்துக்கொண்டிருக்கிறான்.
பராசக்தி எனக்கு எதுவும் தேவையில்லை
அம்மா என்று நீ என்னை அன்போடு அழைத்தால் போதும்
உன்னை ஆதரிக்க உன் அருகில் இருப்பேன் என்கிறாள்.

இன்னும் ஒரு படி மேலே சென்றுவிட்டான்
காசி விஸ்வநாத பெருமான்.
நீ கங்கை கரையில் மரணித்தால்
உன் செவியில் உன்னை கடைதேற்றும்
தாரக நாமமாகிய ராம நாமத்தையே நான் ஓதுகிறேன்
என்று காத்து கிடக்கிறான்.

அந்த குறையில்லாத கோவிந்தனோ தன் நெடிய வடிவத்தை குறுக்கிக்கொண்டு மலைமேல் நின்றுகொண்டிருக்கின்றான்
பக்தர்களின் வரவை எதிர்பார்த்துக்கொண்டு யுகம் யுகமாக

அந்த அரங்கனோ ஆற்றின் நடுவே சயனம் கொண்டு .
ஆற்றொணா துன்பங்களை அனுதினமும் படும் அடியார்களின் அல்லல்களைக் களைய  கங்கணம் கட்டிக்கொண்டு  அல்லும் பகலும் உறங்காது அரங்கனாயகியுடன்வழிமேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறான்.

பண்டரிபுரத்திலோ அந்த பாண்டுரங்கன்
ஒரு பக்தனின் வீட்டில் போய்  கால் கடுக்க
புன்முறுவலுடன் நின்றான். பின்பு அங்கேயே
நிரந்தரமாக தங்கிவிட்டான் வைகுண்டம் போகாது.

இப்படி தெய்வங்கள் அடியார்களை
காப்பதற்காக காத்துக்கிடக்கின்றன.
அழியாப் பதம் அருள

ஆனால் நாம் அவனிடம் அற்ப பொருள்களையும்
அற்ப ஆயுளில் அழிந்து மடியும்
உடல் சார்ந்த சுகங்களை அல்லவா யாசிக்கின்றோம்
என்னே நம் பேதைமை?
இறைவனிடம் அவனைத்தான் யாசிக்கவேண்டும்
அவனைப் பற்றிதான் யோசிக்கவேண்டும்.
அவன் நாமத்தைதான் சுவாசிக்கவேண்டும்.

இறைவன் அருள் பெற்றுவிட்டால்
மற்றவை எல்லாம் கேளாமலே தானே வந்தமையும்
என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். .

படங்கள்-நன்றி-கூகுல் இமேஜஸ்